மெய்யறிவாளர்களின் வழிகள்: #ஸ்ரீஸ்ரீயைக் கேளுங்கள்.

பெப்ரவரி 23, 2014.

(ட்விட்டர் டவுன்ஹால் - கணினி மூலம் நேரிடைத் தொடர்பு நிகழ்ச்சி)

குருதேவ் ஞாயிற்றுக் கிழமை, 23 பெப்ரவரியன்று, பெங்களூருவில் உள்ள வாழும்கலை ஆஸ்ரமத்தில், வாழும்கலையை பின்பற்றுபவர்களுடன், நேரிடைத் தொடர்பு கொண்டு பேசினார். மும்பை ஹிந்தி சினிமா நடிகர்கள் முதல், கிரிகெட் வீரர்கள் வரை உலகிலுள்ள வாழும்கலையில் ஈடுபாடு கொண்டவர்கள் குருதேவிடமிருந்து நேரிடைப் பதில்களை பெரும் பொருட்டு, தங்கள் கேள்விகளை ட்வீட் செய்தனர். இந்த நேரிடை நிகழ்ச்சியின் போது, ஸ்ரீஸ்ரீயைக் கேளுங்கள் என்னும் ஹாஷ் டேகுடன் 65000 க்கும் மேற்பட்ட ட்வீட்டுகள் செய்யப்பட்டன. அக்கேள்வி பதில் நிகழ்வின் தொகுப்புரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


வாழ்வில் ஒருவர் எவ்வாறு முதிர்ச்சியை வளர்த்துக் கொள்வது?

குருதேவ்: உணர்ந்தறிதல் கவனித்தல்,தெரிவித்தல் இவை மூன்றும் முதிர்ச்சியை ஏற்படுத்த வல்லவை. எவ்வாறு உங்களை சுற்றி நடப்பதை உணர்ந்து  அறிந்து கவனிக்கின்றீர்கள் என்பது ஆகும். மெய்யறிவிற்கு அதிகக் காலம் தேவை இல்லை. முதிர்ச்சியை அடைய முதியவர் ஆக வேண்டும் என்பது அவசியம் இல்லை. உங்களுடையது மட்டும் அல்லாது உங்களை சுற்றி  இருப்பவர்களின் வாழ்வினையும் கவனிக்கும் திறன் அவசியம் ஆகும்.

என்னைச் சுற்றிப் பார்க்கும் போது, துன்பம், வெறுப்பு, பேராசை மற்றும் பொருளற்ற வன்முறை இவற்றையே காண்கின்றேன். மேலான சக்தி உள்ளது என்பதை எவ்வாறு காண்பது ?

குருதேவ்: நம்முடைய  மனதின் இயல்பு என்னவென்றால், துன்பத்தை  காணும் போது அதை மிகைப்படுத்திக் காட்டும். பத்துப் பாராட்டுக்களும்,ஒரு அவமானமும் உங்களுக்குக் கிடைத்தால், ஒரு அவமானத்தைப் பிடித்துக் கொண்டு அதை ஊதிப் பெரிதாக்குவது என்பதை சாதாரணமாகச் செய்வீர்கள். உங்களுக்கு ஒன்றைக் கூற விரும்புகின்றேன்.ச முதாயத்தில்,பல நல்ல நிகழ்வுகளும் உள்ளன. ஏராளமான தொண்டுகள் நடை பெற்று வருகின்றன. நல்லுணர்வு கொண்டோர் நம்மை சுற்றி நிறையப் பேர் இருக்கின்றனர். மக்களின் கண்களைப் பார்த்தால், கருணை, அன்பு ஆகியவை அவர்கள் மனதில் நிறைந்திருப்பதை அறியலாம்.வெறுப்பு, கோபம், பேராசை இவையுள்ளதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். அதற்குக் காரணம் மனித நேயப் பண்புகளை இவர்களுக்கு நாம் கற்பிக்காததே ஆகும்.

நான் தன்னினப் பாலுறவு நாட்டம் உள்ளவர்.  இதை வசதியாக உணருகின்றேன்.  சிலர் என்னை குற்றவாளியாகக் காண்கின்றனர். என்னுடைய குடும்பமும் நண்பர்களும் என்னை நிராகரித்து விட்டனர். கடவுள் இன்னமும் என்னை நேசிப்பாரா?

குருதேவ்: கடவுளுக்கு வேறெந்த விருப்பத் தேர்வும் கிடையாது. இப்பூமியிலுள்ள அனைவரையும் கடவுள் நேசிக்கின்றார். கவலைப்படாதீர்கள்.

மக்களிடையே  ஆன்மீகத்தை பற்றி வெவ்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. சிலர் இதைத் தப்பிக்கும் வழி என்றும், சிலர் இதை தன்னைத் தானே சித்திரவதை செய்து கொள்ளும் வழியாகவும் எண்ணுகின்றனர். தங்களை பொருத்த வரையில் ஆன்மீகம் என்பது என்ன ?

குருதேவ்: எது மனித உயிர்த்தன்மைக்கு எழுச்சியூட்டுன்றதோ, அதுவே ஆன்மீகம்.  எது அமைதி,மகிழ்ச்சி,அன்பு,சுகம், இவற்றையளித்து, தொண்டாற்றத் தூண்டுகின்றதோ அதுவே ஆன்மீகம். நாம் பொருட்கூறு மற்றும் உயிர்க்கூறுகளால் உருவாக்கப்பட்டிருக்கின்றோம். நமது உடல் அமினோ அமிலங்கள், மாவுச்சத்து, புரதச் சத்து போன்றவைகளால் ஆக்கப் பெற்றிருக்கின்றது. நமது ஆன்மா, அன்பு, கருணை, தயாளம் அறிவுத்திறன் ஆகிய நற்பண்புகள் நிறைந்தது. எனவே, ஆன்மீகம் என்பது உட்கார்ந்தபடி எதையோ செய்வது என்பதல்ல. அது உங்களுக்குள் பண்பான நடத்தையை ஊக்கி உருவாக்கும் திறன் கொண்டது.

தற்போதுள்ள தேவைகள் மிகுந்த வாழ்வியலில் எவ்வாறு ஒரு நல்ல பெற்றோராக இருந்து குழந்தைகளுக்கு தரமான நேரத்தைக் கொடுக்க முடியும்?

குருதேவ்: உங்களுடைய நற்ப்பண்பை சந்தேகிக்காதீர்கள், ஏனெனில் யாரும் தீய பெற்றோராக இருக்கவே முடியாது. இயல்பாக இருங்கள். குழந்தையைக் கோபிக்க நேர்ந்தால் அது அவசியம் என்று உணருங்கள். குழந்தைகள் மீது கோபப்படும் பெற்றோர் குற்ற உணர்வு கொள்கின்றனர். அது தேவை இல்லை. ஏனெனில் குழந்தைகளை வலுவுள்ளவர்களாக ஆக்குவது அவசியம். அவர்களைக் கோபித்தல் என்பது அவர்களுக்குத் தடுப்பூசி தருவது போன்றதாகும். உங்கள் குழந்தைகள் ஒரு சிறு அவமானத்தை கூட ஏற்றுக் கொள்ள முடியாமல் இருப்பது, ஒருவரிடமிருந்து ஒரு கடுஞ்சொல்லை கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல் இருப்பது என்னும் நிலை ஏற்பட்டால், நீங்கள் அவர்களைச் சரியாகக் கவனிக்க வில்லை என்பதாகும். அவர்களுக்குத் தேவையான  தடுப்பு மருந்து தரவில்லை என்பது ஆகும்.

பெற்றோர் அழுத்தம் மற்றும பதற்றம் இன்றி இருந்தால் ஒரு நாளும் அவர்கள் கெட்ட பெற்றோராக இருக்க முடியாது. எனவே, உங்களுக்குள் அழுத்தம் மற்றும பதற்றம் இன்றி உங்கள் குழந்தைகளுக்குத் தரமான கவனிப்பைத் தாருங்கள்.

நாம் விரும்புபவர்கள் தங்களை சுற்றி வேலி அமைத்து  மூடிக் கொண்டிருந்தால்  எவ்வாறு நெருங்கிப் பழகுவது?

குருதேவ்: பொறுமை மற்றும விட முயற்சியுடன் அணுகுங்கள். தங்களுக்குள் எங்கேயோ பாதுகாப்பின்றி உணருவதாலேயே அவ்வாறு வேலி அமைத்து மூடிக் கொள்கின்றனர். ஏதோ ஒரு வெறுப்புணர்வும், பாதுகாப்பினமையும் அவர்களுக்கு இருக்கின்றது. சமுதாயத்தில் உள்ள  இந்த இரண்டையும் நாம் கவனிக்க வேண்டும். சிலர் குறிப்பிட்ட வர்க்கத்தை சேர்ந்தவர்கள் தீயவர்கள் என்று எண்ணுகின்றார்கள். மக்களின் கண்ணோட்டத்தில் உள்ள இத்தகைய வெறுப்புணர்வு மற்றும அழுத்தம் இரண்டையும் நாம் கவனித்தறிய வேண்டும். அதை பொறுமை மற்றும விடா முயற்சியினாலேயே செய்ய முடியும்.

விவாகரத்துகள் அதிகமாகும் நிலையில், திருமணம் என்பது தேவையா?

குருதேவ்: திருமணம் என்பது ஒரு முக்கியமான அமைப்பாகும். யாரோ இருவர் திருமணம் புரிந்து கொண்டதால் தான் இக்கேள்வியைக் கேட்கும் நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள். அல்லவாவாழ்வில் ஏதோ ஒரு கால கட்டத்தில் திடநிலை என்பது தேவைப்படும். திருமணம் என்பது ஒரு புனிதமான அமைப்பு. அதை நீங்கள் அடைய வேண்டும். திருமண வாழ்வில் வளர்ச்சி, பொறுப்புக்கள் கூடுதலுடன் இணைந்ததாகும். அன்பும் பொறுப்பும் ஒன்றோடொன்று இணைந்தவை.

மக்கள் கவனிக்கும்படி பேசக்கூடிய மனிதனாக ஆவது எப்படி?

குருதேவ்: மக்கள் நீங்கள் பேசுவதைக் கேட்க வேண்டும் என்னும் எண்ணத்தை  முதலில் விட்டுவிடுங்கள். நீங்கள் தெரிவிப்பது நம்பத்தக்கதாக இருக்கட்டும். மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள் என்பதை பற்றிக் கவலைப் படாமல் இயல்பாக இருங்கள். என்ன அடைய வேண்டும் என்று விரும்பினீர்களோ அதை அடைந்திருப்பதைக் காண்பீர்கள்.

கடவுள் மனிதனை படைத்தாரா அல்லது மனிதன் கடவுளை உருவாக்கினானா 

குருதேவ்: இரண்டுமே ஆகும்.. கடவுள் மனிதனைப் படைத்தார், மனிதன் கடவுளை உருவாக்கினான். வேடிக்கையாக இருக்கின்றதல்லவா? மனிதன் கடவுளைப் பற்றி வெவ்வேறு விதமான கோட்பாடுகளை உருவாக்கினான். ஆனால் கடவுள் என்பது என்ன? கடவுள் படைப்பின் உச்ச உயர்குறிக்கோள் நலம் ஆவார். அனைத்திலும் உள்ள, மற்றும் அனைத்து நிகழ்வுகளுக்கும் ஆதி மூலம், அதைக் கடவுள் எனலாம்.
வேதாந்தாவின் படி, அஷ்டி (வாழுயிர்) பதி (விழிப்புணர்வு) ப்ரீத்தி ( அன்பு) அந்த அன்பே பிரகாசம், அதுவே உலகெங்கிலும் உள்ளது. இதுவும் ஒரு வேளை உங்கள் காலில் ஒரு வலி ஏற்பட்டால், அதை உண்மையாக  உணரும் அளவுக்கு  நம்பத் தக்கதான அளவுக்கு நீங்கள் மனதில் இருத்திக் கொள்ளக் கூடிய கோட்பாடுகளில் ஒன்றாகலாம்.

உக்ரைனின் உருமாற்றத்திற்கு நான் என்ன பங்கு வகிக்கலாம்? ஊழலை அகற்றி, அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும் என்று வேண்டுகின்றேன்.

குருதேவ்: நம்முடைய ஆற்றல் உள்ள அளவுக்குத் தகுந்தபடி செயல்பட வேண்டும். உண்மையில் அமைதியை ஏற்படுத்த நம்மால் எவ்வளவு செயலாற்ற முடியும் என்று எண்ணுகின்றோமோ, அதை விடச் சிறிது அதிகமாகவே செய்ய வேண்டும். ஊழல் என்பது உலகெங்கிலும் உள்ள கடுமையான பிரச்சினை.மக்களிடயே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். வன்முறை எதுவும் இல்லாமல், வீதிகளில் பஸ்களையும் கார்களையும் எரிக்காமல், மக்கள் மீது கற்களை வீசி எறியாமல் .அமைதியான முறையில் திடமான புரட்சிக்கு அனைவரும் ஒன்றுபடுங்கள். இப்படிப்பட்ட ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் வெற்றி நிச்சயம். இதற்கு சில காலம் ஆகலாம். ஊழலை எதிர்த்துப் போராட நமக்குப் பொறுமையும், விடாமுயற்சியும் தேவை.

மத மாற்றத்தில் ஏன் மக்கள் ஈடுபடுகின்றார்கள்? அவர்களுக்கு அடையாளப் பிரச்சினை ஏதேனும் உள்ளதா?

குருதேவ்: மக்கள்  ஒரு சமயத்தை விட்டு வேறொரு சமயத்திற்கு மாறுவதற்குக் காரணம் என்னவென்றால், அவர்கள் தங்களது சமயத்தைப் பற்றிச் சரியாக அறிய வில்லை என்பது தான். அதுதான் பிரச்சினை. தங்களது சமயத்தின் சாரத்தை புரிந்து கொள்ளவில்லை என்பதாகும். முக்கியமாக இந்து சமயத்தில் இது முக்கியமாக நிகழ்கின்றது. ஏனெனில் சடங்குகளில் மேலும் ஈடுபடுகின்றோமேயன்றி சரியான புரிதலும் கற்றலும் இல்லை. வேதாந்தங்கள் யோகா சூத்திரங்கள், யோகா வசிஷ்டா போன்ற நூல்களைக் கற்க வாய்ப்பு இல்லை. நம்முடைய வேதங்கள்,அல்லது இந்தியாவின் வேதபாரம்பர்யம், பற்றி நமக்குத் தெரிந்தது மிகக் குறைவே ஆகும். எனவே மக்கள் சமயமாற்றத்தை நாடுகின்றனர். எந்த சமயத்தில் பிறந்தார்களோ அச்சமயத்தைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணுகின்றேன்.சமயமாற்றம் என்பது உங்களது விருப்பத்தேர்வு, ஆனால் சமயம் மாறும்பொழுது, நீங்கள் பிறந்த  சமயத்தின் பெருமையைக் குலைத்து அதை அவமதிக்காதீர்கள்.

நிறையமக்களுக்கு தங்களது தொகுதியில் யார் போட்டியிடுகின்றார்கள் என்பதே தெரியாத போது, நாம் தனி மனிதருக்கு  வாக்களிப்பதா அல்லது கட்சிக்கு வாக்களிப்பதா?

குருதேவ்: இரண்டும் கலந்து பொருந்த வேண்டும். உள்ளூர், நகராட்சி, மாநகராட்சி, மாநிலம் என்றால், அத்தகைய உள்ளூர்வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கலாம். ஆனால், நாடு முழுவதுமான பிரச்சினைகளை மதிப்பிடும்போது, உங்கள் கண்ணோட்டத்தை விரிவாக்கி, நாட்டிற்கு எது நல்லது என்று கவனிக்க வேண்டும்

ஊழல் முழுவதுமாக அகற்றப்படுமா?

குருதேவ்: அகற்ற வேண்டும் என்னும் எண்ணத்துடன் அதை நோக்கிச் செயல்பட வேண்டும். அத்தகைய நிலையைக் கனவு காண வேண்டும். ஊழலற்ற சமுதாயத்தை அடைய கனவு காண வேண்டும். நூறு சதவீதம் முடியாவிட்டாலும் நூறு சதவீதத்தை குறிக்கோளாகக் கொள்ளவேண்டும், அப்போதுதான் 80 முதல் 90 சதவீதம் அடைய முடியும். இப்பூமியில் அற்ப அளவு ஊழல் உள்ள சில இடங்களும் உள்ளன. சட்டத்தின் மூலம் அல்லாது, ஜன லோக்பால் பில் மூலம் அல்லாது, பள்ளி,கல்லூரி நாட்களிலிருந்தே ஒவ்வொரு தனி மனிதனின் நடத்தையின் மூலம் இந்நாட்டை ஊழலற்றதாக நிச்சயம் ஆக்க முடியும். குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மனதில் ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்கும் எண்ணத்தை உருவாக்க வேண்டும். சமுதாய மறுமலர்ச்சியின் மூலமே அதை ஏற்படுத்த முடியும்.

அரசியல் கட்சிகள் ஒவ்வொரு மாதமும் தொடர்புகளும் முறிவுகளும் நிறைந்ததாக காணப்படும் இவ்வேளையில், ஒரு வாக்காளர் ஏமாறாமல் எவ்வாறு  யாருக்கு வாக்களிப்பது?

குருதேவ்: கவனமாக இருக்க வேண்டும். வாக்குக் கேட்பவரின் நோக்கத்தைக் காணுங்கள், அவரது பின்புலத்தை ஆராயுங்கள், ஊழல் நிறைந்த இரண்டு கட்சிகள்  இருந்தால் அவற்றில் ஊழல் சற்றுக் குறைந்த கட்சியைத் தேர்ந்தெடுங்கள்.

இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான இளைஞர்கள் மும்பை சினிமா நட்சத்திரங்களையும், கிரிக்கெட் வீரர்களையும் ஆதர்சமாகக் கொண்டுள்ளனர். அவர்களது மது அருந்துதல் விளம்பர தீங்கிலிருந்து எவ்வாறு காப்பது  ?

குருதேவ்: இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்றும் எண்ணிப் பார்க்க வேண்டும். சில நல்ல கிரிக்கெட் வீரர்களும் விழிப்புள்ள சினிமா நட்சத்திரங்களும் இத்தகைய போதைக்கு எதிராகப் பேசி வருகின்றனர். சிலர் பணத்திற்காக விளம்பரங்களில் ஈடுபடுகின்றனர். நமது இளைஞர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாகவும்,முதிர்ச்சி உள்ளவர்களாகவும் ஆகி கொண்டு வருகின்றார்கள் என்று எண்ணுகிறேன். எளிதில் இரையாக மாட்டார்கள். குறைந்த பட்சம் அவ்வாறு இரையாகிவிட மாட்டார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.

ஆம் ஆத்மி கட்சியைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?

குருதேவ்: நல்ல நோக்கத்துடன் இக்கட்சி துவங்கப்பட்டது. ஆனால் அவர்கள் இன்னும் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டும். மிகக் கவனமாக செயல்பட வேண்டும். அரசியலில் ஈடுபடத் தகுதியில்லாதவர்களை எல்லாம் அவசரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
குற்றவாளிகளைக் கொண்டுள்ள கட்சிகளை போன்று அவர்கள் ஆகி விடக்கூடாது. நிதானமாக நேரம் எடுத்துக் கொண்டு, செயல் பட வேண்டும். நேரே மத்திய அரசு அதிகாரத்தை அடைய வேண்டும் என்று குதிக்கக் கூடாது. மத்திய அரசை அடையுமுன் அனுபவத்தையும், மக்களின் முழு நம்பிக்கையும் அடைய வேண்டும். அனுபவம் மிக அவசியம் ஆகும். படிப்படியாகவே முன்னேற வேண்டும் என்று எண்ணுகிறேன். ஒரு மாநிலத்திலோ, சில மாநிலங்களிலோ, சவால்களை சமாளித்து, உறுதியான பணிகளைச் செய்து அனுபவம் பெற வேண்டும். இல்லையெனில் மத்திய அரசை வெவ்வேறு திசைகளுக்கு ஒவ்வொருவரும் இழுக்கும் நிலையில் ஆகிவிடும். நமக்குப் பலமான மத்திய அரசு தேவை.

சிரியா எகிப்து மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து நூற்றுக்கணக்கான கேள்விகள் வந்துள்ளன. அவர்களுக்கு தாங்கள் கூறும் செய்தி என்ன?

குருதேவ்: மத்தியக் கீழை நாடுகளின் பிரச்சினை மிகப் பெரியது. அங்குள்ள அநீதி, வன்முறை இவற்றைக் கண்டு என் இதயம் வலிக்கின்றது. நாம் முழுமூச்சுடன் பிரார்த்தனை செய்து அங்கு ஒரு அமைதிப்புரட்சி தோன்றுகின்றதா என்று பார்ப்போம்.  அதை தீவிரமாக எண்ணி வேண்டுவோம். நம்பிக்கை இழந்துவிடக் கூடாது. ஒரு நாள் அமைதி ஏற்படும் என்று எதிர்பார்ப்போம். எவ்வளவு முக்கியமற்றதாக இருந்தாலும், பரவாயில்லை, நமது முயற்சிகளை அத்திசையில் தொடர வேண்டும்.

ஆன்மீகவாதிகளைப் பற்றி பலவிதமாக கேள்விப்பட்ட பின்னர் அவர்களைப் பற்றி எனது நம்பிக்கை  ஆட்டம் கண்டு விட்டது. ஒரு துறவி உண்மையானவரா என்று எப்படி அறிவது?

குருதேவ்: உங்கள் கேள்வி நியாயமானது. ஒவ்வொரு துறையிலும், அத்துறைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் மக்கள் இருந்து வருகின்றார்கள். மருத்துவம் அரசியல், ஆன்மீகம், அல்லது வியாபாரம் போன்ற எத்துறையிலும் இது நிகழ்கின்றது.  உண்மையற்ற சிலர் இருக்கின்றார்கள். என்ன செய்ய வேண்டுமோ அதை அவர்கள் செய்வதில்லை.ஆனால் இதையே கருத்தில் கொண்டு எல்லோரையும் ஒரே மாதிரி மதிப்பிட முடியாது. சமுதாய நலனுக்காக உழைக்கும் அநேகர் இருக்கின்றார்கள். எனவே நமக்குள்ளேயே ஒரு வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது.  ஒவ்வொரு துறையிலும் சிலர் அத்துறைக்குரிய ஒழுக்க விதிமுறைகளைப் பின்பற்றுவதில்லை. அவ்வளவு தான்.

நான் வணிகத் துறையைச் சேர்ந்தவன். எவ்வாறு உங்கள் பொருட்களை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றீர்கள் என்று அறிய விரும்புகின்றேன்.

குருதேவ்: பொருளின் தரம் அதைச் செய்கின்றது. ஒரு பொருள் நல்லதாகவும், பயனுள்ளதாகவும், அமைதி மகிழ்ச்சி தரக் கூடியதாகவும் இருந்தால் புத்திசாலிகள் அவற்றை வாங்குகிறார்கள்.எதையும் முன்னேற்ற நான் எதுவும் செய்வதில்லை.அது தானாகவே நடைபெற்று வருகின்றது. முதல் பத்து ஆண்டுகள் வாய்வழிச் சொல் மூலமே நடந்தது. பின்னர் எழுத்து பிரதிகள், புத்தகங்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்தோம். பலர் தாமாகவே முன்வந்து தங்களின் நாடுகளில் கற்பிக்கத் துவங்கினர். இவ்வாறு தான் நிகழ்ந்தது.

ஹிந்து சமயத்தில் நமக்கு  ஏன் இத்தனை கடவுளர்கள்  ?

குருதேவ்: ஏன் இத்தனை வகையான காய்கள் இத்தனை வகையான செடிகள், உயிரினங்கள் பறவைகள் வித விதமான மனிதர்கள் என்று ஏன் நீங்கள் கேட்கவில்லை?
பல்வேறு வகைப்பாடுகளை விரும்பும் இறைமை தானும் வெவ்வேறு விதமான தோற்றங்களைக் கொள்ளலாம். நான் கூறுவது புரிகிறதா? படைப்பில் பல்வேறு வகைப்பாடுகளை விரும்பும் இறைமையை எந்த விதமாகவும் போற்றலாம். பல தோற்றங்களிலும் பல பெயர்களிலும்.இருப்பது ஒரே கடவுளே. அதுதான் இந்தியாவின் அழகு. ஹிந்து சமயத்தின் அழகும் அதுவே. எல்லாவற்றிலும் இணைந்து சூழ்ந்து கொள்வது தான் அதன் அழகு. வழிபாட்டு சுதந்திரம், பேச்சு சுதந்திரம்கோட்பாடுகளில் சுதந்திரம் ஆகியவை உண்டு. பல்வேறு வகைப்பட்டது ஆயினும்ஒரே கடவுள் பல ரூபங்களில்; அனைத்தும் ஒரே உண்மையில் அடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தாங்கள் குருவாக வேண்டும் என்று விருப்பத்தேர்வு செய்தீர்களா அல்லது இவ்வாறு தவறுதலாக நிகழ்ந்ததா?

குருதேவ்: தவறுதலாக நிகழ்ந்தது என்றே எண்ணுகின்றேன். எப்போதுமே நான் யாராகவும் ஆக  வேண்டும் என்று விரும்பவில்லை. இது தானாகவே நிகழ்ந்தது.   மக்கள் என்னிடம் வரத் துவங்கி, எனக்குத் தெரிந்த மிகக்குறைந்த விஷயங்களை கற்கத் துவங்கினார்கள். அவ்வாறு தான் அனைத்துமே தொடர்கின்றன.

குருதேவ்! தாங்கள் எங்கிருக்கின்றீர்கள் என்பது யாருக்கும் தெரியாமல் நீங்கள் தொலைவில் நகர்ந்து விடுவது உண்டா?

குருதேவ்:  இப்போது கூட நான் எங்கிருக்கின்றேன் என்பது மக்களுக்குத்  தெரியும் என்று நான் எண்ணவில்லை. என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் நான் எங்கிருக்கின்றேன் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். என்னுள் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது அனுதினமும் நான் சற்று நேரத்திற்கு காணாமல் போய்விடுவேன். ஒவ்வொரு ஆண்டும் ஐந்து நாட்களுக்கு மௌனவிரதத்தில் இருப்பேன். மற்ற நேரங்களில் என்னை சுற்றி நிறைய மனிதர்கள் இருப்பார்கள்.   அவர்களிடமிருந்து ஓடி ஒளிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏனெனில் என் இயல்புக்கு மாறாக நான் எதையும் செய்வதில்லை.

தாங்கள் வாழ்க்கையில் எடுத்துக் கொண்ட மிகப் பெரிய இன்னல் என்ன குருதேவ்?

குருதேவ்: நல்லது! யோசிக்கின்றேன்! ஒன்றல்ல, உண்மையில் என்னன்ன சவால்கள் என் முன் வருகின்றனவோ அதில் நான் குதித்து விடுகின்றேன். போர் காலத்தில் ஈராக் சென்றது போன்ற பல நிகழ்வுகள். தீரச்செயல்கள் எனது விருப்பம்.

தங்கள் பெயரில் ஏன் இரண்டு ஸ்ரீ ஸ்ரீ க்கள் வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்? அது ஒரு யுக்தியாக உள்ளது.

குருதேவ்: ஓ ! மூன்று மிக அதிகம் என்று எண்ணினேன். உண்மையில் சிதார் வித்வானின் பெயரும் என் பெயரும் ஒன்றே ஆனதால் குழப்பம் விளைந்தது.  பெரிய தொலைகாட்சி சேனல்கள் கூட, பண்டிட் ரவிசங்கர் மறைந்த போது என்னுடைய படத்தை ஒளிபரப்பி விட்டார்கள்! அனைவரும் இப்பூமியில் நான் மறைந்து விட்டதாகவே எண்ணினார்கள். நான் இன்னமும் இருக்கின்றேன்.

இது போல் என்னுடைய பெயரும் பண்டிட் ரவிசங்கரின் பெயரும் குழப்பங்களை  விளைவித்தன. பல தடவைகள் மக்கள் என்னுடைய நிகழ்ச்சிக்கு வரும்போது சிதார் கேட்கவே வந்தனர். அது போன்று, பண்டிட் ரவிசங்கருக்கு தியானம் பற்றிக் விபரம் கேட்டுத் தொலைபேசிக் கேள்விகள் வந்தன. ஸ்ரீ ரவிசங்கர் என்பது சாதரணமாக இருக்கும். ஆனால் ஸ்ரீ ஸ்ரீ  என்பது குறிப்பிட்டு காட்டும் அளவில் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் இருவரும் உடன்பட்டு இப்பெயரை ஏற்றுக் கொண்டேன்.

மக்கள் தங்களை பல கேள்விகள் கேட்கின்றார்கள். நாங்கள் இங்கு பல கேள்விகளை கேட்டிருக்கின்றோம். தாங்கள் எங்களை ஏதேனும் கேள்வி கேட்க விரும்புகின்றீர்களா? அக்கேள்வியை எங்களுக்கு ட்வீட் செய்ய விரும்புகின்றீர்களா?


குருதேவ்: உங்களைச் சுற்றி இருக்கும் சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்ய விரும்புகின்றீர்கள் என்று சிந்தியுங்கள். எவ்வாறு உலகிற்கும் உங்கள் நாட்டிற்கும் செயலாற்றுவீர்கள்? என்ன செய்யப்  போகின்றீர்கள்? இவ்வுலகிற்கு என்ன திருப்பித் தரப் போகிறீர்கள்? நீங்கள் அனைவரும் இதைப் பற்றிச் சிந்தித்து, உறுதியான திட்டம் மற்றும் செயல் வழிமுறைகளுடன் முன்வர வேண்டும் என்று விரும்புகின்றேன்.