சற்று நிதானித்துப் பாருங்கள் ! வாழ்கை எங்கே போகிறது?



 லீமா - கிழக்கு ஆப்ரிக்கா - 14 செப்டம்பர் 2012

இன்று நாம் என்ன விவாதிக்கலாம்? 

நான் பேச்சாளரின் பங்கை எடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கவனிப்பவர்களாக இருக்கிறீர்கள். நீங்கள் எதைப்பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று அறிய விழைகிறேன். என்ன தலைப்பு என்று யோசியுங்கள். நமக்கு விருப்பமானதைப் பேசும்போது நாம் இயல்பான சூழ்நிலையில் இருப்பது நல்லது. முறை சார்ந்த, கட்டுப்படுத்தப்பட்ட சூழல் மெய்யறிவுக்கு உகந்ததல்ல. நான் எப்போதுமே இயல்பாகவே எதையும் செய்ய முற்படுவேன். ஆகவே நாம் அனைவரும் நம்மை சுற்றி -முன்னால், பின்னால் மற்றும் அருகில் அமர்ந்திருப்பவர்களை  வாழ்த்தி அவர்களை அறிமுகம் செய்து கொள்வோம். 

இப்போது ஒன்று கேட்க விரும்புகிறேன்? 

உண்மையாகவே நீங்கள் சுற்றி இருப்போர்க்கு  வாழ்த்தை தெரிவித்தீர்களா  அல்லது ஒரு சம்பிரதாயத்திற்காக செய்தீர்களா? இதை  நீங்கள் உங்களைச் சுற்றி இருப்போர்களிடம் ' நான் சம்பிரதாயத்திற்காகவே வாழ்த்தினேன் என்று கூற வேண்டாம். உங்களை நீங்களே நான் உண்மையாகவே வாழ்த்தினேனா என்று   கேட்டுக் கொள்ளுங்கள்.  விமானத்திலிருந்து இறங்கும் போது விமானப் பணிப்பெண் "இந்த நாள் நல்ல நாளாக அமையட்டும் " என்று வாழ்த்துகிறாள். அது உதட்டளவே ஆகும். ஆனால் நமது அன்னை, சகோதரி அல்லது நெருங்கிய நண்பர் இதையே கூறும்போது அதில் அதிர்வலைகள் உள்ளன. ஒருவர் அன்பைப் பற்றி இரண்டு மணி நேரம் பேசலாம். அதுவே ஒரு குழந்தையோ, நாயோ பேச்சு எதுவும் இன்றி அதிர்வலைகள் மூலமே அன்பை உண்மையில் வெளிப்படுத்த முடியும்.
 

மன அழுத்தத்துடன் இருக்கும் மக்களிடையே நீங்கள் சென்றமர்ந்தால் உங்களுக்கும் மன அழுத்தம் ஏற்படுவது போன்று இருக்கும்.அது போல்  மகிழ்ச்சியுடன் இருப்போர் மத்தியில் நீங்களும் மிகுந்த சந்தோஷமாக இருப்பீர்கள். உலகம் முழுமையும் அதிர் வலைகள் நிரம்பியது. நமது மனம், உடல், எண்ணங்கள் உணர்வுகள் அனைத்துமே அதிர்வலைகளை கொண்டவை ஆகும்.ஆனால் இந்த அதிர்வலைகள் மூலம் நமது நேர்மறை  உணர்வை அதிகரித்துக் கொள்ள நாம் எதுவுமே செய்வதில்லை. அல்லவா? எது  நமது அதிர்வலைகள் நேர்மறை உணர்வுகளை தூண்டுகிறது?  தியானம். மூச்சுப் பயிற்சியினால் தியானம் நிலைப்படுகிறது. தியானம் செய்ய மலைப்பகுதி களுக்கோ, இமாலயத்திர்க்கோ செல்ல வேண்டும் என்பதில்லை. உங்கள் வீட்டிலேயே செய்யலாம்.
 
 
 
தியானத்தின் பயன்கள் என்ன? ஏன் செய்ய வேண்டும்? நான் ஏற்கனவே கூறிய படி அதிர்வலைகள் நேர் மறை உணர்வுகள்  ஆகின்றன.
சில சமயங்களில் நாம் சிலரை சந்திக்கும்போது ஒரு எதிர்ப்புணர்வு ஏற்பட்டு அவர்களுடன் பேசுவதைத் தவிக்க விரும்புகிறோம். இதை கவனித்திருக்கிறீர்களா? வேறு சிலரை சந்திக்கும் போது, விருப்பத்துடன் அவர்களிடம் நிறைய அளவளாவ விழைகிறோம். இதுவும் அதிர்வலைகளினால் தான். அது போலவே சில சமயங்களில் சரியான எண்ணங்களும் சில சமயங்களில் முற்றிலும் தவறான சிந்தனைப் போக்கும் ஏற்படுகின்றன. அல்லவா? நமது விழிப்புணர்வு நிலையை அறிந்து கொள்ளாமலே இருளில் நடப்பது போன்ற நிலையில் இருக்கிறோம்.  உங்கள் உள்ளுணர்வுகளை அறிந்து கொண்டால் வாழ்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும், ஆரோக்கியம் மேம்படும், உறவுகள் பலப்படும், வன்முறை உணர்வுகள் குறையும். விருப்பங்கள் ஈடேறும்.
 

நான்கு வகையான மக்கள் இருக்கிறார்கள். முதல் வகை ஆசைகள் மேலும் மேலும் வளர்ந்து எதுவுமே நிறைவேறாமல் இருப்பவர்கள்.

இரண்டாவது வகை விருப்பங்கள் நிறைவேற அதிகம் உழைத்து நீண்ட காலத்திற்குப் பின்னர் அவை நிறைவு அடைவதைக் காண்பவர்.

மூன்றாவது, அதிக உழைப்பின்றி உடனடியாக தங்கள் ஆசைகள் நிறைவேறுவதைக் காண்பவர்.

நான்காவது, ஆசைகள் என்று ஆரம்பிக்கும் போதே அவை ஏற்கனவே நிறைவேறிய நிலையில் இருப்பதைக்  காண்பவர். 

இவற்றில் எந்த வகையில் இருக்க விரும்புகிறீர்கள்? நான்காவது ! சரியா? ஆம் இவர்கள் மிகுந்த அதிர்ஷ்டசாலிகள். தாகம் என்று உணருமுன்பே தண்ணீர் தயாராக இருப்பதைப் போன்ற நிலை. இந்தியாவில்  ஒரு பழமொழி உண்டு. ''பல்லிருந்தபோது கடலை இல்லை. கடலை கிடைத்த போது பல்லில்லை''. நம்மில் பலர் இந்த நிலையில் இருக்கிறார்கள். மிக அதிகமாக உழைத்து சம்பாதித்து, பணம் அனைத்தையும் வங்கிகளில் சேமித்து,  இறந்து விடுகிறாகள்.அவர்களுடைய குழந்தைகள் தங்கள் பெற்றோர் விட்டுச் சென்ற பணத்திற்காக சண்டை இட்டுக்கொள்கிறார்கள்
 

உலகில் 70 % நீதிமன்ற வழக்குகள் சொத்துரிமை வழக்குகள் தாம். யாருமே தாம் சம்பாதித்ததை அடைய வழக்காடுவதில்லை. தங்களுடைய மக்கள் ஒருவருடன் ஒருவர் சண்டை இட்டுக் கொள்வதற்காகவே  ஈட்டிய பணத்தை வங்கியில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இது புத்திசாலித்தனமான செயலா? நமது ஆரோக்கியத்தின் பாதியை சம்பாதிப்பதற்காக செலவிட்டு, சம்பாத்தித்த பணத்தில் பாதியை ஆரோக்கியத்தை மீட்டுக் கொள்வதற்காக செலவழிக்கிறோம்.
 

இது சாமத்தியமும் அல்ல, சிக்கனமானதும் அல்ல. வாழ்க்கை எங்கே போகின்றது  என்று   நாம் அறிந்து கொள்வது அவசியம். புத்திசாலித்தனமான  கோமாளி  ஒருவரை பற்றி ஒரு கதை இருக்கின்றது. அவர்  ஒரு கழுதையின் மேல்  உட்கார்ந்து கொண்டிருக்க  அந்தக் கழுதை  ஓடிக்கொண்டிருந்தது. அது  பல முறை  சுற்றிச் சுற்றி அதே தெருக்களிலேயே  ஓடிக் கொண்டிருந்தது. கழுதையின் மேலிருந்த இந்தக் கனவானை  ஒருவர் " நீங்கள் மேலும் கீழும் பல முறை சென்று கொண்டிருப்பதைப் பார்க்கின்றேன். நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அவர் "எனக்குத் தெரியாது. கழுதையைக் கேளுங்கள்" என்று சொல்கிறார். பல நேரங்களில் நம் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கின்றது. நாம் வேலை செய்து கொண்டே இருக்கின்றோம். நோக்கம் என்ன என்பது தெரியாமலேயே பல செயல்களை செய்து கொண்டிருக்கின்றோம். இந்த இயற்கை நமக்கு அளித்திருக்கும் அனைத்தையும்  அனுபவிக்காமல் எதையோ செய்து கொண்டிருக்கின்றோம். 
 

மனம் கசப்புணர்வோடு இருக்கும் போது இந்த உலகில் எங்குமே  நீங்கள் மகிழ்ச்சியைக் காண முடியாது. ஆனால் மனம் இனிமையாக இருக்கும் போது எல்லா இடங்களிலும் இனிமையைக்  காண்பீர்கள்.  ஆகவே, நம்முள்ளே  ஆழத்தில் புதைந்திருக்கும் மகிழ்ச்சியை கண்டுகொள்வதே தியானம் என்பதாகும். அதை கண்டுகொண்டவுடன் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புவீர்கள் தெரியுமா? அந்த  ஆனந்தத்தை  எல்லோருக்கும் அளிக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். 

"உங்கள் நோக்கம் என்ன?  நீங்கள் ஏன்  எல்லா நேரமும் உலகைச் சுற்றி எல்லா இடங்களுக்கும் ஓடிக்கொண்டிருக்கின்றீர்கள்? உங்களுக்கு என்ன கிடைக்கின்றது?" என்று மக்கள் என்னைக் கேட்கின்றனர். நான் அவர்களை கேட்கின்றேன்  நீங்கள் ஒரு அருமையான திரைப்படத்தைப்  பார்த்தால்  என்ன செய்கிறீர்கள்? உங்கள் அறையில் அமைதியாக உட்கார்ந்து கொண்டிருப்பீர்களா, அல்லது தொலைபேசியை எடுத்து உங்கள் நண்பர்களை அழைத்து "! மிக அருமையான படம்.  நீங்கள் கட்டாயம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்" என்று சொல்வீர்களா? அப்படிச் சொல்வதனால் உங்களுக்கு என்ன கிடைக்கின்றது?  திரைப்படத் தயாரிப்பாளர்கள் உங்களுக்கு ஏதேனும் பணம்  தருகிறார்களா? அல்லது திரைப்பட நடிகர்கள் ஏதேனும் பணம் தருகிறார்களா? நீங்கள் செய்யும் தொலைபேசி அழைப்புகளிலிருந்து  உங்களுக்கு என்ன கிடைக்கின்றது? நீங்கள் ஏன் அப்படிச் செய்கின்றீர்கள் என்றால் பிறருடன்  பகிர்ந்து கொள்வதே ஆனந்தத்தின்  இயல்பு.  அதனால்தான்  அப்படிச் செய்கின்றீர்கள்.  பகிர்ந்து கொள்வதே  ஆனந்தத்தின் இயல்பு .

மகிழ்ச்சியில்  இரண்டு வகைகள் இருக்கின்றன. பற்றிக்கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சி ஒரு வகை. இந்த மனப்பான்மையுடன்தான்  நாம் குழந்தைகளாகப் பிறக்கின்றோம். ஒரு குழந்தையை இங்கே விட்டால், அது சென்று அந்த மலரைப் பறிக்கும்.  இந்த தாளை  இழுக்கும்;  நாற்காலியை இழுக்கும்; அனைத்தையும்  தலை கீழாக மாற்றும்; பொருட்களைப் பற்றிக்கொள்ளும். ஒரு குழந்தை எல்லாவற்றையும் ஒரு கத்தியைக் கூடப் பற்றிப் பிடித்து வைத்துக்கொள்ளும். தன் கையைக் காயப்படுத்திவிடும் என்று தெரியாமல் ஒரு கத்தியைக்கூட  ஒரு குழந்தை பற்றிக்கொள்ளும். ஆனால் புத்திசாலித்தனமான  தாய்மார்கள் கத்தியிலிருந்து குழந்தையின் பிடியைத் தளர்த்துவதற்கென வேறு ஒரு பொருளைக் குழந்தையின் கையில் கொடுப்பார்கள். இல்லையா? 

குழந்தைகள் நல்லவை அல்லாதவற்றை பிடித்து வைத்துக் கொள்ளும் போது நீங்கள் அவர்களுக்கு வேறு ஏதாவது ஒன்றைக் கொடுக்கின்றீர்கள். ஆக, இவ்வாறு  பெற்று, பற்றிக்கொள்வது ஒரு விதமான மகிழ்ச்சி; குழந்தைத்தனமான  மகிழ்ச்சி.
மற்றொரு விதமான மகிழ்ச்சி கொடுப்பதினால் வரும் மகிழ்ச்சி. 
இங்குள்ள பல பெண்கள், குழந்தைகளோ, அல்லது விருந்தினர்களோ வீட்டிற்கு வருகிறார்கள் என்றால் என்ன செய்கிறீர்கள்? பல விதமான உணவு வகைகளை சமைத்து மேசையின் மேல் அலங்காரமாக வைக்கிறீர்கள். ஒரு அன்னையாக உங்களது மகிழ்ச்சி அப்படிக் கொடுப்பதில் இருக்கின்றது இல்லையா? தாத்தா பாட்டிகள்  சிறுவர்களுக்கு  அன்போடு பரிசுப் பொருட்களை கொடுத்து மகிழ்கிறார்கள். இது ஒரு பக்குவமடைந்த மகிழ்ச்சி. கொடுப்பதில் இருக்கும் மகிழ்ச்சியைப் புரிந்து கொள்ளாமல் பெறுவதில் இருக்கும் மகிழ்ச்சியை மட்டுமே பெற்று நாம் வாழ முடியாது. கொடுப்பதிலிருந்து  உண்டாகும் மகிழ்ச்சியை சிறிதளவு நீங்கள் ருசித்தவுடன்  வாழ்க்கை  நிறைவானது என்பதையும் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதையும் அறிந்து கொள்வீர்கள். 

எனவே  மேலும் மேலும் மகிழ்ச்சியோடு புன்னகை புரியுங்கள். 

உங்களுக்குத் தெரியுமா?  ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 400 முறை புன்னகை புரிகின்றது.  வளர் இளம் பருவத்திலிருப்பவர்கள் ஒரு நாளைக்கு 17 முறை புன்னகை புரிகின்றனர்.  பெரியவர்கள் மிக அபூர்வமாகத்தான் சிரிக்கின்றனர். மேலதிகாரியாகவோ அல்லது அரசியல்வாதியாகவோ மாறுகின்றவர்கள் சிரிப்பை அடியோடு மறந்து விடுகின்றனர். உங்கள்  புன்னகை பறந்து போய் விடுகின்றது. மறைந்து விடுகின்றது. புன்னகை என்பது ஏதோ செயற்கைத்தனமான  ஒன்றல்ல. அது நம் உள்ளிருந்து  வர வேண்டும். நம் மனஅழுத்தங்கள் எல்லாம் மறைந்து  தியானத்தில் ஆழ்ந்து செல்லும்போது மட்டுமே அது  உண்டாகும். 

யாராவது ஒருவர்  நான் தியானம் செய்கிறேன் என்று சொன்னால்  அவர் மேலும் மேலும் மகிழ்ச்சியுடன் புன்னகை புரிகின்றார் என்று அர்த்தம். அங்கே ஞானம், தெளிவு, அமைதி, உணர்திறன் ஆகியவை இருக்கும். இதுவே  ஆன்மீகம். ஆன்மீகம் என்றால்  இனிமை, புன்னகை, மெய்யுணர் திறன் அனைத்தும் ஒன்று  சேர்ந்ததே ஆகும்.  

கே: வெளியிலிருப்பவைகளால் மனஅழுத்தம் உண்டாகும்போது நான் என்ன செய்வது? என் கட்டுப்பாட்டில் இல்லாமல் என்னை  மீறிய ஒன்றாக  இருக்கும்போது  நான் எவ்வாறு அமைதியை நிலைநிறுத்துவது? 

குருதேவ்: அதற்காகத்தான்  நாம் மக்களிடையே மன அழுத்தத்தைக் கையாளுவது எப்படி என்ற ஞானத்தை உண்டாக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மனம் சரியில்லை என்றால் அது குடும்பம் முழுவதையும் பாதிக்கின்றது இல்லையா? நிச்சயமாக பாதிக்கின்றது. அதே போல் சமுதாயத்தில் ஒரு சிலர்  மனரீதியாக சரியாக இல்லையென்றாலும்   சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரிக்கின்றன. சிறைச்சாலையில் இருந்தாலும் "நாங்கள் வன்முறையை விரும்பவில்லை" என்று சொல்லும் மக்கள்  பலர் இருக்கின்றனர்.   சமுதாயத்திற்கு பிரச்சினைகளை உண்டாக்கும் மக்கள் பலர் சிறைச்சாலைக்கு வெளியிலும் இருக்கின்றனர். ஆகவே தான் நாம் மக்களுக்கு ஆன்மீக அறிவை வழங்க வேண்டியது  அவசியமாகிறது. 

சாந்தமாக இருப்பது எப்படி,  நம் எதிர்மறை எண்ணங்களை  கையாளுவது எப்படி,  நம் மனத்தைக் கையாளுவது எப்படி  என்பது போன்ற  ஞானத்தினை நாம் மக்களிடையே உண்டாக்க வேண்டும். ஏனென்றால்  மனத்தைக் கையாளுவது எப்படி என்று கற்றுத் தருபவர்கள் எவரும் வீட்டிலும் இல்லை, பள்ளியிலும் இல்லை.  கோபம், பொறாமை, வெறுப்பு போன்றவை உண்டாகும்போது, நீங்கள் இந்த உணர்ச்சிகளோடு வாழும்போது  நீங்கள் அவற்றின்படி செயல்படுகின்றீர்கள். அவற்றிலிருந்து வெளிவருவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் அவற்றை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு  அவற்றின்படி நடந்து கொண்டு பின்னர் வருந்துகின்றீர்கள். இதுதான் பிரச்சினை. 

வாழும் கலை பயிற்சிகளும் இங்குள்ள ஞானமும்தான் இதற்குத் தீர்வு.