இயற்கையான மனவளர்ச்சி தேவை ....


09 – ஜூலை – 2012 குருதேவருடன் சத்சங்கம், ஜெர்மன் ஆசிரமம் 
 
கே: அன்பான குருதேவ், ருத்ர பூஜையின் உண்மையான அர்த்தமும் முக்கியத்துவமும் என்ன?
குருதேவ்: ருத்ராபிஷேகம்  என்பது ஆகாசத்திலிருந்து  (அண்டவெளி)  பதிவிறக்கம் செய்யப்பட்ட பழமையான ஒரு மந்திர உச்சாடனம். பழங்காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் தியானத்தில் அமர்ந்த போது அவர்கள் காதில் கேட்டவற்றை எல்லாம் மற்றவர்களுக்கு மாற்றி அளித்தனர்.  ருத்ராபிஷேகத்தின்  விளைவு என்னவென்றால் அது  நேர்மறை சக்தியை உருவாக்கி,எதிர்மறை அதிர்வுகளை நீக்கிவிடும். ருத்ராபிஷேகத்தினைப் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கின்றது. அது நடக்கும்பொழுது இயற்கை வளம் பெறுகின்றது. இயற்கை ஆனந்த மயமாகவும் மகிழ்ச்சியாகவும் மாறுகின்றது. 
இதில் முக்கியமானது அதிர்வுகளே. உச்சரிக்கப்படும் எல்லா மந்திரங்களுக்கும்  அர்த்தம் உங்களுக்குத் தெரியுமா என்று என்னைக் கேட்டால் எனக்கும் தெரியாது.  மந்திரங்கள் ஓதும்போது அவற்றின் பொருளை விட அவற்றால் உண்டாகும் அதிர்வுகளே முக்கியம்.  
அதில் இரண்டு பாகங்கள் இருக்கின்றன. முதல் பாகம் 'நமோ, நமோ. நமோ, நமோ'   என்று சொல்கின்றது.'மன' என்றால் மனம். ஆங்கில வார்த்தை 'mind' என்பது சம்ஸ்கிருத வார்த்தையான 'மன' என்பதிலிருந்துதான் வந்திருக்கின்றது. மன  என்பதனை திருப்பிப் படித்தால் நம என்று வருகின்றது தனது  ஆதாரமான மூலத்தை நோக்கித் திரும்பிச் செல்லும் மனம் 'நம'  எனப்படுகின்றது. வெளியில் உலக அனுபவங்களை நோக்கிச் செல்லும்போது ' மன'  என்று சொல்லப்படுவதே  திரும்பி உள்ளே ஆதாரத்தை நோக்கிச் செல்லும்போது 'nama' எனப்படுகின்றது. மனம் தனது ஆரம்ப  மூலத்தை அடைந்ததும் அனைத்துமே ஒன்றால் ஆக்கப்பட்டவை  என்பதை  அறிந்து கொள்கின்றது. 
இன்றைய விஞ்ஞானிகள் என்ன சொல்கின்றார்கள்? அனைத்துமே இறைத்துகள் என்னும் ஒன்றால் ஆக்கப்பட்டவை  என்று சொல்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இதையே ரிஷிகளும் சொல்லி இருக்கின்றார்கள்.  ஆணுமல்லாத பெண்ணுமல்லாத  அதனை அவர்கள் ப்ரம்மன் என்றழைத்தார்கள்.  அது ஒரு தத்துவம். அனைத்துமே அந்தப் ப்ரம்மத் தத்துவத்தாலேயே ஆக்கப்பட்டிருக்கின்றன. அதுவே ஒவ்வொன்றினுள்ளும் இருக்கும் சிவ தத்துவம்  எனப்படுகின்றது. ஆகவே தான் 'நமோ, நமோ' என்று சொல்லப்படுகின்றது. மரங்கள், பசுமையான செடிகொடிகள், பறவைகள், கள்வர்கள் , கொள்ளைக்காரர்கள் என்று  அனைத்திலும் எங்கும் நிறைந்திருப்பது அந்த ஒரே தத்துவம் தான்.
அடுத்து இரண்டாவது பாகம் 'சமே, சமே, சமே, சமே' என்று சொல்கின்றது. இதை நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள் இல்லையா? அனைத்தும் என்னுள் இருக்கின்றது என்று இதற்குப் பொருள். ஆங்கில வார்த்தை 'me'  என்பதும்  ''  என்னும் சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து தான்  வந்துள்ளது. இரண்டாவது பாகம் அனைத்துமே எனக்காக என்னால் ஆக்கப்பட்டுள்ளது என்று சொல்கின்றது. எண்கள் ' ஏகாச்சமே'  அதாவது  ஒன்று, இரண்டு, மூன்று,, நான்கு என்னும் அனைத்தும் என் வடிவமே. அதே போல் 'சுகம்சமே' என் மகிழ்ச்சி, 'அபயஞ்சமே' அஞ்சாமை, ஆனந்தம், ஆரோக்கியம்  மற்றும்  பிரபஞ்சத்திலுள்ள எல்லா நல்ல விஷயங்களும் என்னைச் சேர்ந்தவையே.
இவ்வாறு மந்திரம் ஓதும் போது பொதுவாக பால் அல்லது தண்ணீர் ஒரு படிகத்தின் வழியாக சொட்டு சொட்டாக வழிய விடப்படுகின்றது. இது ஒரு பழங்கால முறை.  இது நீர் அல்லது நெருப்புடன் செய்யப்படுகின்றது. நெருப்பு மூட்டப்பட்டு பல விதமான தாவரங்கள் வெவ்வேறு மந்திரங்களுக்கேற்ப அதில் இடப்படுகின்றன.   அல்லது மந்திர உச்சரிப்பை கவனிக்கும் நேரத்தில் தண்ணீர் ஒரு நூலிழை போல ஒரு படிகத்தின்மேல் வழிய விடப்படுகின்றது.
திங்கட்கிழமை ருத்ராபிஷேகம் செய்வது  மேலும் விசேஷமானது. திங்கட்கிழமை  சந்திரனின் நாள். சந்திரனும் மனமும் தொடர்புடையவை. ஆகவே மந்திரம், மனம், சந்திரன் அனைத்தும் இணைவது சிறப்பு.இதுவே இந்தியாவின் மரபு. நம் ஆசிரமத்திலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் இந்த ருத்ர பூஜை நடக்கின்றது. பஞ்ச பூதங்களும் பூஜையில் பயன்படுத்தப்படுகின்றன. பஞ்ச பூதங்களையும் முழு நிறைவோடு போற்றுவதே பூஜை. எனவே, நெருப்பு, நீர், பழங்கள், பூக்கள் அரிசி, வாசனை பத்திகள் போன்று இயற்கை நமக்களித்தவற்றைக்  கொண்டு பூஜை செய்து  மந்திரங்கள் ஓதப்படுகின்றன. அதில் மிகுந்த  ஆழமும் அர்த்தமும் உள்ளது. நீங்கள் இதைப்பற்றி சிறிது ஆராய்ச்சி செய்தால் மேலும் மேலும் நிறைய விஷயங்கள் வெளி வரும். 
முக்கியமாக இந்த பூஜை நிறைய நேர்மறை  சக்தியை உருவாக்குகின்றது. அதிலும் மக்கள் தியான நிலையிலிருக்கும்போது  மிக அதிகமாக  உருவாக்குகின்றது.   இதனை ஒரு  வெறும் சடங்காக செய்வது அத்தனை பலன் தராது. ஏனென்றால் மக்கள் உள்ளே விழிப்புணர்வுடன் இருக்கும்போது வேத மந்திரங்கள் அதிக பலன் தரும் என்று சொல்லப்படுகின்றது.  அவர்களுக்கு இந்த மந்திரங்கள் அதிக பொருள் தருபவையாகவும் தியானத்தில் ஆழ்ந்த நிலைக்குச் செல்ல உதவுபவையாகவும் இருக்கும்.
கே: நான் உங்கள் ஞானத்தில் உள்ள உண்மையை புரிந்துகொண்டேன். என்னால் பூஜைகளையும் பஜனைகளையும் மற்றும் இந்திய சம்பிரதாயங்களையும் நன்றாக உணர்ந்து அனுபவிக்க முடிகின்றது. ஆனால் என் சிநேகிதர்களுடன் இருக்கும் போது  இவை பற்றி பேசுவதற்கு கடினமாக இருக்கின்றது. குறிப்பாக குருவின் வார்த்தைகளை கவனித்து பின்பற்றுவது  கடினமாக உள்ளது.  நம் நாட்டில் நம் மனதை பின்பற்ற கற்றுக்கொள்கின்றோம், ஆனால் குருவை பின்பற்றுவது எப்படி என்று கற்றுக்கொள்வது இல்லை. நீங்கள் இந்த வாழும் கலையை எல்லோரும்  ஏற்றுக்கொள்வதற்கு என்ன பரிந்துரை செய்கிறீர்கள்?
 
குருதேவ்: உங்களுக்கு ஒன்று தெரியுமா? வாழும் கலையை 30 வருடங்களுக்கு முன்பு துவங்கும் போது கூட கடினமாக தான் இருந்தது. யோகா என்பது யாரோ ஒரு சிலருக்கு, சில கிறுக்கு பிடித்தவர்களுக்கு என்று இருந்தது. ஆனால் இன்று எல்லோருக்கும் யோகா பிடித்திருக்கின்றது. 
நான் உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன். பூஜைகள், மந்திரங்கள் ஓதுதல்  பற்றி எல்லாம் புதியவர்களிடம் சொல்லத் தேவையில்லை. தியானம், சுதர்ஷன கிரியா, வாழும் கலை பயிற்சி பற்றி  மட்டும் பேசினால் போதும். இன்று மக்கள் முன்பைவிட மிகவும் திறந்த மனப்பான்மையுடன் இருக்கின்றார்கள். இன்றைய கால கட்டத்தில் உலகில் நிறைய பெரிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. புத்த மதத்தில் நடக்கும் மண்டல பூஜையைக் காண மக்கள் பறந்து வருவார்கள். இது போன்று மந்திரங்கள் ஜெபித்தல் புத்த மதத்திலும் இருக்கின்றது.அதனைக் கேட்பதற்கு மக்கள் மிகவும் விரும்புகிறார்கள். ஆகவே சில நேரங்களில் தடைகளைப் போடுவது  நம் மனமே.
நியூயார்க் போன்ற நகரங்களில் சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஒதுவதற்கெனவே  நிறைய வகுப்புகள் உள்ளன. இந்த வகுப்புகளில் எல்லாம் காலி இடங்களே  இல்லாமல் நிறைந்து இருக்கின்றன. நம்முடைய நியூயார்க் மையத்தில் சுதர்ஷன திரியா செய்வதற்கு மூன்று அல்லது நான்கு ஷிப்டில் மக்கள் வருகின்றார்கள். 
சொல்லப் போனால் மேற்கு நாடுகள் கிழக்கு நாடுகள் என்றில்லை. மேற்கு நாடுகளிலும் நம்பிக்கை உள்ளவர்களைக் காணலாம். கிழக்கு நாடுகளில் நம்பிக்கை அற்றவர்களையும் காணலாம். இன்று மக்கள் மிகவும் திறந்த மனப்பான்மையுடன் இருப்பதால் பாரபட்சமான அபிப்பிராயங்கள் முன்பை விட குறைந்துள்ளன. நீங்கள்  பாரபட்சமான அபிப்பிராயங்கள் உள்ளவர்களைக் கண்டால் சொல்லுங்கள், "ஹேய்!  ஒருதலைப் பட்சமான எண்ணங்கள் வேண்டாம். நீங்கள் ஒரு உலகளாவிய குடிமகனாக இருக்க வேண்டும். பல்வேறு கலாச்சாரத்தையும் பல்வேறு கலாச்சார விழாக்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை பெற்றவராக இருங்கள்.   இல்லையென்றால் நீங்கள் இருண்ட கற்கால மனிதனாகவே இன்னும்  இருக்கின்றீர்கள் என்று அர்த்தம். நீங்கள் இன்னும் திறந்த மனப்பான்மையுடையவராக இல்லை என்று அர்த்தம். எங்கு எப்பொழுது நல்ல விஷயங்களைக் கண்டாலும் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள். நான் ஒரு குருவைப் பின்பற்றுகின்றேன். நீங்களும் செய்யுங்கள். அப்படி இப்படி "என்றெல்லாம்   சொல்லத் தேவையில்லை. 
நான் ஒவ்வொருவரையும் சிறந்த தலைவர்களாக ஆக்குகின்றேன். நீங்கள் முன்னேறி  செல்ல நான் உங்கள் பின்னால் இருந்து தூண்டுகின்றேன். ஒரு சிறந்த பயிற்சியாளர் எல்லா இடங்களிலும் தேவைப்படுகின்றார்.அது விளையாட்டோ, இசையோ, சமையலோ எதுவாகவும் இருக்கட்டும். ஒரு நல்ல பயிற்சியாளர் இருந்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். அதே போல யோகாவிற்கோ, உடற்பயிற்சிக்கோ ஏன் உதை பந்தாட்டத்திற்குக் கூட ஒரு நல்ல பயிற்சியாளர் தேவை. இல்லையா? அதே போல் மிக நுட்பமான ஆன்மிகத்தை சொல்லித் தருவதற்கும் நிச்சயமாக ஒரு நல்ல பயிற்சியாளர் தேவை.
ஒரு குருவானவர் எப்போதும் "மூளையை உபயோகிக்காதே சிந்தனை செய்யாதே "என்று சொல்ல மாட்டார். அவர் நீங்கள் சுயமாக சுதந்திரமாக சிந்திக்க ஊக்குவிப்பார்.  இதைத் தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். வாழும் கலை பகுத்தறிவு மற்றும் நம்பிக்கை ஆகிய இரண்டையும் ஊக்குவிக்கின்றது. பகுத்தறிவு, நம்பிக்கை இரண்டும் பார்ப்பதற்கு முரண்பாடானவைகளாகத் தெரியும். கடந்த காலத்தில் அப்படித்தான் நடந்தது. ஸ்பானிஷ்  விசாரணை அப்படித் தான்  நடைபெற்றது. பண்டைக் காலத்தில் தேவாலயம் ஏதாவது ஒன்றை சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏன் எதற்கு என்று எந்த கேள்வியும் கேட்கக்கூடாது. ரஷ்யாவில்  ஏற்பட்ட கம்யூனிசப் புரட்சி முழுவதற்கும் பகுத்தறிவு அடக்கப்பட்டமையே காரணம்.  ஆனால் கிழக்கு நாடுகளில் அப்படி இல்லை. கிழக்கில் எப்போதும் 'பகுத்தறிவைப் போற்றுங்கள்' என்றே சொல்லப்பட்டது.   
பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு முழு கீதோபதேசம் செய்து விட்டு  கடைசியில் சொல்கிறார், "நீ யோசி. உன் அறிவிற்கு சரி என்று தோன்றினால் அதை ஏற்றுக்கொள். உன் அறிவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் நான் கூறியவற்றை  எல்லாம் நீ ஏற்றுக்கொள்ளத் தேவை இல்லை." புத்தரும் இதையே தான் கூறினார். உனக்கு பகுத்தறிவும் சரணாகதியும் இரண்டும் இருக்க வேண்டும். நம்பிக்கை வேண்டும்" இதுதான் புத்தர் கூறியது.
நீங்கள் ஒருவேளை சொல்லலாம், "நான் முதலில் நீச்சல் கற்றுக் கொள்கின்றேன்.  பிறகு தண்ணீரில் இறங்குவேன்" என்று. ஒரு உண்மையான பயிற்சியாளர் சொல்வார், "முதலில் தண்ணீரில் இறங்கு. அதன் பிறகு நான் நீச்சல் கற்றுத் தருகிறேன்" என்று.
இது ஒன்றிற்குப் பின் மற்றொன்று கிடையாது. ஆம். தண்ணீரில் இறங்கிய உடனே நீந்த வேண்டும்.  இரண்டையும் ஒன்று போல செய்ய வேண்டும். பகுத்தறிவு, நம்பிக்கை இரண்டுமே வாழ்க்கையில் முக்கியமானவை. நீங்கள் காற்றில் நீச்சல் கற்றுக்கொண்டு பிறகு தண்ணீரில் இறங்க முடியாது. அப்படி நீச்சல் கற்றுக்கொள்ள முடியாது. தண்ணீரில் இறங்கினால் மட்டுமே நீச்சல் கற்றுக்கொள்ள முடியும்.  சரிதானே! அப்படி நீங்கள் நீச்சல் கற்றுக்கொள்ளும் போது உங்களைச் சுற்றி ஒரு  உயிர் காப்பு மிதவை ஆடை (life jacket)  தேவைப்படுகின்றது. இல்லையா? ஒரு குருவானவர் அந்த 'லைப் ஜாக்கெட்' போன்றவர். அவர் உங்களுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்து அதன் பிறகு நீங்கள் நீச்சல் அடிக்கும் போது தான் அதன் மதிப்பு உங்களுக்குத் தெரியும். இல்லையா? அப்படியானால் மக்களுக்கு எப்படி  பதிலளிப்பது? நீங்கள் யாராவது ஒருவர் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. சில சமயம் புன்னகை புரிந்தால் போதும். 
நீங்கள் சொல்லலாம்,'அதன் மதிப்பு உங்களுக்குப் புரியாது. அதனை ருசித்துப் பார்த்த பிறகு சொல்லுங்கள்' என்று."! இந்த மந்திர உச்சாடனத்தை ஏன் கேட்டுக்கொண்டு இருக்கின்றீர்கள்?" என்று யாராவது கேட்டால் நீங்கள் சொல்லலாம், "! மந்திரம் ஓதுவதன் மகத்துவம் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை.அது மிக அற்புதமானது.  நீங்கள் ஒரு முறை கவனித்துக் கேட்டுப் பாருங்கள்.பிறகு உங்களுக்குத் தெரிய வரும்" என்று. 
இதைத் தான்  நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரிடமும்    மிகவும் சிறந்தது எதுவோ அதையே பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் எல்லாமே நல்லவை தான் சிறந்தவை தான் இருக்கின்றன என்றில்லை பயனற்ற விஷயங்களும் இருக்கின்றன. ஆனால் நாம் நல்லவற்றை மட்டுமே எடுத்துக் கொண்டு உலகில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். அதே போல் ஒவ்வொரு மதத்திலும்,ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஏதாவது ஒரு சிறந்த அழகான விஷயம் இருக்கும்.அதைத் தான் நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். மூடத்தனத்தையும் குறுகிய மனப்பான்மையையும் அல்ல.என்ன சொல்கிறீர்கள்?  நாம் நல்ல விஷயங்களை எல்லா இடத்தில் இருந்தும் எடுத்துக்கொண்டு அதை மேம்படுத்துகின்றோம். அதன் பயன் எல்லோருக்கும் கிடைக்கச் செய்கின்றோம் .  இல்லையா?
யோகாவில் கூட சிலர் செய்யும் நிறைய யோகாசனங்கள் அறிவியல் பூர்வமாக இல்லை. ஹத யோகாவில் ஊசியைக் கொண்டு உடம்பில் குத்துகிறார்கள்.  உண்மையில் வேதங்களிலும் ஏடுகளிலும் இல்லாதவற்றை எல்லாம் செய்கிறார்கள்.  மக்களும் அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வருகின்றார்கள். நாம் அதை ஊக்குவிப்பதில்லை. தியானம், யோகா என்ற பெயரில் மக்கள் தங்களை தாங்களே சித்திரவதை செய்து கொள்கின்றார்கள். இவை உண்மையானவையோ  நம்பிக்கையானவையோ அல்ல என்பதனால் நாம் இவற்றை ஏற்பதில்லை.  
அதேபோல் மதச் சடங்குகளில் கூட உண்மையற்ற ஆதாரமற்ற பல விஷயங்களைச் சேர்த்து விடுகின்றார்கள். அவை வேதங்களில் இல்லாதவை; அவசியமற்றவை.  ஆனால் மக்கள் பழக்கத்தின் காரணமாக அவற்றை செய்து வருகிறார்கள். இங்கு தான் நீங்கள் சரியானது எது சரியில்லாதது எது என்று பாகுபடுதிப்பார்த்து  சரியானதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கே: குருதேவ், நான் உங்களுக்காக என்ன செய்ய வேண்டும்? 
குருதேவ்: இந்த கேள்வியை நீங்கள் உங்களிடமே வைத்துக் கொண்டு அவ்வப்போது என்ன தேவைப்படுகிறதோ அதை செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன். இந்த கேள்விக்கு ஒரே ஒரு பதில் மட்டுமே இருக்க முடியாது. பல முறை நடைப்பயிற்சி செய்யப்பட வேண்டிய பாதை போன்றது இது. இக்கணம்  நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன். இந்த ஞானத்தில் ஆழ்ந்திருந்து அதனை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள். 
கே: குருதேவ், நான் இந்த உலகத்தில் மிகவும் தனித்திருப்பது போல் உணர்கின்றேன்.  என்னோடு வாழ்ந்து வாழ்க்கையின் ஆனந்தம் அனைத்தையும் பகிர்ந்துகொள்ள என்  வாழ்க்கைத் துணையை நான் எப்படிக் கண்டு பிடிப்பது?
குருதேவ்: நான் ஜெர்மனியிலும் மற்றும் ஐரோப்பாவிலும் ஒரு கல்யாண இணைய தளம் திறக்கலாம் என்று நினைக்கின்றேன். இந்த சேவையை நீங்களே கூட எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் இதனை ஆரம்பிக்கலாம். நாம் ஸ்ரீ ஸ்ரீ கல்யாண இணைய தளம்  துவங்கலாம்.  உங்களைப் போலவே நிறைய ஆண்கள்  திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கின்றார்கள். அதே விருப்பத்துடன் நிறைய பெண்களும் இருக்கின்றார்கள். நாம் அவர்களை இணைத்து வைப்போம். ஒவ்வொரு வரும் உங்கள் துணையை தேர்ந்தெடுத்த பின் என்னிடம் வாருங்கள்;  நான் உங்களை அசீர்வதிக்கின்றேன்.