ஆசைகளுக்கு முடிவே இல்லை

வெள்ளி, செப்டம்பர் 5, 2014


(குரு உத்சவ் திவாஸ் என்ற பதிவின் தொடர்ச்சி)

கேள்வி பதில்கள்

குருதேவ், நான் உங்கள் பக்தராக கடந்த 15 வருடங்களாக இருந்து வருகிறேன், வாழ்கை மிக அற்புதமாக இருக்கிறது. ஆனால், யோகப் பயிற்சி, தொண்டு, சத்சங்கம், சித்தி மற்றும் மோக்ஷம் இவைகளால் எனக்கு என்ன கிடைக்கும் என்ற கேள்வி அடிக்கடி வருகிறது. அடுத்து என்ன வரும்?

குருதேவ்: இந்த எளிய சூத்திரத்தை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். மகிழ்ச்சி மற்றும் வசதிகளை தேடி அதன் பின்னே ஜுர வேகத்தில் ஓடாதவர்களுக்கு மோக்ஷம் கிடைக்கும். மேலும், அந்த மோக்ஷத்திற்கு கூட ஏங்காதவர்கள் இறைவனின் அன்பையும் பக்தியையும் பெறுகிறார்கள். அன்பு என்பது கிடைத்துவிட்டால், மற்ற அனைத்தையும் அடைந்தவராகிறீர்கள். அதன் பிறகு நீங்கள் அடைவதற்கு ஏதுமில்லை. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்களுக்குக் கிடைத்த அன்பையும் மகிழ்ச்சியையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது மட்டுமே. உங்களுக்கு என்ன வேண்டும்? உங்கள் தேவைகளுக்கும் ஆசைகளுக்கும் முடிவேயில்லை. செல்வத்தின் மீதுள்ள ஆசைக்கு முடிவே இல்லை. நீங்கள் பணக்காரராக ஆகி இரண்டு கார் வாங்குகிறீர்கள், பிறகு நான்கு கார்கள் வாங்க வேண்டும் என்று ஆசை கொள்கிறீர்கள், நான்கு பங்களாக்கள் தேவைப்படுகிறது. உங்கள் வியாபாரம் மேலும் மேலும் விரிய வேண்டும் என்று ஆசை கொள்கிறீர்கள். இதற்கு ஏதும் முடிவு உள்ளதா? செல்வத்தின் பின்னே ஓடும் ஒருவர் மேலும் மேலும் செல்வம் சேர்க்க வேலை செய்து, இறுதியில் ஓய்ந்து இறந்தே போகிறார். அவருடைய இறப்புக்கு பிறகு அவருடைய வாரிசுகள் அந்த செல்வதிற்காக சண்டை போடுகிறார்கள். இது புத்திசாலித்தனமல்ல. உங்கள் வியாபாரத்தை வளர்த்து நன்றாக இருக்க வேண்டும் தான், ஆனால் அது மட்டும் உங்கள் வாழ்கையின் ஒரே இலக்கு என்றால் வாழ்கை பொருளற்றதாகி விடுகிறது.

குருதேவ், எல்லாவற்றையும் விவேகக் கண் கொண்டு பார்த்தால், எல்லாமே மாறி கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. நமது பொறுப்புகளையும் மாற்றிக் கொள்ள முடியுமா?

குருதேவ்: ஆம், எப்போது அது நடக்கும்? நமக்குள் விவேகம் விழித்துக் கொள்ளும் பொழுது, நாம் ஏற்றுகொண்ட பொறுப்புகளும் சத்தியங்களும் தவறு, அவற்றை நம் அறியாமையினாலேயே செய்தோம் என்பதை உணர்கிறோம். ஏற்றுக்கொண்ட பொறுப்பு எந்த நன்மையையும் அல்லது பலனையும் தராத போது, நீங்கள் உங்கள் பொறுப்பை மாற்றிக் கொள்ளலாம். மேலும், இந்த மாற்றத்தை உங்களுக்கு நீங்களே செய்து கொள்ள முடியாது. இதற்குத் தான் நீங்கள் ஒரு குருவிடமோ அல்லது ஒரு ஞானவானிடமோ சென்று உங்கள் பிரச்சினையை கூற வேண்டும். இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது நான் அறியாமையில் இருந்தேன் என்பதை அவரிடம் கூறுங்கள். இது தவறு இதனால் எந்தப் பலனும் இல்லை என்பதை இப்போது உணர்ந்தேன் என்று கூறுங்கள். இதிலிருந்து மீள உங்கள் உதவியும் உங்கள் கருத்தும் தேவை என்று வேண்டுங்கள்.
ஒரு குருவோ அல்லது ஒரு ஞானவானோ இதைப் புரிந்து கொண்டு நீங்கள் அதிலிருந்து மீள உங்களுக்கு வழி கூற முடியும். 

நீங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பு சரியா தவறா என்று அவர்களால் எடைபோட்டு அறுதியிட்டுக் கூறமுடியும். அல்லது உங்கள் வசதிக்காக நீங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பிலிருந்து தப்பி ஓட முயல்கிறீர்களா என்று சரியாக கூறமுடியும். உதாரணமாக, இப்போது உங்களுக்குத் திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள், திடீரென்று இந்தப் பொறுப்பிலிருந்து தப்பி ஓடி சந்நியாசியாக நினைக்கிறீர்கள். ஒரு குருவிடமோ அல்லது ஒரு ஞானவானிடமோ சென்று நீங்கள் சந்நியாசியாக விரும்புவதாக கூறினால் அவர்கள் அதை உடனடியாக மறுத்து அப்படி செய்யக் கூடாது என்று கூறுவார்கள். உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி, குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து, அனைத்துக் கடைமைகளையும் முடித்தபின் சந்நியாசம் பெற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்துவார்கள். உங்கள் கடமைகளிலிருந்தும் பொறுப்புகளிலிருந்தும் தப்பிக்க விரும்பினால் அது சரியல்ல.ஆனால் நீங்கள் ஏற்றுக்கொண்ட பொறுப்பினால் உங்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்தப் பயனுமில்லை என்று நீங்கள் உணர்ந்தால், அதை விட்டுவிடுவது பற்றி உங்கள் குருவிடமோ அல்லது உங்களுக்கு நெருங்கியவரிடமோ ஆலோசனை கேளுங்கள்.
  
குருதேவ், நாம் அனைவரும் ஒரே பேருணர்வின் அங்கங்கள் என்றால், ஏன் அந்த ஒரே பேருணர்வின் குணங்கள் ஒவ்வொரு ஆத்மாவுக்கும் மாறுபடுகிறது?

குருதேவ்: ஆம் மாறுகிறது. சமோசா, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகியவற்றை செய்ய ஒரே மாவைத்தான் பயன்படுத்துகிறீர்கள். ஒரே மாவைக்கொண்டு செய்தாலும் இம்மூன்றும் வேறு வேறு. இந்தச் சின்னஞ்சிறிய மாவுக்கே இத்தனை வித்தியாசம் கிடைக்கும் போது, பலவித விதமான மக்கள் இருப்பதில் ஆச்சரியமே இல்லை.முடிவில்லாத இந்தப் பேருணர்வும் வகைகள் கொண்டதே.
வைரமும் ஒரு கரித்துண்டும் கரிமம் என்னும் ஒரே பொருளால் ஆனது, ஆனாலும் அவை வேறு வேறு விதமாய் இருப்பதைப் பாருங்கள். அமைப்பிலும் வேதியல் குணத்திலும் இரண்டிற்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனாலும் அவற்றினிடையே உள்ள ஏதோ ஒரு வித்தியாசம் அவற்றை வேறுபடுத்திக் காண்பிக்கிறது. அதைப் போலவே, ஒரு தளத்தில்,பேருணர்வு ஒன்று தான், வேறு ஒரு தளத்தில் அவை மிகவும் வித்தியாசம் கொண்டது. மக்களுக்கு மக்கள், இடத்திற்கு இடம், ஏன் நிறுவனத்திற்கு நிறுவனம் அது மாறுபடுகிறது.
  
குருதேவ், ஆனந்தத்தின் பிறப்பிடம் எங்குள்ளது?

குருதேவ்: என்னிடம் கேட்டால், அது எல்லாவிடத்திலும் உள்ளது என்றே கூறுவேன். மேலும் கேட்டால், அது இங்கே உங்களுக்குள்ளேயே இருக்கிறது என்று கூறுவேன்.

குருதேவ், சரியான குருவை நான் கண்டுகொண்டேன் என்று உணர்கிறேன். சரியான சீடரை நீங்கள் கண்டுகொண்டதாக உணர்கிறீர்களா?

குருதேவ்: இப்படியெல்லாம் யோசிக்க குருவிற்கு ஏது நேரம்? ஒரு குரு தன்னுடனேயே எப்போதும் பேரானந்தத்தில் திளைத்திருக்கிறார் (சிரிப்பு). ‘என்னிடமிருந்து என்ன வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள்’, என்றே ஒரு குரு எப்போதும் கூறுவார்.

உங்கள் முன் ஒரு ஆழமான நதி ஓடிக்கொண்டிருப்பதை பாருங்கள். சிலருக்கு அதில் பாதத்தை நனைத்தால் போதும் வேறு ஏதும் தேவையில்லை. சிலருக்கு ஒரு முழுக்கு போட வேண்டும். சிலருக்கு அதில் நீந்த வேண்டும், சிலருக்கு அதில் ஆழமாக உள்ளே ஒரு குவளை தண்ணீர் எடுக்க வேண்டும். ஒரு கடல் தன்னிடமிருந்து முத்தை எடுத்துக் கொள்ள சொல்வதில்லை, உப்பை எடுத்துக் கொள்ள சொல்வதில்லை. கடலிலிருந்து முத்து வேண்டுமா? எடுத்துக் கொள்ளலாம். உப்பு வேண்டுமா? எடுத்துக்கொள்ளலாம் அல்லது மீன் வேண்டுமா? எடுத்துக் கொள்ளலாம். அல்லது கச்சா எண்ணெய் வேண்டுமா? அதையும் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு விடுதலை வேண்டுமா? அதையும் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கடல் கடலே. இதை உங்களுக்குள் ஆழ்ந்து சிந்தியுங்கள்.

சுமார் 20 – 25  வருடங்களுக்கு முன் ரிஷிகேஷில் ஒரு மகானை சந்திக்க சென்றிருந்தேன். நான் அவரை சந்தித்த போது அவர் என்னை வெகுவாகப் புகழத் தொடங்கி விட்டார். நான் கூறினேன், ‘மஹராஜ், என்னிடமிருக்கக் கூடிய குறைகளை என்னால் காண முடியவில்லை. அவற்றை பற்றி நீங்கள் எனக்குக் கூறுங்கள், அவற்றை எப்படிக் களைவது என்றும் கூறுங்கள்.’ அவர் சிரித்தவாறு கூறினார், ‘நான் எதற்க்கு சொல்ல வேண்டும். வாழ்க்கையில் உனக்குத் துன்பம் நேரும் போது தானாகவே தெரிந்து கொள்வாய். உன்னுடைய இயல்பை பற்றி மட்டுமே என்னால் கூறமுடியும். நீ என்னவோ அதை மட்டுமே என்னால் விவரிக்க முடியும்.’ இது சிந்திக்கத் தக்கது, உண்மையும் கூட. ஞானவான்கள் யாரைப் பற்றியும் இழிவாக எதையும் கூறமாட்டார்கள். ‘நீ ஒரு சரியான கழுதை.’ என்று யாரை பற்றியும் கூறமாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அப்படி உண்மையிலேயே ஆகிவிடக்கூடும்.

ரிஷினாம் யதா-சித்தனம் அர்த்த வாச-அனு தாவதே’, என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், ஒரு ஞானவான் அல்லது ஒரு சித்தரின் வார்த்தைகள் எதுவானாலும் அதன் பொருள் அதன் பின்னேயே வரும் என்பதே, அதாவது அந்த வார்த்தைகள் உண்மையாகவே நடந்துவிடும் என்பதே. அவர்கள், ‘நீ மிக அருமையானவன்’, என்றால், உங்களுக்குள் நலமே மலரும். ஆனால், அவர்கள், ‘நீ ஒரு கழுதை’, என்றால் நன்றாக இருப்பவர் கழுதையாக மாற தொடங்கி விடுவார். இது ஒரு உயர்ந்த முதிர்ந்த ஞானம். எனவே ஒரு ஞானவான் அல்லது சித்தர் உங்கள் நலன்களை மட்டுமே கூறுவார். இதற்கு கீழான மக்களே விமர்சிப்பதிலும் தண்டிப்பதிலும் ஈடுபடுவார்கள். சில இடங்களில் அதுவும் தேவை தான். பிடிவாதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ளாத மக்களுக்கு அப்படிப்பட்ட கடுமையான வழிகளும் தேவைப்படுகிறது. மற்றவர்களை ஏசுபவர்களும் விமர்சிப்பவர்களும் தீயவர்கள் என்று நான் கூறவில்லை. ஏதோ காரணத்தினாலேயே அவ்வாறு செய்கிறார்கள் அல்லது உங்களைத் திட்டுவதின் மூலமும் விமர்சிப்பதின் மூலமும் உங்கள் தீய வினைகளைக் களைகிறார்கள் போலும். மேலும், அப்படிப்பட்ட கடுமையான மொழிகள் தான் உங்களைப் போன்றவர்களுக்கு புரியக்கூடும்.உதாரணமாக, திமிரும் அகங்காரமும் கொண்டவர்களுக்கு மென்மையான மொழிகள் புரிவதில்லை. அகங்காரம் கொண்ட முட்டாளே என்று யாராவது அழைத்தால் அதை கவனித்து உணர்வார்கள். ஆனால் இது வேறு வழி, ஒரு ஞானவானின் வழிமுறை இதுவல்ல. 

குருதேவ், பக்தியில் தர்க்கரீதியாக ஏதும் இல்லை. சில நேரங்களில், ஞான உரைகளைக் கேட்கும் போது மனம் அமைதியிழந்து வேதனை கொள்கிறது. உங்கள் மீதுள்ள பக்தியில் திளைக்க விழைகிறேன். புத்தியை உபயோகிக்காமல் ஒருவாரால் மோட்சம் பெற முடியுமா?

குருதேவ்: இந்த கேள்வியைக் கேட்பதற்கு உங்கள் புத்தியையும் தர்க்கத்தையும் பயன்படுத்தினீர்கள் அல்லவா? இந்தக் கேள்வியை கேட்டதாலேயே நீங்கள் உங்கள் புத்தியை உபயோகித்து தர்க்க ரீதியாக சிந்தனை செய்திருக்கிறீர்கள் என்பது தெளிவாகிறது. (சிரிப்பு) நான் சொல்வது புரிகிறதா? யாராவது தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம் போய், ‘நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா?’ என்று கேட்ட போது, ‘ஆம், நான் தூங்கிக்கொண்டிருக்கிறேன்’, என்று அவர் பதிலுரைகிறார். உங்கள் கேள்வி இதைப் போல இருக்கிறது. புத்திக்கு அதன் இடம் இருக்கிறது, அதுபோல உணர்வுகளுக்கும் அதற்கான இடம் உள்ளது. சமாதியில் இந்த இரண்டும் ஒரு கச்சிதமான சம நிலையில் இருக்கும்.

(சபையில் இருந்த ஒருவர் கேட்ட இந்த கேள்வி சரியாகக் காதில் விழவில்லை)  

குருதேவ்இந்நாட்களில், மேலாண்மை வகுப்புகள் மேலும் மேலும் முறைசாரா பயிற்றுவிப்பை மேற்கொள்கிறது. இந்த முறை எல்லா இடத்திலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது உலகெங்கும் பரவி, பயிற்றுவிக்கும் முறை மாற வேண்டிய அவசியத்தை எல்லோரும் உணர்வார்கள் என்று நம்புகிறேன். மெதுவாக இது நடைபெற்று வருகிறது. உங்களிடம் ஒரு நற்செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உலக வங்கி தங்கள் ஊழியர்களுக்கான பயிற்சியை வடிவமைக்க வாழும் கலை நிறுவனத்தை அழைத்திருக்கிறது. நம்முடைய வகுப்புகள் எல்லாவிடத்திலும் நல்ல முறையில் வரவேற்கப்பட்டு வருகிறது. ஹார்வாட் வர்த்தகப் பள்ளி கூட நமது வகுப்புகளைப் பாராட்டியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் நமது பயிற்சி வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மதிப்பெண் வழங்குகிறது. நமது பயிற்சியை முடித்தால் மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைக்கிறது.


ஸ்டான்போர்ட், கார்னெல், போன்ற பல்கலைக்கழகங்கள் வாழும்கலை பயிற்சிகளை அங்கீகரித்து ஏற்று கொண்டிருக்கின்றன. ஆனாலும் இது சிறிய எண்ணிக்கை தான், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம். நம் நாட்டில் உள்ள IIT க்களும் IIM களும் இன்னும் திணறி கொண்டிருக்கின்றன. உலகெங்கும் பல கல்வி நிறுவனங்கள் இதே நிலையில் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், உலகில் உள்ள முதல் 50 கல்வி நிறுவனங்களில் பெரும்பாலானவை சீனாவில் இருக்கிறது. ஒரு மனிதனை முழுமையாக வளர்க்கும், மதிப்பை அடிப்படையாக கொண்ட கல்வியை ஆதரிக்க நாம் வெகு தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கல்வி என்பது வெறும் தகவல்களை மட்டும் கற்றுத் தராமல்,ஒருவரின் உணர்வு, புத்தி மற்றும் ஆன்மீக வல்லமைகளும் மேம்பட வைக்க வேண்டும். அந்த வேலை இன்னும் செய்ய வேண்டியிருக்கிறது, கதவுகள் திறந்துகொண்டிருக்கின்றன.