விடுதலையை நோக்கிய பாதை

பிப்ரவரி 28, 2014 

பெங்களூரு, இந்தியா


கேள்வி - பதில்

குருதேவ், திவ்ர சம்வேகனம் அசன்னஹா’ (எந்த வித பதட்டமும் இல்லாமல் முழுமனதுடன் விடுதலையைத் தேடுபவர் விடுதலையை விரைவில் அடைகிறார்) என்று யோக சூத்ராவில் கூறப்பட்டிருக்கிறது. விடுதலை அடைய தேவை ‘வேகமா’ அல்லது ‘அமைதியா’?

குருதேவ்: வேகம் தேவைதான். ஒன்று நமக்கு தேவையென்றால் நாம் அடிக்கடி சொல்வது, ‘இன்ஷா அல்லாஹ்!’ (உருது வாக்கியமான இதற்கு ‘கடவுள் விருப்பமிருந்தால்’ என்று பொருள்), அதாவது கடவுள் இதுதான் சிறந்தது என்று எண்ணினால் இது நடக்கட்டும். ஆனால், நமக்கு ஒரு கார் அல்லது வேலை வேண்டுமென்றால், நமது முழு கவனமும் போட்டு அதை உடனே அடைய செயல்படுகிறோம். ஆனால் மற்ற விஷயங்களுக்கு, கடவுள் விருப்பமிருந்தால் நிறைவேறட்டும் என்று விட்டுவிடுகிறோம்.

ஆச்ரமதிற்கு போக வேண்டுமா, குருதேவ் விரும்பும் போது என்னை அங்கே அழைப்பார், என்று வசதியாக சொல்லிவிடுகிறீர்கள். உங்களை எப்போது வர வேண்டாம், இங்கு வந்து தியானம் செய்ய வேண்டாம் என்று நான் சொல்லியிருக்கிறேன், ஆனால் அழைப்பு வரும் போது நான் அங்கே இருப்பேன் என்று சொல்லிகிறீர்கள். ஒரு திரைப்படம் செல்லவேண்டும் அல்லது அருமையான உணவகங்களுக்குப் போக வேண்டுமா, கடவுள் அழைத்தால் போகிறேன் என்று சொல்வதில்லை. உங்கள் மகிழ்ச்சிக்கு உங்கள் விருப்பப்படி உடனே செயல்படுகிறீர்கள், ஆனால் ஆன்மீகப் பயிற்சிகளுக்கோ கடவுளுக்கு விருப்பமிருந்தால் நிறைவேறட்டும் என்று விட்டுவிடுகிறீர்கள். 

உங்கள் மனம் இதை புத்திசாலித்தனமாக செய்து கொள்கிறது. வாழ்க்கையில் உங்களுக்கு என்ன தேவையிருந்தாலும் அதை உங்கள் விதியிடம் அல்லது வினைப்பயனிடம் விட்டு விடுங்கள். ஆனால் உங்கள் விடுதலை என்பது உங்கள் புருஷார்தத்தை, அதாவது உங்கள் முயற்சியைப் பொறுத்தே இருக்கிறது.

குருதேவ், எதிரெதிரான மதிப்புகள் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கின்றன என்றால், அதிகமான மக்கள் தியானம் செய்வதன் விளைவால், அதிகமான மக்கள் எதிர்மறை குணங்களான பொறாமை மற்றும் வன்முறையில் ஈடுபடுவார்களா?

குருதேவ்: சொல்ல முடியாது, அப்படியும் இருக்கலாம் (சிரிப்பு). எல்லாவிதமான எதிர்மறை உணர்வுகளும் அன்பின் திரிந்த நிலை. அன்பிலிருந்து பிறந்தவையே. அன்பு இல்லையென்றால் பொறாமையும் இருக்காது. பொறாமை இருந்தால் அன்பு இருக்கிறது என்று பொருள்.ஆணவம் என்பது தன் மீதே அதீத அன்பு கொண்டிருப்பது. பொறாமை என்பது மற்றவர் மீது அதிக அன்பைக் கொண்டிருப்பது. கோபம் என்பது அடுத்தவர் மீதோ அல்லது ஒரு பொருள் மீதோ அதீத அன்பைக் கொண்டிருப்பது. பேராசை என்பது ஒரு பொருளின் மீது அதீத அன்பு வைத்திருப்பது. கோபம் என்பது தன் கருத்தின் மீது தன்னுடைய கொள்கை மீது அதீத அன்பு கொண்டிருப்பது. கோபம் கொண்ட ஒருவர் நினைப்பார், ‘எல்லா விஷயங்களும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்’, அவை அப்படி இல்லாவிட்டால், கோபம் கொள்கிறார். எனவே, எல்லாவித எதிர்மறை குணங்களும் அன்பின் ஒரு திரிந்த நிலையே.

குருதேவ், அமைதிதான் நாம் இயல்பு என்றால், வன்முறை எதனால் எழுகிறது?

குருதேவ்: பலவீனம் அல்லது பயம் தான் வன்முறைக்கான மூலக் காரணம். அழிக்கப்படுவோமோ அல்லது மறுக்கபடுவோமோ என்ற பயமே வன்முறையை விளைவிக்கிறது. மன அழுத்தமும் வன்முறைகுக் காரணம். மன அழுத்தமும் ஒரு வகையான பலவீனமே. மன அழுத்தம் அல்லது பலவீனம் மற்றும் சோர்வும் வன்முறையை ஏற்படுத்துகிறது. தன்னுடைய வலிமையைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமை வன்முறையை ஏற்படுத்துகிறது. வன்முறை ஏற்படுத்துபவைப் பற்றி யோசித்தால் ஒரு முழு பட்டியலே தயார் செய்யலாம். பற்று வைப்பதும் கூட வன்முறையை உண்டாக்கும். ஞானமற்ற அதீத பற்று வன்முறைக்குக் காரணம். 

செய்திதாள்களில் இந்தக் கதைகளெல்லாம் பார்க்கலாம். தொடக்கத்தில் ஒருவர் மீது ஒருவர் அன்பு வைத்திருந்து, பிறகு ஒருவர் மீது ஒருவர் வன்முறையாய் நடந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கொலை செய்வதில் போய் முடிகிறது. இதையெல்லாம் கேள்விப்பட்டதில்லை? உலகம் முழுதும் இப்படி அன்பாய் இருந்துவிட்டு ஒருவரை ஒருவர் குத்திக்கொன்ற கதைகளைக் கேட்கிறோம். நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே ஞானம் என்பது அத்தியாவசியம். வெறும் அன்போ அல்லது அதீதப் பற்றோ போதாது. ஞானமில்லாத அன்பு துயரம் தான். நீங்கள் ஞானமில்லாமல் ஒரு சமான நிலையில் இல்லாமலிருந்தால் அது வன்முறையை உண்டாக்கலாம். ஆனால் நீங்கள் எதிலாவது முழுமையான அற்பணிப்பில் இருந்தால், அது வேறு. அப்போது நீங்கள் ஞானத்தை இழப்பதில்லை.

குருதேவ், மக்கள் உங்களிடம் அதீதப் பற்று வைத்துவிடக்கூடிய தொழில்முறை ஆபத்துகள் இருக்கிறதா? அதை எப்படி சமாளிக்கிறீர்கள்?

குருதேவ்: இதை பற்றி என்னிடம் கேட்கவே கேட்காதீர்கள்! (சிரிப்பு)  பலவகையான தொழில் முறை ஆபத்துகள். பலமுறை, நான் நடந்து கொண்டிருக்கும் போது பின்னாலிருந்து யாராவது என் காலைப் பிடிப்பார்கள். கீழே விழாமல் நான் சமாளித்தாக வேண்டும். பாருங்கள், இப்போது எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள், நான் எழுந்து செல்லும் போதும் அப்படியே உட்கார்ந்திருக்க வேண்டும். யாரும் எழுந்து ஓடக்கூடாது. யாரும் கேட்பதில்லை.

நீங்கள் எல்லோரும் எழுந்திருக்கும் போது தான் திருடர்களுக்கு இடம் கொடுக்கிறீர்கள் என்று எப்போதும் சொல்லி வருகிறேன். அவர்கள் குழுவாக வருகிறார்கள். ஒருவர் அதிக பக்தி உள்ளது போல காண்பித்துக் கொள்வார், அப்போது மற்றவர் அப்போது உங்கள் பையிலிருந்து திருடுவார். அவர்கள் குழுவாக இயங்குகிறார்கள் என்பதை நம்பமுடிகிறதா? நம்மை அவர்கள் உளவியல் ரீதியாக புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜெய் ராதாரமண ஹரி என்று மங்களம் பாட ஆரம்பிக்கும் போது, எல்லோரும் சத்சங்கத்தின் பேரானந்தத்தில் லயித்திருக்கும் போது, யாரையாவது தள்ளி விட்டுவிட்டு பின்னாலிருந்துத் திருடத் தொடங்கிவிடுவார்கள்.

இதை தடுக்க நீங்கள் அனைவரும் உட்கார்ந்தபடியே இருக்க வேண்டும். எப்படியும் நான் எல்லோரையும் சந்திக்கிறேன். ஒருவர் மீது ஒருவர் விழுந்து பெண்களும் குழந்தைகளும் நசுக்கப்படுவது எனக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. சிலர் ஓடிவந்து ஒருவரை முந்திகொண்டு முன்னால் வந்து நன்று, ‘குருஜி,  என்னை ஆசீர்வதியுங்கள்!’ என்பார். ஏதோ சரியில்லை என்று நான் புரிந்து கொள்வேன். ஒருவர் உங்களை முந்தி முன்னால் வந்து நிற்பார், அந்தக் குழப்பத்தில் மற்றொருவர் உங்களுக்குப் பின்னாலிருந்து திருடத் தொடங்குவார். பல காலமாய் பக்தர்களாய் இருக்கும் சிலர், (அவர்களை நீங்கள் பக்தர்கள் என்று சொல்லமுடியாது) எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை, முன்னே தாவி வந்து முதல் வரிசையில் உட்கார முயற்சித்து குழப்பம் ஏற்படுத்துவார். எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. (அவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூட்டத்திலிருந்து ஒருவர் சொல்கிறார்). ஆம், என்ன தண்டனை கொடுப்பது என்று யோசிக்கிறேன். ஒழுங்கீனத்தை பரப்புகிறார்கள். ஒருவரிடம் இல்லை என்று சொல்வதோ கடுமையாய் நடந்து கொள்வதோ என்னுடைய இயல்பில்லை, ஆனால் இவர்கள் நானாக இருக்க விடுவதில்லை. அதிகபட்சம் ‘முட்டாள்’ என்று சொல்வதை தவிர வேறு கடுமையான வார்த்தைகளை பிரயோகிப்பதோ திட்டுவதோ இல்லை. இதைவிட இன்னும் கட்டுப்பாடாய் எப்படி இருப்பது என்று தெரியவில்லை. ஆனால், அவர்கள் என் பொறுமையை சோதிக்கிறார்கள். பரவாயில்லை. உலகில் இந்த வகை மக்களும் உண்டு, எல்லோரையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குருதேவ், நம்மை நாமே மகிழ்ச்சியாய் வைத்துகொள்வது அல்லது நம்மைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாய் வைத்து கொள்வது, இவற்றில் எது மிக முக்கியம்?

குருதேவ்: இரண்டுமே முக்கியம். நீங்கள் சன்யாசியாய் இருந்தால் மற்றவர்களை மகிழ்ச்சியாய் வைத்து கொள்ள வேண்டும். ஆனால், நீங்கள் சம்சாரியாய் இருந்தால் உங்களையும் உங்களை சுற்றி உள்ளோரையும் மகிழ்ச்சியாய் வைத்துகொள்ள வேண்டும்.

ஒரு சைக்கிளுக்கு இரண்டு சக்கரங்கள் இருப்பது போல நீங்கள் சமன் செய்தாக வேண்டும். நீங்கள் மற்றவர்களை மட்டுமே மகிழ்கிழ்ச்சியாய் வைத்துக் கொள்ள முயற்சித்தால், நீங்கள் சோகமாகி விடுவீர்கள். நீங்கள் சோகமாயிருந்தால், எப்படி நீங்கள் மற்றவர்களை மகிழ்சியாய் வைத்துக் கொள்ள முடியும்? நீங்கள் உங்களை மட்டுமே மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ள முற்பட்டால், உங்களை சுற்றி உள்ளவர்கள் சோகமாகி விடுவார்கள். அவர்கள் சோகமாயிருந்தால் பிறகு நீங்கள் எப்படி மகிழ்ச்சியாய் இருக்க முடியும்? இந்த இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்திருக்கிறது, எனவே நடுநிலையாய் நீங்களும் மகிழ்ச்சியாய் இருந்துகொண்டு சுற்றத்தையும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கெனவும் நேரம் எடுத்து கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்தை நீங்கள் பார்த்துக் கொண்டு மற்றவர்களையும் மகிழ்ச்சியாய் வைத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அல்லது நம்புகிறீர்களோ அதையே நிச்சயம் பின்பற்ற வேண்டும் என்று கட்டாயப்படுத்தவே கூடாது. நடுநிலையாய் இருங்கள். சிலநேரம் மற்றவர்கள் சொல்வதைக் கேளுங்கள், சில நேரம் நீங்கள் நினைப்பதையும் பின்பற்றுங்கள்.

குருதேவ், அன்பு ஒரு தெய்வீக குணம். அன்பு நம்மை விடுதலை செய்யும் என்று சொல்கிறார்கள், ஆனால் அன்பு உண்மையில் நம்மை பந்தத்திற்குள் கொண்டு செல்கிறது. திருமணமும் ஒரு பந்தமாகவே பார்க்கப்படுகிறது. எனவே எப்படி இந்த பந்தம் அழகானதாக இருக்க முடியும்?

குருதேவ்: அந்த உறவில் சுயநலம் இல்லையென்றால், அது அழகானது. அந்த உறவில் தியாகம் செய்வதற்கு விருப்பம் இருக்கும் போது, அது அழகானதாக மாறிவிடுகிறது. ஸ்ரீ இராமபிரானுக்கும் அவர் சகோதரர் பரதனுக்கும் இடையே உள்ள உறவைப் பாருங்கள். ஒருவருக்கு ஒருவர் எதையும் தியாகம் செய்துகொள்ள இருவருமே விருப்பமாயிருக்குமளவு அவ்வளவு உறுதியான பந்தம். அப்படிப்பட்ட சுயநலம் இல்லாத உறவு, அழகான ஒன்று. அப்படிப்பட்ட உறவில், அன்பும் அமைதியும் ஏராளம்.

குருதேவ், இரண்டு விஷயங்களுக்கு இடையே முரண்பாடு ஏற்படும் போது, இரண்டுமே சரியாக இருக்கும் போது, எப்படித் தேர்வு செய்வது?

குருதேவ்: தளர்வாகுங்கள். குழப்பம் இருந்தால், முதலில் தளர்வாகுங்கள். சரியான ஒன்று தானாகவே மேலெழும். நீண்ட காலத்தில் எது மகிழ்சியைத் தருமோ அதைத் தேர்ந்தெடுங்கள். குறுகிய காலத்தில், உடனடியாக அவ்வளவு இன்பமான ஒன்றாக இல்லாமலிருந்தாலும் கூட பரவாயில்லை. தற்காலிகமாக இன்பம் தருவது, ஆனால் நீண்ட கால நோக்கில் துன்பம் தருவது நல்ல தேர்வு அல்ல.

குருதேவ், நிகழ்கணத்திற்கு எந்தத் தேர்வுகளை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்ள தேர்வற்ற விழிப்புணர்வு நிலையில் ஒருவர் இருக்க வேண்டும். எப்படி அந்தவிதமான தேர்வற்ற விழிப்புணர்வு நிலையில் இருப்பது?

குருதேவ்: உங்கள் முன் ஒரு கரிகட்டையும் ஒரு வாழைப்பழமும் சாப்பிடுவதற்கு வைத்தால் உங்கள் தேர்வு என்ன? அங்கு தேர்வு செய்ய ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா? யோசித்துப் பாருங்கள். இருப்பது வாழைப்பழமா அல்லது கரியா என்று தெரியாத போது தேர்வு செய்ய உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. வாழைப்பழம் சாப்பிடத் தகுந்தது மற்றுது கரி அதை சாப்பிட முடியாது என்று தெரியும் போது தேர்வு செய்ய உங்களுக்கு எங்கே வாய்ப்பு? அறிவு ஞானத்தைத் தருகிறது அதனால் தெளிவு கிடைக்கிறது.  குழப்பம் என்றால், அந்த நேரத்தில் தெளிவு இல்லை ஞானம் இல்லையென்று பொருள். ஞானத்தைப் பெறுவது எப்படி? தளர்வாகுங்கள், தியானம் செய்யுங்கள்.

குருதேவ், 20 நிமிட தியானத்தில், சுமார் ஒரு நிமிடம் மட்டுமே நான் தியானத்தில் ஆழ முடிகிறது, எஞ்சி இருக்கும் நேரத்தில் நான் உங்களுடன் பேசிக்கொண்டிருப்பது போன்ற உணர்வு தான். நான் கனவு காண்கிறேனா அல்லது உண்மையில் நீங்கள் என்னுடன் பேசிக் கொண்டிருக்கிறீர்களா? சில நேரம் யாரேனும் அருகில் இருக்கிறார்களா என்று சற்றே கண்களைத் திறந்து பார்ப்பதும் உண்டு.


குருதேவ்: பரவாயில்லை, நீங்கள் அந்த 2% தியானம் செய்யலாம். சில நேரம், நாம் கண்களை மூடுகையில், கனவு காணத் தொடங்கி நமது மனதின் கற்பனை உலகில் சஞ்சரிக்கிறோம். இதைத்தான் மனோராஜ்யம் என்பார்கள். கண்களை திறந்தால் நாம் வெளி உலகில் இருக்கிறோம். இந்த இரண்டிற்கும் இடையே மௌனம் இருக்கிறது. அதிகம் வெளி உலகமும் வேண்டாம், அதிகம் கற்பனை உலகமும் வேண்டாம். இதற்கு நடுவே நாம் தியானம் செய்ய வேண்டும்.