விடுதலையை நோக்கிய பாதை

பிப்ரவரி 28, 2014 

பெங்களூரு, இந்தியா


கேள்வி - பதில்

குருதேவ், திவ்ர சம்வேகனம் அசன்னஹா’ (எந்த வித பதட்டமும் இல்லாமல் முழுமனதுடன் விடுதலையைத் தேடுபவர் விடுதலையை விரைவில் அடைகிறார்) என்று யோக சூத்ராவில் கூறப்பட்டிருக்கிறது. விடுதலை அடைய தேவை ‘வேகமா’ அல்லது ‘அமைதியா’?

குருதேவ்: வேகம் தேவைதான். ஒன்று நமக்கு தேவையென்றால் நாம் அடிக்கடி சொல்வது, ‘இன்ஷா அல்லாஹ்!’ (உருது வாக்கியமான இதற்கு ‘கடவுள் விருப்பமிருந்தால்’ என்று பொருள்), அதாவது கடவுள் இதுதான் சிறந்தது என்று எண்ணினால் இது நடக்கட்டும். ஆனால், நமக்கு ஒரு கார் அல்லது வேலை வேண்டுமென்றால், நமது முழு கவனமும் போட்டு அதை உடனே அடைய செயல்படுகிறோம். ஆனால் மற்ற விஷயங்களுக்கு, கடவுள் விருப்பமிருந்தால் நிறைவேறட்டும் என்று விட்டுவிடுகிறோம்.

ஆச்ரமதிற்கு போக வேண்டுமா, குருதேவ் விரும்பும் போது என்னை அங்கே அழைப்பார், என்று வசதியாக சொல்லிவிடுகிறீர்கள். உங்களை எப்போது வர வேண்டாம், இங்கு வந்து தியானம் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லியிருக்கிறேன், ஆனால் அழைப்பு வரும் போது நான் அங்கே இருப்பேன் என்று சொல்லிகிறீர்கள். ஒரு திரைப்படம் செல்லவேண்டும் அல்லது அருமையான உணவகங்களுக்குப் போக வேண்டுமா, கடவுள் அழைத்தால் போகிறேன் என்று சொல்வதில்லை. உங்கள் மகிழ்ச்சிக்கு உங்கள் விருப்பப்படி உடனே செயல்படுகிறீர்கள், ஆனால் ஆன்மீகப் பயிற்சிகளுக்கோ கடவுளுக்கு விருப்பமிருந்தால் நிறைவேறட்டும் என்று விட்டுவிடுகிறீர்கள். 

உங்கள் மனம் இதை புத்திசாலித்தனமாக செய்து கொள்கிறது. வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும் அதை உங்கள் விதியிடம் அல்லது வினைப்பயனிடம் விட்டு விடுங்கள். ஆனால் உங்கள் விடுதலை என்பது உங்கள் புருஷார்தத்தை, அதாவது உங்கள் முயற்சியைப் பொறுத்தே இருக்கிறது.

குருதேவ், எதிரெதிரான மதிப்புகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன என்றால், அதிகமான மக்கள் தியானம் செய்வதன் விளைவால், அதிகமான மக்கள் எதிர்மறை குணங்களான பொறாமை மற்றும் வன்முறையில் ஈடுபடுவார்களா?

குருதேவ்: சொல்ல முடியாது, அப்படியும் இருக்கலாம் (சிரிப்பு). எல்லாவிதமான எதிர்மறை உணர்வுகளும் அன்பின் திரிந்த நிலை. அன்பிலிருந்து பிறந்தவையே. அன்பு இல்லையென்றால் பொறாமையும் இருக்காது. பொறாமை இருந்தால் அன்பு இருக்கிறது என்று பொருள்.ஆணவம் என்பது தன் மீதே அதீத அன்பு கொண்டிருப்பது. பொறாமை என்பது மற்றவர் மீது அதிக அன்பைக் கொண்டிருப்பது. கோபம் என்பது அடுத்தவர் மீதோ அல்லது ஒரு பொருள் மீதோ அதீத அன்பைக் கொண்டிருப்பது. பேராசை என்பது ஒரு பொருளின் மீது அதீத அன்பு வைத்திருப்பது. கோபம் என்பது தன் கருத்தின் மீது தன்னுடைய கொள்கை மீது அதீத அன்பு கொண்டிருப்பது. கோபம் கொண்ட ஒருவர் நினைப்பார், ‘எல்லா விஷயங்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’, அவை அப்படி இல்லாவிட்டால், கோபம் கொள்கிறார். எனவே, எல்லாவித எதிர்மறை குணங்களும் அன்பின் ஒரு திரிந்த நிலையே.

குருதேவ், அமைதிதான் நாம் இயல்பு என்றால், வன்முறை எதனால் எழுகிறது?

குருதேவ்: பலவீனம் அல்லது பயம் தான் வன்முறைக்கான மூலக் காரணம். அழிக்கப்படுவோமோ அல்லது மறுக்கபடுவோமோ என்ற பயமே வன்முறையை விளைவிக்கிறது. மன அழுத்தமும் வன்முறைகுக் காரணம். மன அழுத்தமும் ஒரு வகையான பலவீனமே. மன அழுத்தம் அல்லது பலவீனம் மற்றும் சோர்வும் வன்முறையை ஏற்படுத்துகிறது. தன்னுடைய வலிமையைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமை வன்முறையை ஏற்படுத்துகிறது. வன்முறை ஏற்படுத்துபவைப் பற்றி யோசித்தால் ஒரு முழு பட்டியலே தயார் செய்யலாம். பற்று வைப்பதும் கூட வன்முறையை உண்டாக்கும். ஞானமற்ற அதீத பற்று வன்முறைக்குக் காரணம். 

செய்திதாள்களில் இந்தக் கதைகளெல்லாம் பார்க்கலாம். தொடக்கத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருந்து, பிறகு ஒருவர் மீது ஒருவர் வன்முறையாய் நடந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கொலை செய்வதில் போய் முடிகிறது. இதையெல்லாம் கேள்விப்பட்டதில்லை? உலகம் முழுதும் இப்படி அன்பாய் இருந்துவிட்டு ஒருவரை ஒருவர் குத்திக்கொன்ற கதைகளைக் கேட்கிறோம். நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே ஞானம் என்பது அத்தியாவசியம். வெறும் அன்போ அல்லது அதீதப் பற்றோ போதாது. ஞானமில்லாத அன்பு துயரம் தான். நீங்கள் ஞானமில்லாமல் ஒரு சமான நிலையில் இல்லாமலிருந்தால் அது வன்முறையை உண்டாக்கலாம். ஆனால் நீங்கள் எதிலாவது முழுமையான அற்பணிப்பில் இருந்தால், அது வேறு. அப்போது நீங்கள் ஞானத்தை இழப்பதில்லை.

குருதேவ், மக்கள் உங்களிடம் அதீதப் பற்று வைத்துவிடக்கூடிய தொழில்முறை ஆபத்துகள் இருக்கிறதா? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

குருதேவ்: இதை பற்றி என்னிடம் கேட்கவே கேட்காதீர்கள்! (சிரிப்பு)  பலவகையான தொழில் முறை ஆபத்துகள். பலமுறை, நான் நடந்து கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து யாராவது என் காலைப் பிடிப்பார்கள். கீழே விழாமல் நான் சமாளித்தாக வேண்டும். பாருங்கள், இப்போது எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், நான் எழுந்து செல்லும் போதும் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். யாரும் எழுந்து ஓடக்கூடாது. யாரும் கேட்பதில்லை.

நீங்கள் எல்லோரும் எழுந்திருக்கும் போது தான் திருடர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று எப்போதும் சொல்லி வருகிறேன். அவர்கள் குழுவாக வருகிறார்கள். ஒருவர் அதிக பக்தி உள்ளது போல காண்பித்துக் கொள்வார், அப்போது மற்றவர் அப்போது உங்கள் பையிலிருந்து திருடுவார். அவர்கள் குழுவாக இயங்குகிறார்கள் என்பதை நம்பமுடிகிறதா? நம்மை அவர்கள் உளவியல் ரீதியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜெய் ராதாரமண ஹரி என்று மங்களம் பாட ஆரம்பிக்கும் போது, எல்லோரும் சத்சங்கத்தின் பேரானந்தத்தில் லயித்திருக்கும் போது, யாரையாவது தள்ளி விட்டுவிட்டு பின்னாலிருந்துத் திருடத் தொடங்கிவிடுவார்கள்.

இதை தடுக்க நீங்கள் அனைவரும் உட்கார்ந்தபடியே இருக்க வேண்டும். எப்படியும் நான் எல்லோரையும் சந்திக்கிறேன். ஒருவர் மீது ஒருவர் விழுந்து பெண்களும் குழந்தைகளும் நசுக்கப்படுவது எனக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. சிலர் ஓடிவந்து ஒருவரை முந்திகொண்டு முன்னால் வந்து நன்று, ‘குருஜி,  என்னை ஆசீர்வதியுங்கள்!’ என்பார். ஏதோ சரியில்லை என்று நான் புரிந்து கொள்வேன். ஒருவர் உங்களை முந்தி முன்னால் வந்து நிற்பார், அந்தக் குழப்பத்தில் மற்றொருவர் உங்களுக்குப் பின்னாலிருந்து திருடத் தொடங்குவார். பல காலமாய் பக்தர்களாய் இருக்கும் சிலர், (அவர்களை நீங்கள் பக்தர்கள் என்று சொல்லமுடியாது) எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை, முன்னே தாவி வந்து முதல் வரிசையில் உட்கார முயற்சித்து குழப்பம் ஏற்படுத்துவார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூட்டத்திலிருந்து ஒருவர் சொல்கிறார்). ஆம், என்ன தண்டனை கொடுப்பது என்று யோசிக்கிறேன். ஒழுங்கீனத்தை பரப்புகிறார்கள். ஒருவரிடம் இல்லை என்று சொல்வதோ கடுமையாய் நடந்து கொள்வதோ என்னுடைய இயல்பில்லை, ஆனால் இவர்கள் நானாக இருக்க விடுவதில்லை. அதிகபட்சம் ‘முட்டாள்’ என்று சொல்வதை தவிர வேறு கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பதோ திட்டுவதோ இல்லை. இதைவிட இன்னும் கட்டுப்பாடாய் எப்படி இருப்பது என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் என் பொறுமையை சோதிக்கிறார்கள். பரவாயில்லை. உலகில் இந்த வகை மக்களும் உண்டு, எல்லோரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குருதேவ், நம்மை நாமே மகிழ்ச்சியாய் வைத்துகொள்வது அல்லது நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாய் வைத்து கொள்வது, இவற்றில் எது மிக முக்கியம்?

குருதேவ்: இரண்டுமே முக்கியம். நீங்கள் சன்யாசியாய் இருந்தால் மற்றவர்களை மகிழ்ச்சியாய் வைத்து கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் சம்சாரியாய் இருந்தால் உங்களையும் உங்களை சுற்றி உள்ளோரையும் மகிழ்ச்சியாய் வைத்துகொள்ள வேண்டும்.

ஒரு சைக்கிளுக்கு இரண்டு சக்கரங்கள் இருப்பது போல நீங்கள் சமன் செய்தாக வேண்டும். நீங்கள் மற்றவர்களை மட்டுமே மகிழ்கிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள முயற்சித்தால், நீங்கள் சோகமாகி விடுவீர்கள். நீங்கள் சோகமாயிருந்தால், எப்படி நீங்கள் மற்றவர்களை மகிழ்சியாய் வைத்துக் கொள்ள முடியும்? நீங்கள் உங்களை மட்டுமே மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள முற்பட்டால், உங்களை சுற்றி உள்ளவர்கள் சோகமாகி விடுவார்கள். அவர்கள் சோகமாயிருந்தால் பிறகு நீங்கள் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும்? இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது, எனவே நடுநிலையாய் நீங்களும் மகிழ்ச்சியாய் இருந்துகொண்டு சுற்றத்தையும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கெனவும் நேரம் எடுத்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொண்டு மற்றவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அல்லது நம்புகிறீர்களோ அதையே நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவே கூடாது. நடுநிலையாய் இருங்கள். சிலநேரம் மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள், சில நேரம் நீங்கள் நினைப்பதையும் பின்பற்றுங்கள்.

குருதேவ், அன்பு ஒரு தெய்வீக குணம். அன்பு நம்மை விடுதலை செய்யும் என்று சொல்கிறார்கள், ஆனால் அன்பு உண்மையில் நம்மை பந்தத்திற்குள் கொண்டு செல்கிறது. திருமணமும் ஒரு பந்தமாகவே பார்க்கப்படுகிறது. எனவே எப்படி இந்த பந்தம் அழகானதாக இருக்க முடியும்?

குருதேவ்: அந்த உறவில் சுயநலம் இல்லையென்றால், அது அழகானது. அந்த உறவில் தியாகம் செய்வதற்கு விருப்பம் இருக்கும் போது, அது அழகானதாக மாறிவிடுகிறது. ஸ்ரீ இராமபிரானுக்கும் அவர் சகோதரர் பரதனுக்கும் இடையே உள்ள உறவைப் பாருங்கள். ஒருவருக்கு ஒருவர் எதையும் தியாகம் செய்துகொள்ள இருவருமே விருப்பமாயிருக்குமளவு அவ்வளவு உறுதியான பந்தம். அப்படிப்பட்ட சுயநலம் இல்லாத உறவு, அழகான ஒன்று. அப்படிப்பட்ட உறவில், அன்பும் அமைதியும் ஏராளம்.

குருதேவ், இரண்டு விஷயங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படும் போது, இரண்டுமே சரியாக இருக்கும் போது, எப்படித் தேர்வு செய்வது?

குருதேவ்: தளர்வாகுங்கள். குழப்பம் இருந்தால், முதலில் தளர்வாகுங்கள். சரியான ஒன்று தானாகவே மேலெழும். நீண்ட காலத்தில் எது மகிழ்சியைத் தருமோ அதைத் தேர்ந்தெடுங்கள். குறுகிய காலத்தில், உடனடியாக அவ்வளவு இன்பமான ஒன்றாக இல்லாமலிருந்தாலும் கூட பரவாயில்லை. தற்காலிகமாக இன்பம் தருவது, ஆனால் நீண்ட கால நோக்கில் துன்பம் தருவது நல்ல தேர்வு அல்ல.

குருதேவ், நிகழ்கணத்திற்கு எந்தத் தேர்வுகளை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள தேர்வற்ற விழிப்புணர்வு நிலையில் ஒருவர் இருக்க வேண்டும். எப்படி அந்தவிதமான தேர்வற்ற விழிப்புணர்வு நிலையில் இருப்பது?

குருதேவ்: உங்கள் முன் ஒரு கரிகட்டையும் ஒரு வாழைப்பழமும் சாப்பிடுவதற்கு வைத்தால் உங்கள் தேர்வு என்ன? அங்கு தேர்வு செய்ய ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். இருப்பது வாழைப்பழமா அல்லது கரியா என்று தெரியாத போது தேர்வு செய்ய உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடத் தகுந்தது மற்றுது கரி அதை சாப்பிட முடியாது என்று தெரியும் போது தேர்வு செய்ய உங்களுக்கு எங்கே வாய்ப்பு? அறிவு ஞானத்தைத் தருகிறது அதனால் தெளிவு கிடைக்கிறது.  குழப்பம் என்றால், அந்த நேரத்தில் தெளிவு இல்லை ஞானம் இல்லையென்று பொருள். ஞானத்தைப் பெறுவது எப்படி? தளர்வாகுங்கள், தியானம் செய்யுங்கள்.

குருதேவ், 20 நிமிட தியானத்தில், சுமார் ஒரு நிமிடம் மட்டுமே நான் தியானத்தில் ஆழ முடிகிறது, எஞ்சி இருக்கும் நேரத்தில் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு தான். நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையில் நீங்கள் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? சில நேரம் யாரேனும் அருகில் இருக்கிறார்களா என்று சற்றே கண்களைத் திறந்து பார்ப்பதும் உண்டு.


குருதேவ்: பரவாயில்லை, நீங்கள் அந்த 2% தியானம் செய்யலாம். சில நேரம், நாம் கண்களை மூடுகையில், கனவு காணத் தொடங்கி நமது மனதின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறோம். இதைத்தான் மனோராஜ்யம் என்பார்கள். கண்களை திறந்தால் நாம் வெளி உலகில் இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையே மௌனம் இருக்கிறது. அதிகம் வெளி உலகமும் வேண்டாம், அதிகம் கற்பனை உலகமும் வேண்டாம். இதற்கு நடுவே நாம் தியானம் செய்ய வேண்டும்.

மகாசிவராத்திரி : குருதேவின் அருள் வாக்கு

பெப்ரவரி 27, 2014

பெங்களூரு, இந்தியா

இன்று, இந்த மங்களகரமான சிவராத்திரி நன்னாளில் உடனடியாக உங்கள் மனதில் அமைதியையும்,மகிழ்ச்சியையும் தரக்கூடிய இரண்டு செய்திகளை நீங்கள் எடுத்து செல்லவேண்டும்.



1. கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கின்றார், என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார் என்று அறிந்து கொள்ளுங்கள். உங்கள் தேவைகளை கவனித்துக் கொள்ளவே கடவுள் இருக்கின்றார்.

2. இந்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் இளைப்பாறி, ஆத்மாவில் அமைதியடையுங்கள். மகா சிவராத்திரி என்பது ஆழ்ந்த ஓய்வுநிலை பற்றியது தான். மகாசிவராத்திரி மனதுக்கும் ஆத்மாவிற்கும் ஆழ்ந்த ஓய்வை எடுத்து வருகின்றது. மனம், எதன் பின்னாலாவது அலைந்து கொண்டும், ஏதாவது ஒரு ஆன்மீக அல்லது பொருட் கூறுகளின் மீது ஆசை வைத்துக் கொண்டும் இருக்கும். கடவுள் இரண்டையுமே உங்களுக்கு தருவார் என்பதை  நினைவில் கொண்டு இளைப்பாறுங்கள்.

இறைமையுடன் ஆழ்ந்த தொடர்பினை ஏற்படுத்தி கொண்டு கடவுள் என்னைச் சார்ந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அசைக்க முடியாத இந்த நம்பிக்கையை கைக்கொண்டால், நீங்கள் என்ன விரும்பினாலும் அது உங்களுக்கு அளிக்கப்படும். இந்த நம்பிக்கை உங்கள் உள்ளிருந்து மலரும் அக்கணமே உங்கள் மனம் ஒரு அமைதி நிலையை அடையும்.

சத்சங்கத்தில் பாடும் போதும் இதே அமைதியான ஆழ்ந்த ஓய்வினை நீங்கள் உணரலாம். மேலோட்டமாக பஜனைகள் பாடுவது நன்றல்ல. கேட்கும் போதும், கூடப் பாடும் போதும், உங்கள் இதயபூர்வமாக, இறைமையிடம் அன்பும், ஆழ்ந்த பக்தியுணர்வும் வேண்டும். இறைமையை நோக்கி நீங்கள் அழுதெழ வேண்டும். முழு மனதோடு பாடலுடன் இரண்டறக் கலந்து பாடுகின்ற பொழுதில்,  இறைவனுடன் ஒன்றாகிக் கலந்து விடுகின்றீர்கள்.

சிவன் வெளியில் இல்லை. கோவிலிலோ, எங்கோ ஹிமாலய மலைகளிலோ அமர்ந்திருக்கவில்லை. மானசரோவர் ஏரியிலோ, கைலாச மலையிலோ இல்லை.   சிவபெருமான் உங்களுக்குள் இருக்கின்றார்; எங்கும் நிறைந்திருக்கின்றார். இதை உணர்ந்து இளைப்பாறுங்கள். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்.   எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அங்கெல்லாம் நிறைந்து -  மலைகள், செடிகள், மரங்கள், போன்ற அனைத்திலும் வியாபித்திருப்பவன். இறைவனே காட்சி, காண்பவனும் அவனே. இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்திக் கொண்டு இளைப்பாறுங்கள். விரைவில்

நீங்கள் ஆழ்ந்த சமாதி நிலையை அடைந்திருப்பதை காண்பீர்கள். உங்கள் மனம் அமைதியையும் ஆனந்தத்தையும் அடைந்திருப்பதை அறிவீர்கள். உங்கள் உள்ளிலிருந்து முழுவதுமாக மலர்ந்து வேறெதுவும் மீதமில்லை என்றுணர்வீர்கள். அவ்வளவு தான். மகாசிவராத்திரியன்று, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், நன்கு இளைப்பாறி உங்கள் ஆன்மாவில் ஆழ்ந்து விடுவது தான். ஞானச் செய்திதனை கேட்கும் போது உங்கள் மனமும் அறிவும் தூய்மைப்படுகின்றன. மனமானது, தான் பற்றிக் கொண்டிருக்கும்  அற்ப விஷயங்களையும், ஆசைகளையும் விட்டு விடுகின்றது, அறிவு தூய்மையாகின்றது. அதனால் தான் பூஜையின் போதும், அதன் பின்னரும் நாம் பஜன்களைப் பாடுகின்றோம். 

பூஜையின் இந்த அழகான தியான நிலைக்குப் பின்னர் பேசுவது கூட சிரமமாக இருக்கின்றது. உங்களில் பலருக்கு இன்று குருதேவ் ஞானச் செய்தி எதையேனும் கூற வேண்டும் என்னும் விருப்பம் இருக்கின்றது என்பதை அறிவேன். அல்லவாநாம் வார்த்தைகளை மிகவும் சார்ந்திருக்கின்றோம். எவ்வாறு ஞானம் அறிவினை தூய்மைப்படுத்துகின்றதோ அவ்வாறு பஜனைகள் பாடுவது பக்தியை தூய்மையாக்கி மேம்படுத்துகின்றது. உங்கள் மனமும், உணர்வுகளும் மேம்பட்டு முழுமையாக மலரும் போது, நீங்கள் அனைத்தையும் கடந்து உங்கள் உயிர்நிலையின் மூலாதாரத்தை அடைகின்றீர்கள். அதுவே சிவம். உண்மையில் நீங்களும், நானும் அதுவே ஆகும். 

மகாசிவராத்திரி அத்தகைய நிலையை அடைவது பற்றியதே ஆகும்.இறைமையுடன் இந்த ஆழ்ந்த தொடர்பினை நான்கு படிநிலைகளில் அனுபவிக்கலாம். முதலாவது ஸாமிப்யா (குரு அல்லது இறைமையின் அருகாமை). இறைமையுடன் நெருங்கியவராகவும் அன்புடையவராகவும் இருக்கின்றோம் என்று உணருதல்) எப்போது இந்த அனுபவத்தை அடைவீர்கள்? இதை நாளைக்கு, நாளை மறுநாள், பத்து நாட்களுக்குப் பிறகு, அல்லது சில  மாதங்களுக்குப் பிறகு உணருவீர்களா?  இல்லை. இப்போதே, இந்த க்ஷணமே இறைமையுடன் நெருங்கியிருப்பதை உணருங்கள். இதை தான் குரு செய்கின்றார். உங்களுக்கு இறைமையுடன் நெருக்கம், அருகாமை இவற்றை உணர குரு உதவுகின்றார்.

இரண்டாவது படிநிலை ஸாநித்யா இறைமையின் பிரத்யக்ஷத்தை வேண்டுதல் அல்லது உணருதல். நீங்கள் தியானம் செய்யும் போது, உங்களுக்குள் இறைமையின் இருத்தலை உணருகின்றீர்கள். இறைமையின் இருத்தலை பற்றி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றீர்கள், அதை அனுபவிக்கின்றீர்கள் என்பது இதன் பொருள். உதாரணமாக, நாம் காற்றினால் சூழப்பட்டிருக்கின்றோம். அதனால் எப்போதும் அதன் இருத்தலை உணருவதில்லை. ஆனால் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுக்கும் போது, உங்களைச் சுற்றி இருக்கும் காற்றினை உணர்ந்தறிந்து கொள்ளுகின்றீர்கள். அது போலவே, நாம் எப்போதும் இறைமையால் சூழப்பட்டிருக்கின்றோம், ஆயினும் இறைமையின் இருத்தலை உணருவதில்லை. அதை உணர்ந்து அறிந்து கொள்ளுவதற்க்காகவே, யாகங்கள், பூஜைகள், செய்கின்றோம்,  மேலும் பல்வேறு விதமான பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம்.

அடுத்தது, ஸாருப்யா- இறைமையை உங்களுக்குள்ளும், எங்கும், எல்லாவற்றிலும் காணுதல். அதாவது, இறைமை என்னுள் இருக்கின்றது, அதுவே நான் என்று உணருதல் ஆகும். இறைமை என்னுடைய உருவத்திலும், என்னைச் சுற்றி இருக்கும் அனைத்து உருவங்களிலும் உள்ளது என்பதை அறிந்து உணருதல் ஆகும்.  உருவமில்லாவிடினும் இறைமை எல்லா உருவங்களிலும் நிறைந்துள்ளது.

முடிவான படிநிலை ஸாயுஜ்யா. அதாவது, இறைமையுடன் முழுவதுமாக இணைந்து இரண்டறக் கலந்து, உங்களுக்கும் இறைமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று உணருதல். அந்நிலையில் இரண்டென்பது  கிடையாது, இரண்டுமே ஒன்று தான். 
இது ஆழ்ந்த அனுபவத்தில்தான் கிடைக்கப்பெறும்.வார்த்தைகளால் இதை விவரிக்க முடியாது. இத்தகைய முழுமையான ஒன்றிய நிலையை, ஆழ்ந்த மௌனம், மற்றும் அசையாத நிலையில் நீங்கள் இறைமையோடு இரண்டற கலந்திருக்கும் போது உணரலாம்.இன்று நீங்கள் முதல் இரண்டு படிகளை எடுத்து வையுங்கள். முதல் படி ஸாமிப்யா அதாவது இறைமையுடன் நெருங்கி உணருதல். இரண்டாவது படி, ஸாநித்யா எங்கும், எல்லாவற்றிலும் இறைமையின் இருத்தலை அனுபவித்தல்.இவை நான்கும்,சமாதி மற்றும் ஞான உபதேசத்தின்  நான்கு படிநிலைகளாகும். ஆழ்ந்த ஓய்வில் நாம், யாவும் கடந்த மூலாதாரத்துடன் ஒன்றிணைகின்றோம்-அதுவே சிவம்.

வடிவத்தின் மூலம் - வடிவமற்றதாக

பிப்ரவரி 25, 2014

பெங்களுரு இந்தியா


கேள்வி - பதில்கள்

கே: குருதேவ்!  இறந்த பிறகும் மனிதன் ஆன்மாவின் வடிவாக ஒரு உடலை தேடி அலைகிறான். எதனால் உடலின் மீது அவ்வளவு பந்தம்? 

குருதேவ்: இது எதனால் என்றால்,ஒருவருக்கு அவருடைய தர்மத்தை (கர்ம வினைப்பலன் அல்லது கடமைகள்) செய்வதற்கு உடல் ஒரு உபகரணமாக உள்ளது. "ஷாரிர மத்யம் தர்ம காலு சாதனம்" என்று சொல்லப்படுகிறது.இதன் அர்த்தம் என்னவென்றால் ஒருவர் கடமைகளையும், கர்ம வினை பலன்களையும் எடுத்துச்செல்ல வேண்டி உள்ளது. அதை அவர் ஒரு ஸ்தூல உடலின் மூலமாகத் தான் செய்ய இயலும். அசிரீரியாக, உடல் ஏதும் இன்றி  மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாமல், இருப்பவர்களால் அதை செய்ய முடியாது. இதனால் தான் தேவர்களும் தேவதைகளும் கூட தர்ம வழியில் சென்று முக்தி அடைய மனித வடிவத்தை எடுத்துக் கொள்ளுகிறார்கள்.

கே: குருகுல் கோவிலில் ஐந்து முகம் கொண்ட கணபதி சிலை உள்ளது. ஐந்து முகத்தின் பொருள் என்ன?

குருதேவ்: நம்முடைய உடலில் பார்த்தல்,முகர்தல்,தொடுதல்,சுவைத்தல் மற்றும் கேட்டல் ஆகிய ஐந்து புலன்களை கொண்டிருக்கிறோம். அவ்வாறே படைப்பிலும் பூமி, நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்து சக்திகள் உள்ளன. அது போலவே கடவுளுக்கும் ஐந்து முகங்கள் உள்ளன. ஆகவே எந்த தெய்வீக வடிவம் இந்த ஐந்து சக்திகளிலும் உள்ள தடைகளை   நீக்கும் திறனை கொண்டுள்ளதோ,அதுவே பஞ்சமுக கணபதி என்று அழைக்கப்படுகிறது. இந்த படைப்பில் உள்ள அனைத்துமே இந்த ஐந்து சக்திகளும் சேர்ந்த குழுவால் ஆக்கப்பட்டவையே. உதாரணத்திற்கு, நீரானது பால் தயிர் போன்ற பல்வேறு வகைப்பட்ட வடிவங்களில் உள்ளது. அதைப் போலவே காற்றும் பல வடிவங்களில் உள்ளது. கரி மல வாயு, பிராண வாயு, நைட்ரஜன் போன்ற பல வாயுக்களை நாம் காணலாம். இம்மாதிரியான வாயுக்களின் கூட்டமைப்பே காற்று என்று அழைக்கப்படுகிறது. இதே போல் பலவகையான திரவங்களின் கூட்டமைப்பே நீர் சக்தியாகிறது.நீர் ஒரு குழுவை கொண்டுள்ளது, காற்று ஒரு குழுவை கொண்டுள்ளது, அதைப் போலவே பூமியும் தங்கம், வெள்ளி, செம்பு, கற்கள், மண் போன்ற பல்வேறு உலோகங்கள் மற்றும் கனிமங்களை கொண்ட ஒரு குழுவாக உள்ளது. ஆகாயம் கூட அதற்குள்ளாகவே உள்ளிடம் வெளியிடம் போன்றவற்றால் ஒரு குழுவை கொண்டுள்ளது. கணேசன் இந்த குழுக்கள் அனைத்திற்கும் கடவுள் ஆவார். ஐந்து முதன்மையான குழுக்கள் இருப்பதால் இந்த குறிப்பிட்ட வடிவம் பஞ்சமுக கணபதி என அழைக்கப்படுகிறது.

நிர்குணமாகவும் நிரகாரமாகவும் உள்ள கடவுளானவர் புனிதமான மந்திரங்களை உச்சரிப்பதன் மூலமாக இந்த வடிவத்தில் வழிபாடு செய்யப்படுகிறார் என்பதே இதன் சாரம்.  

கே: ஒருவருக்கு கிடைக்கக்கூடிய குருவின் அன்பின் அளவு, அவருடைய அருள் மற்றும் ஆசிர்வாதம் பெரும் கொள்திறனை சார்ந்ததா அல்லது அதிக தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உங்களை வேகமாக அடைவார்களா?

குருதேவ்: அம்மாதிரியாக எதுவும் கிடையாது. நீங்கள் ஏற்கனவே என்னிடம் வந்து விட்டீர்கள். இன்னும் வந்து சேராதவர்கள் அவர்களை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க உங்களுக்காக காத்திருக்கிறார்கள்.   

கே: குருதேவ்! "சர்வ தர்மம் பரித்யாஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ. அஹம் தவம் சர்வ பபெப்யோ மோக்ஷயிஷ்யமி ம ஷுசாஹ்" என்று பகவத் கீதையில் எழுதப்பட்டுள்ளது. தர்மம் அல்லது மதத்தின் அர்த்தம் குருவின் முன் மாறி விடுமா?

குருதேவ்: பகவத் கீதையின் முடிவில் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லி முடித்த பின், பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனிடம் "சர்வ தர்மம் பரித்யாஜய மாம் ஏகம் சரணம் வ்ரஜ. அஹம் தவம் சர்வ பபெப்யோ மோக்ஷயிஷ்யமி ம ஷுசாஹ்" என்று கூறுகிறார்.உன்னுடைய சமயத்தையும் மற்ற நம்பிக்கைகளையும் விடுத்து என்னிடம் சரணாகதி அடைந்துவிடு ! அர்ஜுனா! நான் உனக்கு உன்னுடைய பாவங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் முக்தி அளிக்கிறேன். தர்மம் என்பது ஒரு சோப்பு போன்றது. 100 ரூபாய் விலை கொடுத்து வாங்கிய ஒரு சோப்பினால் உன்னுடைய துணிகளை சலவை செய்ததனால், நீ அந்த சோப்பை  துணிகளோடு வைத்துக்கொள்ள இயலாது. நீ அதை கரைத்துவிட தான் வேண்டும். 

வாழ்வில் இந்த பந்தம் பாசம் போன்றவற்றை விடுத்து வரவேண்டிய ஒரு நிலை ஏற்படும். அந்த நிலையில் ஒரு ஆழ்ந்த பக்தியுடன் "நான் உன்னுடையவன். உன்னுடையவன் மட்டுமே" என்று இறைவனிடம் முழமையாக சரணடைந்து விடுவோம். இதுதான் இந்த செய்யுளில் கூறப்பட்டுள்ளது. பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு இதை சொல்ல வேண்டியிருந்தது, ஏன் என்றால், இதைத்தவிர வேறு ஞானத்தை அளித்திருந்தாலும், அர்ஜுனன் அதில் சிக்குண்டு விடுபடாமல் இருந்திருப்பான். நீ இவ்வாறு செய் என்று  கூறியிருந்தால் அர்ஜுனன் அதை பின்பற்றி அந்த அளவு மட்டுமே செய்திருப்பான். அர்ஜுனன் அவ்வாறு  சிக்கிக் கொள்ளாமல் இருக்க பகவான் கிருஷ்ணர் இறுதியில் "நீ உன்னுடைய அனைத்து தர்மங்களையும் விடுத்து என்னிடம் புகலடைந்து விடு. உன்னுடைய பாவங்களில் இருந்து முக்தி பெற உன்னுடைய முயற்சிகளால்  இயலாது. நான் உன்னை உன்னுடைய பாவங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும் விடுவிக்கிறேன், என்னிடம் வந்து விடு என்று கூறுகிறார்.

நீ ஒரு தவறு செய்கிறாய் என்று வைத்துக் கொள். நான் இவ்வாறு தவறு செய்து விட்டேனே! எப்படி இதில் இருந்து விடுபடுவது! என்ன செய்வது? என்று மீண்டும் மீண்டும் எண்ணி வருந்திக் கொண்டு இருக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம். அந்த முயற்சியினால் உனக்கு அதிலிருந்து விடுதலை கிடைக்காது. அதனால் தான் பகவான் கிருஷ்ணர், "நான் உன்னுடைய பாவங்களையும் துன்பங்களையும்  தாங்கிக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆகவே  அனைத்தையும் விடுத்து வந்து என்னிடம் புகலடைந்து விடு" என்று கூறுகிறார்.

கே: குருதேவ்! நீங்கள் பதினாறு தனிச் சிறப்புடைய திறமைகள் அல்லது தெய்வீக குணங்கள் (பதினாறு கலங்கள்) பற்றி சொல்லி இருக்கிறீர்கள்.  அவை என்ன மற்றும் அவைகளுடைய முக்கியத்துவங்கள் என்ன?

குருதேவ்: கலம் என்கின்ற வார்த்தை பொதுவாக சந்திரன் ஒரு நாளில் தேயும் அல்லது வளரும் அளவை குறிப்பதாகும். சந்திரன் 16 வேறுபட்ட கலங்களை கொண்டுள்ளது என்று புரிந்து கொள்ளப்பட்டது. அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை உள்ள நாட்களில் இதை நீங்கள் கவனிக்கலாம். அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை உள்ள நாட்களை எண்ணினால், அது 16 நாட்களாக இருக்கும். அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரையில் ஏற்படும் இந்த மாற்றம் பூஜ்யத்தில் இருந்து முழுமைக்கு நகருவதை குறியிட்டுக் காட்டுகிறது. அமாவாசை தினத்தன்று சந்திரனே இல்லை என்பது இதன் அர்த்தம் அல்ல. அது அன்றும் இருக்கிறது. இவைகளே 16 காலங்கள் என்று புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தன்று கூட சந்திரன் அங்கு தான் இருக்கிறது, ஆனால் அதை நம்மால் காண இயலாது. அவ்வளவுதான்.

அமாவசை தினத்தன்று நம்மால் சந்திரனை காண இயலாது. பௌர்ணமி தினத்தன்று முழு சந்திரனை காணலாம். ஆகவே கலம் என்கின்ற வார்த்தை ஒருவரின் சக்தியை அளக்கும் அலகு அல்லது ஒருவர் எந்த அளவு முன்னேறியிருக்கிறார் அல்லது மலர்ந்திருக்கிறார் என  வெளிப்படுத்துவது. சிலருக்கு அரை சந்திரன் பிடிக்கும், சிலருக்கு முக்கால் சந்திரன் பிடிக்கும், மற்றும் சிலருக்கு முழு சந்திரன் பிடிக்கும் என கூறலாம். இது பண்டைய காலத்தில் அளப்பதற்குரிய ஒரு முறையாக இருந்தது.     

அந்த நாளில் ஒரு கல்லில் இருக்கும் பிராண சக்தி ஒரு கலத்திற்கு சமமானதாகவும், நீருக்கு இரண்டு கலம் என்றும், நெருப்பிற்கு மூன்று கலம் என்றும், காற்றிற்கு நான்கு கலம் என்றும், ஆகாயத்திற்கு ஐந்து கலம் என்றும், கூறப்பட்டது. செடிகள் மற்றும் மரங்கள் ஆறு கலங்கள் விலங்குகள் ஏழு கலங்கள் மற்றும் மனித இனம் எட்டு கலங்கள் என்றும் கூறப்பட்டது. 
தனிச் சிறப்புடைய மனிதர்களிடம் ஒன்பது கலங்கள் இருந்ததாக கூறப்பட்டது. பகவான் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒருவரான பகவான் பரசுராமர் ஒன்பது கலங்களும், பகவான் ராமர் பன்னிரண்டு கலங்களும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பகவான் ஹனுமான் ராமரை விட சக்தி வாய்ந்தவர் என்றும் அவர் 14 கலங்களை கொண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. அதனால் தான் அவரால் பகவான் ராமருக்கு உதவி செய்யவும் முடிந்தது. நம்மை விட பலசாலிகளாக இருப்பவர்களால் தான் நமக்கு உதவி செய்ய முடியும்.   

தேவி 16 தெய்வீக குணங்களையும் கொண்டிருப்பதால் "ஷோதாஷகால" என்று அழைக்கப்படுகிறார். அவர் அனைத்து தெய்வீக மற்றும் உயர்ந்த குணங்களைக் கொண்டிருப்பவர். குறைபாடு எதுவும் இல்லாதவர் என்பதே இதன் பொருளாகும். பகவான் கிருஷ்ணரும் பதினாறு கலங்களையும் கொண்டிருப்பவர் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அவர் பூரண அவதார் என்று அழைக்கப்படுகிறார். 16 கலங்களும் கொண்டிருப்பது என்பதன் பொருள், மொத்த மலர்ச்சிக்கும் தெய்வீக குணங்களை வெளிப்படுத்தவும் காரணியாக இருக்கும் 16 குணங்களையும் கொண்டிருப்பவர் என்பதாகும்.
   
நீங்கள் தேவியை பார்த்தால் அவர் ஒரு புறம் அன்பும் அருளும் நிறைந்து அழகாக தோன்றுவார். ஆனால் மறுபுறம் பார்த்தால், திகிலூட்டுவதாகவும் உக்கிரத்தை வெளிப்படுத்தும் காளி மாதாவாக தோன்றுவார். அவர் வசீகரமானவர் மற்றும் சாந்தமானவர் ஆனால் அதே சமயம் திகில் மற்றும் உக்கிர தோற்றத்தையும் கொண்டவர். பெண் தெய்வம் துர்கா மிகவும் திகிலூட்டுபவர் மற்றும் பக்தி பூர்வமான பயம் உண்டாக்குபவர். பெண் தெய்வம் லக்ஷ்மி மிகவும் அமைதியானவர் வசீகரமானவர்.
தேவியிடம் நீங்கள் எதிர்மறையான தெய்வீக அம்சங்கள் அனைத்தும் இருப்பதை காணலாம். எல்லாவற்றையும் வழங்கும் பெண் தெய்வம் லக்ஷ்மி தீங்கற்ற ஆந்தையின் மேல் அமர்ந்திருப்பவர். அறியாமையையும் தீயவற்றையும் போக்கும் பெண் தெய்வம் துர்க்கை கொடுமையான சிங்கத்தின் மேல் அமர்ந்திருப்பவர். கற்பனை செய்து பாருங்கள்! எங்கு நீங்கள் சிங்கத்தையும் ஆந்தையையும் சேர்த்து காண முடியும். 

அது போலவே தான் பகவான் கிருஷ்ணரும் 16 கலங்களையும் கொண்டவராக கருதப்படுகிறார். இது எதனால்? பகவான் கிருஷ்ணரிடம் நீங்கள்   எந்த  நிலையிலும் முழுமையான மற்றும் நிறைவான தெய்வீகம்  வெளிப்படுவதை காணலாம். அவர் அந்த அளவு முழுமையானவர்.அவர் கள்வர்களின் மன்னராவார். அவர் சின்ன விஷயங்களை திருடுவது கிடையாது. அவர் உங்களுடைய இதயங்களை திருடி விடுவார். அதனால் தான் அவர் "சித் சோரா" (மற்றவர் மனதை முழுமையாக கைப்பற்றுவதையும் திருடுவதையும் அழகாக செய்பவர்). மேலும் குஜராத்தில் "ராஞ்சொத்ரை" (போர்க்களத்தில் இருந்து தப்பிச்செல்லும் கோழை)  என்று அழைக்கப்படுகிறார். போர்க்களத்தில் இருந்து இடையில் தப்பி ஓடிவிட்டார் என்று சொல்லுகிறார்கள். ஆனால் மற்றொரு புறம் அவர் பிதாமகர் பீஷ்மரை (மகாபாரதத்தில் கௌரவர் மற்றும் பாண்டவர்களுக்கு மூதாதையராக இருந்தவர்) தோல்வியுறச் செய்ய தன்னுடைய சுதர்ஷன சக்கரத்தை எடுத்தார். எனவே அவர் துணிவும் உக்கிரமும் கூட உள்ளவர். ஆகவே அவர் ஒருபுறம் மிக்க தைரியமானவராகவும் மறு பக்கம் கோழையாகவும் உள்ளவர். அவர் எவ்வளவு முழுமையானவர் என்று ஒருவரால் கற்பனை செய்ய இயலாது. அவர் கீழ்ப்படிகிறவர் அதே சமயம் விதிகளையும் மீறுபவர்.

பகவத்கீதையில் பல இடங்களில் பகவான் கிருஷ்ணர் எல்லா சாத்தியமான நிலைகளிலும் பூரணமானவர் மற்றும் முழுமையானவர் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் தான் யாரும் பகவான் கிருஷ்ணரை பின்பற்றக் கூடாது என்று கூறப்படுகிறது. பகவான் ராமரின் வழியை பின் பற்ற வேண்டும், பகவான் கிருஷணர் சொல்லுவதை கேட்க வேண்டும். பகவான் கிருஷ்ணர் பாதையை பின்பற்ற வேண்டாம். நீங்கள் யாராவது பகவான் கிருஷ்ணர் செய்தது போல் ஒரு பெண்ணின் ஆடைகளை திருடச் சென்றால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாவீர்கள் (பகவான் கிருஷ்ணர் பெண்கள் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவர்களின் உடைகளை எடுத்து மரங்களின் கீழே ஒளித்து வைத்து விடுவார்) .  

கே: தன்னிறைவு அடைந்த ஒருவருக்கு தன முனைப்பு அதிகரிக்குமா?

குருதேவ்:: தன்னிறைவு அடையும் போதோ அல்லது மற்றவர்களிடம் சார்ந்து இருக்க வேண்டிய நிலை இல்லாத போதோ தன முனைப்பு அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. தன்னிறைவு அடைந்துள்ள ஒரு நிலையிலும் நாம் கடவுளையும் பரமாத்மாவையும்( மிக உயர்ந்த நிலையை உடைய தெய்வீகம்) சார்ந்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

கே: குருதேவ்! எங்களுக்கு வழி காட்டவும். இந்நாட்களில் குழந்தைகள், வளர்ந்தவர்கள் மற்றும் மகளிரிடம் கூட பான்பராக், குட்கா, புகையிலை ஆகியவற்றின் உபயோகம் அதிகரித்துள்ளது. நாம் இதை எப்படி நிறுத்துவது?

குருதேவ்: இது தாய்மார்களின் முழு பொறுப்பாகும். ஆரம்பத்தில் இருந்தே தாய்மார்கள் குழந்தைகளுக்கு கட்டுப்பாடுகள் விதித்திருந்தால், அவர்கள் அத்தகைய தவறான வழிகளுக்கு செல்லமாட்டார்கள். ஆனால் பொதுவாக நடப்பது என்னவென்றால், இப்போதெல்லாம் தாய்மார்கள் தங்கள்  குழந்தைகளை மிகவும் சுதந்திரமாக விட்டு விடுகிறார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே, வீடுகளில் தாய் தந்தை இருவருமே குழந்தைகளின் மனங்களில் அத்தகைய தடைகளை உருவாக்க வேண்டும். குழந்தைகளிடம்   தாங்கள் புகையிலை போன்றவற்றை தொடவே கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

சைவ உணவு உண்பவர்களின் குடும்பங்களில், ஆரம்பத்திலிருந்தே குழந்தைகளின் மனங்களில் மீன் மாமிசம் முட்டை போன்றவற்றை தொடக் கூடாது என்கின்ற கண்டிப்பான தடைகளை ஏற்படுத்துகின்றனர். சிறு வயதிலிருந்தே குழந்தைகள் மனதில் ஒரு கண்டிப்பான பழக்கமாக உருவாகும் போது, அவர்கள் எப்போதுமே அசைவ உணவை நாடிச் செல்லமாட்டார்கள். அதை போலவே தான், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் புகையிலை மெல்லுவது, புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது ஆகியவற்றிற்கு கண்டிப்பாக தடைகளை விதிக்க வேண்டும். நான் இங்கே அமர்ந்திருக்கும் உங்கள் அனைவரிடமும் கேட்க விரும்புகிறேன், உங்கள் அனைவருக்கும் போதை மருந்துகள் உபயோகிப்பது மற்றும் புகைபிடிப்பது ஆகியவற்றிற்கு எதிராக எச்சரிக்கப்பட்டீர்களா இல்லையா? இங்கே உங்களில் எத்தனை பேருக்கு உங்களுடைய பெற்றோர்களிடம் இருந்து போதை மருந்துகள் உபயோகிப்பது மற்றும் புகை பிடிப்பதற்கு அத்தகைய கண்டிப்பான தடைகள் விதிக்கப்பட்டன? பலருக்கு இளம் வயதிலிருந்தே நல்ல பழக்கங்களை கடைப்பிடிக்க செய்யப்பட்டிருகிறார்கள்.
 
குழந்தைப் பருவத்திலிருந்தே அத்தகைய பொருட்களை தொடவோ அல்லது உபயோகிக்கவோ  தடைகள் விதிக்கப்பட்டிருந்திருக்கின்றன. தாய்மார்கள் மட்டுமே இதை செய்ய இயலும். அவர்களுடைய குழந்தைகளிடம் இந்த தடைகளை செயலாக்க முடியும். இல்லையென்றால் குழந்தைகளை இங்கே அழைத்து வந்து ஏழு முதல் பத்து நாட்கள் இங்கே பயிற்சிகள் பயிலச் செய்யலாம். அவர்களிடம் இருக்கும் ஏதாவது தவறான பழக்கங்களை சுதர்சன கிரியாவின் மூலமாக வெளியற்றி விடுவோம் என்று உறுதி செய்கிறோம். சக்தி கிரியாவின் மூலமாக அவர்களை மேலும் வலுவுறச் செய்வோம்.
 
கே: தியானம் செய்பவன் என்கின்ற முறையில், நான் செய்யும் தியானங்கள் என்னை சுற்றி இருப்பவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று நான் அறிவேன். ஆகவே தியானம் ஒரு பெரிய சேவையா?

குருதேவ்: இதன் பொருள் என்ன? நீங்கள் அமர்ந்து தியானம் செய்தால் மட்டும் போதும், வேறு எந்த சேவையும் செய்ய வேண்டியதே இல்லை என்பதா? நான் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் சேவை மற்றும் தியானமும் அத்தியாவசியமானது.