காந்தி ஜெயந்தி அன்று குருஜியின் சொற்பொழிவு

அக்டோபர் 2, 2013



என் ஆசிரியருக்கு 116 வயது ஆகிறது. அவரைப் பற்றி உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். தென் ஆப்பிரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி திரும்பி வந்த பின் இவர் தான் மகாத்மாவுக்கு பகவத் கீதை கற்பித்தவர். பகவத் கீதையின் படி ஒருவர் நடுநிலையில் இருக்க வேண்டும். என் ஆசிரியர் மகாத்மாவை பற்றிச் சொன்னது பின் வருமாறு.

யெரவாடா சிறைச்சாலையில் மகாத்மா காந்தி, அவர் மனைவி கஸ்தூரிபாய் காந்தி மற்றும் என் ஆசிரியர் இருந்த போது நடந்த நிகழ்ச்சியைப் பற்றி அவர் சொன்னார். அன்று கஸ்தூரிபாய் காந்தியின் வாழ்வின் இறுதி நாள்.

கஸ்தூரிபாய் மரணப் படுக்கையில் இருந்தார். அவர் இருந்த அறையிலிருந்து மகாத்மா காந்தி வெளியில் வந்து என் ஆசிரியரிடம் “பெங்களூரி, இன்று என் வாழ்நாளில் ஒரு சோதனை தினம். இன்று நான் எப்படி நடுநிலையில் இருப்பேன் என்று பார்க்க வேண்டும். எல்லோரையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடியும்?” இன்று எனக்கு ஒரு சோதனையான தினம்” என்று சொல்லி விட்டு என் ஆசிரியரை பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்கச் சொன்னார். அவர் இரண்டாம் அத்தியாயத்தைப் படித்த போது, மகாத்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அன்று கஸ்தூரிபாய் காந்தி இவ்வுலகை விட்டு மறைந்தார்.

அப்போது மகாத்மா காந்திக்கு “ தான் எப்போதும் தன் மனைவியை தன் விருப்பப்படியே நடக்கச் சொல்லியதும், கஸ்தூரிபாய்க்கு தன் சொந்த விருப்பங்களை எடுத்துச் சொல்லவும் வாய்ப்பு அளிக்காமல் இருந்ததும்” புரிந்தது. கஸ்தூரிபாய் ஒரு சந்நியாசி போல் வாழ்ந்து, தன் கடைசி மூச்சு வரை எனக்கு சேவை செய்து வந்தாள்” என்று மகாத்மா காந்தி சொன்னார். இது யெரவாடா சிறைச்சாலையில் நடந்தது.

பகவத்கீதை மகாத்மாவுக்கு மிகவும் பிரியமான ஒன்றாக, வழிகாட்டியாக இருந்தது. காந்திஜி மத மாற்றத்தை எதிர்த்து நின்றார். ஆனால் இன்று யாரும் அதைப் பற்றிப் பேசுவதில்லை. அவர் மது அருந்துவதை எதிர்த்தார். இன்று அது பற்றி யாரும் பேசுவதில்லை. ஆடு மாடுகளை கொன்று தின்பதை எதிர்த்தார். அவர் மிகவும் கருணையுள்ளவராக வாழ்ந்தார். எல்லோரும் அஹிம்சையை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பசும்பால் கூட குடிக்க மறுத்தார். கன்றுக்குட்டிக்கு தான் பசுவின் பால் சொந்தம் என்று சொல்வார். ஒரு முறை பால் கறப்பதை பார்த்த போது ஒரு சொட்டு ரத்தம் வந்ததைப் பார்த்தார். பால் கறப்பவர் மிகவும் கடுமையாக பால் கறந்ததின் விளைவாக இப்படி நடந்தது. அன்றிலிருந்து பசும் பால் குடிப்பதை நிறுத்தி விட்டார். ஆட்டுப் பாலையே குடித்தார்.

மகாத்மா காந்தி இப்படிப் பட்ட அஹிம்சாவாதியாக இருந்தார். ஆனால் இன்று இந்தியா மாட்டு இறைச்சியை பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 78 லட்சம் மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்பட்டன.

மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறோம். ஆனால் அவர் சொன்னவற்றைப் பின் பற்றுவதில்லை. இது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். இந்திய இளைஞர்கள் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். அஹிம்சையைக் கடைப்பிடிக்க வேண்டும். மகாத்மாவின் கருணையை  பின்பற்ற வேண்டும். பிராணிகளிடம் கருணை காட்ட வேண்டும். மது அருந்தக் கூடாது. சத்சங்கங்களில் கலந்து கொள்ள வேண்டும். மகாத்மா காந்தி ஒவ்வொரு நாளும் சத்சங்கம் நடத்தினார். அதை பின்பற்றுவதே நாம் அவருக்குச் செலுத்தும் மரியாதையாகும். மத மாற்றங்கள் கூடாது. மக்களை பிற மதங்களுக்கு மாற்றுவதை மகாத்மா காந்தி எதிர்த்து வந்தார்.  ஆனால் இன்று பிராணிவதை, மதுப்பழக்கம் மற்றும் மதமாற்றம் முதலியவை இந்தியாவில் நடந்து வருகின்றன.