வாழும் காலம் - மிக குறைவே

பிப்ரவரி 09, 2014

பெங்களுரு, இந்தியா


கேள்விகளும் - பதில்களும்  
   
கே: குருதேவ்! நான் உங்களுக்கு ஒரு கேள்வியை வைத்திருக்கிறேன். பெண்களிடம் மிகப்பெரிய அளவில் ஆன்மிக மற்றும் நடைமுறைக்கேற்ற சக்திகள் உள்ளன என்பதை நான் நன்கு அறிந்துள்ளேன். ஆனால் அந்த சக்தி எங்களுக்குள் மறைக்கப்படுகிறது என்பதையும் நான் அறிவேன்.  நாகரிக பண்புள்ள தற்கால பெண்கள் எப்படி இந்த சக்திகளை வெளிக்கொண்டு வருவர்? (பெட்ரா ப்ரிகநோவிக்: (குரோஷியா - சூப்பர் மாடல்))

குருதேவ்: முதலில், ஆன்மிகம் என்பது வெளியிலே இருந்து நமக்கு உள்ளே வரவேண்டிய  ஒன்று அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் ஒரு பொருளினாலும், ஆன்மாவினாலும் ஆக்கப்பட்டவர்கள். நம் உடல் மாவுச்சத்து, புரதச்சத்து, அமினோ அமிலம் போன்றவற்றால் ஆக்கப்பட்டது. நம் ஆன்மா இரக்கம், அக்கறை, அன்பு, பொறுப்பு மற்றும் இவைகளுடைய சிதைவுகளான கோபம் போன்றவற்றால் ஆக்கப்பட்டது. மனித நேயங்களை வளர்க்க உங்களிடம் உள்ள இந்த அனைத்து குணங்கள் தான் ஆன்மிகம் எனப்படுவது. வாழ்க்கையை, வெறும் எலும்பினாலும் சதையாலும் ஆக்கப்பட்டவன் அல்ல,  ஒரு தீப்பொறி போன்ற சக்தி என்னும் ஒரு பரந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பது போன்றது. நான் அன்பின் நீரூற்று, நான் உணர்ச்சிகள், நான் அறிவுத் திறன், நான் எண்ணங்கள். நம் உள்ளுணர்வின் இந்த அடையாளங்கள் தான் ஆன்மிகம் என்பது.

உங்களுக்குள்ளே இருக்கும் ஆன்மிகத்தை வெளிப்படுத்த அதிக நேரம் தேவைப்படாது. நீங்கள் உங்கள் வாழ்க்கையை ஒரு பெரிய கண்ணோட்டத்துடன் பார்த்தாலே போதும். இந்த கிரகத்தை பாருங்கள்! எவ்வளவு பெரியது!. இந்த கிரகம் பல லட்சம் நூற்றாண்டுகளாக இருந்து கொண்டிருக்கிறது. இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது 70 அல்லது 80 என்பது ஆண்டுகளே வாழப்போகும் நம்முடைய வாழ்க்கையின் அளவு எவ்வளவு? நம்முடைய வாழ்க்கையை இந்த விண்வெளி மற்றும் காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், நம் வாழ்வு எவ்வளவு சிறியது என்று தெரிந்து கொள்ளலாம். அதே நேரத்தில் நாம் ஆழ்ந்த தியான நிலையில் சென்று பார்க்கும் போது நாம் காணலாம். ஆஹா! நமக்குள் எவ்வளவு சக்தி உள்ளது? நான் இந்த அழகான சக்தி ஆவேன். என்னுடைய எண்ணங்களுக்கு சக்தி உள்ளது. என்னுடைய உணர்ச்சிகளுக்கு சக்தி உள்ளது.  மற்றும் நான் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு பகுதியாக இருக்கிறேன்.

நான் இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களிலும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்ற உணர்வு தான் மிகச்சரியாக ஆன்மிகம் எனப்படுவது. இந்த பிரபஞ்சத்துடன் உள்ள அந்த இணைப்பு உங்களுக்கு ஒரு மாபெரும் வலுவைக் கொடுக்கும்.    

கே: மூன்று குழந்தைகளுக்குத் தாயான நான், சிறுமியர் மற்றும் பெண்களுக்கு என்னுடைய மகன் உரிய மரியாதை அளிக்கக் கற்றுக்கொடுக்கும் மிகச் சிறந்த வழி என்ன என்று என்னையே கேட்டுக் கொள்வதுண்டு. எனவே, ஒரு தாய், தனது  மகனுக்கு எப்போதும் பெண்களைக் காத்து, அவர்களை மதிப்பளித்து மிக நல்ல முறையில் நடத்துவது எப்படி என்று கற்றுக்கொடுக்கச் சிறந்த வழி என்ன என்று தங்களைக் கேட்க விரும்புகின்றேன். அப்போது ஒரு சிறுவன் நல்ல ஆணாக வளருவான், தற்போது சமுதாயத்திலுள்ள வன்முறை அகன்று விடும் அல்லவா? (மரினா ஸ்படபோரா (இத்தாலியிலிருந்து நாகரீக உடை வடிவமைப்பாளர்)

குருதேவ்: இந்தக் கேள்விக்கு விடை அளிக்கும் தகுதி எனக்கு இல்லை. ஏனெனில் திருமணம் மற்றும் பெற்றோர் பருவம் இவற்றில் எனக்கு அனுபவம் இல்லை. ஆயினும் எனக்கு ஒரு கருத்து உள்ளது. என்னுடைய பார்வையில் ஒரு தாய் தன்னுடைய மகனிடம் ஓரளவே செல்வாக்குப் பெற முடியும். கீழ்படியாத குழந்தையை தாயினால் கட்டுப்படுத்த முடியாது.  ஆனால் ஒரு நல்ல அத்தையால் அது முடியும். ஆகவே, ஒரு நல்ல தாயாக இருக்க விரும்பினால் உங்கள் 
குழந்தைகளின் நண்பர்களுக்கு நல்ல நண்பராக இருங்கள். உங்கள் குழந்தைகளின் நண்பர்கள், உங்கள் குழந்தைகளை விட மிக நல்ல முறையில் நீங்கள் சொல்வதைக் கேட்பார்கள். இந்தியாவில் ஒரு சொல்வழக்கு உண்டு. மாங்காய் பறிக்க வேண்டுமென்றால், மாங்காயில் கல்லடிக்கக் கூடாது, கிளையில் கல்லெறிய வேண்டும், அப்போதுதான் மாங்காய் விழும். மாங்காயில் கல்லெறிந்தால், அது நசுங்கி அதன் சாறுதான் கிடைக்கும். எனவே மாங்காய் வேண்டுமென்றால் அதை மறைமுகமாகத் தான் அடைய வேண்டும்.

அது போன்று, உங்கள் குழந்தைகளிடம் செல்வாக்குப் பெற வேண்டுமாயின்,அவர்களது நண்பர்கள் வட்டத்தைப் பிடிக்க வேண்டும். நண்பர்கள் நீங்கள் கூறுவதைக் கவனிக்கும் போது, உங்கள் குழந்தைகள் தாமாகவே நீங்கள் அறிவுறுத்தும் பாடத்தை ஏற்பார்கள். எனவே, உங்கள் குழந்தைகளை பற்றிக் கவலைப்படுவதை நிறுத்தி, சமுதாயத்திலுள்ள பிற குழந்தைகளின் மீது கவனம் செலுத்துங்கள். பலர் இவ்வாறு செய்து வெற்றி அடைந்திருக்கின்றார்கள்.

கே: குருதேவ்! தற்காலக் குழந்தைகள் கைபேசிகள், ஐபாட் , கணிப்பொறி இவற்றை மிகவும் சார்ந்திருக்கின்றார்கள். குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் கூட இவ்வாறு இருக்கின்றார்கள். அவர்களது கைபேசிகள் இல்லையென்றால், ஒரு தொலைபேசி எண்ணைக் கூட நினைவில் கொண்டு வர முடிவதில்லை. எல்லாமே அக்கைபேசியில் அடக்கப்பட்டு விட்டதால், அதை மிகவும் சார்ந்து, அது இல்லையென்றால், செயலிழந்து விடுகின்றார்கள். குழந்தைகள் தானாக முன்னேறுதல்,   உழைத்துக் கல்வி கற்றல்,   இவற்றில் ஈடுபட வில்லைஎன்றால், இத்தகைய ஐபோன், ஐபாட் ஆகியவற்றின் பயன் என்ன? யாருமே பாடல்கள், பாட்டுக்கள் பாட, புத்தகங்கள் எழுத முன் வரவில்லையென்றால், வாழ்கை எப்படி இருக்கும்? இக்குழந்தைகளைப் பற்றி நான் மிகவும் கவலையுற்றிருக்கின்றேன். (ஆஷா போஸ்லே: (இந்தியப் பின்னணிப் பாடகி)

குருதேவ்: ஆம் ஆஷாஜி! நீங்கள் கூறுவது மிகவும் சரியானது. சாதாரண எண்ணிக்கையை கூட மக்கள் மறந்து விட்டார்கள். உங்களுக்கு சுவாரஸ்யமான ஒரு செய்தியை கூறுகின்றேன். இங்கு நமது ஆஸ்ரமத்தில் தங்கி இருப்பவர்களுக்கு நம்பர் வகைபடுத்தும் பூட்டுக்களை கொடுக்கின்றோம். பல சமயங்களில் அவர்கள் அதை மறந்து விட்டு சுலபமான எண்ணிக்கை கூட்டுள்ள பூட்டுக்களைத் தருமாறு கேட்கின்றார்கள். அது அவ்வளவு கடினமானதா என்ன?

நமது மூளைக்கு வேலை இல்லையென்றால் படைப்புத் திறன் மலருவதற்கு இடம் இருக்காது.   அப்போது அது துருப்பிடித்து விடும். நவீன நுட்பக் கருவிகளால், மூளை துருப்பிடித்து விட்டது.
இந்நவீனக் கருவிகள் தேவைதாம், நம்மிடமும் இருக்கின்றன. ஆயினும் படைப்புக்கள் உருவாக வேண்டும். அவ்வப்போது, ஓரிரு நாட்கள் தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்த முடிவு செய்ய வேண்டும்.  ஒரு வாரம் தொலைக்காட்சி இல்லாத வாரம் என்று பின்பற்றுங்கள். அதை நீங்கள் முழுமையாக பின்பற்றினால், குழந்தைகள் சிறிதளவாவது அதைப் பார்த்து கவனிப்பார்கள். இல்லையெனில், அவர்கள் தங்கள் கவனம் முழுவதையும் அவற்றில் செலுத்தி தங்கள் சிறிய மூளைகளில் பதிவு செய்து கொண்டு பிற விஷயங்களில் ஈடுபட முடியாமல் இருக்கின்றார்கள். இது கவலைக்குரிய விஷயம்.

பலவிதமான கவனக்குறைவு நோய்க்குறிகள் ஏற்படக் காரணம் தாய் தந்தை தங்கள் குழந்தைகளை தொலைக்காட்சியின் முன்னர் அமர்த்தி விட்டு தங்கள் வேலைகளில் கவனம் செலுத்துவதுதான். மூன்று அல்லது நான்கு வயதுள்ள குழந்தை மூன்று மணி நேரம் தொலைகாட்சி பார்த்தால் என்ன ஆகும்? மனித மூளைக்கு ஒய்வு, இளைப்பாறுதல் மிகத் தேவை, அப்போது தான் படைப்பாற்றல் நிகழ முடியும்.

கே: குருதேவ்! எல்லா சமய நிறுவனங்கள் மற்றும் நடைமுறைப் பழக்கங்களில், பெண்களுக்கு இறைத்தொழிலில், பங்கேற்க அனுமதி இல்லை. பெண்கள் கெட்டவர்கள் அல்லது இரண்டாம் பட்சமானவர்கள் என்று கருதப்படாவிட்டாலும் கூட பூஜைகள் செய்யவோ, புரோகிதர்களாக ஆகவோ முடிவதில்லை. எனவே என் கேள்வி என்னவென்றால், தாங்கள் இதை நியாயமற்ற நடைமுறைப் பழக்கமாக கருதுகின்றீர்களாஇதை மாற்றுவது அவசியம் என்று எண்ணுகின்றீர்களாஆம் என்றால் எவ்வாறுஅர்பின் கல்பயான் (அமெரிக்காவிலுள்ள மனித உரிமை சேவையாளர்)

குருதேவ்: நான் இந்த விஷயத்தில் புரட்சியாளன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம உரிமை உண்டு. இங்கு ஆஸ்ரமத்தில் பெண்களும் பூஜை செய்யலாம். எல்லா விதமான சடங்குகளிலும் கலந்து கொள்ளலாம். புரோகிதர்களாகவும் ஆகலாம். உங்களுக்கு அவ்வுரிமை உண்டு. சமய நூல்களில், இது வரை நான் கற்றதில், எனக்குத் தெரிந்த வரையில், பாலின பாரபட்சம் எங்கும் குறிப்பிடப்படவில்லை. எனவே, பெண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது உரிமையான இடத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். யாரையும் உங்களுக்கு அதை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

கே: குற்றங்கள் மற்றும் எதிர்மறையான செயல்களை மீடியா வெளியிடும் போது அவர்களுடைய பொறுப்பு என்ன? நாங்கள் வித்தியாசமாக என்ன செய்ய வேண்டும்? தணிகா கிரே: (சி என் என் செய்தி ஆசிரியர்)

குருதேவ்: மீடியாவிற்கு இரண்டு முக்கியமான பங்கு இருக்கிறது என்று நினைக்கிறேன்.  ஒன்று மக்களுக்கு விஷயங்களை அப்படியே சொல்வது.அதே நேரத்தில் மக்களுக்கு எதிர்காலத்தில் நம்பிக்கையை உருவாக்குவது.இப்போது இருக்கும் நிலைமை வருத்தத்திற்கு உரியது. மீடியா மேலும் வருத்தம் ஏற்படாமல் இருக்க பொறுப்போடு இருக்க வேண்டும். அவர்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்.

கலவரம், நெருக்கடி, போர் நிலைமையிலும் நம்பிக்கை இருக்கிறது. இந்த உலகத்தில் நல்ல செயல்கள் செய்யகூடிய மனிதர்கள் உள்ளார்கள். இவர்களை பற்றி எடுத்து கூற வேண்டும். இல்லாவிடில் நல்ல செய்திகள் இருப்பதில்லை. மோசமாக இருப்பதால் வாழ்க்கையில் நம்பிக்கை இழந்து விடுகிறார்கள். மக்கள் இந்த உலகத்தை மோசமானது என்றோ, நம்பிக்கை இல்லாமலோ இருக்க முடியாது. செய்திகளில் விடாமல் இந்த மாதிரி செய்திகள் வந்தால் தான் ஆகும். எனவே மீடியா உண்மையை மக்களுக்கு கூறி, நடு நிலைமை வகித்தல் வேண்டும்.

கே: குருதேவ்  இப்பொழுது மீடியா மிக முக்கியமாக ஏலேக்ட்ரோனிக் மீடியாவும் எழுத்து மீடியாவும் நல்லது பண்ண வேண்டும் என்ற பொறுப்பை சரியாக பண்ணவில்லையோ என்று எண்ண தோன்றுகிறது. உண்மையை  உள்ளது போல் தெரிவிக்க வேண்டியது அவசியம், ஆனால்  அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த காரணத்திற்காக ஒரு நொடி நேரம் அந்த உண்மையை தியாகம் செய்தால் அவர்கள் நாட்டுக்கு நல்லது செய்யவில்லை என்று நினைக்கிறேன். பொது நலத்திற்காகவும் ,மனித வள மேம்பாட்டிற்க்காகவும், சுற்றுப்புற சூழ்நிலை மேம்பட்டு உலகம் வாழ்வதற்கு ஒரு நல்ல இடமாக ஆக உங்களுடைய உபதேசம் என்ன?

பயங்கரவாதத்தைப் பற்றி  நிறைய அறிக்கை வருகிறது. ஆனால் சுகாதாரமின்மையால்   மக்கள் இறக்கிரார்களே அதைப்பற்றிய அறிக்கைகள் வருவதில்லை. இந்த விஷயத்தில் உங்களுடைய அறிவுரையும் ஆசீர்வாதமும் மிக முக்கியமானது. (டாக்டர் ப்ரீத்தா ரெட்டி (தலைமை பொறுப்பாளர் அபோல்லோ மருத்துவமனை)

குருதேவ்: நீங்கள் சொல்வது சரி. நாம் ஒரு ஒரு கற்பனை உலகத்தில் சிக்கி இருக்கிறோம். நாம் உண்மையான உலகத்திற்கு வருவதில்லை. பல குழந்தைகள் இப்பொழுது பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் நண்பர்களை கொண்டுள்ளார்கள்.நேருக்கு நேர் சந்தித்து பேசுவது என்பது குறைந்து விட்டது. இது மாற வேண்டும். கற்பனை உலகத்தில் இல்லாமல் உண்மையான உலகத்தில் மனிதர்கள் தொடர்பு அதிகம் ஆக வேண்டியது அவசியம். நான் மீடியாவின்  மேல் எல்லா குறைகளையும் கூற மாட்டேன். மீடியாவிற்கு பங்கு உள்ளது ஆனால் ஜனநாயகத்தின் வெவ்வேறு தூண்களான பொது நல சேவை அமைப்புகள்(NGO’s), பொது துறை நிறுவனங்கள், அரசாங்கம், நம்பிக்கை அடிப்படையிலான நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல் பட வேண்டும். அப்போது தான் சமுதாயம் ஆரோக்யமாக இருக்கும்.

எனவே சமுதாயத்தின் ஆரோக்யத்திற்கு மருத்துவர்கள் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும். மாதத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் தங்கள் ஓய்வில்லாத வேலையில் இருந்து விடுபட்டு கிராமங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும்.அப்போல்லோ மருத்துவமனை இதை செய்கிறது. சமீபத்தில், தமிழ் நாட்டில் 5 லட்சம் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பாரதியார் பாடல்கள் பாடி, பெண் கல்விக்கான பிரதிக்ஞை எடுத்து கொண்டார்கள். இதனால் எல்லோரும் ஒன்றாக பாடவும் பேசிக்கொள்ளவும் முடிந்தது.

இளைஞர்கள் நாட்டுப்பற்று பாடல்கள் ஒருசேர பாடும்பொழுது சமுதாயத்திற்கு நல்லது பண்ண வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது. அதுவே ஒரு மாற்றத்தை உண்டாக்குகிறது. அதனால் இதை போன்ற கலை நிகழ்ச்சிகள்  பெரிய அளவில் செய்தால் அதுவே ஒரு விழிப்பு உணர்ச்சியை கொடுக்கும். இதே நிகழ்சிகளை சிறிய அளவில் தொகுதிகளில் செய்தால் அதுவே மிக பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.

கே: ஓமானில் உள்ள மகளிருக்கு நல்ல ஆற்றலும் அதிகாரமும் உள்ளது. இருந்தாலும் ஓமானில் சில இடங்களில் மகளிர் முன்னேற தடையாக உள்ளனர். இந்த தடங்கல்களுக்கு இடையே எப்படி முன்வந்து வளமாக இருக்க முடியும்? (மேன்மைதங்கிய ஜரா பின்: (ஓமன்)

குருதேவ்: பெண்கள் தங்களுக்கிடையே பேசி அதிகாரத்தையும், கல்வியும் கொடுப்பதற்கான வழி முறைகளுக்கு தீர்வு காண வேண்டும். முதலில் படிப்பினை. பின்பு பெண்களுக்கு உரிமையை எதிர்ப்பவர்களிடம் பேச்சு வார்த்தை. சில சமயம் இது முடியாது என்று தோன்றும். இருந்தாலும் பேச்சு வார்த்தையை தொடர வேண்டும் என்று நம்புகிறேன். பெண் தலைவர்கள் முதல் படி எடுத்து வைப்பதை நிறைய மக்கள் விரும்புகிறார்கள். போகபோக மக்கள் மேலும் உதவி செய்வார்கள். அங்கு உள்ள இயல்பான நிலைமை என்ன என்று எனக்கு தெரியாது. இருந்தாலும் பெண்களின் குழுக்கள் மேலும் வளர்ந்து அதிகாரத்தை மேற்கொள்ள வேண்டும்.

மத போதனைகளோடு, பரந்த அடிப்படையிலான கல்வி தேவை. ஒவ்வொரு குழந்தையும் உலகத்தில் உள்ள எல்லா மதத்தை பற்றியும் சிறிதளவாவது அறிந்து கொண்டால் "எனது மதம்தான் உயர்ந்தது, சொர்க்கத்தை அடைய ஒரே வழி" என்ற எண்ணம் ஏற்படாமல் வளர்வார்கள். அவர்கள் எல்லா நம்பிக்கைகளுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். பெண்களுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும். மாற்று கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.

நாம் இந்த உலகத்தில் இருக்கக்கூடிய குறுகிய வாழ்நாளில் வேற்றுமைகளை ஏற்று குதூகலமாக வாழ்வோம். நீங்கள் அவ்வாறு நினைக்கவில்லையா?