இதயம் மட்டுமே கணிக்கப்படும்

பெப்ரவரி 24, 2014

பெங்களூரு, இந்தியா



குருதேவ்! சத்குரு பூரா ஜே மிலே ரத்தன்  உபார், மன் தி ஜே குரு அப்னே பயே மோக்ஷ்  த்வார்        

(சத்குருவை உடையவன், அபூர்வ ரத்தினங்களைக் காட்டிலும் மேலான செல்வத்தைப் பெறுகின்றான். சத்குருவிடம் மனதைச் செலுத்தியவன் முயற்சியில்லாது மோக்ஷத்தை அடைகின்றான்.) என்னும் இந்தக் குறளை நான் கேள்விப் பட்டிருக்கின்றேன். எவ்வாறு ஒருவன் முழுமனதுடன் சத்குருவிடம் சரணடைய முடியும்? இந்தக் குறளின் பொருள் என்ன?

குருதேவ்: இதை தான் இப்போது நான் விவரித்துக் கூறினேன். நீங்கள் கேட்பதற்கு முன்னமே நான் பதிலளித்து  விட்டேன் அல்லவா? குருவிற்கு உங்களிடமிருந்து என்ன வேண்டும்? உங்கள் இதயம் மட்டுமே அல்லவா? எனவே, உங்கள் அன்புமனதை குருவுக்கு அளித்து விட்டு, நீங்கள் விடுபட்டு வாழுங்கள்.!

குருவுக்கு உங்கள் இதயத்தை அளிப்பது என்பதன் பொருள் என்னவென்றால், "என்னுடைய குரு என்னைச் சார்ந்தவர், எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளுவார் என்னும் உணர்வே ஆகும்.இந்த நம்பிக்கையை பெறுங்கள். மனமானது சந்தேகங்கள் மற்றும் லட்சக்கணக்கான எண்ணக் குவியலுக்குள், மூழ்கியிருக்கும். முதலில் உங்களைச் சந்தேகிப்பீர்கள், பின்னர் உங்களைச் சுற்றியுள்ளவர்களை சந்தேகிப்பீர்கள், பிறகு இந்த உலகம் முழுவதையுமே சந்தேகிப்பீர்கள். சந்தேகம் மெதுவாக உங்கள் மனதையும் நுகர்ந்து விடும். சந்தேகமே பல குடும்பங்களில் மகிழ்ச்சியை அழிக்கின்றது. எனவே, சந்தேகத்தை விட்டுவிடுங்கள். 

குருவினிடத்தில் முழு நம்பிக்கை என்பது  என்னவென்றால், குரு என்னுடையவர்என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் வாழ்வது ஆகும். இதை நீங்கள் நம்புங்கள்: நான் தகுதி பெற்றிருக்கும் அனைத்தும் எனக்குக் கிடைக்கும். அதை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது. தருபவர் யாரோ, அவர் எனக்கு, எல்லாவற்றையும் நிறைவாகத் தருவார். என்னுடைய கர்மத்தின் நற்கூறுகள் என்னவோ அவை நிச்சயம் என்னை வந்து அடையும்.

கண் சிமிட்டும் நேரத்தில் வாழ்க்கை முடிந்து விடும். திரும்பிப் பாருங்கள் கடந்த 30 அல்லது 40 ஆண்டுகள் விரைவாகச் சென்று விட்டன. அப்போது ஏன் வரவிருக்கும் 20 -30 ஆண்டுகளைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்? அவையும் சுலபமாக சென்று விடும். அவற்றில் பாதி நேரம் நீங்கள் தூங்கிக் கழித்து விடுவீர்கள். மீதமுள்ள 10-15 ஆண்டுகள் உண்பதிலும் போக்கு வரத்திலும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் செலவிடுவதிலும் சென்று விடும்.

ஆகவே வாழ்க்கை  கண நேரத்தில் முடிந்து விடும். வாழ்க்கை  மிக விரைந்து செல்கின்றது. விழித்தெழுங்கள்! நீங்கள் ஏற்கனவே இறைமையிடம் சரணடைந்து விட்டதை உணர்ந்து கொள்ளுங்கள். நான் எவ்வாறு இறைமையிடம் சரணடைவது என்று கேட்காதீர்கள். நீங்கள் ஏற்கனவே சரணடைந்து விட்டதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.

எவ்வாறு சரணடைவது? எவ்வாறு உடைமை தன்மையை உணருவது அல்லது உணர்த்துவது? என்றெல்லாம் கேட்பதில் பொருள் இல்லை. உடைமைத்தன்மை என்பதை உருவாக்க முடியாது. நீங்களே நான் இறைமையை சேர்ந்தவன் என்று உணர்ந்து கொள்ள வேண்டியது தான். விஷயம் முடிந்தது! இனி ஒரு போதும் அதைக் கேட்காதீர்கள்.
இந்தப் பாடத்தை புதுமணத் தம்பதிகளுக்கும் நாம் அளிக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன். அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு இணைந்து இயங்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் காவல் காத்துக் கொண்டு இருக்காதீர்கள். உங்கள் துணையிடம், ''என்னை உண்மையாக விரும்புகிறாயா என்று கேட்காதீர்கள். உங்கள் மனதில் சந்தேகம் எழுந்தாலும் கூட அவ்வாறு கேட்காதீர்கள். அதற்குப் பதிலாக "ஏன் இந்த அளவு என்னை விரும்புகின்றாய்? ஏன் என்னுடைய தகுதிக்கு மேல் என்னை விரும்புகின்றாய் என்றே கூறுங்கள். அப்போது அன்பு வளரும்.

உரிமைக் கோரிக்கை உறவுகளைத் தகர்க்கும். யாரிடமும் உரிமைக் கோரிக்கை விடுத்தால் அவ்வுறவு உடைந்து போகும். புரிந்ததா? ஒரு போதும் உரிமை கோராதீர்கள். இப்பூவுலகில் நீங்கள் கொடுப்பதற்கும் பணியாற்றுவதற்குமே வந்துள்ளீர்கள். எதையும் எடுத்துக் கொண்டு போவதற்கு அல்ல. நீங்கள் இந்த நிலையைப் புரிந்தடைந்தால், உங்களுக்குத் தேவையான எல்லாமே உங்களை வந்து அடையும். இது தான் இயற்கையின் விதி ஆகும். இவ்வுலகில் நீங்கள் வந்திருப்பது கொடுக்கவும் தொண்டாற்றவும் என்னும் நம்பிக்கையை நீங்கள் அடைந்தால், உங்களது தேவைக்கு ஆசைக்கும் பத்து மடங்கு அதிகமாக நீங்கள் அடையப் பெறுவீர்கள். என்னவெல்லாம் உங்கள் விருப்பமோ அவையெல்லாம் நிறைவாக உங்களை வந்து அடையும்.

ஒருவருடைய கவனம் என் மீது இருக்க வேண்டும் என்பது போன்ற அற்ப விஷயங்களில் மனம் சிக்கிக்கொள்ள விடாதீர்கள். அற்ப விஷயங்களிலேயே  முழுக் கவனத்தையும் வீணாக்காதீர்கள். ஒரு பிச்சைக்காரன் உங்களை சாதாரணமாக அணுகினால் என்ன செய்வீர்கள்? பிசையளித்து, சரி நகர்ந்து போ என்று கூறுவீர்கள் அல்லவா? எல்லாம் நிறைந்த செல்வந்தரையே விருந்துக்கு அழைப்பீர்கள். இயற்கையும் இது போன்றே செயல்படுகின்றது.

உங்கள் வீட்டு இரவு விருந்துக்கு யாரை அழைப்பீர்கள்? வயிறும் மனமும் நிறைந்த ஒருவரை தான் அழைப்பீர்கள் அல்லவா? இதை மனதில் கொள்ள வேண்டும். ஒரு சிறு எலியைப் போன்று சாரமற்ற விஷயங்களுக்காக இங்குமங்கும் ஓடிக் கொண்டிருக்காதீர்கள். அது உங்கள் மன அமைதியைக் குலைத்து உங்களைச் சுற்றி இருப்பவர்களையும் தொல்லைக்கு ஆளாக்கும்.  உண்மையில் சூழலே அதனால் பாதிக்கப்படும். இதை கவனியுங்கள்! உங்களுக்கருகில் ஒருவர் அல்லது ஒருவருக்கருகில் நீங்கள் சென்றமரும் போது, ஏதோ ஒன்றைப் பற்றி இடைவிடாமல் குறை கூறிக்கொண்டும், எல்லாவற்றிலும் குற்றம் கண்டு பிடித்துக் கொண்டும் இருந்தால், அவரருகே அமர விரும்புவீர்களாஇல்லை. அந்த நொடியே அங்கிருந்து ஓட்டம் பிடிக்க வேண்டும் என்று உணருவீர்கள்.
யாருடன் இருந்தாலும் மேலாக உணரவே விரும்புவீர்கள் அல்லவா? நீங்கள் எத்தனை மருந்துகள் எடுத்துக் கொள்கிறீர்கள், உங்கள் கால் எவ்வளவு வலிக்கின்றது அல்லது உங்கள் அடுத்த வீட்டுக்காரரின் தொல்லைகள் இவை பற்றியெல்லாம் கேட்டுக் கொண்டு கவலைப்பட இவ்வுலகில் யாருக்கு விருப்பம் இருக்கும்? இக்கதைகளை எல்லாம் பிறரிடம் கூறுவதில் என்ன பயன்?

எல்லாம் கலந்தது தான் வாழ்கை. சுகமான சுகமற்ற காலங்கள் வந்து போகும். உங்கள் விருப்பபடி மட்டுமே அனைத்தும் நடக்கும் என்று எண்ணுகின்றீர்களா? உங்களை அனைவரும் எப்போதும் புகழ்ந்து கொண்டே இருப்பார்களாஅல்ல. சில சமயங்களில் சிலர் உங்களை அவமானப்படுத்தலாம். அதையும் நீங்கள் கவனித்துக் கொண்டு தான் ஆக  வேண்டும். அதில் என்ன ஏமாற்றம்?  அது ஒன்றும் இல்லை. பலமாகவும் தைரியமாகவும் இருங்கள்.

வாழ்கை நதி போன்றது. நதி சில சமயங்களில் தெளிவாகவும், தூய்மையாகவும் இருக்கும். சில சமயங்களில் காய்ந்த இலைகள், குச்சிகள், கிளைகள் போன்ற குப்பைகளும் நதியில் விழுந்திருக்கும்.வாழ்வில் இது போன்று அவ்வவப் போது நிகழ்ந்து கொண்டு தான் இருக்கும். ஒருவருடன் நீண்ட காலம் உடன் இருக்கும் போது ஏதோ சில பிரச்சினைகள் எழுந்து கொண்டுதான் இருக்கும். எவ்வளவு அதிக அளவு நாம் நம்முடைய உலகையும், வாழ்வையும் குறுக்கிக் கொள்கின்றோமோ, அந்த அளவு பிரச்சினைகளும், இன்னல்களும் வாழ்வில் ஏற்படும். எனவே குறுகிய கண்ணோட்டத்துடன் உலகையும் வாழ்வையும் காணாதீர்கள்.

இதனால், நான் நீங்கள் உங்கள் பொறுப்புக்களையும்,வீட்டையும் துறந்து விடுமாறு கூற வில்லை. நிறையப் பேர் இவ்வாறு தவறாகப் பொருள் கொள்கின்றனர்.  குருதேவ் குறுகிய வாழ்வில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என்று கூறி விட்டார் என்று கருதி, தங்கள் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் புறக்கணித்து விடுகின்றனர். இது சரி அல்ல. ஒரு சமயம் நான் பாரிஸ் நகர விமான நிலையத்தில் பாதுகாப்புச் சோதனையை நோக்கிச் சென்று கொண்டிருந்தேன். சுமார் 200 அல்லது 300 பேர் என்னை வழியனுப்ப வந்திருந்தார்கள். அவர்களில்  60 வயதுகளில் உள்ள ஒரு பெண்மணி என்னை நோக்கி வந்து தன்னுடைய  விரலில் இருந்த ஒரு மோதிரத்தை காட்டி, "இது அவசியமா?" என்று கேட்டார். கல் வைத்த அந்த மோதிரத்தை பார்த்தேன். "இது தேவை இல்லை" என்று பதிலளித்து விட்டு அங்கிருந்து நியூயார்க் சென்று விட்டேன்.  இரு தினங்களுக்குப் பின்னர், அவரது கணவர் என்னை அழைத்து, "குருதேவ்! ஏன் என்னுடைய மனைவியை என்னை விவாக ரத்துச் செய்யுமாறு கூறினீர்கள்?" என்று கேட்டார்.

நான் ஒருபோது அவ்வாறு கூறியிருக்க மாட்டேன் என்று விடையளித்தேன். அவர் 45 ஆண்டுகள் திருமண வாழ்கை நடத்திய 75 வயது முதியவர் .உடனே அவர்,'' இல்லை குருதேவ்! தாங்கள் என் மனைவியிடம் திருமணம் அவசியம் அன்று என்று கூறியதால், அவள் என்னை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டாள். தாங்கள் தான் அவ்வாறு அறிவுரை அளித்ததாக  என் மனைவி கூறுகின்றாள்" என்றார். கடவுளே! மக்கள் தாங்கள் எதையோ விரும்புகின்றார்கள். ஆனால் அது என் வாய்மொழியாக வர வேண்டும் என்று விரும்புகிறார்கள். இருவருமே என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள். உடனே நான்," இல்லை. அவ்வாறு ஒருபோதும் செய்ய வேண்டியதில்லை" என்று கூறினேன். அடிக்கடி சில்லறை விஷயங்களில் மாட்டிக் கொண்டு விடுகின்றோம்.அவற்றுக்குப் பதிலாக,யாராவது உங்களுக்கருகில் வந்தமர்ந்தால் அவர்கள் உயர்வாக உணர வேண்டும். அவர்கள் மனதை நீங்கள் மகிழ்ச்சி ஆனந்தம் நிறைந்ததாக நீங்கள் ஆக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதைத் தான் செய்ய வேண்டும், ஆனால் இதற்கு நேர் எதிராக செயல் படுகின்றோம்.

வீட்டில் கூட, ஒரு மனிதன் பணி முடிந்து களைப்பாக திரும்பும் போது, மனைவி, அவனிடம், நீ  இதைச் செய்யவில்லை, இது சரியில்லை இது நன்றாக இல்லை என்றெல்லாம் குறை கூறிக் கொண்டிருக்கின்றாள். ஆகவே ஒருவனுக்குப் பணியிலும் வீட்டிலும் பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாகின்றது. பெண்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் உள்ளன. நாள் முழுவதும் வீட்டு வேலைகளை செய்துமாலையில் வீடு திரும்பும் கணவன் சில இனிய சொற்களைக் கூறாமல், அன்றைய நாளிதழைப் படிக்கவோ, தொலைப்பேசியில், தனது வியாபாரம் குறித்துப் பேசிக் கொண்டோ இருந்தால் அப்பெண் எவ்வாறு உணருவாள்? அவளும் வேதனையை அடைகின்றாள். இரு தரப்பிலும் புரிதல் வேண்டும். முக்கியமானது என்னவென்றால், எதற்கும் உரிமைக் கோரிக்கை  அல்லது எந்த நிபந்தனையும்  உங்கள் தரப்பிலிருந்து வைக்காதீர்கள்.

என்னுடைய நிலை எப்படியிருந்தாலும் என்னிடம் யார் வந்தாலும் அவர்கள் இலேசாகவும் மகிழ்வாகவும் திரும்பிச் செல்ல வேண்டும் என்னும் இந்த கருத்து உறுதிப்பாடு உங்கள் மனதில் இருக்கட்டும்ஏனெனில், உங்களது அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய கடவுள், அல்லது குரு இருக்கின்றார்; கடவுளும் குருவும் ஒன்றே  என்றும்  நீங்கள் அறிவீர்கள்.

உங்களிடம் வருபவர்களுக்கு வழங்குவதை மட்டுமே நீங்கள் சிந்திக்க வேண்டும்.  இவ்வுணர்வு உங்கள் உள்ளிலிருந்து வர வேண்டும். எனக்கு குரு இருக்கின்றார்.  மற்றவர் அனைவரும் என் குழந்தைகளே என்னவானாலும் சரி அவர்களுக்கு நான் பேணிப் பணி புரிய வேண்டும்.என்று உங்களுக்கு  நினைவுறுத்திக் கொள்ளுங்கள்.

நாம் வாழும் காலம் மிகக் குறைவானது. எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். மகிழ்வை உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும்  பரப்புங்கள். அதுதான் நமது குறிக்கோளாக இருக்கவேண்டும். அப்போது எல்லாமே உங்களை வந்தடையும்.

குருதேவ்! சத்சங்கத்தில், ஒரு மருமகள் தனது கணவன் குடும்பத்தினருக்கு பணிபுரிந்து அவர்களது மனதை கவர வேண்டும் என்று கூறினீர்கள். மருமகன்களுக்கும் இது பொருந்துமா? ஒரு மருமகள் தனது புகுந்த வீட்டினரை தனது உறவாக ஏற்றுக் கொண்டு பணிபுரிவது போன்று ஏன் ஒரு மருமகன் செய்வதில்லை?

குருதேவ்: ஒரு மருமகன் தன் மனைவியின் குடும்பத்தினரை ஹோலி தீவாளி போன்ற பண்டிகைகளின் போது  மட்டுமே சந்திக்கின்றான். தினமும் அவர்களது இல்லத்திற்குச் செல்வதில்லை.அல்லவா? ஆனால் மருமகள் தன் கணவனின் உறவினருடோயே வசிக்கின்றாள். இக்கேள்வி கேரளாவில் கேட்கப்பட்டிருக்குமேயானால் நான் மருமகன்களுக்கு சில ஆலோசனைகள் கூறியிருப்பேன். ஏனெனில் அங்கு மருமகனே தன் மனைவியின் உறவுகளுடன் (தாய்வழி உறவு வாழ்வியல் முறையைக் குறிப்பிட்டு) சென்று வாழ்கின்றான். அங்கு ஒரு மகன் திருமணத்திற்குப் பின்னர் தன் குடும்பத்தை விட்டு வெளியே செல்கின்றான், மகள் அல்ல. மேகாலயாவிலும் திரிபுராவிலும் கூட இவ்வாறு தான்.

ஒரு மருமகன் ஒரு வீட்டில் விருந்தினர் போன்று இருக்கக் கூடாது. தன்னுடைய மாமனார் வீட்டு உறவுகளுடன் சார்புணர்வுடன் இணைந்து வாழ வேண்டும். தற்போதுள்ள மருமகன்கள் விருந்தினர் போன்று நடந்து கொள்வதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு தலைமுறைக்கு முன்னர் தான் அவ்வாறு இருந்தது. சில குடும்பங்களில் மருமகன்கள் மனைவியின் குடும்பத்தினருடன் ஒட்டாமல் இருந்ததும் உண்டு. இக்காலத்தில் அவ்வாறில்லை என்றே எண்ணுகின்றேன். 

ஒரு மகள் முறையில், உங்கள் தாய் உங்களை கடிந்து கொண்டிருந்திருப்பார், நீங்களும் வளரும் பருவத்தில், பல தடவைகள் உங்கள் தாயுடன் சண்டை இட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு போதும் காயப்பட்ட உணர்வை அடைந்திருக்க மாட்டீர்கள். ஆனால் உங்கள் மாமியார் அதில் 10 சதவீதம் ஏதேனும் கூறினால் கூட, அதில் புண்பட்டு உள்ளிலிருந்து எரிந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் தாயும் மாமியாரும் ஒரே வயதில் இருப்பவர்கள். ஒரே தலைமுறையை சேர்ந்தவர்கள்.  அப்போது நீங்கள் அவர்கள் இருவரையும் சமமாகக் கருத வேண்டும். அவர்கள் எது கூறினாலும் அதை சரியாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் தாயுடன் ஒரு நாள் சண்டையிட்டால் அடுத்த நாளே அதைச் சரி செய்து எதுவுமே நடக்காதது போன்று அவரிடம் சென்று அமருவீர்கள் அல்லவா? அதையே உங்கள் மாமியாரிடமும் நீங்கள் பின்பற்ற வேண்டும். அனைவரையும் அன்பினாலும்  பணியினாலும் வெல்ல வேண்டும். எப்போதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருங்கள். இதைத் தவிர வேறென்ன வேண்டும்? நான் கூறியதை புரிந்து கொண்டீர்களா?


திறந்த மனமும், தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் விருப்பமும் இருந்தால் தான் இவற்றையெல்லாம் புரிந்துகொள்ளும் ஆற்றல் இருக்கும்.  நேர்மறையான உணர்வுகளும், ஏற்றுக்கொள்ள விருப்பமும் இருந்தால் நீங்கள் பெற்றுக் கொள்வதற்கு  ஏராளம் உள்ளது.  உங்கள் மனம் அடைக்கப்பட்டு, அற்ப விஷயங்களில் சிக்கிக் கொண்டிருந்தால் கங்கையில் பத்து முறை மூழ்கி எழுந்தாலும் ஒன்றும் பயனில்லை. நீங்கள் வெறுமையும் காலியுமாக உணர்ந்தால் மிக அதிக அளவு பெற்றுக் கொள்ளலாம்.