நம்பிக்கை வியாபாரத்தின் முதுகெலும்பு…….

9 - பிப்ரவரி – 2013 – பெங்களூர் - இந்தியா


மேடையிலும் சபையிலும் அமர்ந்திருக்கும் என் அன்புக்குரியவர்களே…

“ஒவ்வொரு துவக்கத்துக்கும் ஒரு முடிவு உண்டு. ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு துவக்கம் உண்டு.” இது ஒரு பழமொழி. எனவே இது இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவு அல்ல. இது ஒரு புதிய துவக்கமாகும். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட நீங்கள் அனைவரும் பேச்சு வார்த்தைகளை மகிழ்ச்சியோடு அனுபவித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். மேலும் சமுதாயத்துக்கு பெரிய அளவில் நன்மை அளிக்கக்கூடிய திட்டங்களைப் பற்றிய முடிவுக்கு வந்திருப்பீர்கள் என்றும் நம்புகிறேன்.

அவ்வப்போது நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஆலோசனைக் கூட்டங்கள் நம் வளர்ச்சித் திட்டங்களின் படி உறுதியாக செயல் படுவதற்கு, படிப்படியான முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும். இந்த இரண்டு நாட்களில், பல பாகங்களிலிருந்தும், உலகின் மற்ற நாடுகளிலிருந்தும் தொழிலதிபர்கள் ஒன்றாக வந்திருந்து ஆலோசனை நடத்தியது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான சமயம் மிகக் குறைவாக இருந்தது. பலர் தென் அமெரிக்கா, மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்திலிருந்து கூட்டத்தில் கலந்து கொள்ள விரும்பினார்கள்.

எல்லோரையும் ஒருங்கிணைந்து பெரிய கூட்டமாக நடத்த வெகு நாட்கள் முன்பே திட்டம் இட வேண்டும். வருங்காலத்தில் அப்படி ஒரு ஆலோசனைக் கூட்டத்திற்காக ஏற்பாடு செய்வோம். சமுதாயத்தில் நீதி நெறி முறைகளைக் கடைப்பிடிப்பதற்காக, நீங்கள் எடுத்திருக்கும் முயற்சிகள் பொது மக்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்திருக்கிறது. நம்பிக்கை என்பது வியாபாரத்தின் முதுகெலும்பு. நம்பிக்கை இல்லா விட்டால் வியாபாரம் நடக்காது. நம்பிக்கை குறையும் போது, அதை நிலை நிறுத்துவது நமது தலையாய கடமையாகும்.

உங்கள் இல்லத்துக்குப் போகும் வழியில் பனி உறைந்திருந்தாலோ அல்லது பாதை தடைப் பட்டிருந்தாலோ, ஒரு மண்வெட்டியை எடுத்துக் கொண்டு பனியை அகற்றி பாதையை சரி செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் கார் அதில் செல்ல முடியும். அப்படி உறைந்த பனியை வெகு காலத்துக்கு விட முடியாது.

அதே போல் பொது மக்களிடம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற்றால் தான் மக்கள் நம்மிடம் திரும்பி வருவார்கள். வியாபரிகளுள் நல்லவர்கள் இருக்கிறார்கள். நமக்கு வேண்டிய பொருட்களை நம்பகமான தரத்தில், சரியான விலையில் தருவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும்.
நான் ஐரோப்பிய நாடுகளில் பல முறை பிரயாணம் செய்திருக்கிறேன்.கடந்த இரண்டு வருடங்களில், மக்கள் வங்கிகளின் மேல் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டார்கள். எப்போதும் இப்படி நடந்ததில்லை. “வங்கிகளில் பணத்தை வைக்க நாங்கள் விரும்ப வில்லை” என்று சொன்னார்கள். எப்போது எந்த வங்கி திவால் ஆகும் என்று எங்களுக்குத் தெரிய வில்லை என்று என்னிடம் சொன்னார்கள்,

நான் சொல்வது ஏழை மக்களைப் பற்றியது. பணக்காரர்களைப் பற்றி அல்ல. சாதாரண மக்கள், அல்லது நடுத்தர வர்க்கத்தினர், கீழ் நடுத்தர மக்களின் நிலை இது. எனவே இவர்களின் நம்பிக்கையை திரும்பப் பெறுவது, சமூகத்தில் நெறிமுறைகளை நிலை நிறுத்துவது, மனித நேய பண்புகளை வளர்ப்பது மிகவும் அவசியம்.

தனிநபர் முதலில் நடக்கும் தொழில் சார்ந்த பொருளாதாரம், மக்கள் கூட்டுறவில், அரசு முதலில் நடக்கும் தொழில் சார்ந்த பொருளாதாரம், மதச்சார்பற்ற அரசாங்கம் எல்லாமே தோல்வி அடைந்திருக்கின்றன. எங்கு மனித நேயம் இல்லையோ அந்த அமைப்பு செயல் பட முடியாது.
கம்யூனிஸம் தோல்வி அடைந்து விட்டது. தனிநபர் நடத்தும் வியாபாரமும் தோல்வி அடைந்திருக்கின்றது. மதச் சார்பற்ற அரசுகளும் தோல்வி அடைந்திருக்கின்றன. ஏனென்றால் மனிதநேய உணர்வுகளை மதிக்க அரசாங்கம் தவறி விட்டது. சமூகம் நல்ல படி செயல் பட மனித நேய உறவுகளை வளர்ப்பது அவசியம்.

இப்படிப்பட்ட ஆலோசனைக் கூட்டங்களில், சமூக நலத்தைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு தொழிலதிபரும் சமுதாய வளர்ச்சிக்கான பொறுப்புடன் உறுதியாக இருந்து தன் வியாபாரத்தை நடத்த வேண்டும். இது மக்களிடையே ஒரு புதிய பரிமாணத்தில் நம்பிக்கையை வளர்த்து எல்லோரும் மகிழ்ச்சியாக வாழ வழி வகுக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன் வரை ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிட, ஜிடிபி (நாட்டின் உற்பத்திப் பொருள்களின் மொத்த மதிப்பீடு) பற்றி மட்டும் பேசினார்கள். இன்று ஐக்கிய நாடுகளின் சபையில், ஜிடிஹெச் ( மக்களின் மகிழ்ச்சியின் மொத்த மதிப்பீடு) பற்றிப் பேசுகிறோம். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மக்களின் மகிழ்ச்சியே நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். ஆன்மீகத்தின் குறிக்கோள் உங்களிடமிருந்து அபகரிக்க முடியாத மகிழ்ச்சியைத் தருவது தான்.
ஆன்மீகத்தினால் வரும் மகிழ்ச்சி எப்போதும் குறைவதில்லை. அது உங்களுக்கு மிகவும் தேவையான சக்தியை அளித்து, வாழ்வில் வரும் எந்த சோதனைகளையும், புன் முறுவலோடு எதிர் கொள்ளச் செய்யும். உங்கள் இதயம் மேலும் கருணையைக் காட்டும். அழிவை விலக்கி, எதையுமே ஒரு ஆக்க பூர்வமாக மாற்றும் திறமையை நமக்கு அளிக்கும். இன்றைய தினத்தில் உலகில், ஆன்மீகத்தின் பங்கு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் பார்க்கலாம்.

மிகவும் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்த மக்களிடையே, குழந்தைகள் இன்று வன்முறையில் ஈடுபடுவதைக் காண்கிறோம். ஒரு சிறுவன் துப்பாக்கியை எடுத்து பலரைக் கொன்று விட்டான். இதன் காரணம், கற்பனை உலகுக்கும், நிஜவாழ்வுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை அவனால் பார்க்க முடியாதது தான். இன்று கம்ப்யூடரில், இளைஞர்களுக்காக பல வன்முறை விளையாட்டுக்கள் இருக்கின்றன. விளையாட்டின் போது துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்ட மனிதர்கள் மீண்டும் எழுவதாகச் சித்தரிக்கிறார்கள். குழந்தைகளுக்கு நிஜ வாழ்வில் அவ்வாறு சுடும் போது மனிதர்கள் மீண்டும் எழுந்து நடக்க முடியாது என்று தெரிவதில்லை.
திருப்தி இன்மை, நம்பிக்கை இன்மை, மனச் சிதைவு என்கிற விஷயங்களை நாம் மிக ஜாக்கிரதையாக அணுக வேண்டும். 

ஆன்மீகத்தில் இதற்கான விளக்கங்கள் கிடைக்கும். ஆன்மீகம் வன்முறையை வேரோடு களைந்து விடும் சக்தி வாய்ந்தது. ஆன்மீகம் மக்களுக்கு ஆத்ம சாந்தி அளிக்கிறது. நாம் உலக அமைதி பற்றிப் பேசுகிறோம். உனக்கு மன அமைதி இல்லாத போது, உன் குடும்பத்தில் அமைதி இல்லாத போது, உன் சமூகத்தில், சுற்றுப் புறத்தில் அமைதி இல்லாத போது, நீ எப்படி உலக அமைதியை நாட முடியும்? அதை அடைவது முடியாது என்றே சொல்லலாம்.
ஆகவே நாம் ஒவ்வொரு தனி மனிதனும் எப்படி அமைதி அடைவது என்று பார்க்க வேண்டும். அவன் மற்றவர்களோடு நல்ல முறையில்  நடந்து கொள்ள வேண்டும். அவன் செயலில் கருணை வெளிப்பட வேண்டும். எல்லோருமே கருணை உடையவர்கள் தான். சமூகத்தில் அதை எப்படிக் காட்டுவது என்று தெரிய வில்லை. சேவையின் மூலம் ஒருவருடைய கருணை வெளிப்படும். இந்த வழியில் நாம் வன்முறைக்கு ஒரு முடிவு கட்டலாம்.

பெரிய தொழிலகங்களுக்கு இந்த செயல் முறையில் பெரிய பங்கு இருக்கிறது. அவர்களால், இந்த சமூகத்தில் வன்முறையை ஒழிக்க முடியும். நம்மால் என்ன செய்ய முடியும் என்று எண்ண வேண்டாம். “வியாபாரத்திலோ, ஆன்மீகத்திலோ எனக்கு என்ன வேலை?” என்று திரு. ஆரண்டேகர் இன்று என்னிடம் கேட்டார்.

“உங்களால் நிறைய செய்ய முடியும். ஏனென்றால் நீங்கள் ஒரு போலீஸ் அதிகாரியாக இருக்கிறீர்கள்” என்று அவரிடம் சொன்னேன். எங்கு அமைதி நிலவுகிறதோ, அங்கு தான் செல்வவளம் பெருக முடியும். எந்த சமூகத்தில் சட்ட ஒழுங்கு சரியாக இருக்கிறதோ, அங்கு தான் வியாபாரம் நன்முறையில் நடக்க முடியும். சட்ட ஒழுங்கு சரியில்லா விட்டால் வியாபாரம் நடத்த முடியாது. எனவே கர்நாடக தொழிலதிபர்கள் சங்கம் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியை இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பேச அழைத்தது மிகவும் சரியான செயல்.

நேர்மை எல்லாத் துறைகளுக்கும் அவசியம். நல்ல நேர்மையான அரசியல்வாதிகள், மக்களுக்கு சேவை செய்யும் அதிகாரிகள் நம் சமூகத்துக்கு அவசியம். மக்களுக்கு அது தெரியும். பலர் பதவிக்கு வந்த பின் சேவையை மறந்து தன்னலத்தோடு வாழ்கிறார்கள். ஆனால், நேர்மையோடு தன்னலமற்ற சேவை மனப்பான்மையோடு செயல்படும் பலர் இங்கு மேடையிலும், பார்வையாளர்களிடையேயும் இருக்கிறார்கள். ஒரு நல்ல அமைதியான உலகை உருவாக்க, திட சித்தத்தோடு செயல் புரிகிறார்கள். ஆன்மீகம் என்பது இது தான். எல்லோருடைய முகத்திலும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். ஒரு புன்முறுவல் இருக்க வேண்டும். நம் எல்லோருடைய குறிக்கோளும், இவ்வுலகில் பலர் முகத்தில் புன்முறுவலைக் காண்பதாக இருக்க வேண்டும்.
மீண்டும் உங்கள் அனைவரையும் வாழ்த்தி விடை பெறுகிறேன்..