ஆன்மீகத்தில், வியாபாரத்துக்கு என்ன வேலை?


8 – பிப்ரவரி – 2013 - பெங்களூர் - இந்தியா

மேடையிலும் மற்றும் என் முன் அமர்ந்திருக்கும் என் அன்பார்ந்த அன்பர்களே, இன்று நாம் அனைவரும் இங்கு அமர்ந்திருக்க இரண்டு முக்கியமான கருவிகள் உபயோகமாக இருந்திருக்கின்றன. ஒன்று கத்தரிக்கோல். மற்றொன்று ஊசி. இவை இரண்டும் இல்லா விட்டால் நாம் அணிந்திருக்கும் உடைகளை நாம் அணிந்திருக்க மாட்டோம்.

உடை தயாரிக்க, ஒரு துணியை நாம் கத்தரிக்கோலால் வெட்டி, ஊசியினால் தைக்க வேண்டும். அப்படித்தான் சூட், பைஜாமா, சட்டை மற்றும் நாம் அணியும் எல்லா உடைகளையும் தயாரிக்கிறார்கள். அதேபோல் தான் ஆன்மீகமும் வியாபாரமும். ஒன்று பிரிக்கிறது. மற்றொன்று இணைக்கிறது. இரண்டுமே மிக அவசியம். வெட்டிய ஆனால் தைக்காத துணியால் ஒரு உபயோகமும் இல்லை. அதே போல் இரண்டு துண்டாக இல்லாத ஒன்றை தைக்க அவசியம் இல்லை.

சில சமயம் ஆன்மீகத்தில் வியாபாரத்துக்கு என்ன வேலை என்று கேட்கிறார்கள். வியாபாரம் என்பது ஒருவரின் ஆசையைப் பொறுத்தது. ஆன்மீகம் என்பது ஒருவரின் பற்றின்மையைப் பொறுத்தது. இரண்டும் இரு துருவங்கள் போல் விலகி இருப்பவை. வியாபாரமோ மேலும் மேலும் பொருளைச் சேர்க்கச் சொல்கிறது. ஆன்மீகமோ உன்னிடம் இருப்பவைகளை விட்டுவிடச் சொல்கிறது.

அவை இரண்டும் எதிர்மறையாகத் தோன்றினாலும், அவை ஒன்றை ஒன்று சார்ந்து நிறைவு செய்பவையாக இருக்கின்றன. இது நாம் உள்ளிழுக்கும் மூச்சு மற்றும் வெளி விடும் மூச்சு போன்றவை. உள்ளிழுக்கும் மூச்சு பற்றைப் போன்றது. நீண்ட நேரம் மூச்சை உள்ளே வைத்திருக்க முடியாது. வெளியே விட்டேயாக வேண்டும். வெளி விடும் மூச்சு பற்றின்மையைக் குறிக்கிறது.
எனக்குத் தெரிந்த வரை வியாபாரத்துக்கு 5 விஷயங்கள் அவசியம்.

1.   ஒரு சுமூகமான சூழ்நிலை காஷ்மீரிலோ, ஆப்கானிஸ்தானிலோ,ஈராக்கிலோ சென்று வியாபாரம் செய்யச் சொன்னால், முதலில் நாம் சொல்வது மாட்டேன் என்று தான்.

உதாரணத்துக்கு சத்தீஸ்கட் மாநிலத்தை எடுத்துக் கொள்ளலாம். யாராவது உங்களை பஸ்தாரில் ஒரு தொழிற்சாலையை அமைக்கச் சொன்னால்,மாட்டேன் என்பீர்கள். ஏனென்றால் மேற் சொன்ன இடங்களில் அமைதியில்லை. அமைதியில்லாத போது செல்வம் இருக்காது. செல்வம் இல்லாத போது அமைதியான நிலை இருக்க முடியாது. அமைதியும், செல்வமும் இணைக்கப் பட்டவை. செல்வம் நிரம்பிய இடத்தில் அமைதி நிலவும். (எல்லா சமயங்களிலும் அப்படி அல்ல). அமைதி நிலவும் இடத்தில் செல்வமும் உண்டாகும்.

நாட்டின் 622 மாவட்டங்களில், 205 மாவட்டங்கள் நக்சல் வாதத்தால் பாதிக்கப் பட்டிருக்கின்றன. இந்த மாவட்டங்களில் மக்கள் வறுமையால் பீடிக்கப் பட்டிருக்கிறார்கள். ஏன்? இந்த மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை இல்லை. மற்ற மாவட்டங்களின் செல்வ நிலை சிறப்பாக உள்ளது. முதலில் அமைதி நிலவும் சூழ்நிலை அவசியம். அங்கே செல்வ நிலை வளரும்.

2.   வியாபாரம் செய்ய ஆத்மார்த்தமான விருப்பம்  வியாபாரத்தில் ஆத்மார்த்த விருப்பம், சவால்களை ஏற்றுக் கொள்ளும் மனநிலை அவசியம். வியாபாரத்தில் எப்போதுமே ஏற்ற இறக்கம் உண்டு. இவைகளை சமாளிக்க உனக்கு சக்தி வேண்டும்.

3.   வியாபாரதுக்கான முதலீடு மற்றும் பொருட்கள், மற்றும் இடம் உனக்கு வியாபாரத்தில் ஆத்மார்த்தமான விருப்பம் இருக்கலாம். ஆனால் தேவையான முதலீடு இல்லையென்றால் வியாபாரத்தைத் துவங்க முடியாது.

4.   வியாபாரம் செய்யத் தேவையான திறமைகள் உன்னிடம் தேவையான முதலீடு இருக்கிறது. சுற்றுப் புறமும் அமைதியாக இருக்கிறது. உன்னிடம் வியாபாரம் செய்யத் திறமைகள் இல்லையென்றால் வியாபாரத்தில் நீ வெற்றியடைய முடியாது.

5.   நிச்சயமாகச் சொல்ல முடியாத ஒன்று. அதை அதிர்ஷ்டம் என்று சொல்லலாம்.ஒருவரின் தீவிர முயற்சியால், அவர் செல்வந்தராக ஆகமுடியும் என்றால், தீவீர முயற்சிக்குப் பின்னும் வியாபாரத்தில் பலர் ஏன் வெற்றியடைவதில்லை.

பெங்களூரின் கமர்ஷியல் தெருவில் சென்று பார்த்தால், சில கடைகளில் வியாபாரம் மிக நன்றாக நடப்பதைக் காணலாம். அதே சமயம் பக்கத்தில் உள்ள கடைகளுக்கு நஷ்டம் மட்டுமே ஏற்படுவதையும் காணலாம். கர்நாடக தொழிலதிபர்கள் சங்கமும் இதை ஒப்புக் கொள்ளும்.
சிக்பேட்டில் கூட ஒரு கடை மிகப் பெரிய லாபத்துடன் நடக்கிறது. அருகில் உள்ள கடையோ திவால் ஆகும் நிலையில் இருக்கிறது.

நகை வியாபாரிகள் அனைவரும் ஒரு தெருவில் இருக்கிறார்கள். துணி வியாபாரிகளும் ஒரே தெருவில் இருக்கிறார்கள். சிலர் லாபகரமாகவும், பலர் நஷ்டத்தோடும் வியாபாரம் செய்கிறார்கள்.

இது எப்படி? யாருக்கும் தெரியாத இந்த விஷயம் தான் ஆன்மீகம் சம்பந்தப்பட்டது.
நாம் காணும் இந்த உலகம், அலை அதிர்வுகளால் ஆன ஒரு உலகத்தால் இயக்கப் படுகிறது. இவ்வுலகம் நாம் பார்க்கக் கூடிய பொருட்களை விட நுட்பமானது. இந்த உலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத அலை அதிர்வுகளால் இயக்கப்படுகிறது.

நிறைய சமயங்களில், நீ இதை உணர்கிறாய். சிலரைப் பார்த்தால் அவரோடு பேசி வியாபாரத் தொடர்பு வைக்கத் தோன்றும். சிலரைப் பார்க்கும் போது ஏதோ காரணமில்லாமல் வெறுப்பு ஏற்படும். நீ அவர்களோடு வியாபாரம் செய்ய விரும்ப மாட்டாய். ஏன்? ஏதோ உள்ளுணர்வு காரணமாக உனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்வாய். இவ்வுலகம் முழுவதும் கண்ணுக்குத் தெரியாத துல்லியமான அலை அதிர்வுகளால் இயங்குகிறது.

எனவே, ஆன்மீகம் என்பது இந்த 5 விஷயங்களைப் பொறுத்தது. ஆன்மீகம் ஆக்க பூர்வமான சக்தியை வளர்க்கிறது. உனக்குத் தேவையான திறமைகளை உனக்கு அளிக்கிறது. சில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருக்கும் போது உன் சுயஉணர்வுடன் தொடர்பு கொண்டு நல்ல முடிவுக்கு வரமுடியும். அறிவு மற்றும் சுய உணர்வு ஆன்மீகத்தினால் செழிக்கும். ஆன்மீகம் என்பது ஒன்றைச் செய்வது இல்லை. அமைதியாக இருப்பது. மனம் சலனமில்லாமல் இருக்கப் பழகுவது. நடு நிலையாக யோசிப்பது. தன்னுள் ஆழமாகச் சென்று உயிரின் மதிப்பை உணர்வது. அதற்கு மரியாதை செலுத்துவது. ஆன்மீகத்தினால் அறிவு கூர்மையாகும். உள்ளுணர்வு தெளிவாகும்.

நீ எந்த தொழிலில் முதலீடு செய்ய விரும்பினாலும் யூகிக்க வேண்டும். பணத்தை இழக்கும் அபாயத்தை எதிர் கொள்ள வேண்டும். இங்கு தான் உன் சுய உணர்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. சுய உணர்வு (இன்ட்யூஷன்) என்பது சரியான சமயத்தில் தோன்றும் சரியான எண்ணமாகும். அது வியாபார வெற்றியில் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. நீ உன் விருப்பத்தையும், பற்றின்மையையும் சம நிலையில் வைக்கும் போது சுய உணர்வு சரியான வழியை உனக்குக் காட்டும். உன் லாபத்தையும், சேவையையும் சம நிலையில் பார்க்கும் போது சுய உணர்வு செயல்படும்.பொருளை ஈட்டுவதில் நீ காட்டும் ஆர்வத்துக்கேற்ப, நீ சம்பாதிப்பதில் ஒரு பகுதியை சமூக நலனுக்காக செலவிட வேண்டும். உன் கருணை வெளிப்பட வேண்டும். வியாபார முன்னேற்றத்துக்காக அதிக ஆர்வம் காட்ட வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. நீ மிக மென்மையாக அமைதியாக வியாபாரம் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை.

நீ ஒரு விற்பனையாளனாக இருக்கும் போது, நான் விற்கும் பொருள் நல்லது. மற்ற போட்டியாளர்களின் பொருளும் நல்லது என்று சொன்னால் உன்னால் வியாபாரம் செய்ய முடியாது.எனவே, நீ உன் பொருள் மிகச் சிறந்தது என்று சொல்லி விற்கலாம். அதே சமயம் மற்றவர்களின் பொருளைப் பற்றித் தாழ்வாகச் சொல்லாமலிருக்கும் நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.

சுய உணர்வு, அறிவுக் கூர்மை, தெளிந்த சித்தம், மற்றவர் மன உணர்ச்சியை மதிப்பது, கருணை, ஆர்வம் மற்றும் பற்றின்மை இவை எல்லாவற்றையும் தேவையான அளவில் வாழ்வில் உபயோகித்தால், நஷ்டமோ, லாபமோ எது வந்தாலும் மாறாத புன்னகையுடன் இருக்க முடியும். நாம் புன்னகையுடன் இருப்பது மிகவும் அவசியம். ஏற்கனவே நஷ்டப் பட்டிருக்கும் போது புன்னகையை ஏன் இழக்க வேண்டும்? பங்குச் சந்தையில் பணத்தை இழந்திருந்தால், குறைந்த பட்சம் நீ உன் புன்முறுவலை வைத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இரண்டு மடங்கு நஷ்டம். மூன்றாவதாக நீ உன் ஆரோக்கியத்தையும் இழக்க நேரிடலாம்.

தன்னைக் காத்துக் கொள்வது, சுற்றுச் சூழலைப் பற்றிய அறிவு மற்றும் வியாபாரத்தில் நேர்மை மிகவும் அவசியம். உன் உதவியாளர்கள் உன்னை ஏமாற்றக் கூடாது என்று நீ நினைக்கும் போது, நீ ஏன் அவர்களை ஏமாற்ற வேண்டும்? உன்னை ஏமாற்றக் கூடாது என்று நீ நினைப்பதைப் போல், நீயும் உன் வாடிக்கையாளர்களை ஏமாற்றக் கூடாது. மற்றவர்கள் செய்வதை நீ விரும்பாத போது, அதை நீயும் மற்றவர்களுக்குச் செய்யக் கூடாது. “யாரும் என்னை ஏமாற்றக் கூடாது. அதனால் நானும் யாரையும் ஏமாற்ற மாட்டேன்” என்று நேர்மையாக இருப்பது தான் வியாபாரத்தின் அடிப்படையாகும். இப்போது நீ “வியாபாரத்தில் 100% எப்படி உண்மையாக இருக்க முடியும்?” என்று கேட்டால், “அப்படி இருக்க முடியும்” என்று நான் சொல்வேன்.

இங்கு கூடியிருக்கும் பலர் அப்படி உதாரணமாக இருக்கிறார்கள். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அப்படிப்பட்டவர்களின் அனுபவங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். பின்பு வியாபாரத்தில் நேர்மையைக் கடைப்பிடிக்க முடியும் என்று புரிந்து கொள்வாய்.இப்போது உங்களை எப்போதும் உண்மையே பேசும் ஹரிச்சந்திரனாக இருக்கச் சொல்ல வில்லை. நம்முடைய பழைய நீதி நூல்களில் வியாபாரிகள் எந்த அளவு பொய் சொல்லலாம் என்ற வரையரைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அது பின் வருமாறு.

ஒரு சந்நியாசி பொய்யே சொல்லக் கூடாது. ஒரு அரசன் தன் நாட்டைக் காப்பதற்காக 1% பொய் சொல்லலாம்.


ஒரு மருத்துவர், அவருக்கு தன் நோயாளி பிழைக்க மாட்டார் என்று தெரிந்திருந்த போதும், நான் இருக்கிறேன் உன்னைக் காப்பாற்ற என்று 2% பொய் சொல்லலாம். ஒரு வியாபாரிக்கு 3% பொய் சொல்ல உரிமை உண்டு. 3%க்கு மேல் அவர் பொய் சொல்லக் கூடாது. 3% என்பது உணவில் உப்பு கலப்பது போல. அதற்கு மேல் இருந்தால் உணவு உண்பதற்கு ஏற்றதாக இருக்காது. உணவில் உப்பைக் கலக்கலாம். ஆனால் உப்பில் உணவைக் கலக்கக் கூடாது. ஆனால் இன்றைய நிலவரம் உப்பில் உணவைக் கலப்பது போலத் தான் இருக்கிறது.

பீர்பலைப் பற்றிய கதையைக் கேட்டிருப்பீர்கள். அக்பர் சக்கரவர்த்தி ஒரு சட்டம் கொண்டு வந்தார். இதன்படி பொய் சொல்பவர்களின் தலை வெட்டப்படும். அல்லது அவர் தூக்கிலிடப்படுவார். இதைக் கேட்டு டில்லி மாநகரில் உள்ளவர்கள் பயந்து நடுங்கினார்கள். (இன்றுமே அப்படித்தான் இருக்கிறது. டில்லியின் சரித்திரமே நடுங்குவது தான் போலும்.)
எனவே எல்லா வியாபாரிகளும் சாந்தினி சௌக்கில் கூடினார்கள். நாம் எல்லோரும் தூக்கில் தொங்க வேண்டியது தான். ஏனென்றால் நாம் அனைவரும் என் பொருள் தான் மிகச் சிறந்தது என்று பொய் சொல்லி விற்கிறோம். இந்தச் சட்டப்படி வியாபாரம் செய்வது தற்கொலைக்கு ஒப்பானது.

அடுத்தது ஜோசியர்கள் எல்லோரும் கவலையில் ஆழ்ந்தார்கள். அவர்கள் கணித்த படி நடக்காவிட்டால், அவர்கள் சொன்னது பொய்யாகி விடும். அவர்களால் என்ன செய்ய முடியும்? அவர்களும் இக்கட்டில் சிக்கி விட்டார்கள். பூஜை செய்பவர்கள், மருத்துவர்கள் எல்லோருமே புதிய சட்டத்தால் அவதிக்குள்ளானார்கள். ஏனென்றால் அந்தச் சட்டமே மூடத்தனமாக இருந்தது. அவர்கள் எல்லோரும் பீர்பலை அணுகி, “நீ தான் எங்களைக் காப்பாற்ற வேண்டும்” என்று வேண்டினார்கள்.

எனவே பீர்பல் அரண்மனைக்குச் சென்றார். வாயில் காப்பவர்கள் அவரைத் தடுத்து “எங்கே போகிறீர்கள்” என்று கேட்டார்கள். பீர்பல் “நான் தூக்கு மேடைக்குச் செல்கிறேன். என்னைத் தூக்கில் போடப் போகிறார்கள்” என்று சொன்னார். இது ஒரு பொய். ஏனென்றால் பீர்பல் தான் அரசருக்கு மிகவும் பிடித்த ஆலோசகராக இருந்தார். அவரை அரசர் ஏன் தூக்கில் போடச் சொல்வார்?

எனவே அவரை அரசரிடம் அழைத்துச் சென்று “பீர்பல் பொய் சொல்கிறார்” என்றார்கள். அவரை அரசர் தூக்கு மேடைக்கு அனுப்பினால், பீர்பல் சொன்னது உண்மையாகி விடும். அரசரின் தீர்ப்பு தவறாகி, ஒரு கள்ளமில்லாதவரைக் கொன்ற அவப் பெயர் வந்து விடும். அவரைத் தண்டிக்கா விட்டால், அரசர் சட்டப்படி நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழும். அரசருக்கு என்ன செய்வது என்று புரிய வில்லை.எல்லா அறிஞர்களையும், அமைச்சர்களையும் அழைத்து ஆலோசித்தார். அப்போது பீர்பல் “பேசுவது உண்மை அல்ல. என்ன நினைக்கிறோமோ அது தான் உண்மையாக இருக்க வேண்டும்” என்று சொன்னார்.எனவே, வியாபாரிகள் சில பொய்கள் சொல்லலாம். இல்லாவிட்டால் யாருமே எதையுமே விற்பனை செய்ய முடியாது. எந்த வியாபாரமும் நீடிக்காது. நேர்மைக்கான விதிகளை இவ்வாறு சொல்லியிருக்கிறார்கள்.

மற்றவர்கள் உனக்குச் செய்யக்கூடாது என்று நினைப்பதை நீ மற்றவர்களுக்குச் செய்யாதே. இவ்வுலகம் தனித்தனிப் பகுதிகளாக இயங்காது. சமூகத்தில் எல்லோரும் இணைந்து வாழ வேண்டும். மற்றவரைச் சாராமல் தனியாக வாழ முடியாது.. ஆன்மீகமும், நேர்மையும் மனிதனிடம் உள்ள விலக்க முடியாத பகுதிகளாகும்.

ஆன்மீகம் மனிதர்களின் நற்பண்புகளை வளர்க்கும். தன்னிடம் வேலை செய்பவர் நற்பண்புகளோடு இருக்க வேண்டும் என்று விரும்பாதவர் யாராவது இருக்க முடியுமா? வியாபாரம் மனிதர்கள் சம்பந்தப் பட்டது. சரியா? நீ மனிதர்களோடு சேர்ந்து வியாபாரம் செய்ய வேண்டும். உன்னிடம் வேலை செய்பவர் நேர்மை தவறாமல், ஒளிவு மறைவு இல்லாமல், எல்லா சூழ்நிலைகளிலும் ஒரு நிலையாக வேலை செய்யும் திறமையோடும், நாணயத்தோடும் இருக்க வேண்டும் என்று நீ விரும்புவாய் இல்லையா?

சிரமமான சூழ்நிலைகள் எல்லா வியாபாரத்திலும் வரக்கூடும். அதைக் கையாள வேண்டிய 
திறமையை நீ வளர்த்துக் கொள்ள வேண்டும். உனக்குள் அமைதி இருந்தால், நீ அந்தத் திறமையை வளர்த்துக் கொள்ளலாம். அதையே நான் ஆன்மீகத்துக்கான இடம் என்பேன்
எனவே ஆன்மீகம், வியாபாரம், அரசியல், சேவை எல்லாம் சேர்ந்து உன் வாழ்வை முழுமையாக்கும். இதில் ஏதாவது ஒன்று இல்லாவிட்டால், வாழ்வில் குழப்பம் நிலவும். ஆனந்தமடைய முடியாது. இந்தியாவில் வியாபாரத்தை இன்னும் பெருக்கக் கூடிய துறைகளைப் பற்றி உங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன்.

சுற்றுலாத் துறை அப்படிப்பட்ட ஒன்று. இந்தியாவில் சுற்றுலாவுக்கு உகந்த பல இடங்கள், பல சரித்திரப் புகழ் பெற்ற இடங்கள் உள்ளன. மக்கள் இப்படிப்பட்ட இடங்களுக்குச் செல்ல மிகவும் விரும்புவார்கள். இத்துறையில் மேலும் முன்னேற்றம் தேவை. மற்றொரு துறை உடைகள் சம்பந்தப்பட்டது. இந்தியாவில் பல விதமான உடைகளைத் தயாரிக்கிறோம். இவை நம் நாட்டுக்கே உரிய பாரம்பரியத்தை மற்ற நாட்டவர்களுக்குக் காட்டத் தகுந்தவையாகும்.

மூன்றாவது உணவுத்துறை. இந்தியாவில் பிரயாணம் செய்யும் போது, ஒவ்வொரு 100 கிலோ மீட்டர் தூரத்திலும் உணவுப் பழக்கம் மாறுவதைக் கவனிக்கலாம். பல விதமான சுவையுள்ள உணவுப் பொருள்கள் கிடைக்கின்றன.

ஒரு முறை “ஒரு சைவ உணவுக் கண்காட்சியைக் கூட்டி கொண்டாடலாம்” என்று சொன்னேன். உங்களுக்குத் தெரியுமா? 5600 வகையான உணவுப் பதார்த்தங்களை மக்கள் கொண்டு வந்திருந்தார்கள். 7000 கிலோ பல சுவையான பண்டங்கள். எல்லாமே தன்னார்வலர்களால் தங்கள் வீட்டில் தயாரித்தவை.

இந்த “அன்னம் பிரம்மா” என்ற நிகழ்ச்சியை அகமதாபாத்தில் நடத்தினோம். இது வரை கேள்விப்படாத பல புதிய உணவுப் பண்டங்களை இதில் பார்க்க முடிந்தது.திரிபுரா சென்றீர்கள் ஆனால் 40லிருந்து 50 வகையான உணவுப் பதார்த்தங்களைச் சுவைக்கலாம். சாதாரண மக்களுக்கு இந்தப் பண்டங்களைச் சமைப்பது பற்றித் தெரியாது. அதே போல் கர்நாடக மாநிலத்துக்கான விசேஷ உணவுப் பண்டங்கள் ஒப்படு, சட்னிபொடி, கொஜ்ஜு, வில்லகை முதலியவற்றை மக்கள் மிகவும் விரும்பி உண்பார்கள். உணவுத் துறையிலும் விளம்பரம் செய்து வியாபாரத்தைப் பெருக்கலாம்.

நான்காவதாக நம்முடைய பாரம்பரிய நகைகள். பெண்களுக்கான அணிகலன்கள்.மற்றும் நம்மிடம் 5000 ஆண்டுகளாக வழங்கும் ஆயுர்வேத மருந்துகள், மருத்துவ முறைகள், மூலிகைகள், சிரோதரா, அப்யங்க மாஸேஜ் முறைகளுக்கு வியாபார ரீதியில் நிறைய வாய்ப்பிருக்கிறது. இந்த ஆயுர்வேத மருத்துவ முறை 21ம் நூற்றாண்டுக்கு மிகவும் உகந்தது. உலகெங்கும் இதைப் பற்றி மக்கள் அறிந்திருக்கிறார்கள். இதை மேலும் மக்களிடையே விரும்பத்தக்கதாக ஆக்க முடியும்.

மேலும் நம்மிடம் யோக சாதனைகள், ஆன்மீகம் மற்றும் வேதாந்த ஞானம் இருக்கிறது.
ஏழாவதாக நம் கம்ப்யூடர் மென்பொருள் துறை உலக அளவில் சிறந்து விளங்குகிறது. இதிலிருந்து தொடங்கி, இப்போது மேல் நாட்டவர்கள்  நம் யோக சாதனைகள் தியான முறைகளைக் கற்க விருப்பம் கொண்டுள்ளார்கள். அமெரிக்காவில் யோகா என்பது வியாபார ரீதியாக 2700 கோடி டாலர் ஈட்டுகிறது என்று அறிந்தேன்.

கர்நாடக வியாபார சங்கத்தில் உள்ள நீங்கள் மேற் கூறிய துறைகளில் வியாபாரத்தைப் பெருக்க திட்டமிடலாம். ரஷ்யா, நேபாளம் மற்றும் பல நாடுகளிலிருந்து வந்திருக்கும் வியாபார பிரதிநிதிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கு கொள்கிறார்கள்

எல்லோரும் சேர்ந்து உலகின் பல்வேறு நாடுகளின் செல்வவளத்தைப் பெருக்குவதற்கான திட்டங்களைப் பற்றி விவாதிக்கலாம். நானும் நீங்களும் மட்டும் அல்ல. இவ்வுலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.இறைவன் உங்கள் அனைவருக்கும் எல்லாவித வளங்களையும் அருளட்டும் என்று வாழ்த்துகிறேன்.