ஞானமும் ஓர் செல்வமே

வியாழக்கிழமை, 12 நவம்பர் 2015,

பிரான்க்பர்ட், ஜெர்மனி

பகுதி 1:


பூஜா  என்பது என்ன?

பு என் சொல் முழுமை என்பதை குறிக்கிறது. ஜா என்றால் முழுமையிலிருந்து பிறந்தது என்று பொருள். ஆகவே பூஜா என்றால் முழுமையிலிருந்து பிறந்த ஒன்று என்னும் பொருளாகிறது. பூஜையிலிருந்து உங்களுக்குக் கிடைப்பது முழுமையும் திருப்தியும். பூஜை செய்வது, சூழலில் ஓர் நுண்ணிய அதிர்வலையை ஏற்படுத்தி நேர்மரையினை எடுத்து வருகின்றது. தீபாவளி ஓர் ஒளித் திருவிழா. புத்தர்,"அப்போ தீபோ பவ" என்று கூறியிருக்கிறார் அதாவது உங்களுக்கே நீங்கள் ஒளியாகிறீர்கள்.வேதங்கள் மற்றும் உபநிஷதங்கள்". அனைவரும் விளக்குகளே சிலர் ஏற்றப் பட்டிருக்கின்றீர்கள், சிலர் ஏற்றப்படவில்லை ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒளி  வீசும் சாத்தியக் கூறு உள்ளது " என்று கூறுகின்றன.

எனவே, தீபாவளி இருளை அகற்றுகின்றது.இருளை அகற்ற விளக்கு மட்டும் போதாது. சமுதாயம் முழுமையும் வெளிச்சமாக வேண்டும். ஓர் குடும்பத்தில் ஒருவர் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் போதாது. ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மகிழ்ச்சியற்று இருந்தால் கூட, மற்றவர்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. எனவே ஒவ்வொரு வீடும் ஒளியூட்டப்பட வேண்டும்.

இரண்டாவதாக, வாழ்வில் நாம் எடுத்துவர வேண்டியது இனிமை. இனிப்புக்களை மட்டும் பிறருக்கு வழங்காமல் இனிமையையும் சேர்த்து வழங்குங்கள். உங்களுக்கு ஏதேனும் கசப்புணர்வு இருந்தால் அழுத்தம் இருந்தால், உங்கள் மனதில் இறுக்கம் இருந்தால், பட்டாசுகளைப் போன்று அவற்றை வெளியே வெடித்துத் தள்ளுங்கள். புதிய வாழ்வைத் துவக்குங்கள், அதைக் கொண்டாட்டமாகுங்கள் என்றே தீபாவளிப் பண்டிகை உங்களுக்கு நினைவுறுத்துகின்றது. அமாவாசையன்று தீபாவளி கொண்டாடப்படுகின்றது. நாம் பெண் கடவுளான லக்ஷ்மியைப் பிரார்த்திக்கின்றோம்.தேவி லக்ஷ்மி செல்வத்தினை வழங்கும் தெய்வமாக பிரதிபலிக்கின்றார். இந்தியாவில், கடவுள் ஆணாக மட்டுமின்றி  சில சமயங்களில்  பெண்ணாகவும் குறிப்பிடப்படுகின்றார். ஓர் வெண்மையான ஒளி பல நிறங்களைப் பிரதிபலிப்பது போன்று ஒரே தெய்வம் பல சுவைகளைக் கொண்டுள்ளது. இன்று நாம் லக்ஷ்மி தேவியைப் பூஜித்து, பழமையான ரிக்வேத மந்திரங்களை ஜபித்து, நேர்மறையான அதிர்வலைகளையும் நிறைவான செல்வத்தையும் அடைவோம்.

தீபாவளிக்கு முந்தைய நாள் தந்தேராஸ் என்றழைக்கப் படுகின்றது. பழங்காலத்தில் செல்வங்களை திரட்டி இந்த தினத்தில் இறைவனின் முன் சமர்ப்பிப்பதுண்டு.இப்போதெல்லாம் மக்கள் சாதரணமாக தங்கள் செல்வத்தை வங்கியிலோ அல்லது பாதுகாப்புப் பெட்டகத்திலோ மறைத்து வைக்கின்றனர். ஆனால் முற்காலத்தில்,தந்தேராஸ் தினத்தில் அனைத்து செல்வங்களையும் முன்புறமாக வைத்து, கண்டு நிறைவினை உணர்ந்திருக்கின்றனர்.செல்வம் என்பது வெறும் பொன்னும் வெள்ளியும் மட்டுமல்ல, ஞானமும் கூட. எனவே அவ்வாறு கொண்டாடப்பட்டது. அனைவரும் உங்களது ஞானத்தினை நெஞ்சாரக் கண்டு மகிழ்ந்து நிறைவாக உணர வேண்டும்.

தந்தேராஸ் ஆயுர்வேதத்தின் தினமும் கூட மூலிகைகளும் ஒரு வகையில் செல்வமேயாகும். மூலிகைகளும் செடிகளும் செல்வமாகும். தீபாவளி தினத்தன்று தான் மனித இனத்திற்கு அமிர்தம் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, இன்று  நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்ந்து நடுநிலையில் உணர்ந்து, வாழ்வில் முன்னோக்கிச் செல்லுங்கள். எப்போதெல்லாம் ஆசீர்வதிக்கப் பட்டதாக உணருகின்றோமோ அப்போதெல்லாம் மேலும் அதிகமாக வந்து சேர்கின்றது. பைபிளில்," யாருக்கு இருக்கின்றதோ, அவருக்கே அதிகமாக அளிக்கப்படும், இல்லாதவருக்கு இருக்கும் மிகக் குறைவானதும்  எடுக்கப்பட்டு விடும்" என்று வசனம் உள்ளது.பழங்காலத்திலிருந்தே மிகுதியானதை  உணரவேண்டும் என்னும் எண்ணம் இருந்து வந்திருக்கின்றது. மிகுதியானது என்பது உள்ளத்தின் உள்ளிருந்து துவங்கி வெளிப்புறத்தில் தெரிகிறது. ஆகவே உங்களுக்கு ஏராளமான ஆசீர்வாதம் இருக்கின்றது. இந்த உணர்வுடனேயே செல்லுங்கள்.

மனதிலுள்ள கோபத்திலிருந்து விடுபடுவது எவ்வாறு?

ஒரு நாள் இறந்து விடுவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். புன்னகையுடன் இறக்க விரும்புகிறீர்களா அல்லது கோபத்துடன் செல்ல விரும்புகிறீர்களா? நிச்சயமாக  ஓர் விமானத்திலோ ரயிலிலோ குப்பையை எடுத்துச் செல்ல விரும்ப மாட்டீர்கள். உங்கள் பெட்டியை அடுக்கும் போது, குப்பையையும் சேர்த்து வைத்துக் கொள்வீர்களா என்ன? எனவே,"நான் குப்பையை எடுத்துச் செல்ல விரும்பவில்லை" என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதைத் துறந்து விட்டு மகிழ்ச்சியாகச் செல்லுங்கள். ஒவ்வொரு குற்றவாளியும் ஒரு பாதிக்கப்பட்டவரே என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கையின் பொருள் என்ன?

தெரிந்தவர் கூற மாட்டார், கூறுபவருக்கு தெரியாது. இந்தக் கேள்வியே வாழ்வில் முன்னேறிச் செல்ல உதவும் ஒரு வாகனம் ஆகும். புனிதமான ஒன்றினைப் பாதுகாத்து வைத்துக் கொள்வது போன்று இந்தக் கேள்வியையும் உங்களுடனேயே வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களுக்கு விடை கிடைக்கும். அதற்கு முன்னர் வாழ்க்கையை மதிக்கத் துவங்குங்கள்.

நானும் என் துணைவரும் ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்தானா  என்று எவ்வாறு  நான் அறிந்து கொள்வது?

மிகவும் எளிதான ஒன்று இது. உங்கள் துணைக்கு  ஒரு வாரத்திற்கு எரிச்சலூட்டுங்கள். அவர் அல்லது அவள், அப்போதும் உங்களை நேசித்தால் சரியான துணை என்று கண்டறியுங்கள். ஒரு வாரத்திற்கு மட்டும், அவர்களிடம் தெரிவிக்காமல்  அவர்களுக்கு பிடிக்காத அனைத்தையும் செய்யுங்கள்!

அநீதியை எவ்வாறு கையாள்வது?

பொறுமை மற்றும் விடாமுயற்சியுடனேயே அநீதியைக் கையாள வேண்டும். கோபம் கூடாது, விடாமுயற்சி தேவை. கோபத்துடன் எதைச் செய்தாலும் எப்போதுமே பின்னர் வருந்துவோம்.

எதற்கு நான் முன்னுரிமை அளிக்க வேண்டும்?- தொலை தூரத்தில் இந்தியாவிலிருக்கும் என் குடும்பதிற்கா அல்லது ஐரோப்பாவில் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் எனது தொழில் வாழ்க்கைக்கா?


திறந்த மனதுடன் நீங்கள் அவர்களுக்குக் கிடைக்கும்படியான  நிலையில்  இருங்கள். ஒரு வேளை  உங்களது பெற்றோர் உடல்நலமின்றி இருந்தாலோ, தீவிரமாக உங்களது தேவையை உணர்ந்தாலோ நீங்கள் அங்கு செல்லும் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள். நலமுடன் வசதியாக இருந்தால், நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையை தொடர விரும்பினால் அவ்வாறே செய்யுங்கள். ஒன்றுடன் ஒன்று மோத வேண்டாம். சில சமயங்களில் மனம் மோதலில் ஈடுபடும். அங்கு சென்றால் இங்கு வந்து பணிபுரிய வேண்டும் என்று தோன்றும். எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்.