கடந்த காலத்தை மறு ஆய்வு செய்து உயிர் சக்தியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்

31 டிசம்பர் 2015,

பாத் அண்டோகஸ்ட் ,ஜெர்மனி


இன்று டிசம்பர் 31 ஆம் நாள். இன்று நாம் கடந்து சென்ற ஆண்டினைப் பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும். ஓர் நதிக்கரையில் நீங்கள் அமர்ந்து, ஓடிகொண்டிருக்கும் நதியைக் கவனித்துக் கொண்டிருப்பது போலக் கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆற்றில் ஓடி கொண்டிருக்கும் பலவற்றையும் நீங்கள் கவனிக்கிறீர்கள். ஓர் கப்பல் சென்று கொண்டிருக்கிறது, சில கட்டைகள் மிதந்து கொண்டிருக்கின்றன,இலைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. நகர்ந்து சென்று கொண்டிருக்கும் அனைத்தையும் நீங்கள் முற்றிலும் தொந்தரவின்றி கவனித்துக் கொண்டிருக்கின்றீர்கள். அதே போன்று, காலத்தின் கரையில் அமர்ந்து, காலம் நிகழ்வுகளை எடுத்து சென்று கொண்டிருப்பதைக் கவனிக்கும் போது உங்களில் ஒன்று மாற்றமின்றி இருப்பதைக் கண்டுணர்ந்து ஆச்சரியப்படுவீர்கள். நிகழ்வுகளால் நீங்கள் மாற்றம் அடையவில்லை, எதனாலும் நீங்கள் பாதிக்கப் படவில்லை என்பதை அறிவீர்கள்.

நிகழ்வை ஆய்வது என்பது அதில் பங்கெடுத்துக் கொள்வது என்பதை விட, அந்நிகழ்விற்கு ஓர் சாட்சியாக இருக்க உதவுகிறது. நான் கூறுவது புரிகிறதா? போன மாதம் நிகழ்ந்தவை, அதற்கு முந்தைய மாதம் நிகழ்ந்தவை, அதற்கும் முந்தைய மாதம் நிகழ்ந்தவை என்று ஆண்டு முழுவதிலும் சில அற்புதமான விஷயங்களும் சில அசிங்கமான விஷயங்களும் நடந்திருக்கின்றன. அனைத்தும் முடிந்து விட்டன. ஆகவே நதிக்கரையில் அமர்ந்து ஓடும் நதியினை கவனிப்பது போல்  கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு க்ஷணமும் புதிய நீர் வந்து கொண்டிருக்கின்றது.பல பொருட்கள் நீரில் மிதந்து சென்று கொண்டிருக்கின்றன. பல பறவைகள் தங்கள் இறையினை கொத்திக் கொண்டு பறந்து செல்கின்றன. அன்னப்பறவைகளும், வாத்துகளும் நீர் ஓடிக் கொண்டிருப்பதை போல், நீருடன் சிறிது தூரம் மிதந்து ஓடிப் பின்னர் தங்கள் இடத்திற்கே வந்து சேருகின்றன. மேலும் அன்னப் பறவைகள் ஈரமாவதே இல்லை. நீரை விட்டு வெளியே வந்து தங்களை குலுக்கிக் கொண்டு சற்று சூரிய உஷ்ணத்தைப் பெற்றுக் கொண்டு மீண்டும் நீரிலேயே குதித்து விடுகின்றன.

ஓர் அன்னப் பறவை நமக்குப் பல விஷயங்களைக் கற்பிக்கின்றது - அதாவது, நிகழ்வுக்குள்ளேயே இருத்தல், அதிலிருந்து வெளியே ஓடி விடாமல் இருத்தல்,ஆனால் அந்நிகழ்வு நம்மீது ஒட்டிக் கொள்ளாமல் இருத்தல் ஆகியவற்றை கற்பிக்கின்றது. கடந்து செல்லும் நிகழ்வுகளை ஓர் புன்னகையுடன் கரையில் அமர்ந்து காண்பதுவே கொண்டாட்டம். வாழ்க்கையில் பல இனிய நிகழ்வுகளும், பல இனிமையற்ற நிகழ்வுகளும் கடந்து செல்கின்றன. இரண்டுமே உங்களை ஒரு விதத்தில் ஆழமாக்குகின்றன. ஒரு விதத்தில் வலுவானவராக்குகின்றன. ஆகவே அதை  ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல்லுங்கள். ஏற்கனவே நடந்து முடிந்த விட்ட எதையும் கேள்வி கேட்காதீர்கள். நடந்து முடிந்தவிட்ட எதைப்பற்றியும் கேள்வி கேட்பது விவேகமல்ல.
கடந்து சென்ற காலத்தை மறு ஆய்வு செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் உயிர் சக்தியை புதுப்பித்துக் கொள்ளுங்கள். நமது உயிர் சக்தி, தூசி அல்லது சாம்பலினால் மூடப்பட்டிருக்கின்றது. 

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், அதைச் சற்று ஊதிவிட வேண்டியது மட்டும் தான். மீண்டும் புத்துயிர்  பெறும். உங்களுக்குள் இருக்கும் உயிர் சக்தியைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். குழந்தைகளைப் பாருங்கள். அவர்கள் மகிழ்ச்சி, உற்சாகம் நிறைந்தவர்களாக துடிப்பான ஆற்றலுடன் இருக்கின்றனர். ஏன் நீங்கள் மட்டும் இப்படி  மந்தமாக முகத்தைத் தொங்க விட்டுக் கொண்டு இருக்கின்றீர்கள்?

நாம் என்ன செய்கிறோம் தெரியுமா? கம்பளத்திலுள்ள தூசியைத் தட்டி நீக்குவதற்குப் பதிலாக ஏன் தூசி ஏற்பட்டது என்ற காரணத்தை தேடிக் கொண்டிருக்கின்றோம். "எங்கிருந்து இந்தத் தூசி வந்தது? ஏன் வந்தது? என்றெல்லாம், பொருளற்ற பகுப்பாய்வு செய்து கொண்டிருக்கிறோம். ஓர் ஜன்னல் வழியாக தூசி வந்ததென்றால்,அந்த ஜன்னலருகே சென்று இங்கிருந்துதான் தூசி வந்தது என்று கூறிக் கொண்டிருக்கிறோம்.அதில் எந்த சந்தேகமும் இல்லை, அன்பானவரே! எங்கிருந்து, எந்த ஜன்னல் வழியாக தூசி வந்தது என்பது ஒரு பொருட்டே அல்ல. கம்பளத்தில் தூசி நிறைந்து விட்டது, அதை முதலில் சுத்தப்படுத்துங்கள்.

எப்போதும் நாம் செய்வது என்னவென்றால், யார் நமக்கு என்ன செய்கிறார்கள் என்பதைத் தேடிக் காண்கிறோம்.பின்னர், அவன் இப்படி, இவன் அப்படி என்று விமர்சிக்கின்றோம். அவற்றையெல்லாம் விட்டு விடுங்கள்.உங்கள் மனதில் என்ன பதிவுகளை பிறர் ஏற்படுத்துகின்றனர் என்பதை மட்டும் காணுங்கள்.அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். பிறரால் ஏதேனும் எண்ணப் பதிவுகள் உங்கள் மனதில் ஏற்படுத்தப்பட்டிருந்தால், முதலில் அவற்றை நீக்குங்கள். அதைச் செய்ய வில்லையெனில், யார் உங்கள் மனதில் பதிவுகளை ஏற்படுத்துகிறார்கள் என்பது முக்கியமல்ல. ஏன் நீங்கள் அந்த அழுக்கை சுமக்க வேண்டும் என்பதுதான் முக்கியம். உங்களை உலுக்கி விட்டுக் கொள்ளுங்கள். வேண்டாத தூசியை  அழுக்கை  நீக்குங்கள். கொண்டாட்டமே அதைச் செய்யும் வழியாகும்.

புதிய ஆண்டு துவங்கும் இந்த வேளையில், உங்களுடன் இசைந்து வராதவர்களுக்கு முதலில் வாழ்த்துத் தெரிவியுங்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கும் வாழ்த்துத் தெரிவியுங்கள். அனைவரையும் வாழ்த்துங்கள்! கடந்து சென்ற காலத்தை மறு ஆய்வு செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் உயிர் சக்தியை நிகழ் தருணத்திற்கு  புதுப்பியுங்கள். நிகழ்வுகள் தேய்ப்பதில்லை, பிறரின் எதிர் வினைகளும் உங்களைத் தேய்ப்பதில்லை. நீங்கள் ஓர் சுதந்திரமான ஒளி. நிகழ்வுகள் மற்றும் சூழல்களால் பாதிக்கப்படாத ஞானம் நீங்கள்