சிறந்ததை எடுத்துக்கொண்டு மற்றதை விட்டுவிடுங்கள்

சனிக்கிழமை, 14/02/2015 

பெங்களூரு, இந்தியா


(அன்பு முடிவற்றதாகும்போது என்ற பதிவின் தொடர்ச்சி)

கேள்வி பதில்கள்

நான் விரும்பும் பெண், நான் எதிர்பார்க்கும் பெண்ணா மற்றும் அவளுக்கேற்ற துணைவனா நான் என்று எப்படி அறிந்துகொள்வது?

இதை நீங்கள் அவர்களிடம் தான் கேட்க வேண்டும்! நீங்கள் அவருகேற்றவர் இல்லை என்று எண்ணினால், நீங்கள் உடனடியாக அதற்கேற்றவாறு உங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும். உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையென்றால் எப்படியும் அவர்கள் உங்களுக்குக் கற்றுத் தரப்போகிறார்கள்! உங்களிடமிருந்து ஆகச் சிறந்ததையோ அல்லது ஆக மோசமானதையோ உங்கள் துணைவரால் வெளிக்கொணர முடியும்.

இந்த உலகில் செயலில் ஈடுபட்டுக்கொண்டு அதே நேரம் கர்ம வினைகளைச் சேர்க்காமல் எப்படி இருப்பது?

பாருங்கள், நாம் பல செயல்களை செய்கிறோம் ஆனால் அவற்றின் பதிவுகள் நம் மனதில் தங்குவதில்லை. உதாரணமாக, சனிக்கிழமை என்ன சாப்பிட்டீர்கள் என்று ஒரு வாரம் கழித்து உங்களிடம் கேட்டால், முக்கியமான நிகழ்வாகவோ அல்லது ஏதேனும் சண்டை நடந்திருந்தாலோ தவிர உங்களுக்கு ஞாபகம் இருக்காது! உங்களிடம் யாராவது, ‘டிசம்பர் 29ஆம் தேதியன்று என்ன சாப்பிட்டீர்கள்’, என்று கேட்டால் உங்களுக்கு ஞாபகம் இருக்க வாய்ப்பில்லை. உங்களால் சொல்ல முடிந்தால், அந்த கர்மவினை பதிந்து இருக்கிறது என்று பொருள்! குறிப்பிட்ட செயல்பாடுகளும் செயல்களும் மனதில் எந்தப் பதிவையும் ஏற்படுத்துவதில்லை. அவை எந்த கர்ம வினையையும் உண்டாக்குவதில்லை.

செப்டம்பர் 23 ஆம் தேதி நீங்கள் எந்தத் திரைப்படம் பார்த்தீர்கள் என்று நான் கேட்டு, உங்களுக்கு அதில் ஞாபகத்தில் இல்லை என்றால் அது எந்த கர்ம வினையையும் ஏற்படுத்தவில்லை என்று பொருள். கர்ம வினை என்பது கட்டாயமாகப் பதிந்திருக்கும் பதிவு. உதாரணமாக, நீங்கள் தினமும் காப்பி அருந்தும் பழக்கம் இருந்து ஒரு நாள் காலை எழுந்ததும் காப்பி கிடைக்கவில்லை என்றால் அல்லது அதை நீங்கள் விட்டுவிட முடிவு செய்திருந்தால் என்ன ஆகும்? தலைவலி வரும் என்று சிலர் சொல்ல நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இது காப்பி கர்ம வினை! சிலவற்றை செய்யாத போது கிடைக்கும் எதிர்வினை இது. ஆனால் இந்த கர்ம வினையை தீர்க்க முடியும். தலைவலி வந்தால், காப்பியை மறுபடி நாடாமல் ஒரு ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக்கொள்ளுங்கள் அல்லது நிறைய தண்ணீர் குடியுங்கள்.அந்தச் சிறு வலியை 2 – 3 நாட்கள் பொறுத்துக் கொண்டீர்கள் என்றால் பின்னர் தலைவலி வராது. இப்படித்தான் காப்பி கர்ம வினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்.  அதைப்போலவே, புகைப் பிடிக்கும் பழக்கத்தில் உள்ளவர்களுக்கு புகை பிடித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பது புகைப் பிடிக்கும் கர்மவினை. ஆனால் அவர்களால் இதை நிறுத்த முடியும். ஒவ்வொரு பழக்கமும் கர்ம வினைப் பதிவே. அதை உங்களால் மறுத்துத் தவிர்க்க முடியும் என்றால் நீங்கள் அதிலிருந்து ஏற்கனவே வெளிவந்து கொண்டிருக்கிறீர்கள் என்று பொருள்.

குருதேவ், ஞானம் அடைதல் என்ற தத்துவம் எதற்காக வந்தது?

‘மலர்தல் என்ற தத்துவம் எதற்காக வந்தது?’ என்று கேட்பதைப் போல உள்ளது உங்கள் கேள்வி. எல்லாமே அரும்பு போல, ஒரு அரும்பு மலராதா? அது மலரத்தான் செய்டியும்! அதைப்போலவே, மனித சக்தி முழுமையாக மலரும்போது ஞானம் அடைந்தது என்று கூறுகிறோம். மேலுலகிலிருந்து மின்னல் போல ஒரு சக்தி உங்களை தாக்கி, ‘ஓ, நான் ஞானம் அடைந்துவிட்டேன்!’ என்று நீங்கள் கூறுவதல்ல அது. அது மறுபடியும் குழந்தையாவது, நமது ஆதி இயல்புக்குத் திரும்புவது.

நான் 100% என் முயற்சியைப் போட்டாலும், என் சக்திக்கு மீறி எதிர்பார்ப்புகள் மக்களிடம் இருக்கிறது. இது என்னை சலிப்படையச் செய்கிறது, இதை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.

மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருப்பது சரிதான், அதற்காக நீங்கள் சலிப்படையத் தேவையில்லை. உங்களால் முடிந்த அளவு செய்யுங்கள், சிலசமயம் நீங்கள் உங்கள் சக்தியின் வரையறை என்ன என்று நினைக்கிறீர்களோ அதைத்தாண்டி கொஞ்சம் செய்ய முயலுங்கள். உங்களிடம் மேலும் திறன் இருக்கிறது என்பதைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் திறன் விரிவடைவதற்கும் உங்களை வெளிப்படுத்துவதற்கும் உள்ள சவாலாக எதிர்பார்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அதை சவாலாக நினைக்கும் போது சலிப்பேற்படாது. சிறந்ததை நீங்கள் செய்யுங்கள், உங்களுடைய 100% அளியுங்கள். ஓட்டப் பந்தயத்தில், உங்களுடைய பாதையை மட்டும் நோக்கி உங்களுடைய சிறந்ததை அளிப்பது போல செய்யுங்கள். ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே தோல்வி பற்றிய பயம் ஏற்பட்டால் உங்களால் வெற்றியடையவே முடியாது. ஒரு ஆட்டத்தில் உங்களுடைய 100%  சதவீத முயற்சியையும் போடவேண்டும். உங்களுடைய ஆகச் சிறந்த முயற்சியை நீங்கள் போட்டுவிட்டால் உங்களுக்கு எதிராக யாரும் எதுவும் சொல்ல மாட்டார்கள்.

என்னே நானே இழந்துவிட்டேன், என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. துறவறம் மேற்கொள்ளலாம் போல இருக்கிறது. நான் என்ன செய்வது?

வாழ்க்கையிலிருந்து, நிஜத்திலிருந்து தப்பி ஓடுவதல்ல துறவறம், மன நிறைவிலிருந்து எழுவது. எல்லாவற்றிற்கும் நடுவிலிருந்து கொண்டு மனதை மையத்தில் வைத்திருப்பது அது. அதுதான் துறவறம் என்பது. நீங்கள் அதிதீவிரமாக அதீத பற்றோடு இருந்தீர்களென்றால் உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. சற்றே பற்றற்றிருப்பது நல்லது. மூச்சை வெளியே விடுவது போன்றது பற்றின்மை, மூச்சை உள்ளே இழுப்பது போன்றது அதீத பற்று. மூச்சை உள்ளே மட்டும் இழுத்து வெளியே விடாமல் இருந்தீர்களென்றால், உங்களுக்குப் பிரச்சினை. ஒவ்வொருவருக்கும் சற்றே பற்றின்மை உண்டு. வாழ்க்கையோடும் முதிர்ச்சியோடும் அது வளர்கிறது.

நீங்கள் குழந்தையாய் இருந்தபோது என்ன செய்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். தூங்கும்போது கூட உங்கள் அம்மாவின் ஆடையைப் பற்றிக்கொண்டு இருந்தீர்கள், அல்லது பல்வேறு மிட்டாய்கள் மீதும் ஐஸ்க்ரீம் மீது ஆசையாய் இருந்தீர்கள், ஆனால் நீங்கள் வளர வளர இவை முக்கியத்துவம் இழந்துவிட்டன இல்லையா? சில பொம்மைகளை பிடித்துக்கொண்டிருந்தீர்கள், நீங்கள் வளர அதன் மீது பற்றின்மை வந்துவிட்டது. ஓரளவுக்கு உணவு மீதும் உங்களுக்கு பற்றின்மை வந்துவிட்டது. கொஞ்சம் முதிர்ந்ததும் உங்கள் நண்பர்கள் மீதுள்ள பற்றுகூட குறைந்துவிட்டது. இவையெல்லாமே பற்றின்மையின் வகைகளே. இந்தக் கோணத்தில் வாழ்க்கையை பார்க்கும்போது வெற்றியோ தோல்வியோ நீங்கள் அதைப் பொருட்படுத்துவதில்லை. 

ஒவ்வொரு வியாபாரிக்கும் இது தெரியும். இழப்பு ஏற்படும் போது, மேலே நகர்ந்து சென்றாக வேண்டும், அந்த நகர்தல் பற்றின்மையே. நீங்கள் ஒன்றில் முதலீடு செய்திருந்தீர்கள், ஆனால் பங்குச் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது, என்ன செய்வது? முழு நேரமும் அதைப்பற்றியே புலம்பிக்கொண்டிருக்க முடியாது. அந்தக் கசப்பு மருந்தை விழுங்கியே ஆக வேண்டும். கசப்பு மருந்தை விழுங்கி செரித்துவிடுவதை நான் பற்றின்மை என்பேன். பற்றின்மை என்பது பற்றுக்கு எதிரானது அல்ல பற்றோடு சேர்ந்து இருப்பதே. நம் சித்தம் கலங்காமல் காப்பாற்றுவது பற்றின்மை, நமக்குத் தேவையான சக்தியை அளிப்பது பற்றின்மை. ஆதி சங்கரர் தனது கவிதைகள் ஒன்றில் கூறியிருக்கிறார்,‘பற்றின்மை எந்த மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்காமல் இருக்கிறது?’ பற்றின்மை எல்லா மகிழ்ச்சிகளையும் அளிக்கிறது என்பது இதன் பொருள்.

குருதேவ், என் இதயத்தில் தூய்மையும், மனதில் தெளிவும் வேண்டும். நல்ல மனிதனாக இருக்க விரும்புகிறேன். ஆழமாய் வேரோடி இருக்கும் சுயநலத்தை எப்படிக் களைவது?

நீங்கள் நல்லவர்தான், இல்லையென்றால் இந்தக் கேள்வியை கேட்டிருக்க மாட்டீர்கள். எல்லா நல்ல குணங்களும் உங்களிடம் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். நல்ல குணங்களுக்காக நீங்கள் எந்த முயற்சியையும் எடுக்க வேண்டியதில்லை. அவையெல்லாம் ஏற்கனவே இருக்கின்றன என்று கருத வேண்டும், அவ்வளவே. அதிகமாக உங்களை நீங்களே அடிக்கடி சோதனை செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் சுயநலமாக இருப்பதுபோல உணர்ந்தால், மற்றவர்களை மகிழ்ச்சிக்கொள்ள செய்யும் உதவிகளை ஆங்காங்கே செய்யுங்கள். அவ்வளவே! இது மிக எளிமை. 

உங்களைப் பற்றி மட்டுமே நீங்கள் நினைத்துக்கொண்டிருப்பதாக கருதும்போது, ஏதாவது தொண்டு நிறுவனத்தில் சேருங்கள். பல தொண்டு திட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. வளர்சியடையாத பகுதிக்கோ அல்லது சேரிப்பகுதிக்கோ ஒரு குழுவாக சென்று ஒரு நாள் முழுதும் செலவழியுங்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியையும், நிறைவையும்,திருப்தியையும் அளிக்கும். ஏதாவது ஒரு தொண்டில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள். இந்த உலகிற்கு நீங்களும் உங்கள் தொண்டும் தேவை.

எதுவும் செய்ய எனக்கு ஏன் தோன்றவில்லை? தியானம் செய்யவோ அல்லது தொண்டு செய்யவோ விருப்பமில்லாமல் இருப்பது சரியா?

உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் சோர்வாய் இருக்கிறீர்கள் என்பதை இது குறிக்கிறது. எனவே நன்கு ஓய்வெடுங்கள், ஆனால் குறைவாகச் சாப்பிடுங்கள். நிறையச் சாப்பிட்டுவிட்டு எவ்வளவு ஓய்வெடுத்தாலும் ஒய்வின்மை அதிகரிக்கும். கொஞ்சம் குறைவாகச் சாப்பிட்டால், உணவு நன்கு செரித்து பின்னர் ஓய்வு கிடைக்கும். அது எல்லாச் சோர்வையும் நீக்கிவிடும். தனியாக உடற்பயிற்சி செய்வதற்கு சோம்பலாயிருந்தால், ஒரு குழுவாக செய்யுங்கள். அது உடலின் சோம்பலையும் மனதின் மந்தத்தன்மையையும் வெல்ல உதவும்.

என்னுடைய புத்தி என்னை திசை திருப்புகிறது.

யார் இதை சொல்வது? உங்கள் புத்தி. உங்கள் புத்தி தன்னை பற்றி தானே எடைபோட்டுக் கூறுகிறது. தன்னைப்பற்றி தானே எடைபோட்டுக் கூறுவது தவறென்று உங்கள் புத்திக்குச் சொல்லுங்கள். எடைபோட வேறு ஒரு நீதிமான் தேவை! தன்னைப் பற்றி தானே நீதி கூறுவது ஏற்புடையது அல்ல. புரிந்ததா? எனவே, உங்களைப் பற்றி நீங்களே எடை போடாதீர்கள், பிறரையும் எடைபோடாதீர்கள். எடைபோட்டுக் கொண்டிருப்பதை அறிந்த மறு கணமே, உங்களை பார்த்து நீங்களே சிரித்துவிட்டு மேலே நகருங்கள்.