நாம் ஒவ்வொரு படைப்பையும் கவனமாக பாதுகாக்க வேண்டும்…


6 பிப்ரவரி 2013 பெங்களூரு, இந்தியா

கே: உணவை இறைவனுக்கு படைத்து பின்னர் பிரசாதமாக உண்பதின் முக்கியத்துவம் பற்றி  கூறமுடியுமா? மேலும் சரியான முறையில் உணவை நிவேதனம் செய்வதைப் பற்றியும் கூறுங்கள். ஏதாவது மந்திரம் தேவையா?

குருதேவ்: இந்தியாவில் ‘வைஷ்வ தேவா’ என்று ஒரு மரபு இருக்கிறது. ஒரு பெண் உணவை சமைத்தபின், அது சாதமா, பருப்போ, எதுவாக இருந்தாலும் அதை ஒரு சிறிய கரண்டியில் எடுத்து தோட்டத்தில் பறவைகள், எறும்பு அல்லது ஏதாவது ஒரு உயிரினதிற்காக வைப்பாள். இதன் அர்த்தம் என்னவென்றால் நாம் சுற்றுப்புற சூழுலுக்கு தகுந்த மரியாதை செய்யவேண்டும். மேலும் பலர், உண்பதற்கு முன், தட்டிலுள்ள உணவில் சிறிதளவு எடுத்து கீழே வைப்பார்கள், பின்னர் அதை பறவைகளுக்கோ மற்ற உயிரினங்களுக்கோ கொடுப்பார்கள்.

பறவைகள் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம் என்பது தெரியுமா? நாம் பறவைகளை கவனமாக பாதுகாக்க வேண்டும்; எறும்புகளை காக்க வேண்டும். 

ஒவ்வொரு படைப்பினையும் காக்க வேண்டும்.ஏதாவது ஒரு உயிரினம் காணவில்லை என்றாலும் இந்த பிரபஞ்சத்தால் தன்னை பாதுகாத்துக்  கொள்ள முடியாது. பிரசாதம் என்றால், உங்களுக்குக் கிடைக்கும் உணவை ஒரு பரிசாக ஒரு ஆசீர்வாதமாக எடுத்துக்கொள்வது. எளிதாகச் சொல்வதென்றால் பிரசாதம் என்பது கடவுளின் ஆசீர்வாதம். உணவு, வாழ்கை, காலம், நம் சுவாசம் ஆசீர்வாதம். இவை எல்லாம் பரிசுகளே.

கே: எல்லா சக்திகளுக்கும் இந்திய புராணங்களில் ஏன் உருவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் புராணக் கதைகள் உண்மையா? முனிவர்கள் ஞானம் பெற்றவர்கள் என்றால் அவர்களுக்கு ஏன் கோபம் வந்து சாபம் அளித்தார்கள்?

குருதேவ்: பெயர்களும் உருவங்களும் நிறைந்தது இந்தப் பிரபஞ்சம். ஒரு பெயரைக் கொடுத்த அடுத்த கணத்தில் உருவமும் அதனுடன் வருகிறது. பல உருவங்கள் சூக்ஷும வடிவங்கள். எனவே அவை சூக்ஷும நிலையில் தொடர்ந்து இருக்கிறது. ரிஷிகள் ஏன் கோபம் கொண்டு சாபமிட்டார்கள், எனக்குத் தெரியாது. பொதுவாக எல்லா ரிஷிகளும் செய்வதில்லை. ஒன்றிரண்டு முனிவர்களே இப்படிச் செய்தார்கள். ஒவ்வொரு முறை அப்படி சாபமிட்டபோதும் அதிலிருந்து கூட ஏதாவது ஒரு பெரிய நன்மை நடந்திருக்கிறது.  அதனால் தான் ஞானமடைந்தவரின் கோபம் கூட சமூகத்திற்கு நன்மை அளிக்கும், ஆனால் அறியாதவர்களின் அன்பு கூட தீமை பயக்கும் என்று கூறுவார்கள்.

ஒரு ஞானவானின் கோபம் நன்மையே அளிக்கும். அவரால் எந்தக் கேடும் செய்ய முடியாது, சமூகத்திற்கு நன்மை மட்டுமே செய்ய முடியும். எனவே, ஒவ்வொரு முறை ரிஷிகள் சாபமிடும் போதும் சமூகத்திற்கு வரமே கிடைத்திருக்கிறது.

கே: சுதந்திரம் என்பது ஒன்றைச் சார்ந்தே இருக்கிறது என்று நினைக்கிறேன். சில சமயம் என் சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்துடன் முரண்பட்டிருக்கிறது. ‘சுதந்திரம்’ என்று ஏதாவது இருக்கிறதா? அல்லது அது பெரும் குழப்பத்தில் கொண்டு போய் விடுமா?

குருதேவ்: கட்டுப்பாடு சுதந்திரம், இரண்டுமே மனதில் தான் நடக்கிறது, மேலும் உங்கள் பார்வை தடைபட்டிருந்தால் பலப்பல கட்டுப்பாடுகளை காண்பீர்கள். உங்கள் பார்வை விரிவடையும் போது சுதந்திரம் மட்டுமே இருப்பதை உணரத் தொடங்குவீர்கள்.

கே: பந்த பாசத்திலிருந்து விலகி இருக்க ஆகச் சிறந்த எளிமையான வழி என்ன?

குருதேவ்: மையத்திலிருங்கள். இவை எல்லாம் கனவு, இவை எல்லாம் முடியப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். எல்லோரும் ஒரு நாள் முடிந்து போகப் போகிறோம், ஒரு நாள் எல்லாமும் முடிந்துவிடும்.

கடந்த காலத்தைத் திரும்பிப் பாருங்கள், இந்த உலகில் சுமார் முப்பதிலிருந்து ஐம்பது ஆண்டுகள் இருந்திருப்போம், அந்த எல்லா நிகழ்வுகளுக்கும் என்ன ஆனது? எல்லாம் போயிற்று, சரியா! விழித்துப் பாருங்கள் போதும்!

கே: குருதேவ், தேர்விலிருந்து தேர்வற்ற நிலைக்கு எப்படிப் போவது?

குருதேவ்: நன்மைக்கும் தீமைக்கும் இடையே எப்போதும் தேர்வு இருந்ததில்லை. தேர்வு எப்போதும் தீமைக்கும் அதிக தீமைக்கும் இடையே; அல்லது நன்மைக்கும் அதிக நன்மைக்கும் இடையே. இதைப் புரிந்துகொண்டால், தேர்வுக்கான வாய்ப்பே இல்லை என்பதைக் காண்பீர்கள்.

கே: சில நேரங்களில், உங்களுடன் இருக்க முடியாத காலத்தில், உங்கள் மீதான என் அன்பு எனக்குத் துயரத்தையே தந்திருக்கிறது. என் புத்தி நீங்கள் எங்கும் இருப்பதாகக் கூறினாலும், என் இதயத்தை என்னால் சமாளிக்க முடியவில்லை. நான் என்ன செய்வது?

குருதேவ்: தளர்வாகுங்கள்! ஏதாவது ஒரு வேலையில் உங்களை நீங்களே இடையறாது ஈடுபடுத்திக் கொண்டாலே போதும். இந்த உலகில் ஏராளமாக தொண்டு தேவைப்படுகிறது, எனவே அதில் ஈடுபடுங்கள்.

ஏக்கத்தை படைப்பாற்றலாக மாற்ற வேண்டும். ஏக்கம் ஒரு கிரியா ஊக்கியாக இருந்து உங்களிடமிருந்து சுறுசுறுப்பையும் படைப்பாற்றலையும் வெளிக்கொணர முடியும். எனவே இதை அதற்குப் பயன்படுத்துங்கள்.

கே: குருதேவ், என்னைப் பற்றியும் நான் செய்வது எல்லாவற்றையும் உங்களுக்குத் தெரியுமா என்று யோசித்துப் பார்கிறேன்?

குருதேவ்: என்ன நினைக்கிறீர்கள். நீங்கள் செய்யும் எல்லாவற்றையும் நான் ஏன் தெரிந்து கொள்ள வேண்டும்? எனக்குத் தேவையில்லை.

கே: எது சரியான வகை அரசாட்சி? ஆன்மீக அடிப்படையிலான அரசாட்சிக்குத் தகுந்த நேரமல்லவா இது?

குருதேவ்: ஆம், முதலாளித்துவம், பொதுவுடைமை, மதச் சார்பின்மை, என எல்லா தத்துவங்களும் நன்மை அளிக்க முடியாமல் போய்விட்டது. மனிதத்துவம் இல்லாமல் இந்த எல்லா தத்துவங்களும் தோற்றுத்தான் போகும். மனிதத்துவத்தை எப்படி ஏற்படுத்துவது? அதை ஆன்மிகம் மூலமாகவே ஏற்படுத்த முடியும்.

கே: இதயம் நம் உடம்பின் இடது பக்கமாக அமைந்திருக்கிறது. இதற்கு ஆன்மீக ரீதியான காரணம் ஏதாவது இருக்கிறதா?

குருதேவ்: நல்லது, இப்படி பல கேள்விகள் இருக்கிறது. மூக்கில் ஏன் இரண்டு துவாரங்கள் இருக்கிறது. ஏன் இரண்டு கண்களும் ஒரே இடத்தில இருக்கிறது, ஒன்று முன்னும் மற்றது பின்னாலும் இருந்திருக்கலாமல்லவா.

இதயம் ஏன் இடப்பக்கமிருக்கிறது என்று ஒருவர் எப்படிச் சொல்வது? ஏதாவது எங்காவது இருந்து தான் ஆக வேண்டும். உங்களுக்கு வேறு நல்ல கேள்வி கிடைக்கவில்லை போலிருக்கிறது.
வாழ்க்கையில் உள்ள மற்ற விஷயங்களைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டும். செய்ய வேண்டிய வேலைகள் பல இருக்கின்றன. உலகத்திற்கு உங்களிடமிருந்து அதிக கவனமும் அதிக தொண்டும் தேவைப்படுகிறது.