அனைவருடனும் ஒன்றி உணர்ந்து கொண்டாடுங்கள்

வெள்ளிக்கிழமை, 13 மே 2016,

பெங்களூரு, இந்தியா


மேன் தேரா (13 மே) என்னும் ஹிந்தி வார்த்தையில் விளையாடிப் பார்த்தால் அச்சொல்லுக்கு  "நான் உனக்குச் சொந்தமானவன்" என்பது பொருளாகும். நேற்று  நான் உங்களுக்கு சொந்தமானவனாக   இருந்தேன், இன்று உங்களுக்கு சொந்தமானவனாக  இருக்கிறேன், நாளையும் உங்களுக்குச் சொந்தமானவனாக  இருப்பேன்.‘இது என்னுடையது’  ‘அது உன்னுடையது’ என்பதெல்லாம் அறியாமையுடனிருப்பவரின்  வரையறுக்கப்பட்ட தோற்றங்கள். அறியாமையுடன் இருப்பவர் எல்லாவற்றிலும் குறை கண்டுபிடிப்பர். ஆனால் அன்புள்ளவர் அல்லது  பக்தர் அனைத்திலும் ஒருமையைக் கண்டு, “நான் உனக்குச் சொந்தமானவன் உன்னைச் சேர்ந்தவன்” என்றே கூறுவர். ஞானம் உள்ளவர்,  இரண்டு என்பதே கிடையாது, அனைத்தும் ஒன்றே என்று அறிவர்.

சிறிய  “நான்” என்பதை  பெரிய  “நான்” ஆக   விரிவு படுத்திக் காணுங்கள். மனித இனம் முழுவதையும் ஒன்றாகக் கண்டறிந்து சமுதாயத்திற்கு உழைப்பதே வாழும் கலையின் அடித்தளமாகும். உங்களில் பலர் அற்புதமாக  உண்மையாக உழைத்து, வாழ்க்கையை ஓர் கொண்டாட்டமாக ஆக்கி வருவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

நமது பொன்மொழி : வாழ்க்கையை கொண்டாட்டமாக்குதல். உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்தறிந்து முழு மனித ஒருமையை உணரும்போதே இது நிகழும். உங்களுக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணரவில்லையெனில் உலக மனித ஒருமையை உணர  முடியாது. கொண்டாடுவதற்கான ஓர் சிறிய சந்தர்ப்பத்தைக் கூட நழுவ விடாதீர்கள். வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணமும் கொண்டாட்டமே ஆகும். இந்த ஞானம் ஆன்மீகத்தின் மூலம் ஓர் அனுபவமாக உங்களுக்கு கிடைக்கின்றது. அதனால்தான் நீங்கள் ஆன்மீகத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொள்ளுங்கள் இல்லையெனில் வாழ்வில் நழுவி விடுவீர்கள்.

நாம் கலை மற்றும் படைப்பாற்றலில் ஆழ்ந்து முக்குளிக்கும்போது  காலமே நின்று விடுகிறது. ஒரு அப்பழுக்கற்ற வாழ்க்கை வாழுங்கள், அனைவருடனும் ஒன்றியுணர்ந்து, வாழ்க்கையை கொண்டாடுங்கள்