நம்பிக்கை தான் வாழ்க்கை

வியாழக்கிழமை 26-மே-2016

பெங்களூர், இந்தியா


கேள்வி – பதில்கள்

யோகாவின் உண்மையான பரிமாணம் எது ?

யோகா என்றால் உண்மையுடன் இணைவது என்று அர்த்தம். யோகா என்றால் மனதின் தடைகளை தாண்டிச்செல்வது. உண்மை எதுவோ அதனுடன் இணைவது. எதனுடன் இணைகிறதோ, அதுவே (என்றும் மாறாத, நிலையான) உண்மை.

“ஷம்ஸயமாத்மா வினஷ்யதி “ என்று பகவான் கிருஷ்ணர் சொல்வதில் எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது. ஷம்ஸயம் என்பது, சந்தேகமா, மன உறுதியின்மையா ?

இரண்டுமே. சந்தேகம் மற்றும் உறுதியின்மை. உனக்குள் சந்தேகம் வேர் விடுமானால் எல்லா நேரத்திலும், எல்லாவற்றையும் சந்தேகப்படுவாய். அப்படியிருக்கும் போது, உன்னால் வாழ்க்கையில் முன்னேற முடியாது. ஏனென்றால் நம்பிக்கையிலேயே வாழ்க்கை நடக்கிறது.

நீங்கள் ஒரு முறை, ‘நுட்பமான அகம்பாவத்துக்கு சிகிச்சை கிடையாது “ என்று சொன்னீர்கள். நான் இப்போது பதட்டமாக இருக்கிறேன். எனக்கு அந்த நிலை இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். இதிலிருந்து குணமடைய முடியுமா ? முடியாதா ?

குணமடையலாம். கவலைப் படாதே. “ நான் ஒரு சந்தேகப் பேர்வழி, நான் கெட்டவன், நான் திருந்துவேன் என்ற நம்பிக்கையில்லை “ என்றெல்லாம் லேபிள் ஒட்டிக் கொள்ள வேண்டாம். இப்படி லேபிள்கள் நம் வளர்ச்சியைத் தடுத்து, சீரழிவைக் கொண்டு வரும். முதலில் உன்னைப்  பற்றி உனக்குத் தெரியாது என்பதை ஒப்புக் கொள். அதுவே உன்னை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும்.

தற்காலத்தில், உணவுப் பொருட்களில் அதிக அளவில் கலப்படம் செய்வதைப்  பார்க்கிறோம். உணவு தானியங்களில் கலப்படம் செய்து விற்பவர்களையும், போலி மருந்து தயார் செய்து விற்பவர்களையும் எப்படித் தடுக்கலாம்.

வாழும் கலையில் ஆர்கானிக் உணவு வகைகளின் சிறப்பு, மற்றும் ஆயுர்வேத மருந்துகளின் பயன்களை  பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்கிறோம். வாழும் கலையில் மருந்து உற்பத்திப்  பிரிவு துவங்க திட்டம் இல்லை. போலி மருந்துகள் விற்பனை செய்யப் படுவதை அறிந்த போது தான், நாமும் ஏன் ஆயுர்வேத மருந்து உற்பத்தியைத் துவங்கக் கூடாது என்ற எண்ணம் வந்தது. மிகக் குறைந்த விலையில், தரமான மருந்துகளை  மக்களுக்கு கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் மருந்து உற்பத்திப் பிரிவைத்  துவங்கினோம். எனவே இதை வியாபார நோக்கத்தோடு செய்யாமல், மிக மெதுவாகச் செய்கிறோம். நீண்ட நாட்களாக மருந்துகளின் தரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

ஆன்மீகத்தை விஞ்ஞான பூர்வமாகப்  பயில முடியுமா ? நான் அப்படிச் செய்ய விரும்புகிறேன்.

ஆம் ! எப்படிப்  பார்த்தாலும் ஆன்மீகம் விஞ்ஞான பூர்வமானது தான். விஞ்ஞானம் என்றால் என்ன ? நமக்குத் தெரிந்த விஷயத்தை தாண்டி தெரிந்து கொள்ள, ஒரு முறையான, தர்க்கரீதியான வழிமுறை தான் விஞ்ஞானம். விஞ்ஞானம் நாம் இது வரை  அறியாத ஒன்றை, நாம் அறியும் ஒன்றை வைத்து அறிந்து கொள்ள உதவுகிறது. ஆன்மீகமும் அதையே உணர்த்துகிறது. எனவே ஆன்மீகம், எல்லா மதத்தையும் ஒருங்கிணைத்து, மக்களுக்கு பொதுவான பார்வையை ஏற்படுத்துகிறது.

புத்தர் ஒருவர் தான் இருந்தார். இன்று புத்த மதத்தில் 32 பிரிவுகள் உள்ளன. ஏசு கிறிஸ்து ஒருவர் தான் இருந்தார். இன்று கிறிஸ்தவ மதத்தில் 72 பிரிவுகள் உள்ளன. முகமது நபி ஒருவர் தான் இருந்தார். இன்று முகமதியர்களிடையே பல பிரிவுகள் உள்ளன. இந்து மதத்தின் பிரிவுகள் எண்ணிலடங்காது. பல பிரிவுகள் வழக்கத்தில் உள்ளன.

உலகில் பல்வேறு இன மக்கள் வாழ்கிறார்கள். எல்லா இன மக்களையும் மரியாதையோடு நடத்த வேண்டும். என் மதம் தான் சிறந்தது, உன் மதத்தை விடச் சிறந்தது “ என்று சொல்பவர்கள் விஞ்ஞான பூர்வமாகச் சிந்திப்பதில்லை. அடிப்படையில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அதனால் தான் இன்று உலகில் 50 % மக்கள் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கி வாடுகிறார்கள். தங்கள் மதமே மற்ற மதங்களை விடச் சிறந்தது, எல்லா மக்களும் இதையே பின்பற்ற வேண்டுமென விரும்புகிறார்கள். 

இது ஒரு பிரச்சினையாக உள்ளது. இதற்கான தீர்வு என்ன? வேற்றுமையை ஏற்றுக்கொண்டு கொண்டாட வேண்டும். பல்வேறு மதங்களின் பொதுவான சிறந்த கருத்துக்களை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும். அது தான் ஆன்மீகம். தியானம். ஆன்மீக வாதிக்கு எந்த மதத்துடனும் மோதல் கிடையாது. ஆன்மீகம் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு சக்தியாகும். ஆன்மீகம் மிக எளிது. பல ஆண்டுகளாக வாழும் கலை மூலமாக, பல்வேறு கலாசாரங்களை ஒன்றிணைக்கும் சேவையைச் செய்து வருகிறோம்.

சமீபத்தில் சக்தி கிரியா துவங்கியிருக்கிறீர்கள். அதன் காரணம் என்ன ? நம் வாழ்வில் சக்தி கிரியா  மற்றும் சுதர்சன கிரியாவின் பங்கு என்ன ?

இரண்டு கிரியாவின் பங்கும் வெவ்வேறானது. சுதர்சன கிரியா மூச்சு சம்பந்தமானது. சக்தி கிரியா நம் உடலின் சக்தியைப்  பொறுத்தது. இரண்டும் சேர்ந்து ஒரு முழுமையைக் கொடுக்கும். சில சமயம் ஒரு கிரியாவின் தாக்கம் மற்றதை விட அதிகமாக இருக்கக் கூடும்.

அஷ்டாவக்ர கீதையில் , ஜனகர் தான் ஞானமடைந்ததை உணர்த்திய பின்பும், அஷ்டாவக்ரர் ஏன் தொடர்ந்து போதித்தார் ?

 உன் நன்மைக்காக.

அன்பில் இருப்பதை அறிந்த பின்பும், நாம் ஏன் அன்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம் ?

இதே கேள்வியை நான் உன்னிடம் கேட்கிறேன். நீ அறிவு பூர்வமாக இதை அறிந்திருக்கிறாய்.ஆனாலும் இருப்பின் நிலையில் நீ அன்பை அறியாமலிருக்கலாம். தலையால் தெரிந்து கொள்கிறோம். இதயத்தால் தெரிந்து கொள்வதில்லை. அன்பை வாழ்வின் ஒரு பகுதியாக உணராததால், நாம் இதை செயல் முறையில் கொண்டு வர முடிய வில்லை.நித்தியாப்யாசம் என்று ஒன்று உள்ளது. நீ சிந்திப்பது, நீ புரிந்து கொண்டது, நீ தியானிப்பது உன் வாழ்வின் ஒரு பகுதியாகி விடும். அதன் பின் திரும்பிப் பார்க்க அவசியமில்லை.