அனைத்திலும் தெய்வீகத்தைக் காணுங்கள்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016,

பெங்களூரு, இந்தியா


 சிலர், "உலகைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் கண்டெடுங்கள். அதுவே மிக முக்கியமானது " என்று கூறுகின்றனர். ஆம். இதுவே முதல் படி, உங்கள் அமைதியைக் காணுங்கள். ஆயின், அதை கண்டெடுத்த பின்னர் என்ன செய் கிறீர்கள்? உங்கள் அமைதி நிலை உங்களைச் சுற்றியிருக்கும் பலருடன் பின்னிப் பிணைந் திருக்கும் போது நீங்கள் மட்டும் எவ்வாறு ஓர் தீவு போன்று அமைதியுடன் இருக்க முடியும்? முடியுமா என்ன? முடியாது. எனவே, நீங்கள் அமைதியினை உங்களைச் சுற்றிப் பரப்பும்போது, மட்டுமே உங்களுடைய அமைதி நிலைத்திருக்கும். உள் நோக்கிச் செல்வது என்பது, வெளிப் புறமாகச் சென்று நமது சூழலை மாற்றுவது என்பதற்குச்  சமமான முக்கியத்துவம் உடையது.  இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.

சிலர், இந்த உலகைப் பற்றி மறந்து விடுங்கள். உலக அமைதிக்காகப் பாடுபடாதீர்கள். உலகைத் திருத்த முயற்சிக்காதீர்கள். உங்களுக்குள்ளேயே சென்று உங்களது அமைதி யினைக் கண்டெடுங்கள்" என்று கூறுகின்றனர். ஆனால் நாம் வாழும் கலையில் நமது அமைதியினை கண்டெடுத்து விட்டோமல்லவா? (அனைவரும் ஒரே குரலில் ஆம் என்கின்றனர்). வாழும்கலையின் ஆனந்தப் பயிற்சியின்  முதல் நாளன்றே நீங்கள் அமைதி யடைந்து விட்டீர்கள். வாழ்க்கையின் கொள்கைகளை ஓரளவு அறிந்து கொண்டீர்கள். நமது அமைதியையும் ஆனந்தத்தையும் கண்டெடுத்த பின்னர், அதை சுற்றிலும் பரப்புவதே நமது கடமையாகும்.அதனால்தான், வாழும் கலை உலகெங்கிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள லாத்தூரில், நாட்டின் பதினேழாவது மற்றும் 

மகாராஷ்டிர மாநிலத்தில் பதிமூன்றாவது நதியினை புத்துணர்ச்சி பெற உழைக்கின்றோம். எந்த நதி மறுமலர்ச்சி அல்லது சேவைத் திட்டம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய சுய அமைதியை மட்டுமே கருத்தில் கொண்டால், உண்மையான ஆனந்த அனுபத்தை அடையவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் நீங்கள் தியானம் செய்து உங்களுடைய உள் அமைதியினைக் கண்ட பிறகு, இயல்பாகவே அதனைப் பிறருக்கும் எடுத்து வர வேண்டும் என்றே விரும்புவீர்கள். எனவே தங்களுக்குள்ளேயே அமைதி காண விரும்புபவர்களை விட நாம் ஒரு படி முன்னேறிச் செல்கிறோம்  என்றே தோன்றுகிறது. நாம் ஏற்கனவே அடைந்து விட்டதை மற்றவர்களுக்கும்  பரப்புகின்றோம்.

ஓர் நல்ல திரைப்படத்தைக் கண்டவர், உற்சாகத்துடன் மற்ற அனைவருக்கும்," இந்தத் திரைப்படம் மிக நன்றாக உள்ளது, வாருங்கள், நானும் உங்களுடன் வருகிறேன் பார்க்கலாம்" என்று கூறுகிறார் அல்லவா?அதே உணர்வுடன் தான் வாழும் கலையும் செயல்படுகிறது. உங்களிடம் என்ன உள்ளதோ அதை தான் பிறருக்கும் பரப்ப முடியும். நாம் அமைதியையும் ஆனந்தத்தையும் பரப்புகிறோம் ஏனெனில் அவை நம்மிடம்  உள்ளன. அவை இல்லாதவர்கள் அவற்றைத் தேடிக் கண்டெடுக்கட்டும். நாம் கண்டெடுத்து விட்ட தால் அதைப் பரப்ப விழைகிறோம் ! ஆனந்தத்திற்கு  முடிவே  இல்லை. தனிப்பட்ட சுகத் திற்கும்  முடிவே இல்லை. அதைத் தேடிக்கொண்டே இருக்கலாம். ஆனால் ஆனந்தத்தின் இயல்பு பகிர்ந்து கொள்ளல் ஆகும். அதைத்தான் வாழும் கலை செய்து வருகின்றது. இதன் அடித்தளம் என்னவெனில் ஆன்மீக இணைப்பு, ஆன்மீக உயர்வு, மற்றும் அதனை அடைதல்.

குருதேவ், எவ்வாறு மறப்பது மன்னிப்பது என்பது சாத்தியமாகும்? சில சமயங்களில் என்னால் முடியவில்லை. சாத்தியமற்ற இதனை சாத்தியமாக்க உதவுங்கள். இது என் வேண்டுகோள்.

இதைச் செய்யும் சக்தி உங்களிடம் இருக்கிறது என்பதை அறியுங்கள். உங்கள் மனதைத் திறந்து, பரந்து  விரிந்த இந்தப் பிரபஞ்சத்தைக் காணுங்கள். விழித்தெழுந்து, ‘ இப் பூமியில் ஏழு பில்லியன் மக்கள் இருக்கின்றனர், ஒவ்வொரு நாளும் பலர் இடுகாட்டில் எரிக்கப் படுகின்றனர், பலர் இறக்கின்றனர் ’ என்பதைக் காணுங்கள். ஒருவருடைய செயலில் எதைப் பிடித்துத் தொங்கிக்  கொண்டிருக்கின்றீர்களோ அது உங்கள் கர்மா அதுவே உங்களை அவ்வாறு செய்தது என்பதை அறியுங்கள். இவர் இல்லையெனில் வேறொருவர் உங்களுக்கு அந்த அனுபவத்தை அளித்திருப்பார். இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகைப் பெரிய கோணத்திலிருந்து காணுங்கள்.ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் ஓர் ஞானம் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதருக்குப் பின்னும் அன்பு இருக்கின்றது. ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும் எல்லையற்ற  தன்மை இருக்கின்றது .இதைப் புரிந்து கொண்டு, கவனித்து தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புள்ள குருதேவ், நாம் செயலாக்குபவர் இல்லையென்னும் நிலையிலிருந்த போதிலும், நமது கடந்த கால, நிகழ் கால, மற்றும் வருங்கால கர்மங்களுக்கு  நாம் எவ்வாறு பொறுப்பாவோம் ?

உங்களுக்குள் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறிக் கொண்டேயிருக்கின்றது. அது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் எண்ணங்கள் உங்கள் உணர்ச்சிகள் உங்கள் உடல் இவை மாறிக் கொண்டேயிருக்கின்றன. அல்லவா? அது போல உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறுவதேயில்லை. அது தெரியுமா? இல்லையெனில் எவ்வாறு நீங்கள் மாறுவது உங்களுக்குப் புலப்படும்? ஆகவே மாறும் மற்றும் மாறாத நிலை; தொட்டு அறியக்கூடிய  மற்றும் அறியமுடியாத நிலை ; என  இரண்டும்  கலந்த கலவையே நீங்களாவீர்கள்.  உடல் தொட்டு அறியக் கூடியது, எண்ணங்கள் மனம் உணர்ச்சிகள் ஆகியவை அவ்வாறு அறிய முடியாதவை வடிவமுள்ள, வடிவமற்ற என்னும் இரண்டின் கலவையே நீங்கள் ஆவர்கள். வாழ்க்கை என்பது வடிவமுள்ள வடிவமற்ற ஆகிய இரண்டும், வெளிப்படையான மற்றும் அறிகுறியற்ற ஆகிய இரண்டும் அடங்கிய சிக்கலான நூதனக் காட்சி. அது போன்று, செயலாற்றுபவரும் செயலாற்றாதவரும் நீங்கள் ஆவீர்கள். செயலாற்றும் போது நீங்கள் செயலாற்றுபவர். ஓய்வில் இருக்கும் போது அல்லது தியானம் செய்யும் போது செயலாற்றதவர். ஆகவே இரண்டுமே நீங்களாவீர்கள்.

குருதேவ்! பகவத் கீதையில் எதையும் ஆரம்பிக்காத ஒருவனே அறிவாளி என்று கூறப் பட்டிருக்கின்றது. இதை  ஸ்ரீ கிருஷ்ணர் என்ன பொருளில் கூறுகிறார் என்று கூற முடியுமா?

ஸ்ரீ கிருஷ்ணர், "இவ்வுலகில் எதையும் செய்யாமல் இருக்க முடியாது" என்று கூறுகிறார். ஓர் செயல்பாடின்றி சில நிமிஷங்கள் கூட ஒருவரால் இருக்க முடியாது. அதே சமயம் மேற்கண்டவாறும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கின்றார். ஆகவே ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிப்பது சரியல்ல. படிப்படியாகச் சென்று புரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் நீங்கள் முரண்பாடுகளில் சிக்கிக் கொள்வீர்கள். ஏனெனில் பகவத் கீதை ஒரு படியிலிருந்து அடுத்த படிக்குச் செல்வது போன்றமைக்கப் பட்டது. தனிப்படுத்தி எதையும் புரிந்து கொள்ள முடியாது.

அர்ஜுனன் கூட," ஏன் என்னைக் குழப்புகின்றீர்கள்? எதிர்ப்பதமான பலவற்றையும் கூறுகிறீர்கள். ஒரு சமயத்தில் கர்மா முக்கியமானது என்கிறீர்கள், வேறொரு சமயம் அனைத்துக் கர்மாக்களையும் விட்டு விட்டு சரணடையுமாறு  கூறுகிறீர்கள். எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது" என்று கூறுகின்றான். உங்களுக்குள் குழப்பம் எழும்போது, ஒரு விதமான புரிதல் அங்கு முறிந்து விடுகிறது. கருத்து மாற்றம் நிகழ்கின்றது. அது நல்லதே. படிப்படியாகச் செல்லுங்கள்.

குருதேவ்!  உணர்ச்சிகள் அறிவினை ஆளுவது போன்று உணர்கின்றேன். ஞானம் என்பது அறிவு நிலையில் மட்டுமே இருப்பது போன்றும், உணர்ச்சிகள் மேலோங்கும் போது ஞானம் உதவாது என்றும் எண்ணிக் கொள்ளலாமா?

ஞானம் உங்களுக்கு உதவுகின்றது. உணர்ச்சிகளில் மட்டுமே மிதந்து கொண்டிருந்தால், நீங்கள் சிதறுண்டு விடுவீர்கள். அவ்வப்போது  ஞானம் உட்புகுந்து உணர்ச்சி களை ஆட்சி செய்கிறது. அது அனைத்து நேரங்களிலும் நிகழாவிடினும் பெரும்பாலும் நிகழ்கின்றது. கோபம் மேலோங்கும் தருணங்களில் , அறிவு, "சரி போதும். அமைதியாக இரு" என்று கூறுகிறது. அப்போது நீங்கள் அடங்கி விடுகிறீர்கள். அறிவு எப்போதும் ஜெயிக்க முடியாது, ஆனால் பெரும்பாலான சமயங்களில் வெற்றி யடையும். அதனால்தான் நீங்கள் நல்லறிவுடன் இருக்கின்றீர்கள். பைத்தியக்காரர்களுக்கு அறிவு செயல்படாது, உணர்ச்சிகளே அவர்களை ஆட்சி செய்யும்.

அன்புடனும், ஞானத்துடனும் தலைமை ஏற்றுக்கொள்வது

செவ்வாய்க்கிழமை 7 ஏப்ரல், 2016

பாலி, இந்தோனேசியா


(கீழே வரும் உரையாடல், “தைரியமாக முதல் அடியை எடுத்து வை” என்ற பிரசுரத்தின் தொடர்ச்சி)

கேள்வி – பதில்கள்

இந்தோனேசியா போன்ற ஒரு நாட்டில் 51 % மக்கள் ஆண்களாக இருக்கும் போது, பெண்களின் முக்கியத்துவத்தை, குடும்ப வாழ்க்கையில் பெண்களின் பங்கை ஆண்களுக்கு எப்படி உணர்த்த முடியும் ?

நீங்கள் ஏற்கனவே அப்படிச் செய்து விட்டீர்கள். இல்லாவிட்டால், நீங்கள் இந்த நிலையை அடைந்திருக்க மாட்டீர்கள். குடும்ப வாழ்க்கை நடத்திக் கொண்டே அரசியலில் பங்கேற்க முடியுமென்பதற்கு நீங்கள் ஒரு சரியான உதாரணமாகத் திகழ்கிறீர்கள். உண்மையில் இந்தோனேசியாவில் பெண்களின் ஆதிக்கம் நிலவுகிறது. மேதகு திருமதி மேகவதியின் தலைமையை(முந்தைய குடியரசு தலைவர்,  ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவர் ) ஏற்கனவே மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

குடும்பத்தைப் பொறுத்தவரை பெண்களின் பங்கு மிகவும் முக்கியமானது. “ஆதிக்கம் செலுத்த ஆக்கிரமிப்பு தேவையில்லை. மக்களின் இதயத்தை வென்றால், மக்களின் மரியாதையை, மக்களின் நம்பிக்கையை வென்றால், குடும்பப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, அரசியலில் ஆதிக்கம் செலுத்த முடியும். இது சாத்தியம் என்று நான் நினைக்கிறேன்.

முடிவெடுக்கும் நிலையிலிருக்கும் ஒரு பதவிக்கு, ஒருவரை நியமிக்க, நாம் ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவரைத் தேர்ந்தெடுக்கிறோம். ஆனால் அந்தப்  பதவிக்குத் தேவையான முன் அனுபவத்தைப்  பார்ப்பதில்லை.

மூன்று விஷயங்களைக் கவனிக்க வேண்டும். நாடு(நாடும் நாட்டு மக்களும்), அரசியல் கட்சி மற்றும் உங்கள் அரசியல் அனுபவம். உங்கள் அரசியல் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள, நீங்கள் நாட்டைப் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் அரசியலின் நோக்கமே நாட்டின் பாதுகாப்பு தான். நாட்டுக்கும் உங்கள் அரசியல் வாழ்வுக்கும் நடுவில் அரசியல் கட்சி வருகிறது. எனவே பொது நன்மைக்காக, நாட்டின் பாதுகாப்பு மீது கவனம் வைப்பது முன்னணியில் இருக்க வேண்டும். அடுத்தது அரசியல் கட்சி. கடைசியில் நீங்கள் (உங்கள் சுயநலம்). இது நடைமுறைக்கு ஒவ்வாதது; கற்பனைக்கேற்றது என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நீண்ட கால அடிப்படையில் இதுவே சிறந்த முடிவைக் கொடுக்கும்.

உங்கள் ஆழ்மனதில் தோன்றுவதை உபயோகிக்கலாம். சில சமயம் தர்க்கரீதியாக நீங்கள் செய்வது சரியாகத் தோன்றலாம். ஆனால் உங்கள்  உள்ளுணர்வு வேறு வழியைக் காட்டலாம். அது எப்போதும் தோல்வியடையாது. அந்தத் திறமையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஆழ் மனதின் குரலைக் கேட்க வேண்டும். மனம் தெளிவாக இருக்கும் போது, இதயம் தூய்மையாக இருக்கும் போது, செயல் நேர்மையாக இருக்கும் போது உள்ளுணர்வு வழியைச் சொல்லும்.

பெரும்பாலும் பெண்கள் தங்கள் குடும்பத்துக்காக, தங்கள் ஆசைகளையும், கனவுகளையும் தவிர்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள். குடும்ப பொறுப்புகள் குறைந்த பின், தங்கள் கனவுகளைத் தொடராததை நினைத்து வருந்துகிறார்கள். இந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கலாம் ?

குருதேவர் : ஒரு காலத்தில் பெண்கள் சைக்கிள் சவாரி செய்ததில்லை. ஏனென்றால் அவர்கள் புடவை அல்லது குட்டை பாவாடை அணிவது வழக்கமாக இருந்தது. அந்த ஆடையுடன் சைக்கிள் விடுவது சிரமமாக இருந்தது. ஆனால் நாகரீகம் மாறி இன்று பல விதமான வசதியான ஆடைகள் வந்து விட்டதால் பல பெண்கள் சைக்கிள் சவாரி செய்கிறார்கள். நீங்கள் சமநிலையைக் கற்றுக் கொண்டு சைக்கிள் விடத் தெரிந்தவரானால், 

வாழ்க்கையிலும் அந்த சமநிலையைக் கொண்டு வர முடியும். குடும்பப் பொறுப்புடன், அலுவலகம் அல்லது தொழில் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள முடியும். வெளியே செல்வதன் காரணமாக குடும்பப் பொறுப்பை புறக்கணிக்க அவசியமில்லை. உங்கள் கனவுகளையும் கைவிடத் தேவையில்லை.இன்றைய தொழில் வளர்ச்சியடைந்த உலகில், பெண்கள் சுய தொழில் துவங்கி, பெரிய தொழிலதிபராக வர பல வாய்ப்புகள் உள்ளன.

சுரபயாவில் நாங்கள் பல சிவப்பு விளக்குப் பகுதிகளை மூடி விட்டோம். பல குழந்தைகள் போதை மருந்து மற்றும் செக்ஸ் அடிமைகளாகி விட்டார்கள். எங்களுக்கு உதவி தேவை.

கண்டிப்பாக இதற்கு உதவி செய்ய முடியும். போதை மருந்துக்கு அடிமையாவது மன சம்பந்தமான ஒரு நிகழ்வு. மனம் பெரிய மகிழ்ச்சியை விரும்புகிறது. மூச்சுப் பயிற்சி மூலம் மன நிலையை மாற்றி ஒரு ஆனந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் போது, போதை மருந்து மற்றும் செக்ஸ் இவற்றுக்கு அடிமையாவதைக் குறைக்க முடியும். பல மக்கள் மூச்சுப் பயிற்சிகள் மூலம் இப்பழக்கங்களிலிருந்து விடுபட்டுள்ளார்கள். இளைஞர்களுக்கு இப்பயிற்சியளித்து, அவர்கள் பயனடைவது மட்டுமல்லாமல், மற்றவர்களை இப்பழக்கத்திலிருந்து விடுவிக்க உதவி செய்ய முடியும்.

அகில உலகத்துக்கும் வாழ்க்கையில் நன் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ள, நீங்கள் பல வகையான பயிற்சிகளைக் கற்றுத் தருகிறீர்கள். பெண்கள் தலைமைப் பொறுப்பேற்க இப் பயிற்சிகள் எப்படி உதவும் ?

தியானம் செய்யும் போது, மூளையின் அமைப்பு மாற்றமடைகிறது. ஒரு அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரையின் படி, இரண்டு வார தியானத்துக்குப் பின் மூளையின் சாம்பல் நிற செல்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அப்படிப்பட்ட ஆராய்ச்சிகளின் படி “தியானத்தின் மூலம் மூளையின் இடது மற்றும் வலது பாகங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, உங்கள் ஆளுமை முழுமையடைகிறது” என்று தெரிய வருகிறது. தியானம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். உற்சாகமும் சக்தியும் அதிகரிக்கும். மனம் அழுத்தமில்லாமல், குழப்பம் நீங்கி, தங்கு தடையற்ற அறிவாற்றல் பெருகும். நீங்கள் பழகுபவர்களிடையே நல்லிணக்கம் ஏற்படும். வாழ்க்கை ஆனந்தமயமாகும்.

மக்கள் மிகவும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார்கள். ஆண்களிடம் பெண்களைப் பற்றிய தவறான கருத்தும், பெண்களிடம் ஆண்களைப் பற்றிய தவறான கருத்தும் நிலவுகிறது. அதே போல் இளைஞர்கள் மற்றும் முதியோர்களிடையே பாரபட்சமான கருத்து நிலவுகிறது. நாடுகளிடையே, சமூக அமைப்புகளிடையே பாரபட்சமான கருத்து வழக்கில் உள்ளது. இந்த கருத்து வேறுபாடுகள் நீங்கினால், நாம் ஒரு பாரபட்சமில்லாத சமுதாயத்தை, அதிர்ச்சியற்ற நினைவுகள் கொண்ட வருங்காலத்தை உருவாக்க முடியும்.

ஒருவர் தன் வாழ்க்கையில் அதிர்ச்சியான நிகழ்வுகளை அனுபவித்தால், நீண்ட நாட்களுக்கு அந்த அதிர்ச்சியின் நினைவு அவருடைய மனதில் பதிந்து விடும். அந்த அதிர்ச்சியான நினைவு காரணமாக, அவரால் வாழ்க்கையை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. “யோகா, தியானம், மூச்சுப் பயிற்சிகள் அதிர்ச்சியான நினைவுகளிலிருந்து விடுவித்து, வருத்தமற்ற ஆத்மாவை உருவாக்க உதவும்.”

இந்தோனேசியா அரசியலுக்கு எப்படிப்பட்ட பெண் தலைவர்கள் பொருத்தமாக இருப்பார்கள்? பெண்கள் அரசியலுக்கு வந்தால் உலகை மாற்றியமைக்க முடியுமென்று நினைக்கிறேன்.

நான் உங்கள் கருத்தை ஏற்கிறேன். பெண்கள் மேலும் மேலும் அரசியலுக்கு வரும்போது, இவ்வுலகம் வாழ்வதற்குச் சிறந்த இடமாகி விடும். இந்தோனேசியப் பெண்கள் உலகின் மற்றப் பகுதிகளில் வாழும் பெண்களை விட வித்தியாசமானவர்கள் என்று நான் நினைக்க வில்லை. ஒரு வேளை அவர்களுக்கு அடிப்படை வாதிகளின் எதிர்ப்பு ஒரு சவாலாக இருக்கலாம். அடிப்படைவாதிகள் பெண்களுக்கு அதிகாரம் கொடுப்பதை விரும்ப மாட்டார்கள். மற்றபடி, இந்தோனேசியாவும், இந்தியாவைப் போல் இளைஞர்கள் அதிகமாக வாழும் ஒரு நாடாகும். மக்களில் பெரும்பாலானவர்கள் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள். அதனால் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சிக்கு மிக அதிக வாய்ப்புள்ளது. 

இன்றைய உலகில் தனித்தொழில் திறமையுள்ளவர்கள் மற்றும் பொதுவான தொழிலாளர்களின் தேவை மிக அதிக அளவில் உள்ளது. எனவே இளைஞர்கள் பல துறைகளில் வேலை செய்ய வாய்ப்புள்ளது. (செவிலியர்கள், வாகனம் ஓட்டுபவர்கள், பல்வேறு தொழில் நுட்பவியலாளர்கள்) பெண்களுக்கு தலைமைப் பொறுப்பு மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியில் பயிற்சியளிக்க வேண்டும். பெண் விமான ஓட்டிகள், பெண் இஞ்சினியர்கள், பெண் கட்டிடக் கலை வல்லுனர்கள் அதிக அளவில் வர வேண்டும். சுற்றுலா துறையில் பெரிய அளவில் வளர்ச்சி காண வாய்ப்பு இருக்கிறது. அதே போல் வியாபாரத் துறையில், ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்களைப்  பற்றி நீங்கள் ஏற்கனவே அறிவீர்கள். கலாசார ரீதியில் பெண்கள் ஏற்கனவே மேல் நிலையில் இருக்கிறார்கள்.


இந்தோனேசியாவில், பெண்கள் சுகாதாரத் துறையிலும், போலீஸ் துறையிலும் பெரும் பங்கு வகிப்பதாகக் கேள்விப்பட்டேன். பெண்களுக்கு மதக் கட்டுப்பாடுள்ள சூழ்நிலையில், அவர்கள் உற்சாகத்தோடு பணி செய்ய முன் வருவதை, சமுதாயம் ஏற்றுக் கொள்வதை அறியும்போது புத்துணர்ச்சி ஏற்படுகிறது. அடிப்படை மதவாதிகள், உங்கள் வாழ்வின் வளர்ச்சியைத் தடுக்க அனுமதிக்காதீர்கள். இந்தோனேசியா தன் நாட்டின் கலாசாரத்தைக் கைவிடக் கூடாது. மற்ற நாடுகளின் கலாசாரத்தை இறக்குமதி செய்யத் தேவையில்லை. அது இங்கிருக்கும் சூழ்நிலைக்குப் பொருந்தாது.