குருதேவரின் குரு பௌர்ணமி செய்தி

3 - ஜூலை - 2012. பூன், வடக்கு கரோலினா - அமெரிக்கா
 

“ஈஸ்வரோ குருராத்மேதி மூர்த்தி பேத விபாகினே, வ்யோமவத் வ்யாப்த தேஹாய தக்ஷிணாமூர்த்தயே நமஹ”

குரு, ஆத்மா, இறைவன் இவற்றில் வேறுபாடு ஒன்றும் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் பரம ஆத்ம ஸ்வரூபமான ஶ்ரீ தக்ஷிணாமூர்த்தியை வணங்குவோம். குரு, ஆத்மா, இறைவன் இவற்றில் வேறுபாடு கிடையாது. மூன்றுமே ஒன்று தான். உன் ஆத்மா, குரு தத்துவம், இறைவன் மூன்றும் ஒன்று தான். இந்த மூன்றுக்கும் உருவம் கிடையாது. அவர்களுக்கு உருவம் இருந்தால் அது ஆகாயம் போன்றது.
“வ்யோமவத் வ்யாப்த தேஹாய” (வ்யோம் – ஆகாயம், வெட்டவெளி; தேஹா – உடல், வ்யாப்த – எங்கும் நிறைந்திருக்கும்)
நீ உடல் அல்ல. நீ ஆத்மா. ஆத்மாவின் உருவம் ஆகாயம் போன்றது. குருவுக்கும் அதுவே பொருந்தும். குருவை அவரின் உடல் அளவில் பார்க்காதே. குரு எங்கும் நிறைந்திருக்கும் சக்தி வெளியாகும். ஆத்மாவும் அப்படித்தான். குருவைப் போற்றுவதும் உன்னைப் போற்றுவதும் ஒன்று. இந்தியாவில் அழகான புராணக் கதை ஒன்று இருக்கிறது. இந்த உலகின் குரு சிவபெருமான் தான். அவர் எல்லா தேவர்களுக்கும் குருவாய் இருப்பவர். அவரை ஆதிகுரு என்று அழைக்கிறோம். காலம் ஆரம்பித்த சமயத்திலிருந்தே அவர் குருவாக இருக்கிறார். அவர் காலத்திற்கப்பாற்பட்டவர். கார்த்திகேயன் அவருடைய மகன். அவரை பிரமதேவரிடம் பாடம் கற்பதற்காக பள்ளிக்கு அனுப்பினார்கள்.
“நாராயணம் பத்ம பவம்” – பிரமதேவர் பத்மபவம் (தாமரை மலரில் அமர்ந்திருப்பவர்). பிரமதேவரும் குருதான். அவருடைய குரு ஶ்ரீ நாராயணர். சிவபெருமான் ஶ்ரீ நாராயணருடைய குரு. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை கல்வி கற்பதற்காக குருகுலத்துக்கு அனுப்புவது போல் சிவபெருமானும் அவருடைய மகனை  பிரமதேவரிடம்  கல்வி கற்று ஞானம் அடைவதற்காக அனுப்பினார்.
கார்த்திகேயன் பிரமதேவரிடம் சென்று “ஓம்” என்னும் மந்திரத்துக்குப் பொருள் சொல்லுங்கள் என்று கேட்டார். பிரமதேவர் “ ‘ஓம்’ என்பதன் பொருளைக் கேட்கிறாய். முதலில் எழுத்துக்களைக் கற்றுக்கொள். “ என்றார். கார்த்திகேயன் “நான் முதலில் உயர்ந்த ஞானமான ‘ஓம்’ என்பதற்குப் பொருளைக் கற்கவேண்டும்.” என்றார்.
பிரமதேவருக்கு எல்லா எழுத்துக்களும் தெரியும். ஆனால் அவருக்கு ‘ஓம்’ என்பதன் பொருள் தெரியாது. ‘ஓம்’ உலகம் தோன்றிய போது உருவான ஒலி. ‘ஓம்’ என்பதன் ஒரு பகுதியான ‘அ’ மட்டும் தான் அவருக்குத் தெரியும். ‘உ’ விஷ்ணு பகவானுக்கு உரியது. ‘ம்’ சிவபெருமானுக்கு உரியது. அதனால் பிரமதேவர் ‘ஓம்’ பற்றி முழுவதும் அறிந்திருக்க வில்லை. ஆகவே கார்த்திகேயன் ‘ஓம்’ என்பதன் பொருள் தெரியாமல் நீங்கள் எனக்கு எப்படி பாடம் கற்றுக் கொடுக்க முடியும்?  நான் உங்களிடம் படிக்க மாட்டேன். என்று சொல்லி தன் தந்தையான சிவபெருமானிடம் திரும்பிச் சென்றார்.
பிரமதேவர் சிவபெருமானிடம் சென்று நீங்கள் தான் உங்கள் மகனைச் சமாளிக்க முடியும்.என்னால் இயலாது. நான் ஒன்று சொன்னால் அவன் வேறு ஒன்று சொல்கிறான். நான் சொல்வதை மறுத்து அதற்கு எதிராக வேறு சொல்கிறான். நான் அவனுக்குக் கற்றுக் கொடுக்க முடியாது. அவனுக்கு வேண்டியதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள் என்றார்.
சிவபெருமான் இதைக்கேட்டு,தன் மகன் கார்த்திகேயனிடம் “என்ன நடந்தது மகனே!”என்று கேட்டார். பிரமதேவர் இந்த உலகை உருவாக்கியவர். நீ அவரிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதற்கு பதிலாக கார்த்திகேயன் “அப்படியானால் ‘ஓம்’ என்பதன் பொருளை நீங்கள் எனக்கு விளக்குங்கள்” என்றார். இதைக் கேட்டு சிவபெருமான் சிரித்துவிட்டுச் சொன்னார். “எனக்கும் தெரியாது” கார்த்திகேயன் “அப்படியானால் நான் உங்களுக்குச் சொல்கிறேன். ‘ஓம்’ என்பதன் பொருள் எனக்குத் தெரியும்” என்றார்.
“அப்படியானால் ‘ஓம்’ என்பதன் பொருளை நீ எனக்குச் சொல்” என்று சிவபெருமான் கேட்டார். “அதை நான் அப்படிச் சொல்லமுடியாது/ என்னை நீங்கள் குருவின் இடத்தில் வைத்துக் கேட்க வேண்டும். நீங்கள் என்னை குருவின் இடத்தில் வைத்துக் கேட்டால் தான் நான் உங்களுக்குச் சொல்ல முடியும்” என்று கார்த்திகேயன் சொன்னார்.
குரு என்றால் அவர் ஒரு உயர்ந்த இடத்தில் அமர வேண்டும். மாணவர்கள் அவரை விட தாழ்வான இடத்தில் அமர்ந்து பாடம் கேட்க வேண்டும்.இப்போது அதை எப்படித் தீர்மானிப்பது? கார்த்திகேயனுக்கு எங்கு இடம் அளிப்பது? ஏனென்றால் சிவபெருமான் இருக்கும் இடத்தைவிட உயர்ந்த இடம் இவ்வுலகில் எங்கும் கிடையாது. சிவபெருமான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவர். கைலாய மலையை விட உயர்ந்தவர். கைலாய மலை தான் அவருக்கு ஆசனமாகும். என்ன செய்வது? அவருக்கும் ஒன்றும் புரிய வில்லை. எனவே அப்போது தேவி பார்வதி “நீங்கள் கார்த்திகேயனை உங்கள் தோளில் தூக்கி வைத்துக் கொள்ளுங்கள்” என்று சிவபெருமானிடம் சொன்னார்.
எனவே சிவபெருமான் கார்த்திகேயனை தன் தோளில் அமர்த்தி தன்னை விட உயர்வான இடத்தைக் கொடுத்தார். கார்த்திகேயன் சிவபெருமானின் காதில் எல்லாவற்றுக்கும் மேலான உண்மையின் பொருளை ‘ஓம்’ என்பதன் பொருளை சொன்னார்.
குரு தத்துவத்தை விளக்குவதற்கான கதை இது. குருதத்துவம் என்பது குழந்தையைப் போல கள்ளமில்லாதது. இதில் இனிமையும், கள்ளங் கபடில்லாத தன்மையும் இருக்கிறது. சிவ பெருமானால் போற்றப்பட்டது. சிவபெருமான் குருதத்துவத்துக்கு தன்னை விட உயர்ந்த இடத்தை அளித்தார். ஏனென்றால் அப்போது தான் கார்த்திகேயன் அவருக்கு அந்த உயர்ந்த ஞானத்தை அளிப்பேன் என்று சொன்னார்.
இது எப்படி என்றால், கிணற்றில் இருக்கும் நீரை ஒரு பம்ப் மூலம் நம்மை விட உயர்ந்த இடத்தில் இருக்கும் தொட்டியில் எடுத்துச் சென்றால் தான் நாம் அந்த நீரில் தலை மேல் பூவாளியிலிருந்து ஊற்றுவது போல்) குளிக்க முடியும். அதற்கான ஒரு இடத்தைக் கொடுக்க வேண்டும். எனவே இங்கே சொல்லப்படுவது இது தான். குருதத்துவம் ஒரு குழந்தையைப் போல் கள்ளமில்லாத, அறிவு கூர்ந்த, மரியாதைக்குரிய,அதே சமயம் பணிவான – ஒரு சிறு குழந்தையிடம் இருக்கும் எல்லா குணங்களையும் அடக்கிய – ஒரு தத்துவம். குரு தத்துவத்துக்கு மரியாதை செலுத்துவது, ஆத்மாவுக்கு மரியாதை செலுத்துவது, வாழ்க்கைக்கு மரியாதை செலுத்துவது எல்லாம் ஒன்று தான். குரு பௌர்ணமி, குரு தத்துவத்தைக் கொண்டாடி மரியாதை செலுத்துவதற்கான நாள். குருவுக்கு மரியாதை அளிப்பது ஞானத்துக்கு, அறிவுக்கு, கள்ளமற்ற தன்மைக்கு, அன்புக்கு மரியாதை அளிப்பது தான். எனவே கார்த்திகேயன் சிவபெருமானுக்குச் சொன்னது என்ன?
அவர் சொன்னது. ‘ஓம்’ என்றால் அன்பு. நான் அன்பே உருவானவன். இங்கு இருக்கும் அனைத்தும் அன்பால் ஆனது. அன்பால் நிறைந்திருப்பது. அன்பு எல்லாவற்றிற்கும் சாரமாகவும் அமிர்தமாகவும் உள்ளது. இருக்கும் எல்லாமும் அன்புதான். கார்த்திகேயன் சொன்னது இது தான். எனவே ‘ஓம்’ என்பதன் பொருள் அந்த உயர்வான இடத்திலிருந்து வந்தது. ஆகவே, இன்று நாம் தெரிந்து கொண்டது என்ன?
வாழ்க்கையின் சாரம் அன்பு தான். அன்பு மிகவும் மென்மையானது. அன்பையும் நம்பிக்கையையும் கவனமாகக் கையாள வேண்டும். குருவின் உடல் அன்பாலும் நம்பிக்கையாலும் ஆனது. அது தான் சாரம். குரு பௌர்ணமி அன்று நாம் அன்பு மற்றும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டாடுகிறோம். அதை எப்படிக் கவனமாக கையாளவேண்டும் என்றும் அறிந்து கொள்கிறோம். அறிவுக்கு எட்டுகிறதா? கவனமாகக் கையாளவேண்டும்.
ஆகவே இந்தக் கதை அருமையானது. குரு தத்துவம் ஒரு குழந்தையைப் போல் இருக்கிறது. நான் முன்பே சொல்லியிருக்கிறேன். ஆயிரக் கணக்கான ஆசிரியர்கள் இந்த பூமியில் இருக்கிறார்கள். ஆகவே எல்லோரும் நினைவு கொள்ள வேண்டியது – உங்கள் வாழ்க்கையைத் தூய்மையாக்கிக் கொள்ளுங்கள். கபடமில்லாமல் நேர்மையாக வாழுங்கள். எதற்கும் குறைவிருக்காது.
நான் ஒரு முன் உதாரணமாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகளாக நான், எண்ணம், மொழி, காரியத்தால் யாருக்கும் தீங்கிழைக்க வில்லை. ஒரு கெட்ட வார்த்தை கூட என் வாயிலிருந்து இத்தனை ஆண்டுகளில் வந்ததில்லை. இதற்காக நான் பாராட்டு பெற விரும்பவில்லை. என் இயல்பே அப்படித்தான். நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் அப்படி கவனமாக, மென்மையாக நடந்து கொள்ளுங்கள். அதை உங்களால் செய்ய முடியும். செய்ய முடியாததில்லை. இவ்வுலகில் தூய்மையான வாழ்க்கை நடத்தி வெற்றி பெறுவது சாத்தியம் தான். அது தான் உண்மையான வெற்றி. ஞானப் பாதையில் நாம் முன்னேறலாம்.
ஆயிரக் கணக்கான ஆசிரியர்களுக்குச் சொல்கிறேன். பணிவாக (அகங்காரமில்லாமல்) இருங்கள் . நினைவிருக்கட்டும். எப்பொழுதும் பணிந்து செல்லுங்கள். பணிவுடனும் பெருந்தன்மையுடனும் இருங்கள். பணிவாக இருப்பது என்பது பலவீனமாக இருப்பதல்ல. யார் வேண்டுமானாலும் பணிவாக இருக்கலாம். ஒரு அரசனைப் போல், பெருந்தன்மையாக இருக்க முறுக்கோடு இருக்க அவசியமில்லை. பெருந்தன்மையும் பணிவும் ஒரு சேர இருக்கலாம்.
புரிந்ததா? கருணையும், பலமும், கபடின்மையும், அறிவுக்கூர்மையும், விளையாட்டுத்தனமும், ஞானமும், தூய்மையும், நற்குணமும், பலமும், நுண்மையும் – பொதுவாக மிக நுண்மையானவை மிக பலமாக இருக்காது. ஆனால் மென்மையாக இருப்பது வித்தியாசமானது இல்லையா?
குருவை கவனமாகக் கையாளவேண்டும். (சிரிப்பு). மென்மையான பொருட்களை பெட்டியில் வைத்து அனுப்பும் போது (கவனமாகக் கையாளுங்கள்) என்று எழுதுகிறோம் இல்லையா? குரு தத்துவம் உடையும் பொருள் அல்ல. ஆனாலும் கவனமாகக் கையாள வேண்டும்.