குருதத்துவமே அனைத்து காரணங்களுக்கும் காரணமாகும்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட், 2015,

அமெரிக்க ஐக்கிய நாடுகள்.



ஒரு சமயம், ஒரு பெண்மணி குருவிடம், எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன என்று கூறினாள். குரு, சரி கேட்கலாம்"  என்று கூறினார். அப்பெண்மணி, "கடவுள் ஏன்  இந்த உலகைப் படைத்தார்? அவர் அதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டு ஏன் மகிழ்ச்சியாக இருந்திருக்கூடாது? இவ்வுலகை படைத்து அதை ஏன் இவ்வளவு பரிதாபமாக்கினார்?" என்று கேட்டாள். அதற்கு குரு,  “என்னிடம் ஒரே விடை தான் உள்ளது! கடவுள் இவ்வுலகை எனக்காகவே  படைத்துள்ளார். அதை துன்பகரமாக ஆக்கியது ஏனெனில் நான் அதில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான்" என்று பதிலுறுத்தார்.

உங்கள் மனம் துன்பத்திலிருக்கும் போது, அந்த துன்பத்தின் காரணத்தைத் தேட முற்படுகின்றீர்கள். பின்னர், உங்கள் மகிழ்ச்சியின்மையின் காரணத்தை, ஒரு நிலைமை அல்லது ஒரு நபர், அல்லது ஒரு மனப்பான்மை என்று காண்கின்றீர்கள் அல்லவா? மகிழ்ச்சியின்மையின் காரணம், ஒரு நிலைமை மனப்பான்மை அல்லது நபர் என்றே செல்லும். இது அறியாமையின் சுழற்சி. நமது துன்பத்தின் காரணத்தை உடனடியாக கண்டுபிடிக்க விரும்புகிறோம், ஏனெனில் விடையில்லாத கேள்விகள் மனதில் எரிச்சலை உண்டாக்குகின்றன. எனவே துன்பத்திற்கு ஒரு காரணத்தை கண்டு, அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க விரும்புகிறோம். உங்கள் மனதிற்குள் சென்று உற்று நோக்குங்கள். எப்போதுமே இவ்வாறு தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்கள் துயரத்தின் காரணத்தை கண்டுபிடித்தவுடன், அதை உடனடியாக அகற்றவோ, சரிப்படுத்தவோ அல்லது வேறேதும் செய்யவோ விரும்புகிறீர்கள். இதை புரிந்து கொள்கிறீர்களா? துன்பமுற்று இருப்பதற்கு காரணம், ஒரு மனிதரின் செயல் என்று எண்ணி, அவரை சரிப்படுத்தவோ வேறேதேனும் செய்யவோ விரும்புகிறீர்கள். இல்லை! அதுவல்ல காரணம்.அனைத்து காரணங்களுக்கும் காரணம் வேறொன்று. அந்த மனிதர்களும் நிலைமைகளும் ஒரு தபால்காரர் அல்லது ஒரு மின்னஞ்சலை எடுத்து வரும் மடிக்கணினி போன்று தான். ஒரு கெட்ட மின்னஞ்சல் வந்தால் மடிக்கணினியை தூக்கி எறிந்துவிடவோ அல்லது அடையாள சொல்லை மாற்றி விடவோ மாட்டீர்கள். அவ்வாறு மாற்றுவது எந்த விதத்திலும் பயனளிக்காது. 

உண்மையான காரணம், அறியாமை,உண்மையான தன்மையினை பற்றிய அறியாமை. நம்முடைய இயல்பு தன்மையை பற்றிய அறியாமையுடன் இருக்கும்போது, மிகவும் துன்புறுகிறோம். இங்கு  குருவின் சம்பந்தம் என்னவெனில், உங்களை உங்களுடைய உண்மையான சுயத்திற்கு திரும்பக் கொண்டு வருவதாகும். அதனால் தான், தத்வமஸ்யாதிலக்ஷம் -- உங்களுக்கு "நீங்கள் தான் அது " என்று கருத்தினை அளிப்பதே குருவின் இலக்கு ஆகும். அது என்ன?  

அது: பிரம்மானந்தம் பரம சுகதம் கேவலம் ஞானமூர்த்திம், த்வந்தாதீதம், ககனசதிரிஷம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம். ஏகம் நித்யம் விமலமசலம் சர்வதீ சாக்ஷிபூதம் பாவாதீதம் த்ரிகுணாரஹிதம் சத் குரும் தம் நமாமி.

பிரம்மானந்தம் - நமது இதயம், ஆத்மா மற்றும் மனம் ஆகியவை எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் பேரின்பம்.

பரம சுகதம்: எல்லையில்லா ஆனந்தம் - அனைத்து சொற்கள் அனைத்துலகம் இவற்றையெல்லாம் கடந்த ஆனந்தம்

கேவலம் ஞானமூர்த்திம் : தூய்மையான ஞானம் மட்டுமே

ஏகம் நித்யம் விமலமசலம் : என்றென்றும்  நீங்கள் சார்ந்திருக்கக் கூடிய

சர்வதீ சாக்ஷிபூதம் : எல்லா  விதமான மனப்போக்குகள் எல்லா விதமான எண்ணங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருப்பது

பாவாதீதம் த்ரிகுணாரஹிதம் : மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டது, மூன்று நிலை மெய்யுணர்வுக்கும் (விழிப்பு, கனவு, மற்றும் தூக்கம்) அப்பாற்பட்டது, ஆயினும், மூன்று குணங்களும் (சத்வ,ரஜஸ் மற்றும் தமஸ்) உள்ளது

சத்குரும் தம் நமாமி : இதுதான் சுயம், இருப்பு, ஞானம், இதுவே குருதத்துவம்.

வரையறுக்கப்பட்ட சிந்தனை முறைகள், உணர்ச்சி முறைகள் அல்லது இவை போன்ற ஏதேனும் கொண்ட நமது சுய அடையாளம் தான் காரணம். துன்பத்தின் காரணம் என்று ஏதேனும் நிகழ்வு, மனப்போக்கு அல்லது மனிதர் என்று தாளிட்டு கொள்வதற்கு பதிலாக நான் யார் என்னும் சுய அடையாளத்தினை மறந்தது தான் என்று கூறுங்கள். ஆகவே குரு என்ன கூறினார்? கடவுள் இந்த உலகைத் துன்பங்களுடன் படைத்ததற்கு காரணம் நான் அதில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பது தான்  என்று கூறினார். இந்த உலகம் அதிக இன்பமானதாக இருந்தால், அதை விட உயர்ந்ததை, அதை விட வேறானதை, நீங்கள் எதிர்நோக்க மாட்டீர்கள். சிறிய விஷயங்களில் நீங்கள் பிடிபட்டு இருக்கும் போது,தெய்வீகம் " விழித்தெழு, நீ யார் என்று பார்" என்று கூறுகின்றது. வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இந்தக் கேள்வி எப்போதாவது மனிதர்களின் மனதில் எழுகின்றது. இந்தக் கேள்வி எழும்போது ஏதோ ஒன்று நிகழ்கின்றது. நம் வாழ்வில் ஒரு தீப்பொறி தோன்றுகிறது. உயர்ந்த மிக அழகான ஒன்று நிகழத் துவங்குகிறது.

பாரம்பரியத்தில் இரு விதமான தலைவர்கள் இருந்திருக்கின்றனர்.

(1) ஒன்று வரங்கள்ளிப்பவர்.."சரி உனக்கு என்ன வேண்டும்? அங்குமிங்குமாக சிறு சிறு விஷயங்கள் வேண்டுமா? சரி இதோ பெற்றுக்கொள். ஆனால் அதை விட மேலாக எழுந்து வா " உங்களை மாயையிலிருந்து (மருட்சி அல்லது அறியாமையிலிருந்து) விடுவிக்க வரங்கள்,ஆசிகள், அளிப்பவர்.
(2) மற்றொரு வகை, சற்று வேறுபட்டவர்கள். மிகவும் கடினமானவர்கள். நீங்கள் எதையாவது விரும்பினால் அவ்வளவு தான், அதை அடையவே முடியாது.ஒரு வேளை நீங்கள் இத்தாலி செல்ல வேண்டும் என்று விரும்பினால் உங்களால் ஒரு போதும் இத்தாலிக்கு செல்லவே முடியாது. 

உங்கள் ஆசைகள், பேரார்வம் மற்றும் பிடிப்புகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் அப்போது தான் நீங்கள் அவற்றை விட மேலாக எழ முடியும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர்கள். முந்தைய தலைமுறை குருமார்கள் இவ்வாறே செய்து வந்தனர். அவர்கள்," உங்கள் மனதை விட நீங்கள் மிக அதிக மேலானவர், ஏன் இந்த சிற்றறிவில் எப்போதும் கட்டுண்டு இருக்கின்றாய்" என்று உங்களை உணர வைப்பவர்கள்.

நமது துன்பத்தின் காரணத்தை இது அது என்று எதன்மீதாவது வைப்பதால் அது ஸ்திரமாகின்றது. அது அறியாமை. காரணம் என்று எதை எண்ணுகிறீர்களோ அதிலிருந்து சற்றே ஆழமாக சென்றால், அந்தக் காரணம் அங்கில்லை இன்னும் சற்றுக் கீழேயே உள்ளது என்று அறிவீர்கள். இதை அறிந்திருக்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட நிலைமைக்கு "இது" தான் காரணம் என்று எண்ணுகின்றீர்கள், ஆனால் சற்று ஆழமாகப் போனால், காரணம் அங்கில்லை ஆனால் வேறெங்கோ இருப்பதை கண்டறிவீர்கள். எனவே காரணம் குதித்துக் கொண்டிருக்கின்றது, அதை நிஜமான காரணம் என்று நம்புவதால் அறியாமை மேலும் திடமாகிறது. இந்தப் பிரபஞ்சம் முழுமையும் சிக்கலாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு நிகழ்வும் சிக்கல் தான், மனம் அதை விட சிக்கலானது, இதை தாண்டி வருவதற்குத் தான் கர்மா என்னும் சித்தாந்தத்தை முற்காலத்தில் ஏற்படுத்தியிருந்தனர். கர்மாக்கள் நல்லவை தீயவை என்று ஏராளமாக இருக்கின்றன. நீங்கள் செய்யும் கர்மாக்களுக்கு, நிகழ்வினை, நிலைமைகளை பிறரை குறை கூறுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் மீதே பொறுப்பேற்று கொள்கின்றீர்கள்.

இந்தக் கர்மத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு? அங்கு தான் அறிவு தேவைப்படுகிறது. தன்னை பற்றிய ஞானம் கர்மாவினை பொசுக்கி விடுகிறது.காரணங்களுக்கெல்லாம் காரணமான உண்மை காரணத்தை-உயிர் இருப்பினை - எடுத்து வருகின்றது. எங்கும் நிறைந்திருக்கின்றது. படைப்பின் ஒவ்வொரு துகளிலும் உள்ளது. பெயர், உருவம், இவற்றுக்கெல்லாம் மேலாக ஞானம் உங்களை உயர்த்தி,உண்மையான இருப்பின் பீடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அதுதான் திடமான  முடிவான தளம். எனவே காரணங்களுக்கெல்லாம் காரணம் குருதத்துவமேயாகும்.இன்று இவ்வளவு போதும். இதுவே அதிகம். நீங்கள் மெதுவாக இதை ஜீரணித்துக் கொள்ளுங்கள். குருபூர்ணிமாவான இன்று, உங்கள் வாழ்க்கையில் இது வரையில் நீங்கள் பெற்றுள்ள நல்லனவைகளை எல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள்.அனைத்து நல்லனவைகளும் அகன்ற பரப்பினை அளித்துள்ளன. உங்களுக்கு நிகழ்ந்துள்ள அனைத்து, மதிகெட்ட, துன்பமாவை எல்லாம் உங்களுக்கு ஆழத்தினை அளித்து, அவற்றின் மீது உங்களுக்குள்ள வலிமையினை உணர வைக்கின்றன.ஆகவே, எது நிகழ்ந்திருந்தாலும் எது நிகழாமல் இருந்திருந்தாலும்,அதைப் பற்றி, நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்கள்.