பகிர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்குள்ளும் பாசம் இருக்கிறது


வியாழக்கிழமை, 3 மார்ச் 2016, 

பெங்களூரு



(நிலையான ஆற்றலின் நித்திய மூலம் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

குருதேவ், முன்னொரு காலத்தில் கண்டங்களும் அவற்றின் கலாச்சாரமும் ஒன்றாகவே இருந்து வந்தன. உலகக் கலாசாரத் திருவிழாவில் அனைத்துக் கலாச்சாரங்களையும் ஒன்றாக எடுத்து வருவதற்கான நோக்கம் என்ன? அனைத்துக் கண்டங்களும் திரும்பவும்  ஒன்றாகப் போவதில்லையே?

உலகத்தின் கலாசாரங்கள் ஒன்றாக ஆகத் தேவையில்லை. அவ்வாறு ஆனால் அது ஒரு பெரிய முட்டாள்தனம். உலகம் பன்முகத் தன்மையுடனேயே இருக்க வேண்டும். கற்பனை செய்து பாருங்கள், உலகம் முழுவதிலும் ஒரே வகையான காய் மட்டுமே, உதாரணமாக காரட் அல்லது உருளைக் கிழங்கு மட்டுமே இருக்குமென்றால் நீங்கள் அதைத் தொடக் கூட விரும்ப மாட்டீர்கள். இயற்கை பன்முகத் தன்மையையே விரும்புகிறது. அது பல்வேறு விதங்களில் தன்னை வெளிப்படுத்துகின்றது. அதை நாம் பாதுகாக்க வேண்டும். இயற்கையின்  பன்முகத்தன்மை பாதுகாக்கப்பட வேண்டும்.

கலாசாரம் என்பதும் இயற்கையின் பரிசேயாகும். இயற்கை உணவு, இசை, மொழி போன்ற பல்வேறு விதமான கலாசார விஷயங்களை நமக்கு அளித்துள்ளது.  உலகெங்கும் மக்கள் ஒரே மொழியைப் பேசினால் அது எவ்வளவு சலிப்பானதாக இருக்கும் என்று யோசியுங்கள்! அனைவரும் ஒரே மாதிரியிருந்தால் அதுவும் மிகவும் சலிப்பானதாக இருக்கும். மங்கோலியா சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அர்ஜேன்டினா, ஆப்ரிக்கா என பல்வேறு நாட்டு மக்களாக நாம்  பல்வேறு விதமாகத் தோற்றமளிக்கிறோம். இவ்வாறு அனைத்து கலாச்சாரங்களும் ஒன்றாகக் கூடும்போது அதை நாம் கொண்டாடுவதற்கு ஒரே கலாச்சாரமாகத் தான் இருக்கவேண்டும் என்பதில்லை. உலகக் கலாசாரத் திருவிழா என்பது பன்முகத் தன்மையினைக் கொண்டாடி, மேம்படுத்தி, மரியாதை செய்வதாகும்.

இவ்வுலகில் நிகழ்ந்த  அனைத்துப் போர்களும் உலகம் முழுவதும் ஒரே கலாசாரம், அல்லது ஒரே சமயம் இவற்றினைப் பின்பற்ற வேண்டும் என்பதற்கேயாகும். மத்திய கிழக்கு நாடுகளில் அது ஓர் பெரும் பிரச்சினை. தூரக் கிழக்கு நாடுகளில் வேறொரு கதை. ஜப்பான் இந்தியா போன்ற நாடுகளில் பல்வேறு விதமான இனங்கள் ஒன்றாக அமைதியாக வசித்து வருகின்றன. 

உலகக் கலாசாரத் திருவிழா உலகத் தலைவர்களுக்கு மற்றும் உலக சமூகங்களுக்கு ஓர் செய்தியினை அனுப்புகின்றது. அது என்னவெனில், நாம் ஒருவரையொருவர் சகித்துக் கொண்டு மட்டுமில்லை, அப்பன்முகத் தன்மையினைக் கொண்டாடுகிறோம் என்பதே அது. சகிப்புத் தன்மை என்பதற்கு எதிர்மறையான தாத்பரியம் உள்ளது. ஏதோ ஒன்றை நீங்கள் விரும்பவில்லையெனில் சகித்துக் கொள்கின்றீர்கள்.பிடிக்காததை  சகித்துக் கொள்கிறோம். அவ்வாறு ஏற்படும் சகிப்புத்தன்மை ஓர் பெரிய விஷயமாக கருதப்படுகிறது ! உலகக் கலாசாரத் திருவிழா சகிப்புத் தன்மையைப் பற்றி யதல்ல. அது  உலகின் பல்வேறு கலாசாரங்களையும் மரியாதையுடன் கொண்டாடி  களிப்படைதலைக் குறிக்கின்றது.
மேலும் வேறொரு கலாச்சாரத்தினை நாம் மதித்துப் பாராட்டுவது என்பது , உங்களுடைய சொந்தக் கலாசாரத்தை தொலைத்து விடுதல் என்னும் பொருள் ஆகாது. 

இந்தியக் கலாசாரத்தை நீங்கள் பாராட்டினால் ஐரோப்பிய கலாச்சாரத்தினை விட்டு விடுவது என்பதில்லை. எதையும் இழப்பதில்லை. மேலும் அதிகமான புகழையே சேர்க்கின்றீர்கள். மதிப்பதற்கும் ரசிப்பதற்கும் உங்களுடையதாகவே  ஆக்கிக்கொள்வதற்கும் உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு விதமான அழகான விஷயங்கள் உள்ளன.

உலகக் கலாசாரத் திருவிழாவில் கண்ணுக்குப் புலப்படாத நுண்ணிய அம்சங்கள் பற்றிக் கூறுங்கள்.

ஏராளமாக உள்ளன. மர்மங்கள் வர்ணிக்கப்படுவதில்லை. அவற்றை வாழ்ந்தறிந்து பார்க்க வேண்டும். மிக அற்புதமான விஷயங்கள்  நுண்ணிய அளவில் நிகழ்ந்தன, அவை இப்பூமிக்கு பலனளிக்கப் போகின்றன.

சுமார் 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த அரசாங்கமும் சுற்றுச் சூழலைப் பற்றிப் பேசவில்லை. நாம் பேசினோம். அரசுகள் பொருளாதாரத்தைப் பற்றிப் பேசின, இப்போது அதன் நிலை மாறி விட்டது. சில பத்தாண்டுகளுக்கு முன்னர் யாருமே ஆனந்தம் என்பதைப் பற்றிப் பேசியதில்லை, அது விசித்திரமானதாகக் கருதப்பட்டது. மக்கள் பொதுவாக பொருளாதாரம் அதிகாரம் இவற்றைப் பற்றியே பேசி வந்தனர். இன்று, உலகளாவிய உள்துறை ஆனந்தம் என்பது ஒரு நாட்டின் முன்னேற்றத்தை மதிப்பிடும் அளவுகோலாகி விட்டது. இது மெய்யுணர்வு நிலையினை மாற்றி வருகின்றது.

உலக யோகா தினத்தில் 2 மில்லியன் மக்கள் பங்கேற்றனர். உலகின் மூன்றில் ஓர் பகுதி மக்கள் யோகாவினை பாராட்டுவார்கள் என்பதை சில பத்தாண்டுகளுக்கு முன்னர் கற்பனை செய்திருப்பீர்களா? இல்லை. இவ்வாறு நிகழும் என்று  முந்தைய தலைமுறையினர் சிறிதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் எனக்குத் தெரியும்! தெரியாது என்று கூறுவது தவறாகும், ஆனால் அது பொதுவாக நம்பமுடியாததாகவே இருந்தது.

குருதேவ், பாதயாத்திரை முடிந்து இப்போது தான் திரும்பியிருக்கிறோம். வாழ்வில் முதன்முறையாக என்னால் பிறருக்காகப் பிரார்த்தனை செய்ய முடிந்தது என்பதை உணர்ந்தறிந்தேன். நான் எங்கு சென்றாலும் என்னால் பிறருக்காக வாழ்வது என்பது சாத்தியமாகுமா?

ஆம். அதற்காக உங்களுடைய தேவைகளையும் வசதிகளையும் ஒதுக்கித் தள்ளவேண்டுமென்பதில்லை. பாத யாத்திரையின் நோக்கமே உங்கள் இதயத்தைத் திறந்து முற்றிலும் உங்களுக்குத் தெரியாத மக்களுடன் எவ்வளவு ஆழமாகத் தொடர்பு கொண்டுள்ளீர்கள் என்பதைக் காண்பதேயாகும். அவர்கள் மொழி உங்களுக்குத் தெரியாது, உங்கள் மொழி அவர்களுக்குத் தெரியாது. ஆயினும் ‘ஆஹா எவ்வளவு நெருங்கிய தொடர்புடன் உணர்கிறோம்’ என்பதை அறிந்து கொள்கிறீர்கள்.

மகிழ்ச்சியான மக்கள் உங்களை துரத்தி வந்து கொண்டிருப்பதைக் காண்கின்றேன். நான் மட்டும் உங்களுடன் தொடர்பற்ற ஒருவனாகவே உணருகின்றேன். தங்களுடன் தொடர்பு கொண்டிருக்கின்றேனா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

நான் செல்லும் காரின் பின்னாலேயே ஓடி வருவது போன்ற பிறர் செய்யும் செயல்களை நீங்களும் பின்பற்ற வேண்டும் என்பதில்லை. நீங்கள் இயல்பாக இருங்கள். ஒரே காற்றை சுவாசிக்கிறோம், ஒரே சூரிய ஒளியில் இணைகின்றோம் ஒரே பூமியில் இருக்கின்றோம் . ஆழமான உள் நிலையில் நாம் அனைவரும் ஒருவரேயல்லவா?  இது என் காற்று என்று  நீங்களோ அல்லது நானோ உரிமை கொண்டாட முடியுமா? முடியாதல்லவா? ஆகவே நாம் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்தவரே.

35 ஆண்டுகளுக்கு முன்னர் உங்களுக்கு என்ன தோன்றியது? உலகத்திற்கான  உங்களுடைய  பார்வை அப்போது என்னவாக இருந்தது?

நான், " இந்த ஆஸ்ரமம் மிகச் சிறியதாக இருக்கிறது, அதிக அளவில் மக்கள் இங்கு வருவார்களே”  என்று எண்ணியதுண்டு. அக்காலத்தில் இந்த ஆஸ்ரமத்தில் அதிகம் பேர் கிடையாது. அப்போது அவர்களெல்லாம், என்னை விழித்துப் பார்த்து, குருதேவர் என்ன பேசுகிறார்? விசித்திரமாக இருக்கிறதே என்று கருதுவதுண்டு. உலகிற்கு நம்மிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்ளும் பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. அக்கறை இருப்பதால் பகிர்ந்து கொள்ளுதல் என்பது மட்டுமே வாழும் கலையின் நோக்கம். இப்பூமியின்  மீது அக்கறை உள்ளது, மக்களின் மீது அக்கறை உள்ளது.

வாழும் கலை நதிக்கரையில்  பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தரும் மாபெரும் நிகழ்ச்சியினை நடத்துவதன் மூலம் யமுனை நதியை மாசு படுத்துகிறது என்று அண்மையில் ஒரு அரசு சாரா நிறுவனம், நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த ஆண்டின் மிகப் பெரிய வேடிக்கை  இதுவே என்று நான் எண்ணினேன். " நாங்கள்” சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதா? நீதி மன்றத்தின் பணி வழக்கை விசாரிப்பது என்பதால் விசாரணை நடத்தி, " இத்தனை காலம் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? மேடை அமைக்கப்பட்டு, பிற ஏற்பாடுகள் செய்யப் பட்ட பின்னர் நீங்கள் நீதி மன்றத்திற்கு வருகிறீர்களே " என்று கண்டித்தது. தவிர, இதற்கு மேற்பட்டு யாராலும் நதியை மாசுபடுத்த முடியாது. ஏற்கனவே நதி அழிந்து விட்டது. அனைத்து சாக்கடைகளும் அங்கு ஒன்று சேர்வதால் நதி அதிகபட்ச மாசு அடைந்து விட்டது. அந்த இடத்திற்கு பறவைகள் வருவதில்லை, நீரில் மீன்கள் இல்லை.
அந்த இடத்தைப் பார்ப்பதற்காக நாங்கள் சென்ற முதல் நாளன்று நாங்கள் மூக்கை மூடிக்கொள்ள வேண்டிய அளவு துர் நாற்றம் வீசியது. அங்கு நின்று மூச்சுக் கூட விட முடியவில்லை. 

நாங்கள் பணியினைத் துவங்கிய பின்னர் 100,000 டெல்லி தன்னார்வத் தொண்டர்களின்   வீடுகளில் நொதி ((மூலப்) பொருள்களில் மாற்றம் உண்டாக்கி தான் மாறாமல் இருக்கும் வேதியல் பொருள்: ENZYME ) தயாரிக்கப்பட்டன. அவற்றை நதி நீரில் சேர்த்த பின்னர், எருமைகள் நீர் அருந்த அங்கு வரத் துவங்கின. அதற்கு முன்பு ஓர் விலங்கு கூட அங்கு வந்தது கிடையாது. இன்று நொதி பெருமளவிற்கு நாற்றத்தைக் குறைத்து, நீர் உயிர் பெறத் துவங்கியிருக்கிறது. ஓர் மரத்தைக் கூட நாங்கள் தொடவில்லை. அங்கு ஏற்கனவே இல்லாத எதையும் நாங்கள் அங்கு எடுத்து வரவில்லை. அனைவரும் அமரும் வகையில் நிலத்தை சற்று சமப் படுத்தியிருக்கிறோம் அவ்வளவு தான்.

தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்று விட்டோம். சரி பார்க்கப்பட்ட எல்லா ஆவணங்களும் எங்களிடம் உள்ளன. எந்த சட்டத்தையும் நாங்கள் மீறவில்லை. இடத்தையும் மாசு படுத்தவில்லை. அந்த நதியை மாசு படுத்த எதுவுமேயில்லை, அந்த அளவு ஏற்கனவே அது அசுத்தமாக உச்சநிலை மாசுடன் இருந்தது.  அதை தலை கீழாக  மாற்றவே முடியும் அதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதில் மிக அழகான விஷயம்  என்னவெனில் வாழும் கலையைச் சேர்ந்த யாரும் இதனால் அமைதி இழக்கவில்லை. அனைவரும் தங்களது 100 சதவீத முயற்சியை மகிழ்ச்சியுடன் அளித்துப் பணி புரிந்து கொண்டிருந்தனர். 

டெல்லி மாநகரம் உலக மக்களை வரவேற்கத் தயாராக இருந்தது.அதுவே உலக வழக்கம். தனி மனித வாழ்க்கையிலும் ஏன் ஒருவர் உங்களை எதிர்க்கிறார் என்று ஆச்சரியப்படுவீர்கள். நெருங்கிய ஒரு நண்பர் உங்களுக்கெதிராக ஏன் திரும்பி விட்டார் என்று நீங்கள் ஆச்சரியப் பட்டிருக்கிறீர்களல்லவா? ஏன் இவ்வாறு செய்கிறார் என்று அதிசயித்திருக்கிறீர்கள் அல்லவா? அது போன்று நீங்கள் அவ்வளவாக உதவி செய்திருக்காத ஏதோ ஒரு நபர் உங்களுக்கு நெருக்கமானவராக ஆகி விடுகிறார். உங்களுக்கு உதவ முன்வருகிறார்கள். உங்களுக்குத் தேவையான நேரத்தில் தெரியாத ஒரு நபர் உங்களுக்கு உதவுகிறார். இப்பிரபஞ்சத்தில் வித்தியாசமான ஓர் சட்டம் நிலவுகிறது. அதை நீங்கள் அறிந்து கொண்டால் எதுவும் உங்களை அமைதியிழக்கச் செய்யாது. எதுவும் உங்களை வருத்தமடையச் செய்யாது. உள்ள சமநிலையுடன் ஆனந்தத்தைப்  பேணிப் பாதுகாக்கலாம்.