தெய்வீகத்தை அறிந்து கொள்ளுதல்


அக்டோபர்  03 2013 பெங்களூர்,  இந்தியா 



கே: குருதேவ், உண்மையான அன்பின் அறிகுறிகள் என்ன? அதன் வடிவம் என்ன?  அதை நாம் அடையாளம் கண்டுகொள்வது எப்படி?  

குருதேவ்: உண்மையான அன்பு என்பது ராமருக்கும் பரதருக்கும் இடையேயான   அன்பினை போன்றது. பகவான் கிருஷ்ணருக்கும், ராதாவிற்கும் இடையேயான அன்பு மற்றும் பகவான் கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையேயான  அன்பினை போன்றது. அது ஒரு தாய்க்கும் சேய்க்கும் இடையேயும் கணவன் மனைவிக்கும் இடையேயான அன்பினை போன்று தூய்மையானது. இங்கே குறிப்பிடப்படுவது இருவருக்கிடையே உள்ள உறவு முறையினால் நிலவும் அன்பு.  

ஆனால் இதற்கெல்லாம் மேலாக, ஒரு வகையான அன்பு உள்ளது. அந்த அன்பின் உருவகமே நாம் அனைவரும் ஆவோம். நாம் அனைவரும் அன்பு என்ற ஒன்றினால் ஆக்கப்பட்டவர்கள் என்பதே நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும்.  இந்த உண்மையை அறிந்து கொள்வதே பரமபக்தி (அதாவது மிக உயர்ந்த  எல்லை கடந்த அன்பு அல்லது பக்தி) என்று சொல்லப்படுகின்றது. "எதுவுமே எனக்கு சொந்தமில்லை. என்னிடம் இருப்பவை எல்லாமே இறைவா உனக்கு சொந்தமானவை. உன்னிடம் இருப்பவை எல்லாம் எனக்குச் சொந்தம்." என்ற இந்த உணர்வு நம் உள்ளிருந்து எழுவதே அதன் பொருள். அதுவே உண்மையான அன்பு. அதனால் நீங்கள் மற்றவரின் பணப் பையை எடுத்து வைத்துகொண்டு உங்களுக்கு சொந்தமானவை  எல்லாம்  எனக்குச்  சொந்தம் என்று சொல்லி விடாதீர்கள் . (சிரிப்பு)

கே:  குருதேவ், அன்பிற்கு எல்லை கிடையாது என்று சொல்லி இருக்கின்றீர்கள்.  திருமணம் என்பது அன்பின் இறுதி நிலையா?  

குருதேவ்:  (சிரிப்பு) எனக்குத் தெரியாது. எனக்கு திருமணம் ஆகவில்லை. திருமணம் என்பது நீங்கள் கேட்பது போல் அன்பின் இறுதி நிலை என்பதாக இருக்கக்கூடாது. அப்படியில்லாமல் திருமணம் என்பது ஒருவர் மீது மற்றோருவருக்கான அன்பு என்பதில் துவங்குவதே சரியானது. அப்போது இல்லையென்றாலும், திருமண வாழ்க்கை  நடைபெறும் காலத்தில் அன்பு மலர்ந்தாலும் நல்லதே.  

கே: துணி வெளுப்பவன் ஒருவனின் தவறான வதந்தியை மதித்து ராமர்  சீதா தேவியை நாடு கடத்தி காட்டிற்கு அனுப்பினார். அதோடு மட்டுமன்றி சீதா தேவி   தீக்குளித்து தன் கற்பினை நிரூபிக்கும்படி செய்தார். இந்த நிகழ்ச்சியின் போது  சீதாப் பிராட்டி தூய்மையானவர் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் ராமர் ஏன்  சீதைக்குத் துணையாக  நிற்கவில்லை?  

குருதேவ்:  நான் இன்று ராமபிரானின் வழக்கறிஞராகி அன்று அவர் செய்தவற்றிற்கு  விளக்கம் தரப் போவதில்லை. ராமர் செய்த அனைத்திற்கும் ஏன் அவ்வாறு  செய்தார் என்று நிச்சயமாக அவருக்குத் தெரிந்திருக்கும். ராமர் செய்த  அனைத்தையும்  பின்பற்ற வேண்டுமென்பதில்லை. ராமர் பல நல்ல விஷயங்களை சொல்லி இருக்கின்றார். நாம் அவற்றை நம் வாழ்வில் கடைபிடிப்போம். 

ராமர் ஏன் சீதையை தீக்குளிக்கச் செய்தார்? எனக்கும் இதே சந்தேகம் உள்ளது?   (சிரிப்பு) வாழும் கலை பயிற்சியின் கொள்கைகள் ராமருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு நாம் உதை பந்தாக இருக்க  வேண்டாம் என்று அவருக்கு யாரும் சொல்லி இருக்கமாட்டார்கள்.  

ஒருவேளை இதனால் தான் ராமர் 'பாரா கலா சம்பூர்ணா' (12 தெய்வீகத் தன்மைகள்  அல்லது அசாதாரண பண்புகளைக் கொண்டவர் என்று கருதப்படுகின்றார்.  பகவான் கிருஷ்ணர் மட்டுமே' சோலா கலா சம்பூர்ணா அதாவது இறைவனின் அவதாரத்தின் மொத்தமான 16 தெய்வீக குணங்கள் அல்லது அசாதாரண பண்புகளை கொண்டவர்) என்று கருதப்படுகின்றார், இருந்தாலும் ராமனின் வாழ்க்கை மிகவும் அற்புதமானது; அவரது குணங்கள் பின்பற்றத்தக்க சீறிய உதாரணங்களாக திகழ்பவை.  

ராமபிரானுக்கும் வசிஷ்ட முனிவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல் யோகவசிஷ்ட  மகாராமாயணம் என்றழைக்கப்படுகின்றது. நீங்கள் அனைவரும் அதனை படிக்க வேண்டும். தன்னுடைய வாழ்க்கையின் மூலமாக ராமர் ஒரு சாதாரண மனிதன் தன் மானுட வாழ்வில் சந்திக்கும் இன்னல்கள் அனைத்தையும்  காட்டியுள்ளார். இந்த கண்ணோட்டத்தில் பார்க்கும்போது  ராமரின் வாழ்க்கையானது ஒவ்வொரு மனிதனும் உண்மையாகவே தன் வாழ்நாளில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்  கடந்து செல்லும் நிலையை குறிப்பதாகவே உள்ளது.  

சாதாரண மனிதன் மற்றவர்களின் அபிப்பிராயங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பான். பிறருடைய பாராட்டுதல்களையும் இகழ்தலையும்  பெரிதும் மதிப்பான். தன் வரைமுறைகளைப் பற்றி பெரிதும் அக்கறை கொள்வான்.  எல்லோருடைய வாழ்க்கையிலும் பொதுவாக காணப்படும் இந்த குணங்களே ராமரின் கதையில் சித்தரிக்கப்பட்டுள்ளன.  

நீங்கள் ராமாயணத்தில் இன்னும் ஆழ்ந்து சென்றால், ராமபிரான் நம் அனைவருக்குள்ளும் இருக்கும் தெய்வீக ஒளியினை குறிக்கின்றார் என்பது புரியும்.    ஆத்ம தத்துவம் எனப்படும் நம் ஆன்ம ஒளியைக் குறிப்பவரே ராமர். அவ்வாறு ராமரை நம் ஆன்மாவாகப் பார்க்கும்போது பல விஷயங்களை நாம் வேறு கோணத்தில் பார்க்க இயலும். முனிவர் வேத வியாசரால் இயற்றப்பட்ட அத்யாத்ம  ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ளது இதுவே. ராமபிரானை வெறும் அரசனாக மட்டுமே பார்க்காதீர்கள். எந்த நிலை அல்லது எந்த கோணத்திலிருந்து நீங்கள் பார்க்கின்றீர்கள் என்பதை பொறுத்து நீங்கள் ராம பிரானின் அரிய குணங்களை காண்பீர்கள்.

ஒருமுறை ராமபிரான் அனுமாரிடம் "நீ என்னை எவ்வாறு பார்க்கின்றாய் என்று கேட்டார். அதற்கு அனுமன், 'தேக - புத்தயாதவ - தாசா' என்று பதில் சொன்னார்.  அதாவது என்னை நான்  உடலாக கருதும்போது (என் அறிவு உடலளவில் வரையருக்கப்பட்டிருக்கும் போது) நான் என்னை உங்கள் சேவகனாக பார்க்கின்றேன. 'ஜீவன்  புத்யத்வம் - அம்ஷ' அதாவது நான் என்னை ஜீவனாகக் கருதும் போது  (அறிவு ஆன்மாவின் நிலைக்கு உயர்த்தப்படும் போது) நான் என்னை உங்களின் ஒரு பாகமாக பார்க்கின்றேன் என்று சொன்னார். அனுமன் மேலும், 'ஆத்ம புத்யத் வமேவ  -  ச' என்று சொன்னார். அதாவது, "நான் என்னை என் உள்ளுணர்வாக பார்க்கும் போது தங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்பதை பார்க்கின்றேன். நானாக இருப்பது எதுவோ அதுவே நீங்கள் ஆவீர். நீங்களாக இருப்பது எதுவோ அதுவே நான்." ஆகவே ராம பிரானை அறிந்துகொள்ள மூன்று வெவ்வேறு நிலைகள் உள்ளன.  

அதே போல ராமபிரானை இந்தியாவின் ஒரு சரித்திர நாயகனாகப் பார்த்தால் இந்தியாவில் மட்டுமன்றி அயல் நாடுகளிலும் அவர் ஒரு மரியாத புருஷோத்தமராக (மானுடர்களுள் மிக உயர்ந்தவராகவும் நேர்மையானவராகவும்) மதிக்கப்படுவதை  பார்க்கலாம். ஒரு பக்தனின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அவரை இறைவனாகவே பார்ப்பீர்கள். அவர் இறைத்தன்மையை முழுமையாக உள்ளடக்கியிருப்பதை அறிவீர்கள். அவரை உங்கள் உள்ளுணர்வாகவே பார்க்கும் போது உங்களுக்கும் அவருக்குமிடையே எந்த வேறுபாடும் இல்லை.  

ராமர் வெறும் சரித்திர நாயகன் மட்டும் இல்லை அனைத்துமே பரபிரம்மன் என்னும் ஒரே ஒளியினால் ஆக்கப்பட்டவை. அதுவே ராம தத்துவம் என்று அழைக்கப் படுகின்றது. அப்போது நீங்கள் உங்கள் ஆன்மாவையே ராமனாகப் பார்ப்பீர்கள்.   நீங்கள் ராமரை ஒரு மானுடனாகப் பார்க்காமல் இந்த படைப்பில் தெய்வீக ஒளியின் சின்னமாக பார்ப்பீர்கள். ஆக, எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் ராமரின் தனி குணாதிசயங்களைக் கண்டு அவற்றை உள்வாங்கி அக்குணங்களை நீங்களும் பெறுவீர்கள்.  

கே: குருதேவ், நம் தலைவர்கள் பெண்களைத் தங்கள் பாதுகாப்பிற்காக  மிளகுப்பொடி மற்றும் மிளகாய்ப் பொடிகளை எப்போதும் கையில் கொண்டு  செல்லும்படி ஆலோசனை சொல்லி இருக்கின்றனர். மிளகாய்ப் பொடி வைத்திருப்பதாலும்  கராத்தே கற்றுக் கொள்வதாலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியுமா?  பாதுகாப்பை அளிப்பது அரசாங்கத்தின் கடமை அல்லவா?  தங்கள் பாதுகாப்பிற்கென பெண்கள் என்ன செய்ய வேண்டும்?    

குருதேவ்:  முதலில் நீங்கள் பாதுகாப்பாக இருக்கின்றீர்கள் என்ற நம்பிக்கை வேண்டும். எல்லா இடங்களிலும் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் தவறானவர்கள் என்ற எண்ணத்துடன் நீங்கள் சென்று கொண்டிருந்தால் அந்த பயம் என்னும் வலையிலேயே சிக்கிக்கொண்டு விடுவீர்கள். அதுவே ஒரு வித நோய் போல் ஆகிவிடும். இந்த சமுதாயத்தில் இன்றும் நல்லவர்களும் உயர்ந்தவர்களும் இருக்கின்றனர்.

எல்லா காலங்களிலும் சாத்தான்கள் (தவறிழைப்பவர்கள்) இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். நாம் அவர்களிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.  தனியாக எங்கும் சுற்ற வேண்டாம் என்பதே என்னுடைய அறிவுரை. எப்போது வெளியில் சென்றாலும் இரண்டு அல்லது நான்கு பேர் கொண்ட குழுவாகச் செல்லுங்கள். பகலில் செல்லும் போதும் பாதுகாப்பான  இடங்கள் எவை பாதுகாப்பு அற்றவை எவை என தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் மட்டுமின்றி உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இந்த பாதுகாப்பின்மை இருக்கின்றது.  வாஷிங்டனில் பாதுகாப்பான பகுதி என்று ஒரு பகுதி உள்ளது. அதற்கு சில மீட்டர்கள் தள்ளி உள்ள இடம் பாதுகாப்பற்றது என்று கருதப்படுகின்றது.  

பாதுகாப்பற்ற இடத்தில் உள்ள சொத்தின் விலை பாதுகாப்பான இடத்திலுள்ள சொத்தின் விலையை விட  மூன்றில் ஒரு பங்காகும். ஒவ்வொரு நாட்டிலும் சில இடங்கள் பாதுகாப்பானவையாகவும் சில இடங்கள் பாதுகாப்பு அற்றவையாகவும் இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டிலும் மக்கள் துப்பாக்கியுடன் அலைகின்றனர். பல விதமான மன நோயாளிகள் உள்ளனர்.  

கடவுளின் கருணையினால் இத்தகைய தீவிரமான பயங்கரமான சூழ்நிலைகள் நம் நாட்டில் இன்னும் உண்டாகவில்லை. ஆனால் நிச்சயமாக முன்பிருந்ததை விட  சூழ்நிலை மோசமாகி உள்ளது. அதனால், பாதுகாப்பு குறித்த அறிவுரைகளை பின்பற்ற வேண்டும். இதனோடு கூட பெண்கள் குடிப்பழக்கத்திற்கு எதிராக வலிமையோடு போராட வேண்டும். மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும்.

ராமராஜ்யத்தை (நேர்மையும் நீதியுமுள்ள சமுதாயம்) உருவாக்க மகாத்மா காந்திக்கு மூன்று கனவுகள் இருந்தன. முதல் படி மதுவும் போதைப் பொருட்களுமற்ற சமுதாயம், மது அருந்துதல் இல்லாத ஒரு விடுதலையான சமுதாயம்.

இரண்டாவது படியாக, இறைச்சியும் பிற அசைவ உணவுகளையும் தவிர்க்கும் சமுதாயம் ஏற்படப் பரிந்துரை செய்தார். சரியான உணவுக்கு அவர் முக்கியத்துவம் அளித்தார். 

இன்று இந்தியா உலகநாடுகளுக்கு மாட்டு இறைச்சி மற்றும் அசைவ உணவுகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்கின்றது.. இந்தியாவில் பசுக்கள் மிக அதிக அளவில் வதை, படுகொலை செய்யப்பட்டு, ஆவற்றின் இறைச்சி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இது நமது நாட்டுக்கு மிகப் பெரிய அவமரியாதை. நமது நாட்டின் பண்பாட்டிற்கும் பாரம்பரியத்திற்கும் அவமரியாதை.

இத்தகைய நிலைமை அண்மையில் 10 -15 ஆண்டுகளாக தான் எழுந்துள்ளது மக்களுடைய உணவுப் பழக்கங்கள் சரியாகவும், தூய்மையாகவும் இருந்தால் அவர்களது மனங்களில் வன்முறை எண்ணங்கள் ஏற்படாது. ஆனால் மக்கள் மது அருந்தி அசைவ உணவுகளை எடுத்துக் கொண்டிருந்தால், இத்தகைய இடையூறுகள் சமுதாயத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். 

உலகத்தை விடுங்கள், நமது நாட்டில் நமது வீட்டில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.சமீபத்தில் ஒரு தந்தை தனது மகளையே மானபங்கப்படுத்தியதாக செய்தி வந்துள்ளது. இந்நிலை வெட்கப்பட வேண்டியதும் கவலைக்குரியதும் ஆகும். நாம் சமுதாயத்தில் ஒரு பெரிய ஆன்மீக அலையை ஏற்படுத்த வேண்டியது மிகத் தேவை. சிலர், சமயம் என்ற பெயரில் பல தவறுகள் செய்கின்றார்கள். அண்மையில், ஒரு ஆன்மீகத் தலைவர், ஆன்மிகம் என்னும் போர்வையில் பல தவறுகள் செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அத்தகைய தவறுகளை செய்யும் ஒருவர் ஆன்மீகத் தலைவராக இருக்க முடியாது. சிலரது சுயலாபத்திற்கும், பேராசைக்கும் ஆன்மிகம் தவறகப் பயன்படுத்தப்படுகின்றது.

சரியான சான்றிதழ் இல்லாத பல போலி டாக்டர்கள் சில இடங்களில் தங்களுடைய தொழிலைத் துவங்கி, மக்களுக்கு மருந்துகளைப் பரிந்துரை செய்து பணம் சம்பாதிக்கின்றார்கள். அது போன்று சிலர் போலியாக தங்களை ஆன்மீகத் தலைவர்களாக உருவகப்படுத்திக் காட்டுகின்றார்கள். ஆன்மீகத்தில் சட்ட திட்டங்களோ, கட்டுப்பாடோ இல்லையென்பதால், யார் வேண்டுமானாலும் இதில் நுழைந்து, மக்களுக்கு நன்மை செய்வதைவிட தங்களுடைய சுய லாபத்திற்காகவே  தவறாக பயன்படுத்திக் கொள்ளுகின்றார்கள்.

கே: மகாத்மா காந்தி நாட்டிற்கு அளித்த பதினோரு கொள்கைகளை விவரித்துக் கூற முடியுமா?

குருதேவ்: முதலாவது அஹிம்சை, இரண்டாவது சத்யா - உண்மை, பிறகு அஸ்டேய- திருடாமை, அடுத்து பிரம்மச்சர்ய - துறவு, அடுத்து அபரிக்ரஹ அதாவது உடைமை அற்று இருத்தல், அடுத்து சரீர்ஷ்ரமா - உடலுழைப்பு, பின்னர், அஸ்வத - சுவை நீங்குதல். மகாத்மா காந்தி உங்களுடைய சுவை அரும்புகளே அடக்க முடியாத சபலங்களுக்குக் காரணம் என்று கூறியிருக்கிறார். சுவைக்காக இல்லாமல் வாழ்வதற்காக உணவருந்த வேண்டும்.எது சுவையானது என்று பார்க்காமல் எது நல்லது என்று கவனியுங்கள். பல சமயங்களில் மிகுந்த சுவையான உணவு உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்காது. பல சமயங்களில் சுவையற்ற சில உணவு வகைகள் உடலுக்கு நன்மை தரக் கூடியதாக இருக்கும். அடுத்தது சர்வத்ரபயவர்ஜனா அதாவது பயமற்ற நிலை. எதற்கும் பயப்பட வேண்டாம்.
அடுத்தது, சர்வ தர்மா சமன்த்வா அதாவது எல்லா சமயத்தவரையும் சமமாகக் கருதுதல். சில மதத்தவர் தங்களுடைய அருட்போதகரை நம்பினால் சுவர்க்கத்திற்கு செல்லுவீர்கள் என்று கூறுவார்கள். வேறு சில மதத்தவர் தங்களுடைய மதத்தை நம்பினால் கடவுள்  பல நற்பரிசுகள் வழங்குவார் என்று கூறுவார்கள்.ஆனால், வேதசமயம் எந்த வழிபாட்டு முறையைப் பின்பற்றுபவர்களாக இருந்தாலும் அனைவரையும் சமமாகக் கருத வேண்டும் என்று கூறுகின்றது.

அடுத்தது , ஸ்வதேசி அதாவது உள்நாட்டிலேயே தயாரிக்கப் படும் பொருட்களை பயன் படுத்துதல். உலகளவில் எண்ணங்களும் உள்ளூர் பொருட்களைப் பயன் படுத்துதலும் என்றிருக்க வேண்டும்.

அடுத்து, ஸ்பர்ஷ்பாவனா அதாவது தீண்டாமையை ஒழிக்க வேண்டும்.அக்காலத்தில் தீண்டாமை அதிக அளவில் நிலவி வந்தது. இவை தாம் பதினோரு கொள்கைகள்.

கே: பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்," அநித்தியம் அசுகம் லோகம் இமம் ப்ரப்ய பாஜஸ்வ மாம் " என்று கூறுகின்றார். இவ்வுலகம் அநித்தியம் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது. ஏன் அசுகம் (துன்பமானது) என்று கூறப் படுகின்றது?

குருதேவ்: எது தாற்காலிகமானதோ அது துன்பமானது. அநித்தியம் என்றால் நிரந்தரமாக இல்லாதது என்று பொருள். பாருங்கள், ஒரு பதவியை அடைவதற்கு முன்னர் ஒருவன் அதை அடைய கவலைப்படுகிறான்.அதை அடைந்த பின்னர் அதை தக்க வைத்துக் கொள்ளக் கவலைப்படுகின்றான். அப்பதவி விலகும் காலத்தில் துன்பம் அடைகின்றான்.

ஆகவே, பதவியை அடையும் முன்னரும், அதை பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் போதும் துன்பம் தான். பதவி போய்விடுமோ என்னும் பயமும் துன்பத்தையே அளிக்கின்றது. அது போய் விடும் போது அதைப் பற்றிய நினைவுகள் துன்பம் அளிக்கின்றது. அதனால் தான் அசுகம் என்று கூறப்படுகிறது. தாற்காலிகமான எதிலும் சுகம் கிடையாது. உங்களுக்குள்ளேயே இருக்கின்றது. தாற்காலிகமான , விரைந்து செல்லக்கூடிய, மாறுகின்ற எதிலும் மகிழ்ச்சியைத் தேடாதீர்கள். எது மாற்ற மில்லாததோ அதிலேயே நிறைவும் மகிழ்வும் உள்ளன.

கே: அறியாமையின் காரணம் என்ன? அதை எவ்வாறு நீக்குவது?

குருதேவ்: அறியாமையை ஞானத்தின் மூலம் நீக்கலாம். அறியாமையின் காரணம் என்ன? அது மேலாணை. ஏன் அறியாமை ஏற்படுகின்றது என்று நீங்கள் கேட்கலாம். அது அப்படித் தான்.

வானம் ஏன் இவ்வளவு பறந்திருக்கின்றது என்று கேட்பது போன்று தான். ஆம் வானம் பறந்திருக்கின்றது, அது அப்படித்தான். அல்லது ஏன் சூரியன் ஒளி வீசுகின்றது என்பது போன்றது. சூரியன் ஒளி வீசும், அது அப்படித் தான்.
கேள்விகளுக்கும் ஒரு வரம்பு (இதி) உண்டு. நீங்கள் கேட்டுகொண்டே இருந்தாலும் ஓரளவிற்கு மேல் விடை கிடையாது.

கே: உபவாஸ் (உண்ணாவிரதம்) என்பதன் பொருள் என்ன? அவ்வாறு உபவாசம் செய்யும் நாட்களில் என்ன வகையான உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்? பல்வேறு இடங்களில் மக்கள் வித்தியாசமானவற்றை மக்கள் உட்கொள்ளுகிறார்கள்.

குருதேவ்: நாம் அதிகமாக உணவு உட்கொள்ளும் போது தூக்கம் வருகின்றது. சோம்பலாக உணருகின்றோம். உபவாஸ் என்பதன் பொருள் அருகில் வாழ்தல் ( உப-அருகில், வாஸ்- வாழ்தல்) யாருக்கு அருகில்? தெய்வீகத்திற்கு அருகில். தெய்வத்திற்கு அண்மையில் அமர்ந்திருப்பது என்று பொருள். எப்போது உங்களால் தெய்வீகத்திற்கு அருகில் அமர முடியும்? உங்கள் வயிறு அதிக அளவில் நிரம்பி இருக்காத போது. உண்ணாவிரதம் என்பது வயிற்றுக்கு ஒய்வு தருவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.

பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் " நாடி அசந்தாஸ் துயோகோ ச்டினகிகண்டமனச்னத்ச்" என்று கூறுகின்றார். இதன் பொருள் பசியுடன்  இருப்பது நல்லதல்ல. தர்மசாஸ்திரங்கள் இதை விலக்குகின்றன. கிருஷ்ணர், யோகா என்பது உணவருந்தாதவனுக்கு உரியது அல்ல. அது போன்று அதிகமாக உண்பவனுக்கும் உரியதல்ல என்று கூறுகின்றார்.. எனவே எவ்வாறு விரதம் மேற்கொள்ள வேண்டும்? பழ உணவு அருந்தி மேற்கொள்ள வேண்டும்.

பழங்கள் சாப்பிடுங்கள்.அவை 20 முதல் 25  நிமிடங்களில் ஜீரணித்து விடும்.ஆகவே எளிதாக செரிக்கக் கூடிய உணவை எடுத்துக் கொள்ளுங்கள். வழக்கமான அளவை விடக் குறைவாக எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் எத்தனை நாட்கள் முடியுமோ அத்தனை நாட்கள் மட்டுமே விரதம் மேற்கொள்ளுங்கள்.உங்கள் உடல் கூறுவதைக் கவனியுங்கள்.

நீங்கள் கடவுளுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளவில்லை. உண்ணா நோன்பு ஆத்மாவிற்கும், உடல் சுத்திகரிப்புக்குமானது. உண்ணாவிரதத்தின் மூலம் கடவுளை மகிழ்விப்பதாக எண்ணினால் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். உண்ணாவிரதம் என்பது கடவுளை மகிழ்விப்பதற்கு அல்ல, அது ஒருவனது மனம், உடல், உள்ளத்தின் அடியுணர்வு தளம் இவற்றை சுத்திகரிப்பதற்கானது.

கே: தேவி சண்டிகாவின் வாகனமாக சவம் (உயிரற்ற உடல்) காட்டப் படுகின்றது. அதன் முக்கியத்துவம் என்ன?

குருதேவ்:  நீங்கள் உயிரற்ற உடல் என்று கருதுவது கூட முற்றிலும் அசைவற்றது அல்ல. அதிலும் அதிர்வு, விழிப்புணர்வு சக்தி இருக்கலாம். விழிப்புணர்வு என்பது ஓரளவிற்கு மேல் இல்லை என்றாலும் முற்றிலும் சக்தியற்றது என்று கூறுவது சரியல்ல. கல்லிலும் கூட சக்தி உண்டு. இந்தக் கருத்தைத் தெரிவிக்கும் பொருட்டு, உயிரற்ற உடல் சண்டிகையின் வாகனமாக காட்டப்பட்டுள்ளது. 

ஒன்று அடங்கும் போது மற்றொன்று எழுகின்றது. தமோகுணம் அழிக்கப்படும் போது சத்வகுணம் மலருகின்றது. உயிரற்ற உடல் என்பதாக குறிப்பிடப்படும் செயலின்மை நீங்கும் போது தெய்வீகத் தன்மை மலர்கின்றது .