திருப்தியுடன் வாழ பழகிகொள்


சனிக்கிழமை, 18 ஆகஸ்ட், 2015            

பெங்களூர், இந்தியா


யோக சாதனைகளின் சாரம் ஓய்வு. எல்லா சமயங்களிலும் ஏதாவது செய்து கொண்டிருப்பதால் நீ களைப்படைகிறாய். இப்போது சற்று நேரம் அமர்ந்து உன் ஆத்மாவோடு இரு. தியானம் செய். தியானம் செய்யும் போது ஒரு புது உலகத்தை பார்ப்பாய். தியானம் செய்வதால் உனக்கு ஆழ்ந்த ஓய்வு கிடைக்கும். நீ திருப்தியாக இருக்கும் போது உனக்கு ஓய்வு கிடைக்கும்.ஒய்வு தான் உனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். மகிழ்ச்சியைத் தேடி ஓடும் போது நீ களைப்படைகிறாய். மகிழ்ச்சியின் பின்னால் ஓடுவது களைப்பை ஏற்படுத்தும். ஓய்வாக, உன் ஆத்மாவோடு சேர்ந்திருக்கும் போது, நீ ஓய்வு பெறுகிறாய்.சக்தி பெறுகிறாய். உனக்கு வலிமையைக் கொடுக்கும். ஆனந்தத்தை அளிக்கும். எனவே அவ்வப்போது எலிகளின் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதை கைவிட்டு, ஆத்மாவோடு சேர்ந்து ஓய்வாக இரு. இது தான் ஞானம், ஆன்மீகம்.

பலமுறை, யோக சாதனைகளின் பெயரால் நாம் செயல்களில் ஈடுபடுகிறோம்,களைப்படைகிறோம். உன் உடல் உன்னைக் களைப்படைய செய்யாது. உன் மனம் உனக்கு களைப்பை ஏற்படுத்தும். ஆசைகள் களைப்படைய செய்வது போல், உடலுழைப்பு களைப்பை ஏற்படுத்தாது. ஆசைகள் மற்றும் பேராசையை தவிர வேறு எதுவுமே உன்னைக் களைப்படைய செய்யாது. நீ திருப்தியடைவது மிகவும் அவசியம். திருப்தியாக வாழ  பழகு. இது ஒரு கலை. இது தான் தியானம். அமைதியாக, திருப்தியோடு ஓய்வாக இருப்பது தான் உண்மையான யோக சாதனை.

கேள்வி - பதில்கள்

குருதேவா ! நான் என் அகம்பாவத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன். என் சுயகௌரவத்தை இழந்துவிடுவேன் என்ற பயம் உள்ளது. தயவு செய்து வழி காட்டுங்கள்.

உன்னிடம் அகம்பாவம் இருப்பதை நீ உணர்ந்தால், அப்படியே இருக்கட்டும். அகம்பாவம் கூட இறைவனை சேர்ந்ததுதான். அதை சமர்ப்பணம் செய்ய முயற்சிக்க வேண்டாம். போராடாதே! என் அகம்பாவத்தை சமர்ப்பித்து விட்டேன் என்று சொல்வது பெரிய அகம்பாவமாகும். இது ஒருவன் “ இவ்வுலகிலேயே சிறந்த பணிவானவன் நான்தான்” என்று சொல்வதை போல் உள்ளது. அப்படிச் சொல்வது ஒருவரின் பணிவைக் காட்டாது. நீ உன் இயல்பான குணத்தோடு இரு.ஞானத்தைப் பற்றி மேலும் மேலும் அறியும் போது, உன் அகம்பாவம் போய் விடும். உனக்குத் தெரியும். விதையைச் சுற்றி கடினமான உறை இருக்கும். அதை நீரில் ஊற வைக்கும் போது, விதை தானாகவே உப்பி அந்த உறை கிழிந்து விடும். ஆனால் அதை நீரில் ஊற வைக்காமலேயே விதையிலிருந்து மேல் உறையை பிரித்து எடுக்க முயன்றால் விதை பாழாகி விடும். அதனால் நீ ஞானம், பக்தி, அன்பு என்ற நீரில்  அழுந்தி ஊறும் போது, உன் அகம்பாவம் உன்னை விட்டு போய்விடும்.

குருதேவா! நாம் வலியால் வாடும் போது மனம் நடு நிலையில் உள்ளது. மகிழ்ச்சியாக இருக்கும் போது நடு நிலையிலிருந்து விலகுகிறோம். எப்படி மகிழ்ச்சியாக, அதே சமயம் நடுநிலையில் இருக்க முடியும்?

ஆம்! இது ஒரு நல்ல கேள்வி. நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது விரிவடைதலை உணர்கிறோம். நம் மனம் விரிவடைகிறது. நாம் துக்கத்தில் இருக்கும் போது ஒரு ஆழத்தை அனுபவிக்கிறோம். அதனால் தான், நீ மகிழ்ச்சியடைந்தாலும், துக்கத்தில் இருந்தாலும் சமமாகப் பார்க்க வேண்டும். மகிழ்ச்சியில் விரிவடைகிறாய். துக்கத்தில் ஆழத்தை அனுபவிக்கிறாய். இரண்டுமே உன்னை வலிமையடைய செய்கின்றன. இரண்டையும் கடக்கும் வழி தியானம்.தியானம் மற்றும் ஞானத்தில் இருக்கும் போது நாம் நடு நிலையிலிருக்கிறோம். விரிவடைகிறோம். ஏனென்றால் இது தான் நம் ஆத்மாவின் இயல்பு. உபநிஷத்துகளில்“அனோரணியான் மஹதோ மஹியான்” என்று சொல்லப் படுகிறது. இதன் பொருள் “சிறியதை விட (அணுவை விட) சிறியது. பெரியதை விட பெரியது. அது தான் நான்” இந்த உணர்வு உனக்குள் வரத் துவங்கும்.

குருதேவா! பல முறை சேவை செய்யும் போது “நான் செய்தேன்” என்ற உணர்வு மனதில் எழுகிறது. இப்படி நினைத்தால் சேவையின் புண்ணியத்தை இழக்க நேரிடுமா?

இல்லை. அதை பற்றிக் கவலைப்படாதே. சேவையின் புண்ணியத்தை இழந்து விடுவோமோ? என்ற நினைப்பு ஒரு பெரிய பிரச்சினை. உன் இயல்பான குணத்தோடு இரு. நான் என்ற அகம்பாவம் வந்தாலும், அதில் என்ன தவறு? அப்படியே இருக்கட்டும். அதை  எங்கேயாவது தள்ளி வைத்து விடு. அதை மற்றவர்களுக்குக் காட்டத் தேவையில்லை. அது அப்படியே இருக்கட்டும்.

நான் என் வாழ்க்கையில் தவறான மனிதர்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இந்தப் பிரச்சனையை என்னால் எப்படி தீர்த்துக் கொள்ள முடியும் ?

தவறான மனிதர்களைச் சந்தித்தால் பரவாயில்லை.அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்வதற்காக காத்திருக்கிறார்கள். நீ தவறான வழிக்கு போகாமல் இருப்பது தான் முக்கியம். ஒரு நோயாளி டாக்டரிடம் வருவது போல் உன்னிடம் வருகிறார்கள், அவர்கள் நோயாளிகள். நீ ஒரு டாக்டர் என்பதை நினைவில் வைத்துக் கொள். அவர்களுடைய சங்கத்தில் சேராமல், அவர்களை உன் வழிக்கு இழுத்து வா.  

பகவத்கீதை 8ம் அத்யாயம் – பகுதி-1 : குருதேவரின் விளக்கவுரை

சனிக்கிழமை 15 ஆகஸ்ட் 2015                      

பெங்களூர், இந்தியா


“நான் தெய்வங்களுக்கெல்லாம் தெய்வம்.யாகங்களுக்கு அதிபதியான தெய்வம்.யாகம் பொருட்களை கொண்டு செய்வதாக இருந்தாலும், ஆத்மார்த்தமாக செய்வதாக இருந்தாலும் அதற்கான அதிபதி நான் தான். மனிதர்கள் தங்கள் இறுதி காலத்தில் அடைய விரும்புபவனும் நான் தான். மரணம் சம்பவிக்கும் போது, என்னை நினைப்பவர்கள் என்னில் கரைந்து விடுகிறார்கள்" என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் சொன்னார்.

இதைக் கேட்ட அர்ஜுனனுக்கு, பகவானை பற்றி அறிய ஆவல் மேலும் அதிகரித்தது. அர்ஜுனன் பகவானிடம், “அந்த பிரம்மம் யாது? அத்யாத்மம் என்றால் என்ன?“ என்று கேட்டான். நாம் பலமுறை பிரம்மம், கர்மவினை, புருஷார்த்தம், அத்யாத்மம் (ஆன்மீகம்), தெய்வம் (தேவதை) என்பனவற்றை கேட்டிருக்கிறோம். உண்மையில் இவை எதை குறிப்பிடுகின்றன?

போர்க்களத்திலிருக்கும் போது ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் கடைசி தருணங்களை பற்றிய நினைவு வருகிறது. மரணத்தை வெல்ல முடியுமா அல்லது மரணம் என்னை வென்று விடுமா? என்ற பயம் மனதில் எழுகிறது.அவன் இவ்வாழ்க்கை நிலையற்றது என்பதை உணர்கிறான். அப்படிப் பட்ட சமயத்தில் இந்தக் கேள்விகள் எழுவது இயல்பானது.அதேபோல், கேள்விகள் அர்ஜுனனின் மனதிலும் எழுந்தன.கர்மவினை,ஆன்மீகம், ஆதிதெய்வம் என்பவை பற்றி அறிய தீவிரமான ஆர்வம் பிறந்தது. இதைக் கேட்டு பகவான் சொல்கிறார்.

அக்ஷரம் ப்ரஹ்ம பரமம் ஸ்வபாவோ?த்யாத்ம முச்யதே |
பூதபாவோத்பவகரோ விஸர்க: கர்ம ஸம்ஞித:               [8.3]
பிரம்மம் என்றால் யாது?

எல்லாவற்றையும் விட உயர்ந்தது. இறுதியானது, அழிக்க முடியாதது. யாராலும், எதுவாலும் அழிக்கமுடியாத ஒன்று. குறைக்க முடியாத ஒன்று, என்றும் நிலைத்திருப்பது, மாற்றமில்லாத்து. எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒன்றேயான இறைதத்துவம் (சைதன்யம்). அதுவே என்றும் நிலைத்திருக்கும் உண்மை.பரமானந்தம் (சச்சிதானந்தம்). பிரம்மத்திலிருந்து படைப்பு தோன்றியது. படைப்பில் தோன்றிய எல்லாமும் இப்பிரம்மத்தில் கரைந்து விடும்.

அத்யாத்மம் என்றால் என்ன?

தன்னுடைய இயல்பில் நிலைத்திருப்பது தான் அத்யாத்மம் என்றழைக்கப்படுகிறது. ஒருவர் தன் இயல்பான நிலைக்குத் திரும்புவதை அத்யாத்மம் என்று சொல்கிறோம். உன் இயல்பு என்ன? உன் இயல்பு ஆனந்தத்தை நோக்கி ஓடுவது.வேகத்தோடும், தீவிரத்தோடும் பிரம்மம் என்கிற பேரானந்தத்தை நோக்கி ஓடுவதை அத்யாத்மம் என்கிறோம்.அத்யாத்மம் உன்னுடைய இயல்பான நிலையாகும்.அத்யாத்ம வழியில் செல்வதே நம் ஒவ்வொருவருடைய இயல்பாகும்.

கர்மவினை என்றால் என்ன?

பலவகையான உணர்ச்சிகள் நம்மிடம் எழுகின்றன.உணர்ச்சிகள் நம்மை செயல்புரிய வைக்கின்றன. எனவே அந்த உணர்ச்சிகளையும்,உணர்ச்சித் தூண்டல்களால் நாம் செய்யும் செயல்களையும் கர்மவினை என்று சொல்கிறோம்.உதாரணமாக எதையோ உருவாக்குவதற்கான ஆசை உனக்கு வரும் போது,அந்த ஆசை அல்லது உணர்வு கர்மவினையாகிறது. செயல் ஏற்கனவே துவங்கி விட்டது. எப்போது உன் மனதில், ஒரு புது கட்டடம் கட்ட வேண்டுமென்ற ஆசை தோன்றியதோ, அப்போதே அந்தச் செயல் நிகழ்ந்துவிட்டது. அது சூட்சும கர்மா என்றழைக்கப்படுகிறது. பின்னர் ஸ்தூல கர்மா தொடரும். செயல் புரியும்போது பற்றில்லாமல் சாந்தமாக செய்ய வேண்டுமென்று சொல்வதை, நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள். அதற்கு என்ன அர்த்தம்?கண்டிப்பாக நீங்கள் செயல்புரிய வேண்டும். ஆனால் அந்தச் செயலில் பற்று வைக்கவேண்டாம். அங்கேயே சிக்கிக் கொள்ள வேண்டாம். ஏனெனில், பற்றினால் ஏற்படும் மனப்பதிவுகளே கர்மவினைகளாகின்றன. (ஒருவன் தன் கர்மவினைகளை அனுபவித்துத் தீர்க்க வேண்டும்).

அதிபூதம் க்ஷரோ பாவ: புருஷஸ்ஸாதிதைவதம் |
அதியக்ஞோ?ஹமேவாத்ர தேஹே தேஹ ப்ருதாம் வர ||      [8.4]
இங்கு அதிபூதம் என்று சொல்லப்படுவது எது?
எது அழுகக்கூடியதோ, இறுதியில் அழிக்கப்படுமோ அல்லது ஒரு முடிவுக்கு வருவதோ, அது அதிபூதம் என்றழைக்கப் படுகிறது. இன்று அது இருக்கலாம். நாளை இல்லாமல் போகலாம்.

தேவதைகள் (தெய்வங்கள், கடவுள், அம்மன்) யாது?

பார்! காற்றில் ஈரப்பதம் உள்ளது. காற்றில் நீர் உள்ளது. நீரைப் பனிக்கட்டியின் ரூபத்திலும் பார்க்கிறோம்.மேகங்களிலும் நீர் உள்ளது.மேகங்களாவதற்காக சமுத்திர நீர் ஆவியாகி மேலே செல்லுகிறது. அதை பார்க்கமுடியாது. ஆனால் அந்த நீராவி ஒன்று சேர்ந்து மேகங்களாக குவிந்த பின் அதைப் பார்க்க முடிகிறது. அதேபோல் இவ்வுலகில் சிறப்பான சக்திகள் (ஆத்மாக்கள்) உள்ளன. அதை தேவதை அல்லது தேவர் என்றழைக்கலாம். இறைவனின் சிறப்பான வெளிப்பாடுகளை, சிறப்பான குணம் படைத்தவர்களுக்கு தேவதை என்ற பட்டத்தை அளித்திருக்கிறார்கள்.(இங்கு நீர் கடவுளைக் குறிக்கிறது. நீராவி, பனிக்கட்டி, மேகங்கள் சிறப்பான குணங்குளுடையவையாக இருந்த போதிலும் அவை எல்லாமே நீர் தான். மற்ற வெளிப்பாடுகளுக்கு தேவதை என்ற பெயரைக் கொடுக்கலாம்).

எனவே அதிதெய்வம் எது?

அதுதான் நம் அனைவரிடத்திலும் இருக்கும் சக்தி வாய்ந்த புருஷா என்ற சைதன்யம். பிரம்மம் என்பதும் சைதன்யம் தான். ஆனால் பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கும் சைதன்யம். கண்ணால் பார்க்க முடிந்த சைதன்யத்தின் வெளிப்பாடுகளை புருஷா என்றழைக்கிறோம். புருஷா மேலும் மேலும் குவியும் போது ப்ரகிருதி ஆகிறது. இப்படிப் புரிந்து கொள்ளலாம். நீர் பனிக்கட்டியாகும் போது ப்ரகிருதி. நீர் என்பது புருஷா. நீராவி பிரம்மம். அண்டவெளி தான் பிரம்மம். படைப்பில் எல்லாமே பிரம்மத்தில் அடங்கியுள்ளன.

யக்ஞம் (வேள்வி) என்றால் என்ன?

“நானே ஆதியக்ஞம். நான் இந்த உடலில் அனுபவிப்பது தான் யக்ஞம்“ என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். வேள்வி என்றால் எல்லாவற்றையும் ஒன்று சேர்ப்பது; எல்லாவற்றையும் பார்ப்பது; எல்லாவற்றையும் அறிவது என்று அர்த்தம். பார்க்கிறவர் யார் என்று அறிவது. எனவே அதியக்ஞர் தான் அதிபூதம், அதிதெய்வம், அத்யாத்மர் என்ற மூன்றையும் ஒன்றாக சேர்ப்பவர். இந்த மூன்றையும் தனித்தனியாக பார்க்க முடிந்தால் தான், மூன்றையும் ஒன்று சேர்க்கும் எண்ணம் வரும். “இந்த மூன்று தத்துவங்களும் சேரும்போது வெளிப்படும் கண்ணுக்குத் தெரியும் உருவில் இருக்கும் நானே இறைத் தத்துவம். எல்லா தேவதைகளும் என்னுள் வசிப்பவர்கள்“ என்று பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்குச் சொன்னார்.

புருஷா மற்றும் ப்ரகிருதி அந்த ப்ரம்மத்தில் அடங்கியுள்ளன.

இந்த முன்னோக்குப் பார்வையில் பார்த்தால், நான் எல்லா உயிர்களிடத்தும் வசிக்கிறேன். இந்தப் படைப்பின் அனைத்தையும் நடத்துகிறேன். எல்லாவற்றையும் நிலைநிறுத்தி ஒன்றாக சேர்ப்பவனும் நான். எல்லாவற்றையும் அனுபவிப்பவனும் நான். இப்படைப்பின் எல்லா நிகழ்வுகளும் என்னுடைய தெய்வீகவிளையாட்டு.விளையாட்டை உருவாக்கினவனும் நானே. நானே பந்து. நானே விளையாடுபவன். நானே விளையாட்டுத் திடல். நானே பார்வையாளன். நானே விளையாட்டின் வெற்றி தோல்வியை முடிவு செய்யும் நடுவர்“ என்று பகவான் சொல்கிறார்.

இது தான் யக்ஞம். யக்ஞம் என்றால் புருஷா, ப்ரகிருதி, ப்ரம்மம் என்ற மூன்றையும் கௌரவிக்கும் புனிதமான செயல்.மற்றவர்கள் மேலே அதிக ஆசை அல்லது அதிக வெறுப்பில் சிக்கியிருக்கிறோம். யக்ஞத்தின் சாரமான ஒருமையில் நாமிருக்கும் போது, இவ்வுலகம் முழுதும் நம்முடையது என்ற உணர்வு வரும். எல்லோரும் நம்மை சேர்ந்தவர்கள் என்ற உணர்வை அனுபவிக்கலாம்.

அந்த காலே ச மாமேவ ஸ்மரன்முக்த்வா கலேவரம் |
ய ப்ரயாதி ஸ மத்பாவம் யாதி நாஸ்த்யத்ர ஸம்சய: ||         [8.5]

பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். “நீ உன் விருப்பம் போல் வாழலாம். ஆனால் வாழ்க்கையின் கடைசி தருணங்களில், என்னை நினைக்க வேண்டும். என்னை பக்தியோடு நினைத்தால், நீ என்னை அடைவாய் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை" உண்மை என்னவென்றால், நாம் வாழ்க்கை முழுதும் செய்யும் செயல்களே நம் கடைசி தருணங்களில் மனதில் வரும். மரண காலத்தில் கூட, வாழ்க்கையில் நாம் செய்த செயல்களே நம் மனதில் எழுந்து தொந்தரவு செய்கின்றன. எனவே பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஞானத்தை கொடுத்த பின்பும், “உன் கடைசி காலத்தில் என்னை நினைவில் வை“ என்று சொல்கிறார்.

யஸ்யம் வாபி ஸ்மரன்பாவம் த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கௌந்தேய ஸதா தத்பாவபாவித: ||           [8.6]

இப்பிறப்பின் இறுதிக்காலத்தில் எப்பொருளை எண்ணிக்கொண்டு ஒருவன் உடலை உகுக்கிறானோ, எப்பொழுதும் அப்பொருளை பாவிப்பவனாகிய அவன் மறுபிறப்பிலும் அதையே அடைகிறான். குந்தியின் புதல்வா, மறுக்க முடியாத உண்மை. எந்த ஆசைகளுடன் நாம் இவ்வுடலைத் துறக்கிறோமோ, அதுவே மறுபிறவியில் எடுக்கப் போகும் உடலையும், மனநிலையையும் தீர்மானிக்கிறது. பகவான் கிருஷ்ணர் “என்னை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டிரு“ என்று சொல்கிறார்.

தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமனுஸ்மரயுத்ய ச |
மய்யர்பித மனோ புத்திர் மாமேவைஷ்யஸ்யஸாம்சய: ||      [8.7]

எனவே சர்வகாலமும் என்னை நினைத்துக் கொண்டே போர் செய்; மனம் புத்தியை என்னிடத்து அர்ப்பணம் செய்வதால் சந்தேகமின்றி என்னையே அடைவாய்.“என்று பகவான் கிருஷ்ணர் அடுத்த ஸ்லோகத்தில் சொல்கிறார். 100% கொடுத்து எதைச் செய்தாலும், அது போர் புரிவதற்குச் சமமாகும். போர் என்றால் ஒருவரைக் கொல்வது என்று அர்த்தமாகாது. உன்னிடமிருப்பதையெல்லாம் பணயம் வைத்து 100% முயற்சி செய்வதையே இங்கு போர் என்று சொல்கிறோம். எனவே உன் வாழ்க்கை போராட்டமாக தென்பட்டால், நீ 100% முயற்சி செய். “அப்படி முயற்சி செய்யும் போது, 100% கொடுக்கும் போது, என்னை மனதில் வைத்துக் கொண்டு போராடு. உன் மனதையும் புத்தியையும் என்னிடம் சமர்ப்பித்துவிடு“ என்று பகவான் சொல்கிறார்.

அப்படியென்றால் பூரண சரணாகதி என்று அர்த்தம் – உணர்வு நிலையிலும், அறிவு நிலையிலும் சமர்ப்பணம் செய்வது. சிலர் அறிவுபூர்வமாக சிந்திக்காமல் உணர்ச்சிவசப்படுகிறார்கள். சிலர் அறிவு பூர்வமாகச் சிந்தித்து நிலைமையை புரிந்து கொள்கிறார்கள். விளக்கி சொல்கிறார்கள். ஆனால் அவர்களிடம் மன உணர்ச்சிகள் இருக்காது. அதனால் தான் கீதையில் பகவான் பலமுறை “உன் உணர்வு நிலையிலும், அறிவு நிலையிலும் என்னோடு இணைந்திரு“ என்று சொல்கிறார். 

“என்னை முழுதும் ஏற்றுக்கொண்டு மனம், புத்தியோடு சரணடைந்துவிடு. அப்படி செய்யும்போது என்னை அடைவாய் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நிலையான மனஉறுதியைப் பெற்று, சமநிலையில் இருப்பாய். ஆத்மநிலையை அறிந்து, விழிப்புணர்வை பெறுவாய். நான் தான் உன்னுள் இருக்கும் ஆத்மா என்பதை அறிந்து கொள்வாய். எங்கோ தூரத்தில் அல்ல. நான் உனக்குள் வசிக்கிறேன்.

அப்யாஸயோகயுக்தேன சேதஸா நான்யகாமினா |
பரமம் புருஷம் திவ்யம் யாதி பார்த்தானு சிந்தயன் ||          [8.8]

ஒருவன் இதை எப்படி அடைய முடியும்?

“நீ அப்யாசம் செய்ய வேண்டும்“ என்று பகவான் சொல்கிறார். அப்யாசம் என்றால் ஒரு காரியத்தை வழக்கமாக்கி கொள்ளுதல் என்று அர்த்தம்.

மனதின் இயல்பு என்ன?

பல திசைகளில் ஓடுவது தான் மனதின் போக்கு. இறை உணர்வால் தூண்டப்பட்டு விழிப்புணர்வு பெற்ற மனிதரிடம் ஒரு ஆழமான தன்மை இருப்பதை பார்க்கமுடியும். ஒரு மனிதரின் மனம் பல திசைகளில் ஓடிச் சிதறியிருந்தால், அவரிடம் இறையுணர்வை காண முடியாது. அவர்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது. அவர்கள் சிறந்த விஞ்ஞானிகளாகவோ, மகத்தான கலைஞர்களாகவோ இருந்தால் கூட, அவர்களிடம் ஒரு திடமான ஒன்றை, பாராட்டத்தக்க ஆளுமையை காண முடியாது.

எப்படி ஒருவரால் நிலையான, ஆழ்ந்த ஆளுமையை வளர்த்துக் கொள்ள முடியும்?

ஒரு தனி நோக்கத்தை அடைவதற்காக, ஒருவர் தன் மனதையும் புத்தியையும் செலுத்தினால் அப்படி நிகழக்கூடும். அப்போது தான் அவரால் ஒரு காரியத்தை சிறப்பாக செய்யமுடியும்.அவரிடம் ஒளிரும் இறைத்தன்மையைக் காணமுடியும். திசைகளில் ஓடும் மனதின் தன்மை எப்படியிருக்கும் என்று உனக்குத் தெரியுமா? அவர் எப்போதும் இங்கிருந்து ஏதாவது கிடைக்குமா? அங்கிருந்து ஏதாவது கிடைக்குமா? என்பதைப் பற்றியே சிந்தித்த வண்ணம் இருப்பார். இது குறைபாட்டை மட்டும் நினைப்பவரின் அடையாளம். இது ஒரு பிச்சைக்காரனின் மனநிலையை போன்றது. நீ அலையாத மனத்தோடு ஆத்மாவில் நிலைத்திருப்பது, குறையாத செல்வச்செழிப்பின் அடையாளம். ஒருவர் தெய்வீகமான அழகான நிலையில் இருந்தால், அவருடைய மனம், சித்தம் எங்கும் அலையாமல் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளலாம். அவருடைய மனம் குவிந்து ஆத்மாவில் நிலைத்திருக்கிறது. அது அவருக்கிருக்கும் ஆழ்ந்த மனத்திருப்தியின் அடையாளம். உன் மனத் திருப்தி உன்னைத் தெய்வீகமாக்குகிறது. ஆனந்தம் உன்னைத் தெய்வீகமாக்குகிறது. செயல் திறமை உன்னைத் தெய்வீகமாக்குகிறது.

தெய்வீக குணங்கள் உன்னுள் மலர்ந்து வெளிப்படுவதற்காக நீ அப்யாச யோகத்தை வழக்கத்தில் கொண்டு வரவேண்டும் என்று பகவான் கிருஷ்ணர் சொல்கிறார். பொதுவாக வழக்கமாக செய்யும் அப்யாசம் மந்தமாக,உயிரில்லாமல்,சலிப்பைத் தருவதாக இருக்குமென்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அல்ல.இங்கு அப்யாசம் என்று சொல்லப்படுவது பரமானத்தின் மூலத்தை நோக்கிச் செல்வதைக் குறிக்கின்றது.புரிந்து கொண்டால்,எளிதாகவும், ஆனந்தமளிப்பதாகவும் இருக்கும். இப்போது நீ இந்த விளக்கம் மிகச் சுருக்கமாக இருப்பதாக நினைத்தால், அப்யாசத்தை செயல் முறையில் வழக்கமாக்கி கொள்வது கடினமென்று நினைத்தால் (அர்ஜுனனும் அப்படித் தான் கூறுகிறான்.) “என் அன்புக்குரியவனே, நான் உன்னுடன் இருக்கிறேன். என்னை நினைவில் வைத்துக் கொள்” என்று பகவான் சொல்கிறார். இங்கு தான் குருவின் முக்கியத்துவம் உள்ளது.

குருதத்துவமே அனைத்து காரணங்களுக்கும் காரணமாகும்

சனிக்கிழமை, 1 ஆகஸ்ட், 2015,

அமெரிக்க ஐக்கிய நாடுகள்.



ஒரு சமயம், ஒரு பெண்மணி குருவிடம், எனக்கு இரண்டு கேள்விகள் உள்ளன என்று கூறினாள். குரு, சரி கேட்கலாம்"  என்று கூறினார். அப்பெண்மணி, "கடவுள் ஏன்  இந்த உலகைப் படைத்தார்? அவர் அதை அப்படியே இருக்கட்டும் என்று விட்டுவிட்டு ஏன் மகிழ்ச்சியாக இருந்திருக்கூடாது? இவ்வுலகை படைத்து அதை ஏன் இவ்வளவு பரிதாபமாக்கினார்?" என்று கேட்டாள். அதற்கு குரு,  “என்னிடம் ஒரே விடை தான் உள்ளது! கடவுள் இவ்வுலகை எனக்காகவே  படைத்துள்ளார். அதை துன்பகரமாக ஆக்கியது ஏனெனில் நான் அதில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத் தான்" என்று பதிலுறுத்தார்.

உங்கள் மனம் துன்பத்திலிருக்கும் போது, அந்த துன்பத்தின் காரணத்தைத் தேட முற்படுகின்றீர்கள். பின்னர், உங்கள் மகிழ்ச்சியின்மையின் காரணத்தை, ஒரு நிலைமை அல்லது ஒரு நபர், அல்லது ஒரு மனப்பான்மை என்று காண்கின்றீர்கள் அல்லவா? மகிழ்ச்சியின்மையின் காரணம், ஒரு நிலைமை மனப்பான்மை அல்லது நபர் என்றே செல்லும். இது அறியாமையின் சுழற்சி. நமது துன்பத்தின் காரணத்தை உடனடியாக கண்டுபிடிக்க விரும்புகிறோம், ஏனெனில் விடையில்லாத கேள்விகள் மனதில் எரிச்சலை உண்டாக்குகின்றன. எனவே துன்பத்திற்கு ஒரு காரணத்தை கண்டு, அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்க விரும்புகிறோம். உங்கள் மனதிற்குள் சென்று உற்று நோக்குங்கள். எப்போதுமே இவ்வாறு தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. உங்கள் துயரத்தின் காரணத்தை கண்டுபிடித்தவுடன், அதை உடனடியாக அகற்றவோ, சரிப்படுத்தவோ அல்லது வேறேதும் செய்யவோ விரும்புகிறீர்கள். இதை புரிந்து கொள்கிறீர்களா? துன்பமுற்று இருப்பதற்கு காரணம், ஒரு மனிதரின் செயல் என்று எண்ணி, அவரை சரிப்படுத்தவோ வேறேதேனும் செய்யவோ விரும்புகிறீர்கள். இல்லை! அதுவல்ல காரணம்.அனைத்து காரணங்களுக்கும் காரணம் வேறொன்று. அந்த மனிதர்களும் நிலைமைகளும் ஒரு தபால்காரர் அல்லது ஒரு மின்னஞ்சலை எடுத்து வரும் மடிக்கணினி போன்று தான். ஒரு கெட்ட மின்னஞ்சல் வந்தால் மடிக்கணினியை தூக்கி எறிந்துவிடவோ அல்லது அடையாள சொல்லை மாற்றி விடவோ மாட்டீர்கள். அவ்வாறு மாற்றுவது எந்த விதத்திலும் பயனளிக்காது. 

உண்மையான காரணம், அறியாமை,உண்மையான தன்மையினை பற்றிய அறியாமை. நம்முடைய இயல்பு தன்மையை பற்றிய அறியாமையுடன் இருக்கும்போது, மிகவும் துன்புறுகிறோம். இங்கு  குருவின் சம்பந்தம் என்னவெனில், உங்களை உங்களுடைய உண்மையான சுயத்திற்கு திரும்பக் கொண்டு வருவதாகும். அதனால் தான், தத்வமஸ்யாதிலக்ஷம் -- உங்களுக்கு "நீங்கள் தான் அது " என்று கருத்தினை அளிப்பதே குருவின் இலக்கு ஆகும். அது என்ன?  

அது: பிரம்மானந்தம் பரம சுகதம் கேவலம் ஞானமூர்த்திம், த்வந்தாதீதம், ககனசதிரிஷம் தத்வமஸ்யாதி லக்ஷ்யம். ஏகம் நித்யம் விமலமசலம் சர்வதீ சாக்ஷிபூதம் பாவாதீதம் த்ரிகுணாரஹிதம் சத் குரும் தம் நமாமி.

பிரம்மானந்தம் - நமது இதயம், ஆத்மா மற்றும் மனம் ஆகியவை எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் பேரின்பம்.

பரம சுகதம்: எல்லையில்லா ஆனந்தம் - அனைத்து சொற்கள் அனைத்துலகம் இவற்றையெல்லாம் கடந்த ஆனந்தம்

கேவலம் ஞானமூர்த்திம் : தூய்மையான ஞானம் மட்டுமே

ஏகம் நித்யம் விமலமசலம் : என்றென்றும்  நீங்கள் சார்ந்திருக்கக் கூடிய

சர்வதீ சாக்ஷிபூதம் : எல்லா  விதமான மனப்போக்குகள் எல்லா விதமான எண்ணங்கள் அனைத்திற்கும் சாட்சியாக இருப்பது

பாவாதீதம் த்ரிகுணாரஹிதம் : மூன்று குணங்களுக்கும் அப்பாற்பட்டது, மூன்று நிலை மெய்யுணர்வுக்கும் (விழிப்பு, கனவு, மற்றும் தூக்கம்) அப்பாற்பட்டது, ஆயினும், மூன்று குணங்களும் (சத்வ,ரஜஸ் மற்றும் தமஸ்) உள்ளது

சத்குரும் தம் நமாமி : இதுதான் சுயம், இருப்பு, ஞானம், இதுவே குருதத்துவம்.

வரையறுக்கப்பட்ட சிந்தனை முறைகள், உணர்ச்சி முறைகள் அல்லது இவை போன்ற ஏதேனும் கொண்ட நமது சுய அடையாளம் தான் காரணம். துன்பத்தின் காரணம் என்று ஏதேனும் நிகழ்வு, மனப்போக்கு அல்லது மனிதர் என்று தாளிட்டு கொள்வதற்கு பதிலாக நான் யார் என்னும் சுய அடையாளத்தினை மறந்தது தான் என்று கூறுங்கள். ஆகவே குரு என்ன கூறினார்? கடவுள் இந்த உலகைத் துன்பங்களுடன் படைத்ததற்கு காரணம் நான் அதில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பது தான்  என்று கூறினார். இந்த உலகம் அதிக இன்பமானதாக இருந்தால், அதை விட உயர்ந்ததை, அதை விட வேறானதை, நீங்கள் எதிர்நோக்க மாட்டீர்கள். சிறிய விஷயங்களில் நீங்கள் பிடிபட்டு இருக்கும் போது,தெய்வீகம் " விழித்தெழு, நீ யார் என்று பார்" என்று கூறுகின்றது. வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இந்தக் கேள்வி எப்போதாவது மனிதர்களின் மனதில் எழுகின்றது. இந்தக் கேள்வி எழும்போது ஏதோ ஒன்று நிகழ்கின்றது. நம் வாழ்வில் ஒரு தீப்பொறி தோன்றுகிறது. உயர்ந்த மிக அழகான ஒன்று நிகழத் துவங்குகிறது.

பாரம்பரியத்தில் இரு விதமான தலைவர்கள் இருந்திருக்கின்றனர்.

(1) ஒன்று வரங்கள்ளிப்பவர்.."சரி உனக்கு என்ன வேண்டும்? அங்குமிங்குமாக சிறு சிறு விஷயங்கள் வேண்டுமா? சரி இதோ பெற்றுக்கொள். ஆனால் அதை விட மேலாக எழுந்து வா " உங்களை மாயையிலிருந்து (மருட்சி அல்லது அறியாமையிலிருந்து) விடுவிக்க வரங்கள்,ஆசிகள், அளிப்பவர்.
(2) மற்றொரு வகை, சற்று வேறுபட்டவர்கள். மிகவும் கடினமானவர்கள். நீங்கள் எதையாவது விரும்பினால் அவ்வளவு தான், அதை அடையவே முடியாது.ஒரு வேளை நீங்கள் இத்தாலி செல்ல வேண்டும் என்று விரும்பினால் உங்களால் ஒரு போதும் இத்தாலிக்கு செல்லவே முடியாது. 

உங்கள் ஆசைகள், பேரார்வம் மற்றும் பிடிப்புகள் அனைத்தையும் விட்டுவிட வேண்டும் அப்போது தான் நீங்கள் அவற்றை விட மேலாக எழ முடியும் என்பதில் கண்டிப்பாக இருப்பவர்கள். முந்தைய தலைமுறை குருமார்கள் இவ்வாறே செய்து வந்தனர். அவர்கள்," உங்கள் மனதை விட நீங்கள் மிக அதிக மேலானவர், ஏன் இந்த சிற்றறிவில் எப்போதும் கட்டுண்டு இருக்கின்றாய்" என்று உங்களை உணர வைப்பவர்கள்.

நமது துன்பத்தின் காரணத்தை இது அது என்று எதன்மீதாவது வைப்பதால் அது ஸ்திரமாகின்றது. அது அறியாமை. காரணம் என்று எதை எண்ணுகிறீர்களோ அதிலிருந்து சற்றே ஆழமாக சென்றால், அந்தக் காரணம் அங்கில்லை இன்னும் சற்றுக் கீழேயே உள்ளது என்று அறிவீர்கள். இதை அறிந்திருக்கிறீர்களா? ஒரு குறிப்பிட்ட நிலைமைக்கு "இது" தான் காரணம் என்று எண்ணுகின்றீர்கள், ஆனால் சற்று ஆழமாகப் போனால், காரணம் அங்கில்லை ஆனால் வேறெங்கோ இருப்பதை கண்டறிவீர்கள். எனவே காரணம் குதித்துக் கொண்டிருக்கின்றது, அதை நிஜமான காரணம் என்று நம்புவதால் அறியாமை மேலும் திடமாகிறது. இந்தப் பிரபஞ்சம் முழுமையும் சிக்கலாக இருக்கும் நிலையில், ஒவ்வொரு நிகழ்வும் சிக்கல் தான், மனம் அதை விட சிக்கலானது, இதை தாண்டி வருவதற்குத் தான் கர்மா என்னும் சித்தாந்தத்தை முற்காலத்தில் ஏற்படுத்தியிருந்தனர். கர்மாக்கள் நல்லவை தீயவை என்று ஏராளமாக இருக்கின்றன. நீங்கள் செய்யும் கர்மாக்களுக்கு, நிகழ்வினை, நிலைமைகளை பிறரை குறை கூறுவதற்கு பதிலாக நீங்கள் உங்கள் மீதே பொறுப்பேற்று கொள்கின்றீர்கள்.

இந்தக் கர்மத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு? அங்கு தான் அறிவு தேவைப்படுகிறது. தன்னை பற்றிய ஞானம் கர்மாவினை பொசுக்கி விடுகிறது.காரணங்களுக்கெல்லாம் காரணமான உண்மை காரணத்தை-உயிர் இருப்பினை - எடுத்து வருகின்றது. எங்கும் நிறைந்திருக்கின்றது. படைப்பின் ஒவ்வொரு துகளிலும் உள்ளது. பெயர், உருவம், இவற்றுக்கெல்லாம் மேலாக ஞானம் உங்களை உயர்த்தி,உண்மையான இருப்பின் பீடத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது. அதுதான் திடமான  முடிவான தளம். எனவே காரணங்களுக்கெல்லாம் காரணம் குருதத்துவமேயாகும்.இன்று இவ்வளவு போதும். இதுவே அதிகம். நீங்கள் மெதுவாக இதை ஜீரணித்துக் கொள்ளுங்கள். குருபூர்ணிமாவான இன்று, உங்கள் வாழ்க்கையில் இது வரையில் நீங்கள் பெற்றுள்ள நல்லனவைகளை எல்லாம் நினைத்துக் கொள்ளுங்கள்.அனைத்து நல்லனவைகளும் அகன்ற பரப்பினை அளித்துள்ளன. உங்களுக்கு நிகழ்ந்துள்ள அனைத்து, மதிகெட்ட, துன்பமாவை எல்லாம் உங்களுக்கு ஆழத்தினை அளித்து, அவற்றின் மீது உங்களுக்குள்ள வலிமையினை உணர வைக்கின்றன.ஆகவே, எது நிகழ்ந்திருந்தாலும் எது நிகழாமல் இருந்திருந்தாலும்,அதைப் பற்றி, நன்றியுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்கள்.