கோபத்தை கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?


7 – நவம்பர் – 2012 – பெங்களூர் - இந்தியா

கேள்வி: ஒவ்வொரு சத்சங்கத்துக்கும் முன் கூட்டியே தயார் செய்வீர்களா? அல்லது சத்சங்கத்தில் வந்தபின் யோசித்து தியானப் பயிற்சி அளிப்பீர்களா?

குருதேவர்: தற்சமயம் மனதில் என்ன வருகிறதோ, அதுதான். முன் கூட்டி தயார் செய்வதில்லை. நான் எப்போதுமே தயார்.

கேள்வி: நடு நிலைமை தவறாமல் நேர்மையை எப்படி கடைப்பிடிக்கலாம். நான் செய்வது சரியல்ல என்றால் நான் பின் வாங்கி விடுகிறேன். அது என் மன்னித்து மறக்கும் இயல்பைப் பாதிக்கிறது.

குருதேவர்: யாருக்கெல்லாம் கோபம் வருகிறதோ, அதன் காரணம் அவர்கள் அநீதியை ஏற்றுக்கொள்ள மறுப்பதால் தான். அவர்கள் நேர்மை என்று நினைப்பது ஒரு குறுகிய எல்லைக்குள் இருக்கும். இவ்வுலகில் எல்லா விதமான நிகழ்ச்சிகளும் நிகழ்கின்றன. நீ பொறுமையாய் இருக்க வேண்டும்.

நேர்மையை மட்டும் மனத்தில் வைத்து,“நான் சரியான வழியில் செல்வேன். எல்லோரும் சரியான வழியில் செல்ல வேண்டும். அதுவும் இப்பொழுதே செல்ல வேண்டும்” என்றால் அது நடக்காது. எல்லோரும் நல்வழி நடக்க வேண்டும் என்று நினைப்பது சரிதான். ஆனால் அவர்களுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். பொறுமையோடு மற்றவர்களை நல்வழிப் படுத்தலாம். கோபத்தால் முடியாது.

நான் நேர்மையானவன். மற்றவர்களும் நேர்மையாக நடக்க வேண்டும் என்று கேட்கும் போது அப்படி இல்லா விட்டால் கோபம் வரும். கோபம் வரும் போது நீ நேர்மையை இழந்து விடுகிறாய். நீ கோபம் அடைவது மற்றவர் நல்வழியில் செல்லாமல் தவறு செய்வதற்கு ஒப்பானது.

இந்த இடத்தை ஒருவர் சுத்தமாக வைத்துக் கொள்ள வில்லை. இந்த இடம் மிகவும் அழுக்காக இருக்கிறது என்று வைத்துக் கொள். நீ இங்கு வந்தவுடன் கோபம் கொள்கிறாய். அவர் இந்த இடத்தைச் சரியாக சுத்தம் செய்யவில்லை. இது அவர் தவறு தான். ஆனால் நீ கோபம் கொண்டு அவர் மேல் சத்தம் போடுவது மற்றொரு தவறாகும்.

இரண்டு தவறுகள் ஒரு தவறைச் சரியாக்க முடியாது. எனவே, யாராவது தவறு செய்தால், பொறுமையாக ஒரு முறை, இரண்டாவது ,முறை, மூன்றாவது முறை… சொல்லி அவருக்குச் சொல்லிக் கொடுத்து வேலை வாங்க வேண்டும்.

மற்றவர்களுக்குச் சொல்லித் தர உனக்கு அதிக அளவு பொறுமை இருக்க வேண்டும். இன்றைய பள்ளி ஆசிரியர்களுக்கு இது பெரிய சவால். அவர்கள் மாணவர்களுக்கு 10 முறை சொன்னாலும் அவர்கள் ஆசிரியரின் பேச்சைக் கேட்பதில்லை. இன்றைய பள்ளிக் குழந்தைகளுக்கு கவனக் குறைவு நோய் இருக்கிறது. குழந்தைகள் சரியாக பாடத்தைக் கவனித்துக் கேட்பதில்லை. ஆசிரியருக்கு மிகவும் பொறுமை அவசியம்.

பொறுமை என்பது அரிய நற்குணமாகும். ஆறு செல்வங்களுள் ஒன்று.

ஷம் (அமைதி அல்லது மன அமைதி), தமா (சுயக் கட்டுப்பாடு), உபரதி ((உலகப் பொருட்களின் மேல் பற்றின்மை), திதீக்ஷா (சகிப்புத் தன்மை), ஷ்ரத்தா (நம்பிக்கை), சமாதானா ( சமநோக்குப் பார்வை அல்லது மனத்தின் ஒருப்பாடு (ஏக சிந்தனை) )
சமாதானா என்பது திருப்தியோடும், பொறுமையோடும் இருப்பது. இந்தக் குணம் கட்டாயமாக இருக்க வேண்டும்.

கேள்வி: வாழ்வதற்கு உன்னை விட உயர்ந்த நோக்கத்தை எப்படித் தேடுவது? தேடிக் கண்டுபிடிக்க ஏதாவது வழி இருக்கிறதா? அல்லது அந்த நோக்கம் உன்னைத் தேடி வருமா?

குருதேவர்: வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். நீ என்னவாக விரும்புகிறாய் என்ற தொலைநோக்கப் பார்வை, நீ என்ன செய்ய விரும்புகிறாய் என்று உனக்குத் தெரிய வேண்டும்.

ஒன்று: உன்னைப் பற்றிய தனி நோக்கம்.  வாழ்க்கையில் இதை அடைய விரும்புகிறேன். இதையும்… இதையும்…. அடைய வேண்டும்.

மற்றது: இந்த பூமிக்கான நோக்கம். இந்த பூமிக்கு நான் என்ன கொடுக்க விரும்புகிறேன்?
பொதுவாக உன் நோக்கத்தின் பின், உனக்கு என்ன கிடைக்கும் என்று நீ பார்க்கிறாய். அதனால் தான் இரண்டு நோக்கங்கள் வேண்டும் என்று சொல்கிறேன். ஒரு நோக்கத்தால் உனக்கு என்ன கிடைக்கும். மற்ற நோக்கத்தை அடைய நீ என்ன கொடுக்க விரும்புகிறாய்? 
இரண்டு நோக்கங்களும் ஒன்றாய் இருந்தால், அது இன்னும் நல்லது.

கேள்வி: நம் உணவுப் பழக்கத்தை மாற்றி கோபத்தை அடக்க முடியுமா? உப்பு, காரம் புளிப்பான உணவை உண்பதால் நிறைய கோபம் உண்டாகும் என்று சொல்கிறார்களே?

குருதேவர்: நீயே அனுபவத்தில் உணரலாம். ஒரு வாரத்துக்கு உப்பு, மிளகாய்ப் பொடியும் சேர்த்துக் கொள்ளாதே. என்ன ஆகிறது என்று பார். அப்படி இருக்க முடியும். ஆனால் சிலர் நிறைய உப்பு, மிளகாய் சாப்பிடுபவர்கள் கூட கோபம் கொள்ளாமல் இருக்கிறார்கள். அப்படி நடக்கவும் வாய்ப்பு இருக்கிறது.