மகாசிவராத்திரி : குருதேவின் அருள் வாக்கு

பெப்ரவரி 27, 2014

பெங்களூரு, இந்தியா

இன்று, இந்த மங்களகரமான சிவராத்திரி நன்னாளில் உடனடியாக உங்கள் மனதில் அமைதியையும்,மகிழ்ச்சியையும் தரக்கூடிய இரண்டு செய்திகளை நீங்கள் எடுத்து செல்லவேண்டும்.



1. கடவுள் எப்போதும் என்னுடன் இருக்கின்றார், என் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வார் என்று அறிந்து கொள்ளுங்கள். உங்கள் தேவைகளை கவனித்துக் கொள்ளவே கடவுள் இருக்கின்றார்.

2. இந்த ஆழ்ந்த நம்பிக்கையுடன் இளைப்பாறி, ஆத்மாவில் அமைதியடையுங்கள். மகா சிவராத்திரி என்பது ஆழ்ந்த ஓய்வுநிலை பற்றியது தான். மகாசிவராத்திரி மனதுக்கும் ஆத்மாவிற்கும் ஆழ்ந்த ஓய்வை எடுத்து வருகின்றது. மனம், எதன் பின்னாலாவது அலைந்து கொண்டும், ஏதாவது ஒரு ஆன்மீக அல்லது பொருட் கூறுகளின் மீது ஆசை வைத்துக் கொண்டும் இருக்கும். கடவுள் இரண்டையுமே உங்களுக்கு தருவார் என்பதை  நினைவில் கொண்டு இளைப்பாறுங்கள்.

இறைமையுடன் ஆழ்ந்த தொடர்பினை ஏற்படுத்தி கொண்டு கடவுள் என்னைச் சார்ந்தவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அசைக்க முடியாத இந்த நம்பிக்கையை கைக்கொண்டால், நீங்கள் என்ன விரும்பினாலும் அது உங்களுக்கு அளிக்கப்படும். இந்த நம்பிக்கை உங்கள் உள்ளிருந்து மலரும் அக்கணமே உங்கள் மனம் ஒரு அமைதி நிலையை அடையும்.

சத்சங்கத்தில் பாடும் போதும் இதே அமைதியான ஆழ்ந்த ஓய்வினை நீங்கள் உணரலாம். மேலோட்டமாக பஜனைகள் பாடுவது நன்றல்ல. கேட்கும் போதும், கூடப் பாடும் போதும், உங்கள் இதயபூர்வமாக, இறைமையிடம் அன்பும், ஆழ்ந்த பக்தியுணர்வும் வேண்டும். இறைமையை நோக்கி நீங்கள் அழுதெழ வேண்டும். முழு மனதோடு பாடலுடன் இரண்டறக் கலந்து பாடுகின்ற பொழுதில்,  இறைவனுடன் ஒன்றாகிக் கலந்து விடுகின்றீர்கள்.

சிவன் வெளியில் இல்லை. கோவிலிலோ, எங்கோ ஹிமாலய மலைகளிலோ அமர்ந்திருக்கவில்லை. மானசரோவர் ஏரியிலோ, கைலாச மலையிலோ இல்லை.   சிவபெருமான் உங்களுக்குள் இருக்கின்றார்; எங்கும் நிறைந்திருக்கின்றார். இதை உணர்ந்து இளைப்பாறுங்கள். இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன்.   எங்கெல்லாம் செல்கின்றீர்களோ அங்கெல்லாம் நிறைந்து -  மலைகள், செடிகள், மரங்கள், போன்ற அனைத்திலும் வியாபித்திருப்பவன். இறைவனே காட்சி, காண்பவனும் அவனே. இதை மீண்டும் மீண்டும் உங்களுக்கு நினைவுறுத்திக் கொண்டு இளைப்பாறுங்கள். விரைவில்

நீங்கள் ஆழ்ந்த சமாதி நிலையை அடைந்திருப்பதை காண்பீர்கள். உங்கள் மனம் அமைதியையும் ஆனந்தத்தையும் அடைந்திருப்பதை அறிவீர்கள். உங்கள் உள்ளிலிருந்து முழுவதுமாக மலர்ந்து வேறெதுவும் மீதமில்லை என்றுணர்வீர்கள். அவ்வளவு தான். மகாசிவராத்திரியன்று, நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், நன்கு இளைப்பாறி உங்கள் ஆன்மாவில் ஆழ்ந்து விடுவது தான். ஞானச் செய்திதனை கேட்கும் போது உங்கள் மனமும் அறிவும் தூய்மைப்படுகின்றன. மனமானது, தான் பற்றிக் கொண்டிருக்கும்  அற்ப விஷயங்களையும், ஆசைகளையும் விட்டு விடுகின்றது, அறிவு தூய்மையாகின்றது. அதனால் தான் பூஜையின் போதும், அதன் பின்னரும் நாம் பஜன்களைப் பாடுகின்றோம். 

பூஜையின் இந்த அழகான தியான நிலைக்குப் பின்னர் பேசுவது கூட சிரமமாக இருக்கின்றது. உங்களில் பலருக்கு இன்று குருதேவ் ஞானச் செய்தி எதையேனும் கூற வேண்டும் என்னும் விருப்பம் இருக்கின்றது என்பதை அறிவேன். அல்லவாநாம் வார்த்தைகளை மிகவும் சார்ந்திருக்கின்றோம். எவ்வாறு ஞானம் அறிவினை தூய்மைப்படுத்துகின்றதோ அவ்வாறு பஜனைகள் பாடுவது பக்தியை தூய்மையாக்கி மேம்படுத்துகின்றது. உங்கள் மனமும், உணர்வுகளும் மேம்பட்டு முழுமையாக மலரும் போது, நீங்கள் அனைத்தையும் கடந்து உங்கள் உயிர்நிலையின் மூலாதாரத்தை அடைகின்றீர்கள். அதுவே சிவம். உண்மையில் நீங்களும், நானும் அதுவே ஆகும். 

மகாசிவராத்திரி அத்தகைய நிலையை அடைவது பற்றியதே ஆகும்.இறைமையுடன் இந்த ஆழ்ந்த தொடர்பினை நான்கு படிநிலைகளில் அனுபவிக்கலாம். முதலாவது ஸாமிப்யா (குரு அல்லது இறைமையின் அருகாமை). இறைமையுடன் நெருங்கியவராகவும் அன்புடையவராகவும் இருக்கின்றோம் என்று உணருதல்) எப்போது இந்த அனுபவத்தை அடைவீர்கள்? இதை நாளைக்கு, நாளை மறுநாள், பத்து நாட்களுக்குப் பிறகு, அல்லது சில  மாதங்களுக்குப் பிறகு உணருவீர்களா?  இல்லை. இப்போதே, இந்த க்ஷணமே இறைமையுடன் நெருங்கியிருப்பதை உணருங்கள். இதை தான் குரு செய்கின்றார். உங்களுக்கு இறைமையுடன் நெருக்கம், அருகாமை இவற்றை உணர குரு உதவுகின்றார்.

இரண்டாவது படிநிலை ஸாநித்யா இறைமையின் பிரத்யக்ஷத்தை வேண்டுதல் அல்லது உணருதல். நீங்கள் தியானம் செய்யும் போது, உங்களுக்குள் இறைமையின் இருத்தலை உணருகின்றீர்கள். இறைமையின் இருத்தலை பற்றி நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்கின்றீர்கள், அதை அனுபவிக்கின்றீர்கள் என்பது இதன் பொருள். உதாரணமாக, நாம் காற்றினால் சூழப்பட்டிருக்கின்றோம். அதனால் எப்போதும் அதன் இருத்தலை உணருவதில்லை. ஆனால் ஒரு ஆழ்ந்த மூச்சு எடுக்கும் போது, உங்களைச் சுற்றி இருக்கும் காற்றினை உணர்ந்தறிந்து கொள்ளுகின்றீர்கள். அது போலவே, நாம் எப்போதும் இறைமையால் சூழப்பட்டிருக்கின்றோம், ஆயினும் இறைமையின் இருத்தலை உணருவதில்லை. அதை உணர்ந்து அறிந்து கொள்ளுவதற்க்காகவே, யாகங்கள், பூஜைகள், செய்கின்றோம்,  மேலும் பல்வேறு விதமான பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம்.

அடுத்தது, ஸாருப்யா- இறைமையை உங்களுக்குள்ளும், எங்கும், எல்லாவற்றிலும் காணுதல். அதாவது, இறைமை என்னுள் இருக்கின்றது, அதுவே நான் என்று உணருதல் ஆகும். இறைமை என்னுடைய உருவத்திலும், என்னைச் சுற்றி இருக்கும் அனைத்து உருவங்களிலும் உள்ளது என்பதை அறிந்து உணருதல் ஆகும்.  உருவமில்லாவிடினும் இறைமை எல்லா உருவங்களிலும் நிறைந்துள்ளது.

முடிவான படிநிலை ஸாயுஜ்யா. அதாவது, இறைமையுடன் முழுவதுமாக இணைந்து இரண்டறக் கலந்து, உங்களுக்கும் இறைமைக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்று உணருதல். அந்நிலையில் இரண்டென்பது  கிடையாது, இரண்டுமே ஒன்று தான். 
இது ஆழ்ந்த அனுபவத்தில்தான் கிடைக்கப்பெறும்.வார்த்தைகளால் இதை விவரிக்க முடியாது. இத்தகைய முழுமையான ஒன்றிய நிலையை, ஆழ்ந்த மௌனம், மற்றும் அசையாத நிலையில் நீங்கள் இறைமையோடு இரண்டற கலந்திருக்கும் போது உணரலாம்.இன்று நீங்கள் முதல் இரண்டு படிகளை எடுத்து வையுங்கள். முதல் படி ஸாமிப்யா அதாவது இறைமையுடன் நெருங்கி உணருதல். இரண்டாவது படி, ஸாநித்யா எங்கும், எல்லாவற்றிலும் இறைமையின் இருத்தலை அனுபவித்தல்.இவை நான்கும்,சமாதி மற்றும் ஞான உபதேசத்தின்  நான்கு படிநிலைகளாகும். ஆழ்ந்த ஓய்வில் நாம், யாவும் கடந்த மூலாதாரத்துடன் ஒன்றிணைகின்றோம்-அதுவே சிவம்.