மன்னிக்கும் குணம், பலவீனத்துக்கு அடையாளமல்ல...



பூன் - வடக்கு கரோலினா – 30 ஜூன் 2012

கே: குருஜி! சிலசமயம், குழந்தைகளை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கிறது. எனக்குப் பொறுமை போய் விடுகிறது. ஒவ்வொரு நாளும் நான் அமைதியாக இருக்க நினைக்கிறேன். ஆனால் சில சமயங்களில் என் பொறுமை எல்லை மீறி என்னால் எதையும் கட்டுப் பாட்டுக்குள் வைக்க முடிய வில்லை. என்ன செய்வது?
ஶ்ரீ ஶ்ரீ: அதைப்பற்றி உன்னால் இப்போது எதுவும் செய்ய முடியாது. நீ வாழ்க்கையை அந்தந்த க்ஷணத்தில் வாழ வேண்டும். நான் சொல்வது புரிகிறதா? சில சமயம் கோபப்படுவது தவிர்க்கமுடியாதது. அதை மனதில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. வாழ்வில் சில நிறைவில்லாத சூழ்நிலைகள் ஏற்படுவது இயல்பு. அதை ஏற்றுக் கொள்ளத் துவங்கு. வாழும் கலை அடிப்படைப் பயிற்சியில் கற்றுக் கொண்டிருப்பாய். மனிதர்களையும் சூழ்நிலைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று. இது ஒரு நடைமுறை வாழ்க்கை. ஒவ்வொரு நாளும் இதை நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். அது மாதிரி சந்தர்ப்பம் வரும் போது எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்க்க வேண்டும். என்ன செய்ய வேண்டும் என்று யோசித்து செயல் படு.
எனவே, நாம் இந்த திசையில் போக வேண்டும். ஒரிரு முறை தடுமாறலாம். பரவாயில்லை. இதே திசையில் முன்னேறி ஒரு நாள் எந்த நிகழ்ச்சியையும் உன் மனக் கட்டுப்பாட்டோடு எதிர் கொள்ளும் நிலை வரும். 20 வருடங்களாக வாழும் கலை ஆசிரியராக இருப்பவர் ஒருவர் ஒருநாள் என்னிடம் சொன்னார். குருஜி! எனக்கு வியப்பாக இருக்கிறது. நான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். வாழ்வில் எது வந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
நான் இறுதியாக அவரிடம் சொன்னேன். 20 ஆண்டுகள் மிக நீண்ட சமயம் அல்ல. நீ இதற்காக 20 வருடம் எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. உன் வளர்ச்சியைத் திரும்பிப் பார். அதனால் தான் இத்தகைய கொண்டாட்டங்கள் இருக்கின்றன. குரு பௌர்ணமி எதற்காகக் கொண்டாடுகிறோம்? வருடத்தில் ஒரு நாள் நீ திரும்பிப் பார்த்து, எவ்வளவு முன்னேறியிருக்கிறாய் (ஆன்மீகப் பாதையில்) என்று தெரிந்து கொள்ளத் தான். சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும், நீ அதை எதிர்கொள்ளும் முறை மாறிக் கொண்டிருக்கும். சட்டென்று யோசிக்காமல் பேசியவைகள் , செய்தவைகள் மாறி ஒரு பண்போடு ஏற்றுக் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று யோசித்துச் செயல் படும் நிலைமை வந்திருப்பதை உணரலாம். வாழ்க்கை என்பது ஒரு தொடர் பயணம் போன்ற நடைமுறையாகும்.
உங்களில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருப்பதை எவ்வளவுபேர் உணர்கிறீர்கள்? (பலர் கைகளை உயர்த்துகிறார்கள்). யாருமே என்னில் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது. சிறிதளவு மாற்றங்கூட ஏற்படவில்லை என்று சொல்ல முடியாது.
யாராவது உங்களிடம், “ நீங்கள் என்னை வணங்க வேண்டும். ஏனென்றால் நான் பிறவியிலேயே ஞானத்தோடு பிறந்தேன் ” என்று சொன்னால் அவரை வணங்குவீர்களா?
சிறு குழந்தைகள் உங்களுக்குப் பாடம் கற்றுக் கொடுப்பதற்காகவே இருக்கிறார்கள். சில சமயம் குழந்தைகள் பற்றி பெற்றோர்கள் மனம் வருந்த நேரிடலாம். அவர்களை எப்பொழுதும் நல்ல நல்ல இனிப்பான வார்த்தைகளால் கொஞ்ச வேண்டும் என்ற அவசியமில்லை. அப்படிச் செய்வீர்களானால் அவர்களைத் திறைமையற்றவர்களாக ஆக்கி விடுவீர்கள்.
நிறையப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்பொழுதும் திட்டாமல், குறை சொல்லாமல் வளர்ப்பதைப் பார்த்திருக்கிறேன். அப்படிப் பட்ட குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களை யாராவது குறை சொன்னால், கடிந்து பேசினால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சிறிய குறைபாடு, சிறு அவமரியாதை, சிறு தோல்வி கூட அவர்களை உலுக்கி விடும். அவர்கள் அப்படியே இடிந்து போய் விடுவார்கள். ஏனென்றால் வாழ்வில் அப்படிப் பட்ட சூழ்நிலைகளை அவர்கள் சந்தித்ததே இல்லை.
சில சமயம் குழந்தைகளை வீட்டில் கடிந்து கொள்வது, அவர்களுக்கு நோய் தடுப்பு ஊசி போடுவது போலத் தான். அது அவர்களை பலசாலிகளாக்கும். வெளி உலகைச் சந்திக்கத் தயார் செய்யும். ஆனால் அடிக்கடி எதற்கெடுத்தாலும் அவர்களைக் கடிந்து கொள்வது சரியல்ல. அது வேலை செய்யாது. அளவுக்கு மிஞ்சினால் அது கெடுதல் விளைவிக்கும். ஒவ்வொரு நாளும் குழந்தைகளைத் திட்டுவீர்களானால் அவர்கள் அதைப் பொருட் படுத்த மாட்டார்கள். அவர்கள் கட்டு மீறி தவறான காரியத்தில் ஈடுபடவும் வாய்ப்பு உண்டு. அதுவும் சரியல்ல. சிறு சிறு கண்டிப்புகள் அவ்வப்போது தேவை.
கே: ஜோதிடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கலாம்? அதுவும் வாழ்க்கைத் துணையைத் தேடும் விஷயத்தில்.
ஶ்ரீ ஶ்ரீ: அது நல்லது தான். எவ்வளவு நீங்கள் இருவரும் பொருத்தமாக இருப்பீர்கள். எவ்வளவு விட்டுக் கொடுப்பீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். பொதுவாக வேதத்தில் இருக்கும் ஜோதிட சாஸ்திரப்படி 30 புள்ளிகளில் 20 புள்ளிகள் ஒத்திருப்பதும், 10 புள்ளிகள் விட்டுக் கொடுப்பதுமாக இருப்பது நல்லது. இந்தக் கணக்குகள் இருக்கின்றன. இதைத் தெரிந்து கொள்வது நல்லது. யாராவது மன வருத்தம் அடையும் போது விட்டுக் கொடுப்பது பற்றி நினைவுக்கு வருவது நல்லது.
நமக்கு கோள்கலால் பாதிப்பு இருக்கிறது. ஆனால் அது மட்டும் தான் என்று நினைக்க வேண்டாம். உங்களுடைய பாதிப்பும் கோள்களின் மேல் ஏற்படுகிறது. இது இரு வழிப் பாதை போல. இந்த ப்ரபஞ்சத்தில் எல்லாமே இருவழிப் பாதை போலத்தான். ஆனால் நம்மால் என்ன செய்ய முடியும்?
நீ மந்திரங்களை ஜபிக்கலாம். “ஓம் நமசிவாய” என்ற மந்திரம் கோள்களையும், அவற்றால் உனக்கு ஏற்படும் பாதிப்புகளையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும். எல்லா கோள்களுக்கும் மேல் தான் சிவ தத்துவம் இருக்கிறது. அதனால் சிவதத்துவத்தினால் கெடுதல்களைக் குறைக்கலாம். கோள்களால் ஏற்படும் கெடுதல்களைக் குறைக்கும் சக்தி “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தில் இருக்கிறது.
ஏன் நாம் மந்திரத்தை 108 முறை ஜபிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் தெரியுமா? 108 எதைக் குறிக்கிறது என்று எவ்வளவு பேருக்குத் தெரியாது?
108 என்பது 9 கோள்களையும் 12 வீடுகளையும் குறிக்கிறது. 9 கோள்கள் வெவ்வேறு 12 வீடுகளுக்குச் செல்லும் போது 108 விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மாற்றங்களால் ஏற்படக் கூடிய கெடுதல்களைக் அறவே தீர்ப்பதற்கு “ஓம் நமசிவாய” மந்திரத்தை ஜபிக்கிறோம். அது ஒரு கவசம் போன்றது. அது ஒரு புனிதமான மந்திரமாகும். நீங்கள் இருக்கும் இந்த மண்டபத்துக்கும் 108 படிகள் இருக்கின்றன. எனவே நீங்கள் கோள்களின் பாதிப்பைத் தாண்டி தூய ஆத்மாவைத் தரிசிக்கலாம்.
எல்லாமே கோள்களின் ஆட்சிப்படி தான் நடக்கும் என்னும்போது, சாதனை, பிராணயாமம், தியானம், சத்சங்கம், மந்திர ஜபம், பாட்டு முதலிய காரியங்களில் ஈடு படுவதற்குக் காரணம் என்ன. இக்காரியங்கள் கோள்களின் பாதிப்பிலிருந்து நம்மை விடுவித்து, கெடுதல்களைக் குறைத்து சம நிலைக்குக் கொண்டு வரும். நம் ஆத்மா காலம், இடத்தால் கட்டுப்பட்டது. (யோக) சாதனைகள், நமக்கு விடுதலையை அளிக்க வல்லது. 100% என்று சொல்ல மாட்டேன். ஆனால் நிறைய விடுதலை அளிக்கவல்லது.
இது எப்படி என்று புரிந்து கொள்ள ஒரு உதாரணம். பெரிய மழை பொழியும் போது நீ வெளியே சென்று நனையலாம். அல்லது ஒரு மழைக் கோட்டை அணிந்து கொண்டு (யோக சாதனை, தியானம், மந்திர ஜபம் முதலியவைகள்) போய் நனையாமல் காத்துக் கொள்ளலாம்.
கே: ஒரு சூழ்நிலையில் முடிவெடுக்க முடியாமல் இருந்தால், உதாரணத்திற்கு திருமணம் செய்து கொள்வது, அதன் போக்கில் போய் திருமணம் செய்து கொள்வதா? அல்லது நன்றாக அது சரி என்று தெரியும் வரை காத்திருப்பதா?
ஶ்ரீ ஶ்ரீ: யாரைத் திருமணம் செய்ய விரும்புகிறாயோ, அவரைக் கேட்க வேண்டும். சிலர் சலன புத்தி உடையவர்கள். அவர்களை எந்த விஷயமானாலும், கல்யாணமானாலும், கட்டாயப் படுத்தி சம்மதிக்க வைக்க வேண்டும். சிலர் அந்த மாதிரி எப்பொழுதாவது தான் முடிவெடுக்க முடியாமல் இருப்பார்கள். எனவே, நான் உன் விருப்பப் படி செய் என்பேன்.
மற்றும் சிலர் அழகான ஆண் அல்லது அழகான பெண்ணைப் பார்க்கும் போதெல்லாம் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவார்கள். அது கூடி வரும்போது சந்தேகத்துக்கு இடம் கொடுப்பார்கள். திருமணம் செய்து கொள்ளலாமா அல்லது வேண்டாமா என்று யோசிப்பார்கள். இதை விட அழகானவராக, நல்லவராக யாராவது கிடைக்கக் கூடும் என்று தயங்குவார்கள். அதனால் நான் சொல்வது. யாரைத் திருமணம் செய்ய விரும்புகிறாயோ அவரைக் கேள். அவரும் உன்னைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறாரா, (அதுவும் உன்னைப் போல சலன புத்தி உடையவரை) என்று கேள்.
கே: மயாமி மற்றும் ஃப்ளோரிடாவில் சிறைக் கைதிகளுக்கான வாழும் கலைப் பயிற்சி (ப்ரிசன் ஸ்மார்ட்) துவங்க மிகவும் விருப்பமுள்ளவனாக இருக்கிறேன். நான் குற்றவியல் மற்றும் மனோதத்துவப் படிப்பில் பட்டம் பெற்றிருக்கிறேன். எங்கள் மாநிலத்தில், சிறைக் கட்டடங்களுக்கும், கைதிகளின் பயிற்சிக்காகவும் நிறைய நிதி ஒதுக்கிடூ செய்யப் பட்டுள்ளது. நான் எப்படி இந்தப் பயிற்சி ஆரம்பிக்க உதவமுடியும்?
ஶ்ரீ ஶ்ரீ: மிகவும் நல்லது. மேற்கொண்டு காரியத்தில் இறங்கு. சிறை அதிகாரிகளைப் பார்க்கப் போகும் போது, தனியாகப் போகாதே. நாலைந்து பேர்களாகச் சேர்ந்து சென்று அவர்களை சம்மதிக்க வைக்கலாம். இந்தப் பயிற்சி எடுத்தவர்களின் அனுபவம் பற்றிய வீடியோ படங்களை அவர்களுக்குக் காட்டலாம். பயிற்சி எடுத்த கைதிகளின் வாழ்வில் ஏற்பட்ட நல்ல மாற்றங்களை அவர்களை உணர வைக்கலாம். அதைப் பார்த்தபின் யாருமே அப்படிப் பட்ட பயிற்சியை ஆரம்பிக்கத் தடை சொல்ல மாட்டார்கள். பயிற்சிக்குப் பின் ஏற்பட்ட கைதிகளின் அனுபவங்கள் மிகவும் ஆச்சரியகரமானவை. அதைக் கேட்பவரின் இதயத்தைத் தொடக்கூடியவை.
கே: மரணத்துக்கு வயது கிடையாது. ஆகவே இளைஞரோ முதியவரோ இறக்கும் போது அவருடைய ஆன்மாவுக்கு அதே வயது தான் இருக்குமா?
ஶ்ரீ ஶ்ரீ: ஆன்மாவுக்கு வயதில்லை. நீ சொல்வது சரி. மரணத்துக்கும் வயது கிடையாது. மரணம் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. ஆன்மாவுக்கு வயதாவதில்லை. எல்லாமே முதலிலிருந்து தான் துவங்குகிறது.
கே: குழப்பதிலிருந்து தெளிவடைவது எப்படி?
ஶ்ரீ ஶ்ரீ: சீன தேசத்தில் ஒரு பழமொழி உண்டு. “ குழப்பத்தில்  இருக்கும் போது ஒரு தலையணையை எடுத்துக் கொண்டு தூங்கப் போ. அடுத்த நாள் காலை விழிக்கும் போது ஒரு தெளிவு ஏற்படும். “
நம் ஆணவம், வீம்பு, அதிக ஆசை காரணமாக நம்மால் எதையும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இப்போது தான் ஒரு ருசிகரமான எஸ்.எம்.எஸ் வந்தது. ஒரு நண்பர் ஒரு பணக்காரருடைய வீட்டுக்குப் போன போது அவரைக் கேட்டார்கள். என்ன குடிக்கிறீர்கள்..காப்பி, டீ, கோக், சூடான சாக்லேட், பால், ஓஜஸ் விடா….. அப்படியே பட்டியல் நீண்டு கொண்டே போயிற்று.
நண்பர் “சரி, டீ குடிக்கிறேன்” என்று சொன்னார்.
“என்ன மாதிரி டீ வேண்டும்? சிலோன் டீ, பழச்சாறு கலந்த டீ, டார்ஜிலிங் டீ, இந்திய டீ, பர்மா டீ…. பத்து விதமான டீ சொல்லப் பட்டது.
“ நான் சிலோன் டீ எடுத்துக் கொள்கிறேன் “ என்று நண்பர் சொன்னார்.
அவர்கள் திரும்பவும் கேட்டார்கள். பால் இல்லாமல் கறுப்பு டீயா? பால் கலந்த டீயா? குளிர்ந்த டீயா? அதில் எலுமிச்சை ரசம் சேர்க்கலாமா? எந்த மாதிரி டீ?
“பால் கலந்த டீ கொடுங்கள் “ என்று நண்பர் சொன்னார்.
எந்த மாதிரியான பால்? பாஸ்சுரைஸ் செய்யப்பட்டதா? செய்யப் படாததா? முழுமைப் படுத்தப் பட்ட பாலா? 2%, 2.5%, அல்லது 10% கொழுப்பு சக்தி சேர்ந்ததா?
“ கடவுளே! நான் பால் கலக்காத கறுப்பு டீயே குடிக்கிறேன் “ என்று நண்பர் சொன்னார்.
அதில் சர்க்கரை சேர்க்கலாமா? என்று கேட்டார்கள்.
அவர் சொன்னார். ஆம் என்று.
எந்த மாதிரி சர்க்கரை வேண்டும்? ஸ்படிக சர்க்கரையா? பழுப்பு சர்க்கரையா? அல்லது தேன் கலக்கலாமா? என்ன வேண்டும் என்று கேட்டார்கள்.
“ ஐயோ! நான் தாகத்தினால் செத்து விடுவேன் “ என்று நண்பர் சொன்னார்.
“ நீ எப்படி சாக விரும்புகிறாய் ? என் கம்பெனியில் பங்கு தாரராகச் சேர்ந்தா? அல்லது என் கம்பெனிக்கு மூலப் பொருள் கொடுத்தா? “
எனவே, பல வாய்ப்புகள் உள்ளன. உங்கள் தலையைச் சுற்ற வைக்க.
கே: உங்களுக்கு நெருக்கமானவர்கள் பலர் இருக்கிறார்கள். நான் அப்படிப் பட்ட சிறப்பானவன் இல்லை. உங்களுடன் நெருக்கமாக இருக்க என்ன செய்ய வேண்டும். இந்த ஞானப் பாதையில் செல்ல உங்களுடன் 100% நெருக்கம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
ஶ்ரீ ஶ்ரீ: சில விஷயங்கள் கட்டாயம் இருக்கிறது என்று நம்ப வேண்டும். என்னுடன் உனக்கு நெருக்கம் இருப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான். மற்றொரு முறை இப்படிக் கேட்காதே. அப்படிக் கேட்பதில் ஒரு அர்த்தமும் இல்லை. நாம் எல்லோரும் ஒருவரோடு ஒருவர் இணைந்தவர்கள். அப்படி இல்லாமல் இருக்க வாய்ப்பே கிடையாது. எனக்கும் (இணையாமல் இருக்க) வாய்ப்பு இல்லை. உனக்கும் (இணையாமல் இருக்க) வாய்ப்பு கிடையாது. கவலைப் படாதே. இந்தக் கேள்வியை விட்டு விடு.
சிலர் எனக்கு நெருக்கமானவர்கள். சிலர் அப்படி இல்லையென்று நினைப்பதை விட்டு விடு. சிலர் சிறப்பானவர்கள். சிலர் அப்படி அல்ல என்று நினைக்காதே. நீயும் மற்றவர்களைப் போல் சிறப்பானவன் தான். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பானவர் தான்.
ஏதாவது நோக்கத்துடன் செயல் படு. வாழும் கலையில் பல திட்டங்கள் உள்ளன. உன்னை அதில் இணைத்துக் கொள். அப்படிச் செய்யும் போது ஒருவரோடு ஒருவர் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளலாம். அப்படிச் செய்யாவிட்டால், என்ன செய்யலாம். நீங்கள் நலமா என்று நான் கேட்பேன். நீயும் அப்படிக் கேட்டு விட்டு ஒருவரை ஒருவர் பிரிந்து விடுவோம். அதில் என்ன இருக்கிறது? நீ ஏதாவது செய்ய விரும்பினால், சுஷாந்த் ட்விட்டரில் செய்த மாதிரி செய். நான் சுஷாந்திடம் ட்விட்டர் கற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தேன்.
உனக்குத் தெரியுமா. சுஷாந்துக்கு இரண்டு நாள் முன்னால் ஒபாமாவின் கையால் ஒரு பரிசு கிடைத்தது. ட்விட்டர் மூலம் ஒபாமாவின் தேர்தல் பிரசாரத்துக்கு அவன் உதவியிருக்கிறான். எல்லாரும் என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கும் போது அவனுக்கு ஒரு கருத்து தோன்றியது. யாருக்கும் தோன்றாத புதிய கருத்து. ட்விட்டர் கம்பெனி அவனை மிகவும் பாராட்டியது. ஆகவே ஒரு திட்டத்துடன் செயல் படு. உனக்குப் பிடித்த எந்தத் திட்டமானாலும் சரி
மீனாட்சி ஒரு அருமையான சமையல் கலைப் புத்தகம் எழுதியிருக்கிறார். அவரும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்களும் சேர்ந்து ஒரு புத்தகம் வெளியிட்டிருக்கிறார்கள். அதைப் படித்து யாரும் சமையல் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு திட்டம் செயல் படும் போது எல்லோரும் இணைந்து செயல் பட முடியும். அதைப் பற்றி மற்றவர்களுக்கும் சொல்லலாம்.
தனியாக இருக்கும் போது மௌனம், தியானத்தில் ஈடு படலாம். அப்போதும் நாம் இணைந்திருக்கிறோம். உனக்கு எங்கேயும் எப்போதும் உதவி தேவைப்படும் போது கிடைக்கிறதா இல்லையா? உங்களில் எவ்வளவு பேருக்கு நீங்கள் நினைத்தது நடக்கிறது? எல்லோரும் கையை உயர்த்துகிறார்கள்.
பார்! எல்லோருக்கும் அவர்கள் விரும்பியது கிடைக்கிறது. ஆகவே நான் என் வேலையைச் செய்கிறேன்!
கே: எனக்கு காம இச்சையுடன் எண்ணங்கள் வருகின்றன. அது கெடுதல் விளைவிக்குமா?
ஶ்ரீ ஶ்ரீ: கவலைப்பட வேண்டாம். அந்த எண்ணங்களோடு உன்னை இணைக்க வேண்டாம். எண்ணங்கள் எண்ணங்கள் தான். வரும் போகும். கவலை வேண்டாம். அவற்றுக்கு நீ சக்தி அளிக்கா விட்டால், அதன் படி நீ நடக்கா விட்டால், நீ மிகவும் பாதுகாப்பாக இருக்கலாம்.
ஆத்மா விருப்பு வெறுப்பு இல்லாத நடு நிலைக்கு வர சில சமயம் ஆகும். அப்போது எண்ணங்கள் உன்னைத் தொந்தரவு செய்யாது. அது நடக்க சில காலம் தேவை. தானாக நடக்கும்.
நீ கவனித்திருப்பாய். யோக சாதனைகளில் ஈடு படும் போது, வேண்டாத எண்ணங்கள் வருவது குறையும். காம மற்றும் கொடூரமான எண்ணங்கள் வருவது மிகவும் குறையும்.
கே: இந்த ஆசிரமத்தின் துவக்க விழாவில் நான் வரும்படி ஆசிர்வதித்ததற்காக மிகவும் நன்றி. மிகவும் அருமையான அனுபவம். ஒவ்வொரு பேச்சாளரும் பேசிய பேச்சு என் இதயத்தைத் தொட்டது.
என் சகோதரிக்கும் பெற்றோர்களுக்கும் மிகவும் நன்றி. அவர்கள் தியானம், உறுதி, சேவையின் கலவையாக இருக்கிறார்கள். நான் இங்கு இந்த சமயத்தில் வருவேன் என்று கற்பனையில் கூட நினைக்க வில்லை. என்னை ஊக்குவித்த வாழும் கலை ஆசிரியர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் நன்றி. என் கணவர் மற்றும் மகன் எனக்கு மிகவும் உதாரணமாக இருந்து என்னை இந்த வழிக்கு வரும்படிச் செய்தார்கள். அவர்களை என் முதல் குருவாக நினைக்கிறேன். இதற்குக் காரணமான உங்களுக்கு மிகவும் நன்றி.
ஶ்ரீ ஶ்ரீ: நல்லது. இதைப் புரிந்து கொள்வது அவசியம். நாம் யாருடன் இருக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். நம் நண்பர்கள், உறவினர்கள் நம்மை உயர்த்தவும் செய்யலாம். தாழ்த்தவும் செய்யலாம். யாராவது எதிர்மறை எண்ணங்களுடன் வாழ்பவர்களானால், நீ அவர்களை இந்த வழிக்கு அழைத்து அவர்கள் உயர வழி செய்ய வேண்டும். அவர்களின் எதிர்மறை எண்ணங்கள், செயலிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.
கெட்ட வழிகளில் செல்வது மிகவும் சுலபம். குறை கூறுவது, புகார் செய்வது உலகம் முழுவதும் இருக்கிறது. இல்லையா? ஆனால் ஞானம் விலை மதிப்பற்றது. ஞானத்தில் மேலும் மேலும் நனையும் போது நாம் உயர்வதற்கான பலமும் மற்றவர்களை உயர்த்துவதற்கான பலமும் கிடைக்கும். பொதுவாக இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் சலிப்பைத் தருவதாக இருக்கும். பாதிப் பேர் அரைத்தூக்கத்தில் இருப்பார்கள். ஆனால் இன்று நடந்தது மிகவும் நல்ல நிகழ்ச்சி. எல்லோருமே பங்கு கொண்டார்கள்.
இன்னொன்று சொல்ல விரும்புகிறேன். விழாவின் வெற்றிக்குக் காரணம் இங்கு பேசியவர்கள் மட்டும் அல்ல. அதைக் கேட்பதற்காக வந்த நீங்கள் அனைவரும் இந்த விழாவின் வெற்றிக்குக் காரணமாக இருக்கிறீர்கள். பேச்சாளர்களின் திறமை கேட்பவர்களின் உற்சாகத்தைப் பொறுத்து மேலும் வளரும். நீங்கள் எல்லோரும் தூய இதயத்தோடு இங்கு வந்து அமர்ந்து நல்ல எண்ணங்களுடன், பரந்த கண்ணோட்டத்துடன் இருக்கும் போது பேச்சாளர் நல்ல விஷயங்களை மட்டும் தான் பேசுவார். எப்பொழுதும் பேச்சாளர்கள், கேட்பவர்களின் ஒரு சங்கமம் தான் நிகழ்ச்சியின் வெற்றியை உறுதி படுத்தும். எப்படிப் பட்ட நல்ல பேச்சாளருக்கும், மக்கள் உற்சாகத்தோடு கேட்க வராவிட்டால் கோர்வையாகச் சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் போய் விடும்.
கே: மற்றவர் மேல் (அதுவும் அவரை நாம் தவிர்க்க முடியாத சூழ்நிலையில்) கோபம் வெறுப்பை எப்படித் தவிர்ப்பது? அதுவும் இருவரும் வேறு வேறு திசையில் பார்க்கும் போது.
ஶ்ரீ ஶ்ரீ: முதலில் நீ ஒரு பெருந்தன்மை உடையவன் என்று தெரிந்து கொள். உன் இதயத் தூய்மையையும் பெருந்தன்மையையும் நம்பினால் அப்படிப் பட்ட சூழ்நிலைகளை எதிர்கொள்வது எளிதாயிருக்கும். நீ உன்னுள் பார்க்காத போது, வெளியில் உள்ளவரின் குணத்தையும் செயலையுமே பார்க்கும் போது உன் மனம் சஞ்சலப்படும். நீ மற்றவரைத் திருத்த முயன்று தோல்வி அடைவாய். யார் உனக்கு எரிச்சல் மூட்டுகிறார்களோ, ஒரு வழியில் பார்த்தால், உன்னுள் இருக்கும் திறமைகளை வெளிக் கொணர ஏதுவாயிருப்பார்கள். உன் தனித் திறமைகள், நல்ல குணங்கள் வெளிப்பட காரணமாக இருப்பார்கள். உன்னைச் சுற்றி இருக்கும் எல்லோரும் நல்லவர்களாக இருந்தால் அந்த சூழ்நிலையை எதிர்கொள்ள உனக்கு எதுவும் தனித்திறமைகள் அவசியமில்லை. உன்னைச் சுற்றியுள்ளவர்கள் உன்னிடம் சரியாக நடந்து கொள்ளவில்லை என்று நீ எண்ணும் போது அந்த சூழ்நிலையை எதிர்கொள்வதற்காக புதிய வழிகளை நீ கற்றுக் கொள்ளலாம். அப்படிப் பட்ட சூழ்நிலைகளால் நீ உன்னை உயர்த்திக் கொள்ளலாம்.
எனக்குத் தெரியும். அது அவ்வளவு எளிதல்ல என்று. குறைந்த பட்சம் நீ உன் மனதைத் தெளிவாக வைத்துக் கொள்ளலாம். இதைப்பற்றி,           “ மௌனம் ஒரு கொண்டாட்டம் “, “ அன்பைக் கொண்டாடுவோம் “ என்ற புத்தகங்களில் எழுதியிருக்கிறேன். அதைப் படி. எப்போது ஆழ்ந்து ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் உன்னுள் வருகிறதோ, திடீரென்று மற்றவர்களும் மாறுவதை நீ உணர்வாய். இது புதிதாகத் தோன்றலாம். ஆனால் உண்மை. நாம் மாறும் போது மற்றவரும் மாறுவார்.
கே: நான் என் குடும்பத்தாருக்கு நிறைய நன்மைகள் செய்கிறேன். ஆனால் எப்போதும் அவர்கள் நான் தவறு செய்வதாகக் கூறுகிறார்கள். நான் என்ன செய்வது?
ஶ்ரீ ஶ்ரீ: அவர் எபோதும் நீ தவறு செய்வதாக கூறுகிறார்கள் என்று சொல்வது சரியல்ல. அவர்கள் அப்படி எப்போதும் சொன்னால் அது உன்னை பாதிக்காது. அவர்கள் அப்படித் தான் சொல்வார்கள் என்று நீ அதைப் பற்றிக் கவலைப் படமாட்டாய். உன் குடும்பத்தினர் சில சமயங்களில் நீ சரியாகச் செய்வதாகவும் கூறுகிறார்கள். சரியா? அவர்கள் நீ சரியாகச் செய்கிறாய் என்று சொல்லி பாராட்டும் போது நீ அதை ஏற்றுக் கொள்கிறாய். அவர்கள் உன்னை பாராட்டாத போதும், நீ செய்வது சரியல்ல என்று சொல்லும் போதும் அதை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் அதை ஏற்றுக் கொண்டு நடு நிலையில் இருக்கக் கற்றுக்கொள்.
உனக்குத் தெரியுமா? நாம் ஒரு பிரச்சினையை மற்றவர்களால் / சூழ்நிலைகளால் ஏற்படுவதாகப் பொதுவாகப் பார்க்கிறோம். நான் எப்போதுமே தவறு செய்கிறேன். ஓ நான் எப்போதுமே சரியாய்த் தான் செய்வேன். ஓ எப்போதுமே நான் இப்படித் தான் இருப்பேன், எல்லோருமே கெட்டவர்கள்………………இப்படிப் பிரச்சினைகளை பொதுவாக்குவது சகஜம். இப்படிப் பட்ட மனநிலையிலிருந்து வெளியே வந்து பார்க்க வேண்டும்.
அவர்களின் கருத்து தவறு என்று நீ நினைத்தால் எப்போதுமே அவர்கள் உன்னைக் குறை கூறுகிறார்கள் என்று நினைத்தால் அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஒரு புன்முறுவலுடன் அவர்களுக்கு உண்மையைப் புரிய வைக்கலாம். அப்படி முடியாவிட்டால் கவலைப் படாமல் அங்கிருந்து போய் விடலாம். என்ன செய்வது?
தியானத்துக்காக கண்மூடி நீ அமரும்போது யாரோ ஒருவர் வந்து நீ ஏன் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்கிறாய் என்று கேட்டால், அதனால் ஒன்றும் உபயோகம் இல்லை என்று சொன்னால், அப்படிச் செய்யாதே என்று சொன்னால் கவலைப் படாதே. தியானம் முடிந்து கணகளைத் திறந்து புன்முறுவல் பூக்கலாம். அடுத்த நாள் நீ தியானத்துக்காக அமரும் போது அவர் உன்னிடம் வர மாட்டார்.
கே: அன்பு நம் இயல்பென்றால் நமக்கு கேடு விளைவித்தவர்களைப் பழி வாங்குவதில் ஏன் மகிழ்ச்சி அடைகிறோம். மற்றவர்களைப் பழிவாங்க நினைப்பதை எப்படி நிறுத்துவது?
ஶ்ரீ ஶ்ரீ: “ஞானம் தேடுபவருக்கு” என்ற புத்தகத்தைப் படி. அதன் பல பாகங்களில் இதைப் பற்றிப் பேசியிருக்கிறேன்.
பழி வாங்கும் சங்கிலித் தொடரை நீ மேலும் மேலும் வளர்க்கப் போகிறாயா? நீ அவர்களுக்குக் கேடு விளைவிப்பாய். அவர்கள் உன்னைப் பழி வாங்குவார்கள். அது உனக்குச் சம்மதமா?
உன்னை அறியாமல் உன் மூலம் அவர்களுக்கு ஏதோ கேடு நேர்ந்து விட்டது. அவர்கள் அதற்காக உன்னைப் பழிவாங்குவதாக வைத்துக் கொள். நீ சொன்னதோ, செய்ததோ அவர்களை மிகவும் வருத்தமடைய வைத்திருக்கிறது. நீ பல முறை அதற்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறாய். இருந்தாலும் அவர்கள் உன்னைப் பழி வாங்க நினைக்கிறார்கள். அப்போது உன் மன நிலை எவ்வாறு இருக்கும்? அது உனக்கு ஏற்கிறதா? மற்றவர்களின் மன நிலையில் உன்னை ஒரு நிமிடம் வைத்துப் பார். “இந்தப் பழி வாங்குதல் எனக்கு வேண்டாம். நான் மன்னிப்புக் கேட்கிறேன்.” என்று நீயே சொல்வாய்.
உன்னை மன்னிக்க அவர் மறுத்தால், அதுவும் உன்னையறியாமல் நடந்த தவறுக்கு, அது உனக்கு ஏற்குமா? நீ மன்னிப்புப் பெற விரும்புவது போல், மற்றவரை மன்னிக்க நீ எப்படி மறுக்க முடியும்?
ஒருவரை ஒருவர் பழிவாங்குவதில் மகிழ்ச்சி அடைவது சரியல்ல. நீ மற்றவர்களின் கவனத்தை உன் மேல் திருப்ப விரும்புகிறாய். அவ்வளவு தான். இந்த குணத்திலிருந்து நீ விடுபட வேண்டும். இந்த குணம் ஒரு மன நோய் போன்றது. மற்றவரை வருத்தி நாம் இன்பம் அடைய விரும்புவது நாம் மன நோய்க்கு உட்பட்டிருக்கிறோம் என்பதைக் காட்டும். “பார் நீ என்னைத் துன்புறுத்தினாய்.  நான் உன்னைத் துன்புறுத்துகிறேன்” என்று நினைப்பது தவறு. அதில் கிடைக்கும் மகிழ்ச்சி மிகக் குறைவான நேரமே இருக்கும். அதன் பின் விளைவுகள் திரும்பத் திரும்ப உன்னை வருத்தும். அப்படிப் பட்ட மகிழ்ச்சி உனக்குத் தேவையில்லை. மகிழ்ச்சியாக இருக்க மற்ற நல்ல வழிகள் இருக்கிறது. நீ பிறரை மன்னிக்கும் போது எப்படிப் பட்ட இன்பம், நிம்மதி கிடைக்கிறது என்று பார். யாரோ வந்து உன்னிடம் மன்னிப்புக் கோரும் போது, பெருந்தன்மையாக “பரவாயில்லை. நடந்ததை மனதில் வைத்துக் கொள்ளாதே” என்று சொல்வது எவ்வளவு நல்லது. மன்னிப்பது மிகவும் பெருந்தன்மைக்குரியது.
ஆனால் உன் மன்னிப்பை மதிக்காமல் அவர்கள் மீண்டும் தவறு செய்தால், உனக்குக் கேடு விளைவித்தால், ஒரு கோலை எடுத்துக் கொண்டு அவர்களை எதிர்கொள்ளலாம். அவர்களுக்கு முன் எச்சரிக்கை கொடுக்கலாம். கோர்ட்டுக்கு போகலாம்…………………. அவர்கள் திருந்துவதற்கு நிறைய சந்தர்ப்பங்கள் அளித்த பின் கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். மன்னிக்கும் குணம் பலவீனமல்ல. அதே சமயம் மன்னிக்க மறுத்து மன்னிக்காமல் இருப்பதால் நீ உயர்வடைய முடியாது.
கே: திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் இருக்கும் கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட்ட போது அதை எப்படி சமாளிப்பது. இருவருக்கும் இடையில் அகப்பட்ட அந்தக் குழந்தைகளை எப்படி நல்ல படியாக வளர்ப்பது?
ஶ்ரீ ஶ்ரீ: திருமணங்கள் முறியும் நிலையில் குழந்தைகளின் மன நிலையை அறிந்து செயல்பட வேண்டும். பல சமயம் பெற்றோர்கள் தங்கள் வெறுப்பை குழந்தைகளின் மேல் காட்டுகிறார்கள். மற்றவரின் கெட்ட குணத்தை குழந்தைகளிடம் சொல்வதால் அவை தம்மிடம் நெருக்கமாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அப்படிச் செய்யாதீர்கள். உன் தாய் கெட்டவள் அல்லது தகப்பன் கெட்டவன் என்று குழந்தையிடம் சொல்வதால் ஏதும் பயன் இல்லை.
நாங்கள் இருவரும் பிரியப் போகிறோம். ஆனால் இருவருமே உங்களை மிகவும் விரும்புகிறோம் என்று குழந்தைகளிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். அவ்வளவு தான். ஆனால் இது ஒரு நுண்மையான நெருடலான சூழ்நிலை. ஆனால் க்ஷண நேரத்துக்குத் தான். இந்தக் கடினமான நேரம் கடந்து போகுமென்று உனக்குத் தெரியும். பொறுமையாக, பக்தியுடன் இரு. உன் பக்தி, தியானம், சாதனை முதலியவை உனக்குத் துணையிருக்கும்.
சில சமயம் வாழ்க்கையின் கடினமான உண்மைகளை ஏற்றுக் கொண்டு அதைப் பற்றியே மறுகக் கூடாது. பரந்த கண்ணோட்டத்துடன் மேலே செல்ல வேண்டும். உங்கள் குழந்தைகளுக்கும் வருங்காலத்தைப் பற்றிய பரந்த கண்ணோட்டத்தை உணரச் செய்யுங்கள். கசப்பான தற்சமயத்தை மேலும் மேலும் அசை போடுவதை நிறுத்தி ஒரு நோக்கத்துடன் நல்ல வருங்காலத்தை எதிர் நோக்கி காரியத்தில் ஈடுபடச் செய்யுங்கள்.  அவர்கள் வளர வேண்டிய அவசியத்தை உணர்த்தி நாட்டுக்காகவும், தங்கள் முன்னேற்றத்துக்காகவும் என்ன செய்ய வேண்டும் என்ற சிந்தனைகளை வளர்க்கலாம். பெரிய பிரச்சினைகள் மற்றும் பெரிய அறைகூவுதல்கள் இருக்கும் போது சின்னச் சின்ன வருத்தங்கள் அவர்களை ஒன்றும் செய்யாது. அறைகூவுதலை ஏற்று பெரிய பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலைப் பெறுவார்கள். இந்தச் சூழ்நிலையைச் எதிர்கொள்வதற்கு இதுவே வழி.
கே: சிறிய பூஜையை விட்டு நீண்ட நேர பூஜை செய்வதால் என்ன பயன்?
ஶ்ரீ ஶ்ரீ: உன் தினசரி தியானத்துக்கும், வாழும் கலை 2ம் நிலை தியானப் பயிற்சியில் செய்யும் தியானத்துக்கும் உள்ள வித்தியாசம் போல் தான். ஒவ்வொன்றுக்கும் உரிய பலன் கிடைக்கும். பூஜை மிக நீண்டதாக இருக்க அவசியமில்லை. ஆனால் நிறைய பேர் கூடும் போது நீண்ட பூஜைகள் நிகழ்கின்றன. ஒருவருக்காக மட்டும் அல்ல. எல்லோருடைய பொது நன்மையைக் கருதி நீண்ட பூஜைகள் நிகழ்கின்றன.
கே: கிரியாவுக்குப் பின் வலது புறம் ஏன் திரும்பிப் படுக்கிறோம்? இடது புறம் ஏன் திரும்பக்கூடாது? நான் கேட்ட இந்தக் கேள்விக்கு யாரும் விடை கூறவில்லை.
ஶ்ரீ ஶ்ரீ: உனக்கு விடை கொடுக்காதவர்கள் அறிவாளிகள். நீ ஆசிரியர் பயிற்சியில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். டிடிசி, டிஆர்எம் ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் மறு பயிற்சிகளில் இவைகளைப் பற்றி பேசலாம். இதெல்லாம் மிகப் பெரிய இரகசியங்களாகும்.