தீவிரமான அக உள்நிலை மாற்றம்...


செப்டம்பர் 22 - 2012  - ஆச்சேன் - ஜெர்மனி 



இன்று நமது தலைப்பு ஐ டி - புதிய கோணங்கள்




என்னை பொறுத்த வரையில் ஐ டி என்றால் அக உள்நிலை மாற்றம். (Inner Transformation). நீங்கள் ஐ ஐ டி என்று குறிப்பிடுவது,தீவிரமான அக உள்நிலை மாற்றம் (Intense Inner Transformation). நமது உடல், மனம், மூச்சு எல்லாமே ஒரு தொழில் நுட்ப இயல்தாம்.நமது உடல் ஒரு இயந்திரம். விழிப்புணர்வு நிலை தான் அதை இயக்குகிறது. உடல் உருவாவதற்கும் இந்த விழிப்புணர்வு நிலையே காரணம்.நாம் அதை இன்று அலட்சியப் படுத்தி விட்டோம்.அதை சற்று கவனித்தால் வாழ்வில் ஒரு புதிய கோணத்தைக் காணலாம்.

விழிப்புணர்வு நிலையால் தான் இன்று உலகில், தொழில் நுட்பம்  உருவாகி  இருக்கிறது. ஒரு சிலரின் மனதில் புதிய எண்ணங்கள் தோன்றி அவை தொழில் நுட்பமாக உருவெடுக்கின்றன. அத்தகைய எண்ணங்கள்  எவ்வாறு  தோன்றின? அந்த எண்ணங்கள் எவ்வாறு தொழில் நுட்பமாக  உருவெடுத்தன? விழிப்புணர்வு மூலமாகத்தான்.

இன்று நம்மிடம் கை பேசிகள் உள்ளன. இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கை பேசி என்பதே கிடையாது.எப்படி கை பேசிகள் உருவாயின? யாரோ ஒருவரின் விழிப்புணர்வில் கை பேசியை உருவாக்கும் எண்ணம் தோன்றியது. அதே விழிப்புணர்வு அந்த எண்ணம் வளர்ச்சியடைய உதவிற்று.அல்லவா? இந்த விழிப்புணர்வுதான் எல்லா விதமான படைப்பாற்றல், அறிவியல் கண்டுபிடிப்புகள், இசை வடிவங்கள், கலைகள், நாகரீக நடை உடை பாவனைகள், திரைப்படங்கள் மற்றும் உங்கள் கருத்தை கவரும் மற்ற எல்லாவற்றுக்கும் காரணமானது.

அறிவியல் கண்டுபிடிப்புகள்,கலைகள் ஆகியவற்றுக்கு அடிப்படையான இதே விழிப்புணர்வு நிலை தான் ஆனந்தத்திற்கும் நிலைக் களஞ்சியமாகும். மேலும் விழிப்புணர்வு தான், ஆரோக்கியம், அன்பு, கருணை ஆகிய அனைத்துமாக வெளிப்படுகின்றது. நமது மூளையில் உருவாகும் இந்த விழிப்புணர்வு நிலை, நமது உடலில் பல பகுதிகளிலும் இயங்கி பல்வேறு திறன்களை வெளிப்படுத்துகின்றது. இது தவிர இவ்விழிப்புணர்வு நிலை, அறிவுபூர்வமான தர்க்கம், உணர்ந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், உருவாக்குதல், ஆகியவற்றையும், அன்பு, கருணை, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றை ஒரு கைபேசியின் நிகழ்ச்சி அமைப்புத் திட்டத்தை போன்று  வெளிப்படுத்தவும் செய்கிறது.

ஒரு கைபேசியின்  நிகழ்ச்சி அமைப்புத் திட்டத்தை பாருங்கள் அதில் ஒளிப்படக்கருவி,
(குருதேவ் கூடியிருக்கும் மக்களைப் படமெடுக்கிறார்) Twitter, (உங்களுக்கு என் twitter முகவரி தெரியுமா?@srisrispeaks) குறுந்தகவல், தொலைபேசி எண்கள் தொகுப்பு, கடிகாரம், இசை இயக்கி, (குருதேவ் கைபேசியில் பாடல் ஒன்றை இயக்கிக் காட்டுகிறார்). இப்போது இதை எவ்வாறு நிறுத்துவது என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் ! (ஒரு பொத்தானை அழுத்தி இசையை நிறுத்துகிறார்)  சில சமயங்களில் நமது மன எண்ண ஓட்டங்கள் இயங்கிக் கொண்டே இருக்கிறது அதை எப்படி நிறுத்துவது என்பதே தெரியவில்லை அல்லவா?

கைபேசியில்  நிகழ்ச்சி அமைப்புத் திட்டத்தை போன்றே நமது மூளையிலும் செயல்பாடுகள் உள்ளன. ஒன்றல்ல பல செயல்பாடுகள்.நமது விழிப்புணர்வு நிலையை இவை ஒவ்வொன்றிற்கும் திறந்து  நாம் செயல்படலாம். கலை அல்லது இசைக்கு மட்டுமே செயல்படுத்தினால் வாழ்வு முழுமை பெறாது.அறிவியல் தர்க்கம் இவற்றிற்கு மட்டுமே  செயல் படுத்தினாலோ அல்லது கேளிக்கைகளுக்கு மட்டுமே செயல் படுத்தினாலோ  வாழ்க்கை முழுமை அடையாது. ஒரு கை பேசியை இயக்கி அதன் பல்வேறு அமைப்பு  இயக்கங்களைப் பயன்படுத்துவது போல, இயற்கை அளித்துள்ள எல்லாத் திறன்களையும் இயக்கி செயல்படுத்த வேண்டும்.

நமக்குள் ஒரு எளிமை இருக்கிறது.நாம் அனைவரும் பிறக்கும்போது களங்கமில்லா எளிமையுடனேயே பிறந்திருக்கிறோம்.ஆனால் வளரும் போது அதை எங்கோ தொலைத்து விட்டோம்.நாம் வளரும் போது, புன்முறுவல், எளிமையாக இயல்பாக இருத்தல்  ஆகிய அனைத்தையும் நிறுத்தி  விட்டோம் அல்லவா?

ஆகவே, நுண்மையான உணர்ச்சி மற்றும் கூருணர்வு ஆகிய இரண்டும் அவசியம்.
தர்க்கரீதியான பகுத்தறிவு அவசியம். ஒருவர்  கூறுவதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டாம்.உங்கள் அறிவைப் பயன்படுத்தி யோசியுங்கள்.அதுவே மனிதப்பிறவியின் முதன்மையான செயல்பாடு. எது ஒன்று பகுத்தறிவுக்கு  முரண்பாடானதாக இருக்கின்றதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.பகுத்தறிவு என்பதே முதன்மையானது; இதுவே நுண்மையான உணர்ச்சிக்கு வழி வகுக்கும்.

நுண்மையான உணர்ச்சி மட்டும் இருந்தால் போதாது.கூருணர்வும் மிக அவசியம்.கூருணர்வு என்பது இதய பூர்வமானது.நீங்கள் தர்க்க ரீதியாக சிறப்பாக சிந்திக்கலாம், ஆனால் மற்றவர் கருத்துக்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.பல சமயங்களில் தாங்கள் சிந்திப்பதையே செயலிலும் காட்டுவார்,அதனால் அவர்கள் சரியாக செயல்பட்டாலும் மற்றவர்களைப் புண்படுத்திவிடலாம்.

மிகுந்த கோபத்தைக் காட்டும் ஒருவர் தனது  கோபத்திற்கான காரணத்தை தர்க்கரீதியாக நியாயப் படுத்தினாலும் அவரது கோபம் மற்றவரைப் புண்படுத்தலாம். பிறரை மட்டுமல்ல அவரையே அது காயப்படுத்தலாம். ஆகவே கூருணர்வு என்பது இரண்டாவது முக்கியமான விஷயம்.

அன்றொரு நாள் ஒரு நிகழ்ச்சியின் பொது ஒரு பெண்மணி, சரியாக வேலை செய்யாத மற்றொரு  பெண்ணைத் திட்டிக்கொண்டிருந்தார். நான் அவரிடம் " நீங்கள் திட்டுவதால் அவர் மாறி விட்டாரா?” என்று கேட்டேன். அதற்கு அவர் "இல்லை" என்று பதில் கூறினார். "அப்போது அந்தப்பெண்ணைத் திட்டுவதால் என்ன பயன்? நீங்கள் உங்கள் உருப்படிவைத் தான் குலைத்துக் கொள்கிறீர்கள். சரியான, ஆக்கபூர்வமான கருத்தை கூட பெண்ணிடம் கோபமாகத் திட்டிக்கொண்டே சொல்வதனால் அவர் அதை ஒதுக்கித்தள்ளி விடுகிறார். அவருக்கு எதை உணர்த்த வேண்டும் என்று நீங்கள் திட்டுகிறீர்களோ, அதை அடைய முடியாவிட்டால் என்ன பயன்? என்று கேட்டேன்.அதற்கு அவர் " ஆம் மிகச்சரியாகக் கூறினீர்கள். நான் என் வாழ்கை முழுவதும் இப்படியே கோபப்பட்டு என்னைச் சுற்றிப் பல எதிரிகளை அடைந்து விட்டேன் என்றார்."

அதனால்தான் ஒரு கழுதையானது  குதிரை மாதிரி ஓடும் என்று எதிர்பார்க்கக் கூடாது" என்றேன். ஒரு கழுதையின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அது குதிரையைப் போல ஓடும் என்று எதிர்பார்த்தால் அது முடியாது.ஆகவே கழுதையைக் கழுதையாகவும், குதிரையைக் குதிரையாகவும் ஏற்றுக்கொள்ளுங்கள்.அப்போது கோபம் எப்படி வரும்?இதுதான் கூருணர்வு. மற்றவர்களின் உணர்வுகளையும்,தேவைகளையும் கூருணர்ந்து கொள்ளுதல்.இது இதய பூர்வமான குணமாகும்.

மிகவும் உணர்ச்சிபூர்வமாக செயல்படும் மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள்  பகுத்துணர்வை இழந்து விடுகிறார்கள். உணர்ச்சி வயப்பட்டு நீரில் மிதக்கும் நூலடை போன்று ஆகிவிடுகிறார்கள். இதுவும் சரியான நிலையல்ல. அறிவுபூர்வமாக செயல்படுவதற்கும் உணர்வுபூர்வமாக செயல்படுவதற்கும் மிகச்சரியான சமநிலை இருக்க வேண்டும். என்ன? நான் கூறுவது சரியா?

(சபையோர் "ஆம் ! சரி ! என்கிறார்கள்).

ஆகவே .நுண்மையான உணர்ச்சியும் கூருணர்வும் சரியான சமநிலையில் இருக்க வேண்டும் என்பது விழிப்புணர்வுத் தொழில்நுட்பத்தின் முதல் நிலை செயற்கூறு.  அடுத்தபடியாக  சாந்தம்.ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்வில் ஏதாவது ஒரு கால கட்டத்தில் சில நொடிகள் அல்லது மணித்துளி கலேனும் சாந்தமான மன நிலையை உணருகிறார்.அந்த நிலையில், நிசப்தம் ஆன்மீக உணர்வு ஆகியவற்றை அனுபவிப்பது சாத்தியமாகிறது. நமது கைபேசிகளில் இந்த "நிசப்தம்''என்னும் செயல்பாடு அணைக்கப்பட்டு விடுகிறது! அல்லது பயன்படுத்தப் படுவதில்லை! நமது விழிப்புணர்வு நிலையிலும் இது பயன் படுத்தப்படுவதில்லை.ஆழ்ந்த அமைதியான  சாந்த நிலை என்பதை அடையத் தான்  வாழும் கலை உதவுகிறது. உங்கள் புன்முறுவலை கூடுதலாக்கித் தொண்டுணர்வை அதிகமாக்குகிறது. 

உங்களுக்குத் தெரியுமா?  ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 400 முறை புன்னகை புரிகின்றது.  ஒரு இளம்வளர் பருவத்தில் இருப்பவர் ஒரு நாளைக்கு 17 முறை மட்டுமே புன்னகை செய்கிறார். பெரியவர்கள் எப்போதும் சிரிப்பதே இல்லை. மேலும் மேலும் புன்னகையுடன்  இருப்பது என்பதையே வாழும் கலை உங்களுக்கு அளிக்கின்றது. புன்னகையோடிருத்தல் பிறருக்கு சேவை செய்தல்; உணர்ச்சிவசப்படுதல்  அதே சமயம் அறிவுக்கூர்மையுடன் இருத்தல்; அமைதி, தெளிவு இரண்டையும் அனுபவித்து உணர்தல் இவையனைத்துமே வாழும் கலை. 

கே:  குருதேவ், ஒழுக்கம், சுதந்திரம் ஆகிய இரண்டிற்கும் இடையே ஒரு சமன்பாட்டை  ஏற்படுத்திக் கொள்வது எப்படி?

குருதேவ்: அவை இரண்டும் எதிர்மறையானவை போல் தோன்றினாலும் இரண்டும் ஒன்றை ஒன்று முழுமைப்படுத்துபவை. ஒழுக்கம் நமக்கு சுதந்திரத்தை கொடுக்கின்றது.குழந்தைப் பருவத்திலிருந்து ஒவ்வொரு நாளும் காலையிலும் இரவிலும் பல் தேய்த்தல் என்று நாம் கடைப்பிடித்து வந்த ஒழுக்கம் பல்வலி பற்சிதைவு  போன்றவற்றிலிருந்து நமக்கு விடுதலை அளித்திருக்கின்றது. இல்லையா? தவறாமல் மிதி செக்குருளை  பயிற்சி செய்யும் ஒழுக்கம் உங்களுக்கிருந்தால், உங்களுக்கு அதிகப்படியான கொழுப்பு மற்றும் பிற பிரச்சினைகளிலிருந்து விடுதலை அளிக்கும்.

கே:  அனைத்துமே அமைதியான பின் என்ன  ஏற்படும்? அது மரணத்திலிருந்து எவ்வாறு வேறுபடும்?

குருதேவ்: மிகப்பெரிய வித்தியாசம் இருக்கின்றது. அமைதி என்பது அனைத்து படைப்புத் திறனுக்கும் அன்னை போன்றது. அழகு, அன்பு ஆகியவற்றின் பிறப்பிடமும் அமைதிதான்.  உள்ளுணர்வு, புதிய கண்டுபிடிப்புகள், கவிதை  போன்ற அனைத்துமே அமைதி  நிலையிலிருந்து உருவாகின்றவை தான். சுதர்ஷன கிரியா கூட மௌனத்திலிருந்து உருவானது தான். உங்களில் பலர் சுதர்ஷன கிரியாவை அனுபவித்திருக்கின்றீர்கள். அதன் அருமையான பலன் உங்களுக்குத் தெரியும். 

இந்த முறை சுற்றுப்பயணத்தில் நான் தென்னிந்தியாவிலிருந்து தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, வட அமேரிக்கா, ஐரோப்பா போன்ற இடங்களுக்குச் சென்றேன். ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் நான் எல்லா இடங்களுக்கும் சென்றிருந்தேன்.   பிரேசில், அர்ஜென்டினா ஆகிய இடங்களில் இருந்த சிறைச்சாலைகளுக்கு நான் சென்றிருந்தேன். அர்ஜென்டினாவில் 5200 சிறைக் கைதிகள் வாழும் கலைப்பயிற்சியும்  சுதர்ஷன கிரியாவும் செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரின் கண்களிலும்  கண்ணீர் நிறைந்திருந்தது. கண்ணீர் இல்லாமல் வறண்ட கண்களுடன் ஒருவர் கூட இல்லை. அவர்களது வாழ்க்கையில் ஒரு மாபெரும் மறுமலர்ச்சியினை அவர்கள் உணர்ந்திருக்கின்றனர். அவர்கள் சொன்னார்கள், " நாங்கள் முன்பு வெளியே இருந்தோம்.  ஆனால் சுதந்திரமாக இல்லை. இப்பொழுது நாங்கள் சிறைச்சாலைக்கு உள்ளே இருந்தாலும்  சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றோம். மிகவும் நன்றி. இந்த பயிற்சி எங்கள் வாழ்க்கையை முழுமையாக மாற்றி உள்ளது.

உங்களுக்குத் தெரியுமா? என்னுடன் சிறைச்சாலையை பார்வையிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வந்திருந்தனர். அவர்கள், "குருதேவ், இங்கே  நடந்திருப்பதை நம்பவே  முடியவில்லை. இதே போல் எல்லா சிறைச்சாலைகளிலும் நடக்கவேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம்" என்று சொன்னார்கள். இந்த மறுமலர்ச்சியினைக் கண்டு அந்தப் பல்கைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. ஒரே நாளில் நான் அந்தப் பல்கலைக்கழகத்தின்  பழைய மாணவர்களில் ஒருவனாகி விட்டேன். நான் இதை ஏன் சொல்கிறேன் என்றால் நம்மால் ஒரு வன்முறையில்லாத சமுதாயத்தை உருவாக்க முடியும். வன்முறையில்லாத சமுதாயம்,  நோயற்ற உடல், குழப்பமில்லாத மனம், தங்கு தடையற்ற அறிவு, துயரமில்லாத ஆன்மா ஆகியவையே  என்  நோக்கங்கள் ஆகும்.    

இன்று உலகில் என்ன பைத்தியக்காரத்தனங்கள்  நடக்கின்றன என்று பார்த்தீர்களா?  யாரோ ஒருவர் தயாரித்த திரைப்படத்தின் விளைவாக நாடுகள் பற்றி எரிகின்றன. ஏன்?  ஏனென்றால் அவர்களுக்கு மிகவும் அவசியமான கல்வியறிவு, வன்முறையின்மை பற்றிய அறிவு அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. 

கே: ஒரு குருவைப் பின்பற்றுவது என்பது இன்றும் அவசியமா?

குருதேவ்: இந்தக் கேள்வி எதற்கு? இதைக் கேட்பதன் மூலம் நீங்களாகவே ஒரு பொறியில் அல்லது வலையில் சிக்கிக் கொள்ளுகின்றீர்கள். நான் இக்கேள்விக்கு ஒரு பதில் அளித்து அதை நீங்கள் ஏற்றுக்கொண்டால் நீங்கள் ஏற்கெனவே குருவைப் பின்பற்றுவதாக அர்த்தம்.  நான் குருவைப் பின்பற்றுவது அவசியமில்லை என்று சொல்லி  நீங்கள் அதனை ஏற்றுக்கொண்டு "சரி  நான் பின்பற்ற மாட்டேன்" என்று சொன்னால் நீங்கள் என் சொல்லை பின்பற்றுவதாக அர்த்தம். நான் சரி  குருவைப் பின்பற்றலாம் என்று சொல்லி நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் குருவை பின் பற்றியதாக அர்த்தம். ஆகவே நான் "இல்லை, வேண்டாம்" என்று சொல்வதே மேலானதாக இருக்கும். மிகவும் சுவாரசியமான கேள்வி.

கால் பந்தாட்டம் விளையாடுவதற்கு ஒரு பயிற்சியாளர் தேவை. உதை பந்தாட்ட வீரர் ஒவ்வொருவருக்கும் ஒரு பயிற்சியாளர் தேவை எந்த இசை எந்த விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் பயிற்சியாளர் தேவை. பள்ளிக்குச் செல்லும்போது நீங்கள் ஏதேனும் பாடத்தில் பலவீனமாக இருந்தால் ஒரு பயிற்சியாளர் அவசியம். அதே போல் தியானம் செய்தல், ஆன்மிகம் கற்றல் ஆகியவற்றின் ஆரம்ப நிலையில் ஒரு சிறிதளவு வழிகாட்டுதல் அவசியம். இல்லையா? ஆகவே தான் குருவைப் பின்பற்றுதல் அவசியம். நீங்கள் அவசியமில்லை என்று உணர்ந்தால் அது உங்கள் விருப்பம்.

கே: நான் செய்த ஒரு தவற்றின் குற்ற உணர்விலிருந்து என்னை விடுவித்துக்கொள்வது எப்படி? 
குருதேவ்:  தியானத்தின் மூலம் தான்.

கே: இங்கே ஐரோப்பாவில் தீர்த்து வைக்கப்பட வேண்டிய மிகப்பெரிய பிரச்சினை எது?

குருதேவ்:  ஐரோப்பாவில் 30 முதல் 40 சதவீதம் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கின்றார்கள் என்று நான் கேள்விப் பட்டிருக்கின்றேன். பலர் Prozac மருந்துகளைப்  பயன்படுத்துகின்றனர். பல சிறுவர்கள் ஆடிசத்தினால் (autism)  பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இது மிகவும் வருத்தமளிக்கும் ஒரு விஷயம்.நாம் இதனை கவனிப்பது மிகவும் அவசியம். 

ஆகவே தான் தியானம், சுதர்ஷன் கிரியா,போன்றவை அவசியம். அவற்றை வாழ்க்கையில்  கடைபிடிக்கும்போது மகிழ்ச்சிகரமான ஒரு சமுதாயம் உருவாகும். இவற்றின் மூலம் ஒரு சந்தோஷ அலையை உருவாக்க முடியும் என்பது நிச்சயம். 

கே: நான் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறேன். அதனால் என் மூச்சு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. அப்படியிருக்க, வாழும் கலை பயிற்சி எந்த விதத்தில் சிறப்பானது?  இந்தப் பயிற்சி எனக்கு அளிக்கக்கூடியதை உடற்பயிற்சி அளித்துவிடும் என்று நான் நினைக்கின்றேன்.  இந்தப் பயிற்சி எனக்கு எந்த விதத்தில் உதவக்கூடும் என்று தயவு செய்து விளக்குகின்றீர்களா? 

குருதேவ்: இந்த பயிற்சி உங்களுக்கு பல வழிகளில் உதவக்கூடும். அதனால் தான் இது இத்தனை பிரபலமாக இருக்கின்றது. உலகில் பல கோடி மக்கள் இப்பயிற்சியினை  செய்கின்றார்கள் என்றால் அதில் ஏதோ ஒன்று இருக்க வேண்டும். 

அது மிகவும் ஆழ்ந்த, பரந்த, செறிவான அதே சமயம் மிகவும் எளிமையான ஒரு பயிற்சி.
இது வெறும் உடற்பயிற்சி மட்டுமில்லை.இது நம் சக்தியின் ஆன்மீக மேம்பாட்டுடன் கூடிய ஒரு  உடற்பயிற்சி. நீங்கள் இந்த பயிற்சி முடிந்து வெளியில் செல்லும்போது ஒரு பெரிய புன்னகையுடனும் மனதில் பெரும் திருப்தியுடனும் வாழ்க்கையில் ஒரு புதிய கோணத்தில் செல்வீர்கள் என்பது நிச்சயம்.   

நம் மனதில் நிறைய பாரபட்சங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். நாம் அவற்றை விட்டுவிட வேண்டும். நாம் உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் உணவை ஏற்றுக் கொள்கின்றோம். உலகின் அனைத்துப் பகுதியிலிருந்தும் இசையை ஏற்றுக்கொள்கின்றோம்.  ஆனால் அறிவு, மானுடம் சார்ந்த ஞானம் என்று வரும்போது மட்டும் பாரபட்சம் பார்கின்றோம். நாம் இந்த பாரபட்சங்களை வென்று வர வேண்டும். ஒவ்வொருவரும் என்னைச் சேர்ந்தவர்கள், இந்த உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்று உணர வேண்டும்.