மாமியாருடன், உங்கள் உறவை மேம்படுத்திக் கொள்வதற்கான குறிப்புகள்…


07 – பிப்ரவரி - 2013 – பெங்களூர் - இந்தியா.

நாம்  எதைப் பார்கின்றோமோ அதில் நாம் பார்ப்பது, பத்தின் ஒரு பகுதியே. மிக நுண்ணிய படைப்பே மொத்த படைப்பையும் ஆளுகின்றது. அந்த நுண்ணிய படைப்பு முற்றிலும் அதிர்வுகளால் ஆனது. அதுவே மொத்த படைப்பையும் ஆளுகின்றது. அதில் தான் மொத்த தகவல்களும் உள்ளடங்கியுள்ளன. விண்வெளியில் அனைத்து தகவல்களும், சக்தியும் அடங்கியுள்ளன என்பது எத்தனை வியப்பானது. சக்தியின் மூலம் சூரியன் என்று நாம் சொல்கின்றோம். ஆனால் சூரியனைச் சுற்றியுள்ள அகண்டவெளி அதைப் போல் மில்லியன் மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

வெளி என்பது மூன்று வகைப்படும். அவை:
1. வெளியில் இருக்கும் விண்வெளி,
2. எண்ணங்களும், உணர்வுகளும் அடங்கியுள்ள நம் மனதின் உள்வெளி,
3. இவை இரண்டையும் தாண்டிய சலனமற்ற வெளி.
ஆக, உங்களுக்குள்ளே ஒரு சக்தி கிடங்கு உள்ளது. நீங்கள் ஒரு நடமாடும் சக்தி மையம். 

கே: என் மாமியாருடன் என்னுடைய உறவுமுறையை மேம்படுத்திக் கொள்ள சில குறிப்புகளை  தயவு செய்து சொல்லுங்கள்.

குருதேவ்: கொஞ்சம் கவனியுங்கள். நீங்கள் உங்கள் அம்மாவிற்கும் உங்கள் மாமியாருக்கும் வெவ்வேறு அளவுகோல்களை வைத்துள்ளீர்கள். அப்படி ஏன் செய்கின்றீர்கள்? உங்கள் அம்மா உங்களை திட்டும்போது அது உங்களை பெரிதாக ஒன்றும் பாதிப்பதில்லை. ஆனால் அதுவே உங்கள் மாமியார் திட்டினால், அது உங்களை ஆழமாக பாதிக்கின்றது, இல்லையா? உங்களில் எத்தனை பேருக்கு இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கின்றது? சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களில் சிலர் வெட்கத்தினால் கையை உயர்த்தவில்லை. நாம் அம்மா, மாமியார் என்று இருவருக்கும் இரண்டு  வெவ்வேறு அளவுகோல் வைத்துள்ளோம். அப்படி இல்லாமல் இருவருக்கும் ஒரே மதிப்பினை அளித்தால் பிரச்சினை தீர்ந்து விடும். 

இரண்டாவது குறிப்பு என்னவென்றால்  மாமியாருடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். அவர்கள் என்ன சொன்னாலும் நீங்கள் சரி என்று சொல்லிவிட்டால் உங்களுக்கு என்ன ஆகிவிடும்இரு தரப்பினரும் சண்டையிட தயாராக இருக்கும் போது தான் விவாதங்களும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமையும் நிகழும். யாரேனும் ஒருவர் சண்டைக்கு ஒத்துழைக்க வில்லையென்றால் வாக்குவாதங்கள் இருக்காது. உங்கள் மாமியார் "மிகவும் அனலாக இருக்கின்றது' என்று சொன்னால் நீங்களும் ஆமாம் என்று சொல்லுங்கள். அவர்கள் இரவை பகலென்றும், பகலை இரவென்றும் சொன்னால் கூட நீங்கள், 'ஆமாம். நீங்கள் சொல்வது தான் சரி" அன்று ஆமோதியுங்கள். சிறிது காலம் அவர்களது போக்கிலேயே  செல்லுங்கள். பிறகு நீங்கள் அவர்களை வெற்றி கொள்வதை கண்கூடாகக் காணலாம். அன்பின் மூலமாகவும் அவர்களுடன் ஒத்துப் போவதன் மூலமாகவும் அவர்களை வெற்றி கொள்ளுங்கள்.

நீங்கள் எதிர்ப்பின்றி ஒத்துச் செல்லும்போது ஒருவர் உங்களுடன் எப்படி சண்டையிட முடியும்இளகிய மனமுடையவராக இருப்பதே இதற்குத் தேவையான திறமை. இதனை முதலில் முயற்சி செய்து பார்த்து சொல்லுங்கள். மாமியார் மருமகள் இருவருக்குமிடையேயான  பிரச்சினை முடிவில்லாதது.

ஆசிரமத்தில் பொதுவான விதி ஒன்று உள்ளது. நீங்கள் உங்கள் பிரச்சினைகளை இங்கே கொண்டு வரலாம். ஆனால் அவற்றை திருப்பி கொண்டு செல்ல முடியாது. அதனால் ஒரு பெண்மணி எழுந்து என்னிடம், "அப்படியானால் நான் என் மாமியாரை இங்கேயே விட்டு விட்டுச் செல்லலாமா?" என்று கேட்டார். நான் சொன்னேன், "நான் முதலில் உன் மாமியாரிடம் அவருடைய பிரச்சினை என்னவென்று கேட்க வேண்டும்," என்று சொன்னேன்.

மக்களை விட்டு விலகி விடுவது சரியான தீர்வாகாது. திறமையாக அவர்களை கையாளுவதே   சரியான முடிவு. அதற்கு மௌனமே அனைத்திலும் மேலான திறமை. அலைபாயும் நம் மனதை சில நிமிடங்கள் ஆழ்ந்த தியானத்தில் அமைதிப்படுத்தினால் பிறகு அனைத்துமே மாறுவதை காணலாம்.  

கே: குருதேவ், என் முதலாளி மிகுந்த சூழ்ச்சி நிறைந்தவராகவும் நெறிமுறை அற்றவராகவும்  உடன் வேலை செய்வதற்கு மிகவும் சிரமமானவராகவும் இருக்கின்றார்.மிகுந்த அர்ப்பணிப்புடன் வேலை செய்யும் தொழிலாளியாகிய என்னால் அவருடன் வேலை செய்ய முடியவில்லை.  நான் என்ன செய்வது

குருதேவ்: நான் மறுபடியும் சொல்கின்றேன் இவை அனைத்தும் அதிர்வுகள் சம்பந்தப்பட்டவை காரணமே இல்லாமல் நாம் சிலரிடம் வெறுப்பை உணர்வதையும் அதே போல் காரணமே இல்லாமல் சிலரால் கவர்ந்திழுக்க படுவதையும் நீங்கள் கவனித்திருக்கின்றீர்களா? இவை நம் அதிர்வுகளால் ஏற்படுபவை. நம் அதிர்வுகள் மக்களின் மனதை மாற்றக் கூடியவை எனவே நீங்கள் வலிமையோடு இருங்கள். மேலும் உங்கள் முதலாளி சற்று கடினமானவராக இருந்தால் நீங்கள் மென்மேலும் திறமைசாலியாக மாறுவீர்கள். நீங்கள் இதுவரை கண்டிராத திறமைகள் உங்களிடமிருந்து வெளிப்படும். திறமைகளை நன்கு வளர்த்துக்கொண்டு நாம் தெரிவிக்க விரும்புவதை தெளிவாக தெரிவிப்பதே பாராட்டத்தக்கது. 

மௌனம் என்பது நம்மிடம் சிறந்த தகவல் பரிமாற்றத்திற்கான திறமையை வளர்க்கும்.
கோபம் கொள்ளும் ஒவ்வொருவரின் கோபத்திற்கும் ஒரு நியாயம் இருக்கும். கோபம் நல்லது. அது அவசியமானதும் கூட. ஆனால் அது உங்களை விழித்தெழச் செய்வதற்கு மட்டுமே வேண்டும். அதன் பிறகு அந்த கோபம் படைப்பாற்றலாக திசை திருப்பப்பட வேண்டும்.  இல்லையென்றால் அது உங்களையே எரித்து விடும். வீட்டில் அடுப்பு இருப்பது நல்லது.  வீட்டில் நெருப்பு இருக்க வேண்டும், ஆனால் வீடே நெருப்பின் மேல் இருக்கக் கூடாது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை நான் டெல்லியில் இருந்த போது, ஏறக்குறைய ஒரு லட்சம் இளைஞர்கள் ராம்லீலா மைதானத்தில் கூடியிருந்தனர். இறுதியில் இந்த நாட்டு இளைஞர்கள் அனைவரும் குற்றத்திற்கு எதிராக கூடி எழுந்து நிற்பதைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். டெல்லி மக்களிடம் எவ்வளவு கோபம் உள்ளது? அந்தக் கோபம் மிகத் திறமையான முறையில் வழிநடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அது பெரும் குழப்பங்களை உண்டாக்கி விடும். 

கே: குருதேவ், ஞான நிலை அடைவதற்கு ஒரு குருவைப் பின்பற்ற வேண்டியது கட்டாயமா

குருதேவ்: நீங்கள் இந்த கேள்வியை கேட்பதும் நான் அதற்கு பதில் அளிப்பதும் அவசியமாநீங்கள் கேள்வியைக் கேட்டு விட்டீர்கள். நான் இப்பொழுது பதில் சொன்னால் இருவருமே சிக்கிவிடுவோம். புரிந்ததா? நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு அதன் விடை எனக்குத் தெரியும் என்று நீங்கள் நினைத்தால் நான் ஏற்கெனவே குரு என்றும் நீங்கள் மாணவன் என்றும் அர்த்தம். 

"நான் குரு இல்லை" என்று சிலரும் "நான் சீடன் இல்லை" என்று சிலரும் சொல்கின்றனர்.  இவ்வாறு சொல்வது "நான் மருத்துவர் இல்லை; இருந்தாலும் நான் மருந்து தருகின்றேன்" என்று சொல்வது போலவும் அல்லது "நான் நோயாளி இல்லை என்றாலும் எனக்கு மருந்து வேண்டும்" என்று சொல்வது போலவும் உள்ளது. இரண்டுமே அர்த்தமற்றவை. 

ஓரளவிற்கு வழிகாட்டுதல் அவசியமே. குரு என்பது ஒரு தனிப்பட்ட மனிதரைக் குறிப்பது அல்ல. அது ஞானம்; அது ஓளி; அது சக்தி; அது அன்பு. இவையனைத்தும் ஒன்று சேர்ந்ததே குரு தத்துவம். மிக நுண்ணியமானதான ஆன்மீகத்திற்கு சிறிது வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகின்றது. உங்கள் மனம் சிறிதும் சலனமின்றி நிலையாக இருக்கும் போது  உங்களுக்கு அனைத்து வழிகாட்டுதல்களும் கிடைக்கும். ஆனால் மனம் சலனமற்று அமைதியாக இல்லாத போது முற்றிலும் சலனமற்ற மனமுடைய ஒருவரின்  வழி காட்டுதலைப் பெறுவது நல்லது.

கே: குருதேவ், நீங்கள் பகவான் கிருஷ்ணனிடம் 16 பண்புகளைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.  என்னிடமும் இந்த 16 குணங்களும் எங்கேனும் உள்ளனவா? அவற்றை நான் வெளியே கொண்டு வருவது எப்படி?

குருதேவ்: ஆம். எல்லோரிடமும் இந்த 16 குணங்களும் உள்ளன. நீங்கள் அதிகமான ஆர்வமுள்ளவராகவும், அதிக கருணையுள்ளவராகவும், அதிகம் சலனமற்ற மைய நிலையிலிருப்பவராகவும் இருக்கும் போது அவை அதிக அளவில் வெளிப்படும்.

கே: குருதேவ்! இந்தியா இரு பிரிவுகளாக உள்ளது. ஒன்று கிராமப்புறங்கள், மற்றொன்று நகரங்கள். இவையிரண்டுக்கும் இடையில் எவ்வாறு சம நிலையை ஏற்படுத்துவது?

குருதேவ்: கிராமங்கள் அடங்கிய இந்தியப் பகுதியில் தனித்துவம் வாய்ந்த குணங்கள் உள்ளன. அவற்றைக் காக்க வேண்டும். கிராம மக்களின் தனித்தன்மை காப்பாற்றப்பட வேண்டும். சாதரணாமாக, கிராமமக்களின் சுய மதிப்பீடு தாழ்ந்து போகும்போது, நகர்புற இளைஞர்களை முன்மாதிரியாகக் கொள்ள ஆரம்பிக்கிறார்கள். இது தேவையே இல்லை. அவர்களின் உடை, உணவுப் பழக்கங்கள், எல்லாமே சரி என்று அவர்களுக்கு உணர்த்தி அவர்களது கௌரவத்தைக் காக்க வேண்டும். ஆரோக்கியமான பழக்கங்களை அவர்கள் பின் பற்றி வரலாம்.

ஜார்க்கண்டிலும், சட்டிஸ்காரிலும் உள்ள பழங்குடி இனத்தவர் வாழும் இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். அவர்கள் தங்கள் இடங்களை மிக சுத்தமாக வைத்திருப்பதைக் கண்டால் ஆச்சரியப் படுவீர்கள். எங்குமே குப்பைகளைக் காண முடியாது. இந்தப் பழங்குடி பகுதிகளில் மின்சாரம் கிடையாது. ஆயினும் தங்கள் சிறிய கிராமங்களை மிகச் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வீடும் சுத்தமாக உள்ளது. எங்குமே சாக்கடைகளைக் காண முடியாது. இக்கிராமங்கள் காடுகளை போன்றவை. காடுகள் மிக சுத்தமாக இருக்கும். விலங்குகள் இறந்தாலும் அவற்றின் உடல்கள் எங்கும் காணப்படாது. இயற்கை எப்படியோ  ஒரு சமநிலையை உருவாக்கி இருக்கும். அது போல, பழங்குடி இனத்தவர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருந்த போதிலும், சுற்றுச்சூழலையும் சுத்தத்தையும் காத்து வருகிறாகள். நகர மக்கள் இதை கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த பழங்குடி கிராமங்களில் உள்ள நம் பள்ளிகளில் 30000க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள். இப்பள்ளிகள் சாலைகள் அற்ற நெடுந்தொலைவில் இருப்பதால், அவர்கள் பள்ளிகளுக்கு  நடந்தே செல்கிறார்கள். இந்த கிராம மக்களிடிடம் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலவுகின்றன. இது நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

கே: நான் எவ்வாறு மென்மையாக, பணிவாக அதே சமயம் அதிகாரத்துடன் இருக்க முடியும்?

குருதேவ்: அவ்வாறு இருக்க விரும்புகிறீகளா? இருக்கலாம். திடமாக இருக்க ஆளுமை உணர்வுடன் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மென்மையாக இருக்க நீங்கள் பலவீனமாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. நாம் சாதரணமாக இவை மாறுபட்ட குணங்கள் என்றும் ஏதாவது ஒன்று தான் இருக்கமுடியும் என்றும் எண்ணுகிறோம். அவ்வாறு இல்லை. இந்த இரண்டு குணங்களுடனும் இருக்கலாம் என்றே நான் கூறுவேன். செயல் முறைக்கு ஒத்த நல்லறிவும், கூருணர்வும் தான். நல்லறிவுடையோர் கூருணர்வின்றியும், கூருணர்வுடயோர் நல்லறிவின்றியும் தான் காணப்படுகின்றனர். ஆனால் இவை இரண்டுமே அவசியம். இவற்றை அடைய தியானம் தான் சிறந்த வழி. தியானம் செய்யுங்கள்!

கே: ஜப மாலையில் 108 மணிகள் இருப்பதன் காரணம் என்ன? இதற்கு ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா?

குருதேவ்: இந்திய ஜோதிட சாஸ்திரப்படி 12 நட்சத்திரக் குழுக்களும் ஒன்பது கிரகங்களும் உள்ளன. இந்த ஒன்பது கிரகங்களும் 12 நட்சத்திரக்குழுக்களை சுற்றி வரும்போது 108 விதமான மாறுதல்கள் நிகழ்கின்றன. இவ்விதமான மாறுதல்களில் கேடு விளைவிக்க கூடியவயைத் தவிர்ப்பதற்காக ஏற்பட்டவை இந்த 108 மணிகள்.

கே: இந்தியா போன்ற நாட்டில், குறிப்பாக, நான் வாழும் மும்பையில் சமத்துவமின்மை காணப்படுகிறது. எனது செழிப்பான வாழ்வு நிலையினால், எனக்கு சங்கடமும் குற்ற உணர்வும் ஏற்படுகிறது. ஆயினும் நான் மேலும் சம்பாதித்து வசதியாகவே வாழ விரும்புகிறேன். இவ்விரண்டையும் எவ்வாறு ஒப்பிட்டு சரி செய்வது?

குருதேவ்: ஏதாவது ஒரு தொண்டினை செயல்படுத்துங்கள். இந்த குற்ற உணர்ச்சி ஏற்படுவதே ஒரு நல்ல விஷயம். இதுவே உங்களை ஒரு நல்ல செயலில் ஈடுபடுத்தத் தூண்டுதலாக அமையும்.மாதம் 2% அல்லது 3 % பணத்தை ஒதுக்குங்கள். ஏனெனில் நாம் சம்பாதிக்கும் அனைத்தையும் நமக்கே செலவழித்துக் கொள்வது நல்லதல்ல. நிச்சயமாக சங்கடமாகவே உணருவோம். ஆகவே சமூகநலனுக்காக 5% அல்லது 10 % பண ஒதுக்கீடு செய்து வாருங்கள். சேரிகளில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவி செய்யுங்கள். தாராவியில் இது போன்ற நிறைய நலப்பணிகள் நடைபெறுகின்றன.அதில் ஒருவராகக் கலந்து கொள்ளுங்கள்.
இளம் குழந்தைகள் படித்து வளர்ச்சி அடைவதைக் காணும் போது பெரும் திருப்தி  அடைவீர்கள். வசதியான வீடு மற்றும் கார் இவை பற்றி நீங்கள் குற்ற உணர்வு அடைய வேண்டியதில்லை.

கே: ஊழல் மிகுந்த வர்த்தகத் துறையில், ஊழல் செய்பவரே எல்லா விதமான செயல் பாடுகளிலும் நிச்சய வெற்றி வாய்ப்புடன் இருக்கும்போது எவ்வாறு போட்டி இடுவது?

குருதேவ்: தனி மனிதனாக, அதுவும் வர்த்தகத் துறையில் ஊழலுக்கெதிராகப் போராடுவது கடினம். ஒரு சன்யாசிக்கு இது எளிது, ஏனெனில் சன்யாசிக்கு இழப்பு எதுவும் இல்லை. ஒரு வர்த்தகருக்கு இது கடினம். உங்களுக்கு சமுதாயத்தின் உதவி தேவை. சமுதாய மக்கள் குழுக்களாகப் பிரிந்து ஊழலுக்கு எதிராக சுலபமாகப் போராட முடியும். உங்களுக்கு ஒரு உதாரணம் கூறுகிறேன்.

மகாராஷ்ட்ராவில் உள்ள அஹமது நகரில் ஒரு சாலை என்பது பெயரளவில் காகிதத்திலேயே இருந்து வந்தது. உண்மையில் சாலை இல்லவே இல்லை. எனவே, ஐம்பது வாழும் கலை தொண்டர்கள் ஒன்றாகச் சேர்ந்து மேயரின் அலுவலகத்திற்குச் சென்றார்கள். அவர்கள் செய்த முதல் காரியம் மேயரைப் பார்த்து புன் முறுவல் பூத்ததுதான்! அதே புன்முறுவலுடன், அவர்கள் அனைவரும் மேயரின் முன் அமர்ந்து " அம்மா! இந்த சாலை எப்போது போடப்படும்? எங்களுக்குத் தெரிவியுங்கள். நீங்கள் தெரிவிக்காத வரை நாங்கள் இந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை" என்றார்கள். மேயர் அதிர்ந்து " உடனே போடப்படும்" என்றார்கள். 24 மணி நேரத்தில் அந்த சாலை போடப்பட்டு விட்டது.

அது போலவே ஹைதராபாதில் சில இளம் தொழில் முயற்சியாளர்கள்ஒரு தொழில் சாலைக்கான அனுமதி உரிமம் பெற வேண்டி இருந்தது. அவர்கள் கண்ட ஒவ்வொரு கண்காணிப்பாளரும் லஞ்சம் கேட்டனர். இவர்கள் " பாருங்கள்! நாங்கள் அனைவரும் லஞ்சம் வாங்கவோ கொடுக்கவோ மாட்டோம் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டிருக்கிறோம். நீங்கள் எங்களை ஐம்பது தடவை வரச் சொன்னாலும் வருகிறோம் ஆனால் ஒரு  ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க மாட்டோம்." என்றனர். இவர்களது கொள்கைப் பிடிப்பினைக் கண்டு, இவர்களுக்குத் தேவையான 10 அனுமதி உரிமங்களையும் அளித்து விட்டனர். அந்த தொழில் பேட்டையில் உள்ள மற்ற ஒவ்வொருவரும் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அவர்கள்" நாங்கள் இரண்டு வருடங்களாக இந்த உரிமங்களுக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்குக் கிடைக்க வில்லை, எப்படி இந்த இளைஞர்கள் அவற்றை பெற்றனர்? என்று வியந்தார்கள்.

நமக்கு பற்றுறுதி என்பது இருந்தால், நம்மால் சமூக அமைப்பில் மாற்றம் ஏற்படுத்த முடியும். இளைஞர்களாகிய உங்களுக்கு "என்னால் முடியும்" என்ற திட நம்பிக்கை இருக்க வேண்டும். நீங்கள் " இந்த உலகம் ஊழல் மிகுந்தது, இது ஒரு போதும் மாறப் போவதில்லை எந்த மாற்றமும் நிகழாது'' என்ற எண்ணத்துடன் இருந்தால், உங்கள் எண்ணமே, உங்கள் அதிர்வு நிலையே, இத்தகைய சூழ்நிலையை உங்களைச் சுற்றி ஏற்படுத்தும் ஆகவே நீங்கள் இலட்சியக் கனவுகளுடன் இருக்க வேண்டும். மாறுதல்கள் நிகழ்வதைக் காண்பீர்கள். ஆகவே மீண்டும் கூறுகிறேன் 'தனி மனிதனாக ஊழலை எதிர்ப்பது கடினம். குழுக்களாக அமைந்து ஊழலுக் கெதிராகப் போராட வேண்டும்.

கோபத்தின் பின்புலத்தில், நீதி வேண்டுதலும்,அநீதிக்கு எதிர்ப்புமே இருக்கின்றன.
ஆகவே கோபம் நல்லது, தேவையானதும் கூட. ஆனால் அது விழித்தெழுவதற்கு மட்டுமே.
உடனேயே அக்கோபம், ஆக்கத்திறனுக்கு வழி வகுக்க வேண்டும். இல்லையெனில், அதே கோபம் உங்களை அழித்துவிடும்.

கே: சில சமயங்களில், பல ஆண்டுகளாக எடுத்த முயற்சி தோல்வியில் முடிவடைந்து விடுகின்றது. அந்த சந்தர்ப்பங்களில் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்: முன்னேறிச் செல்லுங்கள். ஒவ்வொரு தோல்வியையும், கற்க வேண்டிய பாடமாக எடுத்துக் கொள்ளுங்கள். தியானம் செய்யுங்கள். சில நிமிஷங்கள் நீடிக்கும் ஆழ்ந்த தியானம், உங்களின் ஆழத்திலிருக்கும் உள்ளுணர்வுடன் உங்களை இணைக்கும். ஆழ்மன உள்ளுணர்வுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால், தவறான முடிவுகள் ஏற்படாது.

கே: குருவே! சமீபத்தில், தாங்கள் "உங்களுடைய மனமே உங்கள் விடுதலைக்கு காரணம்" என்று குறிப்பிட்டீர்கள். எனக்கு குழப்பமாக இருக்கிறது. மனம் எப்படி விடுதலைக்கு காரணமாகும்? மனத்தைக் கடந்து செல்ல வேண்டியதில்லையா?

குருதேவ்: ஆம். காரணம் மனம் அல்லவா? மனதில் ஏற்படும் தொந்தரவுகள் உங்களில் உள்ள அமைதியைக் கெடுத்து விடுகிறது. நீங்கள் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும் போது, உங்கள் மனம் மெய்மையுடன் தொடர்புடையதாக இருக்கின்றது. உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் நீங்கள் பாதிக்கப் படும்போது, உங்களில் எப்போதும் நிலைகொண்டிருக்கும் அமைதியை உணர முடியாமல் போகிறது.

கே: குருதேவ்! இவ்வுலகில் இழப்பை பற்றிய பயம், மரண பயம், தோல்வி பற்றிய பயம், தெரிந்தவை, மற்றும் தெரியாதவை பற்றிய பயம் போன்ற பயங்கள் இன்றி நான் வாழ்வது எப்படி?

குருதேவ்: அன்பு தலைகீழாக நிற்கும் நிலையே பயம் என்பது. அன்பு இருக்கும் போது பயம் இருக்காது, பயம் இருக்கும் இடத்தில் அன்பு இருக்காது. பயம், அன்பு வெறுப்பு ஆகியவை ஒரே ஆக்க சக்தியில் உள்ளவை. பகைமை உள்ள ஒருவன் எதைப் பற்றியும் பயப்பட மாட்டான். ஆழ்ந்த அன்பு உள்ள ஒருவனிடமும் எதைப் பற்றியும் பயம் இருக்காது. ஒரே சக்தியிடமிருந்து தான் பயம் அன்பு வெறுப்பு ஆகியவை வெளிப்படுகின்றன.

2013, 2 ஆம் நாள் நான் திஹார் சிறைச்சாலைக்கு சென்றிருந்தேன். அங்கு, வாழும் கலையின், ஒரு செயல் திறன் பயிற்சி மையம், ஒரு உணவகம், ஒரு மருத்துவமனை ஆகியவற்றைத் துவக்கி வைத்தேன். அவர்களிடம் ஏற்பட்டிருந்த சீர்திருத்தம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. முரட்டுத்தனமான குற்றவாளிகளாக இருந்த இவர்களிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் கவனிக்கத் தக்கதாக இருந்தது. அவர்கள், சங்கீதம், ஓவியம் இவைகளை ரசிக்கத் துவங்கி, பல புதிய விஷயங்களைக் கற்க ஆரம்பித்திருந்தார்கள்.

நான் அவர்களிடம், செயல்திறன் பயிற்சி மையம், உணவகம் ஆகியவற்றை உபயோகியுங்கள். ஆனால், மருத்துவமனையை உபயோகிக்காதீர்கள்." என்றேன். ஒரு சமுதாயத்தின் ஆரோக்கியம் என்பது காலியான மருத்துவமனை படுக்கைகள், காலியான சிறைச்சாலைகள் இவற்றைப் பொறுத்ததே. தற்சமயம் 6000 பேர் இருக்கக்கூடிய சிறைச்சாலையில் 12000 பேர் இருக்கிறார்கள். எனவே, நாம் சிறைச்சாலைக்கு வெளியே பணி செய்து, இங்கு மேலும் மக்கள் வரவிடாமல் தடுக்க வேண்டும். நாம், மனித நேயத்தையும், சார்புடைமை உணர்வையும் மக்களிடையே அலை போல பரப்ப வேண்டும்.

இங்கு சிறைச்சாலையில் இருக்கும் இந்த இனிய மக்கள் பகைமை உணர்வில் ஆழ்ந்து, பயமின்றி குற்றங்களை செய்துவிட்டார்கள். அதனால் தான், மக்கள் தொண்டில் ஈடுபட்டு, உஜ்ஜய் மூச்சுப் பயிற்சி செய்தால், அப்போது, ஒரே சக்தியிலிருந்து எழும் பயம், பதற்றம், அழுத்தம் ஆகிய உணர்வுகள் சுண்டி விடப்பட்டு அன்பு எல்லோரிடமும் கருணை எனும் உணர்வுகளாக மாறுகின்றன.