மௌனத்தினால் நமக்கு என்ன கிடைக்கிறது?

அக்டோபர் 4, 2013 - பெங்களூரு, இந்தியா



ஆழ்ந்த மௌனமும் ஆனந்தமான கொண்டாடமும் தான் நவராத்திரி என்பது! உலகாய விஷயங்களிலிருந்து வெளிவந்து மற்றொரு உலகிற்கு செல்வதற்கான நேரம் இது.

கேள்வி - பதில்கள்

கே: குருதேவ், தசமஹாவித்யாக்களை (இறைவியின் பத்து விதமான பிரபஞ்ச வடிவங்கள்) நவராத்திரியின் போது வழிபடுகிறார்கள். இவையெல்லாம் என்ன, தினசரி வாழ்வில் இவற்றின் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்: பத்து மஹாவித்யாக்கள் இருக்கின்றன. இதை பற்றி முழுமையாக எனக்கும் தெரியாது. புத்தியைக் கொண்டு நாம் படித்து புரிந்து கொள்ளும் வித்யா (ஞானம்) ஒரு அளவுக்குட்பட்டதே. மௌனத்திலும், தியானத்திலும் நமக்கு கிடைப்பது மகாவித்யா (பெரும் ஞானம்).

நம் முயற்சியின் மூலம் கிடைக்கும் ஞானம் அபர வித்யா எனப்படுகிறது.முயற்சி இல்லாமல், மௌனத்தின் மூலமும் உள்ளுணர்வாலும் நமக்குக் கிடைப்பது மகாவித்யா. அவித்யா (அறியாமை) துடைத்தெறியும் போது கிடைப்பது மகாவித்யா. அவித்யாவை துடைத்தெறிய நீங்கள் மாகாவித்யாவையும் பயன்படுத்தலாம். இந்த இரண்டும் இருக்கிறது.

கே: குருதேவ், ஒருவர் நண்பரா எதிரியா என்பதை உறுதியாய் சொல்ல முடியாது, எனவே தன்னை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளீர்கள். அது சுயநலமாகாதா?

குருதேவ்: இல்லை, அது சுயநலமாய் இருப்பதல்ல. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு வழிகாட்ட ஒரு பெரும் சக்தி இருக்கிறது என்பதை தெரிந்திருப்பதே அது. உங்களுடைய நேரம் நன்றாக இருக்கும் போது, உங்கள் வாழ்கை அந்த பெரும் சக்தியின் கையில் அல்லது இறைவனின் கையில் இருக்கும், அது உங்கள் வாழ்கையை ஆள்கிறது. இதைத் தான் நாம் பார்க்க வேண்டும். அந்த ஒரு சக்தி மட்டுமே உங்களிடம் நண்பராக, எதிரியாக எல்லோருமாக வருகிறது. அந்த ஒரு சக்தியே வெவ்வேறு வடிவங்களில் உங்கள் முன் இருப்பதை உணரும் போது நீங்கள் உங்களுடனேயே அமைதியில் இருப்பீர்கள்.

கே: குருதேவ், சாதனைகள் (பயிற்சிகள்) வேண்டிய பலனை அளிக்கும் என்று சொல்லப்படுகிறது. ஒரு இராக்ஷசன் பயிற்சி செய்தாலும் வரம் கிடைக்குமா?

குருதேவ்: இது முற்காலத்தில் நடந்துள்ளது. இராவணன் அவ்வளவு தவம் செய்திருந்தான். பல இராக்ஷசர்கள் கடும் தவத்தின் மூலம் வலிமை பெற்றிருக்கிறார்கள். ஆனால், அகங்காரத்தினால் கொஞ்சம் தவறுகள் செய்து விட்டார்கள். அதனால் தான் அவர்கள் முழுதுமாக வெற்றி பெற முடியவில்லை.

கே: இறுதி இலக்கின் மீது சில சமயம் மிகுந்த கவனம் அளிப்பதாக உணர்கிறேன். அதாவது மோக்ஷத்தின் மீது, எனவே நான் அந்த பயணத்தை மறந்து விடுகிறேன், அதாவது வாழ்கையை. என்ன செய்வது?

குருதேவ்: தளர்வாய் இருங்கள் போதும்! இது வாழ்வில் ஒரு பகுதி. வாழ்கை என்பது அன்பு, சக்தி, உற்சாகம் மற்றும் விடுதலை. விடுதலை தான் மோக்ஷம். சில இடங்களில் மோக்ஷம் இறுதி அல்ல. வாழ்கை முழுதும் வேறு வேறு நிலைகளில் மோக்ஷம் இருக்கிறது. மோக்ஷம் என்றால் விடுதலை, மற்றும் வேலையிலிருந்து விடுதலை. வேலையில்லாமல் இருப்பதிலிருந்து விடுதலை பெறுவதும் அத்தியாவசியம் தான். சோம்பேறியாக அமர்ந்திருந்து விட்டு, பிறகு ஏதாவது வேலை செய்யும் போது நீங்கள் மகிழ்ச்சியாய் உணர்கிறீர்கள். அந்தச் சக்தியை உணர்கிறீர்கள். எனவே எல்லாம் இருக்கிறது. தளர்வாய் இருங்கள் போதும்!

கே: குருதேவ், நான் இந்தியாவிற்கு வெளியே இருந்து வந்திருப்பதால் எனக்கு சமஸ்க்ருதம் தெரியாது. சமஸ்க்ருதத்தை நன்றாக புரிந்து கொள்ள சில வகுப்புகளில் கலந்து கொள்ளலமா?

குருதேவ்: நீங்கள் நிறைய புரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.உண்மையில், ஆங்கில மொழியிலேயே நிறைய சமஸ்க்ருத வார்த்தைகள் இருக்கிறது. மாதங்களின் பெயர்கள் கூட சமஸ்க்ருதத்தில் தான் இருக்கிறது. நவம்பர், டிசம்பர், ஜனவரி போன்ற மாதங்கள் எல்லாம் சமஸ்க்ருத வார்த்தைகளே. (நவம்பர் – நவ அம்பர் (ஒன்பதாவது வானம்), டிசம்பர் – தச அம்பர் (பத்தாவது வானம்). எனவே நிறைய புரிந்துகொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை! செய்ய வேண்டியதெல்லாம், அந்த மந்திரங்களின் அதிர்வுகளை அனுபவித்து தளர்வாக வேண்டும், பிறகு தியானம் நிகழ்கிறது.

நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று விரும்பினால் பல வாய்புகள் உள்ளன. கற்றுக் கொள்ள பல வழிகள் உள்ளன. ஆனால், அடிப்படையில் வெவ்வேறு இந்திய மொழிகள் பேசுபவர்கள் கூட வேத சாகைகளை புரிந்து கொள்வதில்லை. யாருமே அதை புரிந்து கொள்வது இல்லை. அதன் அதிர்வுகள், அதன் நாதம், அதன் உச்சரிப்பு அவை தான் முக்கியம். மிக முக்கியம்.

அதில் புலமை பெற வேண்டும் என்று விரும்பினால், சிறப்பாக செய்யலாம். கூகுளில் அதன் பொருள் கிடைக்கும். ஆனால் அதில் கிடைக்கும் வார்த்தைகளின் அர்த்தங்கள் முழுமையானது அல்ல. அதை மனதில் கொண்டு படிக்க வேண்டும். அது முழுதுமாக சரி இல்லை, முழுதுமாக தவறுமல்ல.

கே: குருதேவ், சாதனைகளில் (பயிற்சியில்) ஒரு குறிப்பிட்ட அனுபவம் பெறுவதுதான் இலக்கா? என்னுடைய பயிற்சிகளில் இதுவரை நான் எந்த அனுபவமும் பெறவில்லை. இது பற்றி நான் கவலையாய் இருக்கிறேன்.


குருதேவ்: இல்லை, கவலை வேண்டாம்! காட்சியிலிருந்து காண்பவருக்கு செல்லும் அந்த 
அனுபவம் தான் முக்கியம். அனுபவங்கள் கிடைத்தால் கிடைக்கும். இல்லை என்றால் கவலை வேண்டாம்! அது பரவாயில்லை. அனுபவங்கள் எல்லா நேரமும் மாறிக்கொண்டே இருக்கும்.