எல்லோருமே உன் பிரதிபிம்பம் தான்.


8 - ஜூலை 2012 – பாட் ஆண்டோகாஸ்ட், ஜெர்மனி

கே: எண்ணங்கள், மன எழுச்சிகள்,உணர்ச்சிகள் இவற்றில் இருந்து விடுபடுவது எப்படி? உறவுகளை எப்படி நீக்க முடியும்?

குருதேவர்: எதற்காக உறவுகளைத் நீக்க விரும்புகிறாய்? அது உனக்கு வலியைத் தருவதாலா? இல்லையா? ஏன் அது வலியைத் தருகிறது. ஏனென்றால் உனக்கு வாழ்க்கையை பற்றிய பரந்த கண்ணோட்டம் இல்லை.எந்த உறவுமே சில நாட்களுக்கு தான், சில மாதங்களுக்கு, ஆண்டுகளுக்கு மட்டுமே.ஆனால் வாழ்க்கை மிகவும் பெரியது.உறவுகளை நீக்க முயலாமல்,உன் விழிப்புணர்ச்சியை வளர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

அஷ்டவக்ர கீதையிலிருந்து ஞானத்தை மேலும் கேள்.ஒருமுறை மட்டும் அல்ல. மீண்டும் மீண்டும் கேள். உன் எண்ணங்களை ப்ரம்மத்தின் மேல் வை.எல்லையற்ற, நித்தியமான,அகண்ட வெளியின் மேல் வை.அந்த மகா சக்தியின் மேல்வை. .எல்லாமே அதன் ஒரு பகுதி தான். எல்லோரும் மகா சக்தியின் வெளிப்பாடு தான்.அதனால் தான் ப்ரம்மசார்யம் என்று அழைக்கிறோம். ‘ப்ரம்மா’ என்றால் ஆதி அந்தம் இல்லாத எல்லையில்லாதவர் என்று பொருள். ‘சார்யா’ என்றால் அதை நோக்கிப் போவது. உங்கள் மனதை எல்லையில்லாத பரம்பொருளின் மேல்வை.,மனதை சிறு விஷயங்களில் உழலாமல்– அவர் அப்படிச் சொன்னார், அவள் அப்படிச் சொன்னாள்  என்றில்லாமல் தெய்வீக விஷயங்களில் ஈடுபடுவது.

எப்போதும் மற்றவர்களைப் பற்றி நினைத்தால் விருப்பு வெறுப்புக்கு ஆளாக வேண்டும். வெறுப்பு, விருப்பம் இப்படிப் போய்க் கொண்டே இருக்கும். எனவே உன் கண்ணோட்டத்தை விரிவாக்கு. ஆன்மீக ஞானத்தில் நேரத்தைக் கழி. எல்லோரும், எல்லா மனிதர்களும் ஒரு நீர்க்குமிழி போல தான். எவ்வளவு நேரம் நீர்க்குமிழி இருக்கும்? வானத்தில் மேகங்கள் எவ்வளவு நேரம் இருக்கும்? எல்லாமே தற்காலிகமானது. நிரந்தரமானது அல்ல. அழியக் கூடியது.

கே: நான் குழப்பத்தில் இருக்கிறேன். ஹரே கிருஷ்ண இயக்கத்தில் நீ கிருஷ்ணரிடம் சரண் அடைந்தால் ஆத்மாவின் உலகத்திற்குப் போக முடியும் என்கிறார்கள். நீங்கள் உங்களிடம் சரணடைந்து எல்லா பிரச்சினைகளையும் விட்டு விடச் சொல்கிறீர்கள். எனவே வாழும் கலையில், ஆத்மாவின் உலகிற்குப் போக என்ன பயிற்சி இருக்கிறது?
குருதேவர்: கிருஷ்ணர் சொன்னது இது தான். “யார் எல்லோரிடமும், எல்லாவற்றிலும் என்னைப் பார்க்கிறார்களோ, என்னிடத்தில் எல்லோரையும் பார்க்கிறார்களோ, அவர்கள் அறிவாளிகள்.” அதை ஏன் மறந்து விட்டாய்? மேலும் “நான் ஒவ்வொரு யுகத்திலும் வந்து கொண்டிருப்பேன்” சரியா?
கே: என் கணவர் கோபத்தில் கெட்ட வார்த்தைகள் பேசுகிறார். சிறு விஷயங்களில் கூட கோபப்படுகிறார். பின்னால் தான் சொல்லியவற்றை மறந்து விடுகிறார். நான் அழுது கொண்டேயிருக்கிறேன். இரண்டாவது அவர் என்னைப் பழி சொல்லி, அவருக்குக் கோபம் வரக் காரணமே நான் தான் என்கிறார். இந்த சூழ்நிலையில் நான் என்ன செய்வது என்று சொல்லுங்கள்?

குருதேவர்: பார்த்தாயா. அவர் பேசியவற்றை மறந்து விடுகிறார் இல்லையா? எல்லா கெட்ட வார்த்தைகளையும் சொல்லிவிட்டு மறந்து விடுகிறார். நீயும் அதைக் கேட்டு விட்டு மறந்து விடு. அவரிடம் “கெட்ட வார்த்தை பேசாதே, கெட்ட வார்த்தை பேசாதே” என்று சொல்வதை விட்டு விடு. அதை உன் இதயத்தில் வைத்துக் கொள்ளாமல்,அவருக்குக் கோபம் வரும்போது காதை அடைத்துக் கொள். அவர் சொல்வதை செவி மடுக்க வேண்டாம். இரண்டு காது அடைப்பான்களை எப்போதும் வைத்துக் கொள். அவர் கோபப் படும் போது காதை அடைத்துக் கொண்டு அவரைப் பார்த்து புன்முறுவல் பூக்கலாம்.

மக்கள் பெரிய காது வளையங்களை அணிகிறார்கள். ஒரு பறவை வந்து அமரக் கூடிய அளவு பெரியது. நீயும் அதைப் போல் காது வளையத்தில் காது அடைப்பானையும் தொங்க விடலாம். வேண்டும் போது காதை அடைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். அப்படி ஒரு நாகரீகத்தைக் கொண்டு வரலாம். – காது அடைப்பான் தொங்கும் காது வளையம் – உன் நகைக் கடைக் காரரிடம் சொல்லி அழகான நிறத்தில் செய்து கொள்.உன் கணவர் பேச ஆரம்பிக்கும் போது காது அடைப்பானால் காதை மூடிக்கொள். அவர் என்ன வேண்டுமானாலும் பேசட்டும்.

அல்லது அந்த இடத்தை விட்டு மெதுவாக நகர்ந்து விடலாம். அவருக்குக் கோபம் வரும்போது உனக்குக் கழிவறைக்குச் செல்ல வேண்டும் என்று சொல்லி உள்ளே போய் அரைமணி நேரம் / ஒருமணி நேரம் கழித்து வா. அல்லது வெளியில் சென்று விடு. இப்படி ஒரு மனிதர் செய்கிறார் என்னும் போது நீ அழுது புலம்பி உன் நிலையை மோசமாக்கிக் கொள்வது சரியில்லை. அவர்களை வளர்த்த விதம் அப்படித்தான். அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள்.

கே: ஒரு பெரிய அழகிய மேப்பிள் மரம் வீட்டின் கொல்லைப் புறத்தில் வடகிழக்கு திசையில் இருந்தால் வாஸ்து சாஸ்திரப் படி அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நல்லதல்ல என்கிறார்கள். அந்த மரத்தை வெட்டி அகற்றி விடலாமா? அல்லது மரத்தை அகற்றாமல் ஏதாவது பரிகாரம் செய்ய முடியுமா?

குருதேவர்: ஆமாம். வடகிழக்கு திசையில் அப்படி ஏதாவது இருந்தால் அங்கு ஒரு சிறிய சிவ லிங்கத்தை வைக்கலாம். அல்லது ஒரு கணபதி சிலையை வைக்கலாம். அது போதும். வாஸ்து சாஸ்திரப் படி அது ஒரு பரிகாரம். அல்லது ‘ஓம் நமசிவாய’ என்று எழுதி வைக்கலாம். மரத்தை வெட்ட வேண்டாம். அழகான மேப்பிள் மரத்தை வெட்ட நான் விரும்ப மாட்டேன். வடகிழக்கு மூலை என்பது தெய்வம் இருக்கும் இடம். அது வழிபாடு செய்யவேண்டிய இடம். நீ ஒரு யோகா செய்யும் பாயைப் போட்டு உட்கார்ந்து அங்கே தியானம் செய்யலாம்.

தியானம் செய்ய உகந்த இடம் வடகிழக்கு மூலை. அங்கு எதுவும் தடை இல்லாமல் இருந்தால் நல்லது என்கிறார்கள். வடகிழக்கு மூலையில் சிறிய கோயில் இருக்கலாம். கோயில் என்பது பொதுவாக உயர்ந்த இடத்தில் பெரிதாக இருக்கும். அதைப் பற்றிக் கவலை வேண்டாம். வாஸ்து சாஸ்திரப்படி சிறு தடைகளை “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தைச்  சொல்வதால், எழுதி வைப்பதால் சரி செய்து விடலாம்.

கே: நாளை காலை திங்கள் கிழமை, உங்களோடு இங்கு ருத்ரபூஜை வைத்துக் கொள்ளலாமா?

குருதேவர்: சரி. நாம் எல்லோரும் அமர்ந்து ருத்ரபூஜை மந்திரங்களைக் கேட்கலாம். யார் முதல் முறையாக மேல்நிலைப் பயிற்சிக்கு வந்திருக்கிறீர்களோ, உங்களுக்கு அது புரியாமல் இருக்கலாம். மந்திரங்கள் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படும். நீங்கள் அமர்ந்து அதைக் கேட்கலாம். மந்திரம் சொல்வதைக் கேட்டு, ஒரு (பூவாளி) குளிப்பது போல் அனுபவிக்கலாம்.

கே: குருதேவா! நான் கடந்த கால நிகழ்சிகளை நினைவு கூர்கிறேன். எவ்வளவு நல்ல காலமாக இருந்தது அப்போது. அதை விட்டு, தற்சமயத்தில் வாழ வேண்டும் என்று தெரிந்தாலும், கடந்த கால நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து கொண்டிருக்கிறது. என்ன செய்யலாம்?

குருதேவர்: சரி. அது கடந்து விட்டது. தற்சமயம் அதைப் பற்றிக் கவலைப்படாதே.

கே: குருதேவா! சேவை செய்வது எந்த வழியில் தியானத்துக்கு உதவும்?

குருதேவர்: நீ சேவை செய்யும்போது, யாருக்கு சேவை செய்தாலும், அது உனக்கு ஒரு தீர்க்கமான சக்தியை கொடுக்கும்.உனக்கு புண்ணியத்தை கொடுக்கும்.அந்த புண்ணியம் நீ ஆழ்ந்த தியானத்தில் செல்ல ஏதுவாயிருக்கும்.நீ ஆழ்ந்த தியானத்துக்குப் போக முடியாமல் இருந்தால் அதற்குக் காரணம் நீ தன்னலவாதியாக எப்போதும் உன்னைப் பற்றியே எண்ணுகிறாய். ஆனால், நீ பிறருக்கு சேவை செய்திருந்தால், சிறிதளவாவது சேவை செய்திருந்தால், சமூக சேவையில் ஈடு பட்டால், அது உனக்கு மேலும் மேலும் புண்ணியத்தைக் கொடுக்கும். நீ ஆழ்ந்து தியானம் செய்ய உதவும். இது ஒரு உண்மை.

கே: குருதேவா! வாழும் கலைப் பயிற்சியில் பயின்ற வாழ்வில் மதிக்கத் தகுந்த சூத்திரங்களை நிஜ வாழ்க்கையில் கடைப் பிடிக்க முடியவில்லை. நான் அவைகளைப் புரிந்து கொண்டு எப்படி என் சொந்த வாழ்க்கையில் கடைப் பிடிக்கலாம் என்று அறிவேன். ஆனால் என் அலுவலகத்துக்குச் சென்ற பின் வியாபார நிமித்தமான காரியங்களில் வாழும் கலைத் தத்துவப்படி நடக்கவில்லை. அதை எப்படி நிறைவேற்றுவது என்று உதாரணத்துடன் விளக்குவீர்களா?

குருதேவர்: வாழும் கலை சூத்திரங்களை இயல்பாக அந்தந்த சமயத்தில் கடைப் பிடிக்கலாம். அதிக முயற்சி செய்யத் தேவை இல்லை. தானாக நடக்கும். என்ன சூத்திரங்கள். எல்லோரையும் அவரவர் எப்படி இருக்கிறார்களோ, அவர்களை அவ்வாறே ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த சூத்திரம் உன் மனதில் இருக்கும் போது நீ தானாகவே அவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம். வாழும் கலையின் எந்த சூத்திரமும் அதிக முயற்சியில்லாமல், கட்டாயமில்லாமல் இயல்பாகக் கடைப்பிடிக்கும்படி இருக்கிறது. புரிகிறதா?

வெற்றி தோல்வி எது வந்தாலும் சமமாக எண்ணுங்கள். அவைகள் தானாக நடக்கின்றன. நீங்கள் கவனித்ததில்லையா? பிராணயாமம், கிரியா செய்த பின் மனநிலை சிறப்பாக இருக்கும். மன அளவில், உடல் அளவில், உணர்ச்சி அளவில் புத்துணர்ச்சி அடைந்திருப்பீர்கள். எந்த  எதிர் கொள்ளும் வலிமை பெற்றிருப்பீர்கள். எவ்வளவு பேர் அப்படி அனுபவப் பட்டிருக்கிறீர்கள்? (பலர் கைகளை உயர்த்துகின்றார்கள்). பார்த்தீர்களா, அநேகமாக எல்லோரும் அப்படி நினைக்கிறீர்கள். எல்லோரும் புத்துணர்ச்சியுடன் இருக்கிறீர்கள். எல்லாமே மேலும் மேலும் நன்றாக நடக்கும். நான் சொல்வது “தற்சமயத்தில் வாழுங்கள்”. அதுவும் தன்னிச்சையாக உடனே நிகழ்கிறது. சரியா!

கே: குருதேவா! சில சமயங்களில் ஏன் நம் மன அமைதியைக் குலைப்பதற்கென்றே திட்டமிட்டது போல் காரியங்கள் நிகழ்கின்றன. நான் முயற்சி எடுத்த போதிலும், மக்கள் ஏன் பகுத்தறிவில்லாமல் நடந்து கொள்கிறார்கள்?

குருதேவர்: நல்லது. நீ எப்போதுமே பகுத்தறிவோடு நடக்கிறாயா? நீ இந்தக் கேள்வியை உன்னிடம் கேள். சிலசமயம் நீயும் பகுத்தறிவில்லாமல் நடந்திருக்கலாம். எல்லோரும் உன்னை மாதிரி தான். எல்லோருமே உன்னுடைய பிரதிபிம்பம் தான். நீ மற்றவர்களின் பிரதிபிம்பம். அவர்களின் நடத்தை அறிவில்லாமல் இருந்தால் அவர்கள் அறிவு பெற சில காலம் தேவைப் படுகிறது என்று அர்த்தம். பொறுமையாக இரு.

அவர்களுக்குத் தெரியாததைச் சொல்லிக் கொடு.அதை விட்டு விட்டு இங்கு அமர்ந்து “ஏன் அவர்கள் அப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்பது ஒன்றுக்கும் உதவாது. நீ நடப்பவை பற்றிக் கவலைப் படுகிறாய். அது ஏன் அப்படி நடக்கிறது? ஏன் இந்த மனிதர் இப்படி இருக்கிறார்? நீ இதை நிறுத்த வேண்டும். நீ என்ன செய்கிறாய் என்று திரும்பி பார்க்கவேண்டும். ஏனென்றால் நீ என்ன செய்ய முடியும் என்பதை, அல்லது நீ என்ன செய்கிறாய் என்பதை உன்னால் கட்டுப்படுத்த முடியும். மற்றவர்களால் நடப்பதை, மற்றவர்கள் என்ன செய்வார்கள் என்பதை உன்னால் கட்டுப் படுத்த முடியாது. சூழ் நிலைகளையும் உன்னால் கட்டுப் படுத்த முடியாது.

ஆனால் நாம் மற்றவர்களைக் கட்டுப்படுத்த விரும்புகிறோம். நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கவனிப்பதில்லை. நம்முடைய நடத்தை, நம் நிலை, உனக்குள் என்ன நடக்கிறது என்பதை கவனி ப்பதில்லை.எதை நீ கட்டுப்படுத்த முடியுமோ அதை கவனிப்பதில்லை.ஆனால் மற்றவர்களை உன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கிறாய். சூழ்நிலைகளை உன் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முயல்கிறாய். அது உன்னால் முடியாத போது மற்றவர்களைக் குறை சொல்ல ஆரம்பிக்கிறாய்.

புரிகிறதா? உன்னால் மற்றவர்களின் மனத்தைக் கட்டுப்படுத்த முடியாது.நீ மற்றவர்களின் மனத்தை உன் அதிகாரத்தில் கொண்டு வர முயல்கிறாய். உன்னால் உன் மனத்தைக் கட்டுப்படுத்த முடியும். அதை நீ கவனிப்பதே இல்லை..உலகம் இதனால் தான் துயரத்தில் ஆழ்கிறது. நடப்பவைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்வதை நிறுத்தி, நீ செய்ய வேண்டியவைகளை உன் கட்டுப் பாட்டுக்குள் வைத்தால்,மிகவும் வலிமையுடன்,திறமையுடன்,சக்தி வாய்ந்தவனாக, மகிழ்ச்சியுடனும் இருக்கலாம்.