திருப்தியுடன் வாழ பழகிகொள்


சனிக்கிழமை, 18 ஆகஸ்ட், 2015            

பெங்களூர், இந்தியா


யோக சாதனைகளின் சாரம் ஓய்வு. எல்லா சமயங்களிலும் ஏதாவது செய்து கொண்டிருப்பதால் நீ களைப்படைகிறாய். இப்போது சற்று நேரம் அமர்ந்து உன் ஆத்மாவோடு இரு. தியானம் செய். தியானம் செய்யும் போது ஒரு புது உலகத்தை பார்ப்பாய். தியானம் செய்வதால் உனக்கு ஆழ்ந்த ஓய்வு கிடைக்கும். நீ திருப்தியாக இருக்கும் போது உனக்கு ஓய்வு கிடைக்கும்.ஒய்வு தான் உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மகிழ்ச்சியைத் தேடி ஓடும் போது நீ களைப்படைகிறாய். மகிழ்ச்சியின் பின்னால் ஓடுவது களைப்பை ஏற்படுத்தும். ஓய்வாக, உன் ஆத்மாவோடு சேர்ந்திருக்கும் போது, நீ ஓய்வு பெறுகிறாய்.சக்தி பெறுகிறாய். உனக்கு வலிமையைக் கொடுக்கும். ஆனந்தத்தை அளிக்கும். எனவே அவ்வப்போது எலிகளின் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதை கைவிட்டு, ஆத்மாவோடு சேர்ந்து ஓய்வாக இரு. இது தான் ஞானம், ஆன்மீகம்.

பலமுறை, யோக சாதனைகளின் பெயரால் நாம் செயல்களில் ஈடுபடுகிறோம்,களைப்படைகிறோம். உன் உடல் உன்னைக் களைப்படைய செய்யாது. உன் மனம் உனக்கு களைப்பை ஏற்படுத்தும். ஆசைகள் களைப்படைய செய்வது போல், உடலுழைப்பு களைப்பை ஏற்படுத்தாது. ஆசைகள் மற்றும் பேராசையை தவிர வேறு எதுவுமே உன்னைக் களைப்படைய செய்யாது. நீ திருப்தியடைவது மிகவும் அவசியம். திருப்தியாக வாழ  பழகு. இது ஒரு கலை. இது தான் தியானம். அமைதியாக, திருப்தியோடு ஓய்வாக இருப்பது தான் உண்மையான யோக சாதனை.

கேள்வி - பதில்கள்

குருதேவா ! நான் என் அகம்பாவத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன். என் சுயகௌரவத்தை இழந்துவிடுவேன் என்ற பயம் உள்ளது. தயவு செய்து வழி காட்டுங்கள்.

உன்னிடம் அகம்பாவம் இருப்பதை நீ உணர்ந்தால், அப்படியே இருக்கட்டும். அகம்பாவம் கூட இறைவனை சேர்ந்ததுதான். அதை சமர்ப்பணம் செய்ய முயற்சிக்க வேண்டாம். போராடாதே! என் அகம்பாவத்தை சமர்ப்பித்து விட்டேன் என்று சொல்வது பெரிய அகம்பாவமாகும். இது ஒருவன் “ இவ்வுலகிலேயே சிறந்த பணிவானவன் நான்தான்” என்று சொல்வதை போல் உள்ளது. அப்படிச் சொல்வது ஒருவரின் பணிவைக் காட்டாது. நீ உன் இயல்பான குணத்தோடு இரு.ஞானத்தைப் பற்றி மேலும் மேலும் அறியும் போது, உன் அகம்பாவம் போய் விடும். உனக்குத் தெரியும். விதையைச் சுற்றி கடினமான உறை இருக்கும். அதை நீரில் ஊற வைக்கும் போது, விதை தானாகவே உப்பி அந்த உறை கிழிந்து விடும். ஆனால் அதை நீரில் ஊற வைக்காமலேயே விதையிலிருந்து மேல் உறையை பிரித்து எடுக்க முயன்றால் விதை பாழாகி விடும். அதனால் நீ ஞானம், பக்தி, அன்பு என்ற நீரில்  அழுந்தி ஊறும் போது, உன் அகம்பாவம் உன்னை விட்டு போய்விடும்.

குருதேவா! நாம் வலியால் வாடும் போது மனம் நடு நிலையில் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கும் போது நடு நிலையிலிருந்து விலகுகிறோம். எப்படி மகிழ்ச்சியாக, அதே சமயம் நடுநிலையில் இருக்க முடியும்?

ஆம்! இது ஒரு நல்ல கேள்வி. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது விரிவடைதலை உணர்கிறோம். நம் மனம் விரிவடைகிறது. நாம் துக்கத்தில் இருக்கும் போது ஒரு ஆழத்தை அனுபவிக்கிறோம். அதனால் தான், நீ மகிழ்ச்சியடைந்தாலும், துக்கத்தில் இருந்தாலும் சமமாகப் பார்க்க வேண்டும். மகிழ்ச்சியில் விரிவடைகிறாய். துக்கத்தில் ஆழத்தை அனுபவிக்கிறாய். இரண்டுமே உன்னை வலிமையடைய செய்கின்றன. இரண்டையும் கடக்கும் வழி தியானம்.தியானம் மற்றும் ஞானத்தில் இருக்கும் போது நாம் நடு நிலையிலிருக்கிறோம். விரிவடைகிறோம். ஏனென்றால் இது தான் நம் ஆத்மாவின் இயல்பு. உபநிஷத்துகளில்“அனோரணியான் மஹதோ மஹியான்” என்று சொல்லப் படுகிறது. இதன் பொருள் “சிறியதை விட (அணுவை விட) சிறியது. பெரியதை விட பெரியது. அது தான் நான்” இந்த உணர்வு உனக்குள் வரத் துவங்கும்.

குருதேவா! பல முறை சேவை செய்யும் போது “நான் செய்தேன்” என்ற உணர்வு மனதில் எழுகிறது. இப்படி நினைத்தால் சேவையின் புண்ணியத்தை இழக்க நேரிடுமா?

இல்லை. அதை பற்றிக் கவலைப்படாதே. சேவையின் புண்ணியத்தை இழந்து விடுவோமோ? என்ற நினைப்பு ஒரு பெரிய பிரச்சினை. உன் இயல்பான குணத்தோடு இரு. நான் என்ற அகம்பாவம் வந்தாலும், அதில் என்ன தவறு? அப்படியே இருக்கட்டும். அதை  எங்கேயாவது தள்ளி வைத்து விடு. அதை மற்றவர்களுக்குக் காட்டத் தேவையில்லை. அது அப்படியே இருக்கட்டும்.

நான் என் வாழ்க்கையில் தவறான மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சனையை என்னால் எப்படி தீர்த்துக் கொள்ள முடியும் ?

தவறான மனிதர்களைச் சந்தித்தால் பரவாயில்லை.அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்காக காத்திருக்கிறார்கள். நீ தவறான வழிக்கு போகாமல் இருப்பது தான் முக்கியம். ஒரு நோயாளி டாக்டரிடம் வருவது போல் உன்னிடம் வருகிறார்கள், அவர்கள் நோயாளிகள். நீ ஒரு டாக்டர் என்பதை நினைவில் வைத்துக் கொள். அவர்களுடைய சங்கத்தில் சேராமல், அவர்களை உன் வழிக்கு இழுத்து வா.