மூன்று விதமான மாயைகள்...



பெங்களூரு, ஜூலை 30 - 2012 

கே: தியானத்தின் போது உண்டாகும் பேரானந்த நிலையை, தியானத்தில் இல்லாத போதும் தக்க வைத்துக் கொள்வது எப்படி?

குருதேவ்: ஞானத்தோடும் வைராக்யத்தோடும் இது சாத்தியம். முழு உலகத்தையுமே கனவாகப் பார்க்க முடியும்போது,அந்த தியான நிலை நமது செயல்பாடுகளினு£டேயும் நிலைக்கும்.அதற்காகக் கற்பனை செய்து கொள்ள வேண்டாம், இது இயல்பாக நடக்கட்டும்.அமைதியைக் கூடத் தக்க வைத்துக் கொள்ள முயல வேண்டாம், இந்த முயற்சி நமக்கு மேலும் பிரச்சனைகளை விளைவிக்கும். ஒரு சில சமயங்களில். தொந்தரவுகள் இருந்தால் தான் என்ன? அதுவும் உலகில் இயல்பு தானே! ஆகாசம் போல நம் மனம் ஆகட்டும்.

இன்று சிலர் என்னிடம் வந்து ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி , அவர் மற்றவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதைப் பற்றி, அவரது கோபத்தை, துர்குணங்களைப் பற்றிக் குறை கூறி, அவரை இன்னும் நான் நமது நிறுவனத்திலிருந்து நீக்காமலிருக்கும் காரணத்தைப் பற்றி விசாரித்தனர். திருந்துவதற்கு நான் எல்லோருக்கும் அதிக அவகாசம் தருகிறேன். நான் வெளியே அனுப்பினால், அங்கும் அவர் இதையே தானே செய்யப் போகிறார், இங்கு இருந்தாலாவது அவருக்குத் திருந்தி முன்னேற ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமல்லவா-? எனவே பொறுமை அவசியம். 

கன்னடத்தில் ஓர் அழகான பாடல்,கடற்கரையில் வீடு கட்டிக்கொண்டு அலைகளுக்கு பயந்தால் முடியுமா? காட்டில் வீடு கட்டிக்கொண்டு மிருகங்களுக்கு பயந்தால் முடியுமா? நகரின் நடுவில் வீடு கட்டிக்கொண்டு சப்தத்திற்கு பயந்தால் முடியுமா? அதே போல இவ்வுலகில் வாழும் போதும், இன்பமும் துன்பமும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும் மாறி மாறி வருவது இயல்பு தானே? அதை சகஜமாக எடுத்துக்கொண்டு முன்னேறிச் செல்லுதல் வேண்டும்.

கே:ஊசியின் காதில் ஒரு ஒட்டகம் நுழைந்தாலும் நுழையலாம், ஒரு செல்வந்தர் ஸ்வர்கம் அடைவது துர்லபம்’ & என பைபிள் கூறுகிறதே, அப்படியானால், செல்வம் ஒன்று இருக்கும் காரணத்தாலேயே செல்வந்தர்கள் நரகத்தை அடைய வேண்டுமா?

குருதேவ்: அப்படியல்ல. இந்த வார்த்தைகள் வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மக்களுக்காக வெவ்வேறு ஞானிகளாலும் குருமார்களாலும், தீர்க்கதரிசிகளாலும், அவது£தர்களாலும் பேசப்பட்டன. இதன் பொருள் & வறுமை எங்கும் பரவிக் கிடக்கும் போது, எந்தவித சேவையிலும் ஈடுபடாமல் அனைத்து செல்வத்தையும் ஒருவர் தனக்காகவே செலவு செய்பவராக இருந்தால், அவர் இதயம் பாறையாக உள்ளதென்பது தானே பொருள், மென்மையில்லாதவருக்கு ஸ்வர்கம் து£ரத்தில் தானே இருக்க முடியும்?

நான் விரைவில் அஸ்ஸாம் செல்வதாக உள்ளேன், முதலாவதாக ரூ,50 லட்சம் மதிப்புள்ள மருந்து சாமான்கள் அனுப்ப வேண்டும், இங்கு இருக்கும் நாம் அனைவரும் தலைக்கு ரூ.500 அளித்தால் இதை நாம் செய்ய முடியும்.

கே:ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுஎனப் பெரியோர் கூறியுள்ளனர், இப்படியே நான் இரு முறை அறை வாங்கி விட்டேன். இது என் அறியாமையா?

குருதேவ்: நீ அறை வாங்கியது ஒரே நபரிடமா, வெவ்வேறு நபரிடமா? வெவ்வேறு நபர்களிடம் நீ ஓரோர் அறை வாங்கியிருக்கலாம், உன்னை அறைபவர் மதி நுட்பமுள்ளவராக, மெத்தப்படித்தப் பண்புள்ளவராக இருந்தால் நீ உன் மற்றோர் கன்னத்தைக் காண்பிக்கலாம். அப்படியில்லாமலிருந்தால் இரண்டு முறையோடு நிறுத்திக்கொள், எப்படியிருந்தாலும் உனக்கு மூன்றாவது கன்னம் இல்லையல்லவா? புரிந்ததா?
கே: எளிமை என்பது என்ன? எளிமையாக இருப்பது எப்படி?
குருதேவ்:எனக்கு இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும்என்றில்லாமல், தேவைகளைக் குறைத்துக்கொண்டு, இருப்பதில் த்ருப்தியடைவதே எளிமை. 50 லட்சமோ, 20 லட்சமோ மதிப்புள்ள வண்டி தான் வேண்டுமென இல்லாமல், பயணம் செய்ய ஒரு சாதாரணமான வண்டி இருந்தால்,அதிலேயே த்ருப்தியடைவது எளிமை. எளிமை என்றால் உங்களைத் துன்புறுத்தி கொள்வதல்ல. நல்ல உடைகள் உடுத்தி கொள்ளலாம், நல்ல உணவு உட்கொள்ளலாம். அரை வயிற்றுக்கு உண்ண வேண்டுமென்பதல்ல. குறைந்த பட்ச தேவைகளின் பூர்த்தியிலேயே த்ருப்தியடைவது தான் எளிமை.

கே: பகவத் கீதையில் யோகக்ஷேமம் வஹாம்யஹம்என க்ருஷ்ண பகவான் கூறுகிறார்.கொடுக்கும் தெய்வம் எப்படி என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளும்? சற்று விளக்குங்களேன்.

குருதேவ்: உனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உலகம் உன்னிடமிருந்து ஒரு நாள் எடுத்துக் கொள்ளப்படும், இது படைப்பின் விதி. இது ப்ரம்மாண்டத்தில் தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பது தான். இறைமை எங்கோ உயரத்தில் அமர்ந்து இதைச் செய்து கொண்டிருப்பதாகக் கற்பனை செய்ய வேண்டாம்.

கே: தன்னையே, தன் சுய ஆற்றலை, குரு மீது வைத்திருக்கும் நம்பிக்கையை சந்தேகிப்பதை விடுவது எப்படி?

குருதேவ்: ப்ராண சக்தி குறைகையில் தன்னம்பிக்கை மறைகிறது. தன்னம்பிக்கை மறையும் போது எல்லோர் மேலுமே சந்தேகம் ஏற்படுகிறது. எனவே ப்ராண சக்தியும் மனவலிமையும் அதிகரிக்கும் போது அதற்கேற்ப நம்பிக்கையும் அதிகரிக்கிறது.

கே: மாயையையும் அதன் விதங்களையும் விளக்குங்களேன்.

குருதேவ்: மாயையில் மூன்று விதங்கள், முதலாவது மோக மாயை. கண்ணை மறைக்கும் அளவிற்கு செல்வத்தின் மீதோ, குழந்தைகளின் மீதோ பற்று இருந்தால் அது தான்  மோக  மாயை.

பலருக்கு, மனைவி, குழந்தைகள், பெற்றோர், நண்பர்கள், இவர்கள் யாருமே  பணத்தின் முன் ஒரு பொருட்டல்ல, பணத்திற்காக பெற்றோரையே மன நலம் குன்றியவர்களாகச் சித்தரித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கவோ, ஏன் கொலை செய்யவோ கூட இவர்கள் தயாராக இருப்பார்கள்.

அதே போல் சிலர் தங்கள் குழைந்தைகளுடனே 24 மணிநேரமும் இருக்க வேண்டுமென விரும்புவர். அந்தக் குழந்தைக்கு எது நன்மை செய்யும், எது தீமை செய்யும் என்பது கூட அவர்களுக்குத் தெரிவதில்லை & இதுவும் மோக மாயை தான்.  நமக்கு அதிக சந்தோஷத்தைக் கொடுக்காத அதே சமயம், எதன் இல்லாமை நமக்குத் துன்பத்தைக் கொடுக்குமோ, அதுவே மோக மாயை.

பின் வருவது மகா மாயை. இது இயற்கையிலிருந்து வருவது, உண்மையை நாம் தெளிவாகப் பார்க்க முடியாமல் செய்வது. அதில் சிக்கி நாம் உணர்வுகளற்ற கல் போல் ஆகி விடுகிறாம்.

அதன் பின் வருவது யோக மாயை. யோகத்தில் கூட மாயை இருப்பது ஆச்சரியம் தான். அண்மையில் நீங்கள் நிர்மல் பாபாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம்.  ஆன்மீகத்தின் பெயரில் சட்டத்திற்குப் புறம்பான விஷயங்களில் ஈடுபட்டதாக அவர் மேல் குற்றச்சாட்டு உள்ளது. உண்மையில் அவர் நல்லவர், கள்ளம் கபடமற்றவர், மக்களுக்கு ஆசீர்வாதம் வழங்கியவாறு இருந்தார், அவர் யோக மாயையில் சிக்கியிருந்தார், அவ்வளவு தான், ஆனால் மக்கள் அவரை ஏமாற்றுக்காரர் என்று பட்டமே சூட்டி விட்டனர்.

சில சமயங்களில் என்ன ஆகிறதென்றால், தொடர்ந்து யோக சாதனை செய்து வரும்போது, ஒருவருக்குள்ளிருந்து சில தெய்வீக சக்திகள் உயிர் பெற்று எழுகின்றன. அப்போது ஒருவருக்குள் எதிர்காலத்தை அனுமானிக்கும் அளவிற்கு உள்ளுணர்வு உயிர்த்தெழுகிறது. அப்போது மனம் ஆகாயம் போல் நிர்மலமாக இல்லாதிருப்பின், விருப்பு வெறுப்பு ஒட்டிக்கொண்டிருப்பின், அவை அந்த உள்ளுணர்வை மங்கச்செய்து அதன் பயனைப் பாதியாகக் குறைத்து விடும்.

இப்படி யோக மாயையில் சிக்கிய ஒரு பெண்மணியையும் நான் அறிவேன். 25, 30 வருட யோக சாதனையின் மூலம் சில தெய்வீக சித்திகளை அடைந்து அம்பாளின் அனுக்ரஹத்திற்குப் பாத்திரமானவர் எனத் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தார். அம்பாள் தன்னை விடாது நடத்தி செல்வதாகக் கூறுவார் இவர்.

இவரது கணவருக்கு சர்க்கரை வியாதி. அம்பாள் அதை குணப்படுத்த ஆசீர்வாதம் மட்டுமே போதும் என்பதாகவும், மருந்துகள் தேவையில்லை எனக் கூறுவதாகவும் இவருக்குத் தோன்ற அதை அப்படியே கடைபிடித்தார். சில நாட்களில் சர்க்கரை வியாதி முற்றி அவரது கணவரின் கண்கள் குருடாயின.

அப்பெண்மணி பிறருக்குக் கூறியதெல்லாம் உண்மையாயின. ஆனால் இந்த ஒரு நிகழ்வுக்குப் பின் அவரது மனம் மிகவும் சங்கடத்துக்குள்ளாகியது. என்னிடம் வந்துகுரு தேவா, ஏன் இப்படி ஆயிற்று, ஏன் என் கணவருக்கு இப்படி ஆயிற்றுஎன வினவ, அவர் யோக மாயையில் கட்டுண்டிருப்பதை நான் சுட்டிக் காட்டினேன்.

நிர்மல் பாபாவிற்கும் இப்படித்தான் ஆயிற்று. நம்மால் சிலதைப் புரிந்து கொள்ள முடியும், சிலதைப் புரிந்து கொள்ள முடியாது. குண்டலினி சக்தி மேலெழும்போது நமது ஆசீர்வதிக்கும் சக்தி அதிகரிக்கிறது. ஆனால் இது நமது விருப்பு வெறுப்புக்களுடன் குறுக்கிடும் போது அதன் சக்தி அப்படியே இருப்பதில்லை. நிர்மல் பாபாவிற்கும் அப்படித்தான் ஆயிற்று. அவராலேயே அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இதைப் புரிந்து கொண்டால், நம்மால் ஆன்ம உணர்வில் ஒன்றி, மனதை நடுநிலையில், ஞானத்தில் நிறுத்தி வைக்க முடியும். அடையப்படும் தெய்வீக சித்திகள் நம் கண்களை மறைக்காது. அப்போது ஆசீர்வாதங்கள் தங்கு தடையின்றிப் பலனளிக்கும்.

யோக சாதனையாலும் ஆன்மீகப் பயிற்சியாலும் பிறரை வியாதியிலிருந்து குணப்படுத்தவும், அவர்களது ஆசைகளையும், பிரார்த்தனையையும் நிறைவேற்றவும் வல்ல ஆசீர்வாதத்தை வழங்கும் சக்தி அடையப்படுகிறது.

ஆனால் அதே சமயம் நாம் சில பரிகாரங்களைக் கூறி மூட நம்பிக்கைகளை வளர்ப்பது சரியல்ல. கடவுள் அருள், புண்ணியத்தால், தான தருமங்களால் வருவதல்ல, அதற்கு எந்த நியதியும் தேவையல்ல. எதையாவது செய்து, அதானல் கிடைப்பதற்குப் பெயர் அருள் அல்ல, அது வியாபாரம். ஆனால் அப்படி நம்மை நினைக்க வைப்பது தான் யோக மாயை.

எப்போதும் எங்கும் பரந்து இருக்கும் அருட்கடலில் நாம் மூழ்கியிருப்பதை நினைவு கூர்ந்தாலே போதுமானது. நம்மிடம் நன்றியுணர்வும் த்ருப்தியும் அதிகரிக்க அதிகரிக்க, நம் வாழ்வில் அருளின் அனுபவம் சித்தமாகும். எப்போதும் முணுமுணுத்து கொண்டயிருக்கும் மனதால் அருளை அறிய முடியாது. ஏதோ விசேஷ அருள் எங்கோ இருப்பதாக நினைக்க வேண்டாம், அருள் எங்கும் எப்போதும் இருப்பது தான், அதைப்பற்றிய விழிப்புணர்வு மட்டுமே நமக்கு வேண்டும்.

ஆன்மீக சாதகர்களின் ஆசீர்வதிக்கும் சக்தியை நாம் குறைகூற வேண்டியதில்லை. ஆனால் அதை வைத்து செல்வம் ஈட்ட விரும்பினால் , அதுவே வியாபாரம் ஆகிறது, அவர்களது ஆசீர்வதிக்கும் சக்தியும் குறைந்து போகிறது. இருப்பினும் யாராவது பக்தியுடன் உங்களுக்கு ஏதாவது அளிக்க விரும்பினால், அதை ஏற்றுப் புண்ணிய காரியங்களுக்கு செலவிடவும்.

இப்படியிருக்க, ‘வாழும் கலைப் பயிற்சிக்கு நாம் ஏன் பணம் செலவிடவேண்டும்என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். மாணவனாக இருந்து ஞானம் பெறும்போது ஆசிரியருக்கு தக்ஷிணை அளிப்பது அவசியம்.

ஞானம் பெறுவது ஒரு புனித யக்ஞம் போன்றது. எதையாவது ஆசிரியருக்கு அளித்து மட்டுமே பெறக்கூடியது. அப்போது தான் அந்த ஞானம் நம்மிடம் நிலைக்கும். இப்படித்தான் நமது சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கிறது. ஆசிரியருக்கு உண்டான தக்ஷிணையை செலுத்திய பின்பே நம்மால் கவனத்துடனும், நேர்மையுடனும் கற்க முடிகிறது.இல்லாவிடில் இலவச வகுப்பில் இன்று வருபவர்கள் நாளை வருவதில்லை. மாணவனின் நலனைக் கருதியே தக்ஷிணை எடுத்துக் கொள்ளப்படுகிறது.

குருவானவர் சாஸ்திர ஞானம் உள்ளவராகவும், அதை நன்கு வெளிப்படுத்தக் கூடியவராகவும், சத்தியத்தில் நிலைபெற்றவராகவும் இருக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது. அப்படியில்லையென்றால், இந்த விளையாட்டுகளெல்லாம் யோக மாயையால் வெகு சீக்கிரம் முடிவுக்கு வந்து விடும்.

இவற்றைக் கண்டு கோபப்படுவது இயல்பு. ஆனால் கோபத்தால் சக்தியிழப்பு தான் ஏற்படுகிறது. ஒருவரிடம் இந்த சக்திகள் மலரத் தொடங்கும் போது அவர்களுடைய உலகமே மாறி விடுகிறது. இங்கு நடப்பதற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இருப்பதில்லை. அந்த நேரத்தில் தான் மனம் விளையாடத் தொடங்குகிறது.

எனவே அவர்கள் கெட்டவர்களோ நேர்மையற்றவர்களோ அல்ல. யோக மாயையில் சிக்கியவர்கள், அவ்வளவே. எனவே யோக சாதனை செய்தாலும் யோக மாயையை வெல்வது அவசியம். அப்போது தான் வாழ்வில் பூரணத்துவம் பரிமளிக்கும்.

சாதகர்களைப் பார்த்தால், அவர்களுக்கு முதலில் கைகூடுவது பிறரை சபிக்கும் சக்தி தான். சாதகர்களின் எண்ணமோ, கோபமோ சக்தி வாய்ந்தது. இதை மனதில் கொண்டு, விழிப்புணர்வுடன் தாராளமாக அனைவரையும் ஆசீர்வதியுங்கள்.

பிறரை ஆசீர்வதிப்பதனால் நமக்கு ஒன்றும் குறை வராது. அப்படிப்பட்ட எண்ணம் வருவதும் யோக மாயையினால் தான்.

யோக மாயையிலேயே பல விதங்கள் உண்டு,சிலருக்கு யாராவது தங்களைத் தொட்டாலே, தங்கள் சக்தி அவர்களுக்குப் போய் விட்டதாக நினைப்பர். ஒரு சில நியமங்கள் இருப்பதில் தவறில்லை, ஆனால் நாம் அனைவருமே சைதன்யக் கடலில் மூழ்கியிருப்பதை மறக்க வேண்டாம்.

சிறிய சக்திகளில் மனம் கட்டுண்டிருப்பது யோக மாயை. அதைக்கடந்து நிற்கும் போது இயற்கையாகவே தெய்வீக சக்திகள் நம்மை அடைகின்றன. இந்நிலையில் பிறரை ஆசீர்வதிக்கும் போது அவர்களின் ஆசை அவாக்கள் பூர்த்தியடைகின்றன.

கே: அகங்காரம், செருக்கு, சுய மரியாதை & இவை மூன்றுக்கும் என்ன வித்தியாசம்?

குருதேவ்: அகங்காரத்திற்கும் செருக்கிற்கும் வித்தியாசமில்லை.‘நான்என்பது அகங்காரம்.‘நான் மட்டுமே நல்லவன், வேறு யாருமே நல்லவர்களில்லைஇது செருக்கு.

சுய மரியாதை என்பது உன்னால் இழக்க முடியாதது. தன்னைத் தெரிந்து கொண்டதனால் தன் மீது ஏற்படும் மரியாதைக்குப் பெயர் தான் சுய மரியாதை.

யாராவது உன்னை சாடும்போது அவ்விடத்திலிருந்து நகர்ந்து விடு. அது உன் மனதைத் துன்பப்பட வைக்கிறது. அதனால் சக்தி பாதிப்பு ஏற்படுகிறது. அதனால் உன்னைப் பற்றிய அவது£றுகளைக் கேட்கக் கூட வேண்டாம்.

கே: அகங்காரம் இன்றி சுய முயற்சி இல்லை. அதே சமயம் அகங்காரம் இருத்தலும் கூடாது. இது சிறிது குழப்பமாக உள்ளது!!

குருதேவ்: இரண்டுமே உண்மை. ஞானப்பேழையைப் படிக்கவும், இதை பற்றி அதிகம் பேசியுள்ளேன்.