ஆக்கிரமிப்பு பலவீனத்தின் அறிகுறியாகும்.

திங்கள் கிழமை, 21 மார்ச் 2016,

பெங்களூரு, இந்தியா



எவ்வாறு ஒரே நேரத்தில் சரியாகவும் அன்பாகவும் இருப்பது?

சரியாக இருத்தல் என்பதற்கு  கடுமையாக இருக்க வேண்டும் என்ற பொருள் இல்லை. அன்புடன் இருப்பதன் பொருள்  அனைத்தையும் அவற்றின்  போக்கிலேயே விட்டு விட வேண்டும் என்பதுமில்லை. அன்புடன் இருத்தல் மெத்தனம் அல்ல அது போன்று நீதியுடன் இருத்தல் கடுமையும்  அன்று. துரதிர்ஷ்டவசமாக இன்று நாம் நீதியுடன் இருந்தால் கடுமையாகி விடுகிறோம். தேவையில்லை. அவ்வாறிருக்கவும் கூடாது. கடுமை என்பது நமது நமது பலவீனத்தையும்  நமது வலிமையின் மீதே ஏற்படும் சந்தேகத்தையும் காட்டுகிறது. இது விசித்திரமாக இருக்கிறதல்லவா? வலிமையுள்ளவர்கள் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் இருப்பார்கள் என்று கருதுகிறீர்களா? இல்லை ! தங்களுக்கு சக்தியில்லை, அல்லது சக்தியை இழந்து விட்டோம் என்று எண்ணுபவர்களே ஆக்கிரமிப்பு உணர்வுடன் இருக்கின்றனர். இதைச் சற்று ஆழ்ந்து காணுங்கள். எப்போது ஆக்கிரமிப்பு உணர்வுடன் கடுமையாக இருக்கிறீர்கள்? எதையோ உங்களால் எளிதாக செய்ய முடியாதபோதுதான். எளிதாகக் காரியங்கள் நடந்தால் அவ்வாறு இருப்பீர்களா?

உங்களுடைய ஆற்றலின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லாத போது, உங்களுக்கு ஆக்கிரமிப்பு மனப்பான்மை ஏற்படுகிறது. புரிவது கடினம் என்று எனக்குத் தெரிகிறது.
டெல்லியில் பல்வேறு விஷயங்கள் நடந்தபோது, ஒருவர் என்னிடம் "குருதேவ் ! எவ்வாறு இவ்வளவு சாந்தமாக இருக்கிறீர்கள்? நாங்கள் அனைவரும் பதட்டத்துடன் இருக்கிறோமே? " என்றார். அனைத்தும் நல்லமுறையில் நடக்கும் என்று எனக்குத் தெரியும். அனைத்தும் நடக்கும் என்று அறியும் போது பதட்டம், அல்லது கவலை, அல்லது துன்பம் அல்லது மகிழ்ச்சியற்ற நிலை இவை எல்லாம் எதற்காக ஏற்பட வேண்டும்?

உங்களுக்குள் இருக்கும் சக்தியை அறியும் போது நீங்கள் பதற மாட்டீர்கள். சக்தியுள்ளவர்கள் வலுச்  சண்டையிடமாட்டார்கள். யார் அவ்வாறு செய்வார்கள்? ஓர் நபர் அல்லது பலர் அல்லது நிலைமை, உங்களுடைய  கட்டுப்பாட்டினை மீறிச் சென்று விட்டதாக எண்ணும் போது அல்லது ஏதேனும் சாத்தியமில்லை என்று உணரும் போது அல்லது நிலைமையை சமாளிக்கும் திறனில்லாதவராக நீங்கள் இருப்பதை அறியும்போது, நீங்கள் ஆக்கிரமிப்பு உணர்வுக்கு ஆளாகின்றீர்கள். இதைப் பற்றிச் சற்று சிந்தியுங்கள். பெரும்பாலும் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன் இருப்பவர்களை வலிமையுள்ளவர்களாக கருதுகிறீர்கள். உண்மையில் அவ்வாறு அல்ல.!

இறுதியில் உலகமே அழியும் போது , நாம் இங்கிருந்து என்ன பயன்?

நீங்கள் அழிய மாட்டீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களில் ஏதோ ஒன்று எப்போதும் நிலைத்திருக்கும். சமுத்திரத்தில் நீர் எப்போதும் இருக்கும். அலைகள் எழுந்து விழும் முறை எப்போதும் நிலைத்திருக்கும். அலைகள் வீழ்ந்தெழுவது போன்றது நமது உடல். நமது ஆத்மா சமுத்திர நீர் போன்றது. எப்போதும் நிலைத்திருக்கும். இந்த வேதாந்தம் உங்களுக்கு பிடிக்கவில்லையெனில், இயற்பியலைப் படியுங்கள். அறிவு இயற்பியலை உண்மையென ஏற்றுக் கொள்ளும். அதிர்ஷ்டவசமாக இயற்பியல் வேதாந்தத்திலுள்ளதையே கூறுகிறது. அல்லது வேதாந்தம் இயற்பியலிலுள்ள கருத்தையே தான்  கூறுகிறது.

உலகக் கலாசாரத் திருவிழா பற்றி தாங்கள் ஆனந்தமடையந்தீர்களா?

நானே ஆனந்தம். நான் ஆனந்தமடைய எதுவும் தேவையில்லை. நான் எந்த நிகழ்வின் மூலமும் ஆனந்தமடைய வேண்டுமென்பதில்லை. உலகக் கலாசாரத் திருவிழா நன்கு நடைபெற்றது. நகரெங்கும் உண்மையில் உலகெங்கும் அது பேசப்படுகிறது. எல்லா இடங்களிலும் மக்கள் நிகழ்ச்சி நடந்த விதம் பற்றிப்  பேசுகின்றனர். எவ்வாறு நிகழ வேண்டுமோ அவ்வாறே நிகழ்ந்தது. முதல் நாள் சிறு மழைத்துளிகள், இரண்டாம் நாள் பலத்த காற்று மூன்றாம் நாள் வெப்பம் என அனைத்து இயற்கைக் கூறுகளும் தங்கள் பங்கினை செய்தன.! ஆலங்கட்டி மழை கூடப் பெய்தது. எனவே மூன்று நாட்களில் அனைத்து பருவ காலங்களையும் கண்டோம்.

3.5 மில்லியன் மக்களை எதிர்பார்த்தோம், ஆனால் 3.75 மில்லியன் மக்கள் வந்திருந்தனர்.188 நாடுகளில் மக்கள் நிகழ்ச்சியினைக் கண்டு களித்தனர்.  உலகக் கலாசார திருவிழாவினைக் காணாத நாடு என்று உலக நாடுகளில் எதுவுமே இல்லை. முதல் நாளன்று ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சியில் 1.9 மில்லியன் மக்கள் நிகழ்ச்சியைக்  கண்டனர். இப்போது சற்று ஆழ்ந்து ஞானத்திற்குச் செல்வோம். இந்த செயல் நிகழ்வுகள் முடிந்து விட்டன. இனி நாம் ஞானத்தில் ஆழ்ந்து செல்ல வேண்டும். இன்னும் அதிகமான தியான ஞான பயணத்திற்கு உங்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆழ்ந்த தியானங்கள் செய்வோம். ஏனெனில் அதுவே உண்மையான விஷயம். அந்த நிலையிலேயே  நாம் அனைவரும் மிகுந்த ஆனந்தத்துடன் இருப்போம் !

புன்னகையுடன் இருக்க வேண்டுமென்று நீங்கள் கூறும் போது, எனக்குப் பிரச்சினைகள் உள்ள நேரத்தில் என்னால் புன்னகையுடன் இருக்க முடியவில்லை. எவ்வாறு உங்களால் எனக்கு உதவ முடியும்?

எது உங்களது புன்னகையைத் தடுக்கிறது தெரியுமா? உங்களது ஆசையே ! ஏதோ ஒன்றை அடைய விரும்புகிறீர்கள், அது வேண்டும்,வேண்டும் என்று எண்ணிக் கொண்டேயிருக்கிறீர்கள் அதுவே உங்களைத் துன்பமடைய செய்கிறது. ஒரு நிமிஷம் விழித்தெழுந்து,"எனக்குக் கவலையில்லை" என்று கூறுங்கள். ஆசையை விட்டு "இது எனக்கு வேண்டாம்" என்று என்னும் அடுத்த நொடியிலேயே உங்களுக்குள் ஏதோ எழுந்து வரும் அதுவே  புன்னகை ! எனக்கு எதுவும் வேண்டாம், எது தேவையோ அது எனக்குக் கிடைக்கும் என்று எண்ணுங்கள்.

குருதேவரைக் காண வேண்டும் என்று விருப்பம் இருந்தாலும் “எனக்கு கவலை இல்லை. காண வேண்டுமென்பதில்லை” அந்த விருப்பம் தான் உங்களை துன்புறுத்திக் கொண்டிருந்தால், அந்த ஆசையையும் உதைத்துத் தள்ளுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும்  இளைப் பாறி அமைதியுடன் இருப்பதை உணருவீர்கள்.  ஏற்கனவே நான் கூறிய படி, நம்மை தடை செய்வது மூன்று விஷயங்கள்

1. தான் எனும் அகந்தை
2. ஆசைகள்
3. அறிவு

இந்த மூன்றையும் சற்று உறைய வைத்து அப்போது தியானம் எவ்வாறு நிகழ்கின்றது என்று பாருங்கள்." இந்த மூன்றையும் உறைய வைக்க விரும்புகிறேன்" என்னும் நோக்கமே உடனடியாக ஓர் வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

தான் எனும் அகந்தை, ஆசைகள், அறிவு என்னும் மூன்று விஷயங்கள் நமக்குத் தடையாக இருப்பதாகக் கூறினீர்கள். ஒவ்வொரு நொடியும் நாம் இறந்து கொண்டிருப்பதாக பொருள் கொள்ளலாமா?

இல்லை. இந்த மூன்றும் நீங்கள் என்னும் இடத்தைப் புலப்படாமல் செய்கின்றன. நீங்கள் பரந்து விரிந்த வெற்றிடம். சக்தியின் இருப்பிடம். அது இந்த மூன்றினால் தெளிவற்றதாக ஆகி பரந்து விரிந்த உங்களையே உங்களுக்கு புலப்படாமல் செய்கிறது. இம்மூன்றையும் சற்று நேரத்திற்கு உறைய வைக்கும் போது தியானம் நிகழ்கிறது.  ஓர் வகையான தியான நுட்பம். மூன்றையும்  என்றென்றும்  உறைய வைக்க முடியாது.

ஓர் குறிப்பிட்ட சமயத்தின் அங்கமாக நான் இருக்க விரும்பவில்லை. அதற்குப் பதிலாக அனைத்து சமயங்களிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து வேடிக்கை பார்க்க விரும்புகிறேன்.


உங்களுக்கு அது வேடிக்கையாக இருக்கலாம். ஆனால் எந்த சமயத்தையும் கேலி செய்யாதீர்கள். சரியா? அப்போது நீங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள். நாம் அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. வேடிக்கை என்பது வேறு விஷயம். அனைத்து சமயங்களிலிருந்தும் நல்லனவற்றை ஏற்றுக் கொண்டு ஆன்மீக வழியில் இருங்கள். அதுவே வாழும் கலை.