அனைத்திலும் தெய்வீகத்தைக் காணுங்கள்

வியாழக்கிழமை, 28 ஏப்ரல் 2016,

பெங்களூரு, இந்தியா


 சிலர், "உலகைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். உங்கள் மகிழ்ச்சியையும் அமைதியையும் கண்டெடுங்கள். அதுவே மிக முக்கியமானது " என்று கூறுகின்றனர். ஆம். இதுவே முதல் படி, உங்கள் அமைதியைக் காணுங்கள். ஆயின், அதை கண்டெடுத்த பின்னர் என்ன செய் கிறீர்கள்? உங்கள் அமைதி நிலை உங்களைச் சுற்றியிருக்கும் பலருடன் பின்னிப் பிணைந் திருக்கும் போது நீங்கள் மட்டும் எவ்வாறு ஓர் தீவு போன்று அமைதியுடன் இருக்க முடியும்? முடியுமா என்ன? முடியாது. எனவே, நீங்கள் அமைதியினை உங்களைச் சுற்றிப் பரப்பும்போது, மட்டுமே உங்களுடைய அமைதி நிலைத்திருக்கும். உள் நோக்கிச் செல்வது என்பது, வெளிப் புறமாகச் சென்று நமது சூழலை மாற்றுவது என்பதற்குச்  சமமான முக்கியத்துவம் உடையது.  இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெற வேண்டும்.

சிலர், இந்த உலகைப் பற்றி மறந்து விடுங்கள். உலக அமைதிக்காகப் பாடுபடாதீர்கள். உலகைத் திருத்த முயற்சிக்காதீர்கள். உங்களுக்குள்ளேயே சென்று உங்களது அமைதி யினைக் கண்டெடுங்கள்" என்று கூறுகின்றனர். ஆனால் நாம் வாழும் கலையில் நமது அமைதியினை கண்டெடுத்து விட்டோமல்லவா? (அனைவரும் ஒரே குரலில் ஆம் என்கின்றனர்). வாழும்கலையின் ஆனந்தப் பயிற்சியின்  முதல் நாளன்றே நீங்கள் அமைதி யடைந்து விட்டீர்கள். வாழ்க்கையின் கொள்கைகளை ஓரளவு அறிந்து கொண்டீர்கள். நமது அமைதியையும் ஆனந்தத்தையும் கண்டெடுத்த பின்னர், அதை சுற்றிலும் பரப்புவதே நமது கடமையாகும்.அதனால்தான், வாழும் கலை உலகெங்கிலும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள லாத்தூரில், நாட்டின் பதினேழாவது மற்றும் 

மகாராஷ்டிர மாநிலத்தில் பதிமூன்றாவது நதியினை புத்துணர்ச்சி பெற உழைக்கின்றோம். எந்த நதி மறுமலர்ச்சி அல்லது சேவைத் திட்டம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன்னுடைய சுய அமைதியை மட்டுமே கருத்தில் கொண்டால், உண்மையான ஆனந்த அனுபத்தை அடையவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் நீங்கள் தியானம் செய்து உங்களுடைய உள் அமைதியினைக் கண்ட பிறகு, இயல்பாகவே அதனைப் பிறருக்கும் எடுத்து வர வேண்டும் என்றே விரும்புவீர்கள். எனவே தங்களுக்குள்ளேயே அமைதி காண விரும்புபவர்களை விட நாம் ஒரு படி முன்னேறிச் செல்கிறோம்  என்றே தோன்றுகிறது. நாம் ஏற்கனவே அடைந்து விட்டதை மற்றவர்களுக்கும்  பரப்புகின்றோம்.

ஓர் நல்ல திரைப்படத்தைக் கண்டவர், உற்சாகத்துடன் மற்ற அனைவருக்கும்," இந்தத் திரைப்படம் மிக நன்றாக உள்ளது, வாருங்கள், நானும் உங்களுடன் வருகிறேன் பார்க்கலாம்" என்று கூறுகிறார் அல்லவா?அதே உணர்வுடன் தான் வாழும் கலையும் செயல்படுகிறது. உங்களிடம் என்ன உள்ளதோ அதை தான் பிறருக்கும் பரப்ப முடியும். நாம் அமைதியையும் ஆனந்தத்தையும் பரப்புகிறோம் ஏனெனில் அவை நம்மிடம்  உள்ளன. அவை இல்லாதவர்கள் அவற்றைத் தேடிக் கண்டெடுக்கட்டும். நாம் கண்டெடுத்து விட்ட தால் அதைப் பரப்ப விழைகிறோம் ! ஆனந்தத்திற்கு  முடிவே  இல்லை. தனிப்பட்ட சுகத் திற்கும்  முடிவே இல்லை. அதைத் தேடிக்கொண்டே இருக்கலாம். ஆனால் ஆனந்தத்தின் இயல்பு பகிர்ந்து கொள்ளல் ஆகும். அதைத்தான் வாழும் கலை செய்து வருகின்றது. இதன் அடித்தளம் என்னவெனில் ஆன்மீக இணைப்பு, ஆன்மீக உயர்வு, மற்றும் அதனை அடைதல்.

குருதேவ், எவ்வாறு மறப்பது மன்னிப்பது என்பது சாத்தியமாகும்? சில சமயங்களில் என்னால் முடியவில்லை. சாத்தியமற்ற இதனை சாத்தியமாக்க உதவுங்கள். இது என் வேண்டுகோள்.

இதைச் செய்யும் சக்தி உங்களிடம் இருக்கிறது என்பதை அறியுங்கள். உங்கள் மனதைத் திறந்து, பரந்து  விரிந்த இந்தப் பிரபஞ்சத்தைக் காணுங்கள். விழித்தெழுந்து, ‘ இப் பூமியில் ஏழு பில்லியன் மக்கள் இருக்கின்றனர், ஒவ்வொரு நாளும் பலர் இடுகாட்டில் எரிக்கப் படுகின்றனர், பலர் இறக்கின்றனர் ’ என்பதைக் காணுங்கள். ஒருவருடைய செயலில் எதைப் பிடித்துத் தொங்கிக்  கொண்டிருக்கின்றீர்களோ அது உங்கள் கர்மா அதுவே உங்களை அவ்வாறு செய்தது என்பதை அறியுங்கள். இவர் இல்லையெனில் வேறொருவர் உங்களுக்கு அந்த அனுபவத்தை அளித்திருப்பார். இதைத்தான் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உலகைப் பெரிய கோணத்திலிருந்து காணுங்கள்.ஒவ்வொரு நிகழ்விற்குப் பின்னும் ஓர் ஞானம் இருக்கின்றது. ஒவ்வொரு மனிதருக்குப் பின்னும் அன்பு இருக்கின்றது. ஒவ்வொரு பொருளுக்குப் பின்னும் எல்லையற்ற  தன்மை இருக்கின்றது .இதைப் புரிந்து கொண்டு, கவனித்து தெரிந்து கொள்ளுங்கள். அவ்வளவுதான்.

அன்புள்ள குருதேவ், நாம் செயலாக்குபவர் இல்லையென்னும் நிலையிலிருந்த போதிலும், நமது கடந்த கால, நிகழ் கால, மற்றும் வருங்கால கர்மங்களுக்கு  நாம் எவ்வாறு பொறுப்பாவோம் ?

உங்களுக்குள் இரண்டு விஷயங்கள் உள்ளன. ஒன்று உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறிக் கொண்டேயிருக்கின்றது. அது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் எண்ணங்கள் உங்கள் உணர்ச்சிகள் உங்கள் உடல் இவை மாறிக் கொண்டேயிருக்கின்றன. அல்லவா? அது போல உங்களுக்குள் ஏதோ ஒன்று மாறுவதேயில்லை. அது தெரியுமா? இல்லையெனில் எவ்வாறு நீங்கள் மாறுவது உங்களுக்குப் புலப்படும்? ஆகவே மாறும் மற்றும் மாறாத நிலை; தொட்டு அறியக்கூடிய  மற்றும் அறியமுடியாத நிலை ; என  இரண்டும்  கலந்த கலவையே நீங்களாவீர்கள்.  உடல் தொட்டு அறியக் கூடியது, எண்ணங்கள் மனம் உணர்ச்சிகள் ஆகியவை அவ்வாறு அறிய முடியாதவை வடிவமுள்ள, வடிவமற்ற என்னும் இரண்டின் கலவையே நீங்கள் ஆவர்கள். வாழ்க்கை என்பது வடிவமுள்ள வடிவமற்ற ஆகிய இரண்டும், வெளிப்படையான மற்றும் அறிகுறியற்ற ஆகிய இரண்டும் அடங்கிய சிக்கலான நூதனக் காட்சி. அது போன்று, செயலாற்றுபவரும் செயலாற்றாதவரும் நீங்கள் ஆவீர்கள். செயலாற்றும் போது நீங்கள் செயலாற்றுபவர். ஓய்வில் இருக்கும் போது அல்லது தியானம் செய்யும் போது செயலாற்றதவர். ஆகவே இரண்டுமே நீங்களாவீர்கள்.

குருதேவ்! பகவத் கீதையில் எதையும் ஆரம்பிக்காத ஒருவனே அறிவாளி என்று கூறப் பட்டிருக்கின்றது. இதை  ஸ்ரீ கிருஷ்ணர் என்ன பொருளில் கூறுகிறார் என்று கூற முடியுமா?

ஸ்ரீ கிருஷ்ணர், "இவ்வுலகில் எதையும் செய்யாமல் இருக்க முடியாது" என்று கூறுகிறார். ஓர் செயல்பாடின்றி சில நிமிஷங்கள் கூட ஒருவரால் இருக்க முடியாது. அதே சமயம் மேற்கண்டவாறும் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கின்றார். ஆகவே ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு புரிந்து கொள்ள முயற்சிப்பது சரியல்ல. படிப்படியாகச் சென்று புரிந்து கொள்ள வேண்டும் இல்லையெனில் நீங்கள் முரண்பாடுகளில் சிக்கிக் கொள்வீர்கள். ஏனெனில் பகவத் கீதை ஒரு படியிலிருந்து அடுத்த படிக்குச் செல்வது போன்றமைக்கப் பட்டது. தனிப்படுத்தி எதையும் புரிந்து கொள்ள முடியாது.

அர்ஜுனன் கூட," ஏன் என்னைக் குழப்புகின்றீர்கள்? எதிர்ப்பதமான பலவற்றையும் கூறுகிறீர்கள். ஒரு சமயத்தில் கர்மா முக்கியமானது என்கிறீர்கள், வேறொரு சமயம் அனைத்துக் கர்மாக்களையும் விட்டு விட்டு சரணடையுமாறு  கூறுகிறீர்கள். எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது" என்று கூறுகின்றான். உங்களுக்குள் குழப்பம் எழும்போது, ஒரு விதமான புரிதல் அங்கு முறிந்து விடுகிறது. கருத்து மாற்றம் நிகழ்கின்றது. அது நல்லதே. படிப்படியாகச் செல்லுங்கள்.

குருதேவ்!  உணர்ச்சிகள் அறிவினை ஆளுவது போன்று உணர்கின்றேன். ஞானம் என்பது அறிவு நிலையில் மட்டுமே இருப்பது போன்றும், உணர்ச்சிகள் மேலோங்கும் போது ஞானம் உதவாது என்றும் எண்ணிக் கொள்ளலாமா?

ஞானம் உங்களுக்கு உதவுகின்றது. உணர்ச்சிகளில் மட்டுமே மிதந்து கொண்டிருந்தால், நீங்கள் சிதறுண்டு விடுவீர்கள். அவ்வப்போது  ஞானம் உட்புகுந்து உணர்ச்சி களை ஆட்சி செய்கிறது. அது அனைத்து நேரங்களிலும் நிகழாவிடினும் பெரும்பாலும் நிகழ்கின்றது. கோபம் மேலோங்கும் தருணங்களில் , அறிவு, "சரி போதும். அமைதியாக இரு" என்று கூறுகிறது. அப்போது நீங்கள் அடங்கி விடுகிறீர்கள். அறிவு எப்போதும் ஜெயிக்க முடியாது, ஆனால் பெரும்பாலான சமயங்களில் வெற்றி யடையும். அதனால்தான் நீங்கள் நல்லறிவுடன் இருக்கின்றீர்கள். பைத்தியக்காரர்களுக்கு அறிவு செயல்படாது, உணர்ச்சிகளே அவர்களை ஆட்சி செய்யும்.