உலக மாநாட்டில் விளையாட்டுப் போட்டிகளில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள்...

வெள்ளிக்கிழமை, 19-09-2014

எஃப் ஐ எஃப் ஏ தலைமை அலுவலகம், சூரிச், ஸ்விட்சர்லாந்து.



(விளையாட்டுப் போட்டிகள், அரசியல், வியாபாரம், கல்வித்துறைகளில் பணிபுரியும் உயர் அதிகாரிகள் மற்றும் பல அரசு சாரா நிறுவனங்களை சேர்ந்தவர்களும்,ஸ்விட்சர்லாந்து நாட்டிலுள்ள சூரிச் நகரில் எஃப் ஐ எஃப் ஏ தலைமை அலுவலகத்தில் ஒன்று கூடினார்கள். சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் விளையாட்டுப் போட்டிகளின் பங்கு என்ன என்று வரையறுப்பதற்காகவும், நடைமுறையில் இருக்கும் நெறிமுறைகளைப் பின்பற்றி நடக்கும் விளையாட்டு போட்டிகளின் சிறந்த வழக்கங்களை உதாரணத்துடன் எல்லோருடனும் பகிர்ந்து கொள்வதற்காகவும் இம்மாநாடு கூட்டப்பட்டது.

டபிள்யூ எஃப் ஈ பீ யின் நிறுவனர்களில் ஒருவரான குருதேவர், “விளையாட்டுப் போட்டிகளை நாம் அமைதியை நிலைநாட்டவும், சமரசத்துக்காகவும் பயன்படுத்த முடியும்“ என்று எடுத்துரைத்தார். குருதேவரின் பேச்சு பின் வருமாறு)

இங்கு கூடியிருக்கும் பெண்மணிகளுக்கும்,கனவான்களுக்கும் காலை வணக்கம். விளையாட்டுப் போட்டிகள், வியாபாரம், அரசியல் துறைகளில் சாதனை படைத்தவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு உள்ள நல்லன்பர்களின் மத்தியில், இம் மாநாட்டில் கலந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். விளையாட்டுப் போட்டிகள் நம் வாழ்வில் இணைந்திருக்கும் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகிறது. ஒரு குழந்தை பேசத் துவங்குவதற்கு முன்பே விளையாட ஆரம்பிக்கிறது. மொழி பின்னால் வருகிறது.விளையாட்டு முன்னால் வருகிறது. விளையாட்டு என்பது நம் உள்ளார்ந்த இயல்பாக இருக்கிறது. அதனால் தான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற முதியவர்கள் கூட காப்பி குடித்துக் கொண்டே கால்பந்து விளையாட்டை விரும்பிப் பார்க்கிறார்கள். வாழ்நாள் முழுதும் மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். விளையாட்டு என்பது வாழ்நாள் முழுதும் தொடர்கிறது என்று நினைக்கிறேன். விளையாட்டு நம் வாழ்க்கையை அதிக சுவையாக்குகிறது.

உலக அளவில் நாடுகளிடையே விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்யும் நிறுவனங்கள் நாடுகளுக்கிடையே அமைதியை நிலை நாட்டுவதிலும் பங்கு பெற்றால், சொர்க்கத்தை நாடி துப்பாக்கி ஏந்தி வன்முறையில் ஈடுபடும் இளைஞர்கள் கால்பந்து விளையாடுவார்கள். இன்று உலக சுகாதார அமைப்பின் (டபிள்யூ எச் ஓ) கருத்துப் படி உலகை எதிர் நோக்கும் ஒரு பெரிய பிரச்சினை பெரும்பாலான மக்கள் மன உளைச்சலால் பாதிக்கப்படுவார்கள் என்பது தான். மன உளைச்சல், மன அழுத்தம், நெறி முறையற்ற ஆரோக்கியமில்லாத பழக்க வழக்கங்கள் இளைஞர்களிடையே இருக்க காரணம், வாழ்க்கையில் உற்சாகமில்லாமல் இருக்க காரணம், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது தான். விளையாட்டுப் போட்டிகள் சமுதாயத்திலும், தனி மனிதர் வாழ்விலும் மகிழ்ச்சி தர வல்லவை. விளையாட்டு வீரர்கள் ஒரு உதாரணமாக வாழ்ந்து பலருக்கு ஊக்கமளிக்கிறார்கள். விளையாட்டு வீரர்கள் நெறிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் பலர் ஏமாற்றமடைவார்கள். போட்டிகளில் வெற்றி பெறுவதற்காக ஸ்டைராய்டு எடுத்துக் கொள்வது, முன்னதாகவே யார் வெற்றி பெறுவது என்று தீர்மானித்துக் கொண்டு விளையாடுவது ( மாட்ச் ஃபிக்ஸிங்) விளையாட்டுக் குழுவில் சேர்வதற்காக லஞ்சம் கொடுப்பது போன்ற வழக்கங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

லஞ்ச ஊழல் சிறிய அளவில் துவங்கி பெரிதாகி விடும். பெரிய குற்றங்களில் கொண்டு செல்லும். இது சமுதாயத்துக்குச் செய்யும் அநீதியாகும். லஞ்ச ஊழலில் ஈடுபடுபவர்களுக்கு இது ஒரு பெரிய குற்றமாக தோன்றுவதில்லை. அங்கீகரிக்கப்பட்ட வழக்கம் என்று நினைக்கிறார்கள். எனவே அப்படிப் பட்டவர்களை விழிப்புணர்வடையச் செய்ய வேண்டும். ஸ்டைராய்டு ஊசி போட்டுக் கொண்டு வெற்றி பெறுபவர்கள் பல மக்களை ஏமாற்றுகிறார்கள். மாட்ச் ஃபிக்ஸிங் செய்பவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள். வாழ்வில் மேலும் பல தீயசெயல்களை செய்கிறார்கள். சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேற் சொன்ன தீய வழிகளில் மக்களை ஏமாற்றக்கூடாது. அப்படி செய்தால் தான் விளையாட்டுப் போட்டிகள் மக்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும்.

விளையாட்டுப் போட்டிகளில் நெறிமுறைகள் பின்பற்றப்படும் போது கோடிக்கணக்கான மக்கள் உத்வேகத்தைப் பெறுவார்கள். மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களுடைய வாழ்க்கையிலும் நெறிமுறைகளைக் கடைப் பிடிப்பார்கள். இப்போது விளையாட்டுப் போட்டிகள் பெரியவர் சிறியவர் என்ற வித்தியாசமில்லாமல் பலதரப்பட்ட வயதுள்ளவர்கள், பல மொழிகளை பேசுபவர்கள், பல மதங்களை சார்ந்தவர்கள், சமூக பொருளாதார நிலையில் ஏற்றத் தாழ்வுள்ளவர்கள் அனைவரையும் ஒன்று சேர்ப்பது மட்டுமல்லாமல் உலக அமைதிக்கும் காரணமாகிறது. விளையாட்டு நிறுவனங்கள் உலக அமைதிக்காக உழைக்கும்போது, ஆயிரக்கணக்கான வழி தவறிய இளைஞர்கள், துப்பாக்கி எடுப்பதைக் கைவிட்டு கால் பந்து விளையாட முன் வருவார்கள். இளைஞர்களின் சக்தி விளையாட்டுப் போட்டிகளில் ஆக்க பூர்வமாக செயல்படும் போது சமூகத்தில் நிலவும் வன்முறை மற்றும் பல வகையான குற்றங்கள் தடுக்கப்படும். இதைப் பற்றி நாம் அனைவரும் சிந்திப்பது அவசியம். இளைஞர்களின் சக்தியை ஆக்க பூர்வமான திசையில் திருப்ப வேண்டும். இதற்கு விளையாட்டுப் போட்டிகள் மிகச் சிறந்த சாதனமாக இருக்கும். இளைஞர்களின் வாழ்வில் விளையாட்டை விடச் சிறந்தது வேறு என்ன இருக்க முடியும் ?

இளைஞர்களுக்கு மன உளைச்சல், மன அழுத்தம், ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்கள் வரக் காரணமே விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது தான். அவர்களில் பலர் வாழ்வில் உற்சாகமில்லாமல் இருப்பதற்கு காரணமும் இதுவே. எனவே விளையாட்டுப் போட்டிகள் தனி மனிதருக்கும், சமூக அளவிலும் மகிழ்ச்சி தரும் சாதனமாக விளங்குகின்றன. விளையாட்டு வீரர்களும், போட்டிகளை நடத்துபவர்களும், போட்டிகளை விரும்பிப் பார்க்கும் பொது மக்களும் கடைப் பிடிக்க வேண்டிய நெறி முறைகளை முறையாக பட்டியலிட்டு அவைகளை அமல் படுத்துவதில் நம் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

மூன்று C (Connectivity, Commitment and Context to Life) மூலமாக இதைச் செய்ய முடியும்.
·         கனெக்டிவிடி – தொடர்பு
·         கமிட்மெண்ட் – சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற மன உறுதி
·         காண்டெக்ஸ்ட் டு லைஃப் – வாழ்வில் ஒரு உயர்ந்த லட்சியம்.

வாழ்வில் ஒரு உயர்ந்த லட்சியம் இருந்தால், விளையாட்டு வீரர்கள் வெற்றி தோல்விகளை பொருட்படுத்த மாட்டார்கள். விளையாட்டு வீரர்கள் முன்னுதாரணமாக இருந்து மக்களுக்குக் கல்வி புகட்டும் பொறுப்பை ஏற்கும்போது, மக்களுக்கு சேவை செய்யும்போது திருப்தி அடைவார்கள். எனவே சமுதாய நலத் திட்டங்களில், அமைதிப் பேச்சு வார்த்தைகளில் விளையாட்டு வீரர்களை ஈடுபடுத்துவது மிகவும் பயனளிக்கும். இதனால் விளையாட்டு வீரர்களும் பயனடைவார்கள். ஏனென்றால், வாழ்க்கைக்குத் தேவையான மக்கள் தொடர்பு இருந்து கொண்டேயிருக்கும். ஒருவர் ஆரம்பநிலை விளையாட்டு வீரராக இருந்தாலும், மிகவும் தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் வீரராக இருந்தாலும் (ஆண் பெண் இரு பாலரும்), வாழ்வில் ஒரு உயர்ந்த நோக்கத்துக்காக உழைப்பதில் திருப்தி அடைய முடியும். இல்லாவிட்டால், பல முன்னாள் விளையாட்டு வீரர்கள் மன உளைச்சலால் அவதிப்படுவதை நான் பார்க்கிறேன். அவர்கள் முன் போல திறமையாக விளையாட முடியாத போது மன உளைச்சல் அடைகிறார்கள். தனியாக இருப்பதை விடுத்து, உயர்ந்த நோக்கத்தோடு, சமூக காரியங்களில் மற்றவர்களுக்காக உழைக்கும்போது மன உளைச்சல் வராது.

முன்னாள் விளையாட்டு வீரர்கள், விளையாட்டுப் போட்டிகளில் நெறி முறைகளைப் பின் பற்ற உதவ முன் வர வேண்டும். அப்படிச் செய்தால் விளையாட்டுப் போட்டிகளின் கௌரவத்தை மேம் படுத்த முடியும். உலகம் முழுதும் அதை பறை சாற்றி மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்க முடியும். உலக மக்கள் அனைவரையும் விளையாட்டுப் போட்டிகள் மூலம் ஒன்று சேர்க்க முடியும். போர் நிகழும் நாடுகளில் விளையாட்டுப் போட்டிகள் போரை நிறுத்தி மக்களை ஒன்று சேர்க்க உதவும்.

நான் இந்தியாவிலிருந்து வருகிறேன். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், விளையாட்டுப் போட்டிகளின் போது ஒருமைப்பாட்டைக் காணலாம். இரு நாடுகளின் கிரிக்கெட் வீரர்களும் மிகுந்த உற்சாகத்தோடு விளையாடுவார்கள். விளையாட்டுப் போட்டிகளுக்கு, பல்வேறு விதமான மனிதர்களை, சமூகங்களை ஒன்றிணைக்கும் காந்த சக்தி உள்ளது. வாழும் இவ்வுலகம் மேலும் மகிழ்ச்சியாக வாழத் தகுந்த இடமாவதற்கு விளையாட்டுப் போட்டிகள் காரணமாக இருக்கும். விளையாட்டு வீரர்களை சமூக சேவையில் ஈடு படுத்தி விளையாட்டு மட்டுமல்லாமல், சமுக நல மேம்பாட்டில் அவர்களுடைய பங்கை உணரச் செய்வது அவசியம். இது விளையாட்டு வீரர்களுக்கும் பயனுடையதாக இருக்கும். அவர்கள் விளையாட்டுப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், சமூகத்தோடு இருக்கும் தொடர்பு அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.

மகிழ்ச்சி என்பது நல்வாழ்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது.விளையாட்டுக்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது. இசை, கலை, விஞ்ஞானம் எல்லாமே நம் வாழ்வை சிறப்பிக்கின்றன. இருந்தாலும் விளையாட்டுப் போட்டிகள் நம் அனைவரின் வாழ்க்கைக்குத் தேவையான மகிழ்ச்சியை அளிப்பதில் இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இந்த உலக விளையாட்டுப் போட்டிகளின் உச்சி மாநாட்டில், விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய நெறி முறைகளைப் பற்றிக் கலந்து பேசித் தீர்மானிப்பது ஒரு நல்ல துவக்கமாகும். உலகம் முழுதும் மக்களிடையே இந்த நெறி முறைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இரண்டு விஷயங்கள் மிகவும் முக்கியமானவை.

·         நடுநிலைமை தவறாமை மற்றும் விளையாட்டு விதிகளை மீறாமல் நெறி முறைகளைப் பின் பற்றுவது.
·         உலக அமைதிக்காக, விளையாட்டுப் போட்டிகளை ஒரு மார்க்கமாகப் பயன்படுத்துவது.  

இன்றைய உலகில் வன்முறை மற்றும் பகைமையால் பல நாடுகள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. எனவே மேற்கூறிய நெறி முறைகளைப் பின் பற்றும் போது விளையாட்டுப் போட்டிகளிலும் வன்முறைச் சம்பவங்களை குறைக்க முடியும். ஏனென்றால் விளையாட்டுப் போட்டிகள் நன்முறையில் நடக்கும்போது எல்லோருடைய கவனமும், நமது லட்சியமான உலக அமைதியைப் பற்றியதாகவே இருக்கும். பல் வேறு நாடுகளின் பல் வேறு இன மக்களிடையே ஒற்றுமை மற்றும் அமைதிக்கு விளையாட்டுப் போட்டிகள் உறுதுணையாக இருக்கும்.

துரதிஷ்டவசமாக போரை விளையாட்டுப் போட்டிகள் போலவும், விளையாட்டுப் போட்டிகளை போர் போலவும் நடத்துகிறோம். இந்த நிலை மாறுவது அவசியம். மாநாட்டில் கலந்து கொள்ளும் அறிஞர்கள், விளையாட்டு விரும்பிகள் எல்லோரும் ஒரு மனதாக விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் கடைப் பிடிக்க வேண்டிய நெறி முறைகளைத் தீர்மானித்து, உலகில் எல்லா மூலை முடுக்குகளுக்கும் இந்த செய்தியை எடுத்துச் செல்வார்கள் என்று நம்புகிறேன்.