உங்கள் இல்லத்திற்கு, கொஞ்சம் வண்ணம் சேருங்கள்


5 பிப்ரவரி - 2013பெங்களூரு - இந்தியா

கே: கடவுள் எங்கும் இருக்கிறார், குருவோடு நாம் வலுவான தொடர்பில் இருக்கிறோம் என்றால், அதன் பின்னும் நாம் கோவிலுக்குப் போகத்தான் வேண்டுமா? சடங்குகளின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: நீங்கள் கோவிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ, வேறு எங்கோ போக வேண்டியதில்லை. நீங்கள் எங்கு இருந்தாலும் அங்கு அமர்ந்து தியானம் செய்யுங்கள், அங்கே இறைவனின் இருப்பை நீங்கள் பார்க்கலாம். ஆனால் சடங்குகள் இருப்பது வாழ்கையில் நல்லதுதான்; கொஞ்சமாக. அதிகமாக அல்ல. சடங்குகள் இல்லாமல் வாழ்கை வறட்சியாக ஒரே விதமாக இருக்கும். வாழ்க்கையில் மணமும் வண்ணமும் கொண்டாட்டமும் சேர்ப்பது சடங்குகள் தான். எனவே அவ்வப்போது சடங்குகள் செய்வது தேவை என்றே நான் சொல்வேன்; அது நல்லது.


சடங்குகள் ஏதும் இல்லா ஒரு வீட்டிற்கு செல்கிறீர்கள், பிறகு விளக்கேற்றி, அல்லது ஊதுவர்த்தி ஏற்றி இருக்கும் ஒரு வீட்டிற்கு செல்கிறீர்கள்; எங்கு புனிதமாக இருக்கிறதோ, அங்கு சூழல் வித்தியாசமாக இருக்கும். எத்தனை பேர் இதை கவனித்திருக்கிறீர்கள்? 


எனவே சிறிதளவு சடங்குகள் நம் தினசரி வாழ்கையில் நல்லது. காலையில் எழுந்து அமர்ந்து தியானம் செய்யுங்கள். ஆம், தியானத்தோடு பிராணாயாமமும் செய்ய வேண்டும். வீட்டில் யாரவது ஒருவர் எங்காவது விளக்கேற்றினால் கூட; அனைவரும் செய்ய வேண்டியதில்லை, ஒருவர் விளக்கேற்றினால் கூட அங்கு முழு சூழலும் உயிர்ப்பாக இருக்கும். இதை நான் செயல்முறையில் பார்த்திருக்கிறேன்.
நான் பல வீடுகளுக்குச் சென்றிருக்கிறேன், குடிசை, பங்களா என எல்லாவிடத்திலும் ஒன்றை நான் உறுதியாக பார்த்தது என்ன என்றால், சிறிய குடிசையானாலும் கூட, ஒரு பூஜை மாடமும் அதில் விளக்கோ அல்லது மெழுகுவர்த்தியோ ஏற்றி இருந்தால், அந்த முழு சூழலிலும் ஏதோ ஒரு சூட்சுமம் நிகழ்கிறது, அவ்விடத்தில் ஏதோ ஒன்று அருமையாக இருக்கிறது.

இது எதுவுமில்லாத வீட்டில், புனிதச் சின்னங்கள் இல்லாத வீட்டில், விளக்கேற்றப் படாத வீட்டில், உள்ளே சென்றால் ஒரு மந்த நிலை காணப்படுகிறது. இதை நான் கவனித்திருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன், ஒரு சிறிய பூஜை மாடமும், கொஞ்சமாக சடங்குகளும் நல்லது. யாரவது ஒருவர், அவ்வீட்டில் பெண்ணோ அல்லது ஆணோ செய்யலாம். மதரீதியான, ஆன்மீகமான ஒரு சூழல் கிடைப்பதற்கு இப்படி ஏதாவது செய்ய வேண்டும் என்று குழந்தைகள் பார்த்துத் தெரிந்து கொள்வதும் நல்லது.

நம் நாட்டில், இதை பேருந்துகளில் கூட பார்க்கலாம். ஒவ்வொரு பேருந்து ஓட்டுனரும், வாடகை கார் ஓட்டுபவரும், ரிக்ஷா ஓட்டுபவரும், காலையில் வண்டியை எடுபதற்குமுன் சிறிது பூ போட்டு, ஊதுவர்த்தி ஏற்றி வணங்கி வண்டியை எடுப்பதைக் காணலாம். இந்த சிறு செயல் அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தில் நல்ல வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது. இந்தியாவில் கடைகளிலும் சிறு உணவகங்களிலும் கூட சிறிய பூஜை மாடமிருப்பதைக் காணலாம்.

இதை ஏன் செய்கிறீர்கள் என்று நீங்கள் கேட்கலாம். யாரவாது இதைப் பற்றி ஆராய்ச்சி கூடச் செய்யலாம். ஒருவிதமான மன உறுதியைத் தருகிறது. சூட்சுமமான முறையில் சுற்றுச் சூழலை உயிர்ப்பாக்குகிறது. இப்படித் தான் நான் கருதுகிறேன். இந்தியாவில், அரசு அலுவலகங்களில் கூட இதைச் செய்கிறார்கள். அலுவலகத்தில் உள்ள ஒவ்வொரு அலுவலரும் தன மேஜையில் சிறிய பூஜை மாடம் வைத்திருக்கிறார். கர்நாடக மாநிலத்தில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. முதல் மந்திரி பதவிப் பிரமாணம் எடுப்பதற்கோ அல்லது புதிய அலுவலகத்திற்குச் செல்வதற்கோ, முழு அளவிலான பூஜை சடங்குகளைச் செய்துவிட்டுத்தான் பின்னர் அதற்குச் செல்கிறார்கள்.
உலகம் முழுவதும் இது இருக்கிறது. அமெரிக்க செனட் மற்றும் கனடா நாட்டு பார்லிமன்ட் இவைகளில் பிரார்த்தனை நேரம் இருக்கிறது. ஒவ்வொரு பார்லிமென்ட்டுக்கும் ஒரு ஃபாஸ்டர் இருக்கிறார் அவர் வந்து புனித பைபிளிலிருந்து படிப்பார்.

இந்தியாவில் தான் நாம் மதச் சார்பின்மை என்று பேசிக் கொண்டிருக்கிறோம். நம்மை நம்முடைய பண்டைய அறிவிலிருந்தும், விவேகத்திலிருந்தும், ஞானத்திலிருந்தும் விலக்கி வைத்திருக்கவே இந்த வியாதியை நாம் வைத்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் இதை செய்ய முயல்கிறார்கள் ஆனால் நடப்பதில்லை. இது நம்மிடையே ஆழமாக பதிந்து இருக்கிறது.

கே: குருதேவ், எந்த வகையான அநீதியையும் எதிர்கொள்ள சிறந்த வழி என்ன?

குருதேவ்: சில நேரங்களில், நீங்கள் அநீதி என்று நினைப்பது மற்றவர்களின் பார்வையில் அப்படி இல்லாமல் இருக்கலாம். அது அநீதியாகக் கூட இல்லாமல் இருக்கலாம். அநீதியை எதிர்த்து நிற்க வேண்டும், ஆனால் விழிப்புணர்வோடும் ஞானத்தோடும், ஆத்திரம் மற்றும் எரிச்சல் கொள்ளும் எல்லோருமே, ‘நான் அநீதியை எதிர்க்கிறேன்’ என்றே எப்போதும் சொல்கிறார்கள். கோபக் கனலின் பின்னே, நீதிக்கான அழுகுரலும், அல்லது நீதியை வேண்டுவதும் இருக்கிறது. ஆனால், அதைத் தீர ஆராயும்போது, அதனுள் ஆழமாகப் போகும்போது, அது சரியாக இல்லாமல் கூடப் போகலாம். சரியானதாக இல்லாமலே கூட இருக்கலாம். அதனால் தான், முதலில் அமைதியான மனதுடன் இதை ஆராய வேண்டும், அதன் பிறகு அநீதிக்கு எதிரான நிலையை எடுக்க வேண்டும்.

கே: குருதேவ், ஆன்மீகப் பாதையில் முன்னேறுவதற்கு பிரம்மச்சரியம் ஒரு முக்கியமான அங்கம் என்று சொல்லப்படுகிறது. பிரம்மச்சரியத்தை மனதில் கொண்டு வருவது எப்படி? பிரம்மச்சரியம் உடல் சார்ந்ததா அல்லது மனம் சார்ந்ததா?

குருதேவ்: இரண்டும் தான். பிரம்மச்சரியம் என்பது தானாக நடப்பது, அதை நீங்கள் உங்கள் மீதே கட்டாயப்படுத்த முடியாது. தேர்வு நேரத்தில், நீங்கள் அதற்காகத் தீவிரமாகப் படித்துக் கொண்டிருக்கும் போது, அந்த நாட்களில், எல்லா மாணவர்களும் நிச்சயமாக சொல்வது என்னவென்றால், ‘எங்களுக்கு பாலியல் நினைவுகளே வரவில்லை, தேர்வில் நாங்கள் மிக மும்மரமாக இருக்கிறோம்.’ அதைப் போல, நீங்கள் மிக முக்கியமான திட்டத்தை செயலாற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும்போதும் பிரம்மச்சரியம் தானாக நடக்கிறது.

தியானம் மூலமும்; உங்களிடம் சக்தி அதிகமாகும் போது, அப்படி ஒரு பேரானந்தத்தை நீங்கள் காணும்போது, அப்படி ஒரு ஆனந்தத் திகைப்பில், அப்படி ஒரு உச்சகட்ட மகிழ்ச்சி உங்களுக்குள் இருக்கும்போது, பிரம்மச்சரியம் தானாக நிகழ்கிறது. உண்மையில், அந்த நிலையில் புற உலகில் இருப்பது ஒரு வலி. மனம் உள்நோக்கி இருப்பதின் விளைவு பிரம்மச்சரியம், இவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை நீங்கள் பார்க்கும் போது; எல்லாம் ஒன்றுமே இல்லை. ஏதாவது நடக்கிறது என்றால், அது சூக்ஷும தளத்தில்  நடந்து கொண்டிருக்கும். சூக்ஷும தளத்தோடு உள்ள தொடர்பு, செயல்பாட்டை முக்கியமற்றதாகி விடுகிறது, மற்றும் அப்போதுதான் பிரம்மச்சரியம் நடக்கிறது.

அப்படி என்றால், ‘ஒ, அது நடக்கும்போது நடக்கட்டும், இப்போது நான் அதில் ஈடுபட்டே இருக்கிறேன்.’ என்று சொல்லக்கூடாது. மத்திய கிழக்கு நாட்டைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சுவாரசியமான ஒன்றை கூறினார். அவர் கூறியது என்னவென்றால், நம் உடலிலுள்ள ஒவ்வொரு திரவமும் மூலையிலுள்ள திரவத்தோடு தொடர்புடையது, உடலிலுள்ள எந்த திரவம் குறைந்தாலும் அது மூலையிலுள்ள திரவத்தில் 20% குறைக்கிறது. இது ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சி, அதை அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.அதனால் தான், நீங்கள் மாணவராய் இருந்தால், மூளை சம்பந்தப்பட்ட வேலை செய்ய வேண்டியிருந்தால், அதனுடன் பிரமச்சரியம் இணைக்கப்பட வேண்டும் என்று அந்த காலத்தில் நம் முன்னோர்கள் சொன்னார்கள்.

எனவே, முதல் 25 வருடங்கள் ஒருவர் பிரம்மச்சரியம் கடைபிடிக்க வேண்டும். (பிரம்மச்சரிய காலம் என்பது கல்வி கற்கும் காலம், அது பருவமடைவதற்கு முன்னே தொடங்குகிறது, அந்தக் காலத்தில் பாலியல் செயல்கள் தவிர்க்கப் பட வேண்டும்).

பிறகு 25 லிருந்து 50 வரை – கிருஹத்தாஷ்ரம்  (குடும்ப வாழ்கை). இதில் நீங்கள் குடும்ப வாழ்வை அனுபவித்து மகிழலாம், ஆனால் 50 வரை தான். 50 க்குப் பிறகு நீங்கள் அதை நீங்கள் மெதுவாகக் குறைத்து விட வேண்டும், இல்லையென்றால் உங்களுக்கு அது ஒரு கட்டுப்பாடற்ற கட்டாயமாகி விடும். இந்த கட்டுபாடற்ற நிலையில், உங்கள் மனம் வேட்கையில் இருக்கும் ஆனால் உடல் செயல்படாது. மனமும் உடலும் இணைந்து இருக்க வேண்டும். இல்லையென்றால், புலிமியா போன்று இது ஒரு வியாதியாகி விடும். உங்கள் உடல் வேண்டாம் என்று சொல்லும், ஆனால் மனம் மேலும் மேலும் விழுங்கச் சொல்லும். இதை போல, 70 அல்லது 80 வயதானவர்கள், தங்களால் எதுவும் செய்ய இயலாதென்றாலும், போய் அமர்ந்து நீலப் படங்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள்! இது ஒரு வருந்தத்தக்க நிலை. இது பிரம்மச்சரியம் அல்ல. மனம் சரியான உணர்வில் இல்லை. சுயக் கட்டுப்பாடு என்பதே பிரமச்சரியம் எனப்படுகிறது; சுயக் கட்டுப்பாடே பாலியல் செயலைத் துறப்பது.

கே: குருதேவ், நாம் இன்று உண்ணும் உணவில் அதிக அளவு இரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது மேலும் அரசாங்கத்தின் கொள்கைகளும் இதை ஊக்கப்படுத்துகிறது. இதை எப்படி சமாளிப்பது? தயவு செய்து இரசாயனமில்லா உணவைப் பற்றியும் இரசாயனமில்லா விவசாயம் பற்றியும் பேசுங்கள்.

குருதேவ்: இந்த பூமியின் எதிர்காலம் இரசாயனமில்லாத விவசாயம் தான். இந்த உலகத்தை இப்போது உள்ளபடி அப்படியே காக்க வேண்டும் என்றால் நாம் இரசாயனமின்மையை நோக்கிப் போக வேண்டும். வேறு வழி இல்லை.

இந்த பூமியைப் பற்றி கவலைப்படாத சுயநலமும் பேராசையும் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இந்த கேடான விஷயத்தை விவசாயிகளிடம் பரப்புகிறார்கள். ஒன்றிரண்டு விளைச்சல் மிக நன்றாக வருவதால், விவசாயிகளை அது தூண்டி அவர்கள் அதை பயன்படுத்த ஆரம்பிக்கிறார்கள். அதைப் பயன்படுத்த ஆரம்பித்த பின் மூன்றாவது அல்லது நான்காவது பயிரில் விளைச்சல் குறைய ஆரம்பித்து நிலமும் பாழாகிறது. விவசாயத்திற்கே தகுதியற்றுப் போய் விடுகிறது. இது தான் பிரச்சினை.

இதனால் தான், நாம் ஒரு விவசாய நிலையம் ஆரம்பித்து விவசாயிகளுக்கு இரசாயனமில்லா விவசாயத்தை கற்றுகொடுக்கிரோம்; அதாவது நம் பாரம்பரிய விவசாய முறை. முற்காலத்தில், மூன்று பயிர்களை ஒன்றாகப் போடுவார்கள். ஒரு பயிர் போனாலும் மீதி இரண்டு நிற்கும். எனவே, மக்கள் பட்டினி கிடந்தது இல்லை. அவர்கள் திவாலானதே இல்லை, அல்லது நஷ்டப்பட்டதே இல்லை.உதாரணமாக கரும்புப் பயிருடன், பருப்பு வகைகளும் பயிரிடுவார்கள், எனவே ஒன்று போனாலும் மீதி இரண்டு நிற்கும். பொதுவாக மூன்றுமே விளைச்சல் கொடுக்கும் மற்றும் அதன் தன்மையால் காற்றிலுள்ள நைட்ரஜனை மண்ணில் பொதித்து இயற்கையாகவே மண்ணிற்கு உரம் சேர்க்கும். இந்த வகை விவசாயத்திற்குத் தான் ஒருவர் திரும்பச் செல்ல வேண்டும்.

நாம் அக்னிஹோத்ரம் (வேத முறைப் படியான யாகம்) செய்ய வேண்டும். அது கேடு விளைவிக்கும் பூச்சிகளை கவனித்துக்கொள்ளும். அதுமட்டுமல்லாமல், கோமியம் (பசுவின் சிறுநீர்) வேப்பிலை போன்ற மற்ற பொருட்களும் இருக்கிறது. எனவே நாம், நீர் வளத்தை, பூமியை, நம் ஆரோக்கியத்தை பாழ்படுத்தாத இந்த முறையான விவசாயத்திற்கு திரும்ப வரவேண்டும்.

கே: குருதேவ், தவறான மருத்துவரிடம் சென்றதால் நான் என் குடும்பத்தில் மூன்று பேரை இழந்து விட்டேன். மருத்துவச் சேவையில் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறோம்? இதை எப்படி மேம்படுத்துவது?

குருதேவ்: மருத்துவர்கள் அமர்ந்து பேச வேண்டும். முதலில் மருத்துவர்கள் தியானம் செய்ய வேண்டும் என்றே நான் சொல்வேன். அவர்கள் தியானம் செய்தால், மனம் தெளிவாகி ஆழமாய் இருக்கும் தங்கள் உள்ளுணர்வை பயன்படுத்த இயலும். இதைத்தான் ஆயுர்வேத மருத்துவர்கள் செய்கிறார்கள், உங்கள் நாடியைப் பிடித்து உங்களிடம் என்ன பிரச்சினை என்று ஆய்வு செய்கிறார்கள். இதைச் செய்யக் கூட அவர்கள் தியானம் செய்ய வேண்டும், அது மிக முக்கியம். ஆழமாய் இருக்கும் உள்ளுணர்வின் ஆற்றலை பயன்படுத்த மனம் துடிப்பாய் இருக்க வேண்டும்.
பாருங்கள், அவர்களுக்கு இந்த உள்ளுணர்வு இல்லையென்றால், என்ன மருத்துவம் செய்வது என்று இருட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள். அதனால் தான் நிறைய மருத்துவர்கள் இருந்தாலும் சிலர் மட்டுமே வியாதியை குணமாக்கி புகழடைகிறார்கள். ஏன்? ஏனென்றால் அவர்கள் தங்களிடம் உள்ள உள்ளுணர்வு என்ற வரத்தை தக்கபடி பயன்படுத்தி சரியான சிகிச்சையைத் தங்களிடம் வருவோர்க்கு அளிக்கிறார்கள். மருத்துவர்கள் தியானம் செய்துவிட்டு, அமைதியான மனதோடு பரிசோதனை செய்து சிகிசைக்கான முடிவை எடுக்க வேண்டும்.

சமீபத்தில் AIMS மருத்துவமனை எடுத்த ஆய்வின்படி 60% மருத்துவர்களே உடல் நலமின்றி இருக்கிறார்கள் என்று படித்தேன். அவர்களுடைய கவனத்தின் திறன் அவ்வளவு தான். அதனால் தான், செவிலியர்கள் தாம் எத்தனை கருவிகள் மருத்துவரிடம் கொடுத்தோம் பின்னர் சிகிச்சை முடிந்த பின் எத்தனை திரும்பப் பெற்றோம் என்று எண்ணி சரிபார்க்கிறார்கள். பலமுறைகள் இடுக்கி, ஊசி, அல்லது கத்தி ஆகியவற்றை உடலினுள்ளேயே வைத்துத் தைத்து விடுகிறார்கள். எனவே எத்தனை கருவிகள் கொடுக்கப் பட்டது எத்தனை திரும்பப் பெறப்பட்டது என்று எண்ணி சரி பார்கிறார்கள். எனவே, ஒவ்வொரு மருத்துவரும் சற்று நேரம் எடுத்துக் கொண்டு தளர்வாக வேண்டும், அவர்கள் மன அழுத்தம் கொள்ளவே கூடாது.

விமான ஓட்டிகள், விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், மருத்துவர்கள், போன்றவர்களின் மனதிற்கு அதிக அளவு சக்தி தேவை. எப்போதும் ஓடிக் கொண்டேயிருந்தாக வேண்டும். மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு சிறிய தவறை கூட செய்துவிடக் கூடாத நிலையில் அவர்கள் இருக்கிறார்கள்.

விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையில் உள்ளவர்கள் ஒரு நிமிடம் கூட கண் அசர முடியாது, துல்லியமாகவும் அதிகபட்ச எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும். அந்த அளவு மனதில் சக்தி இல்லையென்றால், தியானம் செய்து விழிப்புணர்வு இல்லையென்றால், அவர்களால் எப்படி இந்த வேலையைச் செய்ய முடியும்? அதிக அழுத்தம் இருக்கும், அதிக எச்சரிக்கை தேவைப்படும் வேலைகளில் இருப்பவர்களுக்கு அதனால் தான் தியானம் அத்தியாவசியமாகிறது.

கே: குருதேவ், செயலற்று இருப்பது எப்படி என் வாழ்வை வெற்றியடையச் செய்யும்? தயவு செய்து விளக்குங்களேன்.

குருதேவ்: ஒரு அம்பை எய்வதற்கு அதை பின்னோக்கி இழுக்க வேண்டுமல்லவா? அதைப்போல, செயலற்று இருப்பது உங்களுக்கு ஆழமான ஓய்வை அளிக்கிறது, அந்த ஓய்வு, ஆழத்திலிருக்கும் உள்ளுணர்வு, படைப்பாற்றல் மற்றும் சக்தி இவற்றுக்கான அதாரத்தை தக்கபடி பயன்படுத்த உதவுகிறது. பின்னர் வெளியே வந்து, அதைக்கொண்டு செயல்பட வேண்டும்.

‘நான் சிதார் அல்லது கிதார் கற்றுக்கொள்ள எந்தச் செயலும் செய்ய மாட்டேன், ஆனால் நான் ஒரு சிறந்த சிதார் கலைஞனாக வேண்டும்’, என்று நீங்கள் சொல்ல முடியாது, அது இயலாதது. நீங்கள் முயற்சியை செய்தாக வேண்டும். அதே நேரம், செயலற்று இருப்பது செயலாற்ற உதவும்.

கே: ஒவ்வொரு ஆத்மாவும் ஒரு நாள் மோக்ஷமடையுமா? இந்த உலகம் எவ்வளவு காலம் தொடரும், நம் எல்லோருக்கும் அடுத்த பிறவியிலும் அருள் கிடைக்குமா?

குருதேவ்: உங்களைப் பற்றி கேளுங்கள். ஏன் உலகிலுள்ள எல்லா ஆத்மாவைப் பற்றியும் கேட்கிறீர்கள்? எல்லா ஆத்மாவும் முதலில் மோக்ஷம் விரும்புகிறதா? அவற்றுக்கு விருப்பமில்லாமல் கூட இருக்கலாம்; சரிதானே!

உங்களுக்குத் தெரியும், சில சமயம் நாம் இப்படி பொதுவான கருத்துக்களை கூறி மற்றும் இப்படிப் பொதுவான கேள்விகளையும் கேட்கிறோம். எல்லா ஆத்மாக்களும் மோக்ஷமடையுமா இல்லையா என்று எனக்கு தெரியாது, ஆனால் உங்களுக்கு வேண்டுமென்றால், ஆம் அது முடியும். உங்களுக்கு அதற்கான எல்லா வாய்ப்பும் உண்டு. இந்த பிறவியிலேயே இதை முடித்துவிடுவோமே, அடுத்த பிறவிக்கும் என்னை ஏன் இழுக்கிறீர்கள்? கடவுள் எல்லா வடிவத்திலும் இருக்கிறார். கடவுள் இல்லாத இடமே இல்லை. எனவே கடவுள் எங்கும் இருக்கிறார்.