எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் வழி

திங்கள், 8 செப்டம்பர், 2014,

பெங்களூரு இந்தியா.

ஏதேனும் ஒரு கால கட்டத்தில், நீங்கள் அனைவரும் உண்மையில் நிரஞ்சனாக (பொருள்: தொடப்படாமல் மாசற்றவர்களாக) இருப்பதை உணர்ந்திருப்பீர்கள். பல சமயங்களில் சாலையில் கார் ஓட்டிச் செல்லும்போது, சாலையோரத்தில் இருவர் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு,அவர்களை கடந்து செல்வீர்கள். அவர்களது சண்டை எந்த வகையிலும் உங்களை பாதிப்பதில்லை. நீங்கள் தொடப்படாமலேயே இருக்கின்றீர்கள். அது போன்றே எங்கேனும் கொண்டாட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருந்தால் அதைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்று விடுகின்றீர்கள்.

நிரஞ்சனா என்பதன் பொருள் என்ன? எது ஒன்றும் நம்மைத் தொடவோ பாதிப்பதோ இல்லை என்பதே பொருள் ஆகும். உதாரணமாக, சிறு குழந்தைகள் உங்களுடன் சண்டையிட்டாலோ, கோபப்பட்டாலோ அது உங்களை காயப்படுத்துவதில்லை. பாதிப்பதும் இல்லை. அது போன்றே தாய்மார்கள் குழந்தைகளின் மீது கோபப்படும் போது குழந்தைகள் அதை மனதில் எடுத்துக் கொள்கின்றார்களா? இல்லவே இல்லை. இன்று தாய் கோபித்துக் கொள்ளும் போது கவனிக்கின்றார்கள், அடுத்த நாளே அதே குறும்பைச் செய்யத் துவங்குகின்றார்கள்.



உங்கள் தாய் கோபிக்கும் போது அதைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால் மாமியார் அல்லது மாமனார் கோபிக்கும் போது, ஆழமாக மனதில் எடுத்துக் கொள்ளுகின்றீர்கள்.  




பெற்றோருக்கும் மாமனார் மாமியார் ஆகியோருக்கும் இடையில் உங்கள் அணுகு முறையில் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா? எனவே பெரிய அல்லது சிறிய அளவில் நாம் அனைவரும் நிரஞ்சனாக இருப்பதை அறிகின்றோம். உண்மையான நிரஞ்சனாக இருப்பது எவ்வாறு? நிகழ்வுகள், சூழல்கள், இவற்றைப் பொருட்படுத்தாமல், நமது சுயத்தில் நிலை பெற்று இருந்தால், நாம் மகிழ்ச்சியுடனும் பேரின்பத்துடனும் இருக்கலாம்.

குருதேவ், நாம் ஒருவருடைய படத்தை பார்க்கும் போது அவர்களை நினைவு கூர்ந்து, இல்லாத குறையை  உணருகின்றோம். இது  போன்று செய்வது கடவுளுக்கும் பொருந்துமா? சரியாகுமா? இது ஆன்மீகத்தின் சாரத்திலிருந்து சிதறி விலகல் அல்லவா?

குருதேவ்: யாராவது அவ்வாறு உணர்ந்தால் சரி பரவாயில்லை. உண்மையில் நீங்கள் அவ்வாறு 
உணரத் தேவையில்லை. ஏனெனில் இந்த படைப்பு முழுமையுமே இறைவனின் சித்திரமே. படைப்பில் நாம் பார்க்கும் அனைத்துமே இறைவன் வரைந்த சித்திரமே ஆகும்.   இது இறைவனின் வெளிப்பாடே ஆகும். மிக நன்றாக உணருவதால் இறைவனின் படத்தை வைத்துக் கொள்ள ஒருவர் விரும்பினால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும்? பல சமயங்களில் ஒரு படத்தின் மூலம் உங்களுக்கும்  இறைவனுக்கும் இடையே மனதின் மூலம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றீர்கள்.

நமது வீட்டில் குடும்பத்தினர், மற்றும் தாத்தா, பாட்டி படங்களை வைத்திருக்கின்றோம். அதைப் பார்த்தவுடனேயே என் தாத்தா, என் பாட்டி என்று அன்புடன் அவர்களை நினைவு கூர்ந்து அவர்களுடன் ஒரு ஆழ்ந்த தொடர்பை உணருகின்றோம். அவர்களது படத்தைப் பார்க்கும் போது நீங்கள் அவர்கள் இல்லாக்குறையை உணருகின்றீர்கள் அல்லவா? அது போன்று குருநானக், மகாவீரர், புத்தர் போன்ற துறவிகளின் படங்களையும் நாம் வீட்டில் வைத்திருக்கின்றோம். புத்தரின் சிலைகள் ஏன் ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளன? அவற்றை பார்த்தவுடன் அவர்களை நினைவு கூர்ந்து, தியான நிலைக்குச் செல்கின்றீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தை பருவப் படங்களை வீட்டில் வைத்திருக்கின்றோம் ஏனெனில் அப்படத்தைப் பார்த்தவுடனேயே குழந்தையின் பேரின்ப, களங்கமில்லா நிலையை நினவு கூறுகின்றோம். ஆனால் படத்தின் மூலம் மட்டுமே இறைமையை உணருகின்றோம் என்பது அல்ல.

மகாராஷ்ட்ராவில் பத்து நாட்கள் கணேச உத்சவம் நடைபெற்று வருவது  உங்களுக்குத் தெரியும். அந்த சூழலே முற்றிலும் வித்தியாசமானது. நேர்மறையான புனிதமான அதிர்வலைகள் சூழலில் எங்கும் நிறைந்திருக்கும். அங்கு ஒருவரது மனமானது இந்த பொருள் உலகினின்றும் விலகி ஆழமான ஆன்மீக நிலையில் லயித்திருக்கும். எங்கும் கொண்டாட்டம் நிறைந்திருக்கும். அதனால் நாம் ஹோலி, தீபாவளி,கணேச சதுர்த்தி, நவராத்திரி பண்டிகைகளை கொண்டாடுகின்றோம். இறைமையை நம்முள் உணருவதற்கே இவை ஆகும். அதனால் இறைவன் மற்ற நேரத்தில் இல்லை என்பதல்ல. இறைவன் எப்போதும் எல்லா நேரத்திலுமே உள்ளார். இறைவன் எல்லோரிடமும், இருக்கின்றார், அனைவரையும் சார்ந்துள்ளார், அனைத்தும் அறிந்தவர். உண்மையில் கடவுள் எங்கிலும் நிறைந்திருக்கும் இறைவன் உங்களுள் வசிக்க மாட்டாரா என்ன? 

உங்களுள்ளும் நிச்சயம் இருக்கின்றார் எங்கும் நிறைந்திருக்கும் இறைவன் இங்கும் இப்போதும் உள்ளார். எங்கும் எப்போதும் நிறைந்திருக்கும் இறைவன் உங்களை சார்ந்திருக்க மாட்டாரா என்ன? நிச்சயம் சார்ந்துள்ளார். அது அன்பு எனப்படுவது. நீங்கள் ஏதோ ஒன்றை, அல்லது ஒருவரை நேசிக்கும் போது  அவர்கள் உங்களுக்குச் சொந்தமாவதை உணருகின்றீர்கள். அது பக்தி.
எப்போதும் நினைவில் வைத்திருங்கள்: கடவுள் ஒரு மனிதன் அல்ல. அவர் ஒரு சக்தி. எங்கும் வியாபிக்கும் ஒரு அதிர்வலை. அந்த சக்தி  நம்முள்ளும் வாழ்கின்றது.. மனித வாழ்வின் நோக்கம் அவனது ஆழ்மனதிலிருந்து எழும் இக்கேள்வியே ஆகும். நான் யார்? கடவுள் யார்? இது போதுமானது ஆகும்.

இக்கேள்விக்கு விடை அறிந்தவர் கூற மாட்டார், கூறுபவர் அறிய மாட்டார் (சிரிப்பு) கேள்வி அநேக மனிதர்களிடம் எழுவதில்லை.பலர் இப்பொருள் உலகில், மேலோட்டமாக இயந்திர கதியில் உணவு உண்டு,  குடித்து, உறங்கி வாழுகின்றார்கள். எப்போது ஒருவன் உண்மையாக வாழ்வினை பற்றியும் அதன் ரகசியங்களை பற்றியும் விபரம் ஆராய   துவங்குகின்றானோ அப்போது அவனது ஆன்மீக பயணம் துவங்குகின்றது.

குருதேவ், ஏன் நமது நாட்டில் பிரபலமான ஆலயங்கள் மலையின் மீதோ குன்றின் மீதோ அமைந்துள்ளன? மக்கள் அங்கு சென்றைடைய கடினமான வகையில் ஏன் அமைத்துள்ளார்கள்?

குருதேவ்: ஒரு மலையின் மீது ஆலயம் அமைக்கப்படுவதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன. மலையின் மீது ஏறும்போது, நடக்கும்போது உங்கள் ரத்த ஓட்டம் அதிகரிக்கின்றது. உங்களது மூச்சு வேகமும் மாறுகின்றது. அது ஒரு பிரணாயமம் செய்வது போன்றதாகின்றது. நீங்கள் வைஷ்ணோ தேவி (ஜம்மு காஷ்மீரில் உள்ள உயர்ந்த மலையில் அமைந்திருக்கும் தேவியின் ஆலயம்) ஆலயத்திற்கு செல்லும் போது மிக அதிகமான பிரணாயாமம் செய்தது போன்று உணருவீர்கள். நடந்து ஆலயத்தினை அடையும் போது அக்கணத்தில் உங்கள் மனம் காலியாக உணரப்பட்டு ஒரு தியான நிலையினை அடைகின்றீர்கள்

உங்கள் மனம் காலியாக உணரப்படும் போது எந்த விருப்பம் அல்லது வேண்டுதல் இருந்தாலும் உடனடியாக வெளிப்படுகின்றது. இது ஒரு அரிய ரகசியம்.சுதர்சன க்ரியா செய்து முடித்தவுடன் உங்கள் மனம் காலியாக உணரப்படுகின்றது, அதே சமயம் உள்ளிருந்து மகிழ்ச்சி மலர்ந்து எழுகின்றது. சுறுசுறுப்பாக உணருகின்றீர்கள். நிலை ஏற்படும்போது என்ன விரும்பினாலும் வேண்டினாலும் அது நிகழ்ந்தேறுகின்றது. இதை உங்களில் எத்தனை பேர் அனுபவித்து அறிந்திருக்கின்றீர்கள்? (பலர் கை தூக்குகின்றார்கள்) பிராணாயாமம், சுதர்சனக்ரியா மற்றும் தியானம் செய்து முடிக்கும்போது எழுகின்ற விருப்பம் நிறைவேறுகின்றது. அல்லவா? அதை அடைய, அழவோ கஷ்டப் படவோ தேவை இல்லை. விரும்புவது நடைபெறத் துவங்குகின்றது. எனவே சின்ன விஷயங்களை விரும்பாதீர்கள். அனைவருக்கும் பலன் தரக்கூடிய விஷயங்களையே விரும்புங்கள்.

குருதேவ், ருத்ர என்பதன் பொருள் அழும் அல்லது அலறும் ஒருவன் என்று கூறப் படுகின்றது. இது சரியா?

குருதேவ்: ருத்ர என்பதற்கு பல அர்த்தங்கள் இணைந்துள்ளன. இது அவ்வகையான பல அர்த்தங்களில் ஒன்று, அதாவது ஒருவனை அழ வைப்பவன் என்பது ஆகும். எந்த மாற்றமும் உங்களை அழ வைக்கும். பல ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ளன. அவற்றை வேறொரு தருணத்தில் பார்ப்போம்.

குருதேவ், நாங்கள் சத்தீஸ்கரிலிருந்து வருகின்றோம். எங்களிடம் இரண்டு பயணச் சீட்டுக்கள் இருந்தன. அவற்றில் ஒன்று மட்டுமே உறுதி செய்யப்பட்ட சீட்டு. எனவே நான் என்னுடைய நண்பருடன் என்னுடைய தூங்குமிடத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வயதான பெண்மணி தரையில் படுத்திருந்தாள் ஏனெனில் அவளுடைய சீட்டும் உறுதி செய்யப்பட்டிருக்க வில்லை. இந்நிலையில் நாங்கள் என்ன செய்திருக்க வேண்டும்?

குருதேவ்: நீங்கள் ஆஸ்ரமத்தை அடைந்து விட்டீர்கள். ஏன் அப்பெண்மணியைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்? உங்களை தளர்த்திக் கொள்ளுங்கள். பெண்களை மதிக்க வேண்டும். குழந்தைகள் மற்றும் முதியோரிடம் பரிவு காட்ட வேண்டும். முதியோருக்கு எப்போதும் பரிவு காட்ட வேண்டும். நமது நாட்டில் காலங்காலமாக இதுவே மரபு. கடந்த எட்டு பத்து ஆண்டுகளாக நமது கலாச்சாரத்தில் இம்மரபு மறைந்து விட்டது. பஸ்களில் முதியவர்கள் பயணம் முழுவதும் நின்று கொண்டிருக்கையில், இளைஞர்கள் உட்கார்ந்தே இருக்கின்றனர். எனது பள்ளிப்பருவத்தில், வயதானவர்கள் வந்தால் உடனேயே அவர்களுக்கு எங்கள் இருக்கையை மரியாதையுடன் தருவது வழக்கம். இது இந்தியக் கலாச்சாரத்தில் தனிப்பட்ட சிறப்பு ஆகும். வெளிநாடுகளில் அவ்வாறு இல்லை. அங்கெல்லாம், முதியவர்கள் நின்று பயணம் செய்யும் போது இளைஞர்கள் அமர்ந்தே இருக்கின்றார்கள்.

(கேள்வி செவிக்குப் புலப்படவில்லை)

குருதேவ்: சமுதாயத்தில் நல்ல, கெட்ட மற்றும் தந்திரமானவர்கள் என்னும் மூன்று விதமான 
மக்கள் இருக்கின்றார்கள். நல்லவர்களை கண்டும் தெரிந்து கொண்டும் நாம் அகத் தூண்டுதலை அடைகின்றோம். நன்மை செய்து முன்னேறலாம் என்னும் படிப்பினையை கெட்டவர்களிடமிருந்து அடைகின்றோம். தந்திரமானவர்களிடமிருந்து அவ்வாறு நாம் இருக்கக் கூடாது என்பதை படிக்கின்றோம். கெட்டவர்கள் தமக்குதாமேயும், பிறருக்கும் இடையூறு விளைவிக்கின்றார்கள். அவர்களின் முகங்களில் உற்சாகமோ மகிழ்ச்சியோ சிறிதும் இருக்காது. துக்கமாக இருப்பவர்கள் தங்களை சுற்றி துக்கத்தையே பரப்புகின்றார்கள். அவர்களிடமிருந்து வேறெதுவும் கிடைக்காது. ஆனால் அவர்களிடமிருந்து என்ன கற்றுக் கொள்ளலாம்? அவர்கள் எந்த செயலை செய்ததால் துன்ப நிலையை அடைந்தார்களோ, அந்தச் செயலை நீங்கள் செய்யக் கூடாது என்பதைக் கற்கலாம். எனவே, நல்லவர்களை தலை குனிந்து வணங்குவதற்கு முன்னர் தீயவர்களைத் தலை குனிந்து வணங்குங்கள்,  ஏனெனில் அவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது.. துன்பக் குழியில் அவர்கள் வீழ்ந்து விட்டார்கள்.அதன் மூலம் (அவர்கள் செய்த தவறான செயல்களை நீங்கள் செய்யாமல் இருக்கும்) விலைமதிப்பில்லாத பாடத்தை வாழ்வில் உங்களுக்குக் கற்பிக்கின்றார்கள்.