நீங்கள் சகஜமாக உணர்கிறீர்களா?

ஜனவரி 11, 2014

பெங்களூரு, இந்தியா


கேள்வி - பதில்கள்

கே: குருதேவ், நான் ஒரு பக்திமான் அல்ல, அப்படி இருந்ததும் கிடையாது. இதனால் நான் ஒரு பெரும்பகுதி அனுபவத்தை பெறவில்லை என்பதை உணர்கிறேன். இதை நான் எப்படிக் கையாள்வது? இது எப்போதாவது நடக்குமா?

குருதேவ்: பக்தி என்றால் என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? வெறுமே அழுவதும், பாடுவதும், இதையா பக்தி என்று நினைத்து கொண்டிருக்கிறீர்கள்? அல்லது என் பின்னே ஓடிவருவதா? இல்லை! உங்கள் விழிப்புணர்வின் மிக எளிமையான நிலை இது. உங்கள் விழிப்புணர்வின் மிக எளிமையான நிலையில் இருப்பதே பக்தி என்பது.

நீங்கள் குழந்தையாக இருந்த போது என்ன செய்துகொண்டிருந்தீர்கள் என்று சற்றே ஞாபகப்படுத்திப் பாருங்கள். உங்கள் விரல்களை, உங்கள் கைகளை, அல்லது விளக்கை, வண்ணங்களை பார்த்துக் கொண்டிருந்தீர்கள். செடிகளில் உள்ள மலர்களைப் பார்த்தீர்கள், அவற்றைச் சென்று தொட முயற்சித்தீர்கள், அவை எல்லாம் அசைந்து கொண்டிருந்தது. குழந்தையாக உங்களிடம் இருந்த அந்த கள்ளமில்லா நிலையை ஞாபகப்படுத்திப் 

நீங்கள் உங்கள் வீட்டிலிருகும்படியான ஒரு உணர்வை, பாதுகாப்பான உணர்வை, பத்திரத்தைத் தரும் அந்தத் தருணமே பக்தி. பாதுகாப்பான உணர்வை, பத்திரத்தை, முழு வசதியை, எளிதான இருப்பை, தம்மைச் சேர்ந்த ஒரு உணர்வை பெரும் தருணமெல்லாம்; உங்கள் அம்மா வீட்டிலிருக்கும்படியான உணர்வு, அதுவே பக்திதன் அம்மா காருக்குள் இருக்கும் போது அந்தக் குழந்தை இங்கும் அங்கும் சகஜமாக நகர்கிறது. அங்கிருந்து தன் அம்மா மறைந்தவுடன் அந்தக் குழந்தைக்கு நடுக்கம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே அந்த பாதுகாப்பான உணர்வு, அல்லது எளிமையாய்ச் சொன்னால் ஒரு எளிதான உணர்வு.

நீங்கள் சகஜமாக உணர்கிறீர்களா? ஒரு நம்பிக்கை, எதையும் எடைபோடாத தன்மை மற்றும் அன்பு செய்யப்படும் நிலை ஆகியவற்றை உணர்கிறீர்களா? அதுவே பக்தி. ஸ்ரீ கிருஷ்ண பகவான் முதலில் அர்ஜுனனிடம் சொல்கிறார், ‘நீ எனக்கு மிகவும் அன்பானவன்’, பிறகு அர்ஜுனன் சொல்கிறான், ‘நீயும் எனக்கு அன்பானவன் தான்.’

எனவே நீங்கள் இறைவனுக்கு அன்பானவர் என்று இறைவன் உங்களிடம் சொல்கிறார், அதை கேளுங்களேன். இறைவன் உங்களுக்கு அன்பானவர் என்று நீங்களும் உணரும் போது, அதுவே பக்தி. நாம் இறைவனுக்கு நிச்சயம் அன்பானவர்கள் தான். இறைவனும் நமக்கு அன்பானவராய் இருக்கும் போது, அது பக்தி என்று அழைக்கப்படுகிறது. அவர் நம் மீது அன்பு செய்வதை சந்தேகப்படவே கூடாது. முதலாவது என்னவென்றால்,இறைவன் நம் மீது அன்போடு இருக்கிறாரா, குரு (ஆசான்) நம் மீது அன்போடு இருக்கிறாரா, இந்த உலகம் நம் மீது அன்போடு இருக்கிறதா என்ற சந்தேகம் நம்மிடம் எழும் போது, நம்மில் பக்தியோ அல்லது அன்போ எழுவதில்லை. இந்த முழு உலகமும் உங்களை அன்பு செய்கிறது, நீங்களும் இந்த உலகை அன்பு செய்கிறீர்கள் என்று முதலில் நம்புங்கள், பிறகு உங்களை நீங்களே பக்திமான் என்று அழைத்துக் கொள்ளலாம்.

கே: எங்கள் (பராகுவே நாட்டில்) காலாச்சாரத்தில் குழந்தையின் நடத்தை சரியில்லாத போது பெற்றோர்கள் அவர்களை தண்டிப்பார்கள். இது ஒரு விதமான வன்மைச் செயலல்லவா? இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

குருதேவ்: பெற்றோர்கள் குழந்தைகளை கண்டிக்கலாம், தண்டித்தல் என்ற வார்த்தையை உபயோகிக்க மாட்டேன், ஆனால் ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும். அதிகம் இருக்கக் கூடாது. கண்டிப்பதற்கும் தண்டிப்பதற்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. வன்முறையாய் நடந்துவிட்டு அது கண்டித்தல் என்று நியாயப்படுத்தக் கூடாது. அதே நேரத்தில், எல்லாவற்றையும் கடுமை, வன்முறை என்று சொல்லிவிட்டு குழந்தைகளை கண்டிக்காமலேயே விட்டுவிடக் கூடாது. சிறு வயதிலேயே அந்தக் குழந்தையை கண்டிக்காமல் விட்டதற்கு அந்தக் குழந்தை பிற்காலத்தில் உங்களைத் தான் பொறுப்பாக்கும்.

எனவே, கண்டித்தல் என்று ஒன்று இருக்கிறது, கண்டித்தலுக்கு ஒரு படி அப்பால் தண்டித்தல், அதன் பிறகு கொடுமை செய்வது அல்லது குழந்தை மீது வன்முறை பிரயோகிப்பது. வன்முறையை நிச்சயம் கண்டனம் செய்ய வேண்டும்.

குழந்தைகள் மீது எக்காரணம் கொண்டும் வன்முறை பிரயோகிக்கக் கூடாது, ஏனென்றால் அது அவர்களுக்கு மரத்துப் போய்விடும், அதனால் அவர்களும் வன்முறையைக் கையிலெடுப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள். சமூகத்தில் நடக்கும் பல குற்றச் செயல்களுக்கு வீட்டில் நடக்கும் பெற்றோர்களின் வன்முறையே காரணம். குழந்தையை அவர்கள் நடத்தும் வழி. வீட்டில் குழந்தைகளை வளர்க்கும் போது சில நேரங்களில் குழந்தைகளிடம் புருவத்தை உயர்த்த வேண்டும் (கோபம் காண்பிப்பது). நீங்கள் கண்டிக்க வேண்டும். அதன் பிறகு அவர்கள் நல்ல குடிமக்களாகிறார்கள்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் குழந்தைகளை அவர்கள் விருப்பப்படி சுதந்திரமாக இருக்க விட்டு விட்டு கண்டிக்காமல் இருந்தால் என்ன ஆகும் என்று கற்பனை செய்து பாருங்கள். நம்மை தண்டிப்பார்களோ என்ற சிறு பயம் கூட இல்லாமலிருந்தால் காட்டுத்தனமாகவும் கட்டுப்படுத்த முடியாதவர்களாகவும் இருப்பார்கள்! அவர்கள் வளர்ந்தால், என்னை ஏன் இப்படி வளர்த்தீர்கள் என்று கேட்பார்கள்? நான் குழந்தையாய் இருந்தபோது எது சரி எது தவறு என்று எனக்கு ஏன் சொல்லவில்லை என்று கேட்பார்கள். இந்தக் கேள்வியை கேட்பார்கள்.

எனவே, முதலில் கண்டிக்க வேண்டும், இரண்டாவது கட்டமாக அவசியம் தேவையென்றால் தண்டிக்கலாம்; எப்போதாவது. ஆனால், அவ்வளவு தான், அதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். குழந்தைகள் மீது எப்போதும் வன்முறை பிரயோகிக்காதீர்கள்.

கே: குருதேவ், ஒரே சித்தம் தான் ஆள்கிறது என்றால், ஏன் சில விஷயங்கள் நல்லதாகவும் சில விஷயங்கள் தீயதாகவும் கூறப்படுகிறது?

குருதேவ்: நல்லவை தீயவை என்பன எப்போதும் ஒன்றைச் சார்ந்த விஷயங்களே. எதுவுமே முழுமையாக இல்லை. நீங்கள் அண்டவெளிக்கு சென்றால் அங்கே கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என திசைகளே கிடையாது. நீங்கள் பூமியில் இருக்கும் போது கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு என்ற திசைகள் இருக்கிறது. இது ஒரு சார்பான விஷயம்.

வைட்டமின்கள் நலதா தீயதா என்று கேட்டால், ஒரு அளவுக்குள் நல்லது, அதிகமாகி விட்டால் தீமை தரும் என்றே சொல்வேன். உங்களுக்கு பால் நல்லதா? ஆம், நல்லது தான், உங்கள் தேவைக்கு மட்டுமே அருந்தும் போது. தேவையை விட இரண்டு மடங்கு அதிகம் உட்கொண்டால் அதே பாலினால் தீமை தான் விளையும். அதை போலவே, நீங்கள் நோய்வாய் பட்டிருக்கும் போது, விஷம் உங்கள் உயிரைக் காக்கும். ஆனால் நீங்கள் நலமாக இருக்கும் போது அதே விஷம் உங்கள் உயிரைப் பறிக்கும்.

கே: குருதேவ், ஒருவரது விருப்பத்தை காட்சியாக கற்பனை செய்வதால் அது நிறைவேறும் என்று கூறுகிறார்கள். காட்சிகளை கற்பனை செய்து பார்ப்பது என்றால் நிகழ் காலத்தில் இல்லாமல் இருப்பதா?

குருதேவ்: இங்கு காட்சிகளை கற்பனை செய்து பார்ப்பது என்பது சங்கல்பம் எடுத்துக் (மன உறுதி) கொள்வது. ஆனால் சங்கல்பம் செய்து கொள்வதற்கும் காட்சிகளின் கற்பனைக்கு முயற்சி செய்வதற்கும் வித்தியாசம் உள்ளது. காட்சிகளை கற்பனை செய்ய முயற்சி எடுப்பது நல்லதல்ல.அதன் வித்தியாசத்தை இப்படிக் கூறலாம். நான் ஜெய்பூர் செல்ல விரும்புகிறேன், என்பது உங்கள் எண்ணம். இப்போது நீங்கள் அமர்ந்து ஜெய்பூரின் வரைபடத்தை அங்குள்ள கட்டிடங்களை பார்க்கவில்லை; கண்களை மூடிக்கொண்டு ஜெய்பூரின் இளஞ்சிவப்பு நகரத்தை இளஞ்சிவப்பு கட்டிடங்களை கற்பனை செய்ய முயற்சி எடுக்கவில்லை; அப்படிச் செய்தால் அது நல்லதல்ல. இது கற்பனை செய்வது. ஜெய்பூர் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருப்பது நல்லது, உங்களால் செல்ல முடியும். ஆனால், அமர்ந்துகொண்டு ஜெய்பூரின் சாலைகளையும் கட்டிடங்களையும், மற்ற எல்லாவற்றையும் காட்சிகளாகக் கற்பனை செய்ய முயற்சித்தால் சற்று நேரத்தில் தலைவலிதான் வரும். எனவே இந்தத் தவறான கற்பனை செய்யும் வழியை விட்டொழிக்க வேண்டும்.

இந்த புத்தகங்களில் சிலர் கூறியிருப்பது போல, உலகில் பலர் தாம் விரும்பும் தம் நிலையை காட்சியாக கற்பனை செய்ய முயற்சிக்கிறார்கள். முதலமைச்சராக மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கொண்டு செயலாற்றுதல் போன்ற கற்பனைகளில் சிலர் ஈடுபடுகிறார்கள். நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மக்கள் இதைச் செய்து பின்னர் அதனால் மனத்தாழ்ச்சிக்கு ஆளாகிறார்கள்.

சங்கல்பம் என்பது ஒரு விருப்பம் அல்லது ஆசை கொள்வது. இன்னும் சொல்லப் போனால் அதை நீங்கள் எடுத்துக் கொள்வதில்லை, அது உங்களுள் எழுகிறது. அது எழும்போது நீங்கள், ‘அன்பான இறையே, இது எனக்கு நன்மையைச் செய்யுமானால் எனக்குத் தாருங்கள். இல்லையென்றால், இதைவிட மேலானதை எனக்குத் தாருங்கள்., நான் ஏற்றுக் கொள்கிறேன்.’ என்று சொல்லியவாறு அதை இறைவனிடம் கொடுத்துவிடுங்கள். அதை தான் நீங்கள் சொல்லி கடவுளிடம், இறைவனிடம், பிரபஞ்சத்திடம் அதை காணிக்கையாக்கி விடுங்கள்.

கடவுள் நம்பிக்கை இல்லையென்றால் பரவாயில்லை, பிரபஞ்சத்திடம் காணிக்கையாக்கி விடுங்கள். நான் இந்த எண்ணத்தை பிரபஞ்சத்திற்கு காணிக்கையாக்குகிறேன். இதைவிட மேலானது ஏதாவது இருந்தால், அது நடக்கட்டும், நீங்கள் இதை மறந்துவிட்டு சாதாரணமாய் இருங்கள்.

கே: குருதேவ், நான் ஒரு கணினி வலைப்பின்னல் பொறியாளர். ஆன்மீகத்திற்கும் வலைப்பின்னல் தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொடர்பு என்ன என்று கேட்க விரும்புகிறேன்? இந்த வலைப்பின்னலை ஆன்மிகம் எப்படி உபயோகப்படுத்திக் கொள்வது.

குருதேவ்: நேற்று நடந்த சத்சங்கத்தை வலைப்பின்னலில் ஒளிபரப்பியதை கண்டிருப்பீர்கள். உலகமெங்கும் பலர் அப்போது அதன் தொடர்பிலிருந்தனர். எழுபதுக்கும்  மேல் உள்ள நாடுகளிலிருந்து மக்கள் தொடர்பிலிருந்தனர்.

நீங்கள் நிச்சயம் வலைப் பின்னலை உபயோகப்படுத்த வேண்டும், அதில் உள்ள உங்கள் வலைப் பக்கத்தில் எழுதி மக்களுக்கு இதைத் தெரியப்படுத்த வேண்டும். இப்போது வலைப்பின்னல் மூலம் எந்த ஒரு தகவலையும் பெற முடியும். ரிக் வேதத்திலிருந்து ஒரு ஸ்லோகம் வேண்டுமானால் நீங்கள் நூலகத்திற்குச் சென்று தேடத் தேவையில்லை. வலைப்பின்னலுக்குச் சென்றால் அதிலிருந்து தரவிறக்கம் செய்துகொள்ளலாம். எனவே வலைப்பின்னல் உலக அறிவை உங்கள் விரல் நுனியில் கிடைக்கச் செய்கிறது. அது பயன்படுத்தப் பட வேண்டும். நாம் அனைவரும் உள்ளேயிருந்து ஒரு வலையால் பின்னப்படிருக்கிறோம் அதுவே வலைப்பின்னல்.

கே: மனநிலை குன்றிய மக்களுக்கு நாம் என்ன செய்வது? அவர்களுக்கு குணமளிக்க முடியுமா?

குருதேவ்: அவர்களுக்கென்று இருப்பிடம் செய்யப்பட வேண்டும். அரசுக்கு சொந்தமான மனவளம் குன்றியவர்களுக்கான இல்லங்கள் உள்ளது. அவர்களை அங்கே வைக்க வேண்டும்.அவர்களுக்கு தெருவில் உணவளிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்தாதீர்கள். அவர்களை தெருவிலே பிச்சை எடுப்பவர்களாக ஆக்கிவிடக் கூடாது. அவர்களுக்கு குணமளிக்கவும் வேண்டாம்.


அவர்கள் நம்மிடமிருந்து தொண்டைப் பெறுவதற்காக வந்திருக்கிறார்கள். நீங்கள் குணமளித்த பின்னும் அவர்கள் அப்படியே இருக்கலாம், பிறகு நீங்கள் குணமளிக்கும் முறையை சந்தேகப்படுவீர்கள். ‘ஓ, நான் அவருக்கு தினமும் குணமளிக்கிறேன், ஆனாலும் எதுவும் மாறவில்லை,’ என்று நினைப்பீர்கள். எனவே குணமளிப்பதற்கு பதில் அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள்.