அப்படியே இருக்கட்டும்

திங்கள்கிழமை - 16-2-2015    

பெங்களூர், இந்தியா


நாளை சிவராத்திரி. ஆழ்நிலை உண்மை அல்லது ஒரே உண்மையைக் கொண்டாடும் நாள். சிவராத்திரி பேரின்பமான உண்மையைக் கொண்டாடும் நாள். சத்சித் ஆனந்தம் (சச்சிதானந்தம்) என்பது இப்படைப்பின் அடிப்படைக் காரணமாகும். இப் பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்துக்கும் சாரமாகும். படைப்பில் வெளிப்படையாக தெரியும் பொருள்கள், உயிர்கள் மற்றும் வெளிப்படையாக தெரியாமல் இருக்கும் நுட்பமான சக்திகள் அனைத்துக்கும் சாரமாக இருப்பது சிவதத்துவம். நாம் ஓய்வாக சிவதத்துவத்தை தியானம் செய்யும் போது, நம்முடைய இயல்பான, உண்மையான பேரின்பத்தை, பெரு மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

உன்னைச் சுற்றியிருக்கும் அனைத்தையும் ஏற்றுக்கொள். அதுவே சிவதத்துவத்தின் சாரம். சிறு சிறு விஷயங்கள் உன்னை வருத்தப்பட வைக்கின்றன. உன் மனம் விரும்புவதை அடைய ஏங்குவதும், விரும்பாததை ஒதுக்கி அதிக வெறுப்பு கொள்வதிலும் சிக்கித் தவிக்கிறது. சிவராத்திரி அன்று விருப்பு, வெறுப்பைக் கைவிட்டு எல்லாம் சிவன் செயல் என்று உணர்ந்து சிவதத்துவத்தில் மனதை செலுத்து. நாமனைவரும் சிவபெருமானின் தெய்வீக ஊர்வலத்தில் செல்பவர்கள். ஊர்வலத்தில் எல்லா வகையானவர்களும் செல்வதை பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் சித்தர்கள், ஞானிகள், புத்திசாலிகள், முட்டாள்கள் கூட செல்வார்கள். (சிரிப்பு!) எல்லோரும் சிவபெருமானின் குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாம் ஒவ்வொருவரும் சிவபெருமானின் மகத்தான ஊர்வலத்தின் ஒரு பகுதி. இதை நீ ஆழ்மனதில் அறியும் போது வாழ்க்கை முழுதும் கொண்டாட்டமாகி விடும்.

நம் வாழ்க்கையும் அப்படித்தான். வாழ்க்கையில் நாம் எல்லா வகையான மனிதர்களையும் சந்திக்கிறோம். சிலர் முட்டாள்தனமாக நடந்து கொள்கிறார்கள். சிலர் அறிவாளிகளாக இருக்கிறார்கள். மக்களுடைய பலவிதமான நடத்தைகளை, போக்குகளை, உணர்ச்சிகளைப் பார்க்கிறோம். இறுதியில் எல்லா வெளிப்பாடுகளும், பரமாத்மாவின் ஒரு பகுதி; இறுதியான உண்மையின் ஒரு பகுதி என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனவே எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்டு மேலே செல்லுங்கள். அது தான் சிவ ராத்திரியின் செய்தி. எங்கும் மாட்டிக் கொண்டு நிற்க வேண்டாம். தன்னையும் மற்றவர்களையும் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் மேலே செல்லுங்கள்.

பல முறை நாம் எதை ஏற்றுக் கொள்கிறோம் என்பதில் தேர்வு செய்கிறோம். சில சமயம் சூழ்நிலைகளை ஏற்றுக் கொள்கிறோம். தன்னைத் தானே ஏற்றுக் கொள்வதில்லை. நாம் எப்படி இருக்கிறோமோ, அப்படியே ஏற்றுக் கொள்ளும்போது நம்மைச் சுற்றி இருப்பவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இது மாதிரி தேர்வு செய்து ஏற்றுக் கொள்ளும் போது நிறைவான உணர்வு, கிடைக்காது. இரண்டையும் சேர்த்து ஏற்றுக் கொள்வது அவசியம். நம்மையும், சூழ்நிலைகளையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், நம்மை சுற்றியிருப்பவர்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். உள்ளே இருப்பதையும் வெளியே இருப்பதையும் சேர்த்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.எனவே அது அப்படியே இருக்கட்டும். நாம் ஆத்மாவை நோக்கிப் பயணம் செய்ய இதுவே வழியாகும். 

ஆழ்ந்த மன அமைதியை, அல்லது மௌனத்தை அனுபவிக்க முடியாமல் உன்னைத் தடுப்பது எது? “இது இப்படி இருக்க வேண்டும்., இருக்கக் கூடாது“ என்று நம் மனம் நினைப்பது தான் அல்லது மக்கள் இப்படி இருக்க வேண்டும். அப்படி இருக்கக் கூடாது என்று நினைப்பது. இது தான் நம் மனத்தை அடக்க முடியாமல் தடுக்கிறது. நாம் ஆழ்ந்த மௌனத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. நீ இப்படி நினைக்கும் போது மனம் இன்னும் மேம்போக்காக சிந்திக்கிறது. மனதை ஆத்மாவுடன் ஒன்ற விடாமல் செய்கிறது. மனதை ஆத்மாவில் எடுத்துச் சென்று லயிக்க வைப்பதற்கான மந்திரம் “அது அப்படியே இருக்கட்டும்”. பின்பு நீ ஆத்மாவை அடைய முடியும். நீ ஆழ் மனதில் ஆத்மாவை உணர்ந்த பின் உன் மனதில் எழும் விருப்பங்கள் நிறைவேறத் துவங்கும். உன் எண்ணப்படி எல்லாம் நடக்க ஆரம்பிக்கும்.

கேள்வி – பதில்கள்

குருதேவா! நம்பிக்கை அல்லது பக்தியின் நோக்கம் என்ன என்பதை தயவு செய்து சொல்ல முடியுமா?

நாம் அறியாத ஒன்றிடம் அன்பாக இருப்பது தான் நம்பிக்கை.அறிந்த ஒன்றிடம் அன்பாக இருப்பாய் அல்லது அன்பு காட்டமாட்டாய். சரியா? நீ அறியாத ஒன்றை வெறுக்கமாட்டாய். அதன் மீது அன்பு காட்டுவதும், அன்பு காட்டாமல் இருப்பதும் உன் கையில் உள்ளது.

“ நீ அறியாத ஒன்றின் மேல் அன்பு வைப்பது தான் நம்பிக்கை எனப்படும் “
நம்பிக்கை உனக்கு ஞானத்தைக் கொண்டு வரும். அது மிகவும் நுட்பமானது ! நீ இதைப் பிடித்துக் கொள்ளவேண்டும். இல்லா விட்டால் நீ அதைப் புரிந்து கொள்வதற்கு முன் நழுவிவிடும். நீ அறியாத ஒன்று உள்ளது. அதனிடம் நீ அன்போடு இருக்கிறாய். நீ அதனிடம் அன்பு காட்டுவதால் மெதுவாக நீ அதை  அறியத் துவங்குகிறாய்.

நான் சொல்வது விளங்குகிறதா ? ஒரு சிறிய உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். நாம் இன்று காலை ருத்ராபிஷேகம் செய்ததைப் போல், ஒரு சடங்கு நடக்கிறது. அது என்ன என்று நீ அறிய வில்லை. யக்ஞம் நடக்கிறது. சில மந்திரங்கள் சொல்லப்படுகின்றன, இருந்தாலும் உனக்குப் பிடித்திருக்கிறது. அமைதியாக அமர்ந்திருக்கிறாய். பூஜையின் போது சில அதிர்வுகளை நீ அனுபவிக்கிறாய். உங்களில் எத்தனை பேர் இப்படிப்பட்ட அதிர்வுகளை அனுபவித்தீர்கள்? (பார்வையாளர்களில் பலர் கைகளை உயர்த்துகிறார்கள்.) தியானம் என்றால் என்ன என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் உங்களுக்குப் பிடித்து தியானம் செய்கிறீர்கள். தியானம் செய்யச் செய்ய நீங்கள் அதை அறிகிறீர்கள். தியானம் செய்வதால் நன்றாக இருப்பதை உணர்கிறீர்கள்.
எனவே நம்பிக்கை உங்களுக்கு அறிவையும் ஞானத்தையும் கொடுக்கிறது.

உங்களுக்குள் ஏதோ தடையிருந்தால், உங்களுடைய நம்பிக்கைக் குறைவின் அடையாளமாகும். ஒன்றை அறியுமுன்பே, அதை அறிவதற்கு உன் மனதில் தடையிருக்கிறது. நீயே ஒரு சுவரை எழுப்பிக் கொண்டு, நான் தனியாக அமருவேன். நான் இதை அறிய விரும்பவில்லை என்று சொல்கிறாய். அப்போது நீ அதை அறிய முடியாது. அறியாத ஒன்றை எனக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லும் போது, நீ கண்டிப்பாக அதை அறிய முடியாது. “ஓ ! ஏதோ புதிதாக இருக்கிறது. எனக்குப் பிடித்திருக்கிறது“ என்று எண்ணும் போது, அறியாத ஒன்றிடம் அன்பு செலுத்துகிறாய். அது தான் நம்பிக்கை. நீ அதை முற்றிலும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் அதனால் கிடைக்கும் நன்மைகள் உன்னை வந்தடையும்.

குருதேவா ! எந்த அடிப்படையில் நான் என்னை ஒரு ஆன்மீகவாதி என்று அழைக்க முடியும் ? நம் புலனறிவுக்கப்பால் செல்வது தான் ஆன்மீகவாதியின் அடையாளமா ?

நீ உன்னை ஆன்மீகவாதி என்று அறிவித்துக் கொள். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. யாரும் உன்னைக் கேட்க முடியாது. யாருமே உன்னைக் கேட்க முடியாது. ஏனென்றால் நாமனைவரும் ஆன்மாவால் ஆக்கப்பட்டவர்கள். உனக்குள் இருக்கும் அந்த ஆன்மா தான் பேசுகிறது.. அதே ஆன்மா தான் நீ பேசுவதைப் புரிந்து கொள்கிறது. உணருகிறது. கருத்தைப் பரிமாறிக் கொள்கிறது. எல்லாவற்றையும் செய்வது ஆன்மா தான். ஆன்மாவுக்கு மரியாதை கொடுப்பதே ஆன்மீகம்.
உனக்குள் அன்பையும் அமைதியையும் அனுபவிக்கிறாயா? மனிதாபிமான பண்புகள் உனக்குள் இருக்கிறதா? அப்படியென்றால் நீ நிச்சயமாக ஒரு ஆன்மீகவாதி தான். நீ தியானம் செய்பவனாக இருந்தால், ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்ள உனக்கு இருமடங்கு யோக்யதை இருக்கிறது. நீ ஆன்மீகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவன் என்று சொல்லிக் கொள்ளலாம். (சிரிப்பு!)

அன்பான குருதேவா ! நீங்கள் என் முன் வரும் போது, உயர்ந்த ஞானத்தைச் சொல்லும் அஷ்டவக்ரகீதை, உபநிஷதங்கள், வேதங்கள், பகவத் கீதை முதலியவை எல்லாம் சிதறி விழுந்து விடுகின்றன. பற்றின்மை தூள் தூளாக உடைந்து விடுகிறது. எனக்கு என்ன ஆகிறது என்றே தெரியவில்லை. ஏன் எனக்கு அப்படி ஆகிறது ?

நல்லது. நீ அதிர்ஷ்டசாலி. (சிரிப்பு!) அப்படி ஆக வேண்டும் என்று மக்கள் ஏங்குகிறார்கள். ஞானம் என்பது ஒரு சோப்பு போன்றது. அது உன்னைத் தூய்மையாக்குவதற்காக உள்ளது. அதை நீ உபயோகித்த பின்பு தண்ணீர் ஊற்றி கழுவுவது அவசியம். நான் ஒரு விலை உயர்ந்த சோப்பு  வாங்கி என் உடலில் உபயோகித்தேன். அதை கழுவ மாட்டேன் என்று சொல்ல முடியாது. பல் துலக்கும் பசை எவ்வளவு விலையுயர்ந்ததாக இருந்தாலும், எப்போதும் பற்களில் வைத்திருக்க முடியாது. சரியா? எனவே ஞானத்தின் நோக்கம் அஞ்ஞானத்தை ஒழிப்பது. அது ஒரு சோப்பு போன்றது. அதைக் கழுவ வேண்டியது அவசியம். அப்போது தான் நீ உன்னுடைய மனம் சிந்தனையற்றதாக காலியாகி, வெற்றிடமாகி விட்டதை உணரலாம். நீ நிரங்காரியாகலாம். அப்படி என்றால் உன் மனம் அழுத்தமின்றி இருக்கும். இல்லாவிட்டால் ஞானத்தின் பளு உன்னை சேற்றில் தள்ளி விடும். ஞானம் உன்னை எளியவனாக, இயல்பானவனாக மாற்றிவிடும்.

ஞானத்தின் நோக்கம் உன்னை ஆணவம் பிடித்தவனாக ஆக்குவதல்ல. உன்னை பணிவானவனாக ஆக்குவதே ஞானத்தின் நோக்கமாகும். எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை விட்டு பணிவாக இருப்பதே ஞானிகளின் அடையாளமாகும். விரக்தியான “எனக்குத் தெரியாது “ என்ற நிலையிலிருந்து கள்ளங்கபடில்லாத “ எனக்குத் தெரியாது ” என்ற நிலைக்கு உன்னை எடுத்துச் செல்வதே ஞானத்தின் நோக்கமாகும். அசிங்கமான “ எனக்குத் தெரியாது “ என்ற நிலையிலிருந்து, ஞானம் உன்னை அழகான “ எனக்குத் தெரியாது“ என்ற நிலைக்கு எடுத்துச் செல்லும்.

குருதேவா ! சிவராத்திரி அன்று இறைவன் பூமிக்கு மிக அருகில் வருவதாகச் சொன்னீர்கள். தயவு செய்து விரிவாகச் சொல்லுங்கள்.

.இல்லை, அது அப்படி இல்லை. பூமி முழுதும் இறைவன் தான். நான் “ சிவராத்திரி அன்று சிவதத்துவம் பூமியைத் தொடுகிறது “என்று சொன்னேன். சிவதத்துவம் அன்று மிகவும் நினைக்கப் படுகிறது.அன்று மக்கள் சிவதத்துவத்தை மிகவும் வலுவாக அனுபவிக்கிறார்கள். இந்த ஞானத்தைப் பற்றி பல தவறான கருத்துகள் இருக்கக் கூடும். இன்னும் 500 ஆண்டுகளுக்குப் பின் என்ன ஆகும் என்று கற்பனை செய்யுங்கள்..வாழும் கலையை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள மாட்டார்கள். (சிரிப்பு!) அதிர்ஷ்ட வசமாக, விஞ்ஞான முன்னேற்றத்தின் காரணமாக இந்த ஞானத்தைக் காத்து சேகரித்து வைத்துக் கொள்ளலாம். பிற்காலத்தில் யாராவது இப்படிப்பட்ட தவறான கருத்தைக் கொண்டிருந்தால், அவர்களுடைய கருத்தைத் திருத்த, “ இல்லை.. நீங்கள் நினைப்பது போல் இதில் எழுதப்படவில்லை “ என்று அவர்களுக்கு விளக்கி சொல்ல இது உதவும்.