எடை போடுவதை விட்டுவிட்டு எல்லாவற்றையும் தழுவுங்கள்

பிப்ரவரி 13, 2014

பெங்களூரு, இந்தியா



கேள்வி - பதில்கள்

கே: குருதேவ், கடவுளுக்கும் சத்தியத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? மற்றும் ஒரு குருவுக்கும் சீடனுக்குமான உறவு எப்படி இருக்கவேண்டும்?

குருதேவ்: கடவுள் என்பவர் எங்கோ சொர்கத்தில் அமர்ந்துவாறு, நீங்கள் கைப்பிடிக்க தனது சுண்டு விரலை காண்பித்துக் கொண்டு இருப்பவர் அல்ல; அந்த விரலை நீங்கள் பிடிக்கப் போகையில் அவர் பறந்து போய் விடுபவரும் அல்ல. கடவுள் என்பவர் ஒரு ஆணோ அல்லது பெண்ணோ அல்லது எங்கோ அமர்ந்திருக்கும் யாரோ ஒருவர் அல்ல. இந்த முழு படைப்பின் உச்சபட்ச நன்மை தான் கடவுள். 

கடவுள் என்பது என்ன? கடவுள் என்பது சத்தியம், அழகு மற்றும் அருள். அனைத்துப் பொருளும் ஒன்று தான், அதுவே இந்த உலகில் இருக்கும் ஒரு உள்ளார்ந்த சத்தியம், அந்த ஒன்று அருள் நிறைந்தது, அவ்வளவு அழகானதும் கூட. அதுவே சத்தியம், சிவம், சுந்தரம்! அதுவே கடவுள், அது பேரானந்தமானது. ஒரு ஆசானுக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவு என்ன? அது சகஜமான ஒன்றாக இருக்க வேண்டும். உங்களுடனேயான உங்கள் உறவு என்ன? உங்களிடம் நீங்கள் நேர்மையாக இருக்கிறீர்கள், உங்களிடம் நீங்கள் உண்மையாய் இருக்கிறீர்கள், உங்களிடம் நீங்கள் சகஜமாக இருக்கிறீர்கள். அப்படித் தான் உங்கள் உறவு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன், குருவிடம் மட்டுமல்ல எல்லோரிடமும். எல்லோரிடமும் சகஜமாக இருக்க வேண்டும். அவர்கள் அப்படி நினைக்கிறார்களா இல்லையா என்பது ஒரு பொருட்டல்ல. அது அவர்கள் பிரச்சினை. உங்களைப் பொறுத்தவரையில் நீங்கள் இயல்பாக இருங்கள். அதைத்தான் நான் நம்பிவருகிறேன், அதைத் தான் நான் பின்பற்றி வருகிறேன். உலகத்தின் எந்தப் பகுதியிலும் யாருடனும் நான் சகஜமாக வீட்டிலிருப்பது போல இருக்கிறேன். நான் மக்களை எடை போடுவதில்லை, அவர்களுடனேயே நான் இருக்கிறேன். எல்லோருடனும் சகஜமாக இருக்க முடியவில்லை என்றால், குறைந்தபட்சம் உங்கள் ஆசானிடமிருந்துத் தொடங்குங்கள். உங்கள் 

ஆசானிடம், நேர்மையாக இருங்கள், வீட்டிலிருப்பது போல சகஜமாக இருங்கள். அவ்வளவு தான். இறுக்கம் தளர்ந்து, கவலையை விடுங்கள். நீங்கள் எப்படி இல்லையோ அப்படி நடக்க முயல வேண்டாம். ஒரு நடத்தையை முயன்று பயிற்சி செய்ய வேண்டாம், ‘ஓ நான் என்னுடைய பெற்றோர்களிடம் இப்படி நடக்க வேண்டும், என் அம்மாவிடம் எப்படி நடப்பது, என் நண்பர்களுடன் எப்படி நடப்பது.’ இப்படி செயற்கையாய் இருப்பது பயனளிக்காது. இந்த அழுத்தங்களிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும். அழுத்தத்திலிருந்து விடுபட்டு இருந்தால், உங்களுக்கு நீங்களே உண்மையாய் இருந்தால், இயல்பாய் இருந்தால் மற்றும் உணர்வுபூர்வமாய் இருந்தால், அதுவே போதும். நீங்கள் மற்றவர்களுடன் கொள்ளும் எந்தவித தொடர்பும் ஒத்திசைவாகவும் ஆனந்தமாகவும் இருக்கும்.

கே: நரகம் என்பது என்ன? ஏன் அது உண்டாக்கப்பட்டது? படைத்தவர் அவ்வளவு அன்பை அளிப்பவர் என்றால், ஏன் அப்படி ஒன்றை படைக்க வேண்டும் அல்லது படைப்பதற்கு அனுமதிக்க வேண்டும்?

குருதேவ்: நான் நரகத்தை பார்த்ததே இல்லை, எனவே அதை உண்டாக்கினார் என்று என்னால் சொல்ல முடியாது! இதை அறிவு பூர்வமாய் பார்ப்போம். இரண்டு விதமான அறிவுகள் இருக்கிறது; ஒன்று வேதியல் முறைப்படி உள்ளது; மற்றது பெரு இயற்பியல் (Quantum Physics) முறைப்படி உள்ளது. வேதியல் என்பது வெவ்வேறு தனிமங்கள் பற்றி அறிந்துகொள்வது. அதனுடைய அணு அமைப்பு, மூலக்கூறு அமைப்பு மற்றும் அதனுடைய குணங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்வது.
பெரு இயற்பியலில் எல்லாமே அலை வடிவமாகக் கருதப்படுகிறது, எல்லாமே அணுக்கள் தான். பீரியாடிக் அட்டவணையை (Periodic Table – அணுக்களின் அமைப்பைக் கொண்டு அவற்றின் குணங்களைக் கொண்டு வரிசைப்படுத்தப்பட்ட அட்டவணை) மறந்துவிடுங்கள் என்கிறது; இரும்பு (Iron), செம்பு (Copper), துத்தநாகம் (Zinc) என்று எதுவுமே இல்லை; எல்லாமே வெறும் ஒரு அலை வடிவம் மட்டுமே.

எளிமையாக சொல்வதென்றால், இங்கு இருப்பவை எல்லாம் மரம் என்று சொல்லலாம். இந்த தரை மரம், நாற்காலிகள் மரம், கதவுகள் மரம், ஜன்னல்கள் மரம், கூரை மரம், முழு கட்டிடமும் மரம்; எல்லாமே மரம் – இது பெரு இயற்பியல். வேதியல் என்பது: நாற்காலி மேஜை அல்ல,மேஜை கதவு அல்ல,கதவு கூரையல்ல, கூரை தரையல்ல, இவையெல்லாம் வெவ்வேறு – இதுதான் வேதியல்.
வாழ்க்கைக்கு இரண்டு விதமான அறிவுகள் தேவை. வித்தியாசங்கள், வேறுபாடுகள், குறிப்பிட்ட பொருட்கள், அதன் குணங்கள் என்று வித்தியாசங்களின் அறிவு. மற்றொன்று ஒருமையின் அறிவு. உண்மையில் வைரமும், கரியும் ஒரே பொருளால் (தனிமத்தால்) செய்யப்பட்டது, ஆனால் மக்கள்
வைரத்தை மட்டுமே காதில் அணிகிறார்கள், கரியை அல்ல. வாழ்க்கையில், ஒரு கோணத்தில் வேற்றுமைகளைக் காண்கிறோம், மற்றொரு கோணத்தில் எல்லாவற்றையும் ஒன்றாகவே கருதுகிறோம்; இரண்டுமே அத்தியாவசியம்.

எல்லாவற்றையும் ஒன்றாகக் காணும் போது, தியானம் நிகழ்கிறது, அதுவே சமாதி; அங்கு இரண்டாக பிரிந்து இல்லை. உடம்புக்கு வெளியேயும் உள்ளேயும் காற்று இருக்கிறது. நம் உடம்பிலுள்ள ஒவ்வொரு செல்லும் வெற்றிடங்கள் நிரம்பியது, அவையெல்லாம் வெளி (Space). நம்முடைய தோல், கொசுவலை போன்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது தோலில் இருந்து ஒரு சிறிய துணுக்கை எடுத்து நுண் நோக்கியில் பார்த்தால் அது ஒரு கொசு வலை போல இருக்கிறது. நடு நடுவே அவ்வளவு இடைவெளி. கொசு வலை எப்படி செய்யப்படுகிறது. நிறைய ஓட்டைகள் ஒன்றாக சேர்க்கப்படுகிறது; எல்லாம் வெற்றுவெளி. அதை போலவே, நமது உடம்பிலும் வெற்றுவெளி நிறைந்திருக்கிறது. அந்த வெற்றுவெளி எல்லாம் வித்தியாசமானவை என்று சொல்ல முடியாது, அவை எல்லாமே ஒன்று தான். (வெற்று வெளியில் மூன்று வகை குணங்கள் இருக்கின்றன, அதற்குப் பிறகு வருவோம், அது உயர்ந்த ஞானம்) எல்லாமே ஒன்று தான் என்று உணர்ந்து கொள்வது வேதாந்தம், தியானம், சமாதி. எனவே இந்த ஞானத்தின் பயன் என்ன? இந்த நிகழ் கணத்திற்கு நீங்கள் வர இவை உதவி செய்யும். இந்த கணத்தில் நீங்கள் இருக்கிறீர்கள், இப்போது!

ஏகத்தை அல்லது ஒருமையை, பெரு இயற்பியலின் உண்மையை உங்களை அனுபவிக்க விடாமல் இருப்பது என்ன? பரந்த வானத்தை நம்மால் காணவியலாதபடி நம் பார்வையை புகை போல மறைப்பது நமது மனம் அல்லது ஞாபகம். இது எப்படி நடக்கிறது? இந்தக் கணம் வரை நடந்த எதுவும் இப்போது இருக்கவில்லை! கால ஓட்டத்தில் நிகழ்வுகள் நடக்கிறது, அவை சென்று விடுகின்றன. எந்த நிகழ்வும் அப்படியே நிற்பதில்லை. உதாரணமாக, நாம் இங்கு உட்கார்ந்திருப்பது ஒரு நிகழ்வு. இது அரை மணி நேரத்தில் முடிந்துவிடும், நாம் திரும்ப நமது அறைக்கு சென்றவுடன் அவ்வளவு தான் இந்த நிகழ்வு போய்விட்டது. எது நிற்கிறது என்றால், அந்த நிகழ்வு நம் மனதிலும் ஞாபகத்திலும் ஏற்படுத்தும் பதிவுகள்.

ஒரு நிகழ்வு நடக்கையில் மனம் அந்தப் பதிவை பிடித்துக் கொள்கிறது. இப்படியாக, புதிய நிகழ்வுகள் நடந்தாலும், மனதால் அதைப் புதியதாய்ப் பார்க்க முடிவதில்லை. ஏனென்றால் அதில் ஏற்கனவே ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. கரும்பலகையில் ஏதோ எழுதியிருப்பது போலத் தான். அதில் ஏதாவது எழுதி வைத்து இருந்து, அதை முழுதும் அழிக்கப் படவில்லை என்றால் உங்களால் புதிதாக எழுத முடிவதில்லை. அப்படியே எழுதினாலும், அதில் பயனில்லை; இதைப்போலத்தான் நம் மனதிலும் நடக்கிறது. அப்படி என்றால், எப்படி நம் மனதை நிகழ் கணத்திற்குக் கொண்டு வருவது? ஞாபகம் எப்படி வேலை செய்கிறது என்று அறிந்துகொள்வதின் மூலம் மட்டுமே.

ஞாபகம் என்பது என்ன? ஞாபகம் என்பது ஒரு கனவு போன்றது. ஒவ்வொரு கனவும் ஞாபகத்தைத் தவிர வேறில்லை, மனதில் உள்ள ஒரு பதிவு. ஒரு கனவிலிருந்து விழித்தபின் என்ன சொல்கிறீர்கள்? ‘ஒ, அது வெறும் கனவு’, அது இன்பமான கனவாயிருந்தாலும் பயங்கரக் கனவாயிருந்தாலும் அதைப் புறந்தள்ளி விடுகிறீர்கள். விழித்தவுடன், அது போய்விட்டது என்கிறீர்கள். அதை போலவே, எந்த ஒரு கணத்திலும் விழிப்புணர்ச்சி (ஒருமை மற்றும் முழுமை பற்றிய உண்மையை உணர்வது) ஏற்பட்டவுடன், உயிர்ச் சக்தி பாய்கிறது, நேற்றுவரை நடந்ததெல்லாம் கனவாய்த் தெரிகிறது. உங்கள் எச்சரிக்கையில், விழிப்புணர்வில், பேருணர்வில் 
ஒரு மாற்றம் உடனடியாக ஏற்படுகிறது, பிறகு பெரு இயற்பியலை நீங்கள் அடைகிறீர்கள். 

வேதியலின் பீரியாடிக் அட்டவணையிலிருந்து பெரு இயற்கையின் இயற்பியலுக்கு மாறுகிறீர்கள். ‘ஓ, ஒவ்வொன்றும், எல்லா நிகழ்வுகளும் வெறும் கனவே! இந்த முழு உலகமும் ஒரு கனவே!’ என்று உணர்கிறீர்கள். இந்த உலகம் என்பது என்ன? இந்த உலகம் என்பது ஐம்புலன்களின் அனுபவம். இந்த உலகின் அனுபவம் பார்வை, நுகர்வு, சுவை, தொடு உணர்ச்சி மற்றும் சப்தத்தால் கிடைக்கிறது. நீங்கள் கேட்கும் எல்லா அறிவும் சப்தம் மூலமே. நீங்கள் படிப்பதெல்லாம் பார்வை மூலமே. இந்த புரிந்துணர்வு ஏற்படும்போது, எந்த ஒரு பெருந்துயரும் உங்களிடம் தங்காது. உடனடியாக சக்தி பாய்ந்து, ‘ஓ, இது மிக அழகாய் இருக்கிறது’, என்பதை உணர்கிறீர்கள். வாழ்க்கைக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கிறது.

இது உங்களுக்கு ஒரு பயிற்சி. கொஞ்ச நேரத்துக்கு, திடீரென்று விழித்து எழுந்து இந்தக் கணம் வரை நடந்ததெல்லாம் கனவு போலத்தான் என்பதைப் பாருங்கள். விட்டு விடுங்கள்! இது ஒரு கனவாக இருக்கலாம் என்ற சந்தேகம் கொள்ளுங்கள்; நான் இந்தக் கனவிலிருந்து சில நிமிடங்களில் விழித்துக் கொள்ளப் போகிறேன்.

எல்லா விஷயமும் வெறும் கனவுதான் என்று நீங்கள் உணரும் போது, சங்கடமான நிகழ்வுகளில் சிக்கியிருப்பதினால் ஏற்படும் கவலை, கோபம், துக்கம் மற்றும் துயரம் ஆகிய எல்லாம் திடீரென்று மறைகிறது. எல்லாம் காணாமல் போய் நீங்கள் விடுதலை ஆகிறீர்கள். உங்களுக்குள்ளே சரணாகதி அடையும் போது, ‘ஓ, நான் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறேன்!’, என்பதை உணர்வீர்கள். அந்த உச்ச பட்ச சுதந்திரத்தை அனுபவிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒருநாள் தலையை சிலுப்பிக் கொண்டுச் சொல்லுங்கள், ‘இது முழுதும் ஒரு கனவு தான்!’

இது உங்கள் விழிப்புணர்ச்சியை தூண்டிவிட மட்டுமே. நீங்கள் உணவு உண்ணச் செல்கையில், ‘இது எல்லாம் கனவு என்றால், நான் ஏன் சாப்பிட வேண்டும்?’ என்று கேட்காதீர்கள். நீங்கள் உணவு உண்ணத்தான் வேண்டும்! நம்முடைய புனிதமான பாரம்பரியத்தில் வந்த மாபெரும் ஆசான்களில் ஒருவரான ஆதி சங்கராச்சாரியார், ஒருமுறை தன் சீடர்களிடம் இது முழுதும் கனவு தான் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவர் நடந்து கொண்டிருந்த போது அவர் பின்னே ஒரு மதம் கொண்ட யானை ஓடி வந்தது; எனவே ஆதி சங்கராச்சாரியார் ஓடத் தொடங்கினார். அதற்குப் பிறகு யாரோ ஒருவர் ஆதி சங்கராச்சாரியாரிடம் சொன்னாராம், ‘எல்லாமே கனவு தான் என்று சொல்கிறீர்கள். அந்த யானையும் கனவுதான், பிறகு ஏன் ஓடினீர்கள்?’ அதற்கு அவர் பதிலுரைத்தார், ‘நான் ஓடியது கூட ஒரு கனவு தான்!’ உங்களிடம் ஒரு கனவு கேக் இருந்தால் அதை வெட்ட ஒரு கனவுக் கத்தி தான் வேண்டும். நிஜக் கத்தியை வைத்துக் கொண்டு கனவு கேக்கை வெட்ட முடியாது.

எனவே, நம் இருப்பில் (உயிர் வாழ்வதில்) வெவ்வேறு தளங்கள் உள்ளன; இது உண்மை. இதுதான் இரண்டாய் பிரிந்து நிற்கும் கோட்பாடு. இதுவும் உண்மைதான், ஆனால் வெவ்வேறு விஷயங்கள் உள்ளன.  A என்பது B  ஆக முடியாது, B என்பது C ஆக முடியாது, C என்பது D ஆக முடியாது. ஆனால் இவை எல்லாம் எழுத்துக்களே. எழுத்துக்கள் என்று சொன்னால், A என்பது ஒரு எழுத்து, B என்பது ஒரு எழுத்து, C என்பது ஒரு எழுத்து; இந்த வகையில் எல்லாம் எழுத்துக்களே. வாழ்கையின் இந்த இரண்டு பரிமாணங்களை உணர்ந்துகொண்டால், வாழ்கை உறுதியாகிறது.

கே: குருதேவ், பிரேசிலில் ஏராளமான மக்கள் வாழ்கையின் அர்த்தத்தை தேடிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆன்மீகத்திற்கும் மதத்துக்கும் வித்தியாசம் பலருக்கு தெரிவதில்லை, இது ஒரு தடையாகவே இருக்கிறது. தடையை நீக்கி இந்த மக்களை அன்பு வழி கொண்டு வர அவர்களிடம் என்ன சொல்வது?

குருதேவ்: அதனால் தான் நாம் இதற்கு ‘வாழும் கலை’ என்று பெயரிட்டிருக்கிறோம். இது ஒரு மிக நடுநிலையான, எல்லோராலும் வெகுவாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று. யாராவது கேட்டாலொழிய இங்கே நாம் கடவுளைப் பற்றிப் பேசுவதில்லை. உலகில் உள்ள இந்த பாரபட்சம் தான், உலகின் மிக திடமான ஒரு காலாசாரத்தைத் தின்று கொண்டிருக்கிறது. எல்லாக் கலாசாரத்தின் ஒருங்கிணைந்த வடிவத்தை, பாரபட்சமும் மதவெறியும் சேர்ந்து அழித்துக் கொண்டிருக்கிறது. மதவாதிகள் சிலர் நினைக்கிறார்கள், ‘என்னுடைய மதம் தான் இந்த உலகில் உள்ள ஒரே மதம். இது மட்டுமே என்னை சொர்கத்திற்கு கொண்டு செல்லும். மற்ற எல்லோருக்கும் நரகம் தான்.’

தம்முடைய மதம் மட்டுமே சொர்கத்திற்கு அழைத்துச் செல்லும், மற்ற எல்லோரும் நரகத்திற்கு செல்வார்கள் என்று நினைப்பவர்கள், எல்லோருக்கும் நரகத்தை உண்டாக்குகிறார்கள். நீங்கள் நரகத்தை வேறு எங்கும் தேட வேண்டாம். மனிதர்களுடைய மனம், அதன் வெளிப்பாடு மற்றும் நடத்தையே உலகத்தில் நரகத்தை உண்டாக்குகிறது. துரதிருஷ்டவசமானது.உலகில் உள்ள பல பெரிய மதங்களில் உள்ள மக்கள் இப்படி எண்ணுகிறார்கள், இப்படி நடக்கிறார்கள். அவர்கள் அச்சத்தை தருகிறார்கள். நீங்கள் குற்ற உணர்வு கொள்ளவைக்கப்படுகிறீர்கள், நீங்கள் சதா சர்வ காலமும் வருத்தத்தில் இருக்கிறீர்கள், நீங்கள் எப்போதும் அச்சத்தில் இருக்கிறீர்கள். ‘ஓ, கடவுள் என்னை தண்டிக்கப் போகிறார். மற்ற மதத்தினர் அருகிலே உட்கார்ந்தால், என்ன நடக்குமோ தெரியாது. சாத்தான் என் தலையில் புகுந்துவிடும்’, என்று எண்ணுகிறீர்கள்.

சாத்தான் ஏற்கனவே உங்களுக்குள் பயம் என்ற வடிவில் உட்கார்ந்திருக்கிறது, அது புதிதாக நுழைய வேண்டாம். அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது. இதை போன்ற வேறு சில எண்ணங்களும் இருக்கின்றன, ‘எனக்குப் பெண்களுடன் ஒத்துப் போகாது,’ அல்லது ‘எனக்கு ஆண்களுடன் ஒத்துப் போகாது.அவர்கள் வித்தியாசமானவர்கள். அவர்கள் வேறு மாதிரி இருக்கிறார்கள். அவர்கள் வேறு மாதிரி உடை உடுத்துகிறார்கள்.’ அல்லது ‘அவர் பல கடவுள்களை நம்புகிறார், அல்லது வேறு கடவுளை நம்புகிறார்கள்.’ இதைப் போன்ற எண்ணங்கள் நம் பூமியின் ஒற்றுமையை குலைக்கிறது. 

மனித குலத்தின் ஒற்றுமையையே குலைக்கிறது. இல்லையா? இந்தநாட்டிற்கு, பலர் வந்து மதமாற்றதில் ஈடுபடுகின்றனர். இந்த நாட்டில், இந்து என்பது ஒரு வாழ்கை முறை மட்டுமே. அது ஒரு மதமாகவே இருந்ததில்லை. அந்தக் காலத்தில், மக்கள் அவரவர்கள் தமக்கென ஒரு வாழ்கை முறையைக் கொண்டிருந்தனர், அது பல விதமாக இருந்தது. சிலர் மரத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி மரத்தை வழிபட்டனர். சிலர் சந்திரனில் கடவுள் இருப்பதாகவும் அலல்து சூரியனில் கடவுள் இருப்பதாகவும் எண்ணினார்.

அருணாச்சலப் பிரதேசத்தில் (இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் சீனாவையும் திபெத்தையும் எல்லைகளாகக் கொண்ட பகுதி), தோன்யி-போலோ என்ற மதம் இருக்கிறது. தோன்யி-போலோ என்றால் சூரியனும் சந்திரனும் அவர்களின் கடவுள்கள். அவர்கள் சூரிய சந்திரன்களை மிகவும் மதிக்கிறார்கள். மலைகளையும் நதிகளையும் மதிக்கிறார்கள். அங்கே சென்று அவர்களிடம், ‘ஹே, என்ன செய்கிறீர்கள்? நீங்கள் இயற்கையை வழிபடுகிறீர்கள். இது நல்லதல்ல. என் கடவுளை வணங்க வேண்டும்.’ என்று சொல்லி மதமாற்றம் செய்கிறார்கள். அவர்கள் மீது அதை திணிக்கிறார்கள். பல நூறு வருடங்களாக பின்பற்றி வரும் மதத்தை சரியில்லை என்று சொல்லி மதமாற்றம் செய்கிறார்கள். ‘இந்தப் புத்தகத்தை மட்டுமே நம்ப வேண்டும், அப்போதுதான் நீங்கள் சொர்கத்திற்குச் செல்வீர்கள், இல்லையென்றால் கடவுள் உங்கள் மீது கோபம் கொள்வார்.’ என்று சொல்கிறார்கள். மக்களின் நெஞ்சங்களிலும் மனங்களிலும் குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். குடும்பங்கள் கூடப் பிரிக்கப்படுகின்றன. மதம் மாறுபவர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து நிறையப் பணம் கிடைக்கிறது. மருத்துவம், கல்வி என எல்லாவற்றிற்கும் நிபந்தனைகள். மதம் மாறினால் உங்களுக்கு எல்லாம் கிடைக்கும். இந்த பாவப்பட்ட மக்களை தங்கள் பாரம்பரியத்திலிருந்தும் மதங்களிலிருந்தும் மூலைச் சலவை செய்து வெளியே இழுக்கிறார்கள்.

ஒரு மதத்தில் நல்ல விஷயம் ஏதும் இல்லையென்றால் அதை விட்டுத்தள்ள வேண்டும். சரியிலாதவற்றை விட்டுவிட வேண்டும். ஆனால், நல்ல விஷயங்கள் இருக்கும் போது, ஏன் அந்தக் கலாசாரத்தை அழிக்க வேண்டும். இயற்கையை போற்றுவது ஒரு மிக அழகான விஷயம். இங்கே இந்துப் பாரம்பரியத்தில், மரத்தை வெட்ட வேண்டுமானால் நீங்கள் அதனிடம் அனுமதி வாங்க வேண்டும். வேறு இடத்தில் அதே வகையில் ஐந்து மரங்கள் வளர்ப்பதாக சத்தியம் செய்ய வேண்டும்.

‘நான் இங்கே என் வீட்டைக் கட்டுவதற்காக உன்னை வெட்ட வேண்டியிருக்கிறது.’ என்று மரத்தோடு பேசுவார்கள். உணர்ச்சியோடு பேசி வேறு ஒரு இடத்தில் அதே போன்ற ஐந்து மரங்கள் வளர்ப்பதாக சத்தியம் செய்வார்கள். பிறகு ஐந்து மரக்கன்றுகளை கொண்டு வந்து மரத்தின் முன்பு வைத்துக் காண்பித்த பிறகே வெட்டுவார்கள். அப்படி ஒரு அருமையான பாரம்பரியம். இதைப் போற்றி வரவேற்க வேண்டாமா? மக்கள் ஹார்வர்டில் படித்துவிட்டு இங்கே வந்து சொல்கிறார்கள், 

‘மரத்தோடு பேசும் நீங்கள் முட்டாள்கள். இதெல்லாம் வெற்று மூட நம்பிக்கைகள். இதையெல்லாம் நீங்கள் செய்யக்கூடாது. என்ன சடங்கு இது? இதை ஏன் நீங்கள் செய்ய விரும்புகிறீர்கள்?’
பாவம் அந்த கிராமத்து மக்கள் இதைக்கேட்டு குழம்பிப் போய்விடுகிறார்கள். பல நூற்றாண்டுகளாக நம்பிவரும் அவர்களிடம், திடீரென்று யாரோ வந்து நீங்கள் செய்வது எல்லாம் மூடப் பழக்க வழக்கம் என்கிறார்கள். சில தொன்மையான மரபுகளை நாம் போற்ற வேண்டும். மக்களை மதம் மாற்றி அவர்களிடம் கூறுகிறார்கள், ‘என் கடவுள்தான் உங்களை சொர்கத்திற்கு அழைத்துச் செல்ல முடியும், மற்ற எல்லாம் உங்களை நரகத்திற்குத் தான் இட்டுச் செல்லும்.’ இப்படியாக அச்சத்தை ஏற்படுத்தி மனதை மாற்றும் செயல்கள் நம் நாட்டில் அதிகரித்து வருகிறது.

நேற்று கூட இதைப் பற்றி ஒருவர் என்னிடம் சொல்லிகொண்டிருந்தார். இது வருத்தமான விஷயம். மதத்திலிருந்து நாம் ஆன்மீகத்திற்கு மாற வேண்டும். மத ரீதியான மன நிலையிலிருந்து உயர்ந்து, நல்லவை எங்கிருந்தாலும் அவற்றை உணர்ந்து போற்றும் ஆன்மீகத்திற்குச் செல்ல வேண்டும். இந்த மதம் சார்ந்த மன வெறியை எப்படி தகர்ப்பது  என்று பார்க்க வேண்டும். மெதுவாக ஆனால் உறுதியாக இதில் நாம் வெற்றிகொள்வோம் என்பது நிச்சயம்.

கே: குருதேவ், எனக்கு 28 வயதாகிறது, என்னைத் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று  ஆண்கள் நிராகரிக்கும் போது நொந்து போகிறேன். என்னுடைய உள் அழகை பார்ப்பதில்லை. ஆன்மீகத்தினால் உள் அழகு கிடைக்கிறது. புற அழகைப் பார்த்து மக்கள் நம்மை எடைபோடும் போது உள்ளே அழகாகி என்ன பயன்?


குருதேவ்: கவலை வேண்டாம், அவர்கள் உங்களுக்கு இணையானவர்கள் அல்ல. புற அழகை வைத்து எடை போடும் அவர்கள் மிகத் தாழ்ந்த நிலையில் இருக்கிறார்கள். உங்களை புரிந்து கொள்ளக் கூடிய நல்லவர் ஒருவரை நீங்கள் காண்பீர்கள். இதைப் பற்றி வருந்துதல் கூடாது. உங்கள் மதிப்பை நீங்கள் உணர்ந்திருந்தால், உங்கள் மதிப்பை உணரும் ஒருவர் வருவார். கவலை வேண்டாம்.