மகா சிவராத்திரி அன்று குருதேவர் ஆற்றிய உரை

செவ்வாய்க்கிழமை 17-2-2015

பெங்களூர், இந்தியா

இவ்வுலகில் காணப்படும் ஜடப் பொருள்கள் பரமாத்மாவுடன் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி. கண்ணுக்குத் தெரியாத சூட்சும உலகமும், நாம் காணும் ஸ்தூல உலகமும் ஒன்று சேரும் நாள் சிவராத்திரி. அது ஒரு கொண்டாட்டம். நாம் இயற்கையின் விதிகளை மீறும் போது, இடையூறுகள் ஏற்படுகின்றன. நதிகள் வெள்ளப்பெருகெடுத்தோடுவது, காட்டில் தீ பரவுவது மற்றும் நாம் அனுபவிக்கும் மற்ற பேரிடர்களுக்குக் காரணம் இயற்கையின் சீற்றமே. பரமாத்மாவின் சக்தி மட்டுமே இயற்கையின் கோபத்தை அடக்க வல்லது. பரமாத்மாவை சிவபெருமான் என்று அழைக்கலாம். சிவபெருமானால் மட்டுமே இயற்கையின் சீற்றத்தை மாற்றி உலகில் அமைதி நிலைநாட்ட முடியும்.


3 வகையான இடையூறுகள் ஏற்படுகின்றன.
·         மனதில் வரும் துன்பம். (அலையும் மனம்)
·         ஆத்மாவுக்கு ஏற்படும் வருத்தம்
·         இயற்கையில் ஏற்படும் பேராபத்துகள்.

மனம், உடல், உணர்வில் ஏற்படக்கூடிய பாதிப்புகள், சமூக விரோத சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இயற்கையின் சக்தியால் ஏற்படும் பேராபத்துகளிலிருந்து விடுபட நாம் சிவராத்திரி அன்று சிவபெருமானைப் பிரார்த்திக்கிறோம். நாம் அனைவருக்கும் அமைதி அளிக்க இறைவனை வேண்டுகிறோம்.

இயற்கையின் இரகசியங்கள் மறைவாக இருக்கின்றன. பாருங்கள். நாம் இப்போது வைஃபி (WiFi) பற்றி அறிகிறோம். வைஃபி என்பது பல காலமாக இருந்தாலும், முன்பு நாம் அதை அறிந்திருக்க வில்லை.இயற்கையில் மறைந்திருந்தது. இறைவனின் அருளாலேயே விஞ்ஞானம் வளர்ச்சியடைந்து வருகிறது. நம் வேதங்களும் இதையே சொல்கின்றன.

“உன்னுடைய தலையீட்டினால் மட்டுமே, உன்னுடைய நல்லாசிகளால் மட்டுமே விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பகிரங்கப்படுத்தப் படுகின்றன. இயற்கையும் உன் விருப்பத்தால் மட்டுமே தன்னிடம் மறைந்திருக்கும் இரகசியங்களை வெளிப்படுத்துகிறது. நம் மனதின் மூலம் அறிய முடியாத, அளவிடமுடியாத உலகில், எங்களுக்காக இரகசியங்களை வெளிப்படுத்த உன்னால் (இறைவனால்) மட்டுமே முடியும்“ எனவே இன்று இதயபூர்வமாக, ஆத்மபூர்வமாக, உலகத்தில் அமைதி வேண்டி, உலக மக்களின் வாழ்வில் முன்னேற்றம் வேண்டி, அறிவு வளர்ச்சி வேண்டி (விஞ்ஞான வளர்ச்சி வேண்டி) எல்லோருடைய மகிழ்ச்சிக்காகவும் உன்னைப் பிரார்த்தனை செய்கிறோம்.

நீ எப்படி இருந்தாலும் இறைவன் உன்னை ஏற்றுக் கொள்கிறார். உன்னை ஒரு முள் என்று நினைத்தாலும் நீ இறைவனால் ஏற்றுக்கொள்ளப் படுகிறாய். ஒரு இலையாக இருந்தாலும் இறைவனால் ஏற்றுக்கொள்ளப் படுகிறாய். ஒரு பழமாகவோ, மலராகவோ இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் படுகிறாய். என்னவாக இருந்தாலும், உன் ஆன்மீக வளர்ச்சி எந்த நிலையில் இருந்தாலும் உலக நாயகனான ஒரே இறைவன் (சிவபெருமான்) உன்னை ஏற்றுக் கொள்கிறார் என்று நம்பு. அது தான் உண்மை, அழகு. சிவபெருமான் என்றாலே மனிதாபிமானம் மிக்கவர், உண்மையானவர், அழகானவர் என்று அர்த்தம். இப் பண்புகளைப் பிரிக்க முடியாது. எனவே இன்று இரவு இயற்கையைக் கொண்டாடும் இரவாகும். சிவபெருமானின் மனிதாபிமானம், உண்மை, அழகு முதலான இக்குணங்களைப் போற்றி மகிழ்ச்சியடைவோம்.