உன்னுடைய கெட்ட அனுபவங்களுக்கு யார் பொறுப்பு?

20 பிப்ரவரி, 2014   



பெங்களூர், இந்தியா

கே: ப்ராயச்சித்தம் என்றால் என்ன? ஒருவர் தன் பாவங்களிலிருந்து எப்படி விடுபட முடியும்? ஒருவர் தன் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுதலை அடைய முடியுமா? அல்லது, வாழ்நாள் முழுதும் குற்ற உணர்வுடன் வாழ வேண்டுமா?

குருதேவர்: “ப்ராயஸ்” என்றால் அசல் நிலைக்குத் திரும்புவது என்று அர்த்தம். சித்தம் என்றால் சைதன்யம்/ஆத்மா என்று அர்த்தம் கொள்ளலாம். கள்ளமில்லாமல் பிறந்தோம். குழந்தையாக இருந்த போது உன் மனம் எப்படி இருந்தது? புதிதாக,உயிர்த் துடிப்போடு, கள்ளங்கபடில்லாமல் இருந்தது. ப்ராயச்சித்தம் என்றால், உன்னை உன் குழந்தைப் ப்ராயாத்துக்கு எடுத்துச்செல்வது ; இந்த பூமிக்கு நீ வந்த போது இருந்த தூய்மையான நிலைக்கு உன்னை எடுத்துச் செல்வது என்று அர்த்தம்.

ப்ராயச்சித்தம் உன் சித்தத்தை மீண்டும் இளமையாக்கும். ஆரம்ப நிலையில் இருந்த கள்ளமில்லாத தன்மையை மீண்டும் பெறுவதற்கு ப்ராயச்சித்தம் அவசியம். ப்ராயச்சித்தம் என்பது செய்த தவறுக்காக வருந்துவது அல்ல. அதற்கு சரியான ஆங்கில வார்த்தை கிடையாது. உன்னை அசல் நிலைக்கு திரும்பி எடுத்துச் செல்லும் செயலே ப்ராயச்சித்தமாகும். பகவான் கிருஷ்ணர் பகவத் கீதையில் அர்ஜுனனிடம் சொன்னது : பார் ! உன்னால் உன் பாவங்களை ஒழிக்க முடியாது. நான் உனக்காக அதைப் பார்த்துக் கொள்கிறேன். உன்னை உன் பாவங்களிலிருந்து விடுதலை செய்கிறேன். நீ என்னிடம் வந்து விடு. அவ்வளவு தான். கிட்டத்தட்ட இதே போன்ற வார்த்தைகளை இயேசு கிறிஸ்துவும் சொன்னார். எல்லா ஞானிகளும் குருக்களும் இதையே சொல்கிறார்கள். உன் பாவங்களைப் பற்றி கவலைப் படாதே. நீ பக்தனாக இருந்தால், நீ சரணாகதி அடைந்தால், உன் பக்தி பாவங்களை அழித்து விடும்.

வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏதாவது இருந்தால், மற்றவர்கள் மீது பழி போட வேண்டாம். அடிப்படையில் நம் பிரச்சினைகளுக்கு நாமே தான் காரணமாக இருக்கிறோம். எனவே ஒரு நல்ல சாதகர், ஒரு நல்ல மாணாக்கர் இதை உணர்ந்து யார் மேலும் புகார் செய்ய மாட்டார். உன் அனுபவம் கெட்டதாக இருந்தால் அதற்கு யார் பொறுப்பு ? நீ தான் பொறுப்பு! ஏன் அப்படி? ஏனென்றால் உன் கர்ம வினை இப்படிப்பட்ட கெட்ட அனுபவங்களைக் கொண்டு வருகிறது.
எனவே ஒரு நல்ல சாதகர், ஞானம் தேடுபவர், ஒரு போதும் புகார் செய்யமாட்டார்.நம்முடைய புராதன பாரம்பரியப்படி, நீ ஆசிரியரிடம் சென்று, இது சரியல்ல, அது சரியல்ல என்று சொல்ல முடியாது. அவர் இப்படிச் சொன்னார்; என்னைக் கேவலமாக நடத்தினார் என்று சொல்ல முடியாது.
யாராவது உன்னைக் கேவலமாக நடத்தினால், அதற்கு உன் கர்மவினை தான் காரணம். நீ யாரையாவது தவறாக நடத்தியிருக்கக் கூடும். புராதன ஞானிகளிடம், குருக்களிடம் நீ புகார் சொன்னால், அவர்கள் உன் கர்மவினை தான் அதற்குக் காரணம் என்று சொல்லியிருப்பார்கள். நல்ல செய்திகளுடன் மட்டுமே அவரை அணுக முடியும்.

நான் எல்லோருடைய புகார்களையும் கேட்கிறேன். (அது அவர்களுடைய வருத்தத்தைக் குறைக்கிறது என்பதால்) நான் கேட்காவிட்டால் அவர்கள் தங்கள் மனத்தில் உள்ள சுமையை யாரிடமாவது இறக்கி வைப்பார்கள். ஆனால் தற்சமயம் நம் புராதன வழக்கத்தைப் பின்பற்றி வருகிறேன். யாராவது புகார் சொன்னால், நீயே அதை தீர்த்துக் கொள் என்று சொல்கிறேன்.

கே: நான் சில விஷயங்களில் சுதந்திரமாக உணர்கிறேன்.சில விஷயங்களில் கட்டுப்பட்டிருப்பதாக நினைக்கிறேன். கட்டிலிருந்து விடுபட எவ்வளவுக்கெவ்வளவு முயல்கிறேனோ, மேலும் அக்கட்டு இறுகுவது போல் உணர்கிறேன். சுதந்திரமாவது எப்படி?

குருதேவர்: உன்னிடம் நிறைய நேரம் இருக்கிறது என்று நான் கருதுகிறேன். ஒரு வேலையை எடுத்துக்கொண்டு, உலகின் முன்னேற்றத்துக்காக உழைக்கும் போது, தனிப்பட்ட பிரச்சினைகள், மன உணர்ச்சி சம்பந்தமானவைகள் தானாகவே தீர்ந்துவிடும். எனக்கு என்ன ஆகும்? என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? நான் என்ன நினைக்கிறேன்? நான் என்ன நினைப்பதில்லை? என்ற சிந்தனையில் அதிக நேரத்தை செலவிட வேண்டாம். என்ன ஆகப் போகிறாய். என்ன நினைக்கிறாய் என்று யோசிக்க யாருக்கு நேரம் இருக்கிறது? யார் இதைப் பற்றி கவலைப்படுவார்கள்?

நீ ஒரு நாள் வருத்தமாக இருப்பாய். மற்றொரு நாள் மகிழ்ச்சியாக இருப்பாய். யாருக்கு அதைப் பற்றிய கவலை? யாரும் உன் உணர்ச்சிகளைப் பற்றிக் கவலை கொள்ளாத போது, நீ ஏன் அதைப்பற்றிக் கவலைப்படுகிறாய்? உன் உணர்ச்சிகளைத் தூக்கி எறி. அறிவை நம்பு. நீ என்ன செய்ய வேண்டும் என்று சிந்திப்பது அவசியம். அவ்வளவு தான். உனக்கு தேவையானவற்றை நீ பெறுவாய். உன்னுடையது எதுவானாலும், உன்னை வந்தடையும். நீ என்ன செய்ய வேண்டுமோ, கண்டிப்பாக அதை நீ செய்ய வேண்டும். நீ இறக்கும் போது இரண்டு கேள்விகள் உன் முன் எழும். எவ்வளவு அன்பு செலுத்தியிருக்கிறாய்? எவ்வளவு அறிவு பெற்றிருக்கிறாய்? இந்த இரண்டும் தான் நீ வாழ்க்கையில் கற்க வேண்டிய பாடங்களாகும். வாழ்க்கையில் நீ என்ன கற்றுக் கொண்டாய்? மற்றவர்களுக்கு என்ன கொடுத்திருக்கிறாய்?

இதை விட்டுவிட்டு நாம் மற்றவர்களுக்கு அறிவூட்ட விரும்புகிறோம். அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் எல்லோரும் வல்லவர்கள். குருவைக் கூட விடுவதில்லை. குரு என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக்கூடாது என்ற ஆலோசனை வருகிறது. குரு எப்படி வாழ்த்த வேண்டும் என்று கூட ஆலோசனை சொல்கிறார்கள். “ என் தலையின் மீது கை வைத்து சரியாக ஆசிர்வாதம் செய்யுங்கள் குருஜி!” என்று என்னிடம் சொல்கிறார்கள்.

நேற்று ஒரு பெண்மணி பாதபூஜை செய்வதற்காக என் கால்களை தண்ணீரால் சுத்தம் செய்து பூஜிக்க வந்திருந்தார். வாளி நிறைய தண்ணீரைக் கொண்டு வந்து எல்லா இடங்களிலும் தண்ணீரை ஊற்றத் துவங்கினார்.10 ஆண்டுகள் கழித்து குருஜியின் பாதங்களை நீரால் அபிஷேகம் செய்யக் கிடைத்த வாய்ப்பை, மிக மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் பயன் படுத்திக்கொண்டார். பிறகு ஒரு தேங்காயை எடுத்து என் முன் திருஷ்டி சுத்தி விட்டு தரையில் அதை வீசி  சிதறுகாயாக அந்தத் தேங்காயை உடைத்தார். சுற்றியிருந்தவர்கள், அந்தத் தேங்காய் என் கால்களை காயப்படுத்தி விடுமோ என்று பயந்தார்கள் ஆனால் நீங்கள் ஒன்றும் சொல்ல முடியாது. அவர் மகிழ்வோடு இருக்கும் போது (உணர்ச்சி பூர்வமாக அன்பும் பக்தியும் நிறைந்த அவருடைய நிலையில்) அவரைத் திட்டவும் முடியாது.

மக்கள் எல்லா பக்கங்களிலிருந்தும் என் மேல் பூக்களைத் தூவுகிறார்கள். நான் கண்களை மூடி 
அதைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இரவில் சத்சங்கத்தின் போது நான் கறுப்புக் கண்ணாடியும் அணிய முடியாது. பகல் வேளையில் என் கண்களைப் பூக்களிலிருந்து காப்பதற்காக தான் நான் கறுப்புக் க்ண்ணாடி அணிகிறேன்.

இந்தியாவில் ஒரு கிராமத்தில் சாது ஒருவர் தன் ரதத்தில் போவது வழக்கமாக இருந்தது. 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த வழக்கம் இருந்தது. ரதத்தை நன்றாக அலங்கரித்து அதை கொசுவலையால் மூடி வைப்பார்கள். கொசு வலையால் ஏன் மூடி வைத்தார்கள் என்று ஆச்சரியப்படுவேன். அந்த சாதுவை எப்போதும் கொசுவலைக்குப் பின்னால் தான் பார்க்க முடியும். ஏனென்றால் அவருடைய பக்தர்கள் தேங்காயையும் வாழைப் பழங்களையும் கூட அவர் மீது வீசுவார்களாம். (சிரிப்பு !) பக்தர்கள் அவர் கையில் கொடுக்க போட்டி போடுவார்களாம்.
இங்கும் பலருக்கு, அவர்கள் முன்னால் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பதே அவர்கள் கண்ணுக்குத் தெரியாது. எல்லோரையும் தாண்டி, நசுக்கி, அவர்கள் எழுதிய கடிதத்தை என் கையில் தானாகவே கொடுக்க விரும்புகிறார்கள். என்ன செய்வது? இப்படிப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. ஏனென்றால் அன்புக்கு கண் தெரியாது. நான் புகார் செய்ய முடியாது.

நான் இந்த நடத்தையை ஊக்குவிப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் எல்லோரும் நெறி முறைகளை பின்பற்ற வேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கனவே என்னோடு கூட நேரத்தைப் பகிர்ந்து கொண்ட மக்கள் பெரிய கூட்ட நேரங்களில் வரக்கூடாது. சிலர் எப்போதும், கூட்டத்தைத் தள்ளிக்கொண்டு வந்து முன் வரிசையில் அமர்கிறார்கள். புதிய மக்கள் என்னை காண வந்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை. புதிதாக வருபவர்களுக்கு முன் வரிசையில் அமர வாய்ப்புக் கொடுக்க வேண்டும். இது என் இடம்; நான் முன் வரிசையில் தான் அமர்வேன் என்று மக்கள் தலையைத் தாண்டி முன்னே வந்து அமர்வது சரியல்ல.

மற்றவர்களை முட்டித் தள்ளிக் கொண்டு அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து முன் வந்து அமர்பவர்கள் எனக்கு விருப்பமானவர்கள் அல்ல. ஓரிரண்டு பேர் என் பின்னே வராதீர்கள் என்று நான் நூறு முறை சொல்லிய பின்பும் நான் சொல்வதைக் கேட்பதில்லை. எனக்கு அவர்களை அறவே பிடிக்காது. நமக்கென்று ஒழுங்கும் கட்டுப்பாடும் தேவை. சந்தேகமில்லாமல் அன்பு இருக்கிறது. ஆனாலும் ஒழுங்கும் கட்டுப்பாடும் அவசியம்.

பொதுவாக நான் இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லமாட்டேன். நான் சொல்லும் போது சிலர் செவி கொடுத்துக் கேட்பதில்லை. அவர்கள் செய்வதையே செய்து கொண்டிருக்கிறார்கள். நான் எல்லோருக்கும் பூரண சுதந்திரம் தருகிறேன். அவர்கள் மேல் எந்தக் கட்டுப்பாட்டையும் திணிப்பதில்லை. அதனால் தான் என்னிடம் வருபவர்களிடம், “தேர்ந்தெடுப்பது நீ; ஆசிர்வதிப்பது நான் “ என்று சொல்வேன். மற்றவரின் உணர்வுக்கு மரியாதை கொடுத்து பொது இடத்தில் மற்றவர்களை தொந்தரவுக்கு உள்ளாக்கக் கூடாது.

99.9 % மக்கள் ஒழுங்கு முறையைப் பின்பற்றுகிறார்கள். யாரோ ஓரிரண்டு பேர்களின் நடவடிக்கை சரியாக இருப்பதில்லை. இவர்கள் காவலர்களோடு வாக்குவாதம் செய்கிறார்கள். நாம் அதிர்ஷ்டம் செய்தவர்கள் தான். நம் சத்சங்கத்துக்கு வரும் பக்தர்கள் ஒழுங்கு முறையை அறிந்தவர்கள். எல்லோரும் ஒழுங்காக நடந்தால் காவலர்களுக்கு அவசியமே இல்லை. நான் வெளியே செல்லும் போது பாதுகாப்புக் கேட்பதில்லை. இருந்தாலும் அரசாங்கம் நூறு போலீஸ்காரர்களையும், சில சமயம் துப்பாக்கி ஏந்திய காவலர்களையும் என் பாதுகாப்புக்காக அனுப்புகிறது.

என்னோடு பயணம் செய்பவர்கள் நினைவில் வைப்பது அவசியம். பெரிய கூட்டங்களில் சில திருடர்களும் நுழைந்து விடுகிறார்கள். மக்களுடைய பர்ஸ், செல்ஃபோன்கள் முதலியவற்றை திருடி விடுகிறார்கள். ஒரு முறை நான் ஒரு பக்தருடைய வீட்டுக்குச் சென்ற போது, யாரோ ஒருவர் என் செல் ஃபோனைத் திருடி விட்டார். அப்போது 30 பேர்கள் தான் இருந்தார்கள். நான் அவர்களோடு பேசிக் கொண்டிருந்த போது, அழையா விருந்தாளியாக யாரோ ஒரு திருடன் என் ஃசெல்போனைத் திருடி விட்டான். மற்றவர்கள் தங்கள் செல்ஃபோன்களைத் தொலைத்த விவரத்தைப் பல முறை கேட்டிருக்கிறேன். இந்த முறை பஞ்சாபில் என்னுடைய செல்ஃபோனும் தொலைந்து விட்டது. அதுவும் ஒரு பக்தரின் வீட்டில் மிகச் சில பேர்கள் கூடியிருக்கும் இடத்தில் தொலைந்து விட்டது. அந்த பக்தர் என்னைப் பார்க்க வருபவர்களைத் தடுத்து நிறுத்த முடியாது. யார் வீடாக இருந்தாலும் ஒருவரோடு ஒருவர் சேர்ந்தவர்களாக மக்கள் என்னைப் பார்க்க வருகிறார்கள்.

நிறைய யெஸ்ப்ளஸ் மாணவர்கள் தங்கள் செல்ஃபோன்களை திருட்டுக் கொடுத்திருக்கிறார்கள். அதனால் தான் அவர்கள் தங்கள் பொருட்களைப் பாதுகாப்பாக வைக்கவேண்டும் என்று சொல்வேன். இங்கு யாராவது திருடுவதைப் பார்த்தால் நீங்கள் அவரைப் பிடித்து போலீஸில் ஒப்படைக்க வேண்டும். சத்சங்கம் நடக்கும் இடங்களில் திருடர்களுக்கு திருட நிறைய வாய்ப்பு இருக்கிறது. மக்கள் பேரானந்த நிலையில் கண்களை மூடி தியானத்தில் இருக்கும் போது அவர்களுடைய உடைமைகள் மேல் கவனம் இருக்காது. எனவே திருடர்கள் பர்ஸ், செல்ஃபோன் மற்றும் பாஸ்போர்ட் முதலியவற்றை திருடிச் செல்கிறார்கள். எனவே நாம் கவனமாக இருப்பது அவசியம்.

கே: யோக சூத்திரத்தில் “யோகம் மனதில் எண்ணங்களின் சலனத்தை கட்டுப்படுத்தும்“ என்று சொல்லப்படுகிறது. மனதில் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவதால் எப்படி சுதந்திரம் கிடைக்கும்?

குருதேவர்: மனம் உன்னை பந்தத்தில் சிக்க வைக்கிறது. மனம் பொருட்களின் மேல் உன் கவனத்தைத் தக்க வைக்கிறது. அல்லது கனவுலகில் பொருட்களைப் பார்க்கிறாய். உறங்கும் போது வந்த கெட்ட கனவு கலைந்து எழுந்த போதும் மூச்சு வாங்குவதை உணர முடிகிறது. ஏனென்றால் கனவில் ஏதோ பயங்கர அனுபவத்தைப் பார்த்திருக்கிறாய். அது ஒரு கனவு தான் என்று அறியும் போது அந்த அனுபவத்திலிருந்து நீ விடுதலை அடைகிறாய். எனவே மனம் தான் பந்தத்துக்குக் காரணம். அதே மனம் விடுதலைக்கும் காரணமாக இருக்கிறது.

கே: நம் நாட்டில் வழங்கும் சாதி வித்தியாசங்களைக் கண்டு மிகவும் குழப்பமடைகிறேன். நான் உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் பிராமண வகுப்பைச் சேர்ந்தவள். வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரைக் காதலிக்கிறேன். என் தந்தை இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். நான் என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: இதனால் விளையப் போகும் நன்மை தீமைகளை ஆராய்ந்துபார். இந்தத் திருமணத்தால் பெரிய குழப்பம் அல்லது கலவரம் நிகழ வாய்ப்பிருந்தால் குடும்பத்தில் எல்லோரும் அழுது, சத்தம் போட்டு பெரிய நாடகம் நடக்குமென்றால், சிந்தித்துப் பார். இந்தத் திருமணம் அவசியமா என்று யோசித்துப் பார். அவர்கள் சம்மதித்தால் திருமணம் செய்து கொள். இந்த இரண்டில் ஒரு வழியில் தான் செல்லமுடியும்.

பொதுவாக பிராமணர்களுக்குக் கவலை தரும் விஷயம் உணவுப்பழக்கம் மற்றும் கலாசாரத்தை பற்றியது. பிராமணர்கள் சைவ உணவு உண்பவர்கள். மற்ற இனத்தவர்களில் பொதுவாக அசைவ உணவுப் பழக்கம் இருக்கும். என் பெண்ணின் புகுந்த வீட்டார் அசைவ உணவு சாப்பிடுவதை எப்படி ஏற்க முடியும் என்று நினைக்கலாம். இப்படிப்பட்ட தடைகள் எழக் கூடும். எனவே நீ அவர்களோடு பேசி, உன் வழக்கங்களையும், மதிப்புக்குரிய விஷயங்களையும் மாற்றிக் கொள்ளாமல் வாழ்க்கை நடத்த முடியும் என்றும், உன் புகுந்த வீட்டிலும் உன் நல்வழக்கங்களை அறிமுகப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை உறுதிப் படுத்தி அவர்களை இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கலாம்.
அவர்கள் மகிழ்ச்சியோடு சம்மதித்தால், மேலே செல்லலாம். அப்படி இல்லையென்றால், நன்மை தீமைகளை ஆராய்ந்து, தங்கள் கலாசாரத்தைக் காப்பாற்ற உன் பெற்றோர் எவ்வளவு பிடிவாதமாக இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டு தீர்மானம் செய். நடு வழியில் செல்வது நல்லது. என் வழி தான் சரியான வழி / ஒரே வழி என்று நினைக்காமல் விட்டுக் கொடுக்க வேண்டும்.

கே: குருதேவா ! இந்தியாவின் மேன்மைக்காக வாக்களிக்கும் படிச் சொல்கிறீர்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் யாருமே வாக்கைப் பெறத் தகுதியில்லாமல் இருப்பதாக நினைக்கிறேன். குழப்பமாக இருக்கிறது. போட்டியிடும் கெட்டவர்களில் ஓரளவுக்குக் குறைந்த கெட்டகுணம் உள்ளவரைத் தான் தேர்ந்தெடுக்க முடியும். என்ன செய்யலாம் ?

குருதேவர்: நீ சொல்வது சரி தான். இந்த முறை குறைந்த அளவில் லஞ்ச ஊழல் செய்பவரை நீ தேர்ந்தெடுக்கலாம். இன்னும் 5 வருடங்களில் எல்லா இளைஞர்களும் ஒன்று சேர்ந்து யோசித்து ஒரு நல்ல அரசை தேர்வு செய்ய முடியும். தற்சமயம் மாற்றம் அவசியம். அதிக லஞ்ச ஊழலில் ஈடுபடாத மனிதர்களைப் பார்த்து வாக்களிக்க வேண்டும். பதவிக்கு வந்த பின் அந்தக் கட்சிக்காரர்களும் லஞ்சத்தில் ஈடுபட்டால், அவர்களைப் பதவி விலகும்படி செய்யலாம். ஆனால் தற்சமயம் அவர்களை நிராகரிக்கக் கூடாது.

கே: திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகச் சொல்லப் படுகிறது. அப்படி இருக்கும் போது, சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் இந்த பூமியில் நரகமாக மாறுகிறது ?

குருதேவர்: இது ஒரு பேதம். ஞானம் எதிர்மறைத் தத்துவங்களாக வருகிறது. எப்படி ஒரு குழந்தையை ஒருவர் மட்டும் உருவாக்க முடியாதோ, நரகத்தையும் ஒருவரால் மட்டும் உருவாக்க முடியாது. சொர்கமோ, நரகமோ? இவற்றை உருவாக்க இருவர் அவசியம்.