உண்மை முரண்பாடானது....


2 - ஜூலை, வட கரோலினா - அமெரிக்கா
கே: குருதேவ்! தாங்கள் குருவாக இருப்பதை விரும்புகிறீர்களா?  நாங்கள் எழுதி அனுப்பும் எங்கள் கவலைகளை நீங்களே படிக்கிறீர்களா? அல்லது உதவியாளர்கள் இருக்கிறார்களா?
குருதேவ்: உதவியாளர்கள் இருக்கிறார்கள்.(குறும்பு புன்னகையுடன்) உங்களில் எத்தனை பேர் கவலைகளிருந்து விடுபட்டிருக்கிறீர்கள்? (நிறையப் பேர் கைதூக்குகிறார்கள்) பாருங்கள்!
கே: அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நிறையப் பேர் அரசியலில் ஈடுபடவேண்டும் என்று எண்ணுகிறீர்களா?
குருதேவ்: அரசியலென்பது என்ன? மக்களுக்காக பணிபுரிவது.அரசியல் என்பது மக்களைக் கவனித்து அவர்களைப் பராமரிப்பது. யார் பிறரைக் கவனிக்கிறார்களோ அவர்கள் அரசியலில் ஈடுபடலாம். சுயநலவாதிகள் அல்ல.ஆனால் துரதிர்ஷ்டவசமாக , தற்போது அந்த நிலை இல்லை. அரசியல்வாதிகள் அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள், மக்களுக்காக பாடுபடுவது இல்லை.சேவை மனப்பான்மை உங்களுக்கு இருந்தால் அரசியலில் நுழையுங்கள். நீங்கள் ஒரு வியாபாரியாகவோ வைத்தியர் ஆகவோ இருந்தால் அரசியலுக்கு வராதீர்கள். உங்கள் மனப்போக்கு எப்படி இருக்கிறது என்று பாருங்கள்.மக்களுக்கு, நாட்டுக்கு உலகிற்கு நன்மையான  ஒரு  நல்ல தொலைநோக்கு ஆற்றல் உங்களிடம் இருந்தால், முக்கியமாக இளைஞர்களிடம் இருந்தால், அவர்கள் அரசியலில் ஈடுபட நான் ஆதரிப்பேன்.
கே: குருதேவ்! என் வாழ்வில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. அதைப்பற்றி நான் மனமார வருந்துகிறேன். ஆனால் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் என்னை சுற்றி இருப்பவர்களால் அது நினைவுறுத்தப்படுகிறது. சில சமயம் சம்பந்தப்படாதவர்கள் கூட இதை நினைவுறுத்துகிறார்கள். இந்த உலகை விட்டே மறைந்து விடலாமா என்று தோன்றுகிறது. எனக்கு உதவுங்கள்.
குருதேவ்: வேண்டாம்.ஒரு நாளும் அதுபோல் நினைக்காதீர்கள்.இங்குள்ள அனைவரும் உங்களுடன் இருக்கிறோம். நான் உங்களுடனேயே இருக்கிறேன்.வாழ்வில் முன்பு நடந்ததை மறந்து விடுங்கள். நிகழ் காலத்தை மட்டுமே நினைவு கூறுங்கள். அறியாமை, அறிவின்மை,ஆசை,வெறுப்பு இவற்றின் காரணமாக தவறு நிகழ்ந்திருக்கலாம்.அந்த தவறை உணர்ந்து வருந்திய உடனனேயே நீங்கள் அந்த தவறிலிருந்து விடுபட்டு விடுகிறீர்கள்.ஒரு நாளும் தற்கொலைக்கு முயற்சிக்காதீர்கள். உங்களைப் போன்று எண்ணம் ஏற்படும் யாரையாவது கண்டால் உடனே வாழும்கலை முதல்நிலை பயிற்சிக்கு அழைத்து வாருங்கள். மூச்சுப்பயிற்ச்சி, தியானம் இவைகளைக் கற்று அவர்கள் தெளிவதைக் காணுங்கள்.
கே: எந்த குறிக்கோளும் இன்றி  மற்றவரால் சிலசமயம் வீணாக எரிச்சலடைகிறேன், கூடாது என்று நினைத்தாலும் சில நாட்கள் வரையில் அதனால் கோபமாகவே இருக்கிறேன், என்ன செய்வது?
குருதேவ்: பஸ்த்ரிகா செய்யுங்கள்.அது தான் உங்கள் மன நிலையைச் சரி செய்யும். பஸ்த்ரிகா, மற்றும் சுதர்சன க்ரியா செய்யுங்கள்.
கே: குருதேவ்! தியானம் என்பது மனதை ஒருமுகப்படுத்துதல் அன்று, அதைத் தளர்த்துதல் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறோம்.தியானத்தின் போது எண்ணங்கள் தோன்றுவதும் மனத் தளர்த்துதல் ஆகுமா?
குருதேவ்: ஆம். எண்ணங்கள் தோன்றுவதை உணரும் போது ஒரு ஆழ்ந்த மூச்சு எடுத்து விடுங்கள். எண்ணங்கள் தாண்டிச்சென்று விட்டதை அறிவீர்கள். தியானம் என்பது ஒருமுக படுத்துதல் அன்று, எண்ணங்களைத் தடுக்க முற்பட்டுத் துரத்தினால்,அது அதிகமாகும். அதை அரவணைத்து கொள்ளுங்கள். நீர்க்குமிழி போன்று அது மறைந்து விடும்.கூட்டத்தின் மத்தியில்  நீர்க்குமிழிகளை உமிழும் துப்பாக்கியினால் சுட்டு குமிழிகள் ஏற்படுகின்றன). பாருங்கள்!! எத்தனை குமிழிகள்? அவை எவ்வளவு நேரம் நிலைத்திருக்கின்றன? உடனே மறைந்து விடுகின்றன. அது போலவே கவலைகளும் தோன்றி மறைந்து விடும். கடந்த பத்து ஆண்டு காலத்தில் எத்தனை கவலைகள் ! அவை அனைத்தும் இப்போது மறைந்து விடவில்லையா? இந்த 2012 ஆம் ஆண்டு என்பதைக் காண்போமா என்று கவலைப் படவில்லையா? இப்போது பாருங்கள் இந்த 2012 ல் நீங்கள் வாழவில்லையா? இந்த ஆண்டு உலகமே அழிந்து விடும் என்று திரைப்படத்தில் கண்ட போது ! கடவுளே என்ன செய்யப்போகிறோம்! என்று பயந்ததற்கு இப்போது என்ன ஆயிற்று? ஆகவே கவலைகளை உதறிவிட்டு  உற்சாகமாக இருங்கள்.
கே: குருதேவ்! சமயங்கள் ஏன் ஏற்பட்டன? நாம் நிதான புத்தியுடனும், நம்பிக்கையுடனும் வாழவே அவை உருவாயின என்பதை அறிவேன்.ஆயினும் ஒரு சமயத்தவர் தங்களுடையே சமயக் கருத்துக்களே  சரியானவை, பிற சமயக்கருத்துக்கள் தவறானவை என்று தீவிரமாக வாதிடுவதேன்? எது சரியானது என்று எப்படி அறிவது?
குருதேவ்: ஒவ்வொருவரும் தனித்துவ அடையாளத்துடன் இருக்க விரும்புகிறார்கள். அதற்கு சமயத்தை,உபயோகித்துக் கொள்கிறார்கள்.சமயத்தின் மூலம் ஒரு அடையாளம் கிடைத்தவுடன், அச்சமயத்தை சாராதவர்கள்,தன்னை சாராதவர்கள் என்று எண்ணுகிறார்கள்.இப்படித்தான் வேறுபாடு தோன்ற ஆரம்பித்து அக்காலத்தில் போர்கள் ஏற்பட்டன. மனிதனுக்கு அடையாளம் தேவையாகிறது. சமயம், மொழி, நாட்டுணர்வு எல்லாமே தனிமனித அகந்தையின் வெளிப்பாடு ஆகிறது. தான், தன்னை சார்ந்தது உயர்வு என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆக, சமயத்தை விட தனிமனிதனின் அடையாளக் கூறே பெரிதாக வெளிப்படுகிறது.
எல்லா சமயங்களும் ஒன்றையே வலியுறுத்துகின்றன.அன்பு, சகோதரத்துவம், மேலான ஒரு சக்தி,அச்சக்தியை நோக்கிப் பிரார்த்தனை,மனித நேயத்தில் நம்பிக்கை, நற்குணங்களுடன் மனித வாழ்வியல் என்பவை ஆகும்.மக்கள் சமயங்களில் உள்ள ஆன்மீக சாரத்தை விட்டு அதன் வெளிப்புற கூட்டினையே பற்றிக்கொண்டு,சண்டையிட்டுக்கொண்டு இருக்கின்றனர். ஒரே ஒரு இயேசு,ஆனால் இன்று எழுபத்து இரண்டு கிறிஸ்த்தவப் பிரிவுகள். ஒரே ஒரு முஹம்மது நபி, ஆயின் இன்று ஆறு பிரிவுகளுடன் இஸ்லாம், ஒரே ஒரு புத்தர் ஆனால் இன்று முப்பத்து இரண்டு  பிரிவுகளுடன் புத்தமதம், இந்து சமயத்திலோ எண்ணிலடங்கா பிரிவுகள்.
நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால்,இத்தகைய சமயப்பிரிவுகள் என்கிற நிலையிலிருந்து நாம் வெளிவந்து ஆன்மீக சக்தியை மட்டுமே உணர வேண்டும்.ஆன்மிகம் என்பது ஒரு அனுபவம். சமாதானம், அன்பு, சலனமற்ற நிலை இவற்றை உணர்ந்து ஆழ்நிலை அமைதியில் எல்லா சமயங்களும் கூறும் கருத்து ஒன்றே என்று அறிவீர்கள்.
எறும்பைப் போன்று நீங்களிருக்க வேண்டும். மணலும் சர்கரையும் கலந்திருந்தால் எறும்பு மணலைப் பிரித்து குன்று அமைத்து விட்டு சர்க்கரையை உண்ணும். அது போன்று உங்கள் அறிவை பயன்படுத்தி பகுத்தறியுங்கள். பொதுவாக, சமய நிறுவனங்கள் காரண ஆய்வை மட்டுப் படுத்துகின்றன. காரண ஆய்வாளர்கள் சமயங்களில்  நம்பிக்கை கொள்வதில்லை. ஆனால் இவை ஏதேனும் ஒன்றில்லா விடினும் வாழ்வில் சாரமில்லை.நம்பிக்கை, காரண ஆய்வு இரண்டுமே முக்கியம். அதுவே ஆன்மிகம்.உலக வரலாற்றில் இதை நீங்கள் காணலாம். மேலை நாடுகளில் நம்பிக்கை முதலில், பின்னர் அதில் அனுபவம் அடையலாம் என்ற கருத்து காணப்படுகிறது. கீழை நாடுகளில் முதலில் அனுபவத்தை அடைந்து பின்னர் விரும்பினால் நம்பலாம் என்ற கருத்து உள்ளது. இது விஞ்ஞான ரீதியானது.விஞ்ஞானம் முதலில் அனுபவ பூர்வமானதையும் பின்னர் அதை தேவையானால் நம்பலாம் என்றும் வலியுறுத்துகிறது. அதனால் தான் கீழைநாடுகளில் சமயத்தினரால்  விஞ்ஞானிகள் எந்த விதத்திலும் துன்புறுத்தப்படவில்லை. எந்த சமய சிக்கலும் ஏற்படவில்லை.மேலைநாடுகளில் கடுமையான சிக்கல்கள் ஏற்பட்டன.
கே: சரியான வாழ்வை வாழ பல வழிகள் உள்ளனவா? தாங்கள் எப்போதுமே சரியானவற்றை பின்பற்றுகிறீர்களா? சில சமயங்களில் தவறு நிகழ்ந்தால் பரவாயில்லையா ? பல சரியான வழிகள் இருக்கின்றனவா?
குருதேவ்: உங்கள் மனசாட்சி கூறுவதைக் கவனியுங்கள்.''இது சரியானதன்று'' என்று உங்கள் மனசாட்சி கூறினால் அதை செய்யாதீர்கள்.எது தவறு? எதைப் பிறர் உங்களுக்கு செய்தால் நீங்கள் விரும்ப மாட்டீர்களோ அதை நீங்கள் பிறருக்குச்செய்யாதீர்கள். உள்மனம் உங்களுக்கு கூறும். கவனியுங்கள்.
கே: அஷ்டவக்கிரகீதையில் அஷ்டவக்கிரர் 'நாம் கர்த்தா (செயல்படுபவன்) அல்ல என்கிறார். ஆனால் யோகவசிஷ்டர் ''நாம் மெய்யுணர்வு பெற தன்னடக்கம் தேவை'' என்கிறார். இவை முரண்பாடாக இருக்கின்றனவே? இதைத் தெளிவுபடுத்த முடியுமா?
குருதேவ்: உண்மை எப்போதுமே முரண்பாடனது தான். உண்மை பலமுகங்கள் கொண்டது. வேறுபாடாகவோ முரண்பாடாகவோ தோன்றும், உண்மையில் அவ்வாறு அல்ல. இந்த இடத்தை அடைய ஒரு திசையிலிருந்து வரும் போது, நேராக வந்து இடது புறம் திரும்ப வேண்டியிருக்கும். எதிர் திசையிலிருந்து வரும்போது நேராக வந்து வலது புறம் திரும்ப வேண்டியிருக்கும். முரண்பாடாக தோன்றினாலும் இரண்டும் சரியே. உங்களுக்கு ஒரு சம்பவத்தைக் கூற விரும்புகிறேன். உங்களுக்கு இரானைச் சேர்ந்த அயோத்துல்லா கொமீனி தெரியுமல்லவா? அவருடைய உதவியாளர் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர்  பெங்களூரு வந்திருந்தார். அவர் எழுபத்தெட்டு வயதான முதியவர்.அவர் என்னிடம் "குருதேவ் வெகு நாட்களாகவே எனக்கு ஒரு கருத்தார்ந்த சந்தேகம் உண்டு. இதை பல தடவைகள் என்னையே கேட்டுக்கொண்டும் என்னால் விடை காணமுடியவில்லை என் சந்தேகத்தை தங்களிடம் கேட்கலாமா? என்றார். என்ன  கேளுங்கள் என்றேன். அவர், ஒரு கேள்விக்கு  எப்படி பல விடைகள் சரியானதாக இருக்க முடியும்? உண்மை என்பது ஒன்றானால் ஒரு விடை தானே சரியானதாக இருக்க முடியும். இரண்டு விடைகள் சரியானதாக இருக்க முடியாது. அதுபோல் ஒரு விடைதான் சரி என்கிற பட்சத்தில் எப்படி பல சமயங்கள் இருக்க முடியும்? உண்மை ஒன்றெனில் ஒரு சமயம்தானே சரி? எப்படி பல சமய வழிகள் சரியானதாக இருக்க முடியும்? அப்படியானால் சமய நூல்களும் சரியானதாக இருக்க முடியாதே? ஒன்று தானே சரியானதாக இருக்கும்? என்றார். அது சரியான வாதமாகவே தோன்றியது. நான் அவரிடம் "பாருங்கள்! இந்த இடத்தை அடைய பல வழிகள் உள்ளன. எல்லாமே சரியான வழிகள். ஒரு வழி வலது இடது புறம் என்று எங்கும் திரும்பாமல் நேராக  வரலாம். மற்றொரு வழி நேராக வந்து வலது புறம் திரும்பி இந்த இடத்தை அடையலாம் மற்றொரு வழி நேராக வந்து இடது புறம் திரும்பியும் இந்த இடத்தை அடையலாம்.எல்லாமே சரியான வழிகள். ஆகவே நாம் கோளக்கணிப்பு முறைப்படி சிந்திக்க வேண்டும் என்று கூறினேன். திடீரென்று அவர் "நாம் எங்கிருக்கிறோம் என்பதே அடிப்படைக்கருத்து" என்பதை  உணர்ந்தார். நான் தொடர்ந்து, இந்தியாவில் எல்லா வழிகளிலிருந்தும் ஞானம் என்னை வந்தடையட்டும் என்ற கருத்து உண்டு. இங்கு சமய வெறி கிடையாது உண்மை என்பது பல வழிகளிலும் புலப்பட்டது. ஏகம் சத் சுப்ர பகுதா வதந்தி- உண்மை ஒன்றே; அறிஞர் அதை பலவிதமாகவும் எடுத்துக்கூறுவர் என்றேன். .அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வணங்கி நன்றி தெரிவித்தபோது அவரது கண்களில் நீர் நிறைந்திருந்தது.
கே: சுதர்சனக்ரியாவை எப்படிக் கண்டுபிடித்தீர்கள் என்று தயவு செய்து எங்களுக்கு கூறுங்கள்?
குருதேவ்: இதிலிருந்து தப்ப முடியாது என்று தோன்றுகிறது! அது தானாக ஒரு கவிதை பிறப்பது போன்று நிகழ்ந்தது. நீங்கள் கவிதை எழுதி இருக்கிறீர்களா? உங்களில் எத்தனை பேர் கவிதை எழுதி இருக்கிறீர்கள்? கவிதை எப்படிப் பிறக்கிறது?  சாதரணமாக அமர்ந்திருக்கும் போதே திடீரென்று கவிதை தோன்றுகிறது அல்லவா?
சுதர்சனக்க்ரியாவிற்கு முன்பே நான் யோகா மற்றும் தியானம் கற்றுக்கொடுத்து  கொண்டிருந்தேன். ஆனால் அது நிறைவானதாக இருக்கவில்லை. அதில் ஒருவருக்கொருவர் இணைந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏன் எல்லோரும் மகிழ்ச்சியாகவும் அன்புடனும் இல்லை என்று என் மனதில் உறுத்திக்கொண்டிருந்தது. ஏதோ ஒரு பயிற்சிதான் அதை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது.பத்து நாட்கள் நான் மௌனவிரதம் இருந்தேன் எனக்குள் இந்த சுதர்சனக்ரியா பயிற்சி முறை தோன்றி அதைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். முதல் பயிற்சியில் முப்பது பேர் மட்டுமே இருந்தனர். பின்னர் டாக்டர்கள் வக்கீல்கள் என்று பலர் சேர்ந்து மிக உற்சாகமாக இருந்தனர். பத்து ஆண்டுகள் இந்த பயிற்சி மட்டுமே இருந்து வந்தது. அமெரிக்கன் தூதரகம், ஆங்கிலேயே தூதரகம்,ஐக்கிய நாடுகள் சபைஅலுவலகம் ஆகியவற்றின் வேண்டுகோளின் படி வகுப்புகள் புது டெல்லியில் எடுக்கப்பட்டன.செவிவழி செய்தியாகவே பரவி,பல இடங்களுக்கும் நான் சென்று பயிற்சி அளித்து வந்தேன்.  பின்னர் படிப்படியாக இன்று உலகம் முழுவதும் பயிற்சி நடைபெற்று வருகிறது.
முதலில் நான் மட்டுமே வகுப்புகள் எடுத்துவந்தேன்.வகுப்புக்காலம் நீண்டதாக இருந்தது. அனைத்து மக்களையும் இது சென்றடைய லட்ச்சக்கணக்கான ஆண்டுகள் ஆகுமென்பதால், நிறைய ஆசிரியர்களைத் தயார் செய்தேன்.வகுப்புக்காலமும் குறைக்கப்பட்டது. பின்னர் இளைஞர்களுக்காக தனிப் பயிற்சி தேவை என்ற நிலையில் எஸ் பிளஸ் ஆர்ட் எச்செல் ஆகிய பயிற்சித் தொகுப்புகள் உருவாயின.
குழந்தைகளிடம் ஆக்கத் திறனை வளர்க்க வேண்டும்.அவர்கள் படைப்புத்திறன் உள்ளவர்கள் அல்லது அழிக்கும் குணம் உடையவர்கள்.இரண்டுக்குமிடையே உள்ள பொது நிலை அவர்களிடம் கிடையாது. ஆகவே அவர்களிடம் ஆக்கத்திறனை வளர்க்க வேண்டும்.அல்லவா? என்ன நினைக்கிறீர்கள்? இளம்பருவத்தினரிடமுள்ள ஆக்கத்திறனை வெளிக்கொணருங்கள்.
கே: குருதேவ்,  எனக்கு சேவை செய்வதன் முக்கியத்துவம் புரிகின்றது. இருந்தாலும் இந்த கணம் என்னை நானே அறிந்து கொள்வதைத் தவிர  வேறெதுவும் முக்கியமாகத் தெரியவில்லை.  சேவை செய்வதென்பது  என் கவனத்தை திசை திருப்பிவிடுமோ என்று நினைக்கின்றேன். என்ன செய்வது?
குருதேவ்:  ஒரு குழந்தை தன்  தாயை தெரிந்து கொள்ள விருப்பப்படுமா? ஒரு குழந்தை தன் தாயை அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொருளாக விரும்புமா? எந்த குழந்தையாவது தன் தாயிடம், "அம்மா, நீ எங்கே படித்தாய் என்று முதலில் சொல். உன்னை பற்றி  விவரங்களைக் காட்டி அறிமுகம் செய்து கொள். அதன் பின் உன்னை நான் நேசிக்கின்றேன்" என்று சொல்லுமா? 
ஒரு குழந்தை இயல்பாகவே தன் தாயிடம் அன்பு கொண்டுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் இயற்கையிடம் அன்பு கொண்டுள்ளது. அப்படியிருக்கும்போது  ஏதோ ஒரு மாபெரும் சக்தி என்பது தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒரு பொருளாக இருக்க முடியாது. வேதங்களில் ஒரு உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சிறு கரண்டி பெருங்கடலை தன்னுள் கொள்ள முடியாது. ஆனால் அது பெருங்கடலுக்குள் இருக்கமுடியும்.
நம் அறிவு மிகவும் சிறியது. ஆனால் "நான்" என்னும் தன்மை மிகவும் பெரியது. எனவே  இச்சிறிய அறிவினால் தான் என்பதன் ஆழத்தை அறிய முடியுமா? முடியாது. பிறகு என்ன செய்வது? எப்படி அறிந்து கொள்வது? நீங்கள் அதன் உள்ளே இருக்க முடியும்.அது மௌணத்தில் இயலும். மௌணத்தை நாம் அறிய முடியும். ஆனால் அதை விளக்க முடியாது. 
எனவே நம்மை நாமே அறிந்து கொள்வதென்பது வெறுமனே உட்கார்ந்து ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பது இல்லை. நீங்கள் உங்களது எண்ணங்களோ அல்லது உணர்ச்சிகளோ இல்லை.  அவை வந்து போகும். நம் உடல் எந்த நேரமும் மாறிக்கொண்டே உள்ளது.  நான் இது இல்லை.  வேறு ஏதோ ஒன்று இருக்கின்றது.  அது என்ன?  நான் யார்?  இது போன்ற விசாரணையே  , தேடலே உங்களை ஒரு செயலற்ற   அமைதியான நிலைக்கு  அழைத்துச்செல்ல  போதுமானது. 
அந்த இயக்கமற்ற நிலையை நீங்கள் அடைந்த பிறகு, உங்களை ஒரு அறிந்து கொள்ள வேண்டிய பொருளாக்க முயற்சி செய்ய வேண்டாம். அது இயலாது.நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய பொருள் இல்லை. நீங்களே அறிந்து கொள்பவர். 
நான் சொல்வது புரிகின்றதா? புரிந்து கொள்ள சற்று சிரமமாக இருந்தால் கவலை வேண்டாம்.  நாம் பிறகு ஒருமுறை மீண்டும் இதை பார்க்கலாம். இப்பொழுது நீங்கள் இதை மட்டும் நினைத்துக் கொண்டால் போதும். நான் என்னை அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பொருளாக்க மாட்டேன். நான் இருக்கின்றேன். மகிழ்ச்சியாகவோ மகிழ்ச்சியில்லாமலோ எப்படியும் நான் இருக்கின்றேன். நல்லவனோ, கெட்டவனோ நான் இருக்கின்றேன். 
நான்  இருக்கின்றேன் என்னும் இந்த உணர்வு நம் பிராண சக்தி (உயிர் சக்தி) அதிக அளவில் இருக்கும்போது மிகவும் தெளிவாக மாறும். பிராண சக்தி குறைவாகவும் அசதியாகவும் இருக்கும் போது எதையும் அறிந்துகொள்ள முடியாது.அப்பொழுது மனம் தெளிவாக இருக்காது.  உயிர் சக்தி உண்மையிலேயே மிக அதிகமாக இருக்கும்போது தான் "நான் இந்த உடல் இல்லை நான் இந்த ஆன்மாவும் இல்லை. நான் சக்தி வடிவம், ஒளிவீசும் ஆன்மா,  உற்சாகத்தின் வடிவம், அன்பின் வடிவம்" என்பது தெளிவாகத் தெரியும். இந்த அனுபவம் தானாகவே மலரும்.அப்பொழுது அந்த அனுபவத்திலும் கூட அதிகமாக  ஒன்றி விட வேண்டாம்.
எனவே, சேவை செய்யுங்கள். அதிக சேவை செய்யும்போது வாழ்க்கையில் அதிக மதிப்பும் புண்ணியமும் கிடைக்கும். அப்பொழுது நீங்கள் உங்கள் உள்ளிருந்து மிக அமைதியாகவும்   களங்கமற்றும் மாறுவீர்கள். அப்படித்தான் செல்ல வேண்டும். ஒரு மூலையில் வெறுமனே அமர்ந்து " நான் யார்? நான் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று சிந்தனை செய்து கொண்டிருந்தால் எதுவும் நடக்காது.vசெயலும் ஓய்வும் ஒருங்கிணைய வேண்டும். ஓயவே இல்லாமல் அதிக அளவில் செயல்படுவதும், ஒரு சமனற்ற நிலையை உண்டாக்கும்.vஅதுவும் நல்லதல்ல.vநீங்கள் உங்கள் வாழ்க்கையில் செயல்,vஓய்வு இரண்டையும் சமன்படுத்தி வாழ வேண்டும்.
சில நேரங்களில் செயல்பாடு அவசியமாகும். அவசர தேவை உண்டாகும்vபோது, முக்கிய வேலை இருக்கும்போது வேலையை செய்யுங்கள். பிறகு தளர்ந்து அமைதியாக ஓய்வெடுங்கள். ஓய்வாக இருக்க நேரம் ஒதுக்குங்கள்.உங்களை தெரிந்து கொள்வதற்கான இந்த தீவிர வேட்கை உங்களுக்கு இருப்பது நல்லதே.அதற்கென உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ள வேண்டும்.  ஆனால் அதற்கு அவசரப்பட வேண்டாம் நிதானமாக காத்திருங்கள்.  
கே: இங்கே இருப்பதற்கென எங்களை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்களா அல்லது அது தற்செயலாக நிகழ்ந்ததா? எங்களை போல் இன்னும் அதிக மக்கள்  இதன் பலனை அடையாதது ஏன்? 
குருதேவ்: இந்த அரங்கம் நிறைந்திருக்கின்றதைப் பார்த்தீர்களா? இன்னும் அதிகமாக யாரையும் இங்கே சேர்க்க முடியாது.நான் உங்களை தேர்ந்தேடுத்தேனா அல்லது நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்தீர்களா என்பதை பற்றி ஆராய்ச்சி வேண்டாம். நாம் எல்லோரும் இங்கே ஒன்றாக இருக்கின்றோம். நல்ல இனிமையான நேரத்தை எல்லோரும் அனுபவித்து கொண்டிருக்கின்றோம். இந்த ஆனந்தம், உயர்ந்த சக்தி, மகிழ்ச்சி அனைத்தையும் தக்க வைத்து கொள்ளும் வழி இதனை அனைவருக்கும் பரவச்செய்வதே ஆகும். உங்களுக்குத் தெரியுமா  நாம் நம்முடைய சந்தோஷத்தை நம்மிடமே வைத்துக்கொள்ள முடியாது. அதை உலகில் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் மகிழ்ச்சி வளரும். 
கே: நான் தங்களைப்போல் இயல்பாகவும் இனிமையாகவும் மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்: நீங்கள் அப்படித்தான் இருக்கின்றீர்கள். கண்ணாடியில் பாருங்கள். நீங்கள் இயல்பாகவும் இனிமையாகவும்தான் இருக்கின்றீர்கள். 
கே: மிக அதிகமான தலைக்கணமும் கோபமும் கொண்ட என் பருவ வயது மகனை நான் எப்படிக் கையாளுவது? வாழும் கலையின் Art EXCEL, YES பயிற்ச்சிகள் செய்த பிறகும் அவன் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவன் மாறுவதாகத் தெரியவில்லை.
குருதேவ்: அவர்களை மாற்றுவதற்கென நீங்கள் மிகவும் அவசரப்படுகிறீர்கள். பொறுமையாக இருங்கள். உங்களுக்குத் தெரியுமா? ஒரு பழமொழி  ஒரு மகனோ அல்லது மகளோ வளர் இளம் பருவத்தில்  இருக்கும் போது நீங்கள் அவர்களுடன் கண்டிப்பு நிறைந்த பெற்றோராக இல்லாமல் சிறந்த நண்பராக இருக்க வேண்டும் என்று சொல்கிறது. அவர்களுடன் நண்பர்களாக இருந்து ஊக்கம் கொடுத்து பொறுமையுடன் காத்திருங்கள். வாழும் கலை YES  பயிற்சி செய்த பின்னும் அவர்கள் மாறாமல் இருக்க முடியாது. Art EXCEL பயிற்சி செய்து நீண்ட காலம் ஆகியிருக்கும். உங்கள் குழந்தைகள் பருவ வயதினராக இருந்தால் YES  பயிற்சியில் சேருங்கள். சுதர்ஷன கிரியாவும் மற்ற பயிற்சிகளும் அவர்களுக்கு உதவி செய்யும். 
கே: dating websites  பற்றி  தாங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? மிகச்சிறந்த ஒருவரைக்  கண்டுபிடிக்க அது சிறந்த வழியா?
குருதேவ்: உங்களுக்குத் தெரியுமா?  நான் என் அனுபவத்திலிருந்து தான் பேசுகின்றேன்.  இந்தத் துறையில் எனக்கு எதுவும் தெரியாது. நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள வேறு யாரையாவது கேளுங்கள்.  இது பல சரக்குக் கடைக்குச் சென்று சமையல் வாயு கேட்பதைப் போல் இருக்கின்றது. நீங்கள் ஒரு துணி கடைக்குச் சென்று ஒரு பெட்டி வேண்டுமென்று கேட்டால், அது அர்த்தமற்றது. இது போன்ற பல இணையதளங்களுக்குச்  சென்றவர்களைக்  கேளுங்கள்.
அதிலும் இதில் வெற்றியடைந்தவர்களிடம்  செல்லவேண்டாம். வெற்றி பெறாதவர்கள்தான்  இதை பல முறை முயற்சி செய்திருப்பார்கள். அவர்கள் நீங்கள் என்னென்ன செய்யக் கூடாதென்று உங்களுக்குச் சொல்வார்கள். எனவே பல நாட்களாக தேடிக் கொண்டிருப்பவர்களிடம் சென்று அறிவுரை பெறுங்கள்.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? "அன்பை செயல்படுத்துவது எப்படி" என்ற ஒரு கருத்தரங்கத்தினை நிகழ்த்திக் கொண்டிருந்த ஒரு பெண்மணி ஏழுமுறை விவாகரத்து செய்யப்பட்டவர். தன் திருமண வாழ்வில் ஏழுமுறை வெற்றி பெறாத ஒருவர் இது போன்ற கருத்தரங்கத்தினை நடத்துவது யாருக்கும் வினோதமாகத் தெரியும்.நான் சொன்னேன், " அந்த பெண்மணி தான் மிகவும் தகுதியானவர். பல முறை தோல்வி அடைந்ததனால் அவர்களுக்குத் தான் எல்லா மேடு பள்ளங்களும் நன்றாகத் தெரியும். எனவே நீங்கள் என்னவெல்லாம் செய்யக்கூடாதென்று அவர்களால் எச்சரிக்கை அளிக்க முடியும். இல்லையா மிகி? "(மைகேல் பிச்ச்மனிடம்  குறிப்பிட்டு கேட்கின்றார்)
மிகி  இது நகைப்புக்குரியது என்று நினைத்தார். ஆனால் அந்தப் பெண்மணிக்கு ஆதரவாக என்னிடம் மாறுபட்ட தர்க்க ரீதியான வாதம் இருந்தது. தர்க்க ரீதியான வாதம் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று பாருங்கள். அது யாரை வேண்டுமானாலும்  ஆதரிக்கும். அது உங்களை எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லும். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் முதன்முதலாக கலிபோர்னியாவிற்கு வந்தபோது வாழும் கலை பயிற்சி நடந்து கொண்டிருந்தது. பயிற்சியில் பதினைந்து பேர் இருந்தனர். அதில் பலர் புதியவர்கள். பாதிப்பேர் என்னுடன் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது சிலர் என்னிடம் சொன்னார்கள், "குருஜி, இங்கே கலிபோர்னியாவில் பல கருத்தரங்குகள்  நடைபெறுகின்றன. வாழும் கலை பயிற்சியும்  சுதர்ஷன கிரியாவும் யாரும் செய்யப் போவதில்லை. மக்கள் ஆர்வத்துடன் இருக்கும் இடங்களில் கவனம் செலுத்துங்கள். இங்கே இதுபோன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. "நான் அவர்கள் சொன்னதைக் கேட்டேன்.  ஆனால் நான் செய்ய விரும்பியதை செய்தேன். நான் அங்கே திரும்பவும் சென்றேன். அடுத்த முறை சற்று அதிகமாக இருபத்து ஐந்து பேர் இருந்தனர். அவர்கள்," நீங்கள் உங்கள் பணத்தையும் நேரத்தையும் ஏன் வீணடிக்கின்றீர்கள்? “என்று சொன்னார்கள்,அந்த நாட்களில் பயணம் செய்வதற்கும் குறைந்த அளவு வசதிகளே இருந்தன. இருந்தாலும் நான் மறுபடியும் சென்றேன். இன்று கலிபோர்னியாவில் பல மையங்கள் உள்ளன. பலர் இதனால் பயனடைகிறார்கள்.
கே: மதத் தீவிரவாதம் குறித்து தங்களின் கருந்தினை தயவு செய்து சொல்ல முடியுமா?  மக்கள் ஏன் இது போன்ற குறுகிய பிடிவாதமான நிலைக்கு இழுக்கப்படுகிறார்கள்? தேவை ஏற்பட்டால் நாம் அவர்களுடன் எப்படி கலந்துரையாடல் செய்வது?

குருதேவ்: ஆன்மீக ஞானம் இல்லாமையும்  அனுபவம் இல்லாமையுமே காரணம் .  அதனால்தான் நாம் பரந்த நோக்கையும்  பகுத்தறிவையும் ஊக்கப்படுத்த வேண்டும். 
பகவத் கீதையில் எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு, பகவான் கிருஷ்ணன் சொல்கிறார், " இப்பொழுது நான் சொல்லிய எல்லாவற்றையும் நீ பகுத்தறிந்து பார்.  உனக்கு சரியென்று  தோன்றினால் மட்டுமே அவற்றை எடுத்துக்கொள்" அவர் "நான் சொல்கிறேன். நீ அவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு அப்படியே செய் "என்று சொல்லவில்லை.  உன் பகுத்தறிவுக்கு  ஏற்றதாக  இருந்தால் மட்டுமே எடுத்துக்கொள் என்றுதான் சொன்னார். 
பகுத்தறிவு மறைக்கப்படும்போது மூடத்தனம் தோன்றுகின்றது.  எனவே அறிவுபூர்வமான உந்துதல் வேண்டும்.  அதே சமயம் ஞானம் பற்றிய ஆராய்ந்து அறிந்த புரிதலும் வேண்டும்.  பரந்த மனப்பான்மை வேண்டும்.  அதனால்தான் நம் குழந்தைகள் பல்வேறு மதங்கள் பல்வேறு கலாச்சாரங்கள் பற்றி  கற்பிக்கப்பட்டு வளர்க்கப்பட வேண்டும். அப்படி இல்லையென்றால் அவர்கள் மூட நம்பிக்கையுடையவர்களாக மாறி விடுவார்கள்.
பல சமயங்களில் நான் போரினால் அலைக்கழிக்கப்படும் நாடுகளில் வாழும் மக்களுக்காக வருத்தப்பட்டிருக்கின்றேன். அவர்களுக்கு தங்கள் மதத்திற்கு அப்பால் தங்கள் மத நம்பிக்கைகளுக்கு அப்பால் சிந்திப்பதற்கான வாய்ப்பே  கிடைப்பதில்லை. அவர்கள் தங்கள் கருத்துக்களை விரிவு படுத்திக்கொள்வதற்கான வாய்ப்பும்  கிடைப்பதில்லை. அவர்களுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். இன்றுள்ள தகவல் தொடர்பு தொழில்நுட்பத்திற்கு  நன்றி சொல்ல வேண்டும். மக்கள் உலகின் எந்த மூலையிலிருந்தும் கூகுல்,விக்கிபீடியா போன்றவை வழியாக தகவல் தொடர்பு கொள்ள முடியும். பத்து ஆண்டுகளுக்கு முன் எங்கள் தலைமுறை யினருக்குக் கூட இது போன்ற வசதிகள் இல்லை.அவர்கள் நூல் நிலையங்களுக்கு சென்று தேட வேண்டியிருந்தது.ஆனால் இன்று நீங்கள் நூல்நிலயங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.ஒரு பொத்தானை அழுத்தினாலே அனைத்து தகவல்களும் கிடைக்கின்றன.  இன்றைய தலைமுறையினர்  மிகவும் பாக்கியசாலிகள். 
ஆனால் அதிலும்கூட உலகின் எல்லா இடங்களிலும் இது  சாத்தியமில்லை.இது குறித்து நான் பேசும்போது ஆப்கானிஸ்தான்  என் நினைவிற்கு வருகின்றது. அங்குள்ள பல குழந்தைகளுக்கு, பல இளைஞர்களுக்கு வெளி உலகம் பற்றி எதுவும் தெரியாது. உலகின் சிறு  பகுதி அறியாமையில் இருந்தால்கூட  உலகம் பாதுகாப்பு அற்றதாகிவிடும். ஒரு ஒசாமா பின் லேடன் இந்த உலகம் முழுமைக்கும் என்ன செய்ய முடிந்ததென்று பார்த்தோம் அல்லவா? விமான நிலையத்தில் பாதுகாப்பு கண்காணிப்பிற்கென ஒவ்வொருவரையும் காலணிகளை கழட்டி வைக்குமாறு செய்ய முடிந்தது அல்லவா?
மற்றொரு கோணத்தில் பார்க்கும்போது, பலருக்கு வேலை வாய்ப்பளித்து இருக்கின்றான். முன்பெல்லாம் நான் அமெரிக்க வரும்போது மிக எளிமையான பாதுகாப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இருக்கும். சில சமயங்களில் சில சிறு விமான நிலையங்களில் எதுவுமே இருக்காது. நாங்கள் நேரடியாக விமானத்திற்குள் நுழைய முடிந்தது. ஆனால் இன்று பல கண்காணிப்பு நடவடிக்கைகள். பல கோடி பணம் இதற்கென செலவு செய்யப்படுகின்றது.  இல்லையா? மூடத்தனமான தீவிரவாதிகள் உலகத்திற்கு அளித்த பரிசு இது. நாம் எத்தனை இளைஞர்களை இழந்து விட்டோம்?  நாம் எத்தனை இளம் உயிர்களை இழந்துவிட்டோம் என்பது மிகுந்த வேதனை தரும் ஒன்று. இவை எல்லாவற்றிற்கும் பரந்த மனப்பான்மையுடைய  கல்வியறிவு, பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள் குறித்த கல்வியறிவு  இல்லாமையே காரணம். மதத் தீவிரவாதி  தான் மட்டும் சொர்கத்திற்கு  செல்வதாகவும் மற்ற எல்லோரும்  நரகத்திற்கு செல்வதாகவும் நினைக்கின்றான். அவ்வாறு நினைத்து மற்ற எல்லோருக்கும் நரகத்தினை உருவாக்குகின்றான். நாம் ஒரு மாற்றத்தினை கொண்டு வரவேண்டும். ஆன்மிக அனுபவங்கள் இல்லையென்றால் எந்த மதத்தினை சேர்ந்தவராக இருந்தாலும் மத வெறியராக மாறிவிடலாம்.
கே: என் வாழ்க்கைத் துணைவர் தன தவறுகளை ஒத்துக்கொள்ள மறுக்கின்றார். அவரது செயல்கள் அவருக்கு எந்த நன்மையையும்  செய்யவில்லை என்பதோடு வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவுகளை உண்டாக்குகின்றன என்பது தெரிந்தும் அவர் அவற்றை திரும்பத் திரும்ப செய்யும் போது நான் என்ன செய்ய வேண்டும்?
குருதேவ்: நாம் சில சமயங்களில் பிறரது தவறுகள் நம்மை பாதிப்பதனால் அவர்களிடம் அவர்கள் செய்வது தவறு என்று சொல்கின்றோம். இப்படிச் செய்தால் அவர்கள் ஒருபோதும் தவறுகளை திருத்திக் கொள்வதில்லை. அவர்கள் நம் அறிவுரைகளை கவனிக்கப் போவதுமில்லை. ஆனால் அவர்கள் செய்வது மற்றவர்களை விட அவர்களையே அதிகம் பாதிக்கின்றது என்று சொல்லும் போது அவர்கள் கவனித்துக் கேட்கத் துவங்குவார்கள்.  அவர்கள் மீதுள்ள பரிவினால் அவர்கள் தவறுகளிலிருந்து மீண்டு வரவேண்டுமென்று நீங்கள் விரும்பினால் அது பலன் தரலாம். முயற்சி செய்து கொண்டே இருங்கள். சொல்லிக்கொண்டே இருங்கள். பொறுமையுடன் காத்திருங்கள். மக்கள் ஓரிரவில் மாறி விட மாட்டார்கள். அவர்கள் மாறுவதற்கு போதுமான நேரம் தேவை.
கே: நல்லவர்களுக்கு ஏன் கெட்டவை  நடக்கின்றன?
குருதேவ்: கெட்டவை இரண்டு காரணங்களால் உண்டாகின்றன. ஒன்று கடந்த கால செயல்களின் கர்ம வினை. மற்றொன்று நிகழ்கால முட்டாள் தனம். 
நீங்கள் நல்லவராக இருந்தாலும் முட்டாள்தனமாக இருந்தால் தீயவை நிகழக்கூடும். நீங்கள் உங்கள் விரலை நெருப்பில் வைத்தால் அது தீய்ந்து போகும்.“நான் மிகவும் நல்லவன். என் விரல்கள் எப்படி தீய்ந்து போகலாம்" என்று நீங்கள் கேட்க முடியாது.  
நீங்கள் இன்று எந்தத் தவறும் செய்யாமலிருக்கலாம். ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்பு நீங்கள் அளவுக்கு மீறிய வேகத்தில் வாகனத்தை ஓட்டியதற்கான அபராதத்தொகையை  இன்று செலுத்த வேண்டியிருக்கலாம். இன்று நல்லவர்களாக இருப்பவர்கள்கூட கடந்த காலத்தில் சில தவறுகள் செய்திருக்கலாம். இது ஒரு காரணம் மற்றொன்று நல்லவர்களாக இருந்தாலும் தீயவை தங்களை பாதிக்காமல் அல்லது தீயவற்றில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கான புத்திசாலித்தனமும் திறமையும் இல்லாமல் இருந்தால் அவர்களை தீயவை பாதிக்கும்.  முதலாவது கர்மா ஆகும். இரண்டாவது திறமையின்மை.
வாழ்க்கையில் முதலில் சுதந்திரம் இரண்டாவதாக அன்பு ஆகிய இவை இரண்டுமே தேவை.  சுதந்திரம் இல்லை என்றால் அன்பும் இருக்க முடியாது. விடுதலை என்பது பிறரிடமிருந்து இல்லை.நம் உள் விடுதலை நம் உணர்வுகள் உணர்ச்சிகளிலிருந்து  விடுதலை வேண்டும்.  சுதந்திரம், அன்பு, திறமை, சக்தி ஆகிய அனைத்தும் இருக்க வேண்டும்.
எனவே நல்ல மனிதர்களுக்கு கெட்டவை நடக்கும்போது நீங்கள், "பரிதாபம் உங்களுக்கு இப்படி நடந்திருக்கக்கூடாது." என்றோ அல்லது "உங்களுக்கு இப்படி நடக்க வேண்டும் என்று விதி இருக்கின்றது" என்றோ அல்லது "உங்களுக்குத் திறமையில்லை. உங்கள் முட்டாள்தனம் தான் காரணம்" என்றோ எதுவும் சொல்ல வேண்டாம். ஒரு புன்னகையுடன் அவர்களுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.  அவர்களது தற்போதைய நிலை குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல்  அவர்கள் அதிலிருந்து மீண்டு வர எவ்வாறு உதவி செய்ய முடியும் என்று பாருங்கள்.
கே:நான் சேவை செய்வதற்காக பூன் ஆசிரமத்திற்கு பல தடவைகள் வந்துள்ளேன். சேவை  செய்ய வந்த போது  ஆழ்ந்த உள் அமைதி இருந்தது. கழிவறைகள் சுத்தம் செய்வதும்   சமையலறையில் உதவி செய்வதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்தது. ஆனால் இப்போது அது எனக்கு பெரும் சுமையாக மாறி இருக்கின்றது. என் உள் அமைதியும் சேவை செய்வதற்கான ஆர்வமும் என் வாழ்க்கைத் துணைவரின் உடல் நலக் குறைவால் போய் விட்டது. நான் அவற்றைத் திரும்பவும் பெற விரும்புகின்றேன். மகிழ்ச்சியான தருணங்களில் சேவை செய்ய வேண்டும். வருத்தமான நேரங்களில் உங்களிடம் சரணடைய வேண்டும் என்ற இந்த ஞானம் இருந்தும் பயனில்லை. தயவு செய்து உதவுங்கள் குருதேவ்.
குருதேவ்: ஒன்று தெரிந்து கொள்ளுங்கள். வருத்தமான நேரங்களில் நீங்கள் அதிகம் வேலை செய்ய வேண்டாம். ஓய்வெடுங்கள். தளர்வாக இருங்கள். தியானம் செய்யுங்கள். நீங்கள் இங்கே அமர்ந்து தியானம் செய்யுங்கள். உங்களுக்கு அமைதியும் ஆறுதலும் உண்டாகும். கவலையை எதிர்கொள்ளவும் விட்டுத் தள்ளவும் தேவையான சக்தியும் உங்களுக்கு உண்டாகும். சரியா? நான் எப்போதும் உங்களுடன் இருக்கின்றேன், மற்ற அனைவரும் கூட உங்களுடன் இருக்கின்றனர்.