குருதேவின் தீபாவளிச் செய்தி

வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2015,

பெங்களூரு இந்தியா


நமது வாழ்க்கை ஒரு விளக்கை போன்றது. ஒரு விளக்குக்கு ஆக்சிஜென் தேவையாக இருப்பதை போன்று நமக்கும் வாழ ஆக்சிஜென் தேவை. ஓர் கண்ணாடிக் கூண்டில் உங்களை அடைத்து வைத்தால், அதில் ஆக்சிஜென் இருக்கும் வரையில் தான், உயிர் வாழ்வீர்கள். அது போன்று ஓர் விளக்கை கண்ணாடி கூட்டில் மூடி வைத்தால் அது ஆக்சிஜென் இருக்கும் வரையில் தான் எரியும். எனவே நிச்சயமாக விளக்கிற்கும் நம் வாழ்விற்கும் ஒற்றுமை இருக்கின்றது.அந்த ஒற்றுமைதான் தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு அடிப்படையானது ஆகும். நீங்கள் விளக்கை போன்றவர் என்று உங்களுக்கு நினைவுறுத்துவதற்கேயாகும்.

நமது நாட்டில் தீபாவளிப் பண்டிகை பழம்பெரும் காலத்திலிருந்தே கொண்டாடப்பட்டு வருகின்றது.  வாழ்க்கை ஒரு விளக்கைப் போன்றது, எப்போதுமே அது விளக்குடன் தொடர்பு கொண்டதாகவே இருந்து வருகின்றது. நமது ஆத்மா ஓர் ஒளி, ஒளியுடனேயே தொடர்பு கொண்டதாக இருக்கின்றது.  அதனால் தான் ஒருவர் மரணம் அடையும் போது ஓர் விளக்கினை அவரது தலைப்பக்கத்தில் ஏற்றி வைப்பது வழக்கம். ஓர் குழந்தை பிறந்தவுடனேயே  வீட்டில் விளக்கேற்றி வைப்பார்கள். ஆகவே விளக்கு நமது வாழ்க்கையுடன் தனித்துவம் வாய்ந்த உறவினைக் கொண்டதாகும். 

வெளிச்சத்தை கொண்டுவர ஒரு விளக்கை மட்டும் ஏற்றினால் போதாது. நமது சமுதாயத்திலுள்ள அனைத்து விளக்குகளையும் ஏற்றவேண்டும். (மக்கள் ஞானம் மற்றும் ஆனந்தத்துடன் ஒளிவீச வேண்டும் என்ற பொருள்). அப்போது தான் நாம் சமுதாயத்தை முன்னேற செய்யமுடியும். சமஸ்க்ருதத்தில் சங்கச்சத்வம் என்றால், நாம் அனைவரும் இணைந்து நடப்போம், அனைவரின் வாழ்விலும் ஒளியும் மகிழ்ச்சியும் நிலவட்டும் என்பதே பொருளாகும். இது தான் தீபாவளியின் தனித்துவம் வாய்ந்த செய்தி. 

தீபாவளியன்று ஓர் விளக்கல்ல, ஆயிரம் விளக்குகளை ஏற்றுகிறோம். இருட்டினை அகற்ற ஒரு விளக்கு மட்டும் போதாது. ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட வேண்டும். தீபாவளியன்று ஆயிரக்கணக்கான விளக்குகளை ஏற்றி அனைவரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். அதனால் தான் அது தீபாவளி என்று அழைக்கப்படுகிறது. பழமையான இதிகாசங்களாகிய ராமாயணம் மகாபாரதம் இவற்றுடனும் தீபாவளிக்கு வலுவான தொடர்பு உள்ளது. மஹாபாரதத்தில் கூறப்பட்டுள்ள பல நிகழ்வுகள் தீபாவளிப் பண்டிகையுடன் தொடர்புள்ளவை. ராமாயணத்தில், ஸ்ரீராமர் 14 ஆண்டுகள் வனவாசத்தினை முடித்து விட்டுத் திரும்பும் போது, நகரில் அனைவரும் விளக்குகளை ஏற்றி கொண்டாடியதாக கூறப்பட்டுள்ளது. பொருள் என்னறால், ஞான ஒளி உள்ளிருந்து தோன்றியவுடன் நம்மை சுற்றி உலகெங்கும் வெளிச்சம் ஏற்படுகிறது. உலகம் முழுமையும் அந்த ஞானத்தினால் பிரகாசிக்கின்றது. வாழ்க்கையில் ஆன்மீக ஞானத்தின் தனித்துவம் வாய்ந்த முக்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும் பொருட்டு தீபாவளியை கொண்டாடுகிறோம். புத்தர் பெருமான்,"ஆப்பஹ் தீபோ பவஹ்" என்று கூறுகிறார். வீட்டில் விளக்குகளை ஏற்றி வைத்ததுடன் தீபாவளியை கொண்டாடி விட்டதாக எண்ணக்கூடாது. உண்மையில் ஞானத்துடன் ஒளிவீச வேண்டும், அப்போது தான் பிறருடைய வாழ்க்கை பாதையில் வெளிச்சம் ஏற்படுத்த முடியும்.இதை தான் புத்தர் கூறியுள்ளார். அனைவரும் சீராகத் தியானம் செய்யவேண்டும்.

யோகா சூத்திரங்களில் பதஞ்சலி மகரிஷி, "முர்தா ஜ்யோதிஷி சித்த தரிசனம்" (விபூதி பாதா#32) உங்களுக்குள் இருக்கும் தெய்வீக ஒளியினை நீங்கள் கண்டறிந்தவுடன் முழுமையடைகின்றீர்கள், பல சித்திகள் விழித்தெழும். உங்கள் புத்தி சுத்திகரிக்கப்பட்டு ஒளி வீசும். ஆகவே இந்த தீபாவளி தினத்தன்று உங்களுக்குள் இருக்கும் ஞானதீபத்தை ஏற்றுங்கள். திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் இருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களிடம் மகிழ்ச்சியைப் பரப்புங்கள். கடந்தகால அனைத்து பிரச்சினைகளையும் எதிர்மறைகளையும் ஒதுக்கி விட்டுவிடுங்கள்.அனைவருடனும் ஒத்திசைவுடன் இருங்கள். அனைவரிடமும் இனிமையாகவும் மென்மையாகவும் நடந்து கொள்ளுங்கள்.

தீபாவளியன்று பட்டாசுகள் வெடிப்பது நமது மனதை நிகழ்காலத்திற்கு எடுத்து வருவதற்காகவே. உங்கள் மனம் பல்வேறு ஆசைகள் வெறுப்புகள் இவற்றால் தொந்தரவடையும் போது உங்கள் தலை வெடித்து விடும் போலிருக்கின்றதல்லவா? நீங்கள் பட்டாசுகள் வெடிக்கும் போது அவை வெளிப்புறத்தில் வெடித்து உள்ளே மனதில் ஏதோ ஒன்றினை சரிசமப்படுத்துகின்றது. மின்சார வசதியற்ற முற்காலத்தில் குழந்தைகள் வேடிக்கை விளையாட்டுக்காக பட்டாசுகள் வெடித்து மகிழ்வதுண்டு. மின்வசதியுள்ள தற்காலத்தில் பட்டாசுகள் வெடிக்கத் தேவையில்லை. நிறைய பட்டாசுகளுக்குப் பதிலாக மின்விளக்குகளை ஏற்றுங்கள். அது காற்றில் மாசு ஏற்படுவதை தடுக்கும்.


ஓரிரண்டு பட்டாசுகள் வெடித்தால் பரவாயில்லை. அவை மிகுந்த ஓசையுடனும் புகையுடனும் இருக்கக்கூடாது. பறவைகளும் விலங்குகளும் அவற்றால் பாதிப்படையும். அவற்றுக்கு அதிர்ச்சியும் பயமும் ஏற்படும். எனவே தீபாவளியன்று பட்டாசுகளை தவிர்த்து விடுங்கள். தவிர்க்கவே முடியவில்லையெனில், சில மத்தாப்புக்களை மட்டும் கொளுத்துங்கள். அனைவரையும் தொல்லைக்குள்ளாக்கும் சப்தம் அதிகமான பட்டாசுகளை வெடிக்கத் தேவையில்லை. இவற்றால் பறவைகளும் விலங்குகளும் மிகவும் பயந்து விடுகின்றன. மேலும் பொரித்த தின்பண்டங்களை தீபாவளியன்று உண்பதும் தேவையில்லாததாகும். ஆரோக்கியமான சத்தான உணவை உட்கொண்டு அதை பிறருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் பரந்த முடிவில்லாத இயல்பினை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வில் நீங்கள் பெற்றுள்ள அனைத்திற்கும் ஆழ்ந்த நன்றியுடன் இருங்கள். எங்கும் ஒளியூட்ட விளக்குகளை ஏற்றுங்கள். அத்துடன் நீங்களும் ஓர் அழகான விளக்கு என்பதை நினைவுறுத்திக் கொண்டு மகிழ்ச்சி மற்றும் ஞானத்தை பரப்புங்கள். உங்களிடம் வரும் ஒவ்வொருவரும் சந்தோஷ ஒளியினை பெறவேண்டும் யாருமே வருந்தக்கூடாது. இதற்குத்தான் நீங்கள் பிரார்த்தனை செய்யவேண்டும்.