சரியான பொருள், சரியான நேரத்தில் கிடைக்கும்...


பூன், வடக்கு கரோலினா 01-07-2012
கே: நிறைவேறாத ஆசைகளை என்ன செய்வது? வாழ்நாள் முழுதும் விரும்பிய வளமான உறவு நிலைக்கவில்லை. நாளாக நாளாக வெறுப்பும் வேதனையும் என் சக்தியை உறிஞ்சியதாக உணர்கிறேன். என் விருப்பங்கள் நிறைவேற என்ன செய்யலாம். அப்படி இல்லாவிட்டால் அதை எப்படி மறப்பது?
குருதேவர்: நீ வாழ்நாள் முழுதும் விரும்பியதாகச் சொல்கிறாய். அது உண்மையாகவே வாழ்நாள் முழுதும் விரும்பியதா? நீ குழந்தையாக இருந்த போது இந்த விருப்பம் இருந்ததா? நீ இளமைக் காலத்தைத் தொட்டபோது இந்த விருப்பம் இருந்ததா?
அந்த விருப்பத்தைக் கூர்ந்து கவனி. அந்த விருப்பம் நீ எடுத்த முயற்சிக்கும், கால விரயத்துக்கும் ஏற்றதா? விலை மதிப்பற்றதா? அல்லது அது நிறைவேறா விட்டாலும்  வாழ்க்கை ஏதாவது வழியில் உபயோகப்படுமா? இந்த விஷயங்களைக் கவனமாக யோசிக்க வேண்டும். உன் சக்தி பெருகும் போது நிறைவேறாத ஆசைகளை மறக்க முடியும். நீ விரும்புபவை தானாகக் கிடைக்கும். நிறைவேறாத விருப்பங்களைப் பற்றி மேலும் மேலும் ஏங்கினால் அது நிறைவேறக் காலதாமதம் ஏற்படலாம். அது தான் உண்மை.
கே: நீங்கள் என்னை விரும்புவது எனக்குத் தெரியும். ஆனால் என்னை என்னால் விரும்ப முடியவில்லை. நான் என்னையும் என் அருகில் இருப்பவர்களையும் சகஜமாக விரும்புவதற்கு என்ன செய்யலாம்?
குருதேவர்: மேல் நிலை தியானப் பயிற்சிக்கு வந்து நீ சரியானதைச் செய்கிறாய்.இந்த பயிற்சியின் ஆரம்பத்தில், நீ உன்னையும் உன் தோழியையும் பாராட்டப் பயிற்சி அளிக்கிறோம். நீ அதைச் செய்யவில்லையா? முழு மனதோடு அதைச் செய். அதை ஒரு சாதாரணமான விஷயமாக எண்ணாமல், முழு மனதோடு உன்னையும் மற்றவர்களையும் பாராட்டத் துவங்கு. இதெல்லாம் விளையாட்டுத் தனமாகத் தோன்றலாம். ஆனால் ஆழ்ந்து பார்த்தால் அது ஆழ்மனத்தின் நிலையில் உன் ஆத்மாவைத் தொட்டு மாற்றம் விளைவிக்கும்.
உன்னைக் குறை கூறுவதை, உன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மையை விட்டு விடு. இது ஆன்மீகத்தின் முதல் பாடமாகும். எவ்வளவு அதிகம் நீ உன்னைக் குற்றம் சாட்டுகிறாயோ, அந்த அளவு நீ உன் ஆத்மாவை விட்டு தூர விலகுகிறாய். அதனால் நீ உன் குறைகளை மறந்து உன்னுள் இருக்கும் நல்ல குணங்களைப் பார். மேலும் மேலும் இப்படிச் செய்து கொண்டேயிருந்தால் நீ உன்னைப் பாராட்டலாம்.
இந்தப் பழைய நினைவுகள் மாறுவதற்கு சில காலம் தேவையாய் இருக்கும். நீ உள்ளுணர்வோடு நான் என்னைப் பற்றிக் குறை சொல்வதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கும் போது உன் சக்தி அதிகமாவதை உணர்வாய். பிராணயாமம் கட்டாயமாக உதவும். உன் சக்தி அதிகரிக்கும் போது உன்னை குறை கூறுவது சாத்தியமாகாது.
கே: என் பயத்தை எப்படிப் போக்குவேன்? எதைக் கண்டாலும் எனக்குப் பயம் ஏற்படுகிறது. எல்லாமே என்னை பயமுறுத்துகிறது. தோல்வி, வருங்காலம், மரணம், விமானப் பயணம் எதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. தயவு செய்து உதவுங்கள்.
குருதேவர் : பயம் என்பது ஒரு மனவெழுச்சி அல்லது உடலில் ஏற்படும் உணர்ச்சி மாற்றம் தான். பயத்தை ஒரு பொருளோடு அல்லது நிகழ்ச்சியோடு இணைப்பது தேவையற்றது. பயம் ஏற்படும் சமயத்தில் அந்த மனச்சலனங்களை கவனித்தால், பயம், அன்பு, வெறுப்பு எல்லாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஏற்படுவதைக் காணலாம். ஒரே சக்தி அன்பு, வெறுப்பு அல்லது பயம் என்று பலவாக வெளிப்படுகிறது.
ஒரு பொருளின் மீது அளவில்லாத பற்று ஏற்படும் போது பயம் விலகிவிடும். வாழ்க்கையில் எதன் மீதும் பற்று இல்லாத போது, விருப்பம் இல்லாத போது பயம் தோன்றும். நீ எதையோ அதிகமாக விரும்பும் போதும், அதிகமாக வெறுக்கும் போதும் பயம் தோன்றாது. அப்படி இல்லாத போது பயம் சிறிது வாட்டும். வெற்றிடம் மற்றும் காலியிடம்  தியானம், பிராணயாமம், சேவையில் ஈடுபடுவது பயத்தை விலக்க உதவும்.
கே: திருமணத்துக்கு முன் குழந்தை பிறந்து, தாயின் மீது அன்பில்லாவிட்டாலும், குழந்தையையும் தாயையும் ஏற்றுக் கொள்ளும் நிர்பந்தத்தில், தவறினால் ஏற்பட்ட இந்த விளைவுக்காக ஒருவர் என்ன செய்யலாம்?
குருதேவர்: மேலே செல். அதைத் தான் நான் சொல்ல முடியும். அதையே நினைத்து நினைத்து வருந்தி அமராமல் மேலே செல். வாழ்க்கையில் பல நிகழ்ச்சிகள் நடக்கும். நீ பல பாத்திரங்களாக மாற வேண்டியிருக்கும்.
முதலில் இந்த அழகான பூமியில் நீ ஒரு அழகான குடிமகன். அதைத் தெரிந்து கொள். இந்தப் பிரபஞ்சத்தின் ஒளியில் நீ ஒரு துகள். அதைப் புரிந்து கொள். நீ ஒரு தாயாகவோ, மகனாகவோ, மகளாகவோ ஏதாவது ஒரு பாத்திரத்தில் பங்காற்ற வேண்டும். திடமான முடிவுக்கு வா. எது வந்தாலும் எதிர் கொள்வேன். 100 % அந்தப் பாத்திரமாகவே மாறி விடுவேன். அவ்வளவு தான். நடப்பது அதன் வழியில் நடக்கும்.
கே: கேன்சர் நோயால் என் தாயார் ஒரு வருஷம் முன்பு இறந்து விட்டார். நான் என்னால் முடிந்ததை சிறப்பாகச் செய்கிறேன். ஆனாலும் என் தாயைப் பற்றிய நினைவுகளிலிருந்து எப்படி விடுபடமுடியும்?
குருதேவர்: காலம் எப்படிப் பட்ட புண்ணையும் ஆற்ற வல்லது. உன் பார்வையை விரிவாக்கிக் கொள்.
கே: நான் எப்படி என்னை மேலும் தூய்மைப் படுத்திக்கொள்வது? சாதனா,சேவை, சத்சங்கம் எல்லாவற்றிலும் ஈடுபட்டாலும், என்னை மிகவும் தூய்மையானவனாக மாற்ற முடியவில்லை. நான் ஆணவம் பிடித்தவர்களை, அகங்காரத்துடன் நடப்பவர்களை, கர்வமானவர்களைப் (அதுவும் வாழும் கலையில் அப்படிப் பட்டவர்களை) பார்க்கும் போது மிகவும் வருத்தம் அடைகிறேன். இதை எப்படி விலக்கலாம்?
குருதேவர்: நீ இரண்டு விஷயங்களைப் பற்றிச் சொல்கிறாய். மற்றவர்கள் ஆணவம் பிடித்தவர்கள்,சரியில்லை என்கிறாய்.இரண்டாவதாக நீயும் சரியில்லை என்கிறாய். இது ஒரு கண்ணாடியைப் போல் பிரதிபலிக்கிறது. இது பிரதிபலிக்கும் கண்ணாடி.
நீ பிராணயாமம் செய்து, உணவு விஷயத்தில் கவனமாக இருந்து உன்னை மேலும் தூய்மையான வனாக்கிக் கொள்ளலாம். அப்படியும் சரியாகாவிட்டால், பழம், காய்கறி மட்டும் உண்ணலாம். இரண்டு நாட்கள் இசையிலும், மந்திர ஜபத்திலும் ஈடுபடலாம். நீ சத்சங்கத்தில் இருந்து பாடும் போது எப்படி தூய்மையற்றவனாக இருக்க முடியும்? அப்படி நடக்கவே முடியாது. எவ்வளவு மனத்தூய்மை இல்லாமலிருந்தாலும் சத்சங்கத்தில் அமரும்போது எல்லா விதமான மன அழுக்குகளும் நீங்கி விடும்.
எவ்வளவு பேர் அப்படி உணருகிறீர்கள்? (பலர் கையை உயர்த்துகிறார்கள்). ‘நாஹி ஞானேன சத்ருஷம் பவித்ரம் இஹ வித்யதே. தத் ஸ்வயம்யோக சம்சித்தஹ காலேன் ஆத்மானி விந்ததி’ (ஶ்ரீமத் பகவத் கீதை. 4-ம் அத்தியாயம், 38-வது ஸ்லோகம்.)
ஒரு பழமொழி உண்டு – உன் மனத்தை, ஆத்மாவை, தூய்மையாக்க ஞானத்தை விட சிறந்தது எதுவும் இல்லை. ஞானம் உன்னைத் தூய்மையாக்கும். அரை மணி நேரம் அல்லது 20 நிமிஷம் அமர்ந்து அஷ்டவக்ர கீதையைக் கேள். உன் ஆத்மா பலம் பெறும்.
மற்றவர்களை அகங்காரம் கொண்டவர்கள் என்று நீ சொல்வது – அப்படிப்பட்டவர்கள் வாழும் கலையிலிருப்பது நல்லது தான். அப்படிப்பட்டவர்கள் நம்முடன் வந்தது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. எனக்குப் பொறுமையும் இருக்கிறது. நீயும் பொறுமையாக இரு. நான் பொறுமையாகக் காத்திருக்கிறேன். அப்படிப் பட்டவர்கள் வாழும் கலைக்கு வராமல் இருந்தால் வெளியில் பல பிரச்சினைகளை உண்டு பண்ணியிருப்பார்கள். நிறைய பேர் தொந்தரவுக்கு உட்பட்டிருப்பார்கள். இங்கே அவர்கள் சிறிய கஷ்டங்களைத்தான் தருகிறார்கள்.
“எல்லோரையும் அவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்ற சூத்திரத்துக்கான உதாரணமாக உனக்கு ஒரு வாய்ப்பு அளிக்கிறார்கள்.
மேலும் வாழும் கலையில் இருப்பவர்களை ஒரு சிறப்பான பிறவியாகப் பார்க்காதே. அவர்களும் மற்ற சாதாரண மனிதர்களைப் போன்றவர்கள் தான். உலகில் மற்றவர்களிடம் இருக்கும் குணங்கள், இயல்புகள் இவர்களிடமும் உண்டு. வித்தியாசமானவர்கள் அல்ல.
உன்னுடைய எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதற்குக் காரணம் நீ அவர்களை ஞானத்தில் மூழ்கி இருப்பவர்களாக, அவர்கள் அன்பு நிறைந்தவர்களாக, சேவை செய்பவர்களாகப் பார்க்கிறாய். வாழும் கலையைச் சேர்ந்தவர்களிடம் உன் எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பது சரிதான். நீ உன்னிடமிருந்து துவங்கு. நீ ஒரு வாழ்த்துப் பெற்றவன். யாரையும் ஏற்றுக் கொள்ளும் மனம் உடையவன். அதற்கான பொறுமையும் உன்னிடம் உண்டு.
“ஏன் அகங்காரம் பிடித்தவர்களை, கோபக்காரர்களை வாழும் கலை ஆசிரியராக்கினீர்கள்” என்று மக்கள் என்னைக் கேட்கிறார்கள்.
நான் சொல்வது இதுதான். எனக்கு எல்லா விதமான முன் உதாரணமும், எல்லாவிதமான படைப்புகளும், எல்லா விதமான மக்களும் தேவையாய் இருக்கிறார்கள். நான் எல்லோரையும் ஏற்றுக் கொள்கிறேன். அவர்கள் அனைவரும் என்னிடம் சாதகமாக இருக்கிறார்கள். அவர்களின் வளர்ச்சியைப் பார்ப்பதற்கான பொறுமை என்னிடம் இருக்கிறது. இப்படித் தான் வாழும் கலை இது வரை வளர்ந்திருக்கிறது.
நான் ஒரு முழுமையை எதிர்பார்த்திருந்தால், நாம் இந்த அளவு வளர்ந்திருக்க மாட்டோம். இன்று இங்கு ஒன்றாக அமர்ந்திருக்க மாட்டோம். நான் எங்கேயோ இருந்திருப்பேன். நீ எங்கேயோ இருந்திருப்பாய். நம் எல்லோருக்கும் பொறுமை அவசியம்.
ஒரு பள்ளியில் எல்லா மாணவர்களும் ஒரே வகுப்பில் அமர முடியாது. ஒரு வகுப்பு மற்ற வகுப்பை விட மேல் என்று சொல்ல முடியாது. நர்சரி வகுப்பில் படிக்கும் குழந்தைகள் முதல் வகுப்பில் படிப்பவர்களை விடச் சிறந்தவர்கள் என்று சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு இடம் உண்டு. சிலருக்கு வளருவதற்கு சில காலம், சில இடங்கள் அவசியம். இது மாணவர்கள் ஒரு வகுப்பிலிருந்து மற்ற வகுப்புக்குச் செல்வது போலத் தான். எல்லோருமே வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள். நமக்குப் பொறுமை அவசியம். சிலர் நம் பொறுமையைச் சோதித்து நாம் வளர உதவுகிறார்கள்.
கே: நான் பல மைல் தூரத்திலிருந்து இதயபூர்வமாக தீவிர இச்சையும் உங்களிடம் வேண்டுவதெல்லாம் கேட்டு, என் வேண்டுதலை நிறைவேற்றுகிறீர்கள்.
குருதேவர்: உனக்குத் தான் தெரியுமே! செல்போன்களுக்கு இடையில் மைல் கிடையாது. உலகில் இருக்கும் எவரிடமும் அந்த சிறிய ப்ளாஸ்டிக் டப்பியை வைத்துக் கொண்டு, சில பொத்தான்களை அமுக்கி தொடர்பு கொள்ள முடிகிறது. அப்படி இருக்கும் போது ப்ளாஸ்டிக் டப்பியை விட பல மடங்கு சக்தி வாய்ந்த உன் மூளையை, இதயத்தை,உன் உணர்ச்சிகளை, நீ ஏன் குறைவாக எண்ணுகிறாய். அது அப்படித் தான் நடக்கிறது. இல்லையா?
உன் நெருங்கிய நண்பன் ஒருவன் ஜப்பானிலோ, அமெரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியிலோ இருப்பவன் உன்னைப் பற்றி நினைக்கும் போது அவனைப் பற்றி நீயும் நினைக்கிறாய். அவர்கள் மகிழ்ச்சியாய் இருக்கும் போது நீயும் மகிழ்ச்சி அடைகிறாய். ஏதோ காரணமாக அவர்கள் துக்கப் படும்போது  நீயும் அதை உணர்ந்து துக்க வசப் படுகிறாய். இப்படி உங்களுக்கு நடந்திருக்கிறது இல்லையா? நீங்கள் எவ்வளவு பேர் ஒருவருக்கு ஒருவர் பேசாமலே அப்படி அனுபவப் பட்டிருக்கிறீர்கள்? (பலர் கையை உயர்த்துகிறார்கள்.
ஒருவருக்கொருவர் தொடர்பு அந்த கட்டத்தில் தான் நிகழ்கிறது. அது ஒரு நுண்மையான (கண்ணால் பார்க்க முடியாத) அணுத் துகள்கள் மட்டத்தில் நிகழும் தொடர்பாகும். ஆம். அது அப்படித் தான். செல்போனைப் போன்ற ஒரு வெளியில் தெரியும் உபகரணம் எல்லோரும் பார்க்கக்கூடிய தொடர்பு அல்ல. ஆனால் ஆழ்ந்து சிந்திக்கும் போது இந்தத் தொடர்பு பற்றி உணரலாம்.
கே: மன்னிப்பது என்றால் என்ன? நான் யாரையாவது மன்னிக்க முயலும்போது 100% மன்னிக்க முடியவில்லை. நிறைய நேரமும், சக்தியும் விரயமாகிறது. அதைப்பற்றி நினைப்பதையும் நிறுத்த முடியவில்லை. முழுவதும் மன்னித்து விட்டு மேலே செல்ல என்ன செய்ய வேண்டும்?
குருதேவர்: இந்த மன்னிக்கும் விஷயத்தை அறவே மறந்து விடு. உன்னிடம் நிறைய நேரம் இருப்பது போலிருக்கிறது. சமையலறைக்கு வா. பாத்திரங்களைக் கழுவு. அது உனக்கு எளிதான சேவையாகத் தெரிந்தால் 10 முறை மாடிப் படிகளில் ஏறி இறங்கு. உன் உடல் சோர்வடையும் போது, மனமும் அந்த மனிதரைப் பற்றி நினைப்பதை மறந்து விடும். யாரைப் பற்றியோ, வெறுப்பு, கோபம்,பழி வாங்குதல் பற்றி நினைத்தாலோ, ஏதோ ஒரு பொருளை அடையும் வெறியிருந்தாலோ, அல்லது அதிக வெறுப்பு இருந்தாலோ உன்னை இப்படியெல்லாம் எண்ணத் தூண்டும் .நீ சேவையில் ஈடுபடு. கட்டாயம் உனக்கு அது உதவும்.
நீ மன்னிக்க வேண்டியதில்லை. அதை விட்டு விடு. சமையலறைக்குப் போய் எந்தப் பாத்திரம் நன்றாகத் தேய்க்க வேண்டுமோ அதை ஒரு பிரஷ்ஷை எடுத்துக் கொண்டு நன்றாகத் தேய்த்துக் கழுவு. தரை அழுக்காக இருக்கும் இடத்தையும் உன் முழு முயற்சியுடன் சோப்புப் போட்டு நன்றாகச் சுத்தம் செய். அந்த மனிதரின் மேல் உள்ள கோபத்தைப் போக்க இது ஒரு நல்ல வழி.
இங்கு தேங்காய் கிடைப்பதில்லை. தேங்காய் இருந்தால் ஒன்றொன்றாய் எடுத்து தேங்காயை உடைக்கச் சொல்லுவேன். தேங்காய் உடையும் போது உன் கோபம் தணிந்து ஓய்வு கிடக்கலாம். தீய்ந்து போன, கரி பிடித்த பாத்திரங்களை நன்கு தேய்த்துக் கழுவுவது மிகவும் சிறந்தது. உன்னைப் போல் நிறையப் பேர்கள் இருந்தால் சமையல்காரர்களின் பாடு திண்டாட்டம் தான். எத்தனை பேருக்கு அவர்களால் கரி பிடித்த பாத்திரம் கொடுக்க முடியும்.
கே: ஏழு வருடம் நான் என் கணவருடன் வாழ்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக அவருடைய குடும்பத்தினரால் எனக்குப் பிரச்சினையாக இருக்கிறது. என் மாமனாரை வெறுக்கிறேன். அவர்களின் குடும்பத்தை விலக்கி எங்களுக்குப் பிரச்சினை இல்லாமல் பார்த்துக் கொள்கிறேன். என் மாமனார் என்னை மிகவும் தொந்தரவு செய்ய வல்லவர். அவரைக் கொன்று விடலாமென்று கூட தோன்றுகிறது. இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம்?
குருதேவர்: இரண்டு நாள் விடுமுறை எடுத்துக் கொண்டு, ஒரு மன நோய் மருத்துவ மனைக்குச் சென்று சேவை செய். மனநிலை பாதிக்கப் பட்டவர்களூடன் இருந்து இரண்டு நாட்கள் ஏதாவது வேலை செய். மன நோய் மருத்துவமனையில் வேலை செய்தால் பைத்தியக்காரர்களுடன் பழகுவது எப்படி என்பது புரியும். அவர்கள் பைத்தியமானால் நீ பொறுமையோடு நடந்து கொள்ள வேண்டும். நீ போய் அவர்களைக் கன்னத்தில் அறைய முடியாது. அவர்கள் கழுத்தை நெறிக்க முடியாது. இல்லையா?
நான் சொல்வது மிகவும் சிறந்த பயிற்சி. மன நோய் மருத்துவ மனையில் ஓரிரண்டு நாட்கள் பணி புரிவது நல்லது. அது குறைவாகத் தெரிந்தால் 1 வாரம் போகலாம். அது நல்லது. வீட்டில் இருப்பவர்கள் போலவே வெளியிலும் பலர் இருப்பதைத் தெரிந்து கொள்வாய். உலகம் மன நிலை கெட்டவர்களால் நிரம்பியிருக்கிறது. சிலர் மன நோய் மருத்துவ நிலையங்களில் இருக்கிறார்கள். சிலர் வெளியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு பைத்தியக்காரர் என்ற சீட்டு ஒட்டவில்லை. அப்படிப் பட்டவர்களுடன் பழக உனக்கு மிக அதிகமாக பொறுமை வரும். உன் நன்மைக்காகச் சொல்கிறேன். சிறை செல்வதற்கான காரியம் எதுவும் செய்யாதே. சரியா?
சில சமயம் உன் தந்தையோ தாயோ உன்னைத் திட்டினால் அதை நீ பொருட் படுத்துவதில்லை. நிறைய உன்னைத் திட்டியிருப்பார்கள். ஒரு நாளுக்குப் பிறகு அதை நீ மறந்து விடுவாய். ஆனால் உன் மாமனார், மாமியார் பெற்றோரை விட பாதி அளவு திட்டினால் கூட அது உன்னை மிகவும் பாதிக்கிறது. இல்லையா? அவர்களே உன் பெற்றோர்கள் என்று நினைத்தால் என்ன செய்வாய்? அது ஒரு பெரிய வித்தியாசத்தை கொண்டு வரும்.
ஆசிரமத்துக்கு வருபவர்களை நான் “உங்கள் தொல்லைகளை இங்கு விட்டுவிட்டுப் போய் விடுங்கள்” என்று சொல்வது வழக்கம். ஒரு பெண் “என் மாமியாரை இங்கு விட்டு விட்டுப் போக முடியுமா?” என்று கேட்டாள். உன் மாமியாரும் அதையே தான் கேட்கிறாள். எனவே நான் இரண்டு தனி அறைகள் ஏற்பாடு செய்ய வேண்டும். ஒன்று உனக்காக, மற்றொன்று உன் மாமியாருக்காக.
“நீ உன் தாயிடம், மாமியாரை விட அதிக வசவு வாங்கியிருக்கலாம். இல்லையா?” என்று நான் அவளைக் கேட்டேன். அந்தப் பெண் சிறிது யோசித்த பின் “நீங்கள் சொல்வது சரி” என்றாள். என் அம்மா எப்போதும் என் வேலையில் குற்றம் சொல்லிக் கொண்டிருப்பாள்.
“ஏன் இரண்டையும் வித்தியாசமாக எடுத்துக் கொள்கிறாய். அம்மா திட்டினால் அது உன்னைத் தொல்லை செய்வதில்லை. மாமியார் குறை சொல்வது பெரிய தொல்லையாகத் தெரிகிறது”
நாம் இந்த விஷயத்தை வேறு கோணத்தில் பார்த்தால், நம் சூழ்நிலைகள் மாறி தொல்லை நீங்கி மகிழ்ச்சி நிலவும்.
கே: நாம் உற்சாகமாகவும் அதே சமயம் பற்று இல்லாமலும் எப்படி இருக்க முடியும்?
குருதேவர்: உண்மையில் அது ஒரு சாமர்த்தியம். சுயநலம் இல்லா விட்டால் அது மிகவும் சுலபம். உதாரணத்துக்கு நீ சேவை செய்யும் போது, சுயநலம் பார்க்காமல், அதிக பற்றில்லாமல், அதே சமயம் உற்சாகத்தோடு பங்கு கொள்கிறாய். இல்லையா? உங்களில் பலர் சமையலறையில் உற்சாகத்தோடு சேவை செய்வதில்லையா? (எல்லோரும் “ஆம்” என்கிறார்கள்)
அதே சமயம் அதனால் உங்களுக்குப் பெரிய நன்மை கிடைக்கும் என்று நீங்கள் அப்படிச் செய்வதில்லை. இங்கு உற்சாகத்தோடு பற்றின்மையும் சேர்ந்திருக்கிறது. இங்கு பல நல்ல சேவைகள் செய்யலாம். போக்குவரத்துக்கான வசதிகள் செய்வது, தங்கும் வசதி செய்வது, மேலும் கீழும் மக்களைக் கொண்டு சேர்ப்பதற்கான வாகன வசதி செய்வது, படுக்கைகளை விரிப்பது. நீங்கள் இரவு 12 மணி வரை இப்படிப் பட்ட சேவைகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள். நான் இரவு 12 மணிக்குச் சுற்றி வரும்போது இந்த இளைஞர்களும், பெண்களும் படுக்கை வசதிகள் செய்து கொண்டிருப்பதையும் எல்லா விருந்தினர்களையும் சுகமாகத் தங்க வைப்பதையும் பார்த்தேன். நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் அவர்கள் சேவை செய்வதில்லை. அப்படிச் சேவை செய்வதால் அவர்களுக்கு ஏதாவது கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பு அவர்களிடம் இல்லை. அப்படிச் செய்வதால் பெரிய புண்ணியம் கிடைக்கும் என்று அவர்கள் நினைப்பதில்லை. அப்படிச் செய்வது அவசியம் என்று உணர்ந்து அவர்கள் சேவையில் ஈடுபடுகிறார்கள். அதில் உற்சாகமும், பற்றின்மையும் கலந்திருக்கின்றன.
நான் அவர்களைப் போய் படுக்கச் சொன்னேன். மற்ற காரியங்களை நாளை செய்யலாம் என்று சொன்னேன். அவர்கள் மகிழ்ச்சியாக உறங்கச் சென்றார்கள். எல்லோருமே சேவையில் ஈடு பட்டார்கள். ஒரு உதாரணத்துக்காக இதைச் சொன்னேன். எந்த விதமான சேவையும் இப்படித்தான். உற்சாகமும் பற்றின்மையும் சேர்ந்திருக்கும். சேவை செய்வதே இதை அடைய நல்ல உதாரணம்.
கே: ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட குருவை நாடலாமா?
குருதேவர்: ஒரு குருவிடம் ஈடு கொடுப்பதே கடினம்.
நீ வேறு பாதையில் மற்றொரு குருவிடம் இருந்திருக்கலாம். அவர்களின் ஆசிர்வாதத்தால் தான் நீ இங்கு வந்திருக்கிறாய். அவர்களுக்கு நன்றி சொல். அவர்களின் விருப்பப் படி நீ ஒரு அடி எடுத்து வைத்து இங்கு வந்திருக்கிறாய்.
நீ வேறு வேறு சாதனை முறைகளைப் பற்றிக் கேட்டால், நான் அவைகளைக் கலக்க வேண்டாம் என்று சொல்லுவேன். சுதர்சனக் கிரியா செய்து விட்டு வேறு ஏதாவது செய்தால் குழப்பம் ஆகிவிடும். நீ வேறு முறையில் சாதனை செய்திருக்கலாம். அதை முடித்து விட்டு இங்கு வந்திருக்கிறாய். இங்கு உள்ள பிரயோக முறைகளை 100 % பின்பற்றுவது தான் சரி.
கே: குருதேவா! என்னிடம் எல்லாம் இருக்கிறது. இருந்தாலும் என் வாழ்வில் ஏதோ குறையாக (காலியிடமாக) உணர்கிறேன். நான் என்ன செய்வது. வழி காட்டுங்கள்.
குருதேவர்: அது நல்லது. அது தான் முதல் படி. எல்லாவற்றையும் காலி செய்து விட்டு நிரப்புவதே சரி. நீ முழுமையடைவாய். சத்சங்கமும், ஆன்மீக ஞானமும் காலியிடத்தை நிரப்ப மிகவும் சிறந்தவைகளாகும்.
கே: என் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? என்னுடைய தர்மம் என்ன?
குருதேவர்: சேவை, சேவை, சேவை. நம் தர்மம் நம்மால் ஆன எல்லாவற்றையும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்குக் கொடுப்பது தான். நீ எப்பொழுது ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு “என்னை யாரும் கவனிப்பதில்லை, எனக்கு என்ன ஆகும்” என்று நினைத்துக் கொண்டிருந்தால் அது மனச்சிதைவுக்குக் (டிப்ரஷன்) காரணமாகும்.
அந்த நிலையிலிருந்து வெளியே வந்து “நான் என்ன செய்யலாம், எப்படிச் செய்யலாம், நான் எப்படி மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம்” என்று யோசிக்கும் போது திருப்தியான வாழ்க்கைக்கு பல வழிகள் கிடைக்கும்.
கே: வாழ்க்கையில் சரியான துறையைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
குருதேவர்: உன் போக்கு என்ன? உன் விருப்பம் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும். வேலையில் திருப்தி என்று ஒன்றும் கிடையாது. அப்படிப் பட்ட வார்த்தையை அகராதியிலிருந்து நீக்க வேண்டும். சேவை செய்வதன் மூலம் தான் திருப்தியடைய முடியும். புரிகிறதா? சேவை செய்வதே ஒரு வித்தியாசமான அனுபவம். வாழ்க்கை நடத்த ஏதாவதொரு வேலை / தொழில் செய்ய வேண்டியது அவசியம். எந்த வேலை / தொழில் உனக்குப் பொருத்தமோ அதைச் செய். கூடுதலாக சமூக சேவை, ஆன்மீக சம்பந்தமான காரியங்கள், இலக்கிய சேவை, மற்றும் பொழுது போக்குகளில் உன்னை ஈடு படுத்திக் கொள். சில சமயம் மக்கள் தங்கள் பொழுது போக்கைத் தொழிலாகவும், தொழிலை பொழுது போக்காகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படிச் செய்தால் தொழிலும் நிலைக்காது. பொழுது போக்கும் நிலைக்காது. இசை உன் பொழுது போக்கு என்றால் அதை உன் பொழுது போக்காக வைத்துக் கொள். சரியா?
நீங்கள் இங்கு வந்திருப்பது மிகவும் சிறந்த காரியம். நீங்கள் மேலும் மேலும் வேண்டாத குணங்களைக் கைவிட்டு மனம் காலியாகிறது. சரியான நேரத்தில் வேண்டிய காரியம் கை கூடும். அப்படி எவ்வளவு பேருக்கு அனுபவம் ஆகிறது? வேண்டிய பொருள் வேண்டும் போது கிடைக்கும். எல்லாம் எளிதாக நடக்கும்.
கே: கேள்விகளுக்கான கூடையில் மனவெழுச்சியால் பாதிக்கப்பட்டு மற்றவர்களை சார்ந்திருப்பவர்களைப் பற்றி சில கேள்விகள் இருக்கின்றன. என்ன செய்யலாம்?
குருதேவர்: வாழ்க்கை பல விஷயங்களைச் சார்ந்திருக்கிறது. நாம் பிறக்கும் போது மற்றவர்களை நம்பியிருந்தோம். வயதான பின்னும் மற்றவர்களின் உதவி நமக்குத் தேவை. தனியாக ஒன்றும் செய்ய முடியாது. நடுவில் இருக்கும் சில ஆண்டுகள் நாம் யாரையும் சாராமல் இருக்கிறோம் என்று நினைக்கிறோம். நாம் மிகவும் சுதந்திரமானவர்கள் என்று எண்ணுகிறோம். இது ஒரு மாயத் தோற்றம். அப்போதும் நாம் ஒவ்வொரு தேவைக்கும் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நம் முழு வாழ்க்கையும்,இடைவிடாமல் பிறரை சார்ந்திருக்கும் நிகழ்ச்சிகளின் சங்கிலித் தொடர் போல் தான் கழிகிறது. அதே சமயம் உடலைப் பார்க்காமல் நீ உன் ஆன்மாவைப் பார்த்தால், அது எப்போதும் யாரையும் சாராமல் இருக்கிறது. இது மிகவும் நுண்மையான ஒன்று. இப்போது உனக்குப் புரியாமல் இருக்கலாம். கேள். சில சமயம் கழித்து, நீ இதைப் பற்றி மறுபடியும் நினைத்துப் பார்த்தால், நாம் ஒரு சார்ந்திருப்பது (உடல்) / சாராமல் இருப்பது (ஆன்மா) இரண்டின் கலவையாக இருக்கிறோம் என்று தெரிந்து கொள்வாய்.
ஆத்மா எதையும் சார்ந்ததில்லை. உடல் எப்பொழுதும் சார்ந்திருக்கும் இயல்புடையது. நம் உடல் எல்லாத் தேவைகளுக்கும் சுற்றுப் புறத்தைச் சார்ந்திருக்கிறது. உடை, நீர், மின்சாரம், கல்வி. நம் உடலுக்குத் தேவையான அனைத்தும் சுற்றுப்புறத்திலிருந்தே கிடைக்கிறது.
உனக்கு சரியான பள்ளி ஆசிரியர் கிடைத்திராவிட்டால், இந்த இடத்துக்கு நீ வந்திருக்க முடியாது. இல்லையா. அதனால் நான் சொல்வது இது தான். வாழ்க்கையை ஒரு வித்தியாசமான புதிய கோணத்தில் பார். சிலர் மனவெழுச்சியால் மற்றவரைச் சார்ந்திருக்கிறார்கள். சிலர் அறிவு பூர்வமாகச் சார்ந்திருக்கிறார்கள்.சிலருக்கு உடல் ரீதியாக உதவி தேவைப்படுகிறது. சார்ந்திருப்பதில் பல கட்டங்கள் இருக்கின்றன. மாறக் கூடிய வாழ்க்கையின் தவிர்க்கமுடியாத சார்புகளைப் பற்றி எண்ணுவதை விட்டு விட்டு, எதையும் சாராத என்றும் மாறாத ஆன்மாவின் மீது கவனத்தை எடுத்துச் செல். நான் சொல்வது விளங்குகிறதா?
உன்னுள் என்றும் மாறாத ஒன்று இருக்கிறது. முழுவதும் வியாபித்திருக்கிறது. கவனத்தை மேலும் மேலும் அதன் மேல் திருப்பினால் உன் வாழ்க்கை சக்தி வாய்ந்ததாக மாறும். நீ மற்றவர்களைச் சார்ந்திருக்காமல் தன்னிச்சையாக செயல்பட முடியும். வாழ்க்கை மிகவும் நிறைவாகவும்,திருப்தி அளிப்பதாகவும் இருக்கும். நீ விரும்புவது கிடைத்து உன் வாழ்க்கை மலர்ச்சிஅடையும். முயற்சியில்லாமலே வாழ்க்கை மலர்வதை நீ பார்க்கலாம்.
கே: ஐந்து வருடங்களுக்கு முன் தெய்வீக அனுபவம் கிடைத்தது. ஒரு நாள் முழுவதும் இருந்தது.
குருதேவர்: அனுபவத்தை மறந்து விடு. அதைப் பற்றிக் கவலைப்படாதே. உனக்கு அனுபவம் கிடைத்திருக்கலாம். அதனால் என்ன? அது போய் விட்டது. எது போய் விட்டதோ அது உண்மையாகாது. உண்மை உன்னை விட்டு எப்போதும் விலகாது. அது எப்போதும் விலகவில்லை. அது இப்போதும் உன்னோடு தான் இருக்கிறது. நாம் அனுபவத்தை எதிர்பார்க்கக் கூடாது. அனுபவங்கள் க்ஷண நேரத்தில் மாறக்கூடியவை. அவை வரும். போகும். மகிழ்ச்சி தருபவையோ, துக்கமளிப்பவையோ, நல்லவைகளோ, கெட்டவைகளோ, எல்லா அனுபவுமுமே க்ஷண நேரத்துக்குத் தான். சார்ந்தவைகள் எப்போதுமே வந்து போய்க் கொண்டிருக்கும். நீ அது அல்ல. யாருக்கு அனுபவம் ஏற்படுகிறதோ, அவர் மேல் கவனத்தைத் திருப்பு. யார் இப்போது அனுபவிக்கிறார்? யாருக்கு அனுபவம் வந்தது? தற்போது யார் அனுபவத்தை விரும்புகிறார்? அவர் இப்போதும் இங்கு தான் இருக்கிறார். தற்சமயம் இருக்கிறார். அது தான் உண்மை.
யார் அனுபவத்துக்காக ஏங்குகிறாரோ, அவர் அனுபவத்தை விட முக்கியமானவர். உன்னுடைய ஒரு நாள் அனுபவத்துக்கு ஏதும் மதிப்பு கிடையாது. ஒரு நாளில் அது போய் விட்டது. உண்மையானது உன்னில் எப்போதும் இருக்கிறது. அது (ஆத்மா) தான் அனுபவிக்கிறது. புரிந்ததா?
கே: என் வாழ்க்கையை எப்படிப் பார்த்தாலும் ஒரு சந்தேகம் வருகிறது. அதனால் என் தன்னம்பிக்கை குறைகிறது. இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது?
குருதேவர்: அது என் வேலை அல்ல. என் வேலை மேலும் சந்தேகங்களை வரவழைப்பது தான். சந்தேகம் என்பது சமையல் சோடா மாதிரி. அது உன்னை நன்றாக வேக வைக்கும். நீ நன்றாக வேக வேண்டும்.
ஒரு முறை நான் ஸ்வீடனில் இருந்தேன். சத்சங்கத்தில் இருந்த போது ஒரு பத்திரிக்கையாளார் வந்து, “குருதேவா! நீங்கள் எப்போதும் கேள்விகளுக்கு நேராக விடை அளிப்பதில்லை. எப்போதும் சுற்றி வளைத்து குழப்புகிறீர்கள். என் நேரான கேள்விகளுக்கு நேரான விடை கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இங்கிருந்து போக மாட்டேன்” என்றார்.
நான் “சரி” என்றேன். “நீங்கள் ஆத்மஞானம் பெற்றவரா” என்று கேட்டார். நான் அவரைப் பார்த்து சிரித்து “இல்லை” என்றேன். ஆம் என்றால் அதை நிரூபிக்க வேண்டிய தலைவலி வேறு. இல்லை என்று சொல்லி விட்டால் விவகாரம் தீர்ந்தது. வாக்கு வாதம் முடிந்தது. முற்றுப் புள்ளி.கடந்த காலத்தில் யாருமே,ஆத்ம ஞானம் அடைந்ததாக நிரூபிக்க முயற்சி செய்யவில்லை. யாராவது ஆத்ம ஞானம் அடைந்தேன் என்று சொன்னால் அவர்களுக்குப் பெரிய பிரச்சினை தான். சிலுவையில் அறையப் படுவார்கள். அல்லது சிறையில் வாடுவார்கள். அதனால் நான் “இல்லை” என்று சொன்னேன். அவர் அங்கிருந்து நகரவில்லை.
“நீங்கள் விளையாடுகிறீர்கள். உண்மையைச் சொல்லுங்கள்” என்று அவர் சொன்னார்.“இல்லை”என்று நான் சொன்னேன். “நான் ஒத்துக் கொள்ளமாட்டேன். உண்மையைச் சொல்லுங்கள்” என்றனார்.
நான் “ஆம்” என்று சொல்லி நீங்கள் ஒத்துக் கொள்ளாவிட்டால் ஒரு அர்த்தம் இருக்கிறது. நான் “இல்லை” என்று சொன்னதை நீங்கள் ஏன் ஒத்துக் கொள்ள மறுக்கிறீர்கள்? உங்கள் இதயம் ஏதோ சொல்கிறது. உங்கள் உள் மனத்தின் குரலைக் கேளுங்கள். பிறகு என்னை ஏன் கேட்க வேண்டும்? என்றேன்.
ஆகவே ஒன்று நம் அறிவு சம்பந்தமானது. மற்றொன்று நம் உள் மனதுக்குத் தெரிவது. ஆறாம் அறிவுக்குத் தெரிவது. சரியான விடை அது தான் என்று அதற்குத் தெரியும். அது தான் உண்மை.
கே: நான் கதவை எப்படி ஓங்கித் தட்டவேண்டும்? நான் வெளியேயும் உள்ளேயும் போய்க் கொண்டிருக்கிறேன். குளிரில் நடுங்கி, மழைக்கோட்டு இல்லாமல் மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன். ஆசிரியர் பயிற்சியில் சேருவது தான் இயற்கையான படியா?
குருதேவர்: ஆம். நீ அதைச் செய். ஆசிரியராக முன்பயிற்சியில் சேருவது நல்லது. அது உனக்கு உற்சாகத்தையும், சக்தியையும் கொடுக்கும். எல்லோருமே ஆசிரியராக முன்பயிற்சியில் சேர வேண்டும். நீ ஆசிரியராக விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் (அது அடுத்த படி) முன் பயிற்சியில் சேர வேண்டும். இந்த இரண்டு வார இறுதி ஆசிரியர் முன்பயிற்சியில் நீ நிறைய கற்றுக் கொள்ளலாம். உன்னுள் இருக்கும் தகுதியும், சாமர்த்தியமும் (கெட்டிக்காரத் தனமும்) வெளிப்படும்.
இந்தப் பயிற்சிக்குப் பின் நீ ஆசிரியராக வேண்டுமா இல்லையா என்று முடிவு செய்யலாம். பயிற்சி ஆசிரியரும் உனக்குச் சொல்வார்.
கே: நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம்? நம் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நாம் எங்கே போகிறோம்?
குருதேவர்: மிக்க நன்று. என் வேலை நடந்து விட்டது. என் வேலை உன்னுள் இந்தக் கேள்விகளைப் புகுத்துவது தான். விடை அளிப்பதல்ல. உன்னுள் இந்தக் கேள்வி இருக்கிறது. என்னுடைய வேலை முடிந்து விட்டது. உன்னுடைய மோட்டார் கார் இப்போது நகரலாம். வேண்டிய எரிசக்தி எண்ணை இருக்கிறது. இந்தக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இரு. திரும்பவும் மேல் நிலை தியானப் பயிற்சிக்கு வந்து வெற்றிடம் காலியிடம் தியானத்தை செய். மிகவும் நல்லது.