தனி மனிதனின் மன அமைதியே உலக அமைதிக்கான திறவுகோல்

சனிக்கிழமை, ஜூலை 26, 2014

பாத் ஆண்டகாஸ்ட், ஜெர்மனி.


வாழும்கலை என்றால் மகிழ்ச்சியாக இருப்பது, பாடுவது, ஆடுவது, சேவை செய்வது, தியானம் செய்வது மற்றும் வாழ்க்கையை கொண்டாடுவது. இந்த பூமியில் நாம் வாழும் காலம் மிகவும் குறுகியதே. 60 – 100 ஆண்டுகள் தான் இங்கு வாழ்கிறோம்.


சிலர் மட்டும் அதை விட அதிக காலத்துக்கு வாழ்கிறார்கள். அதுவும் 125 – 150 ஆண்டுகளுக்கு மேல் இல்லை. இந்த பூமியில் நாம் வாழும் குறுகிய காலத்தில், மகிழ்ச்சியாக வாழ்வது நல்லது. அதைவிட்டு,சின்ன விஷயங்களுக்காக ஏன் கலகம் செய்ய வேண்டும்? (ஏன் சண்டை போட வேண்டும்?) அப்படி செய்வது முட்டாள் தனம். (அஞ்ஞானம்). இன்று உலகில் பல நாடுகளில் என்ன நடக்கிறது என்று பாருங்கள். செய்தி கேட்க கூட பிடிக்கவில்லை. எங்கு பார்த்தாலும் வன்முறை. எனவே பாடுங்கள். சிரியுங்கள். ஆடுங்கள். உதவியாக இருங்கள். தியானம் செய்யுங்கள். இதிலும் மாட்டிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட கேளிக்கைகளிலும் சிக்க வேண்டாம். வேடிக்கை விளையாட்டுகள், உங்களை பழக்கத்துக்கு அடிமையாக்கி விடும்.

விளையாட்டுகளில் ஈடுபடாத போது சலிப்பு ஏற்பட்டு நீ மற்றவர்களுக்கு பிரச்சினைகளை உருவாக்க நேரிடும். விளையாட்டு, கேளிக்கைக்கான உன் ஏக்கம் மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கும். வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ளுங்கள். நாம் ஞானத்தை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்லும் போது இது முடியும். மேலும் மக்கள் தங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட வேண்டும். மற்றவர்களிடையே மகிழ்ச்சியை பரப்பவேண்டும். ஒரே ஒரு தெரு விளக்கு பாதை முழுவதற்கும் ஒளியூட்ட முடியாது. சில மீட்டர் இடைவெளியில் தெரு விளக்குகள் பல இருக்க வேண்டும். அப்போது தான் பாதையில் இருக்கும் இருட்டு விலகும். நமக்கு பல ஆசிரியர்களும், தன்னார்வலர்களும் தேவை. அப்போது தான் நாம் பல வகுப்புகள் நடத்த முடியும். உக்ரேன், ஈராக், சூடான், ஆப்கானிஸ்தான் முதலிய நாடுகளில் வீடுகளிலும் வன்முறை நடக்கின்றது. நம் வகுப்புகளின் மூலம் வன்முறையைக் குறைக்க முடியும். இதில் கவனம் தேவை. நம்மால் அப்படிச் செய்ய முடியும்.

தனி மனிதனின் மன அமைதி உலக அமைதிக்குத் திறவுகோலாகும். உள்ளுக்குள் எரிமலை வெடிப்பது போன்ற மன நிலையில் மனிதர்கள் இருக்கும் போது உலக அமைதி எப்படி ஏற்பட முடியும்? அப்படிப்பட்ட மனிதர்கள் உச்ச பதவி வகிக்கும் போது அவர் மனம் மட்டும் வெடிக்காமல் அந்த நாடும், நாட்டில் வாழும் பல சமுதாயங்களுக்கிடையே வன்முறை வெடிக்கும். சென்ற மாதம் ஜெர்மனியில் உள்ள வாழும் கலை ஆசிரியர் ஈராக் நாட்டுக்குச் சென்று 35 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாடம் நடத்தி விட்டு வந்தார். 3ம் நாளுக்குப் பின் அவர்கள் தங்கள் அழகான அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள். நாங்கள் வேறு வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள். முதல் முறையாக ஒருவரோடு ஒருவர் இணைந்து செயல் பட முடிந்தது. எங்கள் பொறுப்புகளை உணர்ந்தோம். முதல் முறையாக நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ முடிவெடுத்தோம். 

ஈராக் நாட்டுக்கு இது மிகவும் அவசியம். ஈராக்கின் பிரச்சினைகளுக்கு இதுவே தீர்வாகும்.
அவர்கள் பேசியது மனதை நெகிழ வைத்தது. அவர்களனைவரும் சேர்ந்து ஒன்றாக செயல்பட உறுதிமொழி அளித்தார்கள். மூன்றே நாட்களில் மாறுதல் ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மட்டுமே வகுப்பு நடந்தது. அதுவும் மௌனக் கலைப் பயிற்சி அல்ல. முதல் நிலைப் பயிற்சியான ஆனந்தப்பயிற்சி தான். அவர்கள் மேல் நிலைப் பயிற்சியான மௌனக் கலையைக் கற்றிருந்தால் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.

மக்கள் தங்கள் ஆழ் மனதில் அமைதி பெற்றால், அவர்கள் சமுதாயத்திலும் அமைதி நிலவும்.
அமைதி என்பது மோதல் மற்றும் வன்முறையற்ற நிலை மட்டுமல்ல. அது நமக்குள் ஒரு ஆக்க பூர்வமான சக்தியை உருவாக்க வல்லது. மனம் அமைதியாகும் போது அறிவு ஆற்றல் பெறும். நம் உணர்ச்சிகள் ஆக்க பூர்வமான செயல்களில் ஈடுபட வைக்கும். மனம் லேசாகி விடும். உடல் ஆரோக்கியம் பெறும். நம் நடத்தை மற்றவர்களுக்கு இதமளிக்கும். இவை உள் மனம் அமைதி அடைவதால் கிடைக்கும் நன்மைகளாகும். தனி மனிதனின் மன அமைதியே உலக அமைதிக்கான திறவுகோல்.

தனி மனிதனின் மனம் குமுறும் போது உலக அமைதி ஏற்பட முடியாது. அப்படிப்பட்டவர்கள் பெரிய பதவி வகித்தால், நாடுகளும் சமுதாயங்களும் வன்முறையால் வாட நேரிடும். அதிக மதப் பற்று உள்ளவர்களிடமும் அதே நிலை தான். தன்னை பெரிய மதத் தலைவர் என்று நினைக்கும் பலருக்கு இன்று மன அமைதி இல்லை. அவர்கள் அதிகமாக பிரார்த்தனை செய்கிறார்கள். கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். கடவுளை வேண்டுகிறார்கள். ஆனால் இவை பொதுவான சடங்குகளாக மாறி விட்டன. வாயில் வரும் வார்த்தைகள் வெறுமையாகி விட்டன. பிரார்த்தனை இதயத்திலிருந்து வருவதில்லை. இதயத்திலிருந்து வரும் பிரார்த்தனைக்கு வார்த்தைகள் தேவையில்லை. உங்கள் மூச்சே பிரார்த்தனையாகிறது. நீ மூச்சை இழுப்பது பிரார்த்தனையாகிறது. நீ ஒன்றும் செய்யாமல் அமர்வதும் பிரார்த்தனை தான். நீ நடப்பது பிரார்த்தனை. உன் வாழ்வே பிரார்த்தனையாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கிறது. நாம் செய்யும் அனைத்துமே பிரார்த்தனையாகி விடும்.

(யாரோ ஒருவர் ஜன்னல் வழியாகப் பார்க்கிறார். பார்வையாளர்கள் சிரிக்கிறார்கள்.) நீங்கள் என்னுடைய ஜன்னல் வழியாகப் பார்க்க வேண்டும். உலகம் வேறு விதமாகத் தெரியும். அந்த ஜன்னலைத் திறந்து வைக்க வேண்டும். அப்போது ஒவ்வொருவரும் அதன் வழியாகப் பார்க்க வேண்டும். (குரு ஜன்னல் போன்றவர்) ‘ஓ ! இது மிகவும் அருமையாக இருக்கிறது. இது ஒரு அழகான நிகழ்வு. இவ்வுலகைக் கொண்டாட பல வாய்ப்புகள் உள்ளன. இன்று விளையாட்டுப் போட்டிகள் நாடுகளிடையே போராகி விட்டன. நாடுகளிடையே போர் விளையாட்டுப் போட்டிகள் போல நிகழ்கின்றன. இப்படிப் பட்ட நிலையில் நம் எல்லோருடைய பொறுப்பும் இதுதான். சமுதாயத்தில் நிகழும் எல்லா நிகழ்ச்சிகளையும் கொண்டாட்டமாக மாற்ற வேண்டும். நீங்களும் அப்படி நினைக்கிறீர்கள். இல்லையா? நம்மால் இயன்ற வரை நாம் சமுதாய அமைதிக்காக உழைக்க வேண்டும். அப்போது தான் மக்கள் மன அமைதியோடு வாழ முடியும். மன அமைதி பெற ஞானம் மிகவும் அவசியம். நீங்கள் கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்யும் போது அமைதியாக உணரலாம். ஆனால் கண்களை விழித்து மற்ற மனிதர்களோடு செயல்படும் போது மன அமைதியற்ற பழைய நிலை திரும்பி விடுகிறது. எல்லாம் அழியக் கூடியது. மாறக் கூடியது என்ற ஞானம் நாம் அமைதியாக நடுநிலையில் இருக்க உதவுகிறது.

இப்போது நீ கேட்பாய். “எப்போதும் நடுநிலையில் சிரித்த முகத்தோடு இருக்க வேண்டுமா ? இது சாத்தியமா?” நான் அப்படிச் சொல்லவில்லை. வாக்குவாதம் செய்யும் போது கோபப்படும் போது உன்னை அறியாமலே நடு நிலையிலிருந்து தவறி சிரித்த முகம் மாறி விடும். அதை ஒரு நாடகம் போல் பார்த்தால் மிகக் குறைந்த நேரத்தில் அதை மறந்து அமைதியடைய முடியும். அந்த நிகழ்ச்சி உன்னை பாதிக்க அனுமதிக்க வேண்டாம். பல சமயங்களில் நடுநிலை தவறுவது நீயல்ல. 

சமுதாயத்தின் பொதுவான மன உணர்வின் காரணத்தால் நீயும் பாதிக்கப்படுகிறாய். உக்ரேன் நாடு முழுதும் கொந்தளிக்கிறது. ஒரு நிலையில்லாத் தன்மை. என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாத நிலை. நீ அங்கு சென்று அங்கு நடக்கும் சம்பவங்களை பார்த்தால் உன் மனமும் பாதிக்கப்படும். நீ ஆப்கானிஸ்தான் நாட்டுக்குச் சென்று பார்த்தாலும் உன் மனம் பாதிக்கப்படும். அதே சமயம் ஸ்விட்சர்லாந்து நாட்டுக்குச் சென்று அங்கிருக்கும் போது உன் மனம் அமைதியான சூழலில் மகிழ்ச்சியாக இருக்கும். நீ இங்கு (ஜெர்மன் ஆசிரமத்துக்குள்) நுழையும் போதே ஒரு மாறுபட்ட மென்மையான மன நிலையை உணர்கிறாய். சக்தி உன் மனதுக்கு அமைதியளிக்கிறது. நம் கண்ணோட்டம் மாறுகிறது. இது தான் ஞானம். எனவே காலமும், இடமும் மனதை பாதிக்க வல்லவை. இடமும் காலமும் நம் மன நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். சில சமயத்தில் ஏனென்ற காரணம் புரியாமல் நாம் மன அழுத்தத்தை உணருகிறோம். உங்களில் பலர் இதை அனுபவித்திருப்பீர்கள். நேற்று இரவு அமாவாசை. நேற்றும் அதற்கு முந்தைய தினமும் உங்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். சில சமயத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் உங்களுக்குத் தூக்கம் வராமல் இருந்திருக்கும். எவ்வளவு பேர் பௌர்ணமி இரவில் தூங்க முடியாமல் இருந்திருக்கிறீர்கள்? அமாவாசை, பௌர்ணமி இரண்டுமே நம் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. காலம மனதைப் பாதிக்கிறது.

நம் நண்பர்கள் நம் மனதைப் பாதிக்கிறார்கள். எதிர்மறை எண்ணமுடையவர் அருகில் அமரும் போது உங்களுக்கும் அப்படிப்பட்ட எண்ணங்கள் வரும். சிறிது நேரத்துக்குப் பின் நீங்களும் எதிர்மறையாகப் பேசுவீர்கள். உங்கள் மகிழ்ச்சி மறைந்து விடும். நம் சகவாசம் நம் மனதை மாற்ற வல்லது. நாம் உண்ணும் உணவு நம் மனதை பாதிக்கிறது. அதிகமான உணவு, அல்லது சாத்வீகமல்லாத உணவு மனதைத் தாக்க வல்லது. அந்தத் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். அதைப் பற்றி அதிகக் கவலை வேண்டாம். நம் மூச்சின் தாக்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. இந்தத் தாக்கங்கள் அனைத்தையும் நாம் சரி செய்ய முடியும். இடம், காலம் மற்றும் நண்பர்களால் ஏற்படும் தாக்கத்தை ஞானம், தியானம், சுதர்சன கிரியா மற்றும் சான்றோரின் அருகாமையால் சரி செய்து கொள்ள முடியும்.

“வாழ்க்கையைக் கொண்டாட்டமாகப் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையை வாழும் கலை நமக்கு அளித்திருக்கிறது. நாம் மிகவும் பாக்கியசாலிகள்.” பல நாடுகளில் மக்கள் கையில் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு மக்களைத் துன்புறுத்தி வாழ்கிறார்கள். மனிதாபிமானமே இல்லாமல் இருக்கிறார்கள். சிறையில் இருக்கும் குற்றவாளிகள் அனைவருக்கும் வாழும் கலைப் பயிற்சி அளித்தால், அவர்களுடைய மனநிலையில் பெரிய மாற்றம் ஏற்படும். அவர்கள் நல்ல மனிதர்களாக மாறி விடுவார்கள். பல சிறைச் சாலைகளில் சுதர்சன கிரியா பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆனால் இது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்தப் பயிற்சி அவசியம் என்று நினைக்கிறேன்.

சென்ற ஆண்டிலும், அதற்கு முந்தைய ஆண்டிலும் நான் எகிப்து செல்வதற்காக மிக முயற்சி எடுத்தேன். ஏனென்றால் அந்த நாட்டில் வன்முறை சக்திகளால் ஏற்படக் கூடிய தீமைகளை எதிர் பார்த்தேன். பல் வேறு மதத் தலைவர்களை சந்தித்து அவர்களை வன்முறையைக் கைவிடச் சொல்ல விரும்பினேன். ஏனென்றால் சில மதத் தலைவர்கள் சொல்வதை மக்கள் கேட்டு வருகிறார்கள். வன்முறையை தூண்டும் தீவிர மதவாதிகளையும் சந்தித்துப் பேச விரும்பினேன். அவர்களை சந்திப்பது கடினமாக இருந்த போதிலும், செல்லும் வழியில் தெருக்களில் வன்முறை பரவியிருந்த போதிலும், சிலரின் உதவியோடு எகிப்து நாட்டின் பல மதத் தலைவர்களை சந்தித்துப் பேச திட்டமிட்டேன். இந்தியாவில் உள்ள எகிப்து நாட்டின் தூதரகத்துக்கு விசா வேண்டிச் சென்றேன். எகிப்து நாட்டின் தூதர் எனக்கு விசா வழங்க மறுத்து விட்டார். “நீங்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளவர். எகிப்து நாட்டில் வன்முறை பரவியிருக்கும் இந்த சமயத்தில், நீங்கள் அங்கு செல்ல அனுமதிக்க முடியாது. உங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் எங்களுக்குப் பிரச்சினையாகி விடும். இந்தியாவில் எங்கள் தூதரகத்தை மூட நேரிடலாம்.” என்று சொன்னார்.

“எனக்குப் பாதுகாப்பு இருக்கிறது. எனக்கு ஏதும் ஆகாது. என்னை எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று எனக்குத் தெரியும் “ என்று நான் அவரிடம் சொன்னேன். இருந்தாலும் எகிப்திய தூதர் “என்னை மன்னித்து விடுங்கள்“ என்று சொல்லி விசா கொடுக்க மறுத்து விட்டார். நாங்கள் சிலர் எகிப்து நாட்டுக்கு சென்று அங்குள்ள கிறிஸ்தவ மற்றும் முஸ்லீம் தலைவர்களையும் வன்முறையாளர்களையும், அரசியல் வாதிகளையும் சந்திக்கத் திட்டமிட்டிருந்தோம். 3 நாட்கள் அங்கு தங்க திட்டமிட்டிருந்தோம். ஆனால் எனக்கு விசா கிடைக்கவில்லை. நாம் முயற்சியை கைவிடக் கூடாது. அது எளிதானதல்ல. விடா முயற்சியோடு அந்த திசையில் செல்வது அவசியம்.
ஒரு சாரார் மற்றொரு சாராரைப் பற்றி அறிந்து கொள்ளாததால் பிரச்சினை ஏற்படுகிறது. அவர்கள் கெட்டவர்கள் அல்ல. என் கண்ணோட்டத்தில் அவர்கள் அறியாமையால் பாதிக்கப் பட்டு கெட்ட செயலில் ஈடுபடுகிறார்கள். இரு சாராருக்கிடையில் உள்ளவர்களும் அறியாமையால் அவர்களை வன்முறைக்குத் தூண்டுகிறார்கள்.

மற்றொரு பக்கம் போதை மருந்தால் வரும் தீமைகள். பல தாய்மார்கள் என்னிடம் வந்து தங்கள் பிள்ளைகள் போதை மருந்துக்கு அடிமையாக இருப்பதைச் சொல்லி, நான் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அழும்போது என் இதயம் நொறுங்கி விடுவது போல் உணர்கிறேன். இதற்காகம் நாம் என்ன செய்ய முடியுமென்று பார்க்க வேண்டும். போதை மருந்துப் பழக்கத்தால் பல ஆயிரக் கணக்கான இளைஞர்கள் தங்கள் வாழ்வை அழித்துக் கொள்கிறார்கள். ஆகவே நம் பிள்ளைகளை மிகச் சிறுவயது முதலே ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவது அவசியம்.

கேள்வி பதில்கள்

குருதேவா ! என்னிடம் மிகவும் அன்பு செலுத்தும் வாழ்க்கைத் துணைவர் இருக்கிறார். நான் அவருக்கு ஏற்றபடி இல்லை என்று எண்ணுகிறேன். அவருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதில்லை. உண்மையில் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதா ? அல்லது நான் அன்பால் சபிக்கப்பட்டிருக்கிறேனா ?

குருதேவர்: நீ ஏன் திருமணம் செய்து கொண்டேன் என்று வருத்தப்படுகிறாய்.இப்போது சமயம் கடந்து விட்டது. எனவே அதைப் பற்றிக் கவலைப்படுவதால் ஒன்றும் ஆகாது. திருமணம் என்பதே விட்டுக் கொடுப்பது தான். நீயும் விட்டுக் கொடுத்து வாழவேண்டும்.ஒரு அருமையான வாழ்க்கைத் துணை உனக்குக் கிடைத்திருக்கிறது என்பதை நீ அறிந்திருக்கிறாய். ஒரு வேளை மிகவும் கெட்டவர் வாழ்க்கைத் துணவராய் ஆகியிருந்தால் என்ன நிலைமையில் இருப்பாய் என்று கற்பனை செய்து கொள். உன் மேல் பழி சுமத்திக் கொள்வதும், உன் துணைவரின் மேல் பழி சுமத்துவதும் ஒன்றே. உன் மேல் பழி சுமத்திக் கொள்ளும் போது, “நான் கெட்டவன் (கெட்டவள்) இப்படியே இருந்து விடுகிறேன். என்னை மாற்றிக் கொள்ள அவசியம் இல்லை“ என்று சொல்கிறாய்.

உன் துணைவர் மேல் பழி சுமத்தும் போது “அவர் (அவள்) கெட்டவர். மாறவே மாட்டார்.” என்று நினைக்கிறாய். இரண்டு நிலைகளிலும் சரியாகச் செயல் பட முடியாது. ஒரு முறை நான் ஒரு சிறுகதை படித்தேன். மரணத்துக்குப் பின் ஒரு கனவான் பிரிந்து செல்லும் போது, அவருடைய செல்ல நாயும் அவரோடு சென்றது. “சொர்க்கம்” என்று எழுதியிருந்த கதவை அடைந்த போது அங்கிருந்த காவலர் “நீங்கள் மட்டும் உள்ளே வரலாம். உங்கள் நாய்க்கு உள்ளே வர அனுமதியில்லை” என்று சொன்னார். அதற்கு அந்த கனவான், “நாய் என்னிடம் மிக நன்றியோடு இருந்திருக்கிறது. அதை நான் எப்படிப் பிரிவேன்?“ என்று கேட்டார். காவலர் “சொர்க்கத்துக்குள் நாய்களுக்கு அனுமதி கிடையாது” என்று சொன்னார். அந்த கனவான் அங்கு நுழையாமல், தன் நாயுடன் பயணமானார்.

“நரகம்” என்று எழுதியிருந்த கதவருகில் சென்றார். அங்கிருந்தவரிடம் நான் என் நாயையும் அழைத்துக் கொண்டு உள்ளே வரலாமா ? என்று கேட்டார். காவலர் “தாராளமாக வரலாம்” என்று கதவைத் திறந்தார். அக் கனவான் நுழைந்தது உண்மையில் சொர்க்கமாகும். இது “சொர்க்கம்” என்றால் அங்கு “சொர்க்கம்” என்று எழுதியிருந்த இடம் எப்படி இருக்கும் என்று வியந்தார். அக்காவலர் “அந்த இடம் உண்மையில் நரகம் என்றும் அங்கு நுழைபவர்களுக்கு ஒரு பரிட்சை வைப்பது வழக்கம்” என்று சொன்னார்.

யார் மற்றவர்களை கைவிடுகிறார்களோ அவர்களுக்கு நரகம் தான் கிடைக்கும். வாயிலில் “சொர்க்கம்” என்று எழுதியிருந்தாலும் அது உண்மையில் நரகம். நீங்கள் உங்கள் நாயைக் கைவிடாமலிருந்ததால் உங்களுக்கு சொர்க்கத்துக்குள் அனுமதி கிடைத்தது.” என்று சொன்னார்.
எனவே நீ உன்னை கெட்டவன் (கெட்டவள்) என்று எண்ண வேண்டாம். நீ மாறி விடு. ஏன் உன்னால் உன்னை மாற்றிக் கொள்ள முடியாது ? உன் வாழ்க்கைத் துணைவருக்காக சிறுசிறு விஷயங்களை விட்டுக் கொடுக்கலாம். எப்போதுமே விட்டுக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. சில சமயங்களில் விட்டுக் கொடுக்கலாம். அப்படிச் செய்யும் போது நீ உன்னைக் கெட்டவனாகப் பார்க்க மாட்டாய். நான் சொல்வது உனக்குப் புரிகிறதா ?


உன்னையறியாமல் உன் வாயில் வேண்டாத வார்த்தைகள் வந்து விட்டாலோ, அல்லது உன் நடத்தை சரியில்லாமல் இருந்தாலோ, அதை நினைத்து நினைத்து வருந்தத் தேவையில்லை. அதை ஒரு கனவு போல் நினைத்து மறந்து விட்டு மேலே செல். அதனால் வாக்குறுதியைக் காத்து தற்சமயத்தில் வாழ வேண்டும் என்று சொல்வேன். தற்சமயத்தில் வாழ்ந்தால் மட்டும் போதாது.

மக்கள் உங்களை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதைத் தடுத்து நிறுத்துங்கள்

வெள்ளிக்கிழமை,

25 ஜூலை 2014,

பாத் அண்டோகோஸ்ட், ஜெர்மனி


(உங்களுக்குத் தேவையானவற்றை நீங்கள் அடைவீர்கள் என்னும் இடுகையின் தொடர்ச்சி)

அன்புள்ள குருதேவ், பல சமயங்களில் மக்கள் என்னைச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதை அறிந்திருக்கின்றேன். சில காலத்திற்குச் சரி என்று விட்டுவிட்டேன்.  ஆனால் என்னை மிதித்து செல்வதைப் பார்க்கும்போது கோபம் வருகின்றது. எங்கு வரையறுக்க வேண்டும்? மறுக்கும் போது சுயநலமாக இருக்கின்றேனோ என்ற குற்ற உணர்வு ஏற்படுகின்றது. எவ்வாறு சுய மரியாதைக்கும் ‘தான்‘ என்னும் அகங்காரத்திற்கும் இடையே வேறுபடுத்துவது?

குருதேவ்: நீங்கள் நிறைய விஷயங்களை குழப்பிக் கொள்கின்றீர்கள். முதலில்,ஒருவன் உங்களைச் சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் போது என்ன செய்ய வேண்டும், எப்போது நீங்கள் கருணையுடன் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு சைக்கிளை ஓட்டுவது போன்றது ஆகும்.ஒரு புறமாக சாய்ந்து விடாமல் சைக்கிளை ஓட்டுவது போன்று சமநிலையில் இருக்க வேண்டும். பிறர் உங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளத் துவங்கினால், பிடிவாதமாக மறுத்து விடுங்கள்.எங்கு தேவையோ அங்கு உதவ வேண்டும். எப்போதும் சுய மரியாதை பிரச்சினை என்பது கிடையாது. உங்களை பயன்படுத்திக் கொள்பவர்களால் உங்களுக்கு பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு உதவி தேவையாக இருந்தால், சரி, உடனே செய்யுங்கள். ஆனால் அதே சமயம் தேவையில்லாமல் எப்போதும் உதவி கேட்டுத் தொந்தரவு செய்தால், உடனே மறுத்து விடுங்கள். நமது கருணை எப்போதும் மெய்யறிவுடன்  இணைந்திருக்க வேண்டும்.

அண்மையில் நான் கலிபோர்னியா பே இல் இருந்தேன். நமது வாழும் கலை தன்னார்வத் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் என்னிடம் ஆயிரக்கணக்கான வீடில்லாதோருக்கு உணவளித்ததாகவும், அதை இனி வழக்கமான வகையில் செய்ய விரும்புவதாகவும் கூறினர். ஆனால் நான் மறுத்து விட்டேன். அவர்களின் செயலை நான் மகிழ்ச்சியுடன் கவனிப்பேன் என்றெண்ணியிருந்த அவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

நீங்கள் இந்த முறை செய்ததை நான் பாராட்டுகின்றேன், இதைத் தொடர வேண்டாம். அவர்களைப் பாருங்கள். அனைவரும் திடமாக உள்ளார்கள்.ஆண்கள் பெண்கள் அனைவரும் உழைத்து தங்கள் உணவை தேட முடியும். அவர்களுக்கு இவ்வாறு உணவளித்தால், அவர்கள் உண்டு நடைபாதையிலேயே உறங்கி எதுவும் செய்யாமல் இருப்பார்கள். நீங்கள் அவர்களைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள்" என்று கூறினேன். இது கருணை அல்ல. தவறான இரக்கம்.இதற்குப் பதிலாக பாஸ்த்ரிகா கற்றுக் கொடுங்கள், சில திறன்களில் பயிற்சி அளியுங்கள்.

இக்காலத்தில், தொழிலாளர் கிடைப்பதில்லை. டிரைவர்கள், கட்டிடத் தொழிலாளிகள், போன்ற பல வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. மக்கள் கடுமையாக உழைக்க வேண்டும். உடல் நலமற்றவர் அல்லது மிக முதியோர் எனில் அவர்களுக்கு உதவி தேவை. ஆனால் பலமான இளம் வயதினருக்கு உதவி தேவை இல்லை. இதனால் தவறான கலாசாரத்தையே வளர்க்கின்றோம். கருணை எப்போதும் மெய்யறிவுடன்  இணைந்திருக்க வேண்டும். மெய்யறிவு என்பது யாருக்கு, எப்போது, எதை, எப்படி அளிப்பது என்பதுவே ஆகும்.

குருதேவ், நான் மௌனத்தில் இருக்கின்றேன். நான் பேசக்கூடாது. ஆனால் இந்தப் பயிற்சியிலுள்ள சிலரை நன்றாக திட்ட வேண்டும் போல் உள்ளது. அவர்கள் தங்களை மட்டுமே கருத்தில் கொண்டு மிகவும் முரட்டுத்தனமாக இருக்கின்றார்கள். ஆன்மீக மார்க்கத்தில் உள்ளவர்கள் அதிகப் பரிவுடன் இருக்க வேண்டாமா?

குருதேவ்: நீங்கள் கூறுவது சரிதான். வெளிஉலகில் அவர்களால் பிரச்சினைகள் இருக்க வேண்டாம் என்று தான் அவர்களை நான் இங்கு வைத்துக் கொண்டிருக்கின்றேன். இங்கு ஆன்மீக வழியில் வந்ததன் பின்னரும் அவர்கள் முரட்டுத்தனமாக இருந்தால், இதற்கு முன்னர் ஆன்மீக அறிவின்றி அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர்களால் நீங்கள் தொந்தரவு அடையாதீர்கள். நாங்கள் இங்கு ஒரு சீரான வகையை சேர்ந்தவர்கள் அல்ல. வெவ்வேறு விதமானவர்கள். இங்குள்ள 500 பேரில் மூன்று அல்லது நான்கு பேரே எரிச்சலை தரக்கூடிய மக்களாவர். அவர்கள் சிறுபான்மையினர். மற்ற அனைவரும் அவ்வாறு நடந்து கொள்ளக் கூடியவர்கள் அல்ல.அவ்வாறிருந்தால் ஒரு பெரும் போரே இங்கு நிகழ்ந்திருக்கும். மிகுந்த பொறுமையுடன் கூடிய நிறையப் பேர் இங்கு இருக்கின்றார்கள். நல்ல குணம் உடைய, மரியாதையுடைய அந்த நல்லவர்கள் மீது உங்கள் கவனத்தை செலுத்துங்கள். நானுமே பாதிக்கப்பட்டிருக்கின்றேன். எவ்வாறு இவர்களை நல்வழிப்படுத்துவது என்று சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஒரு வேளை, அவர்கள் மெதுவாகக் கற்பவர்களாக இருக்கக்கூடும். ஒரு நாள் அவர்கள் உணர்வார்கள் என்று எதிர்பார்ப்போம். உலகில் பல்வேறு விதமான மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்மையில் நாம் ஒரு உயிர் காட்சிசாலையில் இருப்பது போன்று வாழ்கின்றோம். உலகமே ஒரு உயிர்காட்சிசாலை போன்றது தான்.

பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சூதாட்டத்தை தடை செய்திருக்கின்ற போது, சூதாட்டத்தில் வெற்றி பெற மந்திரம் வேத நூல்களில் இடம் பெற்றிருப்பது எனக்குக் குழப்பமாக இருக்கின்றது.

குருதேவ்: பண்டைய கால மக்கள் ஒரு அரசனுக்கு திருடுவது உட்பட அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும் என்று எண்ணினார்கள். அரசனாவதற்கு முன்னர் இளவரசன் திருடக் கூட பயிற்றுவிக்கப்பட்டான், அப்போது தான் அரசனாகும் காலத்தில் ஒரு திருடனைக் கண்டறிய முடியும். அனைத்து, நல்ல தீய மெய்யறிவு விஷயங்களும் வேதங்களில் உள்ளன. ஏனெனில் அப்போது தான் மக்கள் அனைத்தையும் அனைவரையும் புரிந்து கொள்ள முடியும். ஒரு குற்றவாளியைப் புரிந்து கொள்ள அவனுடைய மன உணர்வை அறிய அதற்காகவே அனைத்தும் எழுதப்பட்டுள்ளன. அதனால் நீங்கள் அதைச் செய்ய வேண்டும் என்பதோ அல்லது நடைமுறைபடுத்த வேண்டும் என்பதோ கிடையாது..

அன்புமிக்க குருதேவ், திடீரென்று வெறுமையாக உணர்ந்தால் என்ன செய்வது ? அனைத்துமே பொருளற்று மங்கி உணர்ந்தால் என்ன செய்வது? என்னை ஆசீர்வதியுங்கள்.

குருதேவ்: ஆசீர்வதிக்கின்றேன். அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் வந்து போகும். சில சமயங்களில் அனைத்தும் மறைந்து விட்டது போன்று வறட்சியாக உணர்வீர்கள். நல்லுணர்வுகளான அன்பு, அர்பணிப்பு, திடீரென்று மறைந்தது போன்று தோன்றும். பின்னர் அவை திடீரென்று மீண்டும் தோன்றும். இவையெல்லாம் வாழ்வில் கடந்து செல்லக் கூடியவைதாம்.முன்னேறி நகருங்கள்.

அன்புமிக்க குருதேவ், தம்பதி சேர்ந்து பயிற்சிக்கு வருவது சிறந்ததா அல்லது தனித்தனியாக வருவது நல்லதா?

குருதேவ்: சில சமயங்களில் சேர்ந்து வாருங்கள், சில சமயங்களில் தனித் தனியாக வாருங்கள். சேர்ந்து வந்தாலும் தனித் தனியாக வெவ்வேறு இடங்களில் அமர்ந்து உங்களுடைய தியானத்தை செய்யுங்கள். ஒருவரை ஒருவர் கவனித்துக் கொண்டு இருக்காதீர்கள். உங்கள் துணை தியானம் செய்து கொண்டிருக்கும் போது நீங்கள் "அவர் இங்கு இருக்கின்றாரா என்றே கவனித்துக் கொண்டிருப்பீர்கள். இது உங்கள் சொந்த விருப்பம். சில நேரங்களில் உங்களுக்கென்று சற்று தனி இடம் வேண்டும் என்று விரும்பினால் அவ்வாறே செய்யுங்கள். சேர்ந்து வர விரும்பினால் அதுவும் உங்கள் முடிவே. எதுவானாலும் சரி.

அன்புள்ள குருதேவ், தூங்கும்போது எங்கு தலை வைத்து தூங்குவது என்று கூறுங்கள். (வடக்கு தெற்கு கிழக்கு அல்லது மேற்கு)


குருதேவ்: தலையணையில் தலை வைத்துத் தூங்குங்கள்! (சிரிப்பு) வடக்கில் காந்த விசை உள்ளது, அதனால் வடக்கு தெற்காகப்படுத்தால் வடக்கு தெற்காகச் செல்லும் காந்த மின்னலை உங்கள் தலை முதல் கால்விரல் வரையில் கடந்து செல்லும்.ஆகையால் சற்று களைப்பும், ஆற்றல் குறைவும் ஏற்படும். இது ஒரு பழமையான கருத்து. கிழக்கு மேற்காகப் படுத்தால், அது காந்த மின்னலை புலத்தைத் தடுத்து, நரம்பு மண்டலத்தின் வழியாக அல்லாமல் உங்கள் உடல் முழுவதும் கிடைமட்டமாகச் செல்ல முடியும். இது காந்த மின்னலை என்பதைப் பற்றிய ஒரு சிறிய விஷயம் தான், பெரும் பிரச்சினை அல்ல.

எப்பொழுதும் வெற்றி பெற ஒரு வழி

 வெள்ளிக் கிழமை, 25 ஜூலை 2014,

பாத் அண்டோகஸ்ட் ஜெர்மனி


(உங்களை பிறர் சாதகப்படுத்திக் கொள்வதை தடுத்து நிறுத்துங்கள் என்னும் பதிவின்  தொடர்ச்சி கீழே தரப்பட்டுள்ளது).

அன்புள்ள குருதேவ், உலகப் பொருளாதாரச் சிக்கல் விரைவில் தீர்ந்து விடுமா? உலகெங்கும் ஊழல் குறைந்து, புதியதோர் உலகம் என்னும் நமது கனவு மெய்யாகுமா?

குருதேவ்: ஆம், நீங்கள் செயல்படத் துவங்கினால் இது நடக்கும். இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளாக இருந்து வருகின்றது. மோசடிக்கு மேல் மோசடி நிகழ்ந்தது, ஊழல் கூரையை தொட்டு அதற்கும் மேலே கூடச் சென்றது. மக்கள் மாற்றம் என்பது நிகழ இயலாத ஒன்று, இவ்வாறே தான் இனி இருக்கும் என்று கூட எண்ணினார்கள்.

நமது வாழும் கலையை சார்ந்த பல தன்னார்வத் தொண்டர்கள் மாற்றத்தை ஏற்படுத்தக் கடும் பணியாற்றினார்கள். (ஒரு வண்டு குருதேவ் பேசிகொண்டிருக்கும் இடத்திற்கு ஜன்னல் வழியாக வருகின்றது. விரட்ட முற்படுபவர்களிடம் குருதேவ், "பரவாயில்லை, அதுவும் இங்கு இருக்கட்டும் என்று கூறுகிறார். அது பறந்து சென்று விடுகின்றது. அப்போது அவர், சரி, அது சென்று விட்டது. இப்போது அது இந்தப் பாடங்களை அறிவதற்கு முன்கூட்டிய காலம் போலும், அடுத்த பிறவியில் அல்லது ஓரிரு ஜன்மங்களுக்குப் பின்னர் அது நமது கூட்டத் தொடருக்கு வரும் என்று கூறித் தனது பேச்சைத் தொடருகின்றார்)

ஆயிரக்கணக்கான எங்களது தொண்டர்கள், வீடு வீடாகச் சென்று மகிழ்ச்சி நிலை மதிப்பீட்டாய்வு செய்தார்கள். எங்களது அனைத்து சுவாமிகளும், ‘’இந்தியாவின் மேன்மைக்கு வாக்களியுங்கள்’’ எனும் இயக்கத்தில் பங்கேற்றனர். அது மாபெரும் இயக்கம் ஆகும். இன்று ஒரு அதிக அளவு மாற்றம் ஏற்பட்டு, நிலையான அரசாங்கம் உருவாகி இருக்கின்றது. முடிவுகளை எடுக்கும் திறன் வாய்ந்த அரசு இது. முந்தைய அரசில், ஒவ்வொரு துறையிலும் ஐந்து முதல் ஏழு வரையிலான அமைச்சர்களை கொண்ட ஒரு கவுன்சில் அமைக்கப்பட்டிருந்தது. அவர்கள் தவறான முடிவினை எடுத்தால் யாருமே அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள். கூட்டு முடிவுகளையே எடுத்து வந்தனர். ஊழலை மறைப்பதற்காக ஒவ்வொரு துறையிலும் முடிவுகள் எடுக்கவென்று அமைச்சர் குழு அமைக்கப்பட்டிருந்தது, அது முடிவுகளை எடுத்ததே இல்லை. நாடு மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. தொழில் வளர்ச்சி பத்து சதவீதத்திலிருந்து 2.5 சதவீதம் என்று கீழே இறங்கிவிட்டது. ஏழை மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தனர்.

தன்னார்வத் தொண்டர்களின் சிறந்த பணியினால் மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்தது. ஆனால் நாங்கள் எந்தக் கட்சிக்கு அவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று கூறியதே இல்லை. அவ்வாறு செய்வது எனது நெறிமுறையன்று என்று நான் எண்ணினேன், நான் முற்றிலும் கட்சி சார்பற்று இருந்தேன், ஆயின் அது எனக்கு கத்தி முனையில் நடப்பது போன்றது ஆகும். எந்தக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறாமல் மக்களை மாற்றம் உருவாக்க வைக்க வேண்டும், அது எளிதான செயல் அல்ல. இந்தக் கட்சிக்கு, அல்லது அந்தக் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறினால் நானும் அவர்களை போன்று அரசியல்வாதியாகி விடுவேன். அது நான் முற்றிலும் விரும்பாத ஒன்று ஆகும். மக்களை ஊக்குவித்து விழிப்படைய செய்ய வேண்டும். நாம் அனைவருக்கும் பொதுவானவர்.

நான் எப்போதுமே நான் அனைவருக்கும் பொதுவானவன் என்று கூறி வருகின்றேன். ஒரு கட்சி அல்லது ஒரு கொள்கை என்பது அல்ல, ஒரே இனம், ஒரே சமயம் ஒரே சமூகம் என்பதே என் சொல். இதையும் தாண்டி, நான் ஒரு நாட்டைச் சேர்ந்தவன் அல்ல, இவ்வுலகையே சார்ந்தவன் என்று கூறவே விரும்புகின்றேன்.

எப்போதெல்லாம்,கிரீஸ்,இத்தாலி மற்றும் ஐரோப்பிய நாடுகளை போன்று உங்களது நாட்டில் ஊழல் பிரச்சினை இருக்கின்றது போலத் தோன்றுகிறதோ, அப்போதெல்லாம், அனைவரையும் ஒன்று திரட்டி, மக்களுக்கு புரிதலை ஏற்படுத்துங்கள். மனிதநேய உணர்வுகள் மேம்படும் போது தான் இதைச் செய்ய முடியும். மனிதப் பண்புகளின் உயர்வு, விழிப்புணர்வு இவையின்றி பிரச்சினை தீராது. தென் அமெரிக்காவில் வன்முறை ஒரு பிரச்சினையாக உள்ளது. அர்ஜென்டினா கால்பந்து போட்டியில் தோல்வியுற்று அதன் பொருட்டு வீதிகளில் கலவரம் மூண்டது. இதன் விளைவாக பலர் காயம் அடைந்தனர். அடடா! அது விளையாட்டு! யார் வெற்றியடைந்தால் என்ன? 

வெற்றியடைந்தாலும்,தோல்வியடைந்தாலும் விளையாட்டு மகிழ்ந்து அனுபவிக்கவே ஏற்பட்டுள்ளது ஆகும். விளையாட்டை நீங்கள் போர் அல்லது சண்டை போன்று எடுத்துக் கொண்டால், கொண்டாட்டங்களுக்கு நீங்கள் போலீசை கொண்டு வர வேண்டும். இங்கு ஜெர்மனியில் கூட இது போன்று நிகழ்ந்துள்ளது. எப்போதெல்லாம் விளையாட்டுக்கள் நிகழ்கின்றனவோ மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்கின்றனர். வன்முறையில் ஈடுபடுகின்றனர். மனிதப் பண்புகளின் குறைபாடே இதற்குக் காரணம். நான் வெற்றி பெறுவேன் அல்லது பிறரை வெற்றியடைய வைப்பேன் என்னும் மனப்போக்கை கைக்கொள்ளுங்கள். அப்போது எப்போதுமே நீங்கள் வெற்றி அடைவீர்கள்.

உங்களுடைய ஐந்து வயது மகன் அல்லது மகளுடன் நீங்கள் விளையாடும் போது எப்போதுமே நீங்கள் வெற்றி அடைகின்றீர்களா? உங்கள் குழந்தைகளை வெல்வதில் மகிழ்ச்சி ஏற்படுகின்றதா என்ன? இல்லை. நீங்கள் விட்டுக் கொடுத்து அவர்கள் வெல்லும் போது தான் நீங்கள் மகிழ்ச்சி அடைகின்றீர்கள். அவர்களது மகிழ்ச்சியே உங்களது மகிழ்ச்சி. இத்தகைய பரந்த மனப்பான்மை எப்போதும் இருக்க வேண்டும். நீங்கள் கூறுவீர்கள், "இந்த முறை உன்னை வெற்றியடைய செய்கின்றேன், அடுத்த முறை நான் வெல்வேன்" அப்போது ‘வெற்றி: வெற்றி’ என்னும் நிலை உருவாகும்.எப்படியானாலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இதுவே உங்கள் மனப் போக்காக இருக்க வேண்டும். தற்போது நாம் விளையாட்டைப் போர் போன்றும், போரை விளையாட்டுப் போன்றும் கருதுகின்றோம். போர் விளையாட்டாகவே ஆகிவிட்டது.

பன்னாட்டு கால்பந்துக் கழகக் கூட்டமைப்பு மாநாடு செப்டம்பர் மாதம் நடைபெற உள்ளது. அதில் நான் உரை நிகழ்த்த இருக்கின்றேன். இன்று என்னை ஒருவர்," கால்பந்துக் கழகக் கூட்டமைப்பில் ஏராளமான மோசடிகளும் சில ஊழல் குற்றச் சாட்டுக்களும் உள்ளனவே? இதில் உங்கள் கருத்து என்ன? என்று கேட்டார். அதற்கு நான்," நல்லது, அதற்காகவே நான் அங்கு செல்கின்றேன்" என்று விடையளித்தேன்.(சிரிப்பு)

சிலர் ஊழல் இருப்பதால் நான் மாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று கூறினார்கள். நோயாளிகள் இருக்குமிடத்தில் தான் வைத்தியருக்கு வேலை இருக்கும். அது போன்று பன்னாட்டு கால்பந்துக் கழகக் கூட்டமைப்பு ஊழலின்றி இருந்தால் அங்கு சென்று பேசவேண்டிய தேவையே இருக்காது. நெறிமுறைகள் மிகுந்திருக்கும் இடத்தில் நெறிமுறைகள் பற்றிய மாநாடு தேவை இல்லை. எங்கு நெறிமுறைகள் அரித்து அழிக்கப் படுகின்றதோ அங்கு தான் நெறிமுறைகளை மீட்டு எடுக்க வேண்டும். ஒரு மயானத்தில் வைத்தியருக்கு வேலை இல்லை. எங்கு மக்களை குணப்படுத்தப்பட முடியுமோ அங்கு தான் வைத்தியருக்குப் பணி உள்ளது.

நம் அனைவருக்கும் அப்பணி உள்ளது. நாம் அனைவரும் மக்களைச் சென்றடைய வேண்டும். அதற்குச் சிறந்த வழி மகிழ்ச்சி நிலை மதிப்பீட்டுப் படிவம் தான். வீடு வீடாக சென்று இரண்டு நிமிட காலம் கேட்டுப் பெற்று இம்மதிப்பீடு செய்யுங்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்களா என்று கேளுங்கள். இல்லையென்றால், பெரும்பாலான நேரமா அல்லது சில நேரங்களிலா என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.  மகிழ்வற்ற நிலைக்கு காரணம் என்ன: பொருளாதார நிலையா, உறவுகளா அல்லது உடல் நிலையா என்று கேளுங்கள். இவையாவும் இன்றி வேறேதேனும் இருந்தால் கேட்டுக் குறித்துக் கொள்ளுங்கள். இறுதியில் அவர்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்று கேளுங்கள். ஒரு மதிப்பீட்டுக் ஆய்வை யாரும் மறுக்க மாட்டார்கள். யாரேனும் ஓரிருவர் ஆட்சேபித்தால் விட்டு விடுங்கள்.

பலர் என்னிடம், இப்போது தான் முதல் முறையாக ஒருவர் தம்மிடம் வந்து "மகிழ்ச்சியாக இருக்கின்றாயா உன் மகிழ்வுக்கு நான் என்ன செய்ய வேண்டும்" என்று தம்மை கேட்டிருப்பதாக கூறியிருக்கின்றனர். அத்தகைய கவனிப்பும் அக்கறையுமே பலரை மேன்மையாக உணர வைத்திருக்கின்றது. அவர்களது வாழ்வும் மேம்பட்டிருக்கின்றது. இதுதான் தேவையானது. நாம் அனைவரும் இத்தகைய பணியினைச் செய்ய வேண்டும். ஏற்றுக் கொள்கின்றீர்களா? ஆம்.....

இடைநிலைப் பள்ளியில் நான் ஆசிரியராகப் பணி புரிகின்றேன். 15 வயது சிறுமியர் நாளைக்கே கூட நாம் இறந்து விடலாம், அதனால் இன்றே இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என்று கூறுகின்றனர். மதுவும் பாலியல் உறவும் முக்கியமானவை என்றும் கூறுகின்றனர்.தங்களைக் கவனித்துக் கொள்வதே இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவ்:  இது இடந்தவறி வைக்கப்பட்ட கருத்து ஆகும். எப்படியானாலும் இறக்கப் போகின்றாய், ஏன் குடித்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டும்? இறக்கப் போகின்றாய், ஏன் பாலியல் உறவு கொள்ள வேண்டும்? என்று நீங்கள் மறுபுற கருத்தை முன்வைக்க வேண்டும். இளம் பருவத்தினர் தாங்கள் விரும்பியதை செய்ய ஏதேனும் காரணத்தை அல்லது கருத்தை எடுத்துக் கொண்டு வருவார்கள். நீங்கள் தாம் அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். அவர்களிடம் “நாளை அவர்கள் இறக்கப் போவதில்லை. நீண்ட நாள் வாழ்ந்திருப்பார்கள். உடல் நலமின்றி வாழ்ந்திருப்பது நல்லதன்று என்று கூறுங்கள். பெற்றோர் குழந்தைகளுக்குக் கற்பித்து வழிநடத்த வேண்டும். அவர்களை இங்கு அழைத்து வாருங்கள்.

உலகெங்கிலும் இளம்பருவத்தினர் பாலியல் உறவு,போதைப் பொருட்கள், மது இவையின்றி உருவாக்குவது மிகுந்த சிரமமானதாகி விட்டது. இது ஒரு மிகப் பெரிய சவால்.ஒவ்வொரு நாளும், பல தாய்மார்களும்,தகப்பன்களும் குழந்தைகள் கெட்ட  சகவாசத்தினால் நெறிதவறி செல்வது பற்றி என்னிடம் கூறி அழுது கொண்டிருக்கின்றார்கள். ஒருவேளை எங்களது பள்ளிகள் உலகெங்கும் இயங்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்.

பெற்றோர் என்னும் முறையில், உங்களது குழந்தைகளுக்கு சரியான சகவாசம் இருக்கின்றதா என்று நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் குழந்தைகளின் அனைத்து நண்பர்களையும் உங்கள் வீட்டுக்கு அழைத்து நல்ல முறையில் அவர்களிடம் பேசுங்கள். உங்கள் குழந்தைகளை விட அவர்களது நண்பர்கள் உங்கள் சொல்லுக்கு மதிப்பு தருவார்கள், நல்லதொரு மாமா அல்லது அத்தையாகுங்கள். அவர்களுக்கு நல்ல கதைகள் கூறுங்கள், அவர்களுடன் கூட விளையாடுங்கள், ஏதேனும் சேவை முயற்சியில் அவர்களை ஈடுபடுத்துங்கள். பெற்றோர் இவை அனைத்தையும் செய்ய வேண்டும்.

உனக்குத் தேவையானது உனக்குக் கிடைக்கும்

வெள்ளிக்கிழமை 25 ஜூலை 2014

பாத் ஆண்டகாஸ்ட், ஜெர்மனி




கேள்வி பதில்கள்

குருதேவா ! நல்ல நட்பை தக்க வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் ?

குருதேவர்: நண்பர்களிடம் எதையும் கேட்காதே. நான் உனக்கு துணையாக இருக்கிறேன் என்று சொல். உனக்குத் தேவையானவை உனக்குக் கிடைக்கும் என்பதில் உறுதியாக இரு. கொடுப்பவர் வேறு யாரோ ஒருவர். எனவே அன்புக்கு உரிமை கொண்டாட வேண்டாம். உரிமை பேசி அன்பை நீ கேட்கும் போது, நீ அன்பை அழித்து விடுகிறாய். எனவே எப்போதும் நீ மற்றவர் உன் மேல் அன்பு செலுத்த வேண்டும்; உன் மேல் கவனம் வைக்க வேண்டும் என்று கேட்கக் கூடாது.

நீ எப்போதும் மற்றவரிடம் அன்பாக இருந்து அவரை கவனமாகப் பார்த்துக் கொள்வாயானால், அவர் உன்னோடு பழகுவதை சுகமாக உணர்வார். ஆனால் நீ மற்றவர்களிடமிருந்து அன்பை எதிர் பார்த்தால் (அவர்களுடைய அன்பை உரிமை கொண்டாடினால்) அவர்களை மிகவும் சங்கடமான நிலைக்கு உள்ளாக்குகிறாய். நான் சொல்வது உனக்கு விளங்குகிறதா? உலகில் எல்லோரிடமும் இப்படிச் சொல்ல முடியாது. ஆனால், அறிவாளிகளுக்கு, இதைப் புரிந்து கொள்பவர்களுக்கு இதற்கான வழி கிடைக்கும். உன் நண்பர்களிடம், “நான் உனக்காக எது வேண்டுமானாலும் செய்வேன். உன் நட்பை தவிர உன்னிடமிருந்து எனக்கு எதுவும் வேண்டாம். “என்று சொன்னால் அந்த நட்பு நீடித்திருக்கும். நீ அப்படி நடந்து கொள்ளும் போது உன் நண்பர் உனக்கு உதவ மாட்டார் என்று நினைக்கிறாயா? உனக்கு உதவி தேவையாயிருக்கும் போது ஒருவரல்ல, 10 பேர்கள் உனக்கு உதவ முன் வருவார்கள். மேலும் நண்பர்களுக்கு நீ நன்மை செய்திருக்கும் போது அதைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உதவி செய்திருக்கிறாய் என்பதை அவர்களுக்கு நினைவு படுத்த வேண்டாம். யாராவது உனக்கு உதவி செய்திருந்து, அவர் அந்த உதவியை திரும்பத்  திரும்ப உனக்கு சொல்லிக் காட்டினால் உனக்கு எப்படி இருக்கும்? நீ வெறுப்படைவாய். இல்லையா ? அப்படிப்பட்டவரிடமிருந்து விலகி செல்ல விரும்புவாய். யாரும் நன்றிக் கடனுடன் வாழ விரும்ப மாட்டார்கள். மற்றவர்கள் உன்னிடம் நன்றிக் கடன்பட்டிருப்பதாக சுட்டிக் காட்ட வேண்டாம்.

நண்பர்களை தாழ்வுணர்ச்சியில் தள்ள வேண்டாம். நீ யாருக்காவது மிக அதிகமாக உதவி செய்திருந்தால், அவ்வப்போது அவரிடமிருந்து சிறு உதவியைக் கேள். உதாரணமாக அவரை உன்னை ரயில் நிலையம் அல்லது விமான நிலையம் வரை கொண்டு விடச் சொல்லலாம். இந்த சிறு உதவியை நீ கேட்கும் போது அவருடைய சுயமரியாதை மேம்படுத்தப் படும். (உனக்கு உதவி செய்த திருப்தி அவருக்குக் கிடைக்கும்.) பலர் பெரிய அளவில் நன் கொடைகள் அளித்து உதவுகிறார்கள். ஆனால் உதவி பெற்றவரின் சுய மரியாதையை தாழ்வடைய செய்கிறார்கள். அப்படிச் செய்வது நல்லதல்ல.

ஒரு கனவான் என்னிடம் “நான் இது வரை யாரிடமும் ஒரு பைசா கூட வாங்கியதில்லை. இது வரை என் சகோதரர்களுக்கும், நண்பர்களுக்கும் நான் தான் ஏதாவது கொடுத்திருக்கிறேன். ஆனால் இவ்வளவு செய்திருந்த போதிலும் யாரும் என்னைப் பார்க்க விரும்பவில்லை. என்னுடன் பேச விரும்ப வில்லை. இது எனக்குப் புதிராக இருக்கிறது. அவர்களை நான் எதுவும் கேட்டதில்லை“ என்று கூறினார். “எப்போதாவது சிறு உதவி கேட்டிருக்கிறீர்களா?“ என்று அவரை கேட்டேன்.“ என்றும் எதுவும் கேட்டதில்லை. எனக்கு எதுவும் தேவையில்லை என்று அவர்களிடம் சொல்லியிருக்கிறேன்.“ என்று விடையளித்தார். அவர் என்ன செய்தார் என்று புரிகிறதா? மற்றவர்களுடைய சுயமரியாதையை தன்னையுமறியாமல் தாழ்வடைய செய்திருக்கிறார். சுயமரியாதையை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் தான் யாரும் அந்த கனவானோடு இருக்க விரும்புவதில்லை.

நட்பில் இரண்டு விஷயங்கள் உள்ளன. நீ மிகவும் குழப்பமடையக் கூடும். நீ யாரையும் எதையும் கேட்காதே என்று சொன்னேன். அதே சமயம் அவர்களுடைய சுய கௌரவத்தைக் காப்பதற்காக அவர்களிடம் சிறு உதவிகளைப் பெற்றுக் கொள் என்றும் சொல்கிறேன். இங்கு தான் உன் தனித் திறமை தேவையாகிறது. இரண்டும் எதிர்மறையான விஷயங்கள். மற்றவர்களின் சுய கௌரவத்தை மதிப்பது முதலிடம் பெறுகிறது. எதையும் கொடு என்று அவரை கேட்காமலிருப்பது இரண்டாமிடத்தில் இருக்கிறது. இரண்டையுமே நினைவில் வைத்துக் கொள். உறுதியாக அதே சமயம் பணிவாக இருப்பது

நான் எப்போதும் எதையும் மற்றவரிடமிருந்து கேட்டு வாங்கியதில்லை என்று சொல்வது உன் அகங்காரத்தை காட்டுகிறது. உண்மையாக இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசுவது சரியல்ல. நான் சொல்வது உனக்குப் புரிகிறதா? நீ உன் கொள்கையில் உறுதியாக இருக்கலாம். ஆனால் பணிவாக இருப்பது அவசியம். பணிவாக இருப்பது என்றால் என்ன? “நான் மிகவும் சாதாரணமானவன். பணிவாக இருப்பவன் என்று சொல்வது பணிவல்ல. உறுதியுடன் இருப்பது அதே சமயம் மற்றவர் கருத்தை மதித்து ஏற்றுக் கொள்வது தான் பணிவு. கௌரவமாக இருப்பது. அதே சமயம் எல்லோரிடமும் எளிமையாக பழகுவது. எல்லோரிடமும் எளிமையாகப் பழகும் போது மற்றவர்களுக்கு அவர்களிடம் மரியாதை இல்லாமல் போகலாம். அப்படிப்பட்டவர் மற்றவர்களின் பார்வையில் பெரிய மனிதராக தெரியமாட்டார். மற்றவர்கள் பணிவானவர்களை ஒரு நூடூல் போல் நடத்துவார்கள். அவர்கள் மிகவும் மிருதுவானவர்கள். அப்படி எப்போதும் பணிவாக இருப்பது வாழ்க்கைக்கு உதவாது. மிகவும் கடுமையாக நடந்து கொள்வதும் சரியல்ல. இரண்டுக்கும் நடுவில் உள்ள வழி நட்புக்கு நல்லது. உறுதியாக இருக்க வேண்டும். அதே சமயம் பணிவாகவும் இருக்க வேண்டும். இதுவே நட்பின் ரகசியம்.

யாராவது ஒருவர் துன்பப்படும் போது, மன உறுதி குறைந்தவராக இருக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி அவர் அந்தத் துன்பத்திலிருந்து விடுபட வழி சொல்லுங்கள்.மனக் கவலையோடு ஒரு நண்பரிடம் சென்று பேசிவிட்டு வரும் போது, உன் கவலை தீர வழி கிடைத்தால் அவர் ஒரு நல்ல நண்பர் என்று தெரிந்து கொள். அதே சமயம் நீ ஒரு பிரச்சினையோடு ஒருவரிடம் ஆலோசனை கேட்கச் சென்று, அந்தப் பிரச்சினை மேலும் சிக்கலாகி விட்டதாக நீ உணர்ந்தால் அவர் நல்ல நண்பர் அல்ல.

தாயின் பேச்சை மட்டும் கேட்கும் என் கணவருடன் நான் எப்படி வாழ்வேன் ? தாயின் பிடியிலிருந்து அவர் எப்போது நல்ல கணவராக, நல்ல தகப்பானாக மாறுவார் ?

குருதேவர்: இதை நீ நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார். உன் மகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விரும்புவாய்? உன் மகன் திருமணமான பின் ஒரு நல்ல கணவனாகவும், நல்ல தகப்பனாகவும் மட்டும் இருந்து ஒரு நல்ல மகனாக இல்லாவிட்டால் என்ன ஆகும்? இந்தக் கேள்வி உன் வாழ்வில் எழும். இந்தக் கேள்விக்கு விடை சொன்னால் நீ கேட்ட கேள்விக்கும் விடை கிடைக்கும்.

ஒருவன் நல்ல கணவனாகவும், ஒரு நல்ல தகப்பனாகவும் இருப்பதை எதுவும் தடுப்பதில்லை. அவனுக்கு சில சமயம் நினைவுபடுத்த வேண்டியிருக்கும். ஒரு தாயின் மகனுக்கு, திருமணத்துக்கு பின் வேறு பொறுப்புகளும் வரும். ஒரு நல்ல கணவனாக, ஒரு நல்ல தகப்பனாக அவன் புதிய பாத்திரத்தில் பொறுப்பேற்க வேண்டும். இதை இயல்பாக செய்வதற்கு சிலகாலம் பிடிக்கலாம். நீ உன் தாய் பேச்சைக் கேட்காதே என்று அவனிடம் சொல்ல வேண்டாம். பொறுமையாக எடுத்துச்சொல். இது உன் பிரச்சினை தீர ஒரு வழியாகும்.

சில சமயம் புது கார் வாங்கியவர்கள் அதை எப்படி ஓட்டுவது என்று தெரியாமல் இருப்பார்கள். அந்தக் காரில் பல புதிய நவீன உபகரணங்கள் இருப்பதால் தடுமாற்றம் ஏற்படக்கூடும். அவற்றைக் கவனித்து, அதன் உபயோகத்தை அறிந்து கொள்ளும் போது அவர்கள் அந்தக் காரை நன்றாக ஓட்ட முடியும். பொதுவாக பல தாய்மார்கள் தங்கள் மகனுக்கு அல்லது மகளுக்கு திருமணம் ஆன பின் ஏதோ பாதுகாப்பை இழந்தது போல் உணர்கிறார்கள். அப்படிப் பட்ட தாய்க்கு எடுத்துச் சொல்லியோ, நம் பழக்க வழக்கத்தாலோ, இந்த பயம் தேவையற்றது. புதிய சூழ்நிலையில் எந்த வித மாற்றமும் இல்லை என்ற உணர்வை அளிக்க வேண்டும். இது பல குடும்பங்களில் ஒரு பிரச்சினையாக உள்ளது.

இரண்டாவதாக, ஒருவர் திருமணத்துக்குப் பின்னும் எந்தவித பிரச்சினையும் ஏற்படாமல், ஒரு நல்ல கணவனாகவும், ஒரு நல்ல தகப்பனாகவும், தாய்க்கு ஒரு நல்ல மகனாகவும் வாழ முடியும். இது ஒருவரின் சிறப்பு குணம் (ஆற்றல்). இந்த ஆற்றல் அவருடைய மன நிலை அமைதியாக இருக்கும் போது வரும். எனவே மனைவி திருமணமாகி சில காலத்துக்குப் பின் தன் கணவனை மகனாகவும் நடத்த வேண்டும். மிகவும் பொறுமையாக இருக்க வேண்டும். உன் குழந்தையை வளர்க்கும் போது உனக்கு எவ்வளவு பொறுமை தேவையாக இருக்கிறது என்று கவனித்துப் பார். ஒரு குழந்தை தன் தாய்க்கு பொறுமையைக் கற்றுத்தருகிறது. தாய் தன் குழந்தைக்கு பல்துலக்கக் கற்றுத் தர வேண்டும். குளிப்பதற்கு கற்றுக் கொடுக்க வேண்டும். கழிவறையைப் பயன்படுத்துவது எப்படி என்று பயிற்சி தர வேண்டும். உணவு உண்ணப் பழக்க வேண்டும். கைகளைக் கழுவி சுத்தமாக வைப்பதன் அவசியத்தைச் சொல்லி குழந்தைக்கு பழக்கத்தில் கொண்டு வர வேண்டும். எல்லாவற்றையும் தாய் தன் குழந்தைக்கு சொல்லித் தர வேண்டும். அந்தப் பொறுமையில் 50% கணவனிடமும் காட்டலாம்.

என்னுடைய முரட்டுத்தனத்தையும், கடுங்கோபத்தையும் கட்டுப்பாட்டில் வைக்க வாழும் கலையின் தினசரி சாதனைகள் உதவுகின்றன. இருந்தாலும் முரட்டுத்தனமும், கடுங்கோபமும் சில சமயங்களில் தலை தூக்குவதை உணர்கிறேன். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று விளக்குவீர்களா ?

குருதேவர்: ஒரு துணி மிகவும் சுத்தமாக இருக்கும் போது, ஒரு துளி அழுக்குப்பட்டால் கூட பெரிதாகத் தெரியும். அதே போல், மனம் மிகவும் அமைதியாக இருக்கும் போது, சிறிது கோபம் வந்தால் கூட மிகப் பெரிதாகத் தோன்றும். இது ஒரு இயல்பான அனுபவம் தான். துணி ஏற்கனவே அழுக்கடைந்திருக்கும் போது, அதில் ஒரு தூசிபட்டு மேலும் அழுக்கடையும் போது அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது. ஆனால் தூய்மையான துணியில் சிறு அழுக்கும் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

எனவே இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, நீ உன் கோபத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் போது, சில சமயம் உன்னையும் மீறி பழைய ஞாபகத்தில் கோபம் வரும் போது அதை கவனித்துப் பார். முன்பு நீ கோபப்படும் போது அதன் தாக்கம் நீண்ட நேரத்துக்கு உன் மனதில் இருந்திருக்கும். ஆனால் இப்போது அந்தத் தாக்கம் இருந்தாலும் நீண்ட நேரத்துக்கு இருக்காது. ஏனென்றால் அதைப் பற்றிய விழிப்புணர்வு உன்னை அந்தத் தாக்கத்திலிருந்து விடுவிக்கும். இதை நீ அனுபவத்தில் உணர்ந்திருக்கிறாயா?

இது ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு வந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும் மேலும் தியானம் செய்வது உனக்கு உதவும். கவலை வேண்டாம்.

மேலும் மேலும் இது வேண்டும். அது வேண்டும். மற்றவர் என்னைக் கவனிக்க வேண்டும் என்று கேட்பதை எப்படி நிறுத்தலாம்? அந்த குணம் வந்த வண்ணம் இருக்கிறது. பண்பு எங்கிருந்து உதிக்கிறது?

குருதேவர்: அதை பற்றி ஆச்சரியப்படு. மற்றவர்கள் கவனம் உன் மேல் இருக்கும் போது உனக்கு சக்தி கிடைக்கிறது. நீ மிதப்பது போல் உணர்கிறாய். ஆனால் நீ உன் ஆத்மாவுடன் ஒன்றியிருக்கும் போது மற்றவர்கள் உன்னை கவனிக்கிறார்களோ இல்லையோ உன்னைப் பாதிக்காது. அதைப்பற்றி நீ கவலைப்பட மாட்டாய். ஆனால் மற்றவர்கள் உன் மேல் கவனம் செலுத்தும் போது உனக்கு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது. அதனால் தான் மற்றவர்களின் கவனத்தை தன்பால் ஈர்ப்பதற்காக பலர் பல விதமான செயல்களில் ஈடு படுகிறார்கள். இந்த பண்பு எங்கிருந்து உதித்தது என்று கவலைப்படாதே. அதை நீ உணரும் போது, அதை விட்டுவிட்டு மேலே செல்.

நம்பிக்கை என்றால் என்ன ?

குருதேவர்: எல்லா விதமான சந்தேகங்களையும் மீறி வருவது நம்பிக்கை. எப்போதும் ஆக்க பூர்வமான ஒன்றின் மேல் உனக்கு சந்தேகம் வருவது இயல்பு. ஒருவருடைய நேர்மையை நீ சந்தேகிப்பாய்.ஆனால் ஒருவருடைய நேர்மையின்மையை சந்தேகிக்க மாட்டாய். மற்றவரின் அன்பின் மேல் சந்தேகம் வரும். ஆனால் அவருடைய வெறுப்பை சந்தேகப்பட மாட்டாய். உன் மகிழ்ச்சியின் மேல் சந்தேகம் வரும், மன உளைச்சல் மேல் சந்தேகம் வராது. யாராவது தங்கள் மன உளைச்சலை பற்றி சந்தேகப்பட்டிருக்கிறார்களா? எப்போதாவது நீ “நான் மன உளைச்சலால் அவதிப்படுகிறேனா?“ என்று கேட்டிருக்கிறாயா? உனக்கு மன உளைச்சல் இருப்பது உண்மை என்று நம்புகிறாய். இது சந்தேகத்தின் இயல்பு. நம்பிக்கை இருக்கும் இடத்தில் சந்தேகத்தின் நிழல் கூட அண்டாது.

ஒரு முறை ஒரு பத்திரிக்கையாளர் என்னிடம் கேட்டார். “சுற்றி வளைத்துப் பேசாதீர்கள். நேர் கேள்விக்கு நேரான பதில் சொல்லுங்கள். நீங்கள் ஆத்ம ஞானம் பெற்றவரா? நான் அவரைப் பார்த்து புன்முறுவலோடு சொன்னேன். நான் அவருடைய கேள்விக்கு “ஆம்” என்று சொன்னால் அதை நிரூபிக்க வேண்டும். ஏன் அந்தத் தலைவலி? அதனால் “இல்லை” என்று விடையளித்தேன். அவர் “நீங்கள் விளையாடுகிறீர்கள். உண்மையான பதிலை வேண்டுகிறேன்“ என்றார். நான் “இல்லை” என்று சொன்னதால் மேல் பேச்சுக்கு இடமில்லை என்று சொன்னேன். இருந்தாலும் அவர் விட வில்லை. அவரிடம் “நீ உன் இதயத்தைக் கேள். நான் உண்மை பேசவில்லை என்று உன் இதயம் சொல்கிறதா?” என்று கேட்டேன். அவர் “ஆம்” என்று சொன்னார். எனவே. “ஆம்” என்று சொல்வது எது? அந்தக் குரலைக் கேள். ஏன் என்னைக் கேட்கிறாய்?

அறியாமை சுய பச்சாதாபத்தினை சந்திக்கின்றது

புதன்கிழமை, 23 ஜூலை 2014,

ஜெர்மனி

எது உங்களை கவலைப்படுத்துகின்றது? விழித்தெழுந்து காணுங்கள். எல்லாமே ஒரு நாள் முடியப் போகின்றது. அனைத்துமே ஒரு நாள் முடிவுறும் என்னும் விழிப்புணர்வு கவலைப்படும் மனப்பாங்கிலிருந்து வெளியே கொண்டு வரும். இதுதான் இறுதியானது. அனைத்தும் ஒரு நாள் முடிவு பெறும்.கடந்தகாலத்தில் எத்தனையோ நிகழ்ந்துவிட்டன.சில இனியவை, இனிமையற்றவை. அனைத்தும் முடிந்துவிட்டன. அது போன்று இன்று என்னவோ அதுவும் நாளை முடிந்ததாகி விடும். இது உங்கள் சொந்த அனுபவம். அனைத்தும் மாறிக் கொண்டும் மறைந்து கொண்டும் இருப்பதை காணும் போது நீங்கள் திடமாக, வலுவாக, அதே சமயம் மென்மையாக, மையம் கொண்டவராகின்றீர்கள்.

அடுத்து வருவது உறவுகள். உறவுகள் உங்களுக்கு பிரச்சினையை உருவாக்குகின்றது. மனம் உடைகின்றீர்கள். விழித்தெழுந்து பாருங்கள். இந்த உறவுகள் துவங்குவதற்கு முன்னர் நீங்கள் சிரித்துக் கொண்டும் புன்முறுவலுடனும் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இந்த நபரை சந்திப்பதற்கு முன்னர் உங்களது வாழ்வினை நினைவில் கொண்டு காணுங்கள். வாழ்வு நன்றாகவே இருந்தது. அது போன்றே பின்னரும் இருக்கும், ஏன் வருத்தப் படுகின்றீர்கள்?

உங்கள் உடல்நலனை பற்றிக் கவலைப்படுகின்றீர்களா? எவ்வளவு நலமாக உங்களை வைத்துக் கொள்ளப் போகின்றீர்கள்? எவ்வளவு தான் நலமாக இருந்தாலும் ஒரு நாள் இந்த உடலுடன் உங்கள் உறவு முடிந்துவிடும். அதற்காக நலமின்றி இருக்க வேண்டும் என்பது அல்ல,கவலைப்பட்டு பயனில்லை. உடல் நலனுக்கு எது தேவையோ அதைக் கவனித்துக் கொள்ளுங்கள், ஆனால் அதை பற்றிக் கவலைப்படுவதில் பொருள் இல்லை.

நிதிநிலை குறித்து கவலை எழுகின்றதா? பறவைகளை பாருங்கள். விலங்குகளை பாருங்கள். அவைகள் உணவினை பெறுகின்றன அல்லவா? இயற்கை அனைத்தையும் அளிக்கின்றது. இயற்கையை நம்புங்கள், உங்களுக்குத் தேவையானது கிடைக்கும். உங்கள் விழிப்புணர்வானது ஒரு வயல்வெளியைப் போன்றது. என்ன விதைக்கின்றீர்களோ அதுவே முளைக்கும்.தேவையையே விதைத்தால் தேவையே முளைத்தெழும். மிகுதி என்று எண்ணினால் அனைத்தும் மிகுதியாக கிடைக்கும்.

குருதேவ், எவ்வாறு சுய பச்சாதாபத்தினைத் தாண்டி வருவது?

குருதேவ்: ஏற்கனவே அதைக் கடந்து வர வேண்டும் என்று எண்ணி விட்டீர்கள். சுய இரக்கத்திலிருந்து வெளி வர வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டவுடனேயே ஒரு படி வெளி வந்து விட்டீர்கள். ஏனென்றால் உங்கள் மீது நீங்களே பச்சாதாபம் கொள்கின்றீர்கள் என்பதை உணர்ந்தறிந்து விட்டீரகள். பலர் தங்களை தாங்களே இரக்கப்பட்டுக் கொள்வதை உணராமலேயே இருக்கின்றார்கள். அவர்கள், நான் இப்படித்தான்" என்று எண்ணிக் கொள்கின்றார்கள். ஆனால் நீங்கள் நான் ஏன் மீதே இரக்கப்படுகின்றேன் என்பதை அறிந்து கொண்டு விட்டீர்கள். எனவே நீங்கள் அதினின்று வெளி வந்துவிட்டீர்கள்.

எவ்வாறு வெளிவருவது என்று ஒன்றும் கிடையாது. எவ்வாறு தூங்கி விழிக்கின்றீர்கள்? ஒருவர் தூங்கிக் கொண்டிருந்தால், எழுந்திருங்கள் என்று எழுப்பினால் எழுந்து கொள்கிறார். அது போன்று தான். எவ்வாறு விழித்தேன் என்று யாரும் கேட்பதில்லை.ஏற்கனவே எழுந்து விட்டார்கள். அதே போன்று சுய இரக்கத்தை அறிந்து கொண்டால் அதிலிருந்து விழித்துக் கொண்டு விடுகின்றீர்கள். "நான் பாவம்" என்பதே கிடையாது.முன்பு எப்போதோ செய்ததற்கு இப்போது அனுபவிக்கின்றீர்கள். பிறர் மீதும் பரிதாபப்பட வேண்டாம்.

பண்டைய காலத்தில், குருவிடம், ஒருவர் நான் கஷ்டப்படுகின்றேன் என்று கூறினால் குரு அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். கஷ்டப்பட்டால் அது செய்த தவறின் பலன் ஆகும். அது உங்கள் கர்மா, அதை முடித்து விடுவதே நல்லது. குரு மூர்க்கமானவராகவும் அக்கரையற்றவராகவும் தோன்றினாலும் அது உங்களை சுய பச்சாதாபத்திலிருந்து தடுத்து நிறுத்துவதற்கே. உங்களது செயல்களுக்கு நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவதற்கே ஆகும். இல்லையெனில் நாம் நமது பொறுப்புக்களிலிருந்து விலகி ஓடி, நம்மை நாமே இரக்கப்பட்டு கொள்கின்றோம், மேலும் பிறரும் "ஐயோ பாவம், கடவுள் உங்களுக்குக் கொடுமை செய்து விட்டார் என்று கூறுகின்றார்கள். இவையெல்லாம் அறியாமை.

சுயபச்சாதாபம் ஆனாலும் பிறர் மீது பரிதாபமானாலும் பரிதாபப்படுவது என்பது அறியாமை ஆகும். ஒவ்வொருவரும் அவரவருக்கு தகுதியானதை பெறுகின்றார்கள். ஆனால் இது உயர்ந்த ஞானம். எனவே இவ்வாறு அனைவரிடமும் கூறிக் கொண்டிருக்காதீர்கள். அவர்களுக்குப் புரியாது. நீங்கள் மூர்கத்தனமாகப் பேசுவதாக எண்ணுவார்கள். ஒருவர் வருந்திக் கொண்டிருக்கும் போது, உன்னுடைய முந்தைய தவறுக்காக இவ்வாறு அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய்" என்று கூறமுடியாது. உண்மையாக இருந்தாலும், அவ்வாறு கூறாதீர்கள். உங்கள் மனதிற்குள் புரிந்து கொள்ளுங்கள்.

இயற்கையின் விதிகளை மீறுபவர்கள் மருத்துவமனைக்குச் செல்கின்றார்கள். அதிகமான உணவினால் வயிற்று வலி, சர்க்கரை நோய், ஆகியவை ஏற்படுகின்றன. மது அருந்துவதால் கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன. மருத்துவமனையில் வருந்திக் கொண்டிருப்பவரிடம், சரி! நீ இதைச் செய்ததால் இப்போது வருந்திக் கொண்டிருக்கின்றாய் என்று கூறமாட்டர்கள். சரி நம்மால் முடிந்ததெல்லாம் செய்வோம் என்று கூறுங்கள். பரிதாபம் வேண்டாம்.

இந்தப் பிரபஞ்சத்தில் காரணம் விளைவு என்பது உள்ளது. ஒவ்வொரு விளைவிற்கும் ஒரு காரணம் உள்ளது. நீங்கள் விரும்புவது கிடைத்தால் அதற்கு ஒரு காரணம் உள்ளது. நீங்கள் விரும்பியது கிடைக்க வில்லையென்றால் அதற்கும் ஒரு காரணம் உண்டு. இயற்கை மிகவும் புத்திக் கூர்மையுடையது. இறைமையும் மிகுந்த அறிவுள்ளது ஆகும். சுய இரக்கம் என்பது ஆன்மீக வழியில் தவறானது ஆகும். சுய பச்சாதாபமும் வேண்டாம், பிறர் மீது பரிதாபமும் வேண்டாம்.
பரிதாபம் கருணை இரண்டிற்குமிடையே உள்ள வேறுபாடு என்னவெனில், அன்பு செயல் வடிவாக வெளிப்படுவது கருணை. "நான் உன் மீது அன்பு வைத்திருக்கின்றேன், ஆனால் உனக்கு எதுவும் செய்ய மாட்டேன்" என்று கூறமாட்டீர்கள். அன்பும் அல்ல, கருணையும் அல்ல. கருணை என்பது, அன்பும் செயலும் சேர்ந்தது ஆகும். பரிதாபம் என்பது காரணம் விளைவு என்னும் கோட்பாட்டினை மறுத்து, கர்மா என்னும் விதியினையும் மறுத்து, வருத்தம் என்னும் மனப்போக்கை காட்டுவதே ஆகும். பரிதாபம் என்பது அறியாமை ஆகும். பரிதாபம் என்பதில் கர்மாவினைக் குற்றம் சாட்டிக் கதறுகின்றீர்கள், அதில் பயனில்லை.

ஒவ்வொன்றையும், எல்லா இடங்களிலும் எந்நேரத்திலும் கட்டுப்படுத்த வேண்டும் என்னும் மனப்போக்கிலிருந்து எவ்வாறு விடுபடுவது?

குருதேவ்:  சிறிய விஷயங்களை உங்களால் கட்டுப்படுத்த முடியும். அதனால் இத்தகைய தோற்றம் ஏற்படுகின்றது. பெரிய விஷயங்களைக் கட்டுப்படுத்துங்கள். இராக்கில் நடைபெறும் போரினை தடுத்து நிறுத்துங்கள், சிரியாவில் நடைபெறும் போரினைத் தடுங்கள். ஒரு தம்பதி என்னிடம் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.கணவர் கூறினார்," என் மனைவி சிறிய விஷயங்களைத் தீர்மானிப்பாள், நான் பெரிய விஷயங்களை முடிவு செய்வேன். என் மனைவி, என்ன கார் வாங்க வேண்டும், வீட்டுக்கு என்ன வண்ணம் பூசப்பட வேண்டும், விடுமுறைக்கு எங்கே செல்ல வேண்டும், பணம் எவ்வாறு செலவு செய்யப்பட வேண்டும் இவற்றையெல்லாம் தீர்மானிப்பாள். நான் இவற்றில் தலையிட மாட்டேன். நான் பெரிய விஷயங்களைத் தீர்மானிப்பேன். இராக் போரைத் தடுப்பது எப்படி, பிரிட்டனில் யார் பிரதமர் ஆக வேண்டும், நாடுகள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ள வேண்டும் என்பவையெல்லாம் தீர்மானிப்பேன். அவற்றில் அவள் தலையிட மாட்டாள். ஆகவே எங்கள் குடும்பத்தில் அமைதி நிலவுகின்றது" என்று கூறினார். (சிரிப்பு) அது போன்று எதையாவது கட்டுபடுத்த வேண்டும் என்று விரும்பினால் எவ்வாறு வானிலையை கட்டுபடுத்தி மழையை வரவழைப்பது என்பது போன்ற பெரிய விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

குருதேவ், என்னுடைய காலை நேர தியானத்தின்போது, ஒரு விசித்திரமான தோற்றம் ஏற்பட்டது. என்னுடைய உடல் ஒரு நொறுங்கிய காரில் கிடப்பதைக் கண்டேன். இது மனதில் உள்ள பயத்தின் வெளிப்பாடா?

குருதேவ்: ஆம் பயத்தின் வெளிப்பாடே ஆகும். அதைப் பற்றிக் கவலைப் படாதீர்கள்.’’ஓம் நமசிவாயா‘’ சில முறைகள் கூறுங்கள். சரியாகிவிடும்.

மரண பயம் பற்றி என்ன செய்வது?

குருதேவ்:இயற்கை ஒவ்வொருவரிடமும் மரணம் பற்றி சிறு பயத்தை வைத்திருக்கின்றது.அது அபிநிவேஷ் என்று அழைக்கப்படுகின்றது. அதைப் பற்றிப் பயப்பட வேண்டாம். எப்போது போக வேண்டுமோ அப்போது போய்த்தான் ஆக வேண்டும். அது வீட்டினாலும், காரினாலும் சரி. அது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது. அதை பற்றிக் கவலைப் படாதீர்கள். எப்போதெல்லாம் பயம் ஏற்படுகின்றதோ,அப்போது "ஓம் நமசிவாயா" என்று கூறுங்கள். சரியாகி விடும். அதற்காக நீங்கள் கவனக் குறைவாக இருக்கக் கூடாது. இது நுட்பமான உயர்ந்த ஞானம் ஆகும். அன்றாட வாழக்கையில், எப்படியானாலும் இறக்கத்தானே போகிறோம் என்று அதி வேகமாகக் காரை ஓட்ட முற்படாதீர்கள். அது சரியன்று. அதே சமயம் மரண பயத்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். மூச்சினைக் கவனித்து "ஓம் நமசிவாயா" என்று கூறுங்கள்.

குருதேவ், சமநிலையை எங்கு காண்பது? ஆன்மீகத்திலும் எனக்குக் கவர்ச்சி உள்ளது, அதே சமயம் பொருள் உலகிலும் ஈடுபாடு உள்ளது.

குருதேவ்: பரவாயில்லை.ஒன்றோடொன்று எதிரானவை அல்ல. வாழ்வில் ஒரு நடுநிலை தேவை. நன்றாக உழைத்து சம்பாதியுங்கள், சேமியுங்கள், அத்துடன் தியானத்திற்கும் சிறிது நேரம் செலவிடுங்கள். உழைத்துச் சம்பாதிக்கும் லட்சியவாதிகள் பல் தேய்க்கவோ, உணவு உண்ணவோ மறப்பதில்லை அல்லவா? எவ்வளவு தான் தீவிரமாகப் பணம் சம்பாதித்தாலும்  உணவை ரசித்து உண்ண நேரம் எடுத்துக் கொள்கின்றார்கள். அது போன்று ஆன்மிகம் ஆத்மாவிற்கு உணவு ஆகும். எனவே இதையும் செய்யுங்கள்.

சிலர் ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொள்கின்றார்கள்.அதில் ஆழ்ந்து செல்கின்றார்கள்." போதும், ஏராளமான செல்வத்தை பார்த்து விட்டேன். என்னுடைய வேலையைக் கவனித்துக் கொண்டு, மற்றவர்களுடைய மேம்பாட்டிற்கும் பணி செய்கின்றேன் என்று வாழ்வின் அடுத்த நிலையை அடைகின்றார்கள். வாழ்வில் பல நிலைகள் உள்ளன. எந்த நிலையில் வேண்டுமானாலும் நீங்கள் அமரலாம். முதல் நிலை, இரண்டாம் நிலை மூன்றாம் நிலை அல்லது இறுதி நிலை. அது உங்கள் விருப்பத் தேர்வு.

சத்சங்கத்தில் நிறையப் பேர் உங்கள் எதிரில் அமர வேண்டும் என்று விரும்புகின்றார்கள். அதனால் சில சண்டைகள் ஏற்படுகின்றன. எங்கும் நிறைந்திருக்கும் தங்கள் அருகில் அமர வேண்டும் என்பது அவ்வளவு முக்கியமா?


குருதேவ்: உங்களுக்கு ஒரு ரகசியம் கூறுகின்றேன். பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கே அதிக அளவு ஆசீர்வாதம் செல்கின்றது என்பதை அவர்கள் அறியவில்லை.(சிரிப்பு) " தனக்கு "என்னும் நிலையைத் தாண்டி பிறரும் முன்னால் வர இடம் தர வேண்டும். நேற்று நான் அமர்ந்தேன், இன்று வேறு யாராவது அமரட்டும் என்னும் மனப்போக்கு  வேண்டும். நீங்கள் பாடவோ அல்லது மொழிபெயர்க்கவோ வேண்டியிருந்தால் சரி, இல்லையெனில் பிறருக்கும் இடம் கொடுங்கள். அவ்வாறு இருந்தால் தான், இது வரையில் நீங்கள் கேட்டவற்றை எல்லாம், புரிந்தறிந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பது வெளிப்படும். இல்லையெனில் கேட்டது அனைத்தும் வீண்.