கடினமான காலம் உங்களை வலுவானவராக ஆக்குகின்றது

வெள்ளிக்கிழமை - 13 பெப்ரவரி 2015,

பெங்களூரு - இந்தியா


குருதேவ், என்னுடைய பணியிடத்தில், என்னுடன் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் மது அருந்துதல்,  பெண்களை அனுபவித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.  அவர்களுடன் பழகும் போது எதிர்மறை அதிர்வலைகளை அடைந்து, என்னுடைய ஆற்றல் வடிந்து விடுகின்றது. அவர்களிடமிருந்து  தப்பிக்க  விரும்புகின்றேன்.   எவ்வாறு அவர்களை ஏற்றுக் கொண்டு பழகுவது?

கடினமான சூழல்கள் தாம் உங்களுடைய திறன்களை வெளிக்கொண்டு வருகின்றன. ஒரு தாமரை இலை, தண்ணீரில் உள்ளது, சில சமயங்களில் இலையின் மீது நீர் விழுகின்றது, ஆனால் அது இலையில் ஒட்டிக் கொள்வதில்லை. அது போன்றே நீரும் நெய்யும். இரண்டுமே திரவங்கள் தாம், ஒரு துளி நெய், நீரில் மிதக்கவே செய்யும். நீரில் ஆழ்ந்துவிடாது. அது போன்றே எதிர் மறையான சூழலில் ஒரு துளி நெய்யைப் போன்று இருங்கள். உங்களுடைய நேர்மையைக் கைவிடாது மிதந்து கொண்டே இருங்கள். ஒரு கல்லைப் போன்று ஆழத்தில் மூழ்கி விடாதீர்கள். 

சில எண்ணப் பதிவுகள் என்னைத் துன்புறுத்துகின்றன. ஆனால் அவை என்ன என்பது எனக்குத் தெரியவில்லை. முன்னேறுவதற்கு அவைகளை விலக்குவது மிகவும் முக்கியமானது என்பதை அறிகின்றேன். எவ்வாறு அவற்றை அடையாளபடுத்தி விலக்குவது?

நீங்கள் சரியான இடத்திலேயே இருக்கின்றீர்கள். இளைப்பாறுங்கள். சில விஷயங்களை நீங்களே செய்ய வேண்டும், சிலவற்றைப் பிறர் உங்களுக்குச் செய்ய அனுமதிக்க வேண்டும். அனைத்துமே நானே செய்து கொள்வேன் என்று நீங்கள் கூறமுடியாது. ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டுமென்றால், அதை ஒருவர் உங்களுக்குச் செய்ய நீங்கள் அனுமதிக்க வேண்டும். மசாஜ் செய்யப்பட வேண்டுமாயின் அதை ஒருவர் செய்ய , நீங்கள் அனுமதிக்க வேண்டும். நானே எனக்கு மசாஜ் செய்து கொள்வேன் என்று கூற முடியாது. ஆனால் உணவு உண்ண வேண்டுமாயின் நீங்கள் தான் உண்ணவேண்டும்.  எனக்குத் தாகமாக இருக்கின்றது, யாராவது எனக்காக நீர் அருந்துங்கள் என்று கூற முடியாது, நீங்களே தான் நீர் அருந்த வேண்டும். அது போன்று நீங்களே தான் தியானம் செய்ய வேண்டும். ஆற்றலையும் புலன்களையும் அளவுக்கதிகமாகப் பயன்படுத்துதலே மனதில் அமைதியின்மை மற்றும் கவனமின்மை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன.

கவனத்துடன்  மைய நிலையில் இருந்தால் அப்போது ஒரு திரைப்படத்தைக் காணுங்கள். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு எவ்வாறு உங்கள் கவனம் முற்றிலும் போய்விட்டது   என்பதை அறிவீர்கள். எத்தனை பேர் இதனை அனுபவித்திருக்கின்றீர்கள்? (பலர் கை உயர்த்துகின்றனர்) இரண்டு மணி நேரத்திற்கு கிரிக்கெட் விளையாட்டைக் கவனித்தால், எவ்வாறு உங்கள் மனம் ஆரவாரம் அடைகின்றது என்பதை உணர்வீர்கள். வாத சமநில குலைவு ஏற்படுகின்றது. மனக் கவனம் குறைகின்றது. அது போன்றே ஒரு லட்சியத் திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் போது, அத்திட்டத்தின் வெற்றியை குறித்த கவலையினால் உங்கள் மைய நிலை போய் விடுகின்றது. மனம் சுருங்குகின்றது.

ஒரு வேளை அதிக உணவினை உண்டாலோ அல்லது சரியாக உறங்காமலிருந்தாலோ அல்லது உடனடியாக எதையாவது அடைய வேண்டியிருந்தாலோ உங்கள் மனக்கவனம்  குவியாது. புலன்களில் ஏதாகிலும் அதிகப் பயன்பாடு பெற்றால் -  தொடுதல், முகர்தல், கேட்டல், அல்லது பார்த்தல் இவை ஏதாகிலும் அதிகமானால் கவனம் குலையும். பகவத்கீதையில்" ஐம்புலன்களையும் சிறிது நேரத்திற்கு விட்டு விடுங்கள், உங்கள் மனம் மையப்படுவதையும், அறிவு ஒளிக்கதிர் போன்று கூர்மையடைவதையும் அறிவீர்கள்" என்று கூறப்பட்டுள்ளது.

முதுநிலை பயிற்சிக்கு பின்னர் மனம் பளிங்கு போல தெளிவடைவதை உணர்ந்திருப்பீர்கள். உங்களில் எத்தனை பேர் தியானத்திற்கு பின்னர் இந்த அனுபவத்தை பெற்றிருக்கின்றீர்கள்? (அவையோரில் பலர் கை உயர்த்துகின்றனர்) அளவுக்கதிகமாக உங்கள் புலன்களைப் பயன்படுத்தும் கணத்தில், நீங்கள் ஆற்றலை இழப்பதை அறிவீர்கள். ஆற்றல் இழப்பு ஏற்படும்போது, உங்கள் மனம் அலைபாய்கின்றது. தேவையான அளவு ப்ராணாவும் ஆற்றலும் கிடைப்பதில்லை.

என்னுடைய துணைவர் என்னை ஏமாற்றி விட்டார். அவரை எதிர் கொண்டு கேட்ட போது, " நீ என்னை உன் உடைமையாக்காதே" என்று கூறுகின்றார். இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது?

இது மிகவும் கடினமான நிலைமை தான். எனக்கு அனுபவம் இல்லை. எவ்வாறு நான் ஆலோசனை கூற முடியும்? ஆனால் என்னால் உங்களுடைய இக்கட்டான நிலையைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஏன் உங்களை ஏமாற்றுகிறார்கள் தெரியுமா? ஏனெனில் உங்கள் அன்பினைப் பெரிதும் மதித்து, அதனை இழந்து விடுவோமோ என்று பயப்படுகின்றார்கள். உங்களுக்கு நெருக்கமானவர் உங்களிடம் பொய் உரைப்பது ஏனெனில் அன்பு உண்மையை வென்று விடுவது தான். உண்மை வென்றால், அன்பை இழந்து விடும் பயம் இருக்கின்றது. ஆகவே ஒருவர் பொய் கூறுவதற்குக் காரணம்  அவர் மற்றவரின் அன்பினை இழக்க விரும்பாதது தான்.

ஒருவர் வேறொருவரிடம் மனதைச் செலுத்தி, உங்களை ஏமாற்றும்போது, நீங்கள் என்ன செய்வது? பொறுமையுடன் அவர் மனதைப் புரிந்து கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள். அவருக்கு மூன்று முறை எச்சரிக்கை கொடுங்கள். அவை அனைத்தையும் அவர் கவனிக்காமல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுங்கள். ஒவ்வொரு பெருநகரிலும் உள்ள நீதிமன்றங்களில் சமரசக்கூடங்களை அமைத்திருக்கின்றோம். இத்தகைய வழக்குகள் வரும்போது, எங்களது ஆசிரியர்களுடன் தம்பதி பேசி, அவர்களது உதவியுடன் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம். எங்களது ஆசிரியர்கள் பேசி, அவர்களுக்கு வாழ்வினைப் பெரிய கோணத்தில் காண உதவுவார்கள். அவர்கள் இணைவதுண்டு.

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எங்களிடம் 80 விழுக்காடு வழக்குகள் சமரசக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு வாழும்கலை தன்னார்வத் தொண்டர்களால் அவை தீர்த்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றார். இது ஒரு வரவேற்கத்தக்க செய்தியாகும்.

ISIS போராளிகள் இரக்கமின்றி அப்பாவி மக்களைக் கொல்லும்போது கடவுள் எங்கிருக்கின்றார்?

எங்கேயோ உறங்கிக் கொண்டிருக்க வேண்டும். நாம் எழுப்ப வேண்டும். ஒவ்வொருவரிடமும் இறைமை உள்ளது. அது உறங்கிக் கொண்டிருக்கின்றது, முக்கியமாக எங்கு ISIS  படுகொலைகள் நிகழ்கின்றனவோ அங்கே. இது மிகவும் வருந்தத்தக்க விஷயம். இன்றும் கூட பாகிஸ்தானிலுள்ள பெஷாவார் மசூதியில் தாக்குதல் நடை பெற்றுள்ளது. மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் போது சென்று தாக்கியிருக்கின்றார்கள்.  மிகவும் துரதிர்ஷ்டவசமானது ஆகும். இவர்கள் மனம் மாறுவார்கள் என்று நம்புவோம், அதற்குப் பிரார்த்தனை செய்வோம்.

குருதேவ், நம்மில் பலருக்கு வாத பித்த சமநிலையின்மை உள்ளது. சுதர்சனக் க்ரியாவும் ப்ராணாயாமும் இதற்கு உதவுமானால் இவை ஏன் ஏற்படுகின்றன?

இது இயல்பானது தான். நீங்கள் பயணம் மேற்கொள்ளும் போது, உணவு, சூழல், ஆகியவை வாத பித்த கப சமநிலையின்மையை ஏற்படுத்தக்கூடும். இந்த மூன்று தோஷங்களும் நிலையானவை அல்ல. அவை மேகம் மற்றும் நீர் போன்றவை. நீர் நிலையாக நிற்க முடியாது. திரவ நிலையில் அலைகளுடன் மாறிக் கொண்டே இருக்கும். அது போன்றே மேகங்கள், காற்று  இவையும் மாறிக் கொண்டே இருக்கும். பிரபஞ்சத்தில் அனைத்துமே மாறிக் கொண்டே இருக்கும், அது போன்று தோஷங்களும் மாறிக் கொண்டே இருக்கும்.

இங்கு வந்தடைந்த பின்னர் இளைப்பாறுமாறு கூறுகின்றீர்கள். சரி. ஏற்றுக் கொள்கின்றேன். என்னுடைய தர்மத்தினை என்னால் இயன்ற அளவு சிறப்பாகச் செய்கின்றேன். என்னை நன்றாகக்  கவனித்துக் கொண்டு வலிகள், ஆசைகள், திணறல்கள் ஆகியவற்றிலிருந்து என்னை விடுவிப்பீர்களா? இது ஒரு ஒப்பந்தம். சரியா?

சிரிக்கின்றார்) பார்க்கலாம்! ஒப்பந்தம் எப்போதுமே இரண்டு பக்கத்திலும் செய்யப் பட வேண்டும். மக்கள் என்னை ஆசீர்வதிக்குமாறு வேண்டுகின்றார்கள், ஆனால் ஒரு சிறிய கிண்ணத்தினையே எடுத்து வருகின்றார்கள். 100 மில்லி பால் கொள்ளக் கூடிய ஒரு சிறிய  கோப்பையை எடுத்து வந்து ஒரு லிட்டர் பால் வேண்டும் என்று கேட்டால் எவ்வாறு தர முடியும்? ஒரு பெரிய குடம் கொண்டு வர வேண்டும். பத்து லிட்டர் கொள்ளக் கூடிய பானையைக் கொண்டு வந்தால் பத்து லிட்டர் பாலை எடுத்துச் செல்லலாம். எனவே உங்களுடைய ஆக்கத் திறனை நீங்கள் அதிகரித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது திறன்களும் அருளும் சேர்ந்த கலவை ஆகும். சுய முயற்சி, மற்றும் அருள் ஆகிய இரண்டுமே வாழ்க்கைக்குத் தேவை ஆகும்.