பக்தி - தணிக்க முடியாத தாகம்....


பெங்களூர் - இந்தியா 28 – ஜூலை - 2012

கே: நிறைய போராட்டத்துக்குப் பின் உங்களை குருவாக கிடைக்கப் பெற்றேன். அடுத்த பிறவியில் மீண்டும் வழி தவறாமல், உங்களுடன் இருக்க விரும்புகிறேன். அதற்கு என்ன வழி?

குருதேவர்: இப்போது கவலைப்பட எத்தனையோ இருக்கின்றன. அடுத்த பிறவிக்கு ஏன் தள்ளிப் போடுகிறாய். இப்பொழுது உனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. முக்தியடைந்து மகிழ்ச்சியோடு இரு. சேவையில் ஈடு படு. அடுத்த பிறவியைப் பற்றி பின்னால் பார்ப்போம்.
 
கே: சத்சங்கத்திலும், சில வாழும் கலை முதுநிலைப் பயிற்சியின் போதும் எனக்கு அழுகை வருகிறது. ஏன்?

குருதேவர்: நீ ஏன் அழுகிறாய். நீ சிரிக்க வேண்டுமென்று தான் நான் எண்ணுகிறேன். சிரி. உபநிஷதத்தில் ஒரு ஸ்லோகம் இருக்கிறது. “பித்யந்தி ஹ்ருதய க்ரந்தி சிந்யந்தே சர்வ சம்ஷயஹ. க்ஷீணதிகாஸ்ய கர்மாணி, யஸ்மின் த்ரிஸ்டே பராவரே.” (மாண்டூக்ய உபநிஷதம்)

நீ உன் காதலனைப் பார்க்கும் போது, இதயத்தில் உள்ள முடிச்சுகள் அவிழ்ந்து கண்களில் கண்ணீர் வரும். மனதில் இருக்கும் சந்தேகம் போய் விடும். எல்லா விதமான கெட்ட கர்மங்களும் மறைந்து விடும். இது தான் இந்த உபநிஷதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது.

நீ அழுவதற்குக் காரணம் உன் இதயத்தின் முடிச்சுகள் தளர்வதால் இருக்கலாம். (அவிழ்ந்து விடுவதால்) – இது ஒரு காரணம்.அதில் ஒன்றும் தவறில்லை. இதயம் மலரும் போது கண்ணீர் வந்து உணர்ச்சிகள் பெருகும். நன்றியுணர்வும், அன்பும் கண்ணீரோடு சம்பந்தப் பட்டிருப்பவை களாகும். இந்தக் கண்ணீர் இனிமையானது. பக்தி சூத்திரத்தில் “அன்பின் காரணமாக வரும் கண்ணீருக்காக தேவதைகள் ஏங்குகின்றன” என்று சொல்லப் பட்டிருக்கிறது. உன் கண்ணில் கண்ணீர் வருவதால் நீ மிகவும் அதிர்ஷ்ட சாலி.

யார் கண்ணில் கண்ணீர் வரவில்லையோ, நான் அதிர்ஷ்டமில்லாதவன், என் கண்ணில் கண்ணீர் வரவில்லை என்று எண்ண வேண்டாம். கண்ணீர் வந்தால் தான் நீ ஆன்மீகத்தில் முன்னேறியவன் என்று நினைக்க வேண்டாம். அப்படியெல்லாம் இல்லை. சிலருக்கு கண்ணீர் இயல்பாக வரும். சிலருக்கு உணர்ச்சிகள் அதிகமாக வெளிப்படும். மனம் காலியாகி விடும். உணர்ச்சி வெள்ளம் அவர்களை தன் வசப் படுத்தி விடும். இவைகள் வித்தியாசமான அனுபவங்கள். சில நாட்கள் இப்படிப்பட்ட அனுபவம் இருக்கலாம். சில நாட்கள் இல்லாமல் இருக்கலாம். எல்லோருக்கும் இப்படிப் பட்ட அனுபவம் இருக்கத் தேவை இல்லை. கண்ணீர் விடுவது ஆன்மீகப் பாதையில் முன்னேற்றம் என்று எண்ண வேண்டாம். கண்ணீர் வந்தால் நல்லது. வராவிட்டாலும் கவலை கொள்ள வேண்டாம்.

கே: அஹிம்சையைப் பற்றிச் சொல்வீர்களா? அசைவ உணவு உண்பவர் ,சைவ உணவு உண்பவரைப் பார்த்து “நீங்களும் தான் தாவரங்களைக் கொல்கிறீர்கள். தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது. வலியால் அவை கதறும்” என்று சொல்லும் போது என்ன பதில் சொல்லலாம்.

குருதேவர்: அசைவ உணவு சாப்பிடுபவரைப் பார்த்து, அவரின் வளர்ப்பு நாய்க்குட்டியை சமைத்துச் சாப்பிடுவாரா என்று கேளுங்கள்? அப்படிச் செய்ய மாட்டார். யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
நம் மனித உடல் சைவ உணவை உண்பதற்கு ஏற்றது. நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார்கள். நீ “கூகிள்” வலைத் தளத்திற்குச் சென்று “நான் ஏன் சைவ உணவு உண்ண வேண்டும்?” என்று தேடினால் பல விதமான விடைகள் கிடைக்கும். கூகிளில் இதற்கான பல விளக்கங்கள் இருக்கின்றன.அஹிம்சை என்பது சிந்தனை (எண்ணம்). எந்த மனநிலையில் நீ போய் ஒன்றை அழிக்கிறாயோ அது ஹிம்சை. கொடுஞ் செயல். உயிரைக் கொல்வது கொடுஞ் செயல். அஹிம்சை என்பதில் மனதில் வன்முறை என்பது அறவே கிடையாது. மனம் எதையும் அழிக்கவோ, கொல்லவோ எண்ணுவதில்லை. அது தான் அஹிம்சை.

கனாட் என்று ஒரு ரிஷி இருந்தார். அவர் பயிரை அறுவடை செய்ய மாட்டார். தானியங்களை மட்டும் பயிரிலிருந்து எடுத்துக் கொள்வார். கனாட் ரிஷியின் சொல்படி ஒருவனுக்கு பொருளைப் பற்றிய அறிவு இருக்க வேண்டும். “பதார்த்த ஞானநாத மோக்ஷஹ” “இந்த உலகம் எந்தப் பொருளால் ஆனது என்று அறிந்தால் நீ முக்தியடையலாம்.” தாவரங்களின் காய் கனிகளைத் தான் நாம் பறிக்கிறோம். அடியோடு அழிப்பதால் அவற்றுக்கு ஏற்படும் துன்பத்தை விட இந்தத் துன்பம் குறைவு தான்.

கே: குருதேவா! விசாலாக்ஷி மண்டபம் ஏன் தாமரை மலர் போல் அமைக்கப்பட்டிருக்கிறது? நீங்கள் தாமரை மலர் போல் இருப்பதாலா? “விசாலாக்ஷி” மற்றும் “சுமேரு” என்பதன் அர்த்தம் என்ன?

குருதேவர்: நன்றாக இருக்கிறது இல்லையா? (சிரிப்பு). அதற்காக நீ 100 காரணங்கள் சொல்லலாம். நாங்கள் ஏதோ முடிவெடுத்து அப்படி அமைத்தோம்.அவ்வளவு தான். நன்றாக இருக்கிறதில்லையா?

இதை செம்பருத்தி மலர் போல் அமைத்திருந்தாலும் நீ இந்தக் கேள்வியை கேட்பாய்? ஏன் செம்பருத்தி மலர் போல் இருக்கிறது என்று? இந்த மலர் தான் சரி. அது சரியல்ல என்று விவாதம் தேவையில்லை. மற்ற மலர்களுக்குக் கோபம் வந்து விடும். “விசால்” என்றால் பரந்து விரிந்தது என்று பொருள். “அக்ஷி” என்றால் கண்கள். “விசாலாக்ஷி” என்றால் பரந்த நோக்கு என்று கொள்ளலாம். இதில் நுழைபவர்களுக்கு கண்ணோட்டம் விரிந்து அவர்களின் வாழ்க்கையின் பார்வை நல்லவைகளை நோக்கித் திரும்பும். (பார்வையாளர்கள் கை கொட்டுகிறார்கள்)

தியானம் இதைத்தான் செய்கிறது. உன் பார்வையை விரித்து உன் வேர்களை ஆழமாக (உறுதியாக) வளரச் செய்கிறது.

கே: குருதேவா! எனக்கு பக்தி அனுபவம் நிறைய இருந்திருக்கிறது. காலம் செல்லச் செல்ல அது குறைந்து விட்டது போலிருக்கிறது. உங்களின் பதஞ்சலியின் யோக சூத்திர விளக்கத்தைக் கேட்டதும், அது என் ஸ்வபாவமில்லை என்று புரிந்து கொண்டேன். பக்தியை மீண்டும் அனுபவிக்க என்ன செய்ய வேண்டும்?

குருதேவர்: பக்தி எப்போதும் இருக்கிறது. சில சமயம் மேகங்கள் வருகின்றன. காலம் செல்லச் செல்ல நம்பிக்கை சில சமயம் மேலும் கீழும் இருக்கும். அது கீழே செல்லும் போது அங்கேயே தங்கி விடும் என்று எண்ண வேண்டாம். அது மீண்டும் மேலே வரும்.

இது மனதின் இயல்பு. மனம் மேலும் கீழும் செல்வது. மேலும் கீழும் செல்லும் போது அது அன்பையும் நம்பிக்கையையும் அப்படியே காண்பிக்கும். அது பிராண சக்தியுடன் சம்பந்தப் பட்டது. பிராண சக்தி அதிகரிக்கும் போது, நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். பிராண சக்தி குறையும் போது மனம் “என்ன இது? நான் சரியான இடத்தில் இருக்கிறேனா? நான் செய்வது சரியா? என்று கேட்கும். கோடி சந்தேகம் மனதில் வரும்.

எனவே நீ ஆத்மாவோடு இணைந்திருக்கும்போது (கப்பலுக்கு நங்கூரம் போல்), நீ உன் அறிவின் மேல் நம்பிக்கையோடு இருக்கும் போது, திடமான நிலை ஏற்படும். அதனால் தான் நம் முன்னோர்கள், ரிஷிகள், புனிதர்கள், “கடவுளே, எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை (அchaல் ச்ரத்தா) கொடு” என்று வேண்டினார்கள்.

நாம் கேட்கக் கூடியதும் இதுதான். அப்படிக் கிடைப்பது ஒரு அருமையான பரிசு!உன்னிடம் அன்பும், பக்தியும் இருந்தால் வாழ்வு மலருவதைப் பார்க்கலாம். அன்பும் பக்தியும் உடையும் போது என்ன நடக்கிறது என்று பார் – ஒரு ஜடத்தன்மை வந்து விடும். வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இல்லாமல் நம்பிக்கையற்ற உணர்ச்சி ஏற்படும். எல்லா கதவுகளுமே அடைத்திருப்பது போல் தோன்றும். எல்லா இடமும் கரிய இருளால் சூழ்ந்திருப்பதைப் போல் காட்சியளிக்கும். இதை “ஆத்மாவின் கரிய இரவு” என்று கிரிஸ்தவ சம்பிரதாயத்தில் சொல்வார்கள்.

ஆத்மா அப்படிப் பட்ட கரிய இரவைக் கடந்து செல்ல வேண்டும். நான் சொல்வது என்னவென்றால், “நீ யோகியாக இருந்தால் உன் ஆத்மா அப்படிப் பட்ட கரிய இரவைக் கடக்க நேரிடாது.” (யோகி: ஆன்மீகப் பாதையில் சென்று முக்தி தேடுபவர்). யோக சூத்திரத்தில் நான் “யோக வழியில் போக முடியாமல் வரும் 9 விதமான தடைகள் பற்றி” கூறி இருக்கிறேன். அத்தடைகளை எப்படி மீறிச் செல்வது என்றும் குறிப்பிட்டிருக்கிறேன். “ஏகத்வ அப்யாச” – நீ ஒரு தத்துவத்தை மட்டும் கடைப்பிடித்துச் செல்லும் போது தடைகளை (உன் பார்வையில் தடைகள் என்று தோன்றுவதை) கடந்து செல்ல முடியும்.

கே: அன்புள்ள குருதேவா! தீவிர அன்பும் பக்தியும் ஏற்படும் போது நான் என் விழிப்புணர்ச்சியை இழந்து விடுகிறேன். நான் விழிப்புணர்வோடு இருக்கும் போது தீவிர பக்தியை இழந்து விடுகிறேன். இறுக்கமான அன்பு, பக்தியையும், விழிப்புணர்ச்சியையும் சேர்த்து வைத்துக் கொள்வது எப்படி?

குருதேவர்: உன்னிடம் நிறைய நேரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். வேலைகளில் ஈடுபடு. கர்மயோகத்தில் செல். நீ சேவை செய்யும் போது. “என்னுடைய உணர்ச்சி என்ன? இப்போது என்னுடைய உணர்ச்சி எப்படி இல்லை?” என்று அமர்ந்து யோசிக்க நேரமிருக்காது.

உணர்ச்சிகள் வாழ்வின் ஒரு பகுதி. அதோடு கடந்து செல். நம் உடலில் 172000 நாடிகள் (பாதைகள்) இருக்கின்றன. சில சமயம் அறிவு நாடி திறக்கிறது. சில சமயம் இசை நாடி திறக்கிறது. வித்தியாசமான நாடிகள் திறக்கும் போது நீ விதவிதமான உணர்ச்சிகளை அனுபவிக்கிறாய். எனவே, உன் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம். தெரிந்ததா?

நீ என்ன உணர்ச்சியில் இருக்கிறாய் என்று யாருக்குக் கவலை? எல்லோரும் நீ செய்யும் செயல்களை எதிர்பார்க்கிறார்கள். இந்த பூமிக்கு உன்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப் பார். நான் என்ன நல்ல காரியம் செய்யலாம் என்று எண்ணிப் பார். அதைக் கவனி. நடக்கும் நிகழ்ச்சிகளின் மீது கவனம் வேண்டாம். உன்னால் என்ன செய்ய முடியும். அதற்காக நீ என்ன செய்ய வேண்டும் என்று அதில் கவனம் செலுத்து.

நிறைய சமயங்களில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்காமல் என்ன நடக்கிறது என்பதை அசை போட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விட்டு, என்ன நடக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்துகிறோம்.  நீ என்ன செய்கிறாய் என்பதில் கவனம் செலுத்தி இயற்கையில் நடப்பவைகளை அதன் போக்கில் விடு. இயற்கை தன் வழியில் உன்னை நடத்திச் செல்லும்.

எண்ணங்களோ, மன உணர்ச்சிகளோ அவை தனியாக நடப்பதில்லை. அது உலகில் நடக்கும் ஒரு அதிசயம். நீ ஒரு சுதந்திர தின விழாவுக்கோ, தேசீய நாள் விழாவுக்கோ செல்வதாக வைத்துக் கொள். எல்லோரும் தேசப் பற்று நிறைந்தவர்களாக தேச பக்திப் பாடல்களைப் பாடுகிறார்கள். நீயும் உடனே தேச பக்தி நிறைந்தவனாக உணருகிறாய். கண்களில் கண்ணீர் வருகிறது. எவ்வளவு பேருக்கு இப்படி நடந்திருக்கிறது. (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்). அதே போல் ஒரு பொதுக் கூட்டத்தில் ஒருவர், “ஒரு அரசியல்வாதி பலரைக் கொடுமைப்படுத்தினார்” என்று விவரிக்கும் போது, உடனே உனக்குள் கோபம் பொங்குகிறது. இப்படிப்பட்ட அனுபவம் எத்தனை பேருக்கு இருக்கிறது? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்).

உனக்கு நிறைய கோபம் வருகிறது. எல்லோரும் திடீரென்று தேசபக்தி நிறைந்தவர்களாகின்றனர். இந்த உணர்ச்சிகள் உங்களிடமிருந்து வெளிவருகிறது.சினிமா பட இயக்குனர்கள்,படமெடுப்பவர்கள் உங்களிடமிருந்து இப்படிப் பட்ட உணர்ச்சிகளை வெளியே வரவழைப்பது எப்படி என்று அறிந்திருக்கிறார்கள். அப்படி
பட்ட பாடலை அந்தக் காட்சியில் கேட்டு நீங்கள் அழவோ, சிரிக்கவோ செய்வீர்கள். உணர்ச்சிகள் இசையோடு சம்பந்தப் பட்டிருப்பது உங்களுக்குத் தெரியும். பெரிய கலவரங்கள் ஏற்படக் காரணம் என்ன? மக்களின் மன உணர்ச்சிகளை உசுப்பி கலவரங்களை ஏற்படுத்துகிறார்கள். மனம் திடமில்லாதவர்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு அதில் சேருகிறார்கள். அறியாதவர்கள் அதில் குதிக்கிறார்கள். என்ன செய்கிறோம் என்று அறியாமல் கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். இன்று அஸ்ஸாம் கலவரங்களால் 2 லட்சம் பேர் முகாம்களில் தங்கியிருப்பதாக எனக்குத் தெரிய வந்தது. அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து துரத்தப்பட்டு ஓடி வந்தவர்கள். 500 கிராமங்கள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. ஆனால் நடுவில் இருந்த 3 கிராமங்கள் இந்த பாதிப்புக்குள்ளாகவில்லை. ஏன் என்று தெரியுமா? அந்த 3 கிராமங்களிலுள்ளவர்களில் பலர் வாழும்கலைப் பயிற்சி எடுத்தவர்கள்.

சவிதாவும், ஆசிஷ் பூடானியும் (அந்த கிராமங்களின் முன்னேற்றத்துக்காக சேவையில் ஈடுபட்ட வாழும் கலையைச் சேர்ந்த தன்னார்வலர்கள்) இங்கு வந்திருக்கிறார்கள். சவிதா அந்த கிராமங்களின் பெயரைக் கூடச் சொல்வாள்.

அந்த 3 கிராமங்களில் ஒரு வன்முறைச் சம்பவமும் நடை பெற விட வில்லை. யாரும் யாருடைய வீட்டையும் கொளுத்த விட வில்லை. அவர்கள் அனைவரும் இந்த உலகின் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பியதால் தான் மூன்று கிராமங்களும் காப்பாற்றப் பட்டன. முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், இந்துக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து எந்த முஸ்லீமையும் இந்துவைக் கொடுமைப் படுத்த விடவில்லை. எந்த இந்துவையும் முஸ்லீமை கொடுமைப் படுத்த விட வில்லை. எந்தப் பக்கத்திலிருந்தும் வன்முறை நடக்க விட வில்லை.

சவிதா இங்கு வந்து அந்த கிராமங்களின் பெயரைச் சொல் .சவிதா சொல்கிறாள் – ஒரு கிராமத்தில் மூன்று சமூகத்தாரும் இருக்கிறார்கள். – போடோ, அஸ்ஸாமியர்கள், முஸ்லீம்கள். இருந்தாலும் மூன்று சமூகத்தாரும் சேர்ந்து வந்து தங்கள் கிராமத்தில் வன்முறை நடக்க விடவில்லை. இந்த கிராமங்களில் வாழும் கலைப் பயிற்சிகளும், தொண்டுகளும் நடந்து வந்தது தான் இதற்குக் காரணம். பலர் முதல் நிலைப் பயிற்சியோ, ஒய்.எல்.டி.பி பயிற்சியோ எடுத்திருந்தார்கள். இந்த கிராமங்களில் வன்முறை நிகழ வில்லை. உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இந்த கிராமத்தின் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் பல வீடுகள் தீக்கிரையாயின. வாழும்கலைப் பயிற்சியினால் இந்த மூன்று கிராமங்களில் உள்ளவர்கள் தப்பினார்கள்.

மிக நல்லது. மிக நல்லது. ஜெய் குருதேவ்..

குருதேவர்: இந்தப் பயிற்சியை நாம் எல்லோருக்கும் அளிப்பது எவ்வளவு அவசியம் என்று இப்போது உங்களுக்குப் புரியும். இது அவசியம் என்று எவ்வளவு பேர் நினைக்கிறீர்கள். அதுவும் வகுப்புக் கலவரம் நிகழ வாய்ப்புள்ள இடங்களில். எங்கு அமைதி காப்பது மிகவும் கடினமோ, அந்த இடங்களுக்கு நாம் செல்ல வேண்டியது அவசியம்.

கே: ஜெய் குருதேவ். 2014 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புகிறேன். அதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருக்கின்றன. இந்த 2 ஆண்டுகளில் தொகுதிகளில் என்ன காரியம் செய்தால் வெற்றி பெற முடியும்.

குருதேவர்: மிகவும் நன்று. எந்தத் துறையில் ஈடுபட்டு, எந்தத் தொகுதியில் காரியம் செய்ய வேண்டும் என்று சிந்தித்து நிறைய நல்ல காரியங்களைச் செய். அங்கு வாழும் கலைப் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய். நிறைய தன்னார்வலர்களை தயாராக்கு. ஆசிரியர் முன்பயிற்சிக்கு (ப்ரீ டி.டி.சி) ஏற்பாடு செய். எல்லோரையும் ஒன்று சேர்த்து, அவர்கள் அனைவரும் ஆன்மீக நம்பிக்கையுள்ள சமுதாயமாக வளரவும், ஊழல் இல்லாத சமூகமாக இருக்க முடியும் என்பதை உணரச் செய். இதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.

கே: இறக்காமல் முக்தி அடைய முடியாது என்கிறார்கள். முக்தி அடைய இறப்பது அவசியமா?

குருதேவர்: யார் சொன்னார்கள்? நீ வாழும் போது அனுபவிக்காததை, இறந்த பின் எப்படி அனுபவிக்க முடியும்? இறந்த பின்பும் நீ சொர்க்கத்தை அடைய முடியாது. வாழும் போது சிரிக்கக் கற்றுக்கொள்ளாமல், மகிழ்ச்சியாக இருக்கக் கற்றுக் கொள்ளாமல், இறந்த பின்பு என்ன கற்றுக் கொள்வாய்? ஒரு காலும் முடியாது. யார் சொன்னது உனக்கு?

எந்தப் பழைய ஏடுகளிலும், புத்தகங்களிலும், இறந்த பின் நீ சொர்க்கத்துக்குப் போவாய் என்று சொல்ல வில்லை. இது முற்றிலும் தவறு. பின் நீ எதற்கு இங்கு வந்திருக்கிறாய்? உன்னுடைய கர்ம வினைகளைத் தீர்த்து சொர்க்கத்தை இங்கு அனுபவிப்பதற்காகத் தான் நீ இங்கு வந்திருக்கிறாய்.

கே: பக்தியும் சரணாகதியும் அறிவுக்கு அடையாளம் என்கிறார்கள். ஆனால் பக்தியும், சரணாகதியும் அறிவுக்கு அப்பாற்பட்டது. அவைகளை அறிவுக்கு அடையாளம் என்று எப்படிச் சொல்லலாம்?

குருதேவர்: உண்மை ஒரு வகை மட்டும் அல்ல. உண்மைக்கு பல தோற்றங்கள் உண்டு. அதனால் நீ எந்த தத்துவத்தையும் சரி என்று நிரூபிக்க முடியும். தவறு என்றும் நிரூபிக்க முடியும். இரண்டுமே முடியும்.

அதை சிந்தித்து பார். சரி என்று பட்டால் எடுத்துக்கொள். இல்லை என்று எண்ணினால் விட்டு விடு. உன் அறிவோடு இதை சீர்தூக்கிப் பார். அப்படிச் செய்யும் போது ஒரு பக்கம் இது சரி என்று படும். மற்றொரு பக்கம் தவறு என்று படும்.

கே: குருதேவா! ஒருவன் இறைவனிடம் முழு சரணாகதி அடைவது எப்படி? தயவு செய்து விளக்கிச் சொல்லுங்கள்.

குருதேவர்: விழித்துக் கொள். உன்னுடையதென்று ஒன்றுமே இல்லை. உன்னிடம் இருப்பது ஒன்றுமே உன்னுடையது இல்லை. இதை உணர்வது தான் முழு சரணாகதி.

அல்லது, உனக்குக் கிடைத்தவைகளை எல்லாம் எண்ணிப்பார். அவை கிடைக்க உனக்குத் தகுதி இல்லாமலிருந்தாலும் உனக்குக் கிடைத்திருப்பதைப் பார். அந்த எண்ணம் வந்தாலும் நீ முழு சரணாகதி அடைந்திருக்கிறாய் என்று கொள். எனக்கு இவ்வளவு தகுதி இல்லை. இருந்தாலும் (இறைவன் அருளால்) இவ்வளவு செல்வங்கள், பட்டங்கள் கிடைத்திருக்கின்றன என்ற நன்றி உணர்வு பெருகும் போது நீ முழு சரணாகதி அடைந்து விட்டாய்.

கே: குருதேவா! உங்களைச் சந்தித்த பின்னும் எனக்கு திருப்தியாக இல்லை. உங்களை மீண்டும் மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். இந்த விருப்பத்தை எப்படி நிறைவு செய்து உங்களை சந்திக்க ஏங்காமல் இருப்பேன்?

குருதேவர்: ஓ! உன் விருப்பத்தை எப்படி நிறைவு செய்வாய் என்று எனக்குத் தெரியவில்லை. இன்று வரை எல்லோரிடம், இந்த ஏக்கம் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். இது பக்தியின் அடையாளம். ஒரு பக்கம் பார்த்தால் பக்தியில் திருப்தி ஏற்படாது. இன்னொரு பக்கம் பார்த்தால், பக்தியை விட திருப்தி தரும் ஒன்று இவ்வுலகில் கிடையாது. இதற்கு ஒரு முடிவு இல்லை. ஏனென்றால் பக்தி என்றாலே “எப்போதும் குறையாத அன்பு” என்று தான் பொருள். எனவே என்றுமே தணியாத தாகம், மற்றும் என்றும் முடியாத அன்பு தான் பக்தி.

கே: அன்பான குருதேவா! இப்பொழுதும், நாம் அறிந்த காலத்திலிருந்து, ஒரே ஆத்மா தான் இருக்கிறது என்ற போது, எப்படி அந்த ஆத்மாவிலிருந்து மனிதன் உருவாக்கப் பட்டான். ஏன்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கவேண்டுமே?

குருதேவர்: ஓ! அந்த ஆத்மா தனிமையில் சலிப்படைந்து விட்டது. எவ்வளவு நாள் தான் தனியாக இருப்பது. அதனால் பலவாக எண்ணியது. நான் பலவாகி விடலாம் என்று எண்ணிய, அந்த ஒரு ஆத்மாவின் எண்ணத்தினால் எல்லாமே உருவாக்கப்பட்டது. இப்போது இது சரியா அல்லது தவறா என்று நீயே முடிவெடுக்கலாம்.