அழுத்தமான நேரத்திலும் சாந்தமாக இருத்தல்

வியாழக்கிழமை, 5 மே 2016,

பெங்களூரு, இந்தியா


(படைப்பிலுள்ள அனைத்தையும் கௌரவியுங்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

அனைத்து ஆசிரியர்களும் ஞான ஒளி அடைவார்களா?

ஒவ்வொரு ஆசிரியரும் விரும்புவது இதுதானா என்பதை முதலில் நீங்கள் அவர்களைக் கேட்க வேண்டும். அனைத்து ஆசைகளும் துடைத்தெறியப்பட்டபின்னர் தான் முக்தியை கண்டெடுக்க முடியும். ஆசிரியர்கள் அதிக அளவில் மதிக்கப்படுகின்றனர். மரியாதையைப் பெறும்  ஒருவர் அவ மரியாதையையும் எதிர் கொள்ளவேண்டும். அப்போது என்ன நிகழ்கிறது? அதிர்ச்சியடைகிறீர்கள். மக்கள் உங்கள் மீது ஏச்சுக்களை  வீசிஎறியும் போதும் அவ்வாறு அதிர்ச்சியடையாமல் இருக்கும் போதுதான் உங்களது உண்மையான பண்பு ஒளி வீசுகிறது. மரியாதையைப் பெறும் போது அது ஒளி வீசுவதில்லை. 

மக்களுக்குப் பிடிக்காத ஒன்றினை அவர்களிடம் கூறும்போது, எவ்வளவு ஏசுகிறார்கள் பாருங்கள். அப்போது நீங்கள் சாந்தமாக அமைதியாக இருந்தால் உங்கள் உண்மையான பண்பு வெளிவருகின்றது. அப்போது நீங்கள் மைய்ய நிலையில் இருப்பதாக அறியலாம். நீங்கள் மைய்ய நிலையில் இருக்கிறீர்களா அல்லது இல்லையா என்பதை எவ்வாறு அறிகின்றீர்கள்? அதிகமான புகழ் வரும்போதல்ல, அதிக அளவில் அவமரியாதை யும் ஏச்சுகளும் வரும்போதே அது தெரியும். இவை எதுவுமே என்னை தொடாது, நான் மைய்ய நிலையில் உள்ளேன். நான் சந்தோஷமாக இருக்கிறேன். திருப்தியுடனும் ஈடுபாட்டுடனும் இருக்கிறேன் என்று நீங்கள் எண்ணிக்கொள்ளலாம்.

தடைகள், அல்லது  அவமரியாதை -  உதாரணமாக தன்னார்வத் தொண்டர்களின் பணி மதிப்பின்றிப் போவது போன்ற தருணங்களில் என்ன நிகழ்கின்றது? தொண்டர்கள் அதற்கு மேற்பட்டு எதுவும் செய்ய ஆர்வமின்றி விலகி விடுகிறார்கள். "காலை முதல் இரவு வரையில் பணியாற்றினேன், யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை, நன்றி தெரிவிக்கவில்லை என்னை வெளியே தள்ளிவிட்டார்கள் என்றெல்லாம் புலம்புகின்றனர். நான் நன்கு பணி புரிந்தேன், எனக்கு அதற்கு பரிசு கிடைக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்புடன் இருக்கும் தன்னார்வத் தொண்டர்களிடமிருந்து இத்தகைய குற்றசாட்டுகள் எழுகின்றன. இவை மிக சாதரனமானவை. ஆனால் ஆசிரியர்கள் இந்த நிலையினைக் கடந்து மைய நிலையில் இருத்தல் நல்லது. மைய நிலையிலிருந்து பிறழ்வது சாதரணமானது , ஆனால் ஆசிரியர் அவ்வாறு இருந்தால் அது நல்லதல்ல. ஓர் ஆசிரியருக்கு பாதகமான சூழ்நிலையிலும் மைய நிலையிலேயே இருக்க  ஞானம் பெரிதும் உதவுகிறது, அது உங்களது உள் வலிமையை கண்டறியவும் உதவுகிறது.

சமுதாயத்தின் பல்வேறு தரப்பினரிடமும் எவ்வாறு நீங்கள் எளிதாக தொடர்பு கொண்டு ஆன்மீகத்தை அவர்களுக்குப் பொருத்தமானதாக ஆக்குகின்றீர்கள்? ஐ எஸ் ஐ எஸ் ஆன்மீகத்தின் மூலம் சீர்திருத்தப்படக் கூடும் என்று கருதுகிறீர்களா?

எதிலுமே நான் நம்பிக்கை இழப்பதில்லை. ஒவ்வொருவரும் ஆன்மீகத்தின் சுவையினை அறிய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். மனதின் உள் ஆழத்தில் ஒவ்வொருவரும் மனித உயிர்தான். உங்களது அழகிய ஆத்மாவினை மூடியிருக்கும் கொள்கைகளை மற்றும் அறிவாற்றலை சற்று ஒதுக்கி வைத்தால் இந்த உலகையே வித்தியாசமான கோணத்தில் காண்பீர்கள். யார் மீதும் எனக்கு வன்மம் கிடையாது. யார் மீதும் வெறுப்பும் கிடையாது. என்னிடம் கருணை மட்டுமே உள்ளது. அவர்களும் நம் மக்களேயாவர். வன்முறையில் ஈடுபட்டிருக்கும் மக்கள் மனம் உணர்ச்சிகள் மற்றும் ஆன்மீகரீதியாக நோயுற்றவர்கள். 

ஓர் மருத்துவர் நோயாளிகளை வெறுப்பதில்லை. அவ்வாறு வெறுத்தால், மருத்துவரே அல்ல. வைத்தியர் என்னும் நிலையில், அவர் அனைத்து நோயாளிகளையும் குணப்படுத்த முடியாது ஆனால் யாரையும் வெறுப்பதில்லை. " மன்னியுங்கள், இதற்கு மேல் என்னால் எதுவும் செய்ய இயலாது"  என்றே கூறுவார். அத்தகைய "மன்னியுங்கள்" என்னும் எதுவும் செய்ய முடியாத நிலையினை இது வரையில் நான் எட்டவில்லை. இப்போது கூறவும் முடியாது. எங்கோ சற்று நம்பிக்கை உள்ளது. கடந்த காலத்தில் வட கிழக்கு இந்தியாவில், ULFA வுடன், காஷ்மீரில் மற்றும்  கொசோவோவில் சிலருடன், அல்லது நமது  ஆசிரியர்கள் FAARC மக்களுடன் கொலம்பியாவில் சென்றது போன்ற பலவற்றில் நாம் செயல்பட்டிருக்கின்றோம். 

இடைவெளியினை  சரிப்படுத்தி, நம்பிக்கையினை உருவாக்கி மனிதப் பண்புகளை மேம்படுத்தியிருக்கின்றோம். இன்று காலையில் மகாராஷ்டாவிலுள்ள ஓர் பெண் ஆசிரியர் தனது அனுபவத்தை என்னிடம் பகிர்ந்து கொண்டார். பத்து கொள்ளையர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்தபோது எவ்வாறு எதிர்வினையாற்றினார் என்று கூறினார். சற்றும் பயம் இன்றி, அவரது வீடு ஓர் ஆஸ்ரமம் என்றும், உணவருந்தி விட்டுச் செல்லலாம் என்றும் கூறியிருக்கிறார். அக்கொள்ளையர்கள் முதலில் ஓர் போர்வையால்  அவரை மூடிக் கவிழ்த்த முயன்றிருக்கின்றனர். ஆனால் அவரது தைரியத்தைக் கண்டு அவருக்குப் பயம் எதுவும் இல்லையா என்று கேட்டிருக்கின்றனர். ஆசிரியரின் ஆன்மீக வழியினைக் கண்டு அவர் அளித்த உணவினை உண்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர் ! எல்லோரும் இதைப் போல் முயற்சி செய்ய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஆனால் மனிதப் பண்புகளில் நம்பிக்கை, அன்பில் நம்பிக்கை, மதிப்புக்களில் நம்பிக்கை ஆகியவை இறுதியில் நற்பயன் அளிக்கும்.

ரஷ்யாவில் மிக அதிக குளிராக இருக்கும் நிலையில் தியானம் மேம்பட்டதாக இருக்கிறது. வெப்ப நிலைக்கும் தியானத்திற்கும் தொடர்பு உள்ளதா? பல ரிஷிகள் பனி படர்ந்த ஹிமாலய மலைப்பகுதிகளில் தியானம் செய்வது பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றேன்.

ஆம். குளிர் மிகுந்த பகுதிகள் தியானத்திற்கு மேம்பட்டவை ஆகும். ஆகையால் தான் சற்றுக் குளிராக உள்ள மலைக்குகைகளில் தியானம் செய்தனர். ஆனால் வெப்பமான இடங்களில் தியானம் செய்யவும் உத்திகள் உள்ளன. ஷீதலி மற்றும் ஷீத்கரி பிராணாயாமங்கள் பயன் தரும். மேற்கத்திய நாடுகளில் உஷ்ண யோகா என்பது சில காலம் பிரபலமாக இருந்தது. ஆனால் நான் உங்களுக்கு அதனைப் பரிந்துரைக்க மாட்டேன். குளிரூட்டப்பட்ட அறையில் செய்யுங்கள் அது போதும். வெப்பமான கால நிலையில் அது ஒரு தார்க்காலிக நிவாரணம். அவ்வளவுதான். நரம்பு மண்டலத்தில் அதன் பின்விளைவுகள் என்ன என்பதை அறிவியல் ரீதியாகக் கண்டறிய வேண்டும். அதற்கு முன்னர், 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் யோக ஆசனங்களையும் பிராணாயாமத்தையும் செய்யுமாறு மக்களுக்கு ஆலோசனை கூற முடியாது. குளுமையான இடங்கள் மிக உகந்தவையாகும். 

வெப்ப மண்டலக் காடுகளிலுள்ள மரங்களை விட ஆர்டிக் பகுதியிலுள்ள காடுகளில் காணப்படும் மரங்கள் சீரான வரிசையில் வளர்வதை பார்த்திருக்கிறீர்களா? மரங்கள், மற்றும் அவற்றின் கிளைகள் ஆகியவற்றின் உருவம் சீராகக் காணப்படும். வெப்பம் குறையும்போது உள் வெப்பமும் குறைகிறது. அதாவது மிகுந்த ஒழுங்கமைப்பு  ஏற்படுகிறது. தாவரங்கள், மனிதர்கள் விலங்குகள் அனைவருக்கும் இது பொருந்தும்.

எனது முதலாளியிடம் நான் பகவத் கீதையை நம்புவதாகவும், எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராமல் செயல்பட்டு வருவதாகவும் கூறினேன். அதிலிருந்து என் முதலாளி என் சம்பளத்தை நிறுத்தி விட்டார். இப்போது என்ன செய்வது? நான் கூறியது தவறா?

இது  பகவத் கீதையால் ஏற்பட்டது அல்ல என்றே நான் கருதுகிறேன். நீங்கள் சரியாகப் பணி புரிந்திருக்க மாட்டீர்கள்!  பணியிடத்தில் ஜபித்துக் கொண்டு அல்லது சரியாக செயலாற்றாமல் இருந்திருப்பீர்கள். உங்களுக்குப் பதில் கூறுவதற்கு முன்னர், இதன் மறு தரப்பு என்ன என்பதையும் நான் அறிய வேண்டும். ஒரு பக்கம் மட்டுமே அறிந்து தீர்ப்பு அளிக்க முடியாது. ஆனால் பகவத் கீதையை படித்தல், எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்க வில்லை என்று கூறுதல் ஆகியவை உங்கள் சம்பளம் நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருக்க முடியாது என்பது உறுதி. 

தேவையான நேரத்தில் மூளையைப் பயன் படுத்தியிருக்க மாட்டீர்கள். பகவத் கீதையை நன்கு கற்றறியாமல் வெறும் வாசித்தலுடன் நிறுத்தியிருப்பீர்கள். திறனுள்ளவராக இருந்திருக்க மாட்டீர்கள். " யோகாஹ் கர்மாசு கௌஷலம் "  (யோகா என்பது பணியில் சிறந்து விளங்குவது) என்று ஏன் பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது? நீங்கள் ஒருவர் கீழ் பணியாற்றும் போது மேலதிகாரியிடம் அவரது தவறு என்று சுட்டிக் காட்டினால், உங்கள் கூற்று சரியானதாக இருந்தாலும் அது தவறாகும். எதையும் நுட்பமாக திறனுடன் வெளிப்படுத்த வேண்டும்.


இவ்வாறு நான் கருதுகிறேன், ஆனால் உங்களுக்கு என்னை விட மேலாகத் தெரியும் என்று கூற வேண்டும். "உங்களுக்கு மேலாகத் தெரியும்" என்னும் பகுதியை வித்தியாசமின்றி சரியான தொனியில் கூறினால் அது உங்களுக்கு உதவும். இது முழுவதுமே தொடர்புத் திறன் பற்றியதாகும்.