விநாயகர் சதுர்த்தி


 

கணேசர் உருவம் எதைக் குறிக்கிறது?

கணேசா என்றால் உருவமில்லாத இறைவனைக் குறிக்கிறது. அடியவர்களின் நன்மைக்காக மகத்தான உருவத்தை உள்ளடக்கியது. “கண” என்றால் குழு என்று பொருள். இந்த உலகம் விதவிதமான சக்தியுள்ள அணுக்களின் குழுக்களால் ஆனது. இவ்வளவு வித்தியாசமான சக்திகளை உடைய குழுக்களை ஆள மிக மேன்மையுள்ள சட்டம் இல்லாவிட்டால் இவ்வுலகம் குழப்பத்தில் இருக்கும். இவ்வளவு சக்தி வாய்ந்த அணுக்களின் குழுக்களுக்கு, எல்லா சக்திகளையும் மீறிய தலைவன் “கணேசர்” (விநாயகர்) அவர் தான் எங்கும் வியாபித்திருக்கும் மிக மேன்மையான ஆத்மா (பரமாத்மா) ஆதி சங்கரர் கணேசரின் குணங்களை (சாரத்தை) அருமையாக விவரித்திருக்கிறார்.

“அஜம் நிர்விகல்பம் நிராகார மேகம்”

இதன் பொருள் கணேசர் என்பவர் பிறக்காதவர். குணங்களால் விவரிக்க முடியாதவர், உருவமில்லாதவர். அவர் எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவின் இலட்சணம். இவ்வுலகம் தோன்றக் காரணமான சக்தியே கணேசர். இந்த சக்தியிலிருந்து தான் யாவும் வெளிப்படுகிறது. எல்லாமே அதில் போய் கலந்து விடும்.

கணேசர் எப்படி யானை முகத்தவர் ஆனார் என்ற கதை நம் எல்லோருக்கும் தெரியும். பார்வதி சிவனைக் கொண்டாடும் போது, தான் அழுக்கடைந்து விட்டதை உணர்ந்து, அந்த அழுக்கை திரட்டி ஒரு சிறுவனை உருவாக்கினாள். அச் சிறுவனை காவல் வைத்துவிட்டுக் குளிக்கச் சென்றாள்.

சிவபெருமான் திரும்பிய போது, அச் சிறுவனுக்கு அவரை அடையாளம் தெரியாததால், அவரை உள்ளே செல்ல அனுமதி மறுத்து விட்டான். எனவே சிவபெருமான் கோபமடைந்து அச் சிறுவனின் தலையை வெட்டி விட்டு, உள்ளே சென்றார். தலை வெட்டப்பட்ட சிறுவனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்வதி, சிவபெருமானிடம் முறையிட்டாள். அச் சிறுவன் தங்கள் பிள்ளை என்று தெரிவித்து எப்படியாவது அவன் உயிரைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டாள்.

சிவபெருமான் தன் உதவியாளர்களை அனுப்பி, யார் வடக்கு திசையில் தலை வைத்து தூங்குகிறாரோ, அவரின் தலையை வெட்டி எடுத்து வரும்படி சொன்னார். அவர்கள் அப்படியே சென்று ஒரு யானையின் தலையை எடுத்து வந்தார்கள். சிவபெருமான் அச் சிறுவனின் உடலில் யானையின் தலையைப் பொருத்தி அவனை உயிர்ப்பித்தார். கணேசர் பிறந்த கதை இது தான்.

இக் கதை நம்பும் படி இருக்கிறதா? ஏன் பார்வதியின் உடலில் அழுக்கு இருக்க வேண்டும்? எல்லாம் அறிந்த சிவபெருமானுக்கு தன் பிள்ளையை அடையாளம் தெரிய வில்லையா? அமைதியை தன்னுள் அடக்கிய சிவபெருமான் அப்படி முன்கோபத்தால் அவருடைய சொந்தப் பிள்ளையின் தலையை வெட்டினாரா? பின் ஏன் கணேசர் யானைத் தலையுடன் காட்சியளிக்கிறார்?

இதற்கெல்லாம் ஒரு ஆழமான பொருள் இருக்கிறது. பார்வதி என்பது சக்தியைக் குறிக்கிறது. கொண்டாட்டத்துக்கான சக்தியைக் குறிக்கிறது. அவள் அழுக்கடைந்து விட்டாள் என்று சொல்வது அதிகமான கொண்டாட்டம் மிக எளிதில் ராஜசிக் சக்தியாக மாறி, அந்த ஜுர வேகத்தில் உன்னை உன் மையத்திலிருந்து வெளியே தள்ளக் கூடும். அழுக்கு என்பது அஞ்ஞானத்தைக் குறிக்கிறது. “சிவா” என்றால் மிக மேன்மையான கள்ளமில்லாத தன்மை, அமைதி மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.

கணேசா என்ற சிறுவன் சிவனைத் தடுக்கிறான். அஞ்ஞானம் ஞானத்தைத் தடுக்கிறது. அஞ்ஞானம் தலையின் குணம். ஞானத்தை அறிய வில்லை. அப்படியானால் ஞானம் அஞ்ஞானத்தை அழிக்க வேண்டும். அது தான் குறிப்பாக சிவபெருமான் சிறுவனின் தலையை வெட்டுவதாகச் சொல்லப் பட்டது. யானையின் தலை ஏன்? யானை ஞானசக்தி, கர்மசக்தி இரண்டையும் வெளிப்படுத்துகிறது.

யானையின் உன்னதமான குணம் ஞானமும், எதையும் (பெரு முயற்சியில்லாமல்) எளிதாகச் செய்யும் வல்லமையும். யானையின் தலை பேரறிவையும், ஞானத்தையும் குறிக்கிறது.யானைகள் தடையைச் சுற்றி நடப்பதில்லை. தடங்கி நிற்பதும் கிடையாது. தடையைத் தகர்த்து (உடைத்து) மேலே செல்லுகின்றன. தடைகளை வெல்ல பெருமுயற்சி தேவையில்லாததை இது குறிக்கிறது. எனவே கணேசரை வழிபடும் போது, நம்முள் இருக்கும் யானையின் குணங்கள் (சக்திகள்) தூண்டப்படுகின்றன. கணேசரின் பெரிய வயிறு உதார குணத்தைக் குறிக்கிறது. (தயாள குணம், தரும குணம்). எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையையும் குறிக்கிறது.

கணேசரின் தூக்கிய கை, எதையும் காப்பதைக் குறிக்கிறது. பயப்படாதே, நான் உன்னுடன் இருக்கிறேன் என்பது போல. அவருடைய தாழ்த்திய கை, உள்ளங்கை வெளிநோக்கிக் காண்பிப்பது முடிவில்லாமல் கொடுப்பதையும், வணங்குவதற்கு அழைப்பதையும் தெரிவிக்கிறது. நாம் இந்த மண்ணில் ஒரு நாள் கலந்து விடுவோம் என்பதையும் குறிக்கிறது. கணேசரின் ஒற்றைத் துதிக்கை மனத்தை ஒருநிலைப் படுத்துவதை சிறப்பாகக் குறிப்பிடுகிறது. கணேசரின் ஆயுதங்களுக்கும் உள்ளடங்கிய பொருள் இருக்கிறது. அவர் கையில் இருக்கும் “அங்குசம்” விழிப்புணர்ச்சியைக் குறிக்கிறது. “பாசம்” கட்டுப் படுத்துவதைக் குறிக்கிறது. விழிப்புணர்ச்சியால் நிறைய சக்தி வெளிப்படுகிறது. சரியான கட்டுப்பாடு இல்லாவிட்டால் அச்சக்தி வீணாகி விடும்.

ஏன் கணேசர், யானை முகக் கடவுள், ஒரு சிறிய எலியின் (மூஞ்சூர்) மேல் பிரயாணம் செய்கிறார்? அது பொருத்தமில்லாமல் தோன்றவில்லையா? இதற்கும் ஒரு ஆழமான குறிப்பு இருக்கிறது. எலி தன்னைச் சுற்றிய வலையைக் கடித்துக் குதறிவிடும். எலி ஒரு மந்திரம் போல் நம்மைச் சுற்றிய அஞ்ஞானத்தின் பல உறைகளை வெட்டி, ஞானத்தை வெளிப்படுத்தும் சக்தி வாய்ந்தது. அதுதான் யானை முக கணேசர்.

நம் ரிஷிகள் மிகவும் அறிவுடையவர்களாக இருந்தார்கள். இறைவனை வார்த்தைகளால் விவரிக்காமல் குறிப்புகளால் உணர்த்தினார்கள். வார்த்தைகளின் பொருள் காலப் போக்கில் மாறுகின்றன. ஆனால் சித்திரத்தினாலோ, குறிப்புகளாலோ உணர்த்தினால் அவை மாறாமல் இருக்கும். இந்த ஆழ்ந்த குறிப்புகளை மனதில் கொண்டு, யானை முகக் கடவுளின் ரூபத்தில், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்து, கணேசர் நம்முள்ளும் நிறைந்திருப்பதை அறிந்து கொள்வோம்.